கண்டங்களின் பெயர்ச்சி

>> Tuesday, December 4, 2007

எல்லோரும் உலக வரைப்படத்தைப் பார்த்திருப்பர். அதில் கண்டங்களின் வடிவையும் இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்பது போலவே உலகம் என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், அல்பிரட் வெக்கனர் என்னும் பெயரிய நிலநூல் அறிஞர் ஒருவர், இன்று காணப்படும் கண்டங்கள் இப்போது இருப்பதை விட மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறுகின்றார். அக்கண்டங்கள் இப்போது இருக்கும் இடங்களுக்கு மெல்ல மெல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பெயர்ந்து வந்தன. இங்குக் காணப்படும் வரைப்படங்கள் அவ்வரலாற்றைக் காட்டுகின்றன.



முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் நீங்கள் உலக வரைப்படத்தைப் பார்ப்பீர்கள் என்றால் அது ஏறக்குறைய இவ்வாறுதான் காட்சி அளித்திருக்கும். இக்கண்டங்கள் அனைத்தும் ஒரே மாபெரும் கண்டமாக ஒன்றொடன்று முற்றிலும் இணைந்திருந்தன. அதனைப் பெங்கியா என்றழைக்கின்றனர்.



பதினெட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரே கண்டமாக இருந்த பெங்கியா என்னும் இம்மாபெரும் கண்டமானது, வடக்குத் தெற்காக இரு பிரிவாகப் பிரிந்தது. வடக்குப் பிரிவு லோரேசியா என்று அழைக்கப்படுகிறது. தெற்குப் பிரிவு கோண்டுவானா என்றழைக்கப்பெறுகிறது.



பதிமூன்றரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய வட அமெரிக்கா ஐரோப்பாவினின்றும் ஆசியாவினின்றும் பெயரத்தொடங்கியது.



ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய கண்டங்கள் மேலும் தொலைவாகப் பெயர்ந்தன. அவற்றின் தனித் தோற்றங்களை உங்களால் அடையாளம் காண முடிகின்றதா? இக்காலகட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னமும் தெந்துருவத்துடன் ( அண்டார்ட்டிக்கா ) இணைந்திருப்பதைக் கவனியுங்கள்.



இந்த வரைப்படம் கண்டங்களின் இன்றைய இடங்களைக் காட்டுகின்றது. ஆனால் அவை இன்னமும் தொடர்ந்து பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஓர் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் இடைவெளியில் ஒன்றைவிட்டு ஒன்று பெயர்ந்து கொண்டுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கண்டங்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்து ஓர் உலக வரைப்படத்தை வரைந்து பாருங்களேன். இன்னும் 5 கோடி ஆண்டுகாலத்தில் அவை ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளியைக் கொண்டிருக்கும்.

நன்றி : தமிழ் நெறி

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP