1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவனாலயத்தில் சோழர்கால ஓவியங்கள் துடைத்தொழிப்பு!
>> Monday, November 10, 2008
அண்மையில் தமிழனின் கலைச்சின்னமான தஞ்சை பெருவுடையார் ஆலயத்திற்கு நேர்ந்த பாதிப்புகள் தொடர்பாக பதிவிட்டிருந்தேன் :- தஞ்சை பெரியகோயிலுக்கு ஆபத்து!
இப்பொழுது மற்றுமொரு தமிழனின் வரலாறு அழிக்கப்பட்டுள்ளதை நினைத்தால் கவலையாக இருக்கின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புல்லிவனம் எனும் கிராமத்தில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த வியாகரபுரீசுவர சிவன் ஆலயம் என்று ஒன்றுளது. இவ்வாலயத்தின் சிறப்பே அதன் பழமையும் , காலங்காலமாக பாதுகாக்கப்பட்டுவந்த அழகிய சோழர்கால ஓவியங்களும்தான். 975 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சோழர்கால ஓவியங்கள் அண்மையில் சில பொறுப்பற்றவர்களால் அநியாயமாகத் துடைத்தொழிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகசுட்டு மாதம் 27-ஆம் திகதியன்று பல தொல்லியல் நிபுணர்கள், கல்வெட்டாய்வாளர்கள், ஓவியர்கள் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்து இச்சோழர்கால ஓவியங்களைப் பாதுகாக்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் அண்மையில் இவ்வாலயத்தின் ஓவியங்களோடு சேர்த்து 16 கால் மண்டபங்களும் உடைக்கப்பட்டுள்ளன. உடைக்கப்பட்ட இம்மண்டபங்களில் மாடப்பள்ளி என்றழைக்கப்படும் மண்டபத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன், தெலுங்கு சோழ விசயகண்ட கோபாலதேவ, இராசநாராயண சம்புவரைய எனும் மன்னர்களின் தமிழ் கல்வெட்டுகள் இருந்திருக்கின்றன.
உடைப்பட்ட மற்றுமொரு மண்டபமான அலங்கார மண்டபமானது 16-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விசயநகர ஆட்சியின்போது கட்டப்பட்டதாகும்.
மறுசீரமைப்பு என்றப் பெயரில் இந்து சமய அறப்பணி வாரியத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் தமிழர்களின் அரும்பெரும் பொக்கிசத்தை இழக்க வேண்டியதாயிற்று. இவ்வாரியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, இவ்வாலயத்தின் வெளியே அமைந்துள்ள100 கால் மண்டபத்தை பிரித்து எடுத்து மீண்டும் பொருத்தவுள்ளனர். இந்நடவடிக்கையின்போது நாம் மேலும் எதிர்க்கொள்ள வேண்டிய இழப்புகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
சென்னையிலிருந்து 95 கி.மீ தொலைவில் உத்திரமேரூர் எனும் ஊருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் வியாகரபுரீசுவர சிவனாலய ஓவியங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்பட்டுவந்த ஓவியங்களாகும். தமிழ்நாட்டிலேயே சோழர்கால ஓவியங்கள் மூன்று இடங்களில் மட்டும்தான் இருக்கின்றன. தஞ்சை பெருவுடையார் ஆலயம், புதுக்கோட்டையில் அமைந்துள்ள விசயாலய சோழீசுவரர் ஆலயம், அதற்கடுத்து திருப்புல்லிவனம் வியாகரபுரீசுவர ஆலயத்தில்தான் சோழர்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இவ்வாலயத்திற்கு நேர்ந்த கதியைக் கேள்விபட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியொருவரும் புகைப்படக் கலைஞர் ஒருவரும் கடந்த நவம்பர் 2-ஆம் திகதியன்று ஆலயத்திற்கு வருகைப் புரிந்துள்ளனர். அச்சமயம் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் உடைப்பட்ட அலங்கார மண்டபத்தின் கற்றூண்களைப் பொருத்திக் கொண்டிருந்திருக்கின்றனர்.
மாநில அரசின் உத்தரவின் பேரில் செயல்பட்டு வரும் தரப்பினர், இவ்வாலயத்தின் வடக்கு, மேற்கு பிரகார சுவர்கள், கற்றூண்களில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகள் கொண்ட தமிழ் கல்வெட்டுகள் போன்றவற்றிற்கு ஈடுகட்டமுடியாத சேதத்தையும் பங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். மூலப்பிரகாரத்தையொட்டிய வெளிச்சுவரில் பல புடைப்புச் சிற்பங்கள் சேதத்திற்குள்ளாகியிருப்பது மேலும் வருத்தத்தையளிக்கிறது.
இந்த வியாகரபுரீசுவர சிவாலயமானது 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மன் ஆட்சி காலந்தொட்டே இருந்துவருகிறது. ராசுட்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருட்டிணா, சோழ மன்னர்களான முதலாம் பராந்தகன், முதலாம் இராசேந்திரச் சோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன், சம்புவரையனின் படைத் தளபதி இராசநாராயணன் மற்றும் விசயநகர மன்னர்கள் ஆகியோர் இவ்வாலயத்தின் கட்டுமானங்களுக்கு பலவகையில் உதவி புரிந்திருக்கின்றனர்.
இவ்வாலயத்தின் வடக்கு பிரகார சுவரில் வரையப்பட்டிருக்கும் சோழர்கால ஓவியங்கள் அநேகமாக முதலாம் இராசேந்திரன் ஆட்சி காலத்தில் வரையப்பட்டிருக்க வேண்டும் என கணிக்கப்படுகிறது. திரிபுராந்தகனாக சித்தரிக்கப்படும் சிவன் மூவுலக அரக்கனை அழிப்பதற்கு கைகளில் அம்பையும் வில்லையும் ஏந்தி தேரைச் செலுத்தி வரும் காட்சி, மற்றும் நடராசன், தக்கிணாமூர்த்தி, நரசிம்மன், ஆனந்தசயனத்தில் விண்ணு போன்ற ஓவியங்கள் அச்சுவரில் இடம்பெற்றிருந்ததாக தமிழ் நாடு தொல்லியல் ஆய்வுத் துறையில் பணியாற்றி பதவி ஓய்வுப் பெற்றுவிட்ட முன்னால் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் ஏ.பத்துமாவதி கூறினார். அதோடு இராசராச சோழனது குருவாகிய கருவூர் தேவர், இளவரசர்கள், இளவரசிகள், ஆடற் பெண்டிர்கள், அல்லியும் தாமரையும் நிறைந்த குளக்கரை, காட்டு விலங்குகள் போன்ற ஓவியங்களும் இடம்பெற்றிருந்ததாக அவர் கூறினார். இப்பொழுது இவையனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், பழங்கால தமிழ் கல்வெட்டு பொறிக்கப்பட்ட மண்டபம் ஒன்றும் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
மேலும் ஒரு துயரம் என்னவென்றால் பயிரைப் பாதுகாக்க வேண்டிய வேலியே பயிரை மேய்ந்திருக்கின்றது. மேய்ந்ததும் அல்லாமல் இதற்கு முன் அங்கு பயிரே இல்லை என வாதிட்டிருக்கிறது.
இவ்விடயம் குறித்து இந்து சமய அறப்பணி வாரியத்தின் செயலதிகாரி திரு.செந்தில் குமார் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர் "இவ்வாலயத்தில் அப்படியொரு ஓவியமும், அலங்கார மண்டபமும் கிடையாது" என பொறுப்பற்றத் தனமாக பதிலுரைத்துள்ளார்.
தாம் இவ்வாலயத்திற்கு பொறுப்பேற்கும் எட்டு மாதங்களுக்கு முன்பே மாடப்பள்ளி எனும் மண்டபமானது உடைக்கப்பட்டுவிட்டது எனவும், துடைத்தொழிப்பு நடவடிக்கையேதும் மேற்கொள்ளப்படவில்லை ஆனால் நீரைப் பீய்ச்சியும், காற்றழுத்தத்தைப் பயன்படுத்தியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், வரலாற்று சிறப்பு வாய்ந்த சோழர் ஓவியங்கள் இங்கு இருந்துள்ளதாகவும், அவை நான்கு மாதங்களுக்கு முன்பு துடைத்தொழிக்கப்பட்டுள்ளதாகவும், மாடப்பள்ளி மண்டபம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் தமிழினமே கூண்டோடு அழிகிறது, மறுபுறம் தமிழர் சரித்திரம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் வரலாறு கூறும் கலைச்சின்னங்களுக்கு இவ்வளவுதான் மதிப்பா? சரித்திரம் இழந்தான் தமிழன் என்ற அவப்பெயர்தான் மிஞ்சப் போகிறது நாம் மௌனிகளாக இருந்தால்...
4 கருத்து ஓலை(கள்):
இம்மதிரியான சின்னங்கள்தான் தமிழனின் அடையாளம். இது அழிந்தால் நாமது அடையாளமும் சேர்ந்து அழிக்கப்பட்டு விடும்.
//சென்னையிலிருந்து 95 கி.மீ தொலைவில் உத்திரமேரூர் எனும் ஊருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் வியாகரபுரீசுவர சிவனாலய ஓவியங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்பட்டுவந்த ஓவியங்களாகும். தமிழ்நாட்டிலேயே சோழர்கால ஓவியங்கள் மூன்று இடங்களில் மட்டும்தான் இருக்கின்றன. தஞ்சை பெருவுடையார் ஆலயம், புதுக்கோட்டையில் அமைந்துள்ள விசயாலய சோழீசுவரர் ஆலயம், அதற்கடுத்து திருப்புல்லிவனம் வியாகரபுரீசுவர ஆலயத்தில்தான் சோழர்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.//
தஞ்சை பெரிய கோவிலில் ஓவியங்களை பார்த்திருக்கிறேன். மற்ற இரண்டு கோவிலுக்கும் அடுத்த முறைதான் சென்று பார்க்க வேண்டும். அதுவரை இந்த ஓவியங்கள் அங்கு இருக்குமா?
இந்த பதிவுக்கு நன்றி.
//அதுவரை இந்த ஓவியங்கள் அங்கு இருக்குமா?//
விசயாலய சோழீசுவரர், தஞ்சை பெருவுடையார் ஓவியங்களாவது காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
கருத்துகளுக்கு நன்றி அன்பரே..
நான் ஒரு ஆறு மாதங்களுக்கு முன் போயிருந்த போதே மிக மோசமான செயல்கள், திருபணிகள் என்ற பெயரில் நடந்து கொண்டிருந்தது,யாரோ வேலையே தெரியாத ஆள் கிட்ட கொடுத்திருப்பங்க போல,எங்கெங்கோ இருக்க வேண்டிய சிற்பங்களை எல்லாம் compound சுவருக்காக பயன் படுத்தியிருந்தார்கள், நீங்கள் சொன்ன அந்த ஒரு மண்டபம் இடிந்த நிலையில் அப்படியே கிடந்தது.கண்டிப்பாக அந்த பணி செய்தவர்களுக்கு வரலாறு பற்றியோ.சிற்பங்கள் பற்றியோ தெரிந்துருக்குமா என்பது சந்தேகம்தான்
சேதங்களைக் கண்ட அக்கணமே எங்காவது புகார் கொடுத்திருந்தால் ஒருவேளை அந்த ஓவியங்கள் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்திருக்குமோ..?
இனிமேலும் இதுபோன்ற கலைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் கண்ணுற்றால் தயவு செய்த உரிய நடவடிக்கை எடுக்க அனைவரும் முனைய வேண்டும்..
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி அன்பரே..
Post a Comment