இண்ட்ராஃப் இயக்கம் மக்கள் கூட்டணியுடன் இணையுமா?
>> Saturday, November 1, 2008
சங்கங்கள் சட்டம் 1960-இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ள மனித உரிமை இயக்கமான இண்ட்ராஃப் தொடர்ந்து மலேசிய இந்தியர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தனக்கென்று உறுதியானதோர் அடித்தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்து வருகிறது.
கடந்த வாரத்தில் 100 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றுகூடி இண்ட்ராஃபின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. ஆனால், இன்று மலேசிய நண்பன் நாளிதழில் முதல் பக்கத்தில் சஞ்ஜை என்பவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இண்ட்ராஃப் உறுப்பினர்கள் மக்கள் கூட்டணியில் உறுப்பினர்களாக இணைந்து போராட்டத்தை தொடர்வார்கள் என்று கூறி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இன்னும் இருவாரங்களில் மக்கள் கூட்டணியில் எந்த உறுப்புக் கட்சியுடன் இணைந்து செயலாற்றவிருக்கிறோம் என்பதனை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மலேசியா கினியில் வெளிவந்த செய்தியில், இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் மக்கள் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது குறித்த விடயம் தொடர்பாக அடிமட்ட ஆதரவாளர்கள்வரை கருத்துகணிப்பு நடத்தப்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது. மக்கள் கூட்டணி இந்தியர்களுக்கு பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றாத இவ்வேளையில், இண்ட்ராஃப் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மக்கள் கூட்டணியில் இணைவதைப் பற்றி யோசித்து வருகிறார்கள்.
ஒரு மனித உரிமை இயக்கம் அரசியல் கட்சியில் இணைந்து செயல்படுவது குறித்து வாசகர்களின் கருத்துகள் என்ன என்பதனை அறிய விழைகிறேன்.
நாம் கடினப்பட்டு 'நல்லதோர் வீணை செய்து விட்டோம்', இனி அதனை திறம்பட மீட்டெடுப்பதும் அதனைப் புழுதியில் எரிவதும் நம் கையில்தான் உள்ளது.
இண்ட்ராஃப் மக்கள் கூட்டணியுடன் இணையலாமா? அப்படி இணையும்படி நேர்ந்தால், எதிர்காலத்தில் இண்ட்ராஃப் எதிர்நோக்கவிருக்கும் சாதக பாதகங்கள் என்ன? அல்லது வேறேதாவது கருத்துகளை முன்னெடுக்க விரும்புகிறீர்களா?
உங்கள் கருத்துகளை எதிர்ப்பார்க்கிறேன்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment