தமிழ் எழுத்துலகின் மாபெரும் இழப்பு..!
>> Friday, February 29, 2008
பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்றிரவு சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.
எழுத்தாளர் சுஜாதா சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஜட்ஜ் சுந்தரம் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு `பைபாஸ்'அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு 10.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.
சுஜாதாவின் இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர். சுஜாதாவின் மரணம் பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் வெள்ளிக்கிழமை சுஜாதாவின் இறுதிச்சடங்கு நடைபெறும். அதுவரை சுஜாதாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும்.
எழுத்தாளர் சுஜாதா, 1935-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பிறந்தார். தந்தை; சீனிவாச ராகவன், தாயார் கண்ணம்மா. தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றியவர். சுஜாதாவின் இயற்பெயர் ரெங்கராஜன்.
சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த சுஜாதா சிறுவயதில், ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் வீட்டில் வசித்தார். அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிப்பை முடித்தார். இங்கு படித்தபோது, இவரது நண்பராக திகழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார். பிறகு சென்னை எம்.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார்.
27 வயதில் அவருக்கு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுஜாதா. பின்னாளில் மனைவியின் பெயரில் கதைகளை எழுதியதால் மனைவியின் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.
டெல்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த அவர் 1970-ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பணிபுரிந்தபோது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் பொது மேலாளராகவும் பதவி வகித்தார். அவரது தலைமையிலான குழுதான் தற்போது தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பணியில் இருந்த காலத்திலேயே பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தார்.
1993-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றது முதல் சென்னையில் வசித்து வந்தார். சுஜாதாவுக்கு, ரங்கபிரசாத், கேஷவ பிரசாத் என்னும் 2 மகன்கள் உண்டு. மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.
சுஜாதா 100-க்கும் மேற்பட்ட நாவல்களும், 200-க்கும் மேலான சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். 15 நாடகங்களும் எழுதியுள்ளார். ஏராளமான விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளையும், கேள்வி-பதில்களையும் எழுதி இருக்கிறார்.
டைரக்டர் ஷங்கரின் இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி படங்களில்
இணைந்தும் சுஜாதா பணியாற்றி இருக்கிறார். இதேபோல் இயக்குனர் மணிரத்னத்துடன்
இணைந்து இருவர், ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.
சுஜாதாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.
தமிழ் இலக்கியம் ஒரு சிகரம் என்றால், சுஜாதா அவர்கள் அச்சிகரத்தை அடையும் ஏணிப்படிகளில் ஒருவராகக் கருத்தப்பட்டு வந்தவர். அப்படியில் கால் பதிக்காது சிகரத்தின் உயரத்தை அளக்க முடியாது. அந்த அளவிற்கு எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு பெருந்தொண்டு ஆற்றி வந்தவர்.
அனைவரும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைந்து மறுபிறப்பு என இருப்பின் மீண்டும் தமிழனாய் பிறந்து, தமிழுக்கு தொண்டாற்றும் எழுத்தாளனாக உருவாக வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோமாக...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment