எழுச்சி!

>> Tuesday, November 25, 2008


மலையக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நாளாக 25 நவம்பர் முத்திரை பதித்து விட்டது! கடந்த 51 ஆண்டுகளாக பிரித்தாளும் கொள்கைகளாலும், மலாய் மேலாண்மை கோட்பாட்டை முன்னிறுத்தி செயல்முறைப்படுத்தப்பட்ட புதியப் பொருளாதாரக் கொள்கைகளாலும், பல்லின மக்கள் வாழும் நாட்டை கூறுபோட்டு வைத்திருந்த அம்னோ அரசாங்கத்தை கதிகலங்க வைத்த தினம் நவம்பர் 25!

மலேசியா தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை அனைவருக்கும் புரியும்படியாக இடித்துரைத்த பெருமை மலேசிய இந்தியர்களையேச் சாரும்! அந்நிய ஆதிக்கத்திடமிருந்து விடுதலையடைந்து 51 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மலேசியா ஒரு தெளிவான இலக்கு இல்லாமல் புற வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, நாட்டு குடிமக்களை ஓரங்கட்டி வருகிறது. உலகின் முதலாம்தர சேவை, உலகின் உயர்ந்த கட்டிடம், சிறந்த விமான நிலையம், இவைகளையா ஒரு நாட்டின் முக்கிய வளர்ச்சியென்பது? நாட்டு வளர்ச்சியை நிர்ணயிப்பதில் எந்த அளவுகோலை நாம் பயன்படுத்த வேண்டும்? பல்லின மக்கள் வாழும் மலேசியாவிற்கு அடிப்படை இன நல்லிணக்கமும், இனங்களுக்கிடையிலான சரிசமமானப் பொருளாதாரப் பங்கீடும்தானே. இவ்விடயத்தில் மட்டும் மலேசியா மூன்றாம் தர சிந்தனையை கடைப்பிடித்து வருவது ஏன்? இவ்விரு அம்சங்களையும் முன்னிறுத்தி வாங்கப்பட்டதுதான் நாட்டின் சுதந்திரம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!

இன்று மலாய் மேலாண்மை கோட்பாட்டை பற்றி வெளிப்படையாகவே கூச்சலிட்டு கெரிசு கத்தியை நீட்டும் இனவாத அரசியல்வாதிகள், சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு அப்படி பேசியிருந்தால் சுதந்திரம் எளிதில் கிட்டியிருக்குமா?

1956-ல் கூட்டப்பட்ட ரீட் ஆணையம் மலாயாவின் அரசியலமைப்புச் சட்டதிட்டங்களை நிகழ்கால நடப்பிற்கு ஏதுவாக மட்டுமல்லாது எதிர்கால சந்ததியினர் நன்மைபெற வேண்டும் எனும் நோக்கில் வரையறுத்தார்கள். நாட்டின் தலையாயச் சட்டமான கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் நாட்டிற்கும், நாட்டு வளர்ச்சிக்கும், குடிமக்களின் நல்வாழ்விற்குமாக கவனமாக வகுக்கப்பட்டது.

ஆனால், இன்று அரசியலமைப்புச் சட்டம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா?

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 8(1), 8(2) :-

சட்டத்தின்கீழ் அனைவரும் சமம். அதேச் சட்டம் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
நாட்டின் எந்தவொரு குடிமகனும் இனம், மொழி, சமயம், வம்சாவளி, பால், பிறப்பிடம் போன்ற காரணங்களால் ஒடுக்கப்பட்டு சம உரிமை மறுப்பிற்கு ஆளாவது சட்டப்படி குற்றம்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 10(1) :-

ஒவ்வொரு மலேசியக் குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடும் உரிமை, சங்கங்கள் அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 11 :-

இசுலாம், கூட்டரசு பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ சமயமாகத் திகழும். ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னுடைய சமயத்தைப் பின்பற்றுவதற்கும் பரப்புரை செய்வதற்கும் முழு உரிமையுண்டு.

இங்கு இசுலாம் மதம் நாட்டின் அதிகாரப்பூர்வ சமயம் என்று குறிப்பிடப்படவில்லை என்பதை கவனிக்கவும்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 153 :-

நாட்டின் மாமன்னர் மலாய் இனத்தவருக்கும், நாட்டின் பிற பழங்குடியினருக்குமுரிய சிறப்பு நிலைகள் மற்றும் பிற இனத்தவரின் சட்டப்பூர்வ தேவைகளை பாதுகாக்க வேண்டும். அரசாங்க ஊழியர்கள் இன அடிப்படையில் அல்லாது கவனிக்கப்பட வேண்டும்.

மலாய்க்காரர்களுக்கான சிறப்பு நிலையானது சிறிது காலத்திற்குப் பிறகு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என ரீட் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், மலாய் இனத்தவரின் பொருளாதார வளர்ச்சியானது பிற இனத்தவருடன் ஒப்பிடுகையில் மேலும் பின்தங்கியிருப்பதாகக் கூறி, இச்சலுகையானது புதியப் பொருளாதாரக் கொள்கையின்வழி மறு அவதாரம் கண்டது. இருப்பினும் இக்கொள்கையின்வழி நன்மை அடைந்தவர்கள் மலாய் இனத்தவர் அல்ல, அம்னோ அரசியல்வாதிகள் மட்டுமே.

மேற்குறிப்பிடப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்கள் இன்று முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றனவா? இல்லையென்பதுதான் உண்மை. அப்படியென்றால் அரசியலமைப்புச் சட்டம் பங்கப்படுத்தப்பட்டு வருகிறது என்றுதானே அர்த்தமாகிறது!

நாட்டின் முதுகெலும்பாகத் திகழக்கூடிய அரசியலமைப்புச் சட்டங்கள், சட்டத் சீர்த்திருத்தங்கள் என்றப் பெயரில் பங்கப்படுத்தப்பட்டு இன்று நமக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய உரிமைகள் பலவும் இழந்து நிற்கிறோமே!

இதுதான் நம் கவலை, நம் விரக்தி! அரசியல் லாபங்களுக்காக நடத்தப்பெறும் சட்ட சீர்க்கேடுகளை பலகாலங்களாக அவதானித்து வந்த திரு.வேதமூர்த்தியும், திரு.உதயகுமாரும் இதற்கொரு தீர்வுகாண முனைந்தனர்.

இண்ட்ராஃபின் உதயம்!

நம் சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்? எதனால் உந்தப்பட்டு மலேசிய இந்தியர்கள் தலைநகர் வீதிகளில் மாபெரும் பேரணியாகத் திரண்டனர்?

மலேசிய இந்தியர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் என்று கூறும்பொழுது, அவை பூதாகரமாக்கப்பட்டதற்கான காரணங்களை புரிந்துக் கொள்ள வேண்டும். நவம்பர் 25 அன்று கூடிய மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் நடைமுறைக் கொள்கைகளால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்றே கூறலாம். ஆலய உடைப்பில் வெகுண்டெழுந்தவர்கள், வேலை கிடைக்காது திண்டாடுபவர்கள், தகுதியிருந்தும் மேல்நிலைப் படிப்பை மேற்கொள்ள இயலாதவர்கள், புறம்போக்கு நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள், மேம்பாட்டு திட்டங்களின்வழி இடப்பெயர்வு செய்யப்பட்டவர்கள், அரசாங்க அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டவர்கள், காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டவர்கள், இனவாதத்தை எதிர்ப்பவர்கள், அரசியல் போக்குகளை அவதானிப்பவர்கள், சமுதாய ஆர்வலர்கள், சட்டம் தெரிந்தவர்கள் என ஒரு பெரிய கலவையை அன்று நம்மால் காண முடிந்தது.கடந்த 51 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்கள் அரசாங்கக் கொள்கைகளின்வழி பலவகையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் பொறுமையாகவே இருந்து வந்துள்ளனர். அதற்குக் காரணம் அரசு இயந்திரங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலும் சட்ட விழிப்புணர்வு இல்லாமையும்தான். உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், தேச நிந்தனைச் சட்டம் என மக்களின் கருத்துச் சுதந்திரம் விலங்கிடப்பட்ட நிலையில், அம்னோ அரசாங்கம் தன் இருப்பை பலப்படுத்திக் கொள்ள ஊடகம், பொருளாதாரம், நீதித்துறை என ஒவ்வொரு துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தது.

இந்நிலையில்தான் இனவாத அரசியல் சமய வழிப்பாட்டுத் தளங்களிலும் தன் கைவரிசையைக் காட்ட முனைந்தது. ஒன்றா, இரண்டா.. நாடெங்கும் பல 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த, சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட பல இந்து ஆலயங்கள் உடைப்பட ஆரம்பித்தன. இங்குதான் மலேசிய இந்தியர்களின் உணர்வுகள் கொதித்தெழுவதற்கான முதல் அச்சாணி போடப் பட்டது. இரண்டாவதாக, காவல்த்துறையின் தடுப்புக் காவலில் பல மலேசிய இந்தியர்களை அடித்து துன்புறுத்தியதும், மரணம் விளைவித்ததும் மனித உரிமை இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தன. மூன்றாவதாக மதமாற்றம் குறித்து காட்டப்படும் பாராபட்சமும், இறந்தவர்களின் உடலை சமய இயக்கங்கள் அபகரித்த சம்பவங்களும் பலரின் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பின.


எனவே, சமுதாயத்தின் மேல்மட்ட கல்விமான்கள் முதல் அடிமட்ட உடலுழைப்புத் தொழிலாளிவரை அரசாங்கக் கொள்கைகளைக் கண்டு வெறுப்படைந்தவர்கள்தான் 25 நவம்பரன்று ஒன்று கூடிய கூட்டம் என்று கூறலாம். இந்த மாபெரும் பேரணி நடைப்பெறுவதற்கு முன்பு நாடெங்கும் பல பரப்புரைகள் நடைப்பெற்றன. இந்தக் கருத்தரங்குகளில் மக்களின் கூட்டம் எதிர்ப்பாரா வகையில் வெள்ளமென திரண்டிருந்தது. அனைவரும் இதுபோன்ற கருத்தரங்குகளில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று பலகாலமாக எதிர்ப்பார்த்தவர்களைபோல் ஆதரவை வாரி வழங்கினர். இதற்கு என்ன காரணம்? உண்மை வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும்! இதற்கு ஒரு முடிவான தீர்வு காண வேண்டும் என அனைவருள்ளும் ஒரு துடிப்பு!

ஆனால், ஒரு மகத்தான பேரணியைக் கூட்டி அரசாங்கத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பது இண்ட்ராஃபின் ஆரம்பக்கால நோக்கம் கிடையாது. சட்டத்திற்கு உட்பட்டு அரசிடம் முறையாக பல மகசர்களை இண்ட்ராஃப் தலைவர்கள் வழங்கினர். ஆனால் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல, மகசர்கள் அனைத்தும் வெற்றுக் காகிதங்களாகி குப்பைக்குத் தொட்டிக்குப் போயின!

அப்பொழுதுதான் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகள் உதயமானது!

மலேசிய இந்தியர்கள் இந்நாட்டில் மூன்றாம்தர குடிமக்களாக நடத்தப்பெறுவதாக ஆதாரங்களை முன்னிறுத்தி வரையப்பட்டதுதான் இண்ட்ராஃப் 18 கோரிக்கைகள்.

அதன் முதல் கோரிக்கையே, "கடந்த 51 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டம் பங்கப்படுத்தபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!" என்று கேட்கிறது. சரியான கோரிக்கை! அரசியலமைப்புச் சட்டம் பங்கப்படுத்தபடாமல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சரிசமமான பொருளாதாரப் பங்கீடு, சமமான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, முறையான ஏழ்மை ஒழிப்புத் திட்டம், சமயச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகியவை கிடைக்கப்பெற்ற ஒரு நாடாக மலேசியா இன்று திகழ்ந்திருக்கும்! பல்லின மக்கள் பாதுகாப்பாக வாழும் ஒரு சொர்க்க நாடாக இருந்திருக்கும்!

மேற்கூறிய அம்சங்களனைத்தும் இனம், மொழி, சமயம் எனும் பிரிவினைகளை முன்னெடுத்து செயல்முறைப்படுத்தப்படுவதனால்தான் இன்று மலேசியாவில் இன நல்லிணக்கம் என்பது எட்டாக் கனியாக இருக்கின்றது.

இப்பிரிவினைகளைக் களையெடுக்கும் முயற்சியாக இண்ட்ராஃப்பின் மாபெரும் பேரணி அமைந்தது என்றால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே! காலங்காலமாக அரசியல் கொள்கைகளினால் அடிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சமுதாயம் தன்னை சம உரிமைப் போராட்டத்திற்காகத் தயார்படுத்திக்கொண்ட தினம் 25 நவம்பர்!

இன்று ஓராண்டைக் கடந்து வந்து விட்டோம்! எத்தனை சவால்கள், மிரட்டல்கள், அடிகள் என வரிசையாக நமக்கு பலத் தடைக்கற்கள் இடர் கொடுத்தாலும், அனைத்தையும் படிக்கற்களாக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம். இனி மலேசிய இந்திய சமுதாயம் விழிப்புணர்வு என்ற போராட்டத்தை தொடங்க வேண்டும்! சட்டங்கள், அரசியல் கொள்கைகள் எப்படி அமுல்படுத்தப்படுகின்றன என்பதனை அனைவரும் கவனமாக அவதானிக்க வேண்டும்!

இவையனைத்தையும்விட மிக முக்கியமாக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! உணர்வை இழக்காதிருக்க வேண்டும்! இண்ட்ராஃப் தலைவர்களின் தியாகங்களை மறவாமல் இருக்க வேண்டும்! எதிர்கால சந்ததியினர் விடுதலைக்காக விதைக்கப்பட வேண்டும்!

இன்று நாடுதழுவிய நிலையில் நடத்தப்பெறும் மக்கள் சக்தியின் நிகழ்வுகளில் அனைவரும் திரளாகப் பங்குகொண்டு, தடுப்புக் காவலில் அவதியுறும் சகோதரர்களுக்கும் லண்டனில் அரசியல் தஞ்சம் புகுந்த சகோதரருக்கும் பிரார்த்தனைகள் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்!

வாழ்க மக்கள் சக்தி!


போராட்டம் தொடரும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

6 கருத்து ஓலை(கள்):

மு.வேலன் November 25, 2008 at 4:46 PM  

இந்த எழுச்சி என்றென்றும் தொடர மகாகவியின் வரிகளை காண்போம்:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

http://aranggetram.blogspot.com/2008/11/25112007.html

கோவி.மதிவரன் November 25, 2008 at 9:48 PM  

வணக்கம் வாழ்க.

நவம்பர் 25 நமது மலேசியத் தமிழர்களின் மாபெரும் வரலாற்றுப் பொன்னாள். தூங்கிக் கிடந்த தமிழினம் துடித்தெழுந்த நாள். ஒற்றுமையோடு செயல்பட்டால் வெற்றி உறுதி என்பதற்கு நவம்பர் 25 ஒரு முதல்படி. தொடர்ந்து உரிமைக்குக் குரல் கொடுப்போம்.

Anonymous November 25, 2008 at 9:49 PM  

வணக்கம் வாழ்க.

தமிழால் முடிந்தால் தமிழனால் முடியும்.

வாழ்க மக்கள் சக்தி

தமிழுறவுடன்

கோவி.மதிவரன்
தொல்லூர்

Anonymous November 25, 2008 at 9:50 PM  

வணக்கம்,

தமிழால் முடிந்தால்
தமிழனால் முடியும்

என்பதற்கு நவம்பர் 25 ஓர் எடுத்துக்காட்டு.

தமிழுறவுடன்

கோவி.மதிவரன்
தொல்லூர்

கோவி.மதிவரன் November 25, 2008 at 9:51 PM  

வணக்கம் வாழ்க

தமிழால் முடிந்தால்
தமிழனால் முடியும்

என்பதற்கு நவம்பர் 25 ஓர் எடுத்துக்காட்டு.

தமிழுறவுடன்
கோவி.மதிவரன்
தொல்லூர்

சுப.நற்குணன் - மலேசியா November 27, 2008 at 12:48 AM  

எழுச்சி நாளின் ஓராண்டு நிறைவில் சிந்தனை எழுச்சிக்கு இந்தப் பதிவு பெரும்பயனாக அமைகிறது.

சிந்திப்போம்; செயல்வடிவம் காண்போம்; செயல்படுவோம்.

வெற்றி வெகுதொலைவில்லை!!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP