பினாங்கு பிறையில் தேய்பிறையாகும் கம்போங் மானீசு இந்தியர்களின் எதிர்காலம்!

>> Wednesday, December 30, 2009

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்பட்ட கம்போங் மானீசு இந்திய கிராமவாசிகளின் சோகக் கதையிது. தகுதியிருந்தும் உதவிகள் கிடைக்காது ஏழ்மையில் வாடும் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக தொக்கி நிற்கிறது. புவா பாலா கிராமத்தைப்போலவே இக்கிராமமும் எதிர்காலத்தில் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அரசியல் பலமில்லாத இம்மக்களுக்கு அதிகாரத்துவத்திடமிருந்து உரிய உரிமைகளைப் பெற்றுத் தர முடியுமா?

Read more...

7'ஏ'க்கள் பெற்ற தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு எம்.ஆர்.எசு.எம் அறிவியல் கல்விக்கூடத்தில் இடம் தரவேண்டும்!


டத்தோ நஜிப் ரசாக்

மலேசிய பிரதமர்

Perdana Menteri Malaysia

Blok Utama Bangunan Perdana Putra,

Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya

E-mail:najib@pmo.gov.my.

டான் ஸ்ரீ முயிடின் யாசின்

மலேசிய துணைப் பிரதமர்

Perdana Menteri Malaysia

Blok Utama Bangunan Perdana Putra,

Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya E-Mail : najib@pmo.gov.my.



அனைத்து 817 தமிழ்ப்பள்ளி 7 ‘மாணவர்களுக்கும் எம்.ஆர்.எஸ்.எம் அறிவியல் கல்லூரியில் ஒன்றாம் படிவம் (2010) பயில நுழைவு தரப்பட வேண்டும்.

மேலே குறிப்பிட்டது போல, நாடு முழுவதிலும் உள்ள 817 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் சோதனையில் 7 ஏக்கள் பெற்ற சாதனை மலேசிய நண்பன், தமிழ் நேசன் மற்றும் மக்கள் ஓசை போன்ற நாளிதழ்களில் 20/11/09 முதல் சில தினங்களுக்கு தலைப்புச் செய்திகளாக வெளியாகின.

உத்துசான் மலேசியா 29/11/09 பக்கம் 8 மற்றும் நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பக்கம் 20 ஆகிய இரண்டு நாளேடுகளில் மாரா கல்லூரிகளுக்கான நுழைவு கடிதங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் 7 ‘க்கள் பெற்ற 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட மாரா அறிவியல் பயிற்சி கல்லூரியிடமிருந்து நுழைவு கடிதம் கிடைக்கவில்லை என்ற கருத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

அதோடு மட்டுமின்றி மலேசிய கல்வித்திட்டத்தில்ஒரு மலேசியாதிட்டத்திற்கு ஏற்ப மலாய் இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்று 7 ‘க்கள் பெற்ற இந்த 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

தேசிய பள்ளி மாணவர்கள் மொத்தம் 5 ஏக்கள் மட்டுமே பெற முடியும். ஆனால் சிறந்த தேர்ச்சியான 7 ‘க்கள் பெற்ற தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இந்த 817 மாணவர்கள் தகுந்த வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால் அவர்கள் எங்குச் செல்வார்கள் மற்றும் தங்களுடைய திறமையையும் அறிவு வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கும் அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வாறு பங்காற்றுவார்கள்?

ஆகவே, 7 ஏக்கள் பெற்ற 817 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் மற்றும் தேசிய பள்ளியில் 5 ஏக்கள் பெற்ற அனைத்து இந்திய மாணவர்களுக்கும் 21/11/09ஆம் நாளன்று பெரித்தா ஹாரியான் பக்கம் 7இல் வெளியிடப்பட்ட நாடு முழுவதிலுமுள்ள 42 மாரா அறிவியல் கல்லூரியில் இருக்கும் மொத்தம் 12,440 இடங்களில் உள்ள முழு தங்கும் வசதி பெற்ற கல்லூரிகள் மற்றும் என்.எஸ்.டி 5/4/08ஆம் நாள் பக்கம் 7இல் வெளியான படிவம் ஒன்றுக்கான 2010 ஆம் ஆண்டில் தொடங்கவிருக்கும் மாரா கல்லூரியில் இடம் கொடுக்கப்பட வேண்டும். எனவேதான் நம் மலேசிய பிரதமரால் முழங்கப்படும் ஒரு மலேசியா வாசகம் உண்மையானதாக இருக்கும்.

அதோடு மட்டுமின்றி அவர்கள் மாரா அறிவியல் கல்லூரிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்களுக்கு மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசாங்கத்தால் உத்தரவாதம் தரப்பட வேண்டும். இந்திய மாணவர்கள் தலையில் முக்காடு அணிவது (tudung), கட்டாய இஸ்லாம் மத வகுப்புகளுக்குச் செல்லவோ, இஸ்லாம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவதோ இருத்தல் கூடாது. அரசியல் சாசனப் பிரிவு 11 (மத சுதந்திரம்) மற்றும் 12-இன் படி யாரும் மற்றவர்களை அவர்களின் சொந்த மதம் தவிர்த்து பிற மத நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது.

போலிஸ் அதிகாரிகளின் பிள்ளைகள் படிக்க போலீஸ் (எம்.ஆர்.எஸ்.எம்), இராணுவ வீரரின் பிள்ளைகள் பயில இராணுவ (எம்.ஆர்.எஸ்.எம்), மற்றும் ஃபெல்டா துறையில் உள்ளவர்களின் பிள்ளைகள் படிக்க ஃபெல்டா (எம்.ஆர்.எஸ்.எம்) இருக்கிறது. தமிழ் (எம்.ஆர்.எஸ்.எம்) மாரா அறிவியல் கல்லூரி எழுப்பப்பட்டால் அது இந்த 817 7 ஏக்கள் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில் உள்ள 110,000 மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இவ்வாறு செய்வதால் அவர்களும் நாட்டின் மேம்பாட்டிற்கான தங்களின் பங்களிப்பை ஆற்ற உறுதுணையாக அமையும்.

உங்களின் உடனடி பதில் மற்றும் நடவடிக்கையை பெரிதும் மதிக்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,

________________

பி. உதயகுமார்

(பொது செயலாளர்)

Read more...

புவா பாலா ஓவியக் கண்காட்சி

>> Monday, December 21, 2009



முத்தியாரா ஓவியக் கண்காட்சியகத்தின் ஏற்பாட்டில் நேற்றுபுவா பாலா நினைவலைகள்எனும் கருப்பொருளை தாங்கிய ஓவியக் கண்காட்சி தொடங்கியது. 20-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதிவரை நடைப்பெறவுள்ள இக்கண்காட்சியைக் காண பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். பினாங்கு இந்தியர்களின் பாரம்பரிய கிராமமான புவா பாலாவை கடந்த செப்தெம்பர் மாதமன்று மாநில அரசாங்கம் மற்றும் மேம்பாட்டாளர்கள் இணைந்து தரைமட்டமாக்கி அங்குள்ள மக்களை விரட்டியடித்தனர். இதன்வழி அங்கு பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ஆடம்பர அடுக்குமாடி கட்டிட பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன.

200 ஆண்டுகளாய் பிரவுன் தோட்டத்தில் வியர்வையையும் உதிரத்தையும் உதிர்த்து வாழ்ந்த இந்திய மக்களுக்காக கொடுக்கப்பட்ட 6.2 ஏக்கர் நிலமும் அங்கு படர்ந்திருந்த பசுமையும், இயற்கையாய் தேங்கியிருந்த நிலத்தடி நீரும் முற்றிலும் அழிக்கப்பட்டதன் வழி ஒரு சரித்திரம் நம் புறக்கண்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. அச்சரித்திர சான்றுகள் இன்று ஓவியங்களின் வடிவில் உயிர்தெழுந்து நம் உணர்வலைகளை தட்டியெழுப்பப் புறப்பட்டிருக்கின்றன.

அப்பாரம்பரிய கிராமம் உடைபடுவதற்கு ஒருவாரம் முன்பாக, 13 ஓவியக் கலைஞர்கள் அக்கிராமத்தின் உயிரோட்டத்தை தூரிகையியால் வார்த்தெடுத்த ஓவியங்கள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கண்காட்சியினை முனைவர் டத்தோ அன்வார் ஃபசால் அதிகாரப்பூர்வமாக நேற்று திறந்து வைத்தார். அந்நிகழ்வின் காணொளி காட்சி கீழே :



முத்தியாரா ஓவியக்கண்காட்சியகத்தின் முகவரி :


118, Lebuh Armenian,
10200 Pulau Pinang, Malaysia.

அலைப்பேசி எண்கள் : 604-262 0167

Read more...

இசா சட்டத்தை துடைத்தொழிப்போம் - இண்ட்ராஃபின் அமைதி மறியல்

>> Monday, December 14, 2009

இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு, நேற்று பங்சாரில் இண்ட்ராஃபினர் அமைதி மறியலில் ஈடுபட்டனர். இம்மறியலில் திரு.செயதாசு கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

பங்சார் சிறீ நாகேசுவரி ஆலயத்தை நோக்கி அமைதி ஊர்வலம்




அமைதி மறியல் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல - பொ.உதயகுமார் விளக்கம்



போராட்டம் தொடரும்...

Read more...

மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுப்போம்

>> Thursday, December 10, 2009

இன்று அகில உலக மனித உரிமைப் பிரகடன நினைவு நாள். 1948-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10-ஆம் நாள் ஐக்கிய நாட்டவையின் பொதுக் குழு கூட்டத்தில் அகில உலக மனித உரிமைப் பிரகடனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்தப் பதிவையும் காண்க : மனித உரிமைகள் என்றால் என்ன?

மனித உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரலாற்றோடு பிண்ணிப் பிணைந்த அதன் பரிணாமத்தை 10 நிமிடங்களில் தெளிவாக விளக்கிக் காட்டும் .நா மனித உரிமை ஆணையம் தயாரித்த ஆவணப்படம் இதோ :



ஐக்கிய நாட்டவையின் மனித உரிமை ஆணையம் வரையறுத்துள்ள 30 விதமான மனித உரிமைகள் குறித்த சுருக்கமான விளங்கங்களோடு தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் இதோ :



இன்றைய தினத்தில் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் போன்றவர்களோடு மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்துக் கொள்ளலாமே..

போராட்டம் தொடரும்..

Read more...

தமிழ் இலக்கியமும் மலாய் மேலாண்மைக் கோட்பாடும்

>> Monday, December 7, 2009

அண்மையகாலமாக மிக நேர்த்தியான முறையில் அம்னோ அரசாங்கத்தினால் நடத்தப்பெறும் ஒரு புழுத்துப்போன நாடகத்தை, மலேசிய இந்திய சமூகம் அலுத்துப்போய் எதிர்கொண்டு பேச்சுவார்த்தை, கண்டனக் கூட்டம், ஊடக அறிக்கை, கையெழுத்து வேட்டை என பலவகையில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருவதை அனைவரும் அறிவர்.

2010-ஆம் ஆண்டு தொடங்கி எசு.பி.எம் தேர்வில் 10 பாடங்களையே தேர்வாக எழுத முடியும் என கல்வி அமைச்சு இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதுனால் வரை தமிழ் இலக்கியத்தை ஒரு தேர்வு பாடமாக எடுத்து மொத்தம் 11 தேர்வு பாடங்களை எழுதி வந்த நடைமுறைபோய், இனிவருங்காலங்களில் 10 பாடங்களே எடுக்க முடியும் என்ற அறிவிப்பு வழக்கம்போல் சமூக அரசியல் இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தன. அதனைத் தொடர்ந்து இந்திய சமூக இயக்கங்களிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் தொடர்ச்சியாக எழுந்த கண்டனங்கள், பின்பு கல்வி அமைச்சு தேர்வில் 12 பாடங்களை எடுக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதித்ததையும் நாம் அறிவோம். கூடுதலாக தேர்தெடுக்கப்படும் தேர்வுப் பாடங்களின் புள்ளிகள் கூட்டு மதிப்பெண்களில் இடம்பெறாது எனவும், கல்விக் கடனுதவிகள், உபகாரச் சம்பளங்கள் பெறுவதற்கு இக்கூடுதல் தேர்வுப் பாடங்களின் அடைவுநிலைகள் கணக்கிற் கொள்ளப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. கல்வி அமைச்சின் இந்த முடிவைக் கண்டு சிலர் அரசாங்கத்தை பாராட்டி அறிக்கைகளும் வெளியிட்டனர், சில தரப்பினர் தங்களின் அதிருப்தியையும் வெளியிட்டனர். எதிர்வரும் திசம்பர் 12-ஆம் தேதியன்று திட்டமிட்டப்படியே தோட்ட மாளிகையில்தமிழைக் காப்போம்இலக்கியத்தை மீட்போம்எனும் கண்டனக் கூட்டம் நடைப்பெறப்போவதாயும் அறிவிப்புகள் வந்துள்ளன.

இந்தக் கட்டுரையின்வழி, அம்னோ அரசாங்கத்தின் முடிவு சரியானதா, அதற்கேற்றாற்போல் நமது சமூக அரசியல் இயக்கங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் சரியானதா என்பதனைப் பற்றி அலசுவது எனது நோக்கம் அல்ல. ஒவ்வொரு தடவையும் இதுபோன்ற இழுப்பறிகள் நடைப்பெறும்போதெல்லாம் நம் சமூகத்தின் நிலைப்பாடும் அரசாங்கத்தின் முடிவுகளும், ஊடகங்களின் பங்கும் எப்படி இருக்கும் என்பதனைப் பற்றிய சில உண்மைகளை விளக்கி மீட்டுணர்வதற்கும், யாரும் பார்க்க, பேச மறந்த ஒரு விடயத்தை இங்கு துணிந்து கூறுவதற்குமே இந்த பதிவு.

முதலில் மொழி என்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய, கிடைக்கப்பெற வேண்டிய அடிப்படை உரிமையாகும். அச்சமூகமானது சிறுபான்மை இனத்தைச் சார்ந்து இருந்தாலும், மொழி உரிமையை ஒருபோதும் அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கலாகாது என்று .நா மன்றம் வரையறுத்திருக்கிறது. எனவே, எசு.பி.எம் தமிழ் இலக்கிய தேர்வு பாடத்தைப் பற்றி அணுகுவதற்கு முன்பாக, முதலில் தேசிய, இன மொழிச் சமய சிறுபான்மையினருக்கான ஐக்கிய நாட்டவையின் உரிமைப் பிரகடனத்தில் வரையப்பட்டுள்ள உடன்படிக்கைகள் சிலவற்றை இங்கு நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

பிரிவு 1

. தன் நாட்டு பூகோள எல்லையுள் வாழும் சமய, இன, மொழிச் சிறுபான்மையினரின் தனித்த அடையாளங்களை அரசுகள் பாதுகாப்பதோடு, அவர்களின் தனித்த அடையாள வளர்ச்சிக்கான சூழல்களையும் உருவாக்க வேண்டும்.

. இவ்வுரிமைகளை நிறைவேற்ற அரசுகள் உரிய சட்டங்களை இயற்ற வேண்டும்.

பிரிவு 2

. தேசிய, இன, மொழி, சமயஞ்சார்ந்த சிறுபான்மையினர் தங்களின் கலாச்சாரத்தை அனுபவிக்கவும் ஒரு சமயத்தைத் தழுவவும், கடைப்பிடிக்கவும், தாய்மொழியைப் பயன்படுத்தவும் பொதுவிடங்களிலும், தனியாகவும், எவ்வித பாகுபாடுமின்றி அனுபவிக்கவும் உரிமையுண்டு.

பிரிவு 4

. சிறுபான்மையோர் தம் தனித்த பண்புகளை வெளிப்படுத்தவும், கலாச்சாரம், மொழி, பாரம்பரியம், பழக்க வழக்கங்களை வளப்படுத்தவும் உரிமையுண்டு.

. தாய்மொழியைக் கற்கவும், தாய்மொழியில் கல்வி கற்கவும் சிறுபான்மையோரின் உரிமைகளைப் பேண அரசு உரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

. சிறுபான்மையினர் தம் வரலாறு, பாரம்பரியம், மொழி, கலாச்சாரம் என்பன பற்றிய ஆழமான அறிவை கல்வி மூலம் பெறுகின்ற வாய்ப்பைப் பெற அரசு வழி வகை செய்ய வேண்டும். அதேவேளை, ஒட்டுமொத்த சமூகம் பற்றிய அறிவையும் அவர்கள் பெற வழிவகை செய்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாட்டவையின் உரிமைப் பிரகடனத்தில் ஒரு சமூகத்தைச் சார்ந்த மொழிக்கு எவவளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் கவனிக்க வேண்டும். இப்போழுது நம் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையப்பட்டுள்ள ஒரு சட்டப்பிரிவைAlign Left இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

வரைவு எண் 152

மலாய் மொழியானது மலேசிய நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகும். அதிகாரப்பூர்வ மொழி மலாய் மொழி என எழுத்துப்பூர்வமாக சட்டங்களின்வழி பாராளுமன்றம் வரையறுத்திருக்க வேண்டும். இருப்பினும் மலாய் மொழியின் அங்கீகாரமானது பிற மொழிகளுக்கான நிலைப்பாடு மற்றும் உரிமையைக்கொண்டு அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், இத்தனைக்கும் பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடையாக ஒருபோதும் இருக்கக்கூடாது.

உள்ளடக்கம்

வரைவு எண் 152(1)(a)

பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்

வரைவு எண் 152(1)(b)

கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூட்டரசு அரசியலமைப்புச் சட்டவரைவுகள் மிகத் தெளிவாகவே பிற மொழிகளைப் பயன்படுத்தவோ, கற்கவோ, கற்பிக்கவோ, அதற்காக பொது மானியங்களை ஒதுக்கீடு செய்யவோ எந்தவொரு தடையும் இல்லை எனத் தெரிகிறது.

எனவே, மொழி என்பது நமக்கும் சரி பிற இனத்தவருக்கும் சரி அதுவொரு அடிப்படை உரிமை என்று சட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட ஒரு விடயமாகும். அடிப்படை உரிமை என்றாலே அதனை மறுக்கவோ, நம்மிடமிருந்து பறித்துக் கொள்ளவோ யாருக்கும் உரிமை இல்லை என்று பொருளாகிறது. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து, அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 52 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்நாட்டில் குறிப்பாக இந்திய/தமிழ் சமூகம் மட்டும் தொடர்ந்து அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கே போராடி வருவதை நாம் முதலில் உணர வேண்டும். அடிப்படை உரிமைக்கே 52 ஆண்டுகளாகியும் போராட வேண்டியிருக்கிறது என்றால், நம் சமூகம் கேவலமாக நடத்தப்பெறுகிறது என்றுதானே அர்த்தம். குறிப்பிட்டுச் சொன்னால்ஓரங்கட்டுதலின்மற்றுமொரு அத்தியாயம் இது என்று அறுதியிட்டுக் கூறலாம்.

அண்மையில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை, தெற்காசிய ஆய்வுத் துறையாக பெயர் மாற்றம் பெறவிருப்பதாக அம்னோ அரசாங்கம் இந்திய சமூகத்தை பயமுறுத்தியது. உடனுக்குடன் நம் சமூக அமைப்புகளின் எதிர்வினையால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பிரச்சனை மீண்டும் எழாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அதனைத் தொடர்ந்து எசு.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கிய பாடத்தை தேர்வு பாடமாக எடுப்பதை தடைசெய்யும் வகையில் அதிகபட்ச 10 பாடங்களை அறிவித்து பின்பு அரைகுறையாக நம்முடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டதுபோல் நாடகம் ஆடுகிறது. இந்த ஆண்டை மட்டும் ஆய்விற்கு எடுத்துக் கொண்டு, நமது அடிப்படை உரிமைகள் விடயத்தில் எத்தனை முறை அம்னோ அரசாங்கம் கைவைத்துவிட்டது என்று ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள்.

இதற்கெல்லாம் பின்னணி என்னவாயிருக்கும்?

முதலில் அம்னோ அரசாங்கமானது பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் குறித்த நிலைப்பாட்டினை எவ்வாறு கொண்டுள்ளது என்பதனை கவனிக்க வேண்டும்.

ஐக்கிய நாட்டவையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான மலேசியா, .நா வரையறுத்துள்ள உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள எட்டு மாநாடுகளின் உடன்படிக்கைகளில், இதுவரை இரண்டில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய நாட்டவையின் மனித உரிமை ஆணையத்தின் எட்டு உடன்படிக்கைகள் :

1) குடிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1976

2) பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1976

3) தஞ்சமடைந்த அகதிகளின் பாதுகாப்பு குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1951 மற்றும் 1967

4) இனப்பாகுபாடு ஒழிப்பு குறித்தான அனைத்துலக உடன்படிக்கை 1969

5) பெண்கள் மீதான அனைத்துவித பாகுபாட்டிற்கெதிரான அனைத்துலக உடன்படிக்கை 1981

6) சித்தரவதை மற்றும் பிற வகையான கொடுமைகள், மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான நடவடிக்கைகள் அல்லது தண்டனைகளுக்கெதிரான அனைத்துலக உடன்படிக்கை 1987

7) சிறார் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 1990

8) உடல் அங்கவீனர்களின் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை 2008

மேற்குறிப்பிட்ட எட்டுவிதமான உடன்படிக்கைகளில், மலேசியா ஐந்தாவது மற்றும் ஏழாவது உடன்படிக்கைகளை மட்டுமே கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டுள்ளது. பிற மொழி பாதுகாப்பு குறித்த இரண்டாவது உடன்படிக்கையில் இதுவரை மலேசியா கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நம் நாட்டின் சில மனித உரிமை இயக்கங்கள் இரண்டாவது உடன்படிக்கையில் கையெழுத்திட அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் அம்னோ அரசாங்கம் திட்டமிட்டு மௌனம் சாதித்து வருகிறது.

ஒருவேளை இரண்டாவது உடன்படிக்கையில் கையெழுத்திட்டால் அம்னோ அரசாங்கம் எதிர்நோக்கவிருக்கும் பாதிப்பு என்ன? புதிய பொருளாதாரக் கொள்கையின்வழி அம்னோ அரசாங்கம் அமுல்படுத்திவரும் பக்கச்சார்பான தேசியக் கொள்கைகளையும், மலாய் மேலாண்மைக் கோட்பாட்டையும் பிற இனங்களுக்கெதிரான பாராபட்சமானக் கொள்கைகள் என .நா மன்றம் கருதி, மலேசியாவை இனவாத நாடு என முத்திரை குத்தி அழுத்தம் கொடுக்கும் அபாயத்தை அறிந்தே அம்னோ அரசாங்கம் அவ்வுடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.

இனவாதக் கொள்கைகளை வெளிப்படையாகவே திட்டமிட்டு அரங்கேற்றிவரும் அம்னோ அரசாங்கத்திடமிருந்து தாய்மொழியைப் பாதுகாப்பது எப்படி? உண்மையிலேயே இந்த சூழ்நிலையில் தாய்மொழியை நிரந்தரமாகப் பாதுகாக்க முடியுமா?

மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை விவகாரமாகட்டும், .சு.பி.எம் தமிழ் இலக்கிய தேர்வு பாட விவகாரமாகட்டும் இந்திய சமூக,அரசியல் இயக்கங்களிடமிருந்து நிச்சயமாக கண்டனங்கள் எழும் என்பதனை அம்னோ அரசாங்கம் அறிந்தே வைத்திருக்கின்றது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், சமூக, அரசியல் இயக்கங்கள் எதிர்வினைகளை தாம் நினைத்ததுபோலவே ஆற்ற வேண்டும் என்பதுதான் அம்னோவின் திட்டம். வழக்கம்போலவே அடிப்படை உரிமைகள் விவகாரங்களில் அனைத்து சமூக, அரசியல் இயக்கங்களும் தத்தம் போராட்டங்களை அம்னோ அரசாங்கம் எதிர்ப்பார்த்ததைப்போலத்தான் நடத்தி வருகிறார்கள், இனியும் வருவார்கள் என்பதுதான் அம்னோ அரசாங்கத்தின் நம்பிக்கை.

உதாரணத்திற்கு இந்திய ஆய்வியல் துறையை எடுத்துக் கொள்வோம். அத்துறையில் ஏற்பட்ட உட்பூசலை மையப்படுத்தி, துறையின் பெயரையும் நோக்கத்தினையும் மாற்றப் போவதாய் ஒரு நாடகம் காட்டியது அம்னோ அரசாங்கம். உடனே, இந்திய சமூக, அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து குரலெழுப்பியதும் அத்துறை பழைய நிலைமையிலேயே விடப்பட்டது. நிச்சயமாக காப்பாற்றப்படவில்லை! மீண்டும் அதே நிலைமையிலேயேதான் விடப்பட்டுள்ளது. ஆனால், மறுநாளே ஊடகங்களில் இந்திய ஆய்வியல் துறை காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும், சமூக அரசியல் கட்சிகளின் ஒருமித்த வெற்றி எனவும் தம்பட்டம் அடித்ததை படித்திருக்கிறோம். 53 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்திய ஆய்வியல் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில், கூடுதல் மானியங்களை கொடுத்து மொழி,சமூக,சமய ஆராய்ச்சிகள் போன்றவற்றை மேற்கொள்ள வைத்து, அதன்வழி அடிமட்ட சமுதாய அங்கத்தினர் பலனடையும் வகையில் முயற்சிகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதனை வெற்றி, முன்னேற்றம் என்று கூறலாம். ஆனால், பிடுங்குவதைப் போல் பிடுங்கி, பின் மீண்டும் அதே நிலைமையில் நம் கையில் இந்திய ஆய்வியல் துறையை ஒப்படைத்திருக்கிறார்கள். அதைத்தான் வெற்றி என்று நீங்கள் கூற விரும்புகிறீர்களா?

எசு.பி.எம் தேர்வில் 10 பாடங்களை குறைப்பதன் மூலம் தமிழ் இலக்கியம் பாதிக்கப்படும் என்று அரசாங்கத்திற்குத் தெரியாதா என்ன? நிச்சயமாகத் தெரியும்! அவர்கள் எதிர்ப்பார்ப்பது நம்முடைய எதிர்வினையையும், அதன்பின் மக்களிடம் தோன்றும் தற்காலிக திருப்தியும்தான். அதற்காகவே தன் பிடியில் இருக்கும் சில அங்கத்துவ அரசியல் கட்சிகளை கைப்பாவையாகப் பயன்படுத்தி இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றுகிறது அம்னோ அரசாங்கம். இதன்வழி அக்கட்சிகளுக்கு சுயவிளம்பரம் ஊடகங்களின்வழி கிடைக்கிறது. தினசரி நாளிதழ்களில் இந்த கைப்பாவைகளின் அறிக்கைகளைப் படித்துப் பார்த்தாலே நமக்குத் தெரியும். இருந்ததை இருந்த இடத்திலேயே வைத்ததற்கு சமுதாயத் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலருக்கு பாராட்டு மழைகள் பொழியும். மலேசிய இந்திய சமுதாயம் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி சிந்திக்காமல், தொடர்ந்து அடிப்படை பிரச்சனைகள் குறித்தே தனது நேரத்தையும், சக்தியையும் செலவழிக்க வேண்டும் என்பதே அம்னோ அரசாங்கத்தின் விருப்பமுமாகும். ஆங்கிலத்தில் கூறினால், "They keep on making us busy on the ground level". இதனை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை! சமூக, அரசியல் இயக்கங்கள் சிந்தித்து பார்க்க விடுவதுமில்லை.

அடிப்படையில் அம்னோ அரசாங்கத்தின் இனவாதக் கொள்கைகளை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு நம் சமுதாயத்திடம் அரசியல் பலம் இல்லை என்பதுதான் உண்மை.

நாம் செய்ய வேண்டியது என்ன?

நம் சமுதாயம் எதிர்நோக்கிவரும் அடிப்படை உரிமைப் பிரச்சனைகள் களைய வேண்டுமென்றால், நாட்டின் திட்டமிட்ட இனவாத தேசியக் கொள்கைகள் மற்றும் மலாய் மேலாண்மை கோட்பாட்டைப் பற்றி நம் சமூக இயக்கங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். வெறுமனே ஒவ்வொரு பிரச்சனைக்கும் தற்காலிக தீர்வு காண்பதிலேயே நமது சக்தியையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருந்தால் வேர் அங்குதான் இருக்கும் ; கிளைகளைத்தான் நாம் நிரந்தரமாக மேய்ந்துக் கொண்டிருப்போம். இதற்கு ஒரு தீர்வு என்றுமே கிடைக்காது. எனவே ஆணிவேரை நோக்கி சமூக அரசியல் இயக்கங்கள் தைரியமாக குரலெழுப்ப வேண்டும். அரசு ஊடகங்களை விடுத்து நாமே மாற்று ஊடகமாக மாற வேண்டும்.

எதிர்வரும் 12-ஆம் தேதி திசம்பரன்று தோட்ட மாளிகையில் நடைப்பெறும் கண்டனக் கூட்டத்தில் பங்கு பெறும் அனைத்து சமூக அரசியல் இயக்கங்களும் தற்காலிக தீர்வுகளுக்கு வழி காணாமல், அடிப்படை உரிமைகள் இனி பறிக்கப்படாது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சிந்தித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவது முக்கியம்.

மலேசிய இந்திய சமுதாயம் தனது அடுத்தக் கட்ட நகர்வினைப் பற்றி சிந்தித்து, இழந்த உரிமைகளையும், கிடைக்கவேண்டிய உரிமைகளையும் தட்டிக் கேட்பதற்கான திராணியை வளர்த்துக் கொள்ளாதவரை நாடகம் தொடர்ந்து அரங்கேறி வரும். ஆனால், தீர்வுதான் பிறக்காது!

வாழ்க தமிழ் மொழி...

போராட்டம் தொடரும்...

Read more...

ஓரங்கட்டப்படும் மலேசிய இந்தியர்கள் - பாகம் 1

>> Wednesday, December 2, 2009

இந்தத் தொடரின் வழியாக மலேசிய இந்தியர்கள் எப்படியெல்லாம் ஓரங்கட்டப்படுகின்றனர் என்பதனை படம் பிடித்துக் காட்ட விரும்புவதோடு, எப்படியெல்லாம் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பனவற்றை அடுக்கடுக்கான விளக்கங்களோடு விவரிக்கவுள்ளேன். மலேசிய இந்திய ஏழை சமூகத்திற்கு எதிராக நடந்தவையெல்லாம் தவிர்க்கவியலாத காரணங்கள் என பரவலாக நிலவிவரும் மாயையை எனது தொடர் கட்டுரையின்வழி உடைத்தெறியவிருக்கிறேன். இச்சமூகத்தினரிடையே நற்பண்புகள் குறைந்திருப்பதாகவும், சமய அறிவு அற்றவர்களாகவும், அளவுக்கதிகமாக ஆஸ்ட்ரோ பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும், அடிப்படையில் வன்முறை கொண்டவர்களாகவும் மற்றும் இன்னும் பலவிதமான மாயாவாத காரணியங்களை நம் சமூகத்திலுள்ளவர்களும் பிற சமூகத்தைச் சார்ந்த தற்காலத்திய தத்துவவாதிகள் நிறுவி நம்மை நம்பச் செய்கின்றனர்.

இதோ முதல் பகுதி

இத்தொடரை நன்கு விளங்கிக் கொள்ள சில அடிப்படை தகவல்களோடு துவங்கலாம் என நினைக்கிறேன்.

மலேசியாவின் அடிப்படைத் தரவு
இனவாரியான மக்கட் தொகை கணக்கெடுப்பு, 2009



மேற்காணும் பட்டியலில் மலேசிய இந்தியர்களின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 7.4 சதவிகிதம் என மலேசிய புள்ளிவிவர இலாகா தகவல் வெளியிட்டுள்ளது. இதில் மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கையானது தனித்தன்மை வாய்ந்த சிறுபான்மையினர் குழாம் எனத் தெளிவாகத் தெரிகிறது.

நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை நாட்டு மொத்த உற்பத்தியில் தனி நபரின் ஆண்டு வருமானமானது 1960-ஆம் ஆண்டில் ரிம2500லிருந்து 2008-ஆம் ஆண்டிற்குள் ரிம15000 வரை உயர்ந்துள்ளது. இது ஒரு கணிசமான உயர்வு என்றே கொள்ளலாம். அடிப்படையில் நாட்டின் பொருளாதாரமானது கொள்முதல் பண்டங்கள் உற்பத்தி மற்றும் வேளாண்பொருளாதாரத்தையே (ரப்பர் மற்றும் செம்பனை எண்ணெய் உற்பத்தி) நம்பியிருந்த காலம்போய், தற்போது தயாரிப்புத் துறையை சார்ந்திருக்கும் பொருளாதாரத்தை நம்மால் காண முடிகிறது.

கீழ்காணும் அட்டவணையைக் காண்க :



நாட்டின் வளப்பத்திற்கு அச்சாணியாகவும் நவீன விவசாய உற்பத்தியாகவும் கருதப்பட்ட ரப்பர் உற்பத்தித் துறையில் மலேசிய இந்தியர்களின் பங்கு அளப்பரியதாகும். மலேசிய இந்தியர்களில் பெரும்பாலானோர் ரப்பர் தோட்டங்களில் மரம் சீவும் உடலுழைப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். விவசாயத் துறை என்றாலே உணவு உற்பத்தி என்ற நிலையை மாறச் செய்து பெரும் முதலீடுகளை ஈர்த்து பணம் ஈட்டும் ஒரு துறையாகவும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வரும் ஒரு துறையாக ரப்பர் உற்பத்தித் துறை விளங்கத் தொடங்கியது. ரப்பர் உற்பத்தித் துறை வளர்ச்சி பெற்றுவந்த காலக்கட்டங்களில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு பெருமளவில் மாற்றத்தை அடைந்து புதியதொரு பரிணாமத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. நடவுத் தொழிலைச் சார்ந்திருந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல தொழிற்சாலை உற்பத்தியை சார்ந்திருக்கும் பொருளாதார நிலைமைக்கு தன்னை இட்டுச் செல்ல வழி அமைத்துக் கொண்டது. ஆங்காங்கே புதிய தொழிற்சாலைகள் பல தோன்றத் தொடங்கியதிலிருந்து ரப்பர் தோட்டங்களை நம்பியிருந்த பொருளாதாரம் தொழிற்சாலைகளை மையப்படுத்தி வளரத் தொடங்கியது. இதன்வழி நாட்டின் பெரும்பணம் ஈட்டும் முதன்மை துறையாக தொழிற்சாலை உற்பத்தித் துறை இடம்பெற்றது.

பொருளாதார நிலைமை பெரும் மாற்றத்தை கண்டுவந்த அதே சமயம் நாட்டின் அரசியல் நிலைமையும் பெரும் மாற்றத்தைக் கண்டுவந்தது. நம் நாட்டின் முக்கிய அரசியல் பரிணாமங்களை நான்கு கட்டங்களாக வகுக்கலாம், அதாவது 1957 முதல் 1969வரை, 1969 முதல் 1981வரை, 1981 முதல் 2004வரை, 2004 முதல் 2008வரையாகும். ஒவ்வொரு கட்டங்களும் வரலாற்று பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அவை நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதிய சம்பவங்களோடு பிணைத்து, அவை ஏற்பட்டதற்கான காரணங்களையும் விளக்கிக் காட்ட வல்லவையாகும்.

இவ்வளவு பரிணாமங்களுக்கு இடையில் மலேசியாவின் சிறுபான்மையினராக விளங்கும் மலேசிய இந்தியர்கள் நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக முன்னேற்றங்களிலிருந்து திட்டமிட்ட தேசியக் கொள்கைகளினால் வெளிப்படையாகவே ஓரங்கட்டப்பட்டு வந்தனர்.

மலேசியா அடைந்துவந்த துரிதமான பொருளாதார வளர்ச்சியின் பலனாக குறிப்பிட்ட சில இனங்களுக்கு கிடைத்துவந்த பலவிதமான உதவிகளைப் போலவே மலேசிய இந்தியர்களுக்கு சரிசமமான உரிய பங்கீடு ஒதுக்கப்படவில்லை. இந்தத் தொடரின்வழி மலேசிய இந்தியர்களில் ஏழை வகுப்பினர் நாட்டின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எந்தெந்த ரீதியில் புறக்கணிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வந்தனர் என்பதனையும், எதனால் அவர்கள் ஓரங்கட்டுதலுக்கு ஆளானார்கள் என்பதனையும் விளக்க முயல்கிறேன்.

பெரும்பாலும் நமக்கு சில உண்மைகள் தெரியும். ஆனால், நமக்குத் தெரிந்தவை அங்கும் இங்கும் நிகழ்கிற சில சம்பவங்கள், மற்றும் திரிந்துபோன சில செய்திகளை மட்டுமே நாம் அறிந்து வைத்திருக்கிறோம். நான் செய்யவிருப்பது என்னவென்றால், ஆங்காங்கே நடந்த பல்வேறு சம்பவங்களை இணைத்து, புள்ளிகளை இணைத்துப் பார்த்து அவை சொல்லும் உண்மைகளை ஒரு பெரிய படமாக வரைந்து அதன் பின்புலங்களை உங்களுக்குத் தெளிவாக காட்டவிருக்கிறேன்.

ஆனால், முதலில் ’ஓரங்கட்டப்படுதல்’ என்ற பதத்தின் அர்த்தத்தை சற்று விளக்கிவிடுகிறேன்.

சமூகவியல் பார்வையில் ‘ஓரங்கட்டப்படுதல்’ என்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை கட்டங்கட்டமாக சில அதிரடி மறைமுக செயல்முறைகளின்வழி தொடர்ச்சியாக ஒடுக்கியும், நாட்டின் முக்கிய பொருளாதார வளர்ச்சியில் இருந்து ஒதுக்கியும், சில வரைமுறைகளின்வழி சமுதாய அடிமட்டத்தில் எல்லைக்குட்படுத்தி முக்கியமற்றவர்களாக முத்திரைக் குத்தப்பட்ட ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தி ( மலேசிய இந்தியர் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு இது மிகப் பொருந்தும்) நிரந்தரமாக புறக்கணிப்பதுதான் அதன் அர்த்தம். ‘ஓரங்கட்டுதலின்’ கொடூர நீட்சியானது ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களையே அடியோடு வேரறுக்க இன அழிப்புவரை அதன் கரங்களை நீட்டச் செய்யும்.

இன்றுவரை பல சமூகங்கள் ‘ஓரங்கட்டுதலுக்கு’ உள்ளாகி சின்னாப்பின்னமாகியிருக்கின்றன. அதன் விளைவாக பலர் தங்களின் குடியிருப்புகளையும் சொந்த நிலங்களையும் இழந்திருக்கின்றனர், வலுக்கட்டாயமாக வறுமை புரையோடும் ஒதுக்குப்புற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர், பரம்பரை தொழிலையும் அதன் மூலம் ஈட்டக் கூடிய வருமானத்தையும் இழந்திருக்கின்றனர், வேலை வாய்ப்புகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். மேற்படியாக தங்களின் கலாச்சாரத்தையும் இழந்து, சமூகத்தில் கிடைக்கப்பெற வேண்டிய அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாக வலுவிழந்து போனவர்கள் ஏராளம்.

மலேசிய இந்திய சமுதாயம் தொடர்ச்சியாக மலேசிய சமூகத்திடமிருந்து ‘ஓரங்கட்டப்பட்டு’, இன்றுவரை சில அடிப்படை உரிமைகளுக்கே போராட வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டதன் அடிப்படைக் காரணம் யாதெனில், அரசாங்கத்தின் நடைமுறைப் போக்குகளும், பக்கச்சார்பாக வகுக்கப்பட்ட தேசியக் கொள்கைகளும் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் யாவுமே அதிகார வர்கத்தின் தேவைகளுக்கேற்பவும், தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு நாட்டின் வளங்களைச் சூறையாடி, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகளை புறக்கணிப்பதும் தொடர்ந்து நடைப்பெறுவதால்தான். இந்த ’ஓரங்கட்டுதலை’ நடைமுறைப்படுத்துவதிலும், அதனை பொது கண்ணோட்டத்திலிருந்து மறைப்பதிலும், திசைத்திருப்புவதிலும் அதிகார வர்க்கத்தினருக்கு முக்கியமான பங்கு உண்டு. நம்மிடையே நிலவும் பொதுவான கருத்துகளை அதிகார வர்கத்தினருக்கு சாதகமாக நிலைப்பெறச் செய்வதிலும், வலுப்படுத்தச் செய்வதிலும் அவர்கள் பலவிதமான உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை உண்மையின் அடிப்படையில் தெரிந்து கொள்வதற்கும் அணுகுவதற்கும் நமக்கு விதிக்கப்பட்ட சில வரைமுறைகளின்வழியும் தடைகளின்வழியும் உண்மை நிலவரங்களைத் தவறாக புரிந்துகொள்ளக் கூடிய சாத்தியங்களை விதைக்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர். இதன் விளைவாக உண்மையிலேயே மலேசிய இந்திய சமுதாயம் ‘ஓரங்கட்டப்பட்டு’ வருகிறதா என்ற சந்தேகத்தினை நமது சிந்தனையில் நாமே விதைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியங்களை அதிகார வர்க்கத்தினர் ஏற்படுத்துகிறார்கள்.

என்னுடைய பணி இதுதான். நிலவரங்களைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதோடு மட்டுமல்லாது, அதற்கான பின்னணிகளை ஆய்ந்து எடுத்துரைக்கவிருக்கிறேன்.

மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் ‘ஓரங்கட்டுதல்’ பன்முகங்கள் கொண்டவை. குறிப்பாக அதனை நான்கு பிரிவுகளாக நாம் வகுக்கலாம்.

1) பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

மலேசிய இந்திய சமூகம் தன்னை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்திக் கொள்வதை நிராகரித்தல். நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வெள்ளோட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுதல்.

2) அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

நாட்டு வளப்பம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான பிரத்தியேக ஒதுக்கீடுகள் குறித்த முடிவெடுக்கும், நிர்ணயிக்கும் தகுதிகளையும் சரிசமமான வாய்ப்புகளையும் அரசியல் ரீதியில் மலேசிய இந்தியர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தல். நாட்டின் நேர்மையான அரசியல் செயல்பாடுகள் அரசியல் செல்வாக்குகளின்வழி கைப்பற்றப்படுதல். அதன் விளைவாக நாட்டு குடிமகனுக்கும், சிறுபான்மை வகுப்பினருக்கும் உரிய அடிப்படை அரசியல் உரிமைகள் பறிக்கப்படுதல்.

3) சமூக ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

கொதிக்கும் நீரின்மீது மிதக்கும் அசுத்த நுரையாக மலேசிய இந்தியர்களில் உழைக்கும் வர்க்கத்தினரின்மீது பல்வகையான முத்திரைகளைக் குத்தி அவர்களை ஒதுக்கி வைத்தல். மலேசிய இந்தியர்களின்மீது பொதுவாக நிறுவப்பட்ட சில மதிபீடுகள் யாதெனில், கூலிகள், குடிகாரர்கள், நம்பிக்கையற்றவர்கள், கறுப்பர்கள், அசுத்தமாகவும் துர்நாற்றமும் வீசக் கூடியவர்கள், பிறரை நம்பி சார்ந்திருப்பவர்கள், மற்றும் ஏழ்மை என்ற ஒரே காரணத்தினால் இன்னும் சில முத்திரைப் பெயர்களை இவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலும் மலேசிய இந்தியர்கள் குறித்த மற்றுமொரு வேடிக்கையான மதிப்பீடானது என்னவென்றால், மலேசிய இந்தியர்கள் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால், அவர்கள் மற்ற இனங்களைக் காட்டிலும் தரத்தில் சற்று தாழ்ந்தவர்களாம்.

பட்டியல் நீண்டுபோகும் பல தடைகளை உள்வாங்கிக் கொண்டு போராடும் ஒரு ஏழைச் சமூகம், தன்னை உயர்த்திக் கொண்டு தானும் மனிதன்தான் என்ற பெருமையோடு முன்னேறிச் செல்வதானது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. வாய்ப்புகளைப் பெறவும், பயன்படுத்தவும், மேம்படுத்திக்கொள்ளவும் மறுக்கப்பட்ட ஏழை மலேசிய இந்திய சமுதாயம் தன்னுடைய முக்கிய அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட வழியில்லாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

நான் மேற்குறிப்பிட்டப்படி ‘ஓரங்கட்டப்படுதல்’ எனும் திட்டங்களின் பிரிவுகளை ஒவ்வொரு கூறாக எனது தொடர் கட்டுரைகளின்வழி தெளிவுற விளக்கிக் காட்டவுள்ளேன். சமூகவியல் அடிப்படையில் ‘ஓரங்கட்டப்படுதல்’ ஏன் நிகழ்கிறது என்பதனை மேலும் விரிவாக விவாதிக்கவுள்ளேன். காலங்காலமாக மலேசிய இந்தியர்களின் நிலைமையினை மையப்படுத்தி எழுந்த பலவிதமான அலுப்புத் தட்டுகின்ற காரணங்களை உடைத்தெறிந்து, மலேசிய சமூகத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள் இன்று வகிக்கும் பங்கிற்கு மூலகாரணம் குறித்தும் எழுதவிருக்கிறேன். நிச்சயமாக இத்தனைக்கும் நாம் இந்தியர்கள் / தமிழர்கள் என்ற ஒரே காரணம் அல்லது நமக்குள் உறைந்திருப்பதாக பேசப்படும் இனவழி மரபும் அதன்மீது குத்தப்படும் முத்திரையும் நம்மை இந்நிலைக்கு இட்டுச் செல்லவில்லை. மலேசிய இந்தியர்கள் / தமிழர்கள் தாழ்ந்துபோன தரமும் இல்லை. நடப்பனவற்றைக் கண்டால் ஒருவேளை நம்மை நம்பக் கூடச் செய்துவிடும். அனைத்திற்கும் ஒரு நாட்டின் அரசியல் சார்ந்த பொருளாதாரமே காரணமென நான் துணிகிறேன்.

தொடர்ந்து வாருங்கள்...

திரு.நரகன்

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP