சுவடுகள் (இரண்டாம் பாகம்)
>> Wednesday, December 5, 2007
1840-ஆம் ஆண்டில் மலாயாவின் கெடா, வெல்லெஸ்லி ஆகிய மாநிலங்களில் புதைபொருள் ஆராய்ச்சியை மேற்கொண்ட ஜேம்ஸ் லோ என்றவர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்பகுதிகளில் இந்தியர் குடியேறி வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கண்டறிந்துள்ளார். 1937-ஆம் ஆண்டில் டாக்டர். குவாட்ஸ் வேல்ஸ் என்பார் மேற்கொண்ட ஆராய்ச்சிகளும் இதனை உறுதி செய்கின்றன. இக்காலப் பகுதிகளில் ஏற்பட்ட தொடர்புகளும் குடியேற்றங்களும் வளமிக்க நாகரீகத்தின் ஓர் உயர்ந்த நிலையிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அக்குடியேற்றங்களில் பெரும்பாலானவை ஒரு சிறந்த பண்பாட்டின் தூதுவர்களாலும், அரிய பொருள்களைப் பல நாடுகளிலும் முனைந்து விற்கும் வணிகர்களாலுமே ஏற்படுத்தப் பட்டவை என்பது அவர்கள் கருத்து. காலம் என்ற பெரு நதியில் அடித்துச் செல்லப்பட்டு, இன்று அந்தக் குடியேற்றங்களைப் பற்றிய உண்மைகள் வெறும் நினைவுகளாகவும் வரலாறாகவுமே நிற்கின்றன. இன்று அங்கு வாழும் மலேசிய இந்தியர்களுக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
இவ்வரலாற்றுக்காலப் பகுதியை அடுத்த பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கும் தொடர்பின் விளைவாகவே மீண்டும் அங்கு இந்திய குடியேற்றங்கள் ஏற்படத் தொடங்கன. இன்று அந்த நாட்டில் வாழும் எல்லா தமிழர்களும் இக்காலப் பகுதியிலேயே அல்லது இதற்குப் பின்னரே குடியேறியவர்களின் சந்ததிகளாகவே விளங்குகின்றனர். இந்த இரண்டாம் காலக் கட்டத் தொடர்பு முன் சொன்னதுபோல் ஒரு பண்பாட்டின் தூதுவர்களாலே அல்லது வணிகர்களாலே ஏற்பட்டது அல்ல. ஒரு நாட்டிடம் அடிமைப் பட்டிருந்த இரண்டு அடிமை நாடுகளில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு உழைப்பதற்காக வந்த தொழிலாளர்களாலே இத்தொடர்பு ஏற்பட்டது.
1786-ஆம் ஆண்டில் பினாங்கு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டபோது தொடங்கிய இத்தொடர்பு, இந்த நூற்றாண்டு வரை தொடர்ந்தது எனலாம். இந்நாட்டுக்கு இவ்வாறு உழைக்க வந்தவர்களில் தோட்ட தொழிலாளிகளும், வணிகர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் 95 விழுக்காட்டினர் தோட்டத் தொழிலாளர்களே என்பதை பகுதி 1-இல் கண்டோம்.
காடுகளை அழித்தார்கள். மலையைக் குடைந்தார்கள். சாலைகள் அமைத்தார்கள். வெள்ளையர் வசதியாக வசிக்க வீடுகள் கட்டினார்கள். பிறர் வாழ தன்னை அழித்துக்கொள்பவன்தான் தமிழனோ? நாட்டின் வளப்பத்திற்கு வியர்வை சிந்திய இவர்கள் வசிப்பிடத்திலோ ஆயிரம் ஓட்டைகள். ''காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்-அவன் காணத் தகுந்தது வறுமை-பூணத் தகுந்தது பொறுமை'' என்பது நமக்காக எழுதப் பட்டதோ?
ஒட்டுப்பாயும், ஒழுகும் கூரையும், லாந்தர் விளக்கும், குடிக்க ஆற்று நீருமாக, சொல்லொணா துயரத்தில் உழன்ற தமிழர்கள், பிழைக்க வந்த இடமாயினும் விரைவிலேயே இம்மலை நாட்டை தன் நாடாகவே கருதி தங்களை இந்த மண்ணோடு பிணைத்துக் கொண்டனர். ஆனால், இவர்களுக்குப் பின் இங்கு குடிவந்தவர்கள், தென்னிந்தியர்களை அந்தியனர்களாகவே கருதினார்கள் என்பது விரக்தியான உண்மை.
"சஞ்சிக் கூலிகளாக இங்கு வந்தோம் என்றார்கள் - உண்மை -வெட்கப்படவில்லை
ஒட்டிய வயிரொடு ஒப்பந்த தொழிலாளர்களாக வந்தோம் என்றார்கள் உண்மை -வேதனைப்படவில்லை
கருமை நிறம் என்றார்கள் - அது இயற்கை -அவமானம் இல்லை -
சிந்திப்போம்...
உரம் பாய்ந்த கரங்களை உளியாய் பயன்படுத்தி நாட்டை வளப்படுத்தினோம். கைத்தொழில் வித்தையெல்லாம் களவு கொடுத்தோம்.
சஞ்சிக் கூலிகளாக இங்கு வந்தோம் என்றார்கள் - உண்மை பெருமைப்படுவோம்..
உழைத்து வாழ வந்தோம் - பிறர் உழைப்பில் சோம்பிக்கிடக்க அல்ல
பிழைப்பைத் தேடி வந்தோம் - பிறர் சோற்றில் மண்ணைப் போடுவதற்கு அல்ல
நாம் உழைக்கப் பிறந்த உழைப்பாளித்தமிழர்கள் வெட்கப்படாதீர்கள்- பெருமைப்படுங்கள்.
http://www.tamilwriters.net/suvadugal.html
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment