நம் பணம் விரையமாகும் கலைநிகழ்ச்சி தேவையா?
>> Thursday, December 6, 2007
‘தமிழ் சினிமா 75 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் வரும் 21, 23 தேதிகளில்
நட்சத்திர கலைநிகழ்ச்சி மலேசியாவில் நடக்கிறது.
இதில் 200க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ராடான் நிறுவனம், கலாட்டா டாட் காம் நிறுவனம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் சினிமா ஆரம்பித்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதற்காக தமிழ் சினிமா 75 ஆண்டுகள் என்ற தலைப்பில் மலேசியாவிலுள்ள ஷாஆலம் அரங்கில் டிச.21ம் தேதி கலைநிகழ்ச்சி நடக்கிறது.
மலேசிய மக்களே, நன்றாக சிந்தித்துப் பாருங்கள். இந்நாட்டில் நாம் பல விஷயங்களில் கிடைக்க வேண்டிய உரிமைகளை மெதுவாக இழந்துக் கொண்டிருக்கின்றோம். இதற்கும் கலை நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம்..
இந்தக் கலைநிகழ்ச்சிக்கு திரட்டப்படும் நிதியில் சல்லிக் காசுக்கூட நம் மலேசிய இந்தியர்களுக்கு பயன்படாது என்பது நிச்சயம். இதேபோன்று நம் இந்திய சமுதாய வளர்ச்சிக்கு ஏன் நம்மால் பெருமளவில் தொகையை திரட்ட முடிவதில்லை?
நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதும், அவர்களுக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்பதும்தான் நம் வேலையா? அதுவும் எத்தனை தடவை ஒரே நோக்கத்திற்காக இப்படி வந்திருப்பார்கள். ஏன், நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்தானே? பணத்தை வாரி இறைக்க நாம் என்ன முட்டாள்களா?
தயவு செய்து இனியும் சினிமா மோகத்தில் திளைக்காமல் நம்முடைய சந்ததியினர் எதிர்காலங்களில் எப்படி மானமிகு சமுதாயமாக வீறுநடைப் போடப் போகிறது எனச் சிந்தியுங்கள். அந்த நல்ல நோக்கத்திற்காக நாம் எவ்வளவு நிதி திரட்டினாலும் பரவாயில்லை, காரணம் அனைத்தும் நம் சமுதாய வளர்ச்சிக்கு வித்திடும்.
நம் மலேசிய நாட்டில் இன்று இந்தியர்கள் மனித உரிமைத் தொடர்பாக விழிப்புணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். நமக்குள் எரியும் தீயானது இது போன்ற கலைநிகழ்ச்சிகளில் ஈடுப்பட்டு குளிர்ந்துவிடக் கூடாது. நம் தீ அணைவதற்குத்தான் இந்த கலைநிகழ்ச்சி ஏற்பாடு என்பதை மனதிற்கொள்ளுங்கள்.
காலப்போக்கில் நாம் நம் போராட்டங்களை மறந்து கேளிக்கை கூத்துகளில் மனதைத் திருப்பிவிடும் ஒரு சதியே இந்த கலை நிகழ்ச்சி ஏற்பாடு.
உங்களுக்குள் எரியும் சுதந்திரத் தீ எரிய வேண்டும், மறந்துவிடாதீர்கள்.
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment