சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.

>> Friday, August 7, 2015


சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க விரும்பும் அன்பர்கள் இணைக்கப்பட்டுள்ள தொடுப்பைச் சுட்டி, கல்வி அமைச்சருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை பதவிறக்கி இரண்டே வாரங்களுக்குள் கல்வி அமைச்சருக்கு AR Registered Mail - வழியாக அனுப்பி வைத்துவிடுங்கள்.

கல்வி அமைச்சருக்கான கடிதம்

பிரதமருக்காக அனுப்ப வேண்டிய சிறப்பு அஞ்சல் அட்டையைப் பெற்றுக்கொள்ள திரு.மாறன் அவர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அவரின் அலைப்பேசி எண்கள்
016-4165443 / 017-4098006

 நமது தமிழ்ப்பள்ளி , நமது கடமை

Read more...

தத்தளிக்கும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி

>> Wednesday, July 22, 2015


சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் அவல நிலையை சித்தரிக்கும் ஆவணப்படம் இக்காணொளியைக் காணும் அன்பர்கள் தயைகூர்ந்து முகநூல், Whatsapp, WeChat போன்ற சமூகத் தளங்களில் இச்செய்தியைப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம். பதவியில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளை இச்செய்தி எட்ட வேண்டும்! இப்பள்ளிக்கு உடனடி நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்! இனமான உணர்வுகொண்ட அன்பர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 2, 2015 காலை 11.00 மணியளவில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெறவிருக்கும் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவு கரங்களை நீட்டலாம்.

Read more...

இலண்டன் உயர் நீதிமன்ற தீ விபத்தால் பதிவு அழிந்தது. ஹிண்ட்ராஃப் மேல்முறையீடு செய்வதில் தடங்கல் !

>> Saturday, April 18, 2015


இலண்டன், 18 ஏப்ரல்: 

ஐக்கிய இராஜியத்திற்கு(UK) எதிராக ஹீண்ட்ராஃப் இயக்கம் தொடர்ந்த வழக்கு நடைபெற்ற ஏப்ரல் முதல் நாளில் இலண்டன் உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டது. இதனால், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்போது வழக்கமாக பதிவு செய்யப்படும் ஒலிப்பதிவு அன்றைய நாளில் இடம்பெறவில்லை. இதனால், வழக்கின் குரல் பதிவு அறிக்கையாக பதிவு செய்யப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட வாதி, பிரதிவாதி தரப்பினரிடம் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கும் நடைமுறை ஹிண்ட்ராஃப் வழக்கைப் பொறுத்த மட்டில் தடை கண்டுள்ளது என்று ஹீண்ட்ராஃப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி இலண்டனில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் அரசினால் மலாயாவிற்கு அழைத்துவரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நியாயம் வேண்டி ஹிண்ட்ராஃப் தொடர்ந்த வழக்கை, இலண்டன் உயர்நீதி மன்ற நீதிபதி நிக்கோலஸ் பிளேக், மலாயாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்ட காலத்தில் ராணியார் தன் சட்டப்பூர்வ கடமையைத்தான் நிறைவேற்றினாரேத் தவிர, பாதிக்கப்பட்ட மலாயா இந்தியர்களுக்கு இன்றைய பிரிட்டிஷ் அரசு பொறுப்பாக முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.

இது குறித்து தற்பொழுது மேல் முறையீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர் நிறுவனமான ‘இம்ரான் கான் & பார்ட்னர்ஸ்’, கடந்த 9-ஆம் நாள் இலண்டன் உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு நகலுக்காக விண்ணப்பித்த வேளையில்தான் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய நிலை, 21 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்னும் நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப செயல்படுதில் தடங்கலை ஏற்படுத்தி உள்ளது. தவிர, ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர்களும் இது குறித்து மேலாலோசனை வழங்க முடியாமல் இருக்கின்றனர்

அதேவேளை, தீர்ப்பு குறித்த நகல் கிடைக்காத நிலையில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு குறித்தும் பிரிட்டிஷ் அரச உச்ச நீதிமன்றத்துடன் ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். மேல் முறையீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

இதற்கிடையில், வழக்கின்போது ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்ட குறிப்புகளின் அடிப்படையில் ஹீண்ட்ராஃப் சார்பான இலண்டன் வழக்கறிஞருடனும் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதில், 1957 மலாயா சுதந்திரச் சட்டம் தொடர்பான சட்டத்திற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 21-07-1957-இல் ஒப்புதல் அளித்த பிரிட்டிஷ் அரசியாரின் சட்டப் பூர்வ கடமை குறித்த அம்சம்தான் தடைக்கல்லாக இருக்கிறது.

இந்தப் பிரச்சினையில், ஹீண்ட்ராஃப் இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து எழுப்பப்படும் ஐயம், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மலாயா அரசியல் சாசனத்தில் பின்னர் இடைச்செருகல் எப்படி இடம் பெற்றது என்பதுதான். இதில், அப்போதைய பிரிட்டிஷ் அரசும் அம்னோ தலைவர்களும் தனிக் கூட்டு அமைத்து செயல்பட்டனரா என்பதும் ஐயத்திற்குரியதாக இருக்கிறது.

ஹீண்ட்ராஃப் இயக்கத்தால் முன் வைக்கப்படும் இன்னொரு ஐயம், பிரிட்டிஷ் அரசினால் மலாயாவிற்கு கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், 1948 பிரிட்டிஷ் தேசியச் சட்டத்தின்படி பிரிட்டிஷ் குடிமக்கள் என்ற தகுதிக்கு உரியவர்கள். அதேவேளை, மாலாயா சுதந்திரம் தொடர்பான பேச்சு வார்த்தை இடம்பெற்ற போது, இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2-ஆம் அல்லது 3-ஆவது தலைமுறையைக் கண்டிருந்தனர். அந்த வகையில், இவர்களின் நலனையும் மலாயாவை விட்டு பிரிட்டிஷ் அரசு வெளியேறிய தருணத்தில் பிரிட்டிஷ் அரசு கவனத்தில் கொண்டிருந்ததா என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை குறித்த ஏராளமான ஆவணங்களையெல்லாம் வழக்கின்போது ஹீண்ட்ராஃப் சமர்ப்பித்தது. இருந்தும், நீதிபதி நிக்கோலஸ் பிளேக் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டாரா என்பதும் தெரியவில்லை.

வழக்கை தள்ளுபடி செய்யும் முன், ஹீண்ட்ராஃப் தொடுத்த வழக்கின் முழு சாரத்தையும் அறிந்து, தெளிந்து கொண்டாரா என்பதே எங்களின் ஐயமாக இருக்கிறது. அப்படி என்றால் பிரிட்டிஷ் நீதி பரிபாலனத்தில் இது ஒரு பின்னடைவாகவேக் கருதப்படும். எது எவ்வாறாயினும், ஹீண்ட்ராஃப் இயக்கத்தின் போராட்டம் தொடரும் என்று வழக்கஞர் வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவு படுத்தியுள்ளார்.

பொ.வேதமூர்த்தி
தலைவர் - ஹிண்ட்ராஃப்
18-04-2015

Read more...

லண்டன் வழக்கு மலேசிய அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கலாம்

>> Monday, March 30, 2015

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிந்திய வியர்வைக்கும் இரத்திற்கும் நீதி கேட்கும் உரிமைப் போராட்டம்தான் இந்த லண்டன் வழக்கு: வேதமூர்த்தி

மலேசிய அரசியல் சாசனம் 1957-இல் வரையப்பட்டபோது, இந்தியர்களின் நலனையும் மற்ற இனத்தினரின் பாதுகாப்பையும் பிரிட்டிஷ் அரசு அடியோடு புறக்கணித்து விட்டதாக ஹிண்ட்ராஃப் தொடர்ந்துள்ள சிவில் வழக்கு, இலண்டன் உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருக்கின்ற நிலையில் இது, மலேசிய அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கலாம்; ஆனால், ஹிண்ட்ராஃப்-பின் நோக்கம் அதுவல்ல என்று இவ்வழக்கு தொடர்பாக இலண்டன் மாநகரில் முகாமிட்டுள்ள ஹிண்ட்ராஃப் தலைவர் பொ.வேதமூர்த்தி அங்கிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய தோட்டத் தொழிலாளர்களை அப்போதைய பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டே புறக்கணித்ததால், மலாயா இந்தியத் தொழிலாளர்கள் சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளானதுடன், மலேசியாவில் வாழ்கின்ற மற்ற இனத்தினரின் ஓர் இளப்பமான பார்வைக்கும் ஆளான நேர்ந்தது.

ஏறக்குறைய 8 இலட்ச பாட்டாளிகள் இடம்பெயர வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளானதுடன், அவர்கள் வேலையை இழந்து, இருப்பிடம் இன்றி மொத்தத்தில் வாழ்வாதாரத்தைத் தொலைத்து நகர்ப் புறாத்தில் அல்லல்பட நேற்ந்தது. அத்துடன், ஏறக்குறைய 3 இலட்ச மலேசிய இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக ஆயினர். மொத்தத்தில் சுதந்திர மலேசியாவின் தேசிய பொருளாதார மேம்பாட்டில் இந்தியர்கள் ஒதுங்கி நிற்க நேர்ந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சுதந்திர மலேசியாவில், அம்னோ தலைமையிலான கூட்டணி அரசு, இன அடிப்படையிலும் ஏற்றத் தாழ்வு மனப்பான்மையிலும் செயல்படுவதற்கு பிரிட்டிஷ் ஆட்சியினர்தான் அடித்தளமிட்டனர் என்பதை மையக் கருத்தாகக் கொண்டுதான் ஹிண்ட்ராஃப் தொடுத்துள்ள வழக்கு இன்று மார்ச் 30-ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது என்று வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய இந்தியப் பாட்டாளி சமுதாயம் எதிர் கொண்ட துயரத்திற்கும் நட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசு பொறுப்பாக முடியாது என்று இந்த வழக்கை பிரிட்டிஷ் அரசு எதிர்க்கலாம. அதேவேளை, பிரிட்டிஷ் அரசுதான் பொறுப்பு என்பதற்கு ஹிண்ட்ராஃப் ஆயிரக் கணக்கான ஆவணங்களைத் திரட்டியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியேற்ற நிலம் வழங்குவதாக வாக்குறுதி தந்த அந்நாளைய பிரிட்டிஷ் நிர்வாகம் அப்பட்டமாக ஏமாற்றி விட்டது. கடல் பயணத்தின்போதும் மலாயாவின் காடுகளை அழித்து நிலத்தைத் திருத்தியபோதும் ஏறக்குறைய ஒரு இலட்சப் பாட்டாளிகள் மடிந்தனர். இதையும் பிரிட்டிஷ் அரசு மூடி மறைத்துவிட்டது.

மலாயாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கிய இரப்பர் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றியவர்கள் இந்தியத் தொழிலாளர்கள், குறிப்பாக தமிழர்கள். அத்துடன், நாடு முழுக்க இரயில் தண்டவாளங்களை அமைத்தது, கட்டடங்களை நிர்மானித்ததெல்லாம் தமிழர்கள்தான். குறைந்த சம்பளத்துடனும் அடிப்படை வசதிகூட இல்லாமலும் பாடுபட்ட தொழிலாளர்களுகாகக் குரல் கொடுத்த சமூகத் தலைவர்களான கணபதி, வீரசேனன் போன்றோரை கம்யூனிசவாதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களை தூக்கிலிட்டு கொன்றதும் பிரிட்டிஷ் அரசுதான்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மஇகா தலைவர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் கூட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்காமல், அதிகார வர்க்கத்துடன் சமரசம் கண்ட தலைவர்களாக இருந்தனர்.
இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ், பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இருந்த தோட்டங்களில் பிறந்த நம் முன்னோர், ‘1948 பிரிட்டிஷ் குடியுரிமை(தேசிய)ச் சட்ட’த்தின்படி பிரிட்டிஷ் பிரஜைகளாவர்.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் பிரிட்டிஷ் அரசு தன் கடமையிலிருந்தும் பொருப்பில் இருந்தும் விலகிக் கொண்டதற்காக, குறிப்பாக நம் முன்னோர் சிந்திய இரத்தத்திற்கும் வியர்வைக்கும் நியாயத்தையும் நீதியையும் கேட்கும் உரிமைப் போராட்டம்தான் இந்த சிவில் வழக்கு என்று பொ.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொ. வேதமூர்த்தி
தலைவர் - ஹிண்ட்ராஃப்

Read more...

”சயாம் - பர்மா மரண ரயில் பாதை” ஆவணப்படத் திரையிடல்


நாடோடிகள் கலைக்குழுவின் தயாரிப்பில் வெளிவந்துள்ள சயாம் - பர்மா மரண ரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) எனும் ஆவணப்படம் எதிர்வரும் 25-ஆம் தேதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமையன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பினாங்கு ரெக்சம் சீமியோ மண்டபத்தில் திரைக்காணவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து இத்திரையிடல் நிகழ்ச்சியை சிறப்பித்து பயன்பெறுமாறு விழைகிறோம். இந்நிகழ்ச்சிக்கான நுழைவு முற்றிலும் இலவசம்.

நிகழ்ச்சி நிரல் :-

மாலை
5.30 : தேநீர் விருந்துபசரிப்பு
5.50 : நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் உரை
6.00 : கவிதைப் படைப்பு
6.05 : திரு.ராஜ்சங்கர் உரை (ஆவணப்பட இணை இயக்குநர்)
6.10 : ‘சயாம் - பர்மா மரண ரயில் பாதை’ ஆவணப்படம் திரையிடல்

இரவு
7.15 : கேள்வி & பதில் அங்கம்
7.45 : முடிவுரை / நிகழ்ச்சி நிறைவடைதல்

(நிகழ்ச்சி நிரல் ஏற்பாட்டாளரின் வசதிக்கேற்ப மாற்றம் காணலாம்)

இவ்வாவணப்படம் குறித்த சில தகவல்களுக்கு கீழ்கண்ட வலைத்தள தொடுப்பினை சுட்டவும் : http://www.jeyamohan.in/68380#.VRjFpPmUd8E

முகநூலின் வழி உங்களின் வருகையை உறுதி செய்ய இத்தொடுப்பைச் சுட்டவும் : https://www.facebook.com/events/635218089954878/

மேலதிக தகவல்களுக்கு : திரு.கனகசுந்தரம் / 017-4155449

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP