ராசா பெத்ரா விடுதலை!
>> Friday, November 7, 2008
சா அலாம் உயர்நீதிமன்றம் இன்று ராஜா பெத்ராவை விடுதலைச் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜா பெத்ராவின் கைது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், உள்துறை அமைச்சர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 8-ஐ முறையாக பின்பற்றி கைது ஆணையை பிறப்பிக்கவில்லை எனவும் நீதிபதி சாயிட் அகமது எல்மி குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை 4 மணியளவில் அவர் சா அலாம் உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு பின் விடுதலை செய்யப்படவுள்ளார்.
'மலேசியா டுடே' எனும் இணையத்தளத்தில் தனது கட்டுரையின்வழி இசுலாம் சமயத்தை இழிவுப்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு செப்தம்பர் 12-ஆம் திகதி கைது செய்யப்பட்டு 23-ஆம் திகதியன்று கமுந்திங் சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
***
ராஜா பெத்ராவின் இவ்விடுதலை குறித்து மகிழ்ச்சி ஒருபுறமிருக்க எங்கள் தலைவர்களை மட்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பதேனோ எனும் கேள்வி மனதில் எழுகிறது. எங்கள் மனங்களில் வீரர்களாக நிலைத்துவிட்ட அவர்கள் நீதியின் பார்வைகளுக்கு குற்றவாளிகளாக்கப்பட்டதேன்?
அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமக்கள் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பது கடந்த 50 ஆண்டுகளாக இந்தச் சமுதாயத்திற்குத் தெரியவில்லை, ஒருவேளை தெரிந்திருந்தாலும் எதிர்த்துக் கேட்க திராணியில்லாமலிருந்த சமுதாயத்தை விழித்தெழச் செய்தது ஒரு குற்றமா?
பிரச்சனைகள் பல புரையோடிக்கிடக்கும் இவ்வடிமைச் சமுதாயத்தின் குரலை அரசாங்கம் கேட்க வேண்டும் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகசர்கள் அனுப்பினோமே! எங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மகசர்கள் குப்பைத்தொட்டிக்குப் போகவே நாங்கள் வீதியில் இறங்கினோமே! அப்பொழுதாவது எங்கள் குரல் அரசாங்கத்திற்குக் கேட்டதா??
இன்று எம் தலைவர்கள் தேசத்திற்கே பெரும் மருட்டலாக இருப்பதாக ஒரு பொய் முத்திரைக் குத்தப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டிருக்கிறார்களே, இதுதான் உங்கள் நல்லரசியலா? இரக்கம் காட்டி எங்கள் தலைவர்களை விடுவிக்க உங்களிடம் நாங்கள் கெஞ்சவில்லை! குற்றம்சுமத்தப்பட்டவர்கள் தங்களுக்காக வாதாட ஒரு நீதிமன்றம், அங்கு முறையான விசாரணை. இதைக்கூட ஏற்படுத்திக் கொடுக்காத உங்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்தான் இப்பொழுது தேசத்திற்கே பெரும் மருட்டலாக இருந்து வருகிறது!
இக்கொடுங்கோல் சட்டத்தை எந்த சிறையில் அடைக்கப்போகிறீர்கள்?
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment