முக்கிய அறிவிப்பு !!! நம்முடைய 5 வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது !!! நமது அடுத்த நடவடிக்கை என்ன?

>> Thursday, December 13, 2007


சகோதரர்களே, தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி நம்முடைய 5 வழக்கறிஞர்கள் ( உதயக்குமார், கங்காதரன், மனோகரன், கணபதி ராவ் மற்றும் வசந்தன் ) ஆகியோர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் 8(1) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


தற்போதைய நிலவரம் குறித்து நமக்கு சில வேண்டுகோள்கள் விடப்பட்டுள்ளன. அதாவது, நம்முடைய வழக்கறிஞர்கள் சிறையில் இருக்கும் பட்சத்தில் அவர்களையும், மற்ற 31 சகோதரர்களையும் வெளியெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், யாரும் பயப்பட வேண்டாம். அதுமட்டுமல்லாமல், நம் பலத்தைக் குன்றச் செய்யும் எந்த ஒரு வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


இன்று மதியம் 12.30 மணிக்குமேல் வழக்கறிஞர் கங்காதரன் அவர்களை பெட்டாலிங் ஜெயாவில் அவரது அலுவலகத்தில் புக்கிட் அமான் போலிசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திரு.கணபகி ராவ் அவர்களை புக்கிட் ஆமான் சிறப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 2 மணியளவில் திரு.வசந்தகுமார் அவர்களை பிரிக்பீல்ட்ஸ்சில் போலிசார் கைது செய்தனர். திரு மனோகரன் அவர்கள் திரு கங்காதரனை புக்கிட் ஆமானில் சந்திக்கச் சென்றபோது போலிசார் கைது செய்தனர். திரு உதயகுமார் அவர்களோ, பங்சாரில் கைது செய்யப்பட்டார். வழக்கறிஞர் வேதமூர்த்தி தற்போது இங்கிலாந்தில் இருப்பதாக தெரியவருகிறது. உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதான நம்முடைய வழக்கறிஞர்கள் 2 ஆண்டுகளுக்கு கமுந்திங், தைப்பிங் சிறைச்சாலையில் வைக்கப்படுவர். எனினும் இவர்களை விரைவில் வெளிக்கொண்டுவர முயற்சிகள் கொண்டுவரப்படும். முதல் கட்டமாக 60 நாட்கள் காவலில் அவர்கள் வைக்கப்பட்டு, தேவைக்கருதி 2 ஆண்டுகள் காவல் நீட்டிக்கப்படும் எனத் தெரியவருகிறது. இவ்விரண்டு வருட காலத்தில் வழக்கறிஞர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை சந்திக்கலாம்.

எனவே சகோதரர்களே, நமது உரிமைகளுக்காக போராடும் அவர்களின் விரைவான விடுதலைக்காக அனைவரும் நாடு தழுவிய நிலையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தவேண்டும். முடிந்த மட்டும் நாட்டில் உள்ள உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு குறுந்தகவல்களின் வழி செய்திகளைச் சேர்ப்பிக்கவும்...

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP