சுவடுகள் ஒன்றாம் பாகம்
>> Wednesday, December 5, 2007
மலாயாவுக்கும் தமிழகத்துக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரங்களை அகழாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார்கள். அத்தொடர்புகள் பண்பாட்டுத் தூதுவர்களாலும், வணிகர்களாலுமே ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும், அந்த குடியேற்றங்களைப் பற்றிய உண்மைகள் வரலாறாகவே நிற்கின்றன என்பதும் அவர்கள் கருத்து.
1786-ஆம் ஆண்டுக்குப்பின் மலாயா படிப்படியாக ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டது.
வளமையும் செழுமையும் நிறைந்த இந்நாட்டில், ஈயத்தைத் தவிர விலைமதிக்க முடியாத வேறு பல மூலப்பொருள்கள் கிடைக்குமாறு செய்ய ரப்பர், செம்பனை மரங்களை நட முற்பட்டனர் ஆங்கிலேயர்கள். வனவிலங்குகள் சுற்றித்திரியும் காடுகளிலும் மலைகளிலும் வேலை செய்வதற்கு உயிரையும் உடல் நோவையும் பொருட்படுத்தாமல் உழைக்கக்கூடியவர்களே தேவை என்பதையும் இப்பணிக்கு மிகப்பொருத்தமானவர்கள் தென்னாட்டுத் தமிழர்கள் என்பதனையும் அறிந்து தமிழர்களை இங்கே 'சஞ்சிக் கூலிகளாக'க் கொண்டு வந்தது ஆங்கிலப்பேரரசு. ('சஞ்சிக் கூலிகள்' என்ற சொல் இவ்விடம் பயன்படுத்தப்படுவது ஒரு குறிப்புக்காக மட்டுமே; இந்த அடைமொழியோடு இங்கு வந்தவர்கள், இன்று வாணிபம், பொருளாதாரம், அறிவியல், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்று சிறந்து விளங்குகின்றார்கள் என்பதை அடுத்தடுத்து வரும் தொடர்களில் காண்போம்).
இவர்களுக்கு முன்பே, இந்நாட்டில் வணிகம் செய்ய, விவரம் தெரிந்த தமிழர்கள் வந்திருந்தாலும், இந்நாட்டை வளமாக்க வந்த தென்னாட்டுத் தமிழர்களே இங்கே நிரந்தர குடிமையை ஏற்படுத்தினர்.
ஆரம்ப காலங்களில் தங்கள் உயிர்களையும் உணர்வுகளையும் உரமாக்கி நாட்டை செழிப்பாக்கிய தமிழர்கள், மலைகளையும் காடுகளையும் ரப்பர் தோட்டங்களாகவும், செம்பனைத் தோப்புகளாகவும் மாற்றியமைக்கும் பணியில் கொடிய விலங்குகளுக்கும், விஷக்கடிக்கும் ஆளாகி, உயிரையும் பணயம் வைத்த வரலாறு, தற்கால நூல்களிலிருந்து மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்நாட்டின் முதன் முதலில் விதைக்கப்பட்ட ரப்பர் மரத்தின் வேர்களில் தொடங்கி நேற்று முளைவிடத் தொடங்கிய ரப்பர் மரத்தின் துளிர் வரையில் நம் தமிழர்களின் ரத்தத்துளிகள் பிரிக்க முடியாதபடி பின்னிப் புதையுண்டு கிடக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.
தென்னாட்டுத் தமிழர்களால் காடு கழனியாயிற்று. தோட்டம் நகரமாயிற்று. ஆனால், கல்வியறிவு இல்லாத தமிழர்கள் முன்னேற வழி தெரியாமல் ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்டனர். அவர்களை உசுப்பி விடுவதற்கோ-முன்னேற்றப் பாதைக்கு மார்க்கம் காட்டுவதற்கோ அச்சமயம் போதுமான ஊக்குவிப்பு இல்லை.
ஆரம்பத்தில் சிறு சிறு கும்பல்களாக வரவழைக்கப்பட்ட தமிழர்களின் கடுமையான உழைப்பு, அளவுக்கு மீறிய பணிவு, நிர்வாகத்துக்கு அடங்கி நடக்கும் தன்மை போன்ற குணங்கள் வெள்ளைக்கார முதலாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, தென்னிந்தியத் தமிழர்களை இலட்சக்கணக்கில் குடிபெயர வழிவகுத்தது.
தமிழகத்திலிருந்து கொண்டு வந்த தொழிலாளர்களை வெள்ளைக்கார துரைமார்கள் தோட்டங்களில் 'லயங்கள்' கட்டிக்கொடுத்துக் குடியேற்றினர். அவர்களுடைய தொழில் உற்பத்திக்கு ஏற்றவர்களாக, கால் வயிற்றுக் கஞ்சிக்கு பத்து மணி நேர உடலுழைப்பைத் தந்த தமிழர்களுக்குக் குடியிருப்பு, ஆயாக்கொட்டகை, கள்ளுக் கடை, தெய்வ வழிபாட்டுக்கு மாரியம்மன் கோயில்கள் போன்ற தேவைகளைப் பணியிடங்களின் அருகாமையிலேயே அரைகுறையாக ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர் துரைமார்கள். காரணம் தொழிலாளிகள் வெளிஉலகத் தொடர்பு அறவே இல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று துரைமார்கள் விரும்பினார்கள்.
உழைப்பைத் தவிர வேறு எதையும் அறிந்திராத தமிழர்கள் சிலர் திரும்பி தென்னிந்தியா சென்று திருமணம் முடித்து மனைவிமார்களோடு வந்திறங்கினார்கள். கணவன்-மனைவியான தமிழர்கள் இங்கே சந்ததியை உருவாக்கினர். தமிழரின் எண்ணிக்கை கூடியது. தென்னிந்திய தமிழர்கள் மலைநாட்டுத் தமிழர்களாகப் புதிய தோற்றத்துடன் உதயமாகினர்.
புதிய பரம்பரை உருவாகியது.!
http://www.tamilwriters.net/suvadugal.html
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment