பிறந்தநாள் விருது & முக்கிய புள்ளி

>> Friday, November 21, 2008


இன்றைய 'மலேசிய நண்பன்' நாளிதழில் தலையங்கச் செய்தியில் 'சாருக்கானுக்கு டத்தோ விருது, மக்களின் வாழ்த்தும் வருத்தமும்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையின் சாராம்சம் என்னவென்றால் வெளிநாட்டுப் பிரமுகருக்கு வழங்கும் 'டத்தோ' எனும் உயரிய விருது மலேசியர்களுக்கு, அதிலும் குறிப்பாக சாதனை புரிந்த பல மலேசியத் தமிழர்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை எனும் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது அக்கட்டுரை.

இக்கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எசு.எம்.முகம்மது இத்ரீசு அவர்களின் 'சுவடுகள் மறைந்தால்' எனும் நூலில் வெளிவந்தக் கட்டுரைதான் ஞாபகத்திற்கு வந்தது.

அவர் கூறும் சில கருத்துகளை நாம் அலசிப் பார்ப்போம்..

மக்களுக்கு விருது வழங்குவதில் மலேசியாவை எந்த நாடும் தோற்கடிக்க முடியாது. நம்முடைய நாட்டில் மொத்தம் 13 மாநிலங்கள். ஒவ்வொரு மாநில சுல்தான் அல்லது ஆளுநர் பிறந்தநாளுக்கும், சமுதாயத்தில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மாமன்னரின் பிறந்தநாள் என்றால் மத்திய விருதுக்கு வாய்ப்பு உண்டு. "டான் சிறீ", "டத்தோ", "பி.சே.கே", ".எம்.என்" என்று ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் பேர் பட்டங்கள் சூட்டி மகிழ்விக்கப்படுகின்றனர்.

நாட்டின், சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பதில் தப்பில்லைதான். நல்லது செய்த ஒருவருக்கு அங்கீகாரம் வழங்குவது நற்பண்புதானே. மற்றவர்களும் அதே வழியில் சேவையாற்ற வழிகோளும் ஒரு நடவடிக்கையே இது. ஆனால் இந்த விருது வழங்கும் நடவடிக்கையில் சில கெட்ட விளைவுகளும் அடங்கியே இருகின்றன. சமுதாயத்துக்கு உண்மையாக நேர்மையாக உழைக்கும் ஒருவர் பெரும்பாலும் விருதுகளை எதிர்பார்ப்பதில்லை. அதை ஒரு பொருட்டாகவே நினைப்பது கூட கிடையாது.

சேவை செய்பவர் இப்படி இருக்கையில் விருது பெற்றால் அதிலிருந்து பிற்காலங்களில் தமக்கு ஏதாவது நன்மை விளையும் என்று எதிர்பார்த்து விருதை விரைந்து நாடுபவர்களும் உண்டு. "டான் சிறீ", "டத்தோ" என்ற பட்டம் இருந்தால் மேற்கொண்டு வரும் வியாபாரத்தை இன்னும் விருத்தி செய்து கொள்ளலாம், செய்கின்ற தொழிலில் இன்னும் பெரிய பதவி, உயர்வான வாழ்க்கை என்ற பார்வையிலேயே விருதுகளுக்காக பரபரக்கிறார்கள். பெயருக்கும் முன்னால் வரும் இந்தப் பட்டங்கள் தன்னுடைய மதிப்பை உயர்த்திவிட்டதாக ஒரு மிதப்பு அவர்களுக்கு.

குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு, நேர்மையாக உழைத்தவர்களுக்கு இந்த விருது தரப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் விருது கிடைக்கும் என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. சனநாயக நாட்டில் எல்லோரும் சமம்தான். இந்த விருது வழங்கும் கலாசாரம் மக்களிடையே பேதத்தை வளர்த்து வருகிறது.

பெரிய விருந்துகளிலும், வைபவங்களிலும் முக்கிய புள்ளிகள் வரும்பொழுது பாருங்கள். வரவேற்புரை நிகழ்த்தப்படும்பொழுது யாங் ஆமாட் பெரோர்மாட், டான் சிறீ, புவான் சிறீ, டத்தோ, டத்தின்... என்று வரிசைப்படுத்திவிட்டு பிறகுதான் துவான் புவானுக்கு மரியாதை. நிகழ்வு நடந்து முடிந்த பின்பு உணவருந்துவதற்கு இவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறை ஒதுக்கப்பட்டு உணவு பரிமாறப்படுகிறது. இப்படித் தரம் பிரித்துப் பார்க்கும் பழக்கத்தை நாம் பிரிட்டிசுகாரர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம்.

எல்லா நாடுகளும், சேவையாற்றிய வீரப் பிரசைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் அங்கீகாரம் வழங்குகிறது. ஆனால் சில நாடுகள் மட்டுமே விருதுகள் வழங்கி பெயருக்கு முன்னால் பட்டத்தையும் சேர்த்து எழுதிக்கொள்ள வைத்து வாழ்நாள் முழுக்க குதூகலிக்க வைக்கிறது.

சேவை செய்தவர்களுக்கு அங்கீகாரம் தேவைதான். ஆனால் பெயருக்கு முன்னால் பட்டத்தையெல்லாம் கொடுத்து சராசரி மனிதனை விட அவர்கள் உசத்தி என்று தலை மேல் தூக்கிக் கொண்டாடுவது முறைதானா?

சிந்தித்துப் பாருங்கள்....

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

4 கருத்து ஓலை(கள்):

Anonymous November 21, 2008 at 6:54 PM  

உண்மைதான். அதிலும் நம்மவர்கள் இந்த டத்தோக்களுக்கு கூனிக் குறுகி பணிந்து போவதைப் பார்க்கும் பொழுது வேடிக்கையாகத்தான் இருக்கும்.

இந்த டத்தோக்களுக்கும் என்ன ஒரு பந்தா.. அடேங்கப்பா!

@முருகேசன் , கிள்ளான்
murugesanthm@gmail.com

VIKNESHWARAN ADAKKALAM November 21, 2008 at 7:53 PM  

சரி தான்...

Anonymous November 22, 2008 at 9:23 AM  

வணக்கம். தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இதை நம் அரசாங்கம் ஏன் யோசிக்க மறுக்கிறது என்று தெரியவில்லை! டத்தோ பட்டத்திற்கு பதிலாக "டத்தோக்" (Datuk-தாத்தா) பட்டம் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Anonymous November 22, 2008 at 9:50 PM  

உண்மையாக சேவையாற்றிய/சேவையாற்றும் பலர் இன்னும் இஞ்சே/புவான் -களாகதான் இருக்கிறார்கள். அவர்கள் இம்மாதிரியான பட்டங்களை எதிர்பார்ப்பதுமில்லை.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP