16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் மூன்று)
>> Wednesday, February 20, 2008
நெடுஞ்சாலையில் பேருந்து நிதானமாகவே ஓடியது. செல்லும் வழியில் ஆங்காங்கே பேருந்து, பயணிகள் உணவுகளை வாங்குவதற்கும் களைப்பாறுவதற்கும் நின்றது. இதற்கிடையில் நண்பர் கலையரசு தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் நிலவரங்களை எனக்கு கைப்பேசியின் மூலம் அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருந்தார். சுமார் விடியற்காலை மணி மூன்றுக்கு நண்பர் கலையரசுவிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.
"சதீஷ், எங்கல புடிச்சிட்டானுங்க"
"ஐயோ எப்படி!?"
"ரோட் புளோக்ல மாட்டிக்கிட்டோம்.. கூட வந்திருந்தவங்க எல்லாரையும் கீழே இறங்க சொல்லிட்டான்.. எல்லாரோடே ஐ.சியையும் வாங்கிட்டானுங்க.. கிருஷ்ணன் சாரே மட்டும் தனியா கூட்டிட்டு போய்ட்டானுங்க.."
"என்ன இப்படி பண்ணிட்டானுங்க.."
"சரி, நான் உங்களுக்கு அப்புறம் கால் பண்ணி என்ன நடக்குதுனு சொல்றேன்"
நண்பர் கலையரசுவிடமிருந்து தகவல் கிடைத்ததும், என் பக்கத்து வரிசையில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பயண ஏற்பாட்டாளரிடம் அத்தகவலைத் தெரிவித்தேன். அதற்கு அவர்,
"அதுவந்து, முக்கியமான ஆளுங்கலதான் புடிப்பானுங்க.. நம்மல அவனுங்க ஒன்னும் பண்ண முடியாது"
என்று சர்வசாதாரணமாக பதில் வந்தது..
என் பக்கத்தில் அமர்ந்திருந்த வேலன் அவர்கள்,
"யேன், புடிச்சிட்டானுங்களா..? யாரே? எங்கே?"
நண்பர் கூறிய தகவலை அவரிடம் கூறியதும், தலையாட்டிவிட்டு அமைதியானார்..
மீண்டும் சில நிமிடங்கள் கழித்து நண்பர் கலையரசுவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது..
"சதீஷ், எங்கல எங்கையோ கொண்டு போறானுங்க, எங்கனு தெரியல.. போய் சேர்ந்ததும் கால் பண்றேன்.."
"ஓகே, பாத்துகுங்க...போய் சேர்ந்ததும் என்ன நடந்துச்சினு சொல்லுங்க.."
மீண்டும் ஒரு அரை மணி நேரம் கழித்து,
"சதீஷ் எங்கல் புலாபோல்னு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டானுங்க.. இங்க வேற யாருமே இல்ல, நாங்கதான் இருக்கோம்.. ஒரு டேவான்குள்ளே எங்கல உக்கார வெச்சிருக்கானுங்க.. ஒரு ஒரு ஆளா இண்டர்வியூ பண்றானுங்க.."
"ஐ.சி கொடுத்தானுங்களா கலை?"
"இல்ல, கொடுக்கல, எங்களோட ஜாமான்களையும் எடுத்துக்குட்டானுங்க"
மீண்டும் இத்தகவலை பயண ஏற்பாட்டாளரிடம் தெரிவித்தேன். இம்முறை விஷயத்தை சற்று சிரத்தையோடு அவர் கேட்டுக் கொள்வதுப்போல் தெரிந்தது.
காலை மணி 7.00 இருக்கும், பேருந்து சுங்கை பூலோ களைப்பாறும் இடத்தில் காலை உணவிற்கு நின்றது. பேருந்தை விட்டு இறங்கியதும், "மக்கள் சக்தி" என்றக் குரல்கள் வெகுவாகக் கேட்டது. குரல்கள் வந்தத் திசையை நோக்கி எல்லாரும் நடந்தோம்.
"வாங்க, வாங்க.. எங்கிருந்து வாரீங்க?"
"நாங்களாம் பினாங்கிலிருந்து வரோம்.. நீங்க"
"நாங்களாம் ஈப்போவிலிருந்து வரோம், இங்க உள்ளவங்கலாம் பேராக் மக்கள் சக்தி கொம்மிட்டி மெம்பர்ஸ்"
"உங்க இடத்துல ஏதாச்சும் புளோக் போட்டுருந்தானுங்கலா?"
"ம்ம்ம்.. இருந்துச்சே, அங்க இங்கனு ஈப்போவையே ஒரு சுத்து சுத்தி கடைசியா ஜெலாப்பாங்லே வெளியானோம்.."
ஈப்போத் தமிழர்களைப் பார்த்ததும் மனதில் எனக்கு ஒரு பூரிப்பு ஏற்பட்டது, சொந்த ஊர் மக்களாயிற்றே... அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
சுங்கை பூலோ களைப்பாறும் இடத்தில் நிறைய பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சில கல்யாணத்திற்கும், ஆன்மீக பயிற்சிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் இருந்தன.
எல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்டோம், ஒரு சிலர் அங்குள்ள குளியலறையில் குளித்துவிட்டு புதிய உடைகளை அணிந்து வந்தனர். ஒரு சிலர் கூட்டம் கூட்டமாக நின்றுக் கொண்டு நாட்டு நிலவரத்தை சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
மீண்டும் நண்பர் கலையரசுவின் கைப்பேசி அழைப்பு வந்தது..
மெல்லியக் குரலில்.. " சதீஷ், இவனுங்களாம் இங்கிருந்துதான் ரெடியாயிட்டு கிளம்புறானுங்க.. சூட் லாம் மாட்டிக்கிட்டு நிக்கிறானுங்க.. சரியான பசி, எங்களுக்கு சாப்பாடு குடுக்காமா அவனுங்க சாப்பாடு வாங்கி சாப்டுறானுங்க.. பிறகு நாங்களாம் சேந்து சண்ட போட்டோனேதான், அதுல ஒருத்தன் வந்து இன்சே மாவ் ஓர்டர் அபா?ன்னு வந்துக் கேக்குறான்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
இப்படியாக, அங்கு ஒரு நாற்பது நிமிடம் கழிந்தது.
இனி, நேராக நாடாளுமன்றம்தான் என்ற முடிவில் பேருந்து தன் பயணத்தைத் தொடங்கியது.
ஜாலான் டூத்தா கட்டணச் சாவடியை நெருங்கினோம். அனைவரும் எதையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதுப்போல் ஜன்னல் திரையை விலக்கி வெளிக்காட்சிகளில் கண்களை பதியவைத்தார்கள்.
உடனே ஓர் அறிவிப்பு வந்தது...
" முன்னுக்கு புளோக் போட்டுருக்கானுங்க, கேட்டா எல்லாரும் கோட்டு மலைப் பிள்ளையார் கோயிலுக்கு போறதா சொல்லிருங்க.. ஒகே வா.."
(அறிவிப்புச் செய்தவர்க்கு கோட்டு மலை பிள்ளையார் கோயில் எங்கிருக்கிறது எனத் தெரியாது, அது வேறு விஷயம்.. ஆனால் கோட்டு மலைப் பிள்ளையார் கோயிலின் முன் தான் மக்கள் கூட்டம் அலைமோதியது எனும் விஷயம், பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. அதுவரையில் மக்கள் சக்திக் கூட்டம் நாடாளுமன்றத்தில் கூடியிருப்பதாகவே நினைத்திருந்தோம்.)
பேருந்து கட்டணச் சாவடியை நெருங்கியது, எங்கள் பேருந்தின் முன் தொழிற்சாலைப் பேருந்து நின்றுக் கொண்டிருந்தது. அப்பேருந்து கட்டணச் சாவடியைக் கடந்ததும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எங்கள் பேருந்தும் கட்டணச் சாவடியைக் கடந்ததும் நிறுத்தச் சொன்னார்கள்..
அங்குதான் சுவாரசியமே உள்ளது.
பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓரங்கட்டுவதுப்போல் சாலையோரம் பேருந்தை நகற்ற, நாங்கள் அனைவரும்...
"நிக்காதீங்க..நிக்காதீங்க... கிளம்புங்க..கிளம்புங்க..அவனுங்க பாக்கல, சீக்கிரம்...சீக்கிரம்...!!"
பேருந்து நிதானமாக அவ்விடத்தைவிட்டு அகன்றது, பேருந்தில் உள்ள ஒருவர் பேருந்தின் பின்னால் உள்ள திரையை விலக்கி,
"ஒகே, லைன் க்லியர்..ஜாலான்..ஜாலான்"
அந்தச் சில மணித்துளிகள் எங்களுக்குப் போராட்டமாகவே தென்பட்டது...
பேருந்து வெற்றிக்கரமாகக் கோலாலம்பூரினுள் நுழைந்தது..
பயணம் தொடரும்...
அத்தியாயம் மூன்று முற்றும்...
1 கருத்து ஓலை(கள்):
sir, seekram next attiyaayathodu vaangga...
Post a Comment