பினாங்கில் மலர்க்கொத்துடன் வைஷ்ணவி..
>> Wednesday, February 13, 2008
நேற்று 12-02-08 பினாங்கு மாநிலமே பெருமைப்பட்டுக் கொள்ளும் அம்மாநிலத்தின் மிக உயர்ந்தக் கட்டிடமான கொம்தார் கட்டிடத்தை மக்கள் சக்தியின் அலை முற்றுகையிட்டது. இந்து உரிமைப் பணிப்படையின் இடைக்காலத் தலைவர் திரு.தனேந்திரன் அவர்களின் தலைமையில் மக்கள் சக்தியின் கூட்டம் மாநில முதல்வர் டாக்டர் கோ சூ கூனைச் சந்தித்து, வைஷ்ணவியின் கையில் அன்பின் அடியாளமாக மலர்க்கொத்தை அவருக்கு அளிப்பதற்கு திட்டமிட்டிருந்தது. இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மக்கள் சக்தி ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். நாட்டில் ஒரே ஒரு பூமிபுத்திரர் அல்லாத மாநில முதலமைச்சர் டாக்டர் கோ சூ கூன் என்பதால், அவரைக் கண்டு, இந்திய மக்களின் பிரச்சனைகளையும், இந்து உரிமைப் பணிப்படையின் நோக்கத்தையும் விளக்கி, வருகின்ற 16ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு பிரதமரை அவர் அழைக்க வேண்டும், அதோடு அங்கு கூடவிருக்கும் சிறு குழந்தைகளுக்கும் வயதானர்களுக்கும் எந்த ஒரு ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது, மற்றும் 5 தலைவர்களுக்கும் முறையான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் சக்தியினர் அங்கு கூடியிருந்தனர்.
ஆனால் வழக்கம்போல் ஏதாவது ஒரு சாக்குப் போக்கு ஒன்று அரசாங்கத்திடமிருந்து வர வேண்டுமே.. நினைத்தப்படியே வந்தது..
முதலமைச்சர் பணி நிமித்தம் வெளியூர் சென்றுள்ளாராம், அதனால் அவரைச் சந்திக்க இயலாது என முதலமைச்சரின் தனிச் செயலாளர் வோங் சியூ போ கூறியுள்ளார். வந்த விருந்தாளிகளை உள்ளே அழைக்காமல் வாசற்படியிலேயே உபசரித்து அனுப்பியிருக்கிறார்கள். பரவாயில்லை, ஒரு முறையா, இரு முறையா? பலமுறை நாம் அனுபவித்தக் கொடுமைதானே இது.
ஆனால், இவ்விஷயத்தில் வைஷ்ணவியின் நிலமையை எண்ணிப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.. பாவம், இப்பிஞ்சு வயதில் எத்தனை தோல்விகளை அவள் தாங்கிக் கொள்வது.. அவள் அன்போடு கொடுக்க வந்த மலர்க் கொத்துகளில் ஏதும் கள்ளம் கபடம் இல்லை, சூது வாது இல்லை, வெடிகுண்டு இல்லை.. முழுக்க முழுக்க அன்பின் அடையாளமாகக் கொடுக்கப்படும் இம்மலர்களைப் ஏற்றுக் கொள்ளாதவர்கள் துரதிஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும்..
இந்நிகழ்வு குறித்தப் படக்காட்சிகள் கீழே :
நன்றி : www.makkez.com
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment