காவல் நிலையமா? எமலோகமா?
>> Wednesday, February 6, 2008
மக்கள் ஓசை முதற்பக்கச் செய்தி
6 பிப்ரவரி, கோலாலம்பூர்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இந்திய இளைஞர்கள் காவல் நிலையத் தடுப்பு அறையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கொடுமை குறித்து பன்னீர்செல்வம் த/பெ பழனிசாமி (வயது 26) மற்றும் குமரேசன் த/பெ பெரியசாமி (வயது 26) ஆகிய அவ்விரு இளைஞர்களும் புக்கிட் அமான் போலீஸ் தலமையகத்திலும் சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையத்திலும் நேற்று புகார் செய்தனர்.
இரும்புக் கம்பி, தலைக்கவசம், ரப்பர் குழாய் போன்றவற்றால் தாக்கப்பட்ட நாங்கள், சிறுநீரை அருந்தச் சொல்லியும், மலத்தொட்டியை நக்கும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர்கள் தங்கள் போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கடந்த ஜனவரி 27ஆம் திகதி பிற்பகல் 4.00 மணியளவில் தாங்கள் இருவரும் பிரிமா செலாயாங்கில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.
ரவாங் காவல் நிலைய தடுப்பு அறையில் ஆறு நாட்கள் தடுத்து வைத்து, 3 தினங்கள் அவர்களை காவல் துறையினர் அடித்து சித்திரவதைக்குள்ளாக்கினர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 'ஸ்டோன் கோல்' என்ற காவலதிகாரி எங்கள் கண்ணெதிரிலேயே ஒரு போத்தலில் சிறுநீரை கழித்து அந்தச் சிறுநீரை அருந்தும்படி எங்களைக் கட்டாயப்படுத்தினார். மேலும் தடுப்பு அறையில் இருந்த மலத் தொட்டியை நாவால் நக்கும்படியும் கட்டாயப்படுத்தி அடித்தார் என்று குமரேசனும் பன்னீர் செல்வமும் தெரிவித்தனர்.
மேலும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நாடு கடத்தப்படுவீர்கள் என்று தங்களை அவர் மிரட்டியதாகவும் அவர்கள் கூறினர். இவர்களின் இக்கொடுமையைப் பற்றி கேள்விப்பட்ட பினாங்கு அன்பர் நாகேந்திர சிங், இவ்விருவரையும் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் செய்தார். காவல் தடுப்பு அறையில் இருந்து நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்ட இவ்விருவரையும் மருத்துவப் பரிசோதனைக்காக பிப்ரவரி 2ஆம் திகதி காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார்.
இதனிடையே, இவர்களது சார்பில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு எதிராக சிவில் வழக்கு தொடுக்கப்படும் என்ற வழக்கறிஞர் கோஷ்விந்தர் சிங், போலீஸ் கொடுமைகள் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மலத்தொட்டியை நாவால் நக்கும்படியும் கட்டாயப்படுத்தியது, சிறுநீரை குடிக்கச் சொன்னது கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத கொடூரமாகும் என்றார்.
மேலும் மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலான போலீஸ் அராஜகம் கண்டிக்கப்பட வேண்டும் என்று கோஷ்விந்தர் சிங் வலியுறுத்தினார்.
*கூடிய விரைவில் போலீஸ்காரர்களின் அராஜகங்களையும் அட்டூழியங்களையும் நிரூபிக்கக் கூடிய படக்காட்சிகள் ஓலைச்சுவடியில் பதிவிடப்படும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment