பின்னால் திரும்பிப் பார்த்தேன், ஒரு காவல்துறை அதிகாரி நின்றுக்கொண்டிருந்தார்.
நான் இங்கு எதற்கு நின்றுக் கொண்டிருப்பதாகக் கேட்டார், அதன்பின் என் அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு என் முழுவிவரங்களையும் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். விசாரணைக்கு உதவ வேண்டும் எனக் கூறி என்னை அழைத்துச் சென்றார்கள். நடக்கும்பொழுது ஒரு சீனக் காவல்துறை என் முதுகில் கைவைத்து தள்ளிக் கொண்டு வந்தார். கையை என் முதுகிலிருந்து எடுக்குமாறு சொன்னேன், அதற்கு அவர் பரவாயில்லை நீ நட எனப் பிடித்துத் தள்ளினார். எனக்கு சொந்தமாக நடக்கத் தெரியும் என அவர் கையை ஒதுக்கிவிட்டு நடந்தேன்.
பேரங்காடியிலிருந்து வெளியே வரவழைக்கப்பட்ட என்னை காவல்துறை வண்டியில் ஏறுமாறு வற்புறுத்தினார்கள். நான், எதற்காக என்னை வண்டியில் ஏறச் சொல்கிறீர்கள், தகுந்த காரணம் கொடுங்கள் என வினவிய போது அவர்களிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. வண்டியில் ஏறு என ஓர் அதிகாரி என்னை பிடித்துத் தள்ள முயன்றார், நான் நகரவில்லை. காரணம் சொல்லாமல் நான் வண்டியில் ஏறப் போவதில்லை எனக் கூறினேன். இது எங்கள் மேலதிகாரியின் கட்டளை என பதில் வந்தது. அந்த மேலதிகாரியை நான் சந்திக்க வேண்டும் என்றதும் அங்கிருந்த ஓர் அதிகாரியை அழைத்தனர். இவரிடம் கேள் என்றனர். என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள், ஏன் வண்டியில் ஏறச் சொல்கிறீர்கள், தகுந்த காரணம் கொடுங்கள் என வினவியதற்கு அதே பதில்தான் வந்தது. இங்கு கேள்விகள் கேட்காதே, ஏதுவாயினும் காவல் நிலையத்தில் வந்து பேசிக் கொள் என்று கூறி என்னை வண்டியினுள் பிடித்துத் தள்ளினார்கள்.
வண்டியில் என்னுடன் ஆறு காவல்துறை அதிகாரிகள் அமர்ந்துக் கொண்டார்கள். வண்டி கிளம்பியதும் சில கைப்பேசி அழைப்புகள் வந்தன.. கவலைப்பட வேண்டாம் உங்கள் பின்னால் நாங்கள் வருகின்றோம் என சில நண்பர்கள் கூறினார்கள். வண்டி பயனித்தது. சில அதிகாரிகள் என்னுடன் பேச்சுக் கொடுத்தனர். நான் பதிலுக்கு வசைப்பாடிக் கொண்டு வந்தேன், இந்தியர்களைக் கண்டாலே உங்களுக்கெல்லாம் கைது செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறதோ, இந்தப் போக்கு எனக்கு பிடிக்கவில்லை என ஏசினேன். பதிலுக்கு அவர்கள் நாங்கள் யாரை வேண்டுமானாலும் பிடிப்போம், நீ அந்த இடத்தில் இருந்திருக்கக் கூடாது, ஏன் நிழற்படங்களை எடுத்தாய் என அறிவுசீவிகளாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வந்தார்கள்.
வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த இந்திய காவல்துறை அதிகாரியொருவர், "எனக்கும் தெரியும்யா, இவனுங்க இப்டிதான், நம்ம என்ன பண்றது? ஒன்னும் கவல் படாதெ ஒன்னும் இல்ல, சின்ன மேட்டர்தான், கேள்வி கேட்டுட்டு விட்டுருவானுங்க.. கேட்டா ஃபோட்டோ எடுக்க வந்தேனு மட்டும் சொல்லு, ஓகேவா..
அதன் பின் ஒரு மலாய் காவல்துறை அதிகாரி இடைமறித்து நான் கூறியதை ஆட்சேபித்தார், தாங்கள் இந்தியர்களை மட்டும் குறிவைத்து பிடிக்க வேண்டும் என செயல்பட வில்லை என்று என்னிடம் கூற நான்,
"ஆனால் இந்த நாட்டில் இந்தியர்களைத்தானே பலிக்கடாவாக்கிறீர்கள்" என பதிலுரைத்தேன்.
ஓர் ஆசிரியராக இருந்துக்கொண்டு இப்படி நீ பேசலாமா என்று அவர் என்னை திரும்ப கேட்டார். பதிலுக்கு நான்,
"ஓர் ஆசிரியர் உண்மையை எடுத்துரைக்க வேண்டியதும் கடமைதான்.." என்றவுடன் அவர் ஒன்றும் பேசவில்லை. சில நிமிடங்கள் கழித்து தேவை இல்லாத வெட்டிக் கதைகளைப் பேசிக் கெண்டே வந்தனர். வண்டி பினாங்கு காவல்துறை தலைமையகத்தை அடைந்தது.
என்னை இரண்டாவது மாடியில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த அறை நீளமாக இருந்தது. ஆங்கே இன்னும் சில அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். சிலர் உணவருந்திக் கொண்டும் சிலர் நாளிதழ் படித்துக் கொண்டும், மற்றும் சில அதிகாரிகள் கதைப் பேசிக் கொண்டும் இருந்ததைப் பார்க்க முடிந்தது. தரையில் சுமார் 20 சீனர்கள் ஏதோ ஒரு குற்றத்திற்காகப் பிடிக்கப்பட்டு தரையில் அமர்த்தப்பட்டிருந்தனர். முதலில் நாற்காலியில் என்னை அமரச் சொன்னார்கள். சிறிது நேரம் கழித்து ஒரு மலாய் காவல்துறை அதிகாரி வேண்டுமென்றே என்னை எழச் சொல்லி, தரையில் அமர்ந்திருந்த சீனர்களோடு அமரச் சொன்னார். நான் அந்த சீனர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று நின்றுக் கொண்டேன். அப்பொழுது பி.கே ஓங் என்னருகே வந்து,
"எனக்கு தாகமாக இருக்கிறது, தண்ணீர் கிடைக்குமா?" என வினவினார்.
"நான் காவல்துறை அதிகாரி இல்லை ஓங், என்னையும் இப்பொழுதுதான் பிடித்து வந்தார்கள்!" எனக் கூறினேன்.
"ஓ, நீங்கள்தானா..சரி சரி.. என்னை சிலர் கைப்பேசியின் வழி அழைத்து நீங்கள் பிடிப்பட்டதாகச் சொன்னார்கள்.." எனக் ஓங் கூறினார்.
இதுவே எங்களுடைய முதல் சந்திப்பு ஆதலின் அவருக்கு என்னை அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.
இருவரும் நின்றுக் கொண்டிருக்கையில், ஓங் என்னை அழைத்து அதிகாரிகளின் இருக்கையில் அமர்ந்துக் கொள்வோம் என சைகை காட்டியதும் இருவரும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டோம். அதன்பின் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒர் மலாய்கார காவல்துறை அதிகாரியொருவர், "நாங்கள் எல்லாரும் அம்னோ புத்திரர்கள், நாங்கள் அம்னோவின் ஊழியர்கள், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என திமிரோடு பேசிக் கொண்டிருந்தார். அதன்பின் மற்றொரு அதிகாரி எங்களை இன்னொரு அறைக்குச் சென்று அமருமாறு அறையை நோக்கி கைக்காட்டினார்.
அறையில் அமர்ந்திருந்த சமயம் திரு.ஓங், அவருக்கு வந்த குறுஞ்செய்திகளையும் அவர் பிடித்த படங்களையும் எனக்குக் காட்டிக் கொண்டிருந்தார். நானும் அவரிடம் நிகழ்வு தொடர்பான நிழற்படங்களை காட்டிக் கொண்டிருந்தேன். அந்த சமயம் ஓர் அதிகாரி இரு கறுப்பு நிற பிளாசுடிக்கு பை கொண்டு வந்து எங்கள் இருவரின் கைப்பேசிகளையும் நிழற்படக்கருவிகளையும் பறிமுதல் செய்தார். வெளியுலகோடு தொடர்பு அற்ற நிலையில் அந்த அறையில் மதியம் 1 மணியிலிருந்து 3 மணிவரை அமர்ந்திருந்தோம், இதற்கிடையில் ஒரு மலாய் காவல்துறை அதிகாரி எங்களிடம் கதைப் பேசுவதற்கு வந்து அமர்ந்துக் கொண்டார். திரு.ஓங்கை பற்றி அக்காவல்துறை அதிகாரி மட்டந்தட்டி பேசத் தொடங்கினார். திரு.ஓங் அத்தனையையும் பொறுமையாக எடுத்துக் கொண்டு அதிகாரியிடம் சிரித்த முகத்துடன் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார். இடையிடையே என்னையும் கிண்டலடிக்கும் பாணியில் அந்த அதிகாரி கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். இடையே எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இவர்கள் வேலை நேரத்தில் இப்படி வெட்டிக் கதை பேசுவதற்கு, வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப வேறு ஏதாவது வேலை செய்யலாமே என நினைத்துக் கொண்டேன். கையில் வெண்சுருட்டுப் பெட்டியோடு வந்த அந்த அதிகாரி 40 நிமிடங்களுக்கு மேல் புகைத்துக் கொண்டே உரையாட அந்த அறையே புகை மண்டலமானது. மன எரிச்சலையும் கண் எரிச்சலையும் ஒருங்கே கொடுத்துவிட்டு அந்த அதிகாரி சென்றுவிட்டார்.
இதற்கிடையில் புக்கிட்டு பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு லியூ சின் தோங் தலைமையகத்திற்கு வந்து எங்களுக்கு சட்ட ரீதியாக உதவ தயாராக இருப்பதாகக் கூறி ஆறுதல் கூறினார்.
இப்படியாக, மாலை ஐந்து மணிவரையில் எங்களை அறையில் வைத்த பின்னரே அதிகாரிகள் ஒருவர்பின் ஒருவராக விசாரணைக்கு அழைத்தனர். விசாரணை முடிவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. விசாரணை முடிந்து வெளியே வந்ததும் இன்னும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனச் செய்தி அறிய வந்தது. காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தபொழுது ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவரையும் விசாரணை செய்து முடிக்க இரவு மணி 7.30 ஆகிவிட்டது. அதன்பின் நாங்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்படுவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறுதியாக எங்களை பிரதிநிதித்து சில நண்பர்கள் எங்களுக்காக பிணை கையெழுத்து இட்டு எங்களை பிணையுறுதியில் விடுவிக்கப்படுவதற்கு உதவினர். இரவு 8 மணியளவில் எங்களை விடுவித்தனர். இருப்பினும் ஐவரை மட்டுமே பிணையில் விடுவித்தனர், சுவாராம் உறுப்பினர்கள் இருவரை அன்றிரவு காவல் நிலைய தடுப்பு அறையில் வைத்திருந்து மறுநாள் பிணையில் வெளிக் கொண்டு வரப்பட்டனர்.
வருகின்ற 26ஆம் திகதியன்று மீண்டும் காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரிகளைச் சந்திக்கக் கூறி கடிதம் கொடுத்துள்ளனர். அன்றுதான் தெரியும் எங்கள் மீது வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படுவோமா என்று..
இவ்வேளையில் எனக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளித்த பல நல்லுள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், முக்கியமாக எனக்காக காவல் நிலையத்திற்கு வந்தவர்கள், பிணை கையெழுத்திட்டவர்கள், கைப்பேசியின்வழி தொடர்பு கொண்டு உற்சாகம் ஊட்டிய வலைப்பதிவுலக நண்பர்கள் மற்றும் வெளியுலக நண்பர்கள் பலருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். தொடர்ந்து உண்மைக்காக போராடுவோம்...
விரைவில் அண்ணன் உதயா அவர்களுக்கு தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்..
*நிகழ்வு தொடர்பான ஒளிப்படக்காட்சிகள் விரைவில் இடம்பெறும்..
போராட்டம் தொடரும்...
Read more...