நடிகர் நாகேசு இன்று காலமானார்!

>> Saturday, January 31, 2009


தமிழ் திரைப்பட உலகில் சிறந்தவொரு நடிகராக கொடிகட்டிப் பறந்த மதிப்பிற்குரிய நடிகர் திரு.நாகேசு இன்று தனது 75வது வயதில் உடல்நலக்குறைவினால் காலமானார். இவரைப் போன்ற இன்னொரு நகைச்சுவை, குணச்சித்திர நடிகரை தமிழுலகம் இனி காணுமா என்பது கேள்விக்குறியே. திருவிளையாடல், அன்பே வா, சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் காலத்தாலும் மறக்கமுடியாத நினைவுகளாக இவரின் பிம்பத்தை தாங்கி நிற்கின்றன. இத்தனை காலம் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு தமிழ் மக்களை சிரிக்க வைத்த அந்த மனிதருக்கு இவ்வேளையில் அஞ்சலி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அன்னாரின் ஆத்துமா அமைதிப் பெற இறைமையை இறைஞ்சுவோமாக.

சர்வர் சுந்தரம் (நகைச்சுவை)

Read more...

மனித உரிமைப் போராளி தீக்குளிப்பு!

>> Friday, January 30, 2009


இலங்கைத் தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவெறி இராணுவம் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்தைச் சார்ந்த திரு.முத்துகுமார் எனும் மனித உரிமைப் போராளி, சென்னை நுங்கம்பாக்கம் சாசுத்திரி பவன் எதிர்புறம் நேற்று தீக்குளித்து மாண்டுள்ளார். இவர் தீக்குளிப்பதற்கு முன்பு அங்குள்ளவர்களிடம் தான் தயாரித்த ஓர் துண்டு அறிக்கையையும் விநியோகித்துள்ளார். அவ்வறிக்கையைப் படிக்க கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டவும்.

தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

தமிழ் சமுதாயத்தின்பால் தான் கொண்டுள்ள பற்றை இதுபோன்ற செயல்களின் மூலம்தான் நிரூபிக்க வேண்டும், அல்லது கண்டனம் தெரிவிக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மனித உரிமைப் போராளிகள் விடுதலையை நோக்கி கடைசிவரை போராடுவதுதான் அழகு. அதுதான் தாம் சார்ந்துள்ள சமுதாயத்திற்கும் நன்மை.

அன்னாரின் உயிர் துறப்பு சமூகத்திற்கு ஏற்பட்ட ஓர் இழப்பாகும். மனித உரிமைப் போராளிகள் இனி இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்.


நக்கீரன் படச்சுருள்

Read more...

யார் இந்த குகன்?

>> Thursday, January 29, 2009


குகனின் அகால மரணத்திற்கு காவல்த்துறையினரே முழு பொறுப்பு என்பது சவப் பரிசோதனை, வழக்கு விசாரணை, சாட்சியம் , ஆதாரம் கொண்டுதான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை. ஒரு சிறு குழந்தைக்குக் கூட இவ்வுண்மை அப்பட்டமாகத் தெரியும், யார் பொறுப்பென்று! குகனின் இறப்பிற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய தரப்பினரை ஐயந்திரிபற நாம் அடையாளம் காண முடிந்தாலும், அவரை அடித்துக் கொன்றதற்கான காரணங்கள் மட்டும் மர்மமாகவே இருந்து வருகின்றன.

அம்னோவின் கீழ் செயல்பட்டுவரும் ஊடகங்கள், அம்னோ அரசியல்வாதிகள், காவல்த்துறை உயர் அதிகாரிகள் போன்றோர் கூறுவது போல, உண்மையிலேயே குகன் ஒரு சொகுசுக் கார் திருடனா? அவர் கைது செய்யப்படுவதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்?

நமக்குத் தெரிந்த தகவலின்படி, ஒரு தனியார் நிதி நிறுவனத்தின்கீழ் மாத கட்டணம் செலுத்தப்படாத கார்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்துவந்த தன் மாமாவிற்கு உதவியாளராக குகன் பணி புரிந்துள்ளார். கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, குகன் ஒரு காவல்த்துறை அதிகாரியின் சொந்தக் காரை பறிமுதல் செய்வதற்கு முனைந்த பொழுது, அந்த குறிப்பிட்ட காவல்த்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அவ்வேளையில், குகன் அக்காரை பறிமுதல் செய்வது தன்னுடைய கடமை என வாதிடுகையில், குகனின் மறுமொழியால் ஆத்திரம் அடைந்த அக்காவல்த்துறை அதிகாரி, குகனைக் கைது செய்து தடுப்புக் காவலில் துன்புறுத்தி இறுதியில் அவரின் அகால மரணத்திற்கும் காரணமாகியுள்ளார். குகனின் மரணத்தில் தைப்பான், சுபாங் செயா காவல்நிலையத்தில் பணிப்புரியும் 10 காவல்த்துறை அதிகாரிகளும் உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தவிர்த்து இக்கொலையில் சில பெரும்புள்ளிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சொகுசு கார்கள் திருட்டை நடத்தும் பெரிய கும்பல்களை அக்காவல்த்துறையினர் நன்கு அறிந்திருக்க வேண்டும் என சில தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்சமயம், பாதுகாப்பு கருதி இவர்கள் வேறொரு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இலகுவான பணிகளை ஆற்றுவதற்கு பணிக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே.

தற்சமயம், குகனை ஒரு சொகுசுக் கார் திருடன் என்பதுபோல உள்நாட்டு ஊடகங்கள் சில சித்தரித்து வருகின்றன. அவரை அப்படிச் சித்தரிப்பதற்கு ஊடகங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எனத் தெரியவில்லை. மலேசிய இந்தியர்கள் என்றாலே இதுபோன்ற காரியங்களைச் செய்வதற்குத்தான் அருகதை உடையவர்கள் என்பதுபோலவும் சித்தரிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில், உள்துறை அமைச்சர் சாயிட் அமீட் அல்பார் " குற்றம் புரிபவர்களை கதாநாயகர்களாக்கிப் பார்க்க வேண்டாம்!" என அறிக்கை விட்டுள்ளார். இவ்விடயம் குறித்து யார் பக்கம் உண்மை இருக்கிறது?

காவல்த்துறையினரைக் கேட்டால், குகனை சொகுசுக் கார்கள் திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக அறிக்கை விடுகின்றனர். குகனின் குடும்பத்தினரோ அதனை மறுக்கின்றனர். யார் சொலவது உண்மை??

இதற்கிடையில், குகனின் மரணம் குறித்த செய்திகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக இரு துணை அமைச்சர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பரவலாக ஊடகங்களில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. சில அரசியல்வாதிகளும் ஏட்டிக்குப் போட்டியாக ஊடகங்களில் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், காவல்த்துறையினர் சமுதாயத்தின் பால் கொள்ள வேண்டிய பொறுப்புணர்ச்சி, காவல்த்துறையினரின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு சுயேட்சை விசாரணை குழு (Independent Police Complaints and Misconduct Commission), காவல்த்துறை பணி தேர்வுக்கு ஏற்ற தகுதிகள் குறித்து எந்தவொரு தேசிய முன்னணி அரசியல்வாதியும் பேசியதாகத் தெரியவில்லை. இவற்றை மக்களே முன்வந்து நினைவூட்டினாலும், அரசு எந்திரங்களைக் கொண்டு பொதுமக்களின் கருத்து சுதந்திரம் அடக்கி ஒடுக்கப்பட்டு விடுகிறது.

ஓர் இளைஞனின் உயிரை பறித்ததாக நம்பப்படும் காவல்த்துறை அதிகாரிகளை, சந்தேகத்தின்பேரில் கூட கைது செய்யாமல் விட்டிருப்பது நம் மலேசிய நாட்டின் மனித உரிமை குறித்து நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. இங்கு ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மலேசியாவில் மனித உரிமைகள் மடிந்து வருவதற்கு பொதுமக்களும் ஒரு காரணம். நமக்கு ஏன் இந்த வம்பு என ஒதுங்கிப் போவதும், நம்மால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தைக் கண்டு நாமே அஞ்சுவதும், நீதி கிடைப்பதில் கடைசிவரை நின்று போராடி வென்றெடுப்பத்தில் இல்லாத முனைப்புமே நம்மை பின்தள்ளி விடுகின்றன. இக்கூற்று ஒட்டுமொத்த மலேசியர்களையும் சாரும் என்பதில் ஐயமில்லை.

'மக்கள் சக்தி' , 'மக்கள் சக்தி' என வாயாறக் கூறுவதிலில்லை உண்மைப் பயன். செயலில் காட்டப்படும்பொழுதுதான் அதன் மகத்துவம் அநீதிகளை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகிறது. இவ்வேளையில் குகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மனித உரிமைக்காக குரல் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, காவல்த்துறையின் அராஜகச் செயலின் எதிரொலியாக மக்கள் வெகுண்டு எழுந்ததனால் இன்று அரசு எந்திரங்கள் சற்று ஆட்டம் கண்டிருக்கின்றன. மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்கலாம் எனும் அரசியல்வாதிகளின் பகற்கனவுகள் தவிடுபொடியாகி வருகின்றன. கடந்த ஓராண்டில் மக்களிடையே நல்லதொரு அரசியல், சமூக, சட்ட, மனித உரிமை குறித்த விழிப்புணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன. இது மேலும் தொடர வேண்டும்!

குகனுக்கு நேர்ந்தது நாளை நமக்கு ஏற்படாமல் இருக்க...

உரிமைக்காக ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்!

போராட்டம் தொடரும்...


மலேசியா
கினி படச்சுருள்


Read more...

காவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..? (பகுதி 2)

>> Monday, January 26, 2009காவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..? (பகுதி 1)

6. மெஜிஸ்ட்ரேட்டின் காவல் தடுப்பு ஆணை

6.1 மெஜிஸ்ட்ரேட் என்பவர் யார்?

மெஜிஸ்ட்ரேட் என்பவர் ஒரு நீதித்துறை அதிகாரி. அவர் 24 மணி நேரத்திற்கு மேல் உங்களை தடுத்து வைப்பதற்கு, 'காவல் தடுப்பு ஆணை' பிறப்பிக்க அதிகாரம் உள்ள நீதித் துறை அதிகாரி ஆவார்.

6.2 காவல் தடுப்பு ஆணையின் நோக்கம்

 • உங்கள் மீது குற்றம் சுமத்த சான்றுகள் உள்ளதா என்பதனைக் கண்டறியகாவல்த்துறையினருக்கு கால அவகாசம் வழங்குதல்
 • உங்களிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டும் எனும் காரணத்திற்காக காவல்தடுப்பு ஆணை பெற முடியாது

6.3 காவல் தடுப்பு ஆணையின் கால அளவு

24 மணி நேரத்திற்கு மேற்பட்ட காவல் நீட்டிப்பிற்காக, மெஜிஸ்ட்ரேட் முன்பு நீங்கள் நிறுத்தப்படும்பொழுது, அதற்கான காரணங்களை காவல்த்துறை அதிகாரி மெஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவிக்க வேண்டும். காவல்த்துறையினரை முன் வைத்து காரணங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டியது மெஜிஸ்ட்ரேட்டின் கடமை.

வழக்கமாக காவல்த்துறையினர் 14 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்களுக்கு காவல் நீட்டிப்பு கோருவர்.

காவல்த்துறையினரின் கோரிக்கையை கவனமாக பரிசீலித்தப் பிறகு அதனை நிராகரிப்பதற்கும் / அவர்களுடைய கோரிக்கைக்கும் குறைவான நாட்களுக்கு காவல் தடுப்பு ஆணை வழங்குவதும் மெஜிஸ்ட்ரேட்டின் விருப்புரிமை.

காவல்த்துரையினர் ஒன்றுக்கும் மேற்பட்ட காவல் நீட்டிப்பு ஆணையினை கேட்க முடியும்.

எப்படியாயினும், உங்களை 15 நாட்களுக்கு மேல் தடுத்து வைக்க முடியாது.

6.4 காவல் நீட்டிப்பிற்காக நீங்கள் மெஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்?

மெஜிஸ்ட்ரேட்டிடம் கீழ்கண்டவற்றை கோருங்கள்.

 • உங்களை பிரதிநிதிக்க வழக்கறிஞர் தேவைப்படுவதால் சட்ட உதவிமையத்துடனோ குடும்பத்தாருடனோ தொடர்புக் கொள்ள அனுமதி கோருங்கள்.
 • உடல் நிலை குறைவாக இருந்தாலோ / அடித்து துன்புறுத்தி இருந்தாலோமுறையான மருத்துவ சிகிச்சை கோருங்கள்.
 • காவல்த்துறையினர் உங்களை பயமுறுத்தி இருந்தாலோ அடித்திருந்தாலோஅதனை தெரிவியுங்கள்
 • முறையான உணவு, நீர், உடை, கழிவறை அல்லது மருத்துவ உதவிமறுக்கப்பட்டிருந்தால் அதனையும் தெரிவியுங்கள்.
 • நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது காவல்த்துறையினர் விசாரணைமேற்கொண்டாரா என்பதையும் தெரிவியுங்கள்

6.5 குறைவான நாட்களுக்கான காவல் தடுப்பு ஆணையைக் கேளுங்கள்.

மெஜிஸ்ட்ரேட் காவல் தடுப்பு ஆணை பிறப்பிப்பதற்கு முன்பதாகவே, காவல்த்துறையினர் கேட்டதற்கும் குறைவான நாட்களுக்கு காவல் நீட்டிப்பினைக் கோருங்கள். அதற்கான காரணங்களையும் முன் வையுங்கள். (.கா காவல்த்துறையினரின் விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன். தேவை ஏற்பட்டால் நானே முன் வருவேன்)

7. கைது செய்வதற்கு முன்பதாக மேற்கொள்ளப்படும் உடல் சோதனை

7.1 எப்பொழுது இதனை செய்ய முடியும்?

நீங்கள் மதுபான கடைகளில் இருக்கும்பொழுது காவல்த்துறையினர் போதைப் பொருள் சோதனை மேற்கொண்டால், உங்கள் உடலையும் பைகளையும் சோதனை செயவதற்கு காவல்த்துறையினருக்கு அதிகாரம் உண்டு.

இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கும் மேற்பட்ட பதவியில் இருக்கும் அதிகாரியின் முன்னிலையில் மட்டுமே சோதனையை மேற்கொள்ள முடியும்.

7.2 அப்பொழுது என்ன செய்ய வேண்டும்.

உங்கள் சட்டைப் பையில் / பைகளில் கைகளை விட காவல்த்துறையினரை அனுமதிக்காதீர்கள்.

நீங்களாகவே முன் வந்து உங்கள் சட்டைப் பையில் / பைகளில் உள்ளவற்றை காவல்த்துறையினர் முன்னிலையில் வெளியில் எடுங்கள்.

சட்டைப் பையில் / பைகளில் உள்ள பொருட்களை எடுத்து வெளியில் வைக்கும்பொழுது, ஒவ்வொரு முறையும் இதுபணப்பை’ , ‘சாவி’ , ‘அடையாள அட்டைஎன ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்.

உங்களுடைய சட்டைப்பை / பை காலியானப் பின், உண்மையிலேயே காலியாகிவிட்டது என்பதை காண்பியுங்கள்.

7.3 உங்கள் உரிமைகள்

ஒரு பெண்ணை பெண் காவல்த்துறை அதிகாரியே சோதனை செய்ய முடியும்.
உடல் சோதனைகள் தக்க பண்புடன் மேற்கொள்ள வேண்டும் (.கா உங்கள் மறைவிடங்களைத் தொடக் கூடாது)

ஆடைகளைக் களைந்து சோதனை மேற்கொள்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை.

8. கைது செய்யப்படும்பொழுது மேற்கொள்ளப்படும் உடல் சோதனை

8.1 எப்பொழுது இச்சோதனையை செய்ய முடியும்?

நீங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றம் புரிந்ததற்கான பொருட்கள் உங்களிடம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய உங்கள் உடலை சோதனை செய்யலாம்.

உங்கள் உடலை தனிப்பட்ட இடத்தில் சோதனை செய்ய வேண்டும். தனிப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொள்ள கோருவது உங்கள் உரிமை.

8.2 ஆடைகளை களைந்து சோதனை மேற்கொள்வது.

 • உங்களைக் கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களைந்து சோதனைமேற்கொள்வதற்கு சட்டத்தில் இடமில்லை.
 • நீங்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் கூட, ஆடைகளைக் களைய உங்களைகட்டாயப்ப்டுத்தினாலோ / பயமுறுத்தினாலோ
 • கண்டனம் தெரிவியுங்கள்.
 • அந்த காவல் அதிகாரியின் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 • பின்னர் அந்த சம்பவத்தை புகார் செய்யுங்கள்.

9. கைது செய்யப்பட்ட பின்னர் விசாரிக்கப்படுகிறீர்கள்

9.1 கேள்வி கேட்கும் அதிகாரியின் அடையாளம்

கேள்விகள் கேட்கும் காவல் அதிகாரியின் பெயரை / பதவியைக் குறித்து கொள்ளுங்கள்.

9.2 எதற்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருக்க உரிமை உண்டு.

காவல் அதிகாரி முதலில் நட்பு முறையாக உங்களோடு உரையாடுவார் (.கா. உங்களைப் பற்றியும் குடும்பம் மற்றும் நண்பர்கள் பற்றியும் விசாரிப்பர்) அவ்வேளையில் கனிவாக நடந்துக் கொள்ளுங்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பாவிட்டால் மௌனமாக இருக்க பயம் கொள்ளக்கூடாது. அது உங்கள் உரிமை.

9.3 காவல்த்துறையினர் எழுத்துப் பூர்வமான (113 / பதிவறிக்கை) வாக்குமூலத்தை உங்களிடத்தில் வேண்டுகின்றனர்.

காவல்த்துறை அதிகாரி கேள்விகள் கேட்டபிறகு, அதற்கு அளிக்கப்படும் பதில்களை பதிவு செய்து கொள்வார்.

உங்கள் பெயர், முகவரி, ..எண், செய்யும் வேலை போன்ற முகாமை விபரங்களை அளித்தப்பிறகு ஏனைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருக்க உங்களுக்கு உரிமை உண்டு.

நீங்கள் மௌனமாக இருக்க விரும்பினால்நீதிமன்றத்தில் எல்லா பதில்களையும் சொல்கிறேன்.” என சொல்லுங்கள்.

9.4 காவல்த்துறையினர் உங்களை கட்டாயப்படுத்தி எழுத்துப் பூர்வமாக வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியாது. முகாமை விபரங்களை கொடுத்தப் பிறகு, எழுத்துப் பூர்வமாக வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தினால் பொறுமையுடன் தொடர்ந்து மௌனமாக இருங்கள்.

உங்களை பயமுறுத்தினாலோ, அடித்தாலோ, வற்புறுத்தியோ எழுத்துப் பூர்வமான வாக்குமூலத்தினை பதிவு செய்ய காவல்த்துறையினருக்கு உரிமை இல்லை.

உங்களை பயமுறுத்தி அடித்து, வற்புறுத்தி எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை பதிவு சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது உடனடியாக அவரைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். இது உங்கள் உரிமை.

9.5 113/ பதிவறிக்கையினை நீங்கள் வழங்க விரும்பினால்
பத்திகள், 3.3-ஐயும் 3.4-ஐயும் பின்பற்றுங்கள்.

தாள் அல்லது குறிப்பு புத்தகம் இல்லையெனில் காவல்த்துறையினரிடம் கேட்டுப் பெறுங்கள்.

உங்களுடைய 113 பதிவறிக்கை, நீதிமன்றத்தில் கீழ்கண்டவற்றை உறுதிபடுத்த உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டீர்கள் ; அல்லது
நீங்கள் ஒப்புக் கொண்டுள்ள சில விபரங்கள், நீங்கள்தான் குற்றவாளி என்பதனை உறுதிப்படுத்துகின்றது.

இதுவரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை முடிந்தால் தெரிந்தவர்களுடமோ, நண்பர்களிடமோ பகிர்ந்துக் கொள்ளுங்கள். முடிந்தால், இதனை ஒரு கையடக்க புத்தகமாக அச்சிட்டு விநியோகியுங்கள்.

Read more...

காவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..? (பகுதி 1)

>> Sunday, January 25, 2009


1. காவல்த்துறை அதிகாரி உங்களை தடுத்து நிறுத்துகிறார்.

1.1 சீருடையில் இல்லையெனில் அவர் காவல்த்துறை அதிகாரிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

'தயவு செய்து உங்களுடைய அதிகார அட்டையைக் காட்டுங்கள்' எனக் கேளுங்கள்.

1.2 காவல்த்துறை அதிகார அட்டை

சிவப்பு நிறம் : இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி. உங்களை எதுவும் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை. அங்கிருந்து புறப்பட்டு விடுங்கள்.

வேறு நிறங்கள்

நீல நிறம் : இன்ஸ்பெக்டர் அல்லது மேற்பட்ட பதவியில் இருப்பவர்.
மஞ்சள் நிறம் : இன்ஸ்பெக்டருக்கும் கீழ்பட்ட பதவியில் இருப்பவர்.
வெள்ளை நிறம் : சேமக் காவலர்

அவருடைய பெயரையும் அடையாள எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.

1.3 சீருடையுடன் இருக்கின்றார்

அவர் சீருடையில் உள்ள பெயரையும் அடையாள என்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.

1.4 காவல்த்துறை வாகனம்

காவல்த்துறை மோட்டார் வண்டி / மோட்டார் சைக்கிளின் என் பட்டையை குறித்துக் கொள்ளுங்கள்.

2. காவல்த்துறை அதிகாரி உங்களை தடுத்து நிறுத்தும் பொழுது கேள்விகள் கேட்கிறார்.

2.1 உங்களுடைய அடையாளம்

உங்கள் பெயர், அடையாள அட்டை எண், வீட்டு முகவரி ஆகியவற்றை மட்டும் தெரிவியுங்கள்.

2.2 காவல்த்துறை அதிகாரி வேறு கேள்விகளை கேட்கிறார்.

பணிவுடன் 'நான் கைது செய்யப்படுகின்றேனா?' எனக் கேளுங்கள்.

2.3 எப்பொழுது நீங்கள் கைது செய்யப்படுகின்றீர்கள்?

காவல்த்துறை அதிகாரி

 • உங்கள் கேள்விக்கு 'ஆமாம்' என்று பதில் சொன்னால்
 • உங்களை புறப்பட்ட அனுமதிக்காவிட்டால் / காவல்நிலையத்திற்கு உங்களைஅழைத்துச் செல்ல விரும்பினால் ; அல்லது உங்களை கைவிலங்கிட்டால்.
 • நீங்கள் கைது செய்யப்படவில்லையானால், அங்கிருந்து புறப்படலாம் / காவல்நிலையத்திற்கோ அல்லது வேறு இடத்திற்கோ அவருடன் வரச் சொன்னால்மறுத்து விடுங்கள்.

2.4 எப்பொழுது உங்களை கைது செய்ய முடியாது?

நீங்கள் சாட்சியாக ஆவதற்கு வாய்ப்புள்ள காரணத்தால், வாய்மொழி கேள்விகள் கேட்பதற்காகவும், அக்கேள்விகளுக்கான பதில்களை பதிவு செய்வதற்காகவும் உங்களை கைது செய்ய முடியாது.

3. கைது செய்யப்படாமல், காவல்த்துறையினர் கேட்கும் கேள்விகள்.

3.1 112 / வாக்குமூலம்

காவல்த்துறையினர் ஒரு வழக்கினை விசாரணை செய்யும் பொழுது, உங்களுக்கு அதுபற்றிய விபரங்கள் தெரியும் எனக் கருதினால், உங்களிடம் கேள்விகள் கேட்டு, அதற்கான பதில்களைப் பதிவு செய்யலாம்.

3.2 அதிகாரப்பூர்வமான / அதிகாரப்பூர்வமற்ற வேண்டுதல்

 • வழக்கமாக உங்களை 112 / வாக்குமூலம் வழங்க அதிகாரப்பூர்வமற்றவேண்டுதலை விடுப்பர். அந்த இடமும் நேரமும் உங்களுக்கு ஏதுவாக இருந்தால்ஒத்துழையுங்கள். இல்லையெனில், உங்களுக்கு ஏதுவான இடத்திலும்நேரத்திலும் அதனை வழங்குவதாகத் தெரிவியுங்கள்.
 • நீங்கள் முழுமையாக மறுத்துவிட்டீர்கள் எனில், உங்களை ஒத்துழைக்க வேண்டிவிசாரணை அதிகாரி கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வமான ஆணைப்பிறப்பிக்கப்படும்.

3.3 112/ வாக்குமூலம் வழங்குகின்றீர்கள்

 • வாக்குமூலம் வழங்கும்பொழுது ஒரு வழக்கறிஞரை உடன் வைத்திருக்கஉங்களுக்கு உரிமை உள்ளது. இதனையே செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
 • 112 / வாக்குமூலம் வழங்கும் பொழுது, வினவப்படும் கேள்விக்கான பதில்உங்கள் மீது குற்றத்தை சுமத்த வாய்ப்பிருந்தால், நீங்கள் பதிலளிக்க மறுக்கலாம்மௌனமாக இருக்கலாம்.
 • தாள் அல்லது குறிப்பு புத்தகத்தை உங்களுடன் கொண்டு செல்லுங்கள்.
 • கேட்கப்படும் கேள்விகளை குறித்துக் கொள்ளுங்கள்.
 • கேள்விகள் புரிகின்றதா என்பதனை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
 • நன்கு சிந்தித்தப் பிறகு உங்களுடைய பதில்களை குறிப்பு புத்தகத்தில் எழுதுங்கள்.
 • காவல்த்துறை அதிகாரியிடம் உங்கள் பதில்களைச் சொல்லுங்கள்.
 • உங்களுடைய குறிப்பு புத்தகத்தை எதிர்கால தேவைக் கருதி பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.

3.4 112/ வாக்குமூலத்தினைக் கையொப்பமிடுதல்

 • வாக்குமூல அறிக்கையினை கையொப்பமிடுவதற்கு முன்பாக காவல்த்துறைஅதிகாரி கேட்ட கேள்விகளையும் நீங்கள் கொடுத்த பதில்களையும் கவனமாகப்படித்துப் பாருங்கள்.
 • கையொப்பமிட வழங்கப்பட்ட அறிக்கையினையும் உங்கள் குறிப்புபுத்தகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
 • கையொப்பமிடுவதற்கு முன்பாக அவ்வறிக்கையினை திருத்தவும் மாற்றவும்உங்களுக்கு உரிமை உள்ளது.
 • அந்த அறிக்கையின் இறுதி வரிக்கு கீழ் உடனடியாக கையொப்பமிடுங்கள்.

4. காவல்த்துறை அதிகாரி உங்களைக் கைது செய்கிறார்.

4.1 "நான் ஏன் கைது செய்யப்படுகிறேன்?" எனக் கேளுங்கள்.

காரணத்தை சொல்லாமல் கைது செய்தால் அக்கைது சட்டப்பூர்வமற்றதாகும்.

4.2 கைது செய்யப்படும்பொழுது அதனை தடுக்கவோ / எதிர்க்கவோ முயற்சி செய்யாதீர்கள்.

தகுந்த வலிமையைப் பயன்படுத்தி உங்களை கைது செய்ய காவல்த்துறைக்கு அதிகாரம் உண்டு.

4.3 "எந்த காவல்நிலையத்திற்கு என்னை அழைத்துச் செல்கின்றீர்கள்: எனக் கேளுங்கள்.

உடனடியாக உங்களை அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வேறு எங்கும் அழைத்துச் செல்லக்கூடாது.

4.4 கைது செய்யப்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்?

தொலைப்பேசியில் தொடர்புக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு.

உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பருக்கு, வழக்கறிஞருக்கு அல்லது சட்ட உதவி மையத்திற்கு தொடர்புக் கொண்டு கீழ்கண்டவற்றை தெரிவியுங்கள்.

 • நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்
 • கைது செய்யப்பட்ட நேரம், இடம், காரணம்
 • காவல்த்துறை அதிகாரியின் அடையாளம்
 • நீங்கள் அழைத்துச் செல்லப்படவிருக்கும் காவல் நிலையம்

4.5 கைது செய்யப்பட்டப் பின்னர் என்ன நடக்கும்?

விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக 24 மணி நேரம் வரை உங்களை காவல் நிலையத்தில் / தடுப்புக் காவலில் வைத்திருக்கலாம்.

5. கைது செய்யப்பட்ட பிறகும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுதும், உங்களுக்குரிய உரிமைகள்

5.1 வழக்கறிஞருடன் தொடர்புக் கொள்ள உரிமை உண்டு.

வழக்கறிஞருடன் தொடர்புக் கொள்ளவும் / சந்திக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. அவ்வுரிமையை கட்டாயம் பயன்படுத்துங்கள்.

5.2 உடைகள்

தடுப்புக் காவலில் இருக்கும்பொழுது ஒரு ஜோடி உடையை வைத்திருக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

5.3 உங்களுடைய உடமைகள்

உங்களுடைய உடைமைகள் முறையாக பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

நீங்கள் விடுவிக்கப்படும் பொழுது உங்களுடைய உடைமைகள் உங்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்

5.4 நலன்

 • நாளுக்கு இருமுறை குளிப்பதற்கு உங்களுக்கு உரிமையுண்டு.
 • உடல் நலம் இல்லையெனில் உடனடி மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்குஉங்களுக்கு உரிமை உண்டு.
 • உங்களுக்கு முறையான - போதுமான உணவும் நீரும் வழங்கப்பட வேண்டும்.

5.5 எத்தனை நாட்கள் உங்களை தடுத்து வைக்க முடியும்?

 • விசாரணைக்காக 24 மணி நேரம் வரை மட்டுமே உங்களை தடுத்து வைக்கலாம்.
 • 24 மணி நேரத்திற்குள் விசாரணையை முடித்துவிட்டு, உங்களை உடனடியாகவிடுவிக்க வேண்டியது காவல்த்துறையினரின் கடமை.
 • 24 மணி நேரத்திற்கு மேற்பட்டு உங்களை, தடுத்துவைக்க வேண்டுமானால், நீங்கள் மெஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்பட்டு காவல் நீட்டுப்பு 'ஆணைப்' பெறப்பட வேண்டும்.

அடுத்தப் பதிவில்...

6. மெஜிஸ்ட்ரேட்டின் காவல் தடுப்பு ஆணை

Read more...

குகனைக் கொன்றது யார்?

>> Saturday, January 24, 2009

குகனைக் கொன்றது யார்? இதுதான் அனைவரின் தற்போதைய கேள்வி!? பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல்த்துறையினரே அநியாயமாக ஓர் இளைஞனை தடுப்புக் காவலில் அடித்துக் கொன்று போட்டிருக்கின்றனர். கொலையாளிகளை ஏன் இன்னும் பொதுமக்களுக்கு அடையாளம் காட்டவில்லை?! கொலையாளிகளை விசாரணை செய்வதைவிடுத்து பிணக்கிடங்கில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இரு துணை அமைச்சர்களை விசாரணை செய்து பிரச்சனையை அரசியலாக்கி திசைதிருப்புவது ஏன்?

அவர்கள் இருவரை யார் விசாரணை செய்தால் நமக்கென்ன?! அதைப்பற்றியா மக்களுக்கு இப்போழுது கவலை!! மகனை இழந்த பெற்றோர்களுக்கும், சகோதரனை இழந்த குடும்பத்தினருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்! அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்தாற்போல் பங்கப்படுத்தப்பட்டு வருகிறது! அரசு எந்திரங்கள் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருகின்றன! மக்களுக்கு காவல்த்துறையின் மீதுள்ள நம்பிக்கை செத்துவிட்டது!

ஒரு நவம்பர் 25 போதாதா! இன்னொரு மக்கள் சக்தியைப் பார்க்க வேண்டுமா!!

மலேசியா கினி படச்சுருள்


Read more...

குகனின் உடல்மீது சுயேட்சை சவப் பரிசோதனை!

>> Friday, January 23, 2009

சுபாங் செயா காவல்நிலையத்தில் காவல்த்துறையினரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்த குகனின் (வயது 22) உடல் மீண்டும் சவப் பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளது. முதற் பரிசோதனையில் நுரையீரலில் நீர்கோர்த்துக் கொண்டதனால் இறந்ததாகக் கூறப்படும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாததனால், குகனின் உடலில் சுயேட்சை சவப் பரிசோதனை மேற்கொள்வதற்கு அவரின் குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர். குகனின் உடல் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இதனால், நேற்று நடைப்பெறவிருந்த குகனின் இறுதி நல்லடக்கச் சடங்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

மலேசியா கினி படச்சுருள்

Read more...

இண்ட்ராஃப் குரல் - 21/01/2009

>> Thursday, January 22, 2009

இண்ட்ராஃப் - மலேசிய இந்தியர்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துக!


சுபாங் செயா காவல்நிலையத்தில், 22 வயதே கொண்ட குகன் எனும் இளைஞன் காவல்த்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்த சமயம் உயிரை விட்டிருக்கிறான். என்ன நடக்கிறது மலேசிய இந்தியர்களுக்கு? பேசாமல் 'நாசிக்கள்' யூதர்களைக் கொன்று குவித்ததைப்போல, அம்னோ அரசாங்கத்தின் ஊனக் கண்களுக்கு மூன்றாம் தர குடிமக்களாகத் தென்படும் ஒட்டுமொத்த மலேசிய இந்திய சமுதாயத்தையும் கைது செய்து கொன்றுவிட வேண்டியதுதானே..! விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த குகனைக் கொடுமைப்படுத்திய கொடூரத்தைப் பாருங்கள். இச்செய்தியை அம்னோவின் ஊடகமானநியூஸ் ஸ்ட்ரேட்ச் டைம்ஸ்' போன்ற நாளிதழ்கள் நியாயப்படுத்தும் விதத்தையும் பாருங்கள். இந்நவீன உலகத்தில்கூட, வேண்டத்தகாத ஓர் இனமாக மலேசிய இந்திய சமுதாயம் கருதப்பட்டு தொடர்ந்தாற்போல் பல கொடுமைகளைச் சந்தித்துதான் வருகிறது. மனிதநேயம் என்பது இன, மத, மொழி, நிறம் ஆகியவற்றைச் சார்ந்ததா என்ன? அல்லது தொடர்ந்து அரசு எந்திரங்கள் புரிந்துவரும் குற்றங்களை மூடி மறைத்து நம்மை அடக்க நினைக்கும் அம்னோ அரசாங்கத்தை வேடிக்கப் பார்த்துதான் கொண்டிருப்போமா?

மிருகங்களாயும் அடிமைகளாயும் பார்க்கபடுவதைவிடுத்து, மனிதனாக பிறந்துவிட்ட நமக்கு அரசியலமைப்பு சட்டங்கள் வழங்கும் சம உரிமைகளை பெறுவதற்குக்கூடவா அருகதை இல்லாமல் போய்விட்டது? ஏன், மலேசிய இந்தியர்கள் எனும் வரும்பொழுது மட்டும், எந்தவொரு சட்டமாகட்டும் , அரசியலுரிமையாகட்டும் பாராபட்சமாகச் செயல்படுகின்றன?

நாம் என்ன தவறு செய்துவிட்டோம், இதுபோன்ற பாராபட்சங்களை எதிர்நோக்குவதற்கு? எங்கள் முன்னோர்கள் இந்நாட்டிற்கு செய்த சேவைகள் மகத்தானவையல்லவா?

அண்மையில், உடலில் கொதிநீர் ஊற்றப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட பிரபாகரனுக்கே இன்னும் முறையான நீதி கிடைக்காத பட்சத்தில் தற்போது ஒரு மலேசிய இந்திய இளைஞனின் உயிர் காவல்நிலையத்தில் பலியாகியிருக்கிறது. அவரோடு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சாலமன் எனும் இளைஞன் எங்கு இருக்கிறார் என்றே யாருக்கு தெரியவில்லை. அவரும் பிணமாகத்தான் திரும்பி வருவாரா என்ற கேள்விகள் எழுகின்றன. அவரை காவல்த்துறையினர் விடுவித்தனரா அல்லது அவர் எங்கு உள்ளார் என இவர்கள் அறிவார்களா என்பது குறித்து இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. இவ்விடயத்தில் காவல்த்துறையினரின் வெளிப்படையற்ற போக்கும், பொறுப்பற்றத்தனமும் வெளிப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டங்களுக்கு மதிப்பளிக்காது, தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் காவல் நிலையத்திலும் வெளியிலும் நடைப்பெற்றுக் கொண்டுதான் வருகிறன. இதன்வழி அம்னோ காவல்த்துறையினரைப் பாதுகாப்பதில் மும்முரமாக இருந்து வருவதோடு, அவர்கள் புரியும் அட்டூழியங்களையும் நியாயப்படுத்த முனைகிறது. இத்தகைய சர்வாதிகார போக்கு நாட்டில் சம உரிமை மற்றும் நீதிக்கு அடிப்படையாக விளங்கிவரும் சனநாயக் கொள்கைகளை அவமதிப்பதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களையும் ஆதரிப்பதாக அமைந்துவிடுகிறது.

திரு.பொ.வேதமூர்த்தி
இண்ட்ராஃப் தலைவர்


குகனின் மரணம் குறித்து ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் மக்கள் சக்தியுடன் இணைந்து சில தன்னார்வத் தொண்டூழிய அமைப்புகளும், ம.இ.கா உறுப்பினர்களும் சேர்ந்து சுமார் 80 பேர் சுபாங் செயா மாவட்டக் காவல்த்துறை அலுவலகத்தின் முன்புறம் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.அங்கு 8 கலகத் தடுப்புப் படையினரின் லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மறியலில் ஈடுபட்டோர் அனைவரும் கைகளில் பதாகைகளையேந்தியிருந்தனர்.


பார்ப்பவர்களின் மனங்களைப் பாதிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இளகிய மனமுடையவர்களுக்கு சற்று கவனம் தேவை!

மலேசியாகினி
படச்சுருள்

Read more...

காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை!

>> Wednesday, January 21, 2009

சீருடை அணிந்த ரௌடிகளின் அராஜகம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது! இம்முறை குகன் /பெ ஆனந்தன் எனும் 22 வயது இளைஞர், காவல்நிலையத்தில் காவல்த்துறையினரால் நேற்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்புதான் பிரபாகர் என்பவர் காவல் நிலையத்தில் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டு சுடுநீர் ஊற்றப்பட்டு உடல் வெந்த நிலையில் மீண்டு வந்த கதையை நாம் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

குகன் என்பவர் சொகுசு வாகனங்கள் திருட்டு குறித்து விசாரணைக்காக சுபாங் செயா காவல் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார். விசாரணை என்பது கேள்விகளோடு நின்றுவிடுவதில்லை! காவல்த்துறையினரின் எழுதாச் சட்டமான அடிஉதையையும் பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் பிரேதப் பரிசோதனையின்வழி தெரிய வருகிறது. விசாரணை நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேளை, குகன் " தாகமாக இருக்கிறது, குடிக்கத் தண்ணீர் வேண்டும்" எனக் கேட்டாராம். தண்ணீரைக் குடித்தவுடன் திடீரென இறந்துவிட்டதாக காவல்த்துறையின் தரப்பு காரணம் கூறுகிறது. குகனுக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால், ஒருவேளை அதனாலேயே இறந்திருக்கலாம் என காவல்த்துறையினர் கூறுகிறார்களாம்!

இன்று குகனின் குடும்பத்தினரோடு இணைந்து மக்கள் சக்தியின் சார்பில் திரு.செயதாசு, வழக்கறிஞர் திரு.சுரேந்திரன் மற்றும் காப்பார் நாடாளுமன்றப் பிரதிநிதி திரு.மாணிக்கவாசகம் ஆகியோர் சுபாங் செயா செக்சன் 18 மாவட்ட காவல்த்துறை அலுவலகத்தில் புகார் ஒன்றினை கொடுக்கவுள்ளனர். ஊடகவியலாளர்கள் செய்தியைப் பதிவதற்கு அழைக்கப்படுகிறார்கள். மேல் தகவல்களுக்கு தயவு செய்து திரு.செயதாசு அவர்களைத் தொடர்புக் கொள்ளவும்.

திரு.செயதாசு 012-6362287

இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி சென்னையில் மலேசிய இந்தியர்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்தபொழுது, நம் நாட்டு அருமை அரசியல்வாதிகள் அவருக்கெதிராக கண்டனங்களுக்கு மேல் கண்டனம் விட்டுக் கொண்டிருந்தார்களே..!

இப்பொழுது உண்மை நம் கண் முன்னேயே நிகழ்கிறது! அதனையும் நிராகரிக்கப்போகிறார்களா இந்த குருட்டு அரசியல்வாதிகள்!?Read more...

அமெரிக்காவின் 44-வது சனாதிபதிக்கான பதவியேற்பு நிகழ்வில் இண்ட்ராஃப்.

>> Tuesday, January 20, 2009


அமெரிக்காவின் 44-வது சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.பாரக் ஒபாமா அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று வாசிங்டனில் அமைந்துள்ள கேப்பிட்டல் கட்டிடத்தில் நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இண்ட்ராஃப் இயக்கத்தை பிரதிநிதித்து நியூ யார்க்கில் வசிக்கும் திரு.சான் கலந்துகொள்ளவிருக்கிறார்.

'விடுதலைக்கான புதிய உதயம்' எனும் கருப்பொருளையொட்டி திரு.உதயகுமாரின் கடிதம் ஒன்றும் '2008-இல் மலேசிய இந்தியர்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்' எனும் ஆய்வறிக்கையும் திரு.ஒபாமாவின் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தகவல் : திரு.வேதமூர்த்தி, இண்ட்ராஃப் தலைவர்

Read more...

பினாங்குத் தீவு மக்கள் சக்தியின் விளக்கக் கூட்டம்.

>> Sunday, January 18, 2009

இன்று பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 7 மணிவரை பினாங்குத் தீவு மக்கள் சக்தியினரின் தைப்பூச சமூகச் சேவை நிகழ்வை ஒட்டிய விளக்கக் கூட்டம், இந்து சபா மண்டபத்தில் இனிதே நடந்தேறியது. இச்சேவையில் கலந்துகொள்ளவிருக்கும் தன்னார்வத் தொண்டூழியர்களுக்கான விளக்கக் கூட்டத்தில் திரு.சம்புலிங்கம், திருமதி.வேதநாயகி, திரு.நரகன், சமூக நல இலாகா அதிகாரிகளான திருமதி இராசலெட்சுமி, திரு.செயராமன் போன்றோர் கலந்துகொண்டு நிகழ்வை வழிநடத்தினர்.

இந்நிகழ்வில் தைப்பூச சமூகச் சேவையில் ஈடுபடவிருக்கும் தன்னார்வத் தொண்டூழியர்களை தயார் நிலையில் வைப்பதற்குத் தேவையான விளக்கங்கள் இடம்பெற்றன. நிகழ்வில் தொடக்கவுரையாற்றிய திரு.சம்புலிங்கம் வந்திருந்தோர் அனைவரையும் தனது உணர்ச்சிமிகு உரையின்வழி நிமிர்ந்து உட்கார வைத்தார் எனக் கூறலாம். இரண்டாவதாக உரையாற்றிய திரு.நரகன் மக்கள் சேவை குறித்த நோக்கத்தினை நீர்மப் படிம உருகாட்டி துணைக் கொண்டு விரிவாக விளக்கங்கள் அளித்தார். அதனையடுத்து கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் வந்திருந்தோர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

மாலை உணவு அருந்திய பிறகு அனைவரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அமர்த்தப்பட்டனர். திருமதி இராசலெட்சுமி அவர்கள், சமூக நல இலாகாவிடமிருந்து மக்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகள் குறித்து விரிவாக விளக்கமும் உதவி பெறுவதற்குரிய பாரங்களின் படிவங்களையும் விநியோகித்தார். குழு உரையாடலுக்குப் பின்பு, சமூக நல இலாகாவின் முன்னால் அதிகாரி திரு.செயராமன் பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை குறித்து எழும் பிரச்சனைகளை கையாளுவதில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். பின்பு மீண்டும் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது. இவ்விளக்கக் கூட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


விளக்கக்
கூட்டம்
இந்நிகழ்வு நடத்தப்பெறுவதற்கு முதற்காரணமே திரு.உதயகுமார்தான். 2009-ஆம் ஆண்டானது மக்கள் சக்தியினர் சமூகத்திற்கு சேவைச் செய்யும் ஆண்டாக மலர வேண்டும் என்பது அவரது அவா. எனவே, இனிவருங்காலங்களில் இச்சமூகச் சேவையை நாடெங்கிலும் உள்ள மக்கள் சக்தியினர் மேற்கொள்வதற்கு எண்ணங்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 7 மணியளவில் விளக்கக் கூட்டமும் நிறைவை அடைந்தது. இந்நிகழ்வில்ராட்டினம்' வலைப்பதிவர் திரு.மது அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடைய அறிமுகம் கிடைத்த மகிழ்ச்சியில் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். இவ்விளக்கக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காகவே சிரம்பானிலிருந்து வருகை புரிந்திருக்கிறார் என்று எண்ணும் பொழுது பெருமையாக இருக்கிறது. அன்பரின் சமூகச் சிந்தனை மிகவும் போற்றுதற்குரியதாகும்.

தைப்பூசத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சக்தி சமூகச் சேவைப் பந்தலில் உதவிகள் புரிந்திட மேலும் பல தன்னார்வத் தொண்டூழியர்களை எதிர்ப்பார்க்கின்றனர். சேவைப் பந்தலுக்கு வருகைப் புரிபவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ற பாரங்களைப் பூர்த்தி செய்வது , கூட்ட நெரிசலைக் கட்டுபடுத்துவது, தேர்தல் வாக்காளர் பதிவு போன்ற சேவைகளுக்கு ஆள்பலம் தேவைப்படுகிறது.

இந்நிகழ்வைப் பற்றி அறிந்துக் கொள்ள கீழ்கண்ட எண்களுடன் தொடர்பு கொள்ளலாம் :

* 012 5637614 ( திரு.கலை )
* 012 7162884 ( சரஸ்வதி )
* 012 5557522 ( திரு.மாறன் )
* 019 4586587 ( திரு.சுரேசு )

கடந்த சில நாட்களாக நிறைய அனாமதேய நபர்களிடமிருந்து அலைப்பேசி அழைப்பு வருவதாகவும், சிலர் அநாகரீகமாக பேசுவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறைப்பட்டுக் கொண்டனர்.

டேய், என்னடா..! காசே கொள்ளை அடிக்கறதுக்கு பந்தல் போடுறீங்களாடா..!”

டேய்! அரசாங்கத்தையே எதிர்க்க துணிஞ்சிட்டீங்களா..!”

இந்த பந்தல எப்டி போடுறீங்கன்னு நானும் பாக்குறேண்டா..!”

மக்கள் சக்தி இன்னும் உயிரோடுதான் இருக்கா...!”

அனைத்தும் நம் தமிழர்களிடமிருந்து வந்த அழைப்புகள்.. மேலும் இருக்கின்றன.. நாகரீகம் கருதி அதனை வெளியிடவில்லை.

நல்லதொரு நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இச்சேவை குறித்து ஏன் பலருக்கு காழ்ப்புணர்ச்சி என்றுதான் தெரியவில்லை! தமிழனுக்கு தமிழனே தூக்குக் கயிறு என்பது சரியாகத்தான் இருக்கிறது. போராட்டம் என்று வந்துவிட்டாலே மிரட்டல்களை எல்லாம் கடந்துதானாக வேண்டும்!

போராட்டம் தொடரும்...

Read more...

மக்கள் கூட்டணி கோலாதிரெங்கானுவைக் கைப்பற்றியது!

>> Saturday, January 17, 2009

பரபரப்பாக பேசப்பட்டு வந்த கோலாதிரெங்கானு இடைத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிப் பெற்று மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளது. பாஸ் கட்சி வேட்பாளரான முகமது அப்துல் வாஹிட் எண்டுட் பாரிசானின் வேட்பாளரான அகமது பாரிட் வானையும் சுயேட்சை வேட்பாளர் அசாரூதீன் மாமாட்டையும் 2,631 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இவ்வெற்றியானது மக்கள் கூட்டணியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் தேசிய முன்னணியின்பால் இழந்துவிட்ட அவநம்பிக்கையையும் ஒருங்கே படம் பிடித்துக் காட்டியுள்ளது.

அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்!' எனும் பழமொழிக்கேற்ப 52 ஆண்டுகளாக மக்களை புறக்கணித்து வந்த அம்னோ அரசாங்கத்திற்கு தற்போது அடிமேல் அடி விழுந்து வருகிறது. தற்சமயம் நான்கு சட்டமன்ற இடங்கள் மக்கள் கூட்டணியின் கைவசம் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!

இடைத்தேர்தல் முடிவுகள்


வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் 35 மேசைகள் கொண்ட இரவு உணவு விருந்துக்கு பாரிசான் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அவ்விருந்தில் கூட்டமே இல்லையெனவும் மலேசியாகினி செய்தி அறிவிக்கிறது. இதற்கிடையில் கோலாதிரெங்கானு இடைத்தேர்தலில் தோல்வியைக் கவ்விய பாரிசானின் வருங்கால பிரதமர் நஜீப் விரைவில் நிருபர் கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலானது உண்மையில் நஜீப்பின் ஆளுமையை பரிசோதிக்கும் ஒரு களமாக விளங்கியதை நாம் மறுக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதுபோல் நஜீப்பின் தலைமைத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இனியும் நஜீப்பிற்கு கஷ்ட காலம்தான்! திரெங்கானுவுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட 1000 கோடி பணமும் இன்னும் பிற வாக்குறுதிகளும் இனி காற்றில் பறந்த கதைதான்!

Read more...

இண்ட்ராஃப் ஊடக அறிக்கை 15/01/09

>> Thursday, January 15, 2009அம்னோ அரசும் அதன் குறுகியச் சிந்தனையும்

'2008-ஆம் ஆண்டில் மலேசிய இந்தியர்களின் நிலை ஓராய்வு மற்றும் மனித உரிமை மீறல்கள்' எனும் ஓர் ஆய்வறிக்கையை சென்னையில் இண்ட்ராஃப் விநியோகித்தது குறித்து காரசாரமான விமர்சனங்கள் சில நாட்களாகவே நாட்டின் பல முக்கிய ஊடகங்களில் சூடு பிடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, உண்மையை மூடி மறைப்பதில் அம்னோ தலைமையில் இயங்கிவரும் மக்களவை உறுப்பினர்கள் அதிக முனைப்பு காட்டிவருவதாய் தெரிகிறது.

அம்னோவின் ஊடகங்கள் கூறிவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் போல் அல்லாது, முறையான ஆய்வுகளுடனும் ஆதாரங்களின் அடிப்படையிலுமே இண்ட்ராஃப் இவ்வாய்வறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அம்னோவும் அதன் கைக்கூலிகளும் எடுத்துக்கொண்ட செயல்பாடுகளினால் நன்மையடைந்தவர்கள் மக்களா அல்லது இவர்களா என நமக்குள் கேள்விகள் எழுகின்றன?

இண்ட்ராஃப் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் முப்பதுக்கும் மேலான முறைக்கேடுகளும் அராஜகங்களும் ஆதாரப்பூர்வமாக படம்பிடித்துக் காட்டியிருக்கும்பொழுது, அம்னோ தலைமையில் இயங்கிவரும் மக்களவை உறுப்பினர்கள் அப்பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி பேசவேண்டுமே ஒழிய, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி உண்மைகளை மூடி மறைக்கலாகாது.

அண்மையில் அமைச்சர் டாக்டர் சுப்ரா வெளியிட்ட அறிக்கையில்திரு.வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கை பொறுப்பற்றச் செயலாகும். கடந்த சில மாதங்களில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கெல்லாம் பங்கம் விளைவித்துவிட்டது இவரது செயல்என்று கூறியிருப்பதைப் பார்க்கும்பொழுது, மிரட்டும் பாணியில் இவரது அறிக்கை அமைந்ததோடு மட்டுமல்லாது, 52 வருடங்களாக நமக்கு அம்னோ போடும் எலும்புத் துண்டுகளை பெற்றுக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்கிற பாணியிலும் பேசியிருக்கிறார்.

கங்காணிகளைப்போலவும் மேய்ப்பாளர்களைபோலவும் சாமிவேலுவும் சுப்ராவும் நடந்துக் கொள்வதை விட்டுவிட்டு மலேசிய இந்தியர்களின் நலன்களின்பால் அக்கறைக் கொண்டு, காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் மலேசிய இந்தியர்களுக்காக குரல் கொடுக்க முனைவதோடு மக்களின் உண்மையான பிரதிநியாக இருப்பதுதான் சிறந்தது.

என் ஆய்வறிக்கையை புறக்கணிக்கும் அம்னோ அரசை என்னோடு திறந்த வாதத்திற்கு வருமாறு அதன் பிரதிநிதிகளை அழைக்கிறேன். இந்த திறந்த வாதமானது பிரித்தானியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ நடைப்பெற வேண்டும்.

காலங்காலமாக மக்களின் உரிமைக்குரலை அடக்குவதில் கைத்தேர்ந்த அம்னோ அரசு, தன்னுடைய அகம்பாவத்தால் நாட்டில் மலேசிய இந்தியர்களுக்கு எதிராக நடைப்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கண்டுங்காணாது இருந்துவருகிறது.

அரசாங்கத்தின் நடைமுறைக்கொள்கைகளால் பாதிக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட மலேசிய இந்தியர்களாகட்டும், அல்லது இன்னும் வறுமையில் வாடிவரும் மலாய் முசுலீம் இனத்தவராகட்டும், இவர்களுக்கு மக்களின் நலன்களில் அக்கறைக் கொண்ட, மக்களுக்காக பயமின்றி, வேறுபாடுகள் களைந்து செயலில் இறங்கக் கூடிய அரசாங்கம் கிடைத்திட வேண்டும் என்பதே எங்களின் அவா.

நாட்டின் எல்லா இனமக்களும் இன, சமய வேறுபாடுகள் களைந்து நம்மிடையே நிலவிவரும் உண்மைகளை ஆய்ந்து, மனிதத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டுமாய் இண்ட்ராஃப் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

திரு.வேதமூர்த்தி
இண்ட்ராஃப் தலைவர்
சென்னை

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP