31 பேரின் விடுதலைக்காக பினாங்கில் பிரார்த்தனை
>> Thursday, December 13, 2007
கடந்த 10-ம் திகதி பினாங்கு பட்டவேர்த் மகாமாரியம்மன் ஆலயத்தில் இந்து உரிமைப் பணிப்படை சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் சுமார் 3000 பொது மக்கள் கூடினர். இக்கூட்டத்தில் வழக்கறிஞர் உதயக்குமார் " நாங்கள் விடுதலைப்புலி இயக்கத்தோடு தொடர்புக்கொண்டுள்ளதை 24 மணி நேரத்திற்குள் அரசாங்கம் நிரூபிக்க வேண்டும். அதற்குள் நிரூபிக்காவிட்டால் எங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டக் குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டாகக் கருதப்படும் என்று அவர் கூறினார். இங்கு அமைதியாக பிரார்த்தனை நடைப்பெற்றது. பொது மக்களுக்கோ, பொது இடத்திற்கோ எந்தச் சேதமும் எந்தத் தொல்லையும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார். கடந்த 50 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளைக் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பல மகஜர்கள் வழங்கப்பட்டன. ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். இதற்கிடையே ஓர் அரசியல் கட்சி திட்டமிட்டு இந்து உரிமைப் பணிப்படைக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை செய்து வருகிறது. இதற்குக் காரணம் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைப்பெறலாம். ஆகவே, இந்தப் பிரச்சனையை பெரிதுப்படுத்தி பொதுத் தேர்தலின் பிரச்சாரத்தில் இந்தக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்று அவர் கூறினார். இந்த நாட்டு மலாய் சமூகத்தினர் மிகவும் நல்லவர்கள். நாம் யாரையும் வம்புக்கு இழுக்கவில்லை. நமது சட்டப்பூர்வ உரிமைகளைத்தான் கேட்கிறோம். இந்த பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்படுவது சிறையில் உள்ள 31 பேர்கள் விரைவில் விடுவிக்கப் பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் பிரார்த்தனை ஆகும். மேலும் நான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவேன், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நமது நோக்கம் நமது உரிமையை பெறுவதுதான். நாடு முழுவதும் தற்போது இந்தியர்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமக்குள் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி பிளவு பட்டு கிடந்தால் அதனால் நம் சமுதாயத்திற்குத்தான் பெரும் இழப்பு. இந்த விழிப்புணர்வு தொடரட்டும். நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல. நாம் தீவிரவாதிகளும் அல்ல. இப்போது மட்டும் அல்ல, மலேசிய இந்தியர்கள் தீவிரவாதத்தில் ஈடுபட மாட்டார்கள். அதில் நம்பிக்கையும் இல்லை" என்று வழக்கறிஞர் உதயக்குமார் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் பயிலும் மாணவர்களும் அடங்குவர். இந்நிகழ்வில் 31 பேரின் நீதிமன்றச் செலவிற்காக ரி.ம 14,565 வெள்ளி திரட்டப்பட்டது. அவர்கள் விரைவில் விடுதலை ஆக வேண்டும் என்பதற்காக 31 புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment