இண்ராப்பிற்கு அனைத்துலக அங்கீகாரம்ஜெனிவாவிலிருந்து
மோகனன் பெருமாள்,
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து இண்ராப் தலைவர்கள் விடுதலை உட்பட சிறுபாண்மை இந்திய சமூகம் எதிர்நோக்கிவரும் பல்வேறு விதமான சமூகப் பொருளாதார பிரச்சனைகள் குறித்து ஜெனிவாவில் உள்ள ஐ.நா பேரவையின் மனித உரிமை ஆணையத்திற்கு இண்ராப்பின் தலைவர் திரு.வேதமூர்த்தி விளக்கமளித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி இலண்டனில் தங்கிவரும் இவர், இண்ராப் இயக்கத்திற்கு அனைத்துலக ஆதரவை திரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அம்முயற்சியின் ஓர் அங்கமாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா பேரவையின் மனித உரிமை ஆணையத்திடம் விளக்கமளிக்க கோரிக்கையை முன்வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று அவரை சந்திக்க ஐ.நா பேரவை இணக்கம் அளித்தது.
அதன் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை மாலை 2.30 மணிக்கு (மலேசிய நேரப்படி இரவு 9.30 மணியளவில் ) ஜெனிவாவில் உள்ள ஐ.நா பேரவையின் மனித உரிமை ஆணையத்தின் எட்டுப் பிரிவுத் தலைவர்களுடன் அவர் சந்திப்பு நடத்தி விளக்கமளித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப சிறுபாண்மை இந்திய சமூகம் முன்னேறவில்லை. பல்வேறு துறைகளில் அவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வறிக்கைகள், பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் மலேசிய அரசாங்கம் இந்திய சமூகத்தின் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து செவிசாய்க்க மறுத்து வந்துள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் அரசாங்க நிலத்தில் அமைந்துள்ளன என காரணம் சொல்லி உடைத்து தரைமட்டம் ஆக்குவதில் அரசு துடிப்புடன் செயல்படுகிறது. ஆனால் தமிழ்ப்பள்ளிகள் தனியார் நிலத்தில் உள்ளன என காரணம் கூறி அவற்றின் மேம்பாட்டை முடக்கி வருகிறது என்பன போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
இதன் தொடர்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி ஒரு மாபெரும் பேரணி நடைப்பெற்றது. அந்தப் பேரணிக்கு தலைமையேற்றிருந்த ஐவரை போலீசார் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவை நாடியுள்ளனர். இவர்களுக்கு பயங்கரவாத இயக்கத்தோடு தொடர்புகள் இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு இவர்களால் பெரும் மிரட்டல் இருக்கிறது என அரசு தரப்பு விளக்கமளித்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை எவ்விதமான ஆதாரங்களையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என்றும் அவர் ஐ.நா அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.
சாமான்ய மக்களின் உரிமைக்குப் போராடியதால் இன்று சிறைக் கைதிகளாக பல்வேறு இன்னல்களை அனுபவித்துவரும் அவர்களின் விடுதலைக்கு ஐ.நா உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
சரமாரியான கேள்விஉலக அரங்கில் சமூகப் பொருளாதாரத்துறை மற்றும் இன, சமய, ஒற்றுமை குறித்து நன்மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள மலேசிய அரசாங்கத்தின்மீது திரு.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா அதிகாரிகள் சரமாரியான கேள்விக் கணைகளை எழுப்பினர்.
வெளி உலகிற்கு தெரியாமல் மலேசிய இந்திய சமூகம் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள், அவர்கள் அனுபவித்துவரும் ஊமைவலிகள், கேள்விகள் கேட்கக்கூடாது என மறைமுகமாக விடுக்கப்பட்டுவரும் மிரட்டல் ஆகியவைக் குறித்து வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்களையும் புள்ளி விபரங்களையும் முன்வைத்து மிக நேர்த்தியான முறையில் அவர் விளக்கமளித்தார்.
அவரது விளக்கங்களை முழுமையாக செவிமடுத்த ஐ.நா அதிகாரிகள், மலேசிய அரசாங்கத்திடம் முறையான விளக்கம், விசாரணை கோரப்படும் என உறுதியளித்தனர்.
இதனிடையே பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளதுடன் சட்டவிரோத இயக்கம் என மலேசிய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ள இண்ராப்பின் தலைவர் திரு.வேதமூர்த்தியை சந்திக்கவும் அவரின் விளக்கத்தை செவிமடுக்கவும் ஐ.நா பேரவை அனுமதி அளித்துள்ள இந்த வாய்ப்பு, இண்ராப் இயக்கத்திற்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.
போராட்டம் தொடரும்...
Read more...