இந்து மகா சமுத்திரத்தைக் கடக்கும் சுதந்திரப் பேரலைகள்..
>> Tuesday, February 5, 2008
வருகின்ற பிப்ரவரி 16-ஆம் திகதியன்று மக்கள் சக்தியின் இரண்டாவது மாபெரும் அலையானது மலேசிய நாடாளுமன்றத்தின் வாசற்கரையில் புரள தாளாது காத்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.. இம்மாபெரும் அலையின் தாக்கமானது தற்போது இந்து மகா சமுத்திரத்தையும் கடந்து பசிபிக் பெருங்கடலில் ஒரு மூலையில் தனது தங்க நிற மணல்களைப் பரப்பி காண்போரைச் சுண்டியிழுக்கும் கலிஃபோர்னியாவின் அழகிய கடற்கரை வரைச் சென்று தனது வீர்யத்தைக் காட்டத் திட்டமிட்டுள்ளது...
ஆம், மக்கள் சக்தியின் அடுத்தக் கட்ட விழிப்புநிலை போராட்டமான அன்பர்கள் தின ரோஜாக்கூட்டம் 16-ஆம் திகதி பிப்ரவரியன்று நாடாளுமன்றத்தின் வெளியே திரளவிருப்பதையடுத்து
( 'அன்பர்கள் தின ரோஜாக்கூட்டம்' எனும் பதிவைக் காண்க ), அதே நாளில் ஹாலிவூட் நகரத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் லாஸ் ஏஞ்சலிஸ் கலிஃபோர்னியா எனுமிடத்தில் அமெரிக்கவாழ் மலேசிய இந்தியர்களும் மற்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பிற நாட்டு இந்தியர்களும் ஒன்று சேர்ந்து, லாஸ் ஏஞ்சலிஸில் '550 சவூத் ஹோப் சாலை, சூட் 400, லாஸ் ஏஞ்சலிஸ், கலிஃபோர்னியா 90071' எனும் முகவரியில் அமைந்துள்ள மலேசிய தூதரக அலுவலகத்தின்முன் காலை 10 மணி தொடங்கி மதியம் 2 மணிவரை சிவப்பு, மஞ்சள் நிற ரோஜாக்களை ஏந்தி அமைதியான முறையில் கோரிக்கைப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
அதன் பின்னர் மலேசிய பிரதமர் டத்தோ சிறீ அப்துல்லா அகமது படாவி அவர்களுக்கு அன்பின் அடையாளமாக சிவப்பு, மஞ்சள் நிற ரோஜாப் பூக்களைச் சமர்ப்பிக்கும் நிகழ்வு நடைப்பெறும். அச்சமயம் பிரதமரின் சார்பாக, அவரைப் பிரதிநிதித்து அமெரிக்காவிற்கான மலேசிய தூதரக அதிகாரிகள் அம்மலர்களைக் கணிவுடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகியிருக்கும் 5 இந்து உரிமைப் பணிப்படைத் தலைவர்களை, எந்த ஒரு நிபந்தனையுமின்றி விரைவில் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளும் நோக்கத்தில், ஆயிரக்கணக்கான ரோஜாக்கள் தூதரகத்தின் வாயிலாக அரசாங்கத்திற்கு தூது செல்லவிருக்கின்றன..
இம்மலர்கள் விடும் தூது - தலைவர்களின்
விடுதலைக்கு ஹேது-ஆக
அமையுமா?
போராட்டம் தொடரும்...
1 கருத்து ஓலை(கள்):
please release our leaders....
Post a Comment