சிங்கப்பூர் தமிழர்கள்
>> Monday, December 3, 2007
சிங்கப்பூரைப் பார்த்தால் சில சமயம் எனக்கு பொறாமையாக இருக்கும். அங்கு அனைவருக்கும் அனைத்துத் துறைகளிலும் சம உரிமை வழங்கப்படுவது குறித்தே எனது பொறாமை எழும். 6.5 சதவிகிதம் இந்தியர்கள் உள்ள அந்தக் குட்டித் தீவில் இன்றளவில் 3 இந்திய அமைச்சர்கள், 1 ஐ.நா ஆயுள் பிரதிநிதி, மற்றும் அதற்கு மணிமகுடமாக அந்நாட்டின் அதிபராக ஒரு இந்தியர் இருப்பது நமக்கெல்லாம் பெருமை அல்லவா...
அதிபர் : செல்லப்பன் இராம நாதன்
துணைப்பிரதமர்,உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்டத்துறை அமைச்சர் : பேராசிரியர் ஷண்முகம் ஜெயக்குமார்
சமூக வளர்ச்சி, இளைஞர்,விளையாட்டுத்துறை அமைச்சர், தகவல், தொடர்புத்துறை மற்றும் கலைத்துறையின் இரண்டாவது அமைச்சர் : டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்
கல்வி அமைச்சர், நிதித்துறையின் துணை அமைச்சர் : தர்மன் ஷண்முக ரத்னம்
ஐ.நா ஆயுள் பிரதிநிதி : வேணு கோபால மேனன்
நம் மலையகத்தை எடுத்துக் கொண்டால் இந்தியர்கள் 8 சதவிகிதம், ஆனால் முழு அமைச்சரோ ஒருவர்தான்.. அதுவும் ஐம்பது ஆண்டுகளில் நம் நாட்டில் நமக்குக் கிடைத்த உரிமை அவ்வளவுதான்.
ஏன் நாம் பிறந்த மலை நாட்டில் மட்டும் இனத்திற்கு இனம் உரிமைகள் மாறுபட்டுக் காணப்படுகின்றன? கல்வி, பொருளாதாரம், வணிகம், வேலை வாய்ப்பு என இன்னும் பல விஷயங்களில் நாம் அனுபவிக்க வேண்டிய உரிமைகள் சரிவர கிடைகாததற்கு நாம் என்ன செய்தோம்? காத்திருந்தோம் கிடைக்கவில்லை, பொறுமையாகக் கேட்டுப் பார்த்தோம் கிடைக்கவில்லை, மனு அனுப்பினோம் அது செல்லாக்காசாகிவிட்டக் கதை, கண்துடைப்புக்கு அரசாங்கம் இடும் பிச்சைகள் நம் கைகளில், அதுவும் தெர்தல் நெருங்கும்பொழுது மட்டுமே... இதுதான் 50 ஆண்டுகளில் பெரிதாக நம் சமுதாயம் கண்ட வளர்ச்சி. கண்கூடாகவே தெரிகின்ற உண்மைகள் இவை. இதுவரை நாமும் மிஞ்சி மிஞ்சி என்ன செய்திருப்போம், காப்பிக் கடைகளில் உட்கார்ந்து மனதில் உள்ளவற்றைக் கொட்டித் தீர்த்திருப்போம். இந்தியர்களுக்குப் எந்த வகையிலும் நன்மை தராத அரசாங்கத் திட்டங்களைப் பற்றி நாம் கூறும் குறைகளை பாவம் அந்த காப்பிக் கடைக்காரரும், கடையின் தூண்களும், நாற்காலி, மேசைகளும் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
இனியும் அப்படி இருக்க வேண்டும் என்பது நம் தலை விதியல்ல..
இனி உட்கார்ந்துப் பேசி பிரயோஜனம் இல்லை, காரணம் யாரும் உட்கார்ந்துப் பேச முன்வரவில்லை. மக்களின் ஊழியர்களாக செயல்பட வேண்டிய அமைச்சர்கள் முதலாளிகள் போல் கால்மேல் கால் போட்டுக் கொண்டு பேசும் மமதையை ஒடுக்க வேண்டும். மக்கள்முன் நிற்கவைத்துக் கேள்விகள் கேட்க அவர்கள் முறையான பதில்களைக் கூற வேண்டும். இதுதான் ஜனநாயகம். அப்படி மக்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்லத் தெரியாத அமைச்சர்கள் பதவியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தோன்றுகிறது.
மக்களே அரசாங்கம் உங்களுக்காக...
உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் முறையான அரசாங்கத்தின் கடமை என அறிக...
உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காதீர்கள்...
இனி அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் முறையான பதில் வேண்டும் எனக் கேள்வி எழுப்புங்கள்... இது உங்கள் உரிமை, பதில் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment