உலு சிலாங்கூர் வாக்காளர்களுக்கு மனித உரிமைகள் கட்சி வழங்கும் அறிவுரை – வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளருக்கு மட்டுமே வாக்களியுங்கள், வெற்று வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளருக்கு வாக்களிக்காதீர்கள்
இவ்வாண்டிலேயே பல நம்பிக்கை வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும் காலமாக உலு சிலாங்கூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் விளங்குகின்றது. இம்முறை உலு சிலாங்கூர் மக்கள் இருபக்க அரசியல் கட்சிகளிடமும் விவேகத்துடன் காயை நகர்த்திக்காட்ட வேண்டும். இல்லையெனில், வெற்று வாக்குறுதிகளையும் பொய்யான தேர்தல் பரப்புரைகளை மட்டுமே உலு சிலாங்கூர் மக்கள் பெறப்போவது உறுதி.
வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளர்களுக்கே இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.
அண்மையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் தனது வாராந்திர ஆட்சிக்குழு கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் ஓர் அறிக்கை விடுத்திருந்தார். அதாவது அரசாங்க நிலங்களில் 15 வருடங்களாக வசித்துவரும் 1 லட்சம் புறம்போக்கு குடிசைவாசிகள் மற்றும், தற்காலிக குடியிருப்பு லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு சிலாங்கூர் மாநில பக்காதான் அரசு நிலப்பட்டா வழங்கவுள்ளதாகவும், அதே சமயம் கூடிய விரைவில் சிலாங்கூர் மாநிலத்தில் நிலவிவரும் நிலம், வழிப்பாட்டுத் தளங்கள், பள்ளிகள் மற்றும் சாலைகள் குறித்த பிரச்சனைகளுக்கு மாநில பக்காதான் அரசு தீர்வு காணவிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
நில விவகாரம் குறித்த வாக்குறுதியானது பக்காதான் மாநில மந்திரி புசாரின் வாக்குறுதியாகும்.
உண்மையிலேயே மலேசிய இந்திய ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் யாதெனில், அவர்களது பெயரிலேயே சொந்த நிலப்பட்டாக்கள் கிடைக்கப்பெற வேண்டும், தேசியப் பள்ளிகளைப் போலவே தமிழ்ப்பள்ளிகள் அனைத்திற்கும் சொந்த நிலங்களும் நிலப்பட்டாக்களும் வழங்கப்படவேண்டும், வழிபாட்டுத் தளங்கள் உள்ள நிலங்கள் உள்ளபடியே மக்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும். இவையனைத்தும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் நடக்க வேண்டும். இதனைத் தவிர்த்து எடுக்கப்படும் வேறெந்த முடிவுகளும் நிச்சயம் மாற்றத்தினைக் கொண்டுவரப்போவதில்லை. இடைத்தேர்தலுக்குப்பின் வழக்கம்போல் நாம் காதால் கேட்டுப் புளித்துப்போன வெற்று வாக்குறுதிகள்தான் எஞ்சியிருக்கும்.
சாயிட் இப்ராஹிம் தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்
மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதித்து மனித உரிமைகள் கட்சி முன்வைக்கும் கோரிக்கைகள் நிறையவே உள்ளன. ஆனால், முதல் கோரிக்கையாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப் பள்ளிகளில் சொந்த நிலம் இல்லாத தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலப்பட்டாக்களைக் கொடுங்கள். ஆனால் இதற்கு நாங்கள் காத்திருக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரிந்த ஒன்றே.
மஇகாவும் அம்னோவும் இணைந்து வழங்கியுள்ள வாக்குறுதிகளில் ஒன்றான மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்களின் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதாகும். இந்த வாக்குறுதியானது இடைத்தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றப்படாவிட்டால் அனைத்தும் தேர்தலை முன்னிட்டே வைக்கப்படும் வெற்று வாக்குறுதிகளாகிவிடும். தேர்தல் முடிந்த பின்பு, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு எந்தவொரு காரணத்தையும் அவர்கள் கூறலாம். ”மைக்கா நிறுவனத்திற்கு இத்தனை கடன்கள் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது” அல்லது பங்குகளை அதிகப்படியாக நிர்ணயத்திருக்கின்றனர். எங்களால் 1 ரிங்கிட்டிற்கு 25 சென் மட்டுமே வழங்க முடியும், காரணம் பல எதிர்மறை விளம்பரங்களால் மைக்கா நிறுவனம் கடுமையாக பாதிப்பிற்க்குள்ளாகிவிட்டது” என காரணங்களை அடுக்கி தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பித்துக் கொள்ளலாம்.
மலேசிய இந்திய ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் யாதெனில், மைக்கா பங்குதாரர்கள் ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு முன்பே போட்டப் பணங்களை மீண்டும் பெற வேண்டும். மஇகா/அம்னோ அப்பணங்களை ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பங்குதாரர்களுக்கு கொடுக்காவிடில், இனி எப்பொழுதும் அப்பணம் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.
கமலநாதன் தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்
மனித உரிமைகள் கட்சியின் நிலைப்பாடு என்னவெனில், 1984-ஆம் ஆண்டில் ரிம 1 வெள்ளிக்கு விற்கப்பட்ட பங்கின் தற்போதைய (2010) மதிப்பு ரிம 4 வெள்ளியாகும். எனவே, மைக்கா பங்குதாரர்களுக்கு தற்போதைய மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு பங்கிற்கு 4 வெள்ளி வீதம் பணம் கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள எந்தவொரு பட்டயக் கணக்கரிடமும் இவ்விடயம் குறித்து விசாரித்தால் இதே பதிலைத்தான் அவர்களும் கூறுவார்கள். தற்போது ஒரு பங்கிற்கு ரிம 1 வெள்ளி மட்டுமே கொடுக்கப்படும் என்று மஇகா அறிவித்துள்ளது. அப்படியென்றால் உண்மையான மதிப்பிலிருந்து 25 சதவிகிதம் மட்டுமே பங்குதாரர்களுக்கு வழங்கப்படுமாம். அம்னோ 106 மில்லியனுக்கு வாங்கப்போவதாகக் கூறும் மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை தற்போதைய மதிப்பை அடிப்படையாகக் கொண்டு 450 மில்லியனுக்கு வாங்குவதே நியாயம்.
இந்தத் தொகையானது பல பில்லியன் மதிப்பிலான நிறுவனங்களை அரசாங்கம் மீட்டெடுத்த தொகையைவிடச் சிறியதுதான். சில நிறுவன்ங்களை உதாரணமாகச் சொல்லலாம். மல்டி பர்பர்ஸ் ஹோல்டிங்ஸ், கொண்சோர்டியும் பெர்காபாலான் பெர்ஹாட், முன்னால் பிரதமர் மகாதீரின் மகன் நிர்வகிக்கும் நீர்க்கப்பல் போக்குவரத்து நிறுவனம், மலேசிய விமான போக்குவரத்து நிறுவனம் (மாஸ்). ரெனோங் பெர்ஹாட், தேசிய கழிவு நிர்வகிப்பு நிறுவனம், கோலாலம்பூரின் இரு பொது போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள் ஆகியன இப்பட்டியலில் அடங்கும். சிங்கபூரின் ”மோகன் ஸ்டான்லி” நிறுவனத்தில் தென்கிழக்காசிய பொருளாதார ஆய்வியலாளராக பணியாற்றும் டேனியல் லியன் கூறுகையில், மலேசிய நாடு கடந்த 1980-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே சுமார் ரிம 100 பில்லியன் வெள்ளியை இழந்திருக்கிறது என்கிறார். இந்தத் தொகையோடு ஒப்பிடுகையில் 450 மில்லியன் பெரிய தொகை என்று கூறிவிடமுடியாது.
சைட் இப்ராஹிமா அல்லது கமலநாதனா? – வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளரையே தேர்ந்தெடுங்கள்
கொடுத்த வாக்குறுதிகளை ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் நிறைவேற்றாத எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காதீர்கள்.
வாக்குத் தேர்வினை சுலபமாக வைத்துக் கொள்ளுங்கள்
நரகன்.
Read more...