கலைந்தது கோட்டை...
>> Wednesday, February 13, 2008
இன்று 13-02-08 மதியம் 12.34 மணியளவில் பிரதமர் துறை சந்திப்புக் கூட்ட அறையிலிருந்து மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையமான ஆர்.டி.எம் நேரடி ஒளிபரப்பில், டத்தோ சிறீ அப்துல்லா அகமது படாவி அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தைக் கலைவதாக அறிவித்தார். இன்றுக் காலையில் மாமன்னரின் முடிவை ஏற்றுக் கொண்டு தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் அறிவித்தார். சரவாக் மாநிலத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களின் சட்டமன்றங்களும் கலைகின்றன என அவர் தெரிவித்தார்.( சரவாக் மாநிலத்தில் சென்ற வருடம் மே மாதத்தில் மாநிலத் தேர்தல் நடைப்பெற்றுவிட்டது.)
தேர்தல் முறையே நடைப்பெற வழிவகுக்கும் சட்டமான கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 55-இன் படி நாடாளுமன்றம் கலைகிறது என அவர் கூறினார். பிரதமர் இவ்வறிக்கையை வெளியிடும்பொழுது துணைப் பிரதமர் டத்தோ சிறீ நஜீப் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடைப்பெறும் திகதியைப் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்புகையில், அதிகாரப்பூர்வ முடிவை தேர்தல் ஆணையம் நாளை வெளியிடும் என அவர்க் கூறினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடைப்பெற வேண்டும் எனும் சட்டம் இருப்பதால் கூடிய விரைவில் பொதுத் தேர்தல் நடைப்பெறும் என அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையில் அரசியல் ஆய்வாளர்கள் கணித்தப்படியே 13ஆம் திகதி நாடாளுமன்றம் கலைந்துள்ளது. (நேற்று நிருபர்களிடம், 13-ஆம் திகதி நாடாளுமன்றம் கலையாது என அடித்துக் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுத் தொடர்பாக பிரதமரிடம் வினவுகையில், இன்று நாடாளுமன்றம் கலைவது மாமன்னரின் ஆணை எனத் தெரிவித்துள்ளார்) 13ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், பிரதமரின் இராசி எண் 4 என்பதால், 13ஆம் திகதியை அவர் தேர்வுச் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் நாட்டின் 12வது பொதுத் தேர்தல் மார்ச் 1ல் (01+03) நடைப்பெற வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் பிரதமருக்கு நெருங்கிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அல்லது 4 எனும் கூட்டு எண்கள் வரும் மற்றத் திகதிகளில் பொதுதேர்தல் நடைப்பெறவும் வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment