விடுதலைக்காக 350 கி.மீ மெதுவோட்டம்!
>> Thursday, November 13, 2008
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இண்ட்ராஃப் தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில், மலேசிய சனநாயகச் செயல் கட்சி இவ்வார இறுதியில் வித்தியாசமான ஒரு நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது.
பண்டாமாரான் கிள்ளானிலிருந்து கமுந்திங் தடுப்புக் காவல் மையம் வரையிலான 350 கிலோ மீட்டர் தொலைவு மெதுவோட்ட நிகழ்வு இவ்வார இறுதியில் நடைப்பெறவுள்ளது. முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைப்பெறும் இந்நிகழ்வு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக மலேசிய மக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இம்மெதுவோட்ட நிகழ்வில் சுமார் 5,000 மலேசியர்கள் பங்கெடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காலை 8 மணியளவில் செராசு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தான் கோக் வாய், முதல் நபராக கையில் ஒரு கொடியை ஏந்தியபடியே மெதுவோட்டத்தை தொடங்கிவைப்பார். இக்கொடியானது மெதுவோட்டத்தில் பங்கெடுக்கும் அனைவரின் கையிலும் தவழ்ந்து இறுதியில் கமுந்திங் தடுப்புக் காவல் மையத்தின் வாசற்கதைவைச் சென்றடையும்.
இரண்டு நாட்கள் நடைப்பெறவுள்ள இந்நிகழ்வு முதல் கட்டமாக சனிக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கி இரவு 7 மணியளவில் சபாக் பெர்ணாமில் முடிவடையும். பின் மறுநாள் காலை (ஞாயிற்றுக் கிழமை) 8 மணியிலிருந்து கமுந்திங் சென்றடையும் வரையில் இந்நிகழ்வு நடைப்பெறும். ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே கொடியை ஏந்தி ஓடுவதால் இந்நிகழ்வானது சாலை நெரிசலுக்கு வித்திடாது. விடுதலையை முன்னெடுக்கும் இம்மெதுவோட்டத்தில் பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு வலைப்பதிவர் ராசா பெத்ரா கமாரூதீனும் பங்கெடுக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இம்மெதுவோட்டம் காப்பார், கோலாசிலாங்கூர், செகிஞ்சான், சுங்கை பெசார், உத்தான் மெலிந்தாங், சித்தியவான், பந்தாய் ரெமிசு, சிம்பாங், தைப்பிங் ஆகிய நகரங்களை கடக்கவுள்ளது.
இம்மெதுவோட்டத்தின் இறுதி ஓட்டக்காரர் தைப்பிங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ங்கா கோர் மிங்கிடம் கொடியையும் மூன்று பெரிய பதாகைகளையும் ஒப்படைப்பார். இதற்கிடையில் சிலாங்கூர் மாநில சனநாயகச் செயல் கட்சி பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டையையும் மேற்கொள்ளும் என்று அறிவித்திருக்கின்றனர்.
மெதுவோட்டம் முடிவடைந்து அன்றிரவே மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி கமுந்திங் தடுப்புக் காவல் முன்புறம் நடைப்பெறவுள்ளது.
எனவே, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஒவ்வொரு மலேசியரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கிடையில் லண்டனில் வசிக்கும் இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி இந்நிகழ்வை வரவேற்பதாகவும் இன, மத வேறுபாடுகளைக் களைந்து மலேசியராக ஒன்று திரண்டு இந்நிகழ்வை வெற்றிப் பெறச் செய்யுமாறு அனைத்து மலேசியர்களையும் அவர் கேட்டுக் கொள்வதாக தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் பங்கெடுக்க விரும்பும் அன்பர்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய கைத்தொலைப்பேசி எண்கள் : 012-6644432
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment