மரத்தடியில் பிறந்த மறத்தமி்ழர்கள் (தொடர் 5)

>> Monday, March 31, 2008

அச்சம் இருக்க வேண்டும்

சட்டங்களை மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் அங்கத்தினர்களுக்கும் தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். வெறும் கைத்தூக்கிகளாகவும் தனிமனித துதிபாடுபவர்களாகவும் அங்கத்தினர்கள் இருக்கக்கூடாது.

அப்போதுதான் நேர்மையான தலைவர்கள் உருவாவார்கள். வெறும் வாரிசு தலைமைத்துவ முறைகள் தகர்க்கப்படும். வாரிசுகளாக இருப்பினும் அவர்கள் உண்மையான தியாகிகளாக இருந்தால்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர் என்னும் நியதி உறுதிபடுத்தப்படும்.

எதிர்காலத்தில் எத்தனை தேர்தல்கள் நடந்தாலும், எந்தக் கட்சி வென்றாலும், எந்தத் தரப்புத் தோற்றாலும், நிரந்தரமான வெற்றி தேச அமைதிக்கும் நிரந்தரமான தோல்வி இன, மதப் பிளவுக் கொள்கைகளுக்கும் ஏற்பட வேண்டும் என்பதே 1969 மே 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை துன்பப்பட்ட என்போன்றவர்களின் பிரார்த்தனை!

இன, சமய ஒற்றுமையைப் பொருத்தவரை நம் நாட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் நகர்ப்புற மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்திருக்கின்றனர்! ஒருவர் தலைமைத்துவத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கை முறையே நம் நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது!

இந்தியர்கள் இந்தியத் தலைவர்கள் மூலமாகவும் சீனர்கள் சீனத்தலைவர்கள் மூலமாகவும், மலாய்க்காரர்கள் மலாய்க்காரத்தலைவர்கள் மூலமாகவும்தான் அரசாங்கத்தை அணுக முடியும் அனுகூலங்களை அடைய முடியும் என்னும் பழைய கொள்கைக்குப் பாக்குப் பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த கங்காணி முறையையும் மாற்றி அமைத்து தோட்டத்தொழிலாளர் வாழ்க்கை முறையை தேசம் முழுவதும் அமுல்படுத்துவதே நல்லது!

அரசியலில் மட்டுமல்ல எத்துறையிலும் வெற்றியும், தோல்வியும் வெயிலும் மழையும் போல! பெய்வதும் காய்வதும் நிரந்தரமல்ல! இன்றுத் தோல்விப் பாதையை எதிர்நோக்கியுள்ள ஆளும் பாரிசானில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளும் தோல்வியிலும் வெற்றியிலும் துவைத்து எடுக்கபட்டவையே!

ஒருகாலத்தில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட டேவிட்டிலிருந்து கங்கா நாயர்வரை வெற்றிக்கொடி நாட்டினர். பின்னர் தோல்வி அவர்களைத் துரத்தியது! இன்று பாரிசானுக்குப் பரிதாப நிலை! ஏதிர்காலத்தில் இவர்கள் இழந்த வெற்றியை மீண்டும் பெறலாம்.

இதுதான் ஜனநாயகம்! அரசியல்! தோல்வியில் துவளாதவர்களே வெற்றிப்பாதையில் வீறுநடை போட முடியும்!

லிம் குவான் எங்கும், அன்வாரும் தோல்விகளையும் சிறைக்கோட்டையையும் கண்டு துவண்டிருந்தால் இன்று வெற்றிக் கனியைத் தட்டி பறித்திருக்க முடியாது!

தமி்ழர் கதை தொடரும்...

பாவலர் சங்கு சண்முகம்

Read more...

மரத்தடியில் பிறந்த மறத் தமி்ழர்கள்! (தொடர் 4)

இவரின் தந்தை திரு.கைலாசம் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தினராக இருந்தவர். பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.பிக்கும், எஸ்.பி.எஸ்.சுக்கும் கைலாசம் என்றால் சிம்மசொப்பனம். தலைவர்களுக்குத் தர்ம சங்கடத்தை தரும் கேள்விகளை எல்லார் முன்னிலையுலும் கேட்கத் தயங்காதவர்.

இந்த ரமணியின் தம்பி ஜெயபாலன் மி்ஷின்மேனாக வேலைச் செய்தார். தீவிர முருக பக்தன். தைப்பூச திருநாளுக்காக பத்துமலையில் தொண்டு செய்து கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து அடிபட்டு மி்க இளம் வயதில் காலமானார்.

சி.இ.பி.யில் வேலை செய்த ரமணி மற்றும் சில இளைஞர்களுடன் அக்கட்டடத்தின் மேல்மாடியில் தங்கி இருந்திருக்கிறார். அவருடன் போய் அந்த இளைஞர்களுடன் வானும் அடுத்த மூன்று நாட்களை அங்கேயே கழித்தேன். மூன்றாவது மாடியில் தங்கியிருந்த ஒரு சீனக் குடும்பத்தினர் எங்களுக்கெல்லாம் அந்த மூன்று நாட்களும் சாப்பாடு கொடுத்ததும், தங்கள் வீட்டு ஐஸ்பெட்டியைக் காலி செய்ய எங்களை அனுமதித்ததும் எனக்கு ஆச்சர்யத்தைத் தரவில்லை. ஆபத்துச் சமயத்தில் மனித கர்வமும் மாறுபட்டே போகின்றன.

பகல் நேரத்தில் பங்சார் ரோட்டில் நடந்த பல சம்பவங்களை மாடி ஜன்னல் வழியாகப் பார்த்தோம். அவை இன்றும் என் நெஞ்சில் ஆறாத காயங்களாகவே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குப் பின்னர் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது ஓர் இராணுவ லோரியில் ஏறி கம்போங் குறிஞ்சி வந்து சேர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கடைகள் பல எரிக்கப்பட்டுத் தரைமட்டமாகிக் கிடந்தன.

இயற்கை மனிதனுக்கு எல்லாச் செல்வங்களையும் தந்திருக்கிறது. அனுபவிக்க ஆயிரமாயிரம் இன்பங்களைத் தந்திருக்கிறது. மனிதர்களான நாம் நமது அகம்பாவத்தாலும் பொறாமையாலும் மன ஊனத்தாலும் அனைத்தையும் பாழ்படுத்திக் கொள்கிறோம்.

யானைகள் மோதிக்கொள்ளும் போது புற்கள் மடிவதைப் போல, சுயநல அகம்பாவ அரசியல்வாதிகளின் மோதலில் அப்பாவி மக்கள் அல்லல்படுகின்றனர்.

இன, நிற, மத பேதங்கள் சாதாரண மக்களிடையே இல்லை. அவர்கள் உள்ளத்தில் இருப்பதும் எதிர்பார்ப்பதும் உணவு, உடை, இருப்பிடம் இவைதான். ஆனால் இந்த அப்பாவி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு இன நிற மத பேதங்களைத் தூண்டிவிட்டு சில அரசியல்வாதிகள் குளிர்காய்கின்றனர்.

உலகம் முழுவதும் இன்றும் நடைப்பெற்றுவரும் சூழ்ச்சிகள் மலேசிய மக்களிடம் தோல்வி கண்டுவிட்டது என்பதை அண்மையப் பொதுத்தேர்தல்களும் அதன் முடிவுகளும் காட்டின. இந்தியா உலகில் மி்கப்பெரிய ஜனநாயக நாடு எனப் பெயர் எடுத்தது போல், மலேசியா மி்கச் சிறந்த ஜனநாயகச் செயல்முறை தேசம் என இத்தேர்தல் மூலம் பெயரெடுத்துவிட்டது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கூட நாம் கற்பனை செய்து பார்த்திராத இந்த ஜனநாயக நேர்மைமி்க்க தேர்தலுக்குக் காரணமானவர் பிரதமர் டத்தோ சிறீ அப்துல்லா அகமது படாவி என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அவற்றைச் சமாளித்து வெற்றி பெற முடியும் என்பதையும் மலேசிய மக்கள் இன பேதங்களைக் கடந்து முடிவெடுக்கக் கூடியவர் அன்வார் இப்ராகிமையும் நாம் மறந்துவிட முடியாது.

தலைவர்கள் வரலாம் போகலாம். நாடும் மக்களும் என்றும் இருப்பார்கள். இன்றைய பெரிய பிரச்சனை நாளைக்குச் சிறிய பிரச்சனையாகும். பிரச்சனைகளுக்காக ஒற்றுமையை அமைதியைச் சீர்குலைத்து விடக்கூடாது. அதிகம் போகவேண்டாம். ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் தமி்ழ்ப்படம் ஒளிபரப்பப்படாதா என்பதும் பெரும் பிரச்சனையாக இருந்தது. தமி்ழ்ப்படம் ஒன்றை ஒளிபரப்ப ஒப்புக் கொள்ளச் செய்து விட்டதை மாபெரும் சாதனையாகப் பத்திரிக்கைகளில் தங்கள் படத்துடன் செய்திகள் வெளியிட்ட அரசியல்வாதிகளையும் நாம் கடந்த காலத்தில் சந்தித்திருக்கின்றோம். மக்களும் அந்தச் சாதனையையே தங்கள் சமுதாயத்தின் வெற்றி எனக் கருதிய காலம் ஒன்றும் அன்று இருந்தது.

இன்று என்ன ஆச்சு?

இரவும் பகலும் நமது தொலைக்காட்சிகளில் தமி்ழ்ப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. பார்த்துப் பார்த்துச் சலித்து போய்விட்டது நமக்கு. அன்று இந்தச் சினிமா படப்பிரச்சனையை பெரிதாக்கி மோதிக் கொண்டிருந்தால் இன்றைய சமுதாயம் நம்மைக் கண்டு சிரித்திருக்காதா?

இப்படித்தான் எல்லாப் பிரச்சனைகளுமே மக்களின் மன பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் சக்திகளுக்குச் சமுதாயம் ஒரு போதும் இடம் தரக்கூடாது. அமைதியான வாழ்க்கைக்காகத்தான் அனைத்து நியமங்களும், நியமனங்களும் அமைதியையும் சுதந்திர வாழ்க்கையையும் நாம் எதற்காகவும் பணயம் வைக்கக் கூடாது. எந்த ஒரு தலைவரும் நமக்குச் சாசுவதம் அல்ல! நிடரந்தரம் இல்லை. புதிய புதிய தலைமைத்துவங்களுக்கும் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஊக்கம் கொடுப்போம். அரசியல் துறை மட்டுமல்ல! தொழ்ற்சங்கத் துறை கூட்டுறவு சங்கத் துறை மற்ற சமுதாய, சமய இலக்கியத்துறை அனைத்திலும் செக்குபோல் ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் போக்கு மாறவேண்டும். ' கங்காணி' மனப்பானமையும் நிர்வாக முறையும் அடியோடு அழித்தொழிக்கப்பட வேண்டும்.

இந்த மாறுதல்கள் ஏற்பட மக்களிடையே சிந்தனை மாற்றம் தேவை!

அத்தகைய மாற்றங்களுக்கு மலேசிய மக்கள் இப்போது தயாராகிவிட்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருப்பவர்களும் இந்தப் புத்தெழுச்சியைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அங்கத்தினர்கள் வெறும் கைத்தூக்கிகளாக அமர்ந்திருந்து ஆண்டு பேராளர் கூட்டங்களில் அனைவரும் சிரிக்கச் சிரிக்க உரையாற்றி வந்துவிட்டால் போதாது! சிந்தித்துச் செய்யும் விதத்தில் பேச வேண்டும் சிந்திக்க வேண்டும். எத்தனையோ இயக்கங்கள் நம்மி்டையே இருக்கின்றன. இலட்சக்கணக்கானவர்கள் அங்கத்தினர்களாக இருக்கின்றனர். ஆனால் அந்தந்த இயக்கங்களின் அமைப்புச் சட்ட விதிமுறைகளை எத்தனை பேர் படித்திருப்பர்?

அண்மையில் நான் சார்ந்திருக்கும் ஒரு கூட்டுறவுக் கழகத்தின் அங்கத்தினர்கள் பலரிடம் அக்கழகத்தின் அமைப்புச் சட்டவிதி முறைகளைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டேன்.
அதை அவர்கள் பார்த்தது கூட இல்லை என்றனர். சட்டங்களே தெரியாவிட்டால் அச்சட்டங்களைத் தலைவர்கள் மீறுகிறார்களா இல்லையா என்பதை எப்படி அறிய முடியும்?

தமி்ழர் கதை தொடரும்...

பாவலர் சங்கு சண்முகம்

Read more...

பினாங்கு தியான ஆசிரமம் - சுய அறிவாலயம்

படக்காட்சி 1



படக்காட்சி 2 (தொடர்ச்சி)


Tamil - Free videos are just a click away

பினாங்கு வாழ் தமிழர்கள் இந்த சுய அறிவாலயத்திற்கு உதவி புரியலாம், அல்லது தங்களுடைய பிள்ளைகளை இங்கு அனுப்பி தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை தெரிந்து நல்ல மனிதர்களாக உருவாக்க வழி காணலாம்.

தற்பொது புக்கிட் குளுகோரிலிருந்து ஆசிரமம் ஐலண்ட் கிளேட்ஸ் எனும் இடத்திற்கு மாற்றலாகியுள்ளது. புதிய இடத்தின் வரைப்படத்தைக் காண கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : தியான ஆசிரம பினாங்குக் கிளை

Read more...

புந்தோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் பதவி விலகல்..!!!


பொதுதேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது ச.செ.கா கட்சி பேரா மாநில ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதாக, பேராக் இந்தியர்களுக்கு வாக்குறுதி அளித்ததை மறந்துவிட முடியாது.

ஆனால் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டனர் ச.செ.க வினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாரப்பூர்வமாக புந்தோங் தொகுதி மாநில சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் தனது பதவியிலிருந்து விலகியிருக்கிறார். பேராக் மாநில ஆட்சிக் குழுவில் ஓர் இந்தியருக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தது இந்திய மக்களுக்கு பேரிடியும் பெருத்த ஏமாற்றமும் ஆகும் என ச.செ.க கட்சி தேசிய செயளாலர் லிம் குவான் எங்கிற்கு அவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



திரு.சிவ சுப்பிரமணியம் அவர்களின் பதவி விலகலும் இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிடியாகும். ஏற்கனவே பேராக் மாநில ஆட்சிக்குழுவில் இந்தியர்களுக்குப் போதிய இடம் கிடைக்காமல் வருத்தப்பட்ட சமூகத்திற்கு மீண்டும் ஒரு பேரிடியாக மாநில சட்டமன்ற உறுப்பினரான ஒரு இந்தியரை இன்று இழக்க நேரிட்டுள்ளது.

மலேசியாவிலேயே புந்தோங் தொகுதிதான் இந்தியர்களின் வாக்குகள் பெரும்பான்மை உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியர்களின் இரும்புக் கோட்டையான புந்தோங் தொகுதியைப் பற்றி அறியாதவர்களுக்கு, இத்தொகுதியைப் பற்றி ஒரு பதிவை வருங்காலத்தில் இடுகிறேன்.

* இன்று பதவி விலகியதாகக் கூறிய திரு. சிவ சிப்பிரமணியம் சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பின் தனது பதவி விலகலை மீட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து புந்தோங் தொகுதி மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவியில் நீடிப்பார். இதேப் போன்று பொதுத் தேர்தல் நடைப்பெறுவதற்கு முன்பு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரான ஃபோங் போ குவான் பதவி விலகுவதாக அறிவித்தப் பின் சில நாட்களுக்குப் பின் தனது முடிவை மாற்றிக் கொண்டு பதவி விலகலை மீட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

Read more...

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் எட்டு)

>> Sunday, March 30, 2008



(இறுதி அத்தியாயத்தை இப்பொழுதுதான் எழுத நேரம் கிடைத்துள்ளது, அதுவும் ஒரு வாசகரின் நினைவூட்டலுக்குப் பின்புதான் இறுதி அத்தியாயத்தின் கதை நினைவுக்கு வந்தது. காலம் கடந்து எழுதுவதற்கு வாசகர்கள் மன்னிக்கவும்.)

கதை தொடர்கிறது...

கொடுக்கப்பட்ட சிறைச்சாலை உணவை பசி மயக்கத்தில் ஒரு பதம் பார்த்துவிட்டு, சற்று நேரம் ஓரிடத்தில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தேன். அதே கூடாரத்தில் திரு.மாணிக்கவாசகம் ( தற்போதைய காப்பார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ) தனியாக அமர்ந்து ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவரின் தனிமையை ஏன் கெடுப்பானேன் என்று அவரிடம் பேச்சுக் கொடுக்க தயங்கினேன். சில நிமி்டங்கள் கழித்து, மீண்டும் ஒரு 'பிளேக் மரியா' லாரியில் இந்தியர்கள் கொண்டு வரப்பட்டனர். லாரியிலிருந்து இறங்கியவர்கள் 'மக்கள் சக்தி' என கோஷமி்ட, நாங்களும் அவர்களை கோஷமி்ட்டு வரவேற்றோம்.

இப்படியே சில லாரிகளில் இந்தியர்கள் வந்த வண்ணமாயிருந்தனர். வெயிலின் சூட்டில் மி்கவும் சோர்ந்து போயிருந்த வேளை, போலீஸ் அதிகாரியொருவர்,

"சரி, காலைல வந்தவங்க எல்லாரும் வந்து ஐ.சி எடுத்துகுங்க.."

எங்களையும் சேர்த்துதான் கூப்பிடுகிறார் என நினைத்து எழுந்தேன்.

"விடிய காலைல வந்தவங்க மட்டும் வாங்க, பஸ்ல வந்தவங்க வேட் பண்ணுங்க, உங்களோட ஐ.சி இன்னும் கொடுக்கல.."

நண்பர் கலையரசு தனது அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். சற்று நேரத்தில் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. கலையரசு செல்வதற்கு முன், நானும் அவரும் மற்றும் மகேந்திரனும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். விடியற்காலை 3 மணியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் மாலை மணி 4 அளவில் விடைப்பெற்றுச் சென்றனர்.

எஞ்சிய நாங்கள் மீண்டும் சோர்வோடு, எப்பொழுது எங்கள் அடையாள அட்டை வருமென காத்திருந்தோம். அரைமணி நேரம் கழித்து ஒரு போலீஸ் அதிகாரி ஒருப் பை நிறைய உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து,

" செமுவா மாக்கான், இனி பெகாவாய் புஞா.. டியா ஓராங் தாக் மாக்கான், அம்பேல்"

அதிகாரிகளுக்கு வழங்கவிருந்த உணவுப் பொட்டலங்கள் மி்ச்சம் இருந்ததால் எங்களிடம் கொண்டு வந்து நீட்டப்பட்டது. பொட்டலத்தை திறந்து பார்க்கும் பொழுது கோழி, பிரியாணி சாதம் என அமர்க்களமாக இருந்தது. அதையும் ஒரு வெட்டு வெட்டினோம்.

உணவருந்தி சற்று நேரம் கழிந்ததும், திரு.மாணிக்கவாசகம் அவர்களின் பெயர் வாசிக்கப்பட்டது. அவர் முன்னே சென்றதும் அவரின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டு வேனில் ஏற்றப்பட்டார். நாங்கள் அனைவரும் மக்கள் சக்தி என கோஷமிட திரு.மாணிக்கவாசகமும் பதிலுக்கு சந்தோஷமாகத் தலையாட்டினார். வேன் மின்னல் வேகத்தில் பறந்தது.

மாலை 4.45 மணியளவில் எங்கள் பெயர் வாசிக்கப்பட்டு அடையாள அட்டைகள் திரும்பக் கொடுக்கப்பட்டன. அப்பொழுது அங்கிருந்த ஒரு இந்திய போலீஸ் அதிகார்,

" தோ பாருங்க.. உங்கள அக்தா கே.கே 3 கீழே புடிச்சு வெச்சிருந்தாங்க, அதுகான அதிகாரம் எங்ககிட்ட இருக்கு.. பெரியவரு உங்கமேலெ கருணை வெச்சு உங்கமேலே எந்த ஒரு கேஸும் போடாம அனுப்புறாரு... பாக்க போனா அவருக்குதான் நீங்க தேங்க்ஸ் சொல்லனும்.."

என்று ஒரு மலாய்க்கார அதிகாரியை சுட்டிக் காட்டினார்.

அப்பொழுது கூட்டத்தில் ஒரு சிலர் "தெரிமா காசே பாஞாக் இன்சேக்" என நன்றிக் கூறிக் கொண்டனர். ஆனால் கூட்டத்திலொருவர்,

"இவனுங்களுக்கு எதுக்கு நன்றிலாம் சொல்லிட்டு, சொல்லாதீங்கலா..! பேசாமே ஐ.சி ய வாங்கிட்டு வாங்க.. ஒரேடியா நடிப்பானுங்க..!"

எனக்கும் இது சரியென்றுபட்டது. நன்றாகவே போலீஸார் எங்களைத் தாஜா செய்கின்றனர் எனத் தெரிந்தது.

அடையாள அட்டையைப் பெற்றப் பின் நாங்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டோம். சோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்ட எங்கள் பொருட்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. செல்லும் வழியில் பேரணி நடந்த இடத்திற்குச் செல்லக்கூடாது என போலீசார் எங்களை எச்சரித்து விடுவித்தனர். எங்களுக்கு பிறகு வந்த மற்ற ஒரு குழுவினர் எங்களை உற்சாகமூட்டி வழியனுப்பினர். எங்கள் பேருந்தில் ஏறும் சமயம், ஒரு விரைவுப் பேருந்து புலாபோலினுள் அழைத்துவரப்பட்டது. அவர்கள் அமைதி பேரணியில் கலந்துக் கொள்ள தாமதமாக வந்தவர்கள் என தெரிந்துக் கொண்டோம். அவர்களை இன்னும் எத்தனை மணி நேரம் தடுத்து வைப்பார்களோ என மனதில் எண்ணிக் கொண்டே பேருந்து ஏறினேன்.

பேருந்து புலாபோல் நுழைவாயிலை நெருங்கியதும், அங்கு ஒரு சிலர் நின்றுக் கொண்டிருந்தது பார்வைக்குத் தென்பட்டது.

"அண்ணே, பஸ்ச கொஞ்ச நேரம் நிப்பாட்டுங்க.."

என ஒருசிலர் ஓட்டுநரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பேருந்து புலாபோல் நுழைவாயிலில் ஓரங்கட்டப்பட்டது. அப்போது எனக்கு இணையம் மூலம் நன்கு அறிமுகமான சில முகங்கள் தென்பட்டன. அவர்களில் இராஜாராக்ஸ் வலைப்பதிவர் இராஜா, 5 தலைவர்களை விடுவிக்கக் கோரி முதன்முறையாக 5 நாட்கள் உண்ணா நோன்புப் போராட்டத்தை மேற்கொண்ட சிங்கப்பூர் தமி்ழன் சீலன் பிள்ளை போன்றோர் அங்கு நிற்கக் கண்டேன். இராஜா கையில் புகைபடக் கருவியோடு நின்றுக்கொண்டிருந்ததை காண முடிந்தது.

அமைதிப் பேரணியில் சந்திக்கலாம் என இராஜாவிடம் கூறியது நினைவுக்கு வந்தது. பேருந்து படிக்கட்டுகளில் நின்றுக் கொண்டு இராஜாவை நோக்கி கையசைத்தேன், அவர் புகைபடங்கள் எடுப்பதில் மும்முரமாக இருந்ததால் என்னை கவனிக்கவில்லை.


பேருந்து மீண்டும் புறப்பட்டது. வழிநெடுக சாலைகளிலும் உணவுக் கடைகளிலும் இந்தியர்கள் பேருந்தைப் பார்த்து கையசைத்தனர். பேருந்து மீண்டும் நின்றது. பேருந்தினுள் இரு புது முகங்கள் தென்பட்டன..

"அண்ணே, பஸ்ச மி்ஸ் பண்ணிட்டோம், சுங்கை பூலோ வரைக்கும் லிப்ட் கிடைக்குமா"

ஓட்டுநர் சம்மதம் தெரிவிக்க அவர்களையும் ஏற்றிக் கொண்டு பேருந்து மி்ன்னல் வேகத்தில் பறந்தது. மாநகரில் எங்கும் நிற்காமல், நெடுஞ்சாலை எடுத்து சுங்கை பூலோ ஓய்வு எடுக்கும் இடத்தில் பேருந்து நின்றது. அனைவரும் நன்றாகக் களைப்பாறினர். அதன் பின் பேருந்து மீண்டும் வடக்கு நோக்கி விரைந்தது. இரவு பத்து மணியளவில் புக்கிட் கந்தாங் ஓய்வெடுக்கும் இடத்தில் பேருந்து நின்றது. அனைவரும் ஒன்று கூடினோம். ஒரு பெரிய வட்டம் பிடித்து நின்று ஒரு சபதம் எடுத்துக் கொண்டோம். இனி, இந்திய சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால், இந்தியர்களாகிய நாம் அவர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்.

பசிக்கு உணவு தேடி கடைகளுக்குப் போனாலும், இந்திய உணவகம் இருந்தால் அவர்களுக்குத்தான் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். விலையை ஒரு பொருட்டாகக் கருதக் கூடாது. சீனர்களைப் போல் இனி எந்த ஒரு காரியத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சபதம் எடுத்தோம்.

அனைவரின் முகத்திலும் ஒரு தெளிவு இருந்தது. பேருந்து ஜூரு கட்டணச் சாவடியை நெருங்கும் போது, பேருந்தில் உள்ள ஒரு பெரியவர்,

" சாமி்வேலு செபராங் பிறை வந்துருக்காராம்..! ஓரே கலவரமா இருக்காம், இப்பதான் என் மகன் போன் பண்ணி சொன்னான்.. "

இப்படிக் கூறிவிட்டு தாம் ஜூரு கட்டணச் சாவடியிலேயே இறங்கிக் கொள்ளப் போவதாகக் கூறி இறங்கிக் கொண்டார்.

பேருந்து பிறையில் ஆட்களை இறக்கிவிட்டு பினாங்குத் தீவிற்கு புறப்பட்டுச் சென்றது. நடுநிசி மணி 12ஐ எட்டியிருந்தது. பேருந்து குளுகோர் இராஜகாளியம்மன் ஆலயத்தின் முன் வந்து நின்றது. அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் கூறிக் கொண்டு பிரிந்துச் சென்றோம். ஒரு குடும்பமாகச் சென்று கஷ்டங்களை ஒன்றாக அனுபவித்ததனால், அவர்களை விட்டு மனம் பிரியவில்லை.

மெதுவாக பூமரத்தம்மன் ஆலயத்தை நோக்கி நடைப்பயின்றேன். ஆலயத்தை நெருங்க நெருங்க மனதில் ஒரு கேள்விக்குறி.

" மோட்டார் வண்டி பாதுகாப்பாக இருக்குமா..?!"

ஆலயத்தை நெருங்கிவிட்டேன்.

காரிருளிலும், ஆலயத்தின் ஒரு பகுதி அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. அந்த மர்ம ஆசாமி்கள் எங்கே என்று கண்கள் மங்கலான வெளிச்சத்தினூடே துலாவி துலாவி பார்த்தன. காணவில்லை. ஆலயத்தின் பின்புறம் சென்றேன், நிறுத்திவைத்த மோட்டார் வண்டி அதே இடத்தில் பத்திரமாக இருந்ததை கண்டதும் நிம்மதி அடைந்தேன். அருகில் ஒரு மேசையில் செங்கல்லை தலையில் வைத்துக் கொண்டு அந்த மர்ம ஆசாமி் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். நன்றி கூறலாம் என நினைத்தேன், ஆனால் எதற்கு வம்பு என்று, மோட்டார் வண்டியைத் திருட வந்தவன் போல், வண்டியை மெதுவாக தள்ளிக் கொண்டு ஆலயத்தின் முன்புறம் சென்று பூமரத்தம்மனை நன்றி உணர்வோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு மோட்டாரைச் செலுத்தினேன்.

இறுதி அத்தியாயம் முற்றும்...

அன்று ஐவருக்காக போராடிய போராட்டத்தின் பயனாக, இன்று ஐந்து மாநிலங்களை ஆளுங்கட்சி இழக்க நேரிட்டுள்ளது. இதுதான் மக்கள் சக்தி! ஒன்றுபடுவோம், செயல்படுவோம்!

போராட்டம் தொடரும்...

Read more...

அரியணை ஏறுகிறது தமிழ் மொழி..


தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு கொண்டுவர நடவடிக்கை

சென்னை, மார்ச் 30- தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கூறினார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் 'குறிஞ்சி முத்தமிழ் மன்றம்' என்ற அமைப்பைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். இந்த மன்றத்தின் ஆண்டு விழா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைப்பெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

பொதுவாகவே மருத்துவர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடைவெளி அதிகம். இப்படிப்பட்ட நிலையில், அறிவியல் தமிழை வளர்க்கும் நோக்கில் தனி அமைப்பை ஏற்படுத்தி அதைத் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது. முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ் அரியணை ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த வகையில் மருத்துவத் துறையிலும் தமிழ் அரியணை ஏறும். மருத்துவத்துறையில் தமிழ்வழியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நான் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். அதற்காக மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களிடம் கொடுத்த வாக்குறுதி கண்டிப்பாக காப்பாற்றப்படும். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் சென்னைக்கு அருகே அலமாதி என்ற கிராமத்தை தத்தெடுத்து மருத்துவச் சேவை செய்து வருகின்றனர். ஒரு கிராமத்தை மட்டுமல்ல, ஏராளமான கிராமங்களை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தத்தெடுத்து சேவையாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

மாணவர்கள் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும். ஏதோ கல்லூரிக்கு போனோம் படித்தோம், சினிமாவுக்குப் போனோம் என்று நின்றுவிடாமல் பொதுவாழ்வுக்காகப் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.

தகவல் : ஞாயிறு நண்பன் (நன்றி)

Read more...

அண்ணாச்சி ஐஸ் வெக்கிறாருயோவ்...


ம.இ.கா தலைவர் சா.சாமிவேலு இன்று, இந்து உரிமைப் பணிப்படைத் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாகக் கூடிய விரைவில் பிரதமர் அப்துல்லாவை தாம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார். இக்கருத்தை ம.இ.கா தலைமையகத்தில், ம.இ.கா தொகுதி தலைவர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்வைத் தொடக்கிவைத்த பின் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

திரு.மனோகரன், மற்றும் திரு.கங்காதரன் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் சிலர் சாமிவேலுவின் உதவியை நாடியதால் அவர் இந்த உதவியைச் செய்வதாகக் கூறியுள்ளார். திரு மனோகரன் கோத்தா ஆலாம் ஷா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாலும், திரு.கங்காதரன் உடல்நிலை குன்றியிருப்பதாலும் இவர்களை விடுதலைச் செயவதற்கு, பிரதமரிடம் சிபாரிசு செய்வதாகக் கூறியுள்ளார். அதோடு, தற்போது லண்டனில் வசித்து வரும் திரு.வேதமூர்த்தியை நாட்டிற்கு திரும்பி வர கேட்டுக் கொண்டுள்ளார். நாடு திரும்பியவுடன் கைது நடவடிக்கையிலிருந்து காக்கப்படுவார் எனவும், இதற்கான உதவிகளை தாம் பிரதமரிடம் பேசிப் பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார்.


திடீரென்று ஞானோதயம் இவருக்கு எங்கிருந்துப் பிறந்தது? சில நாட்களுக்கு முன் ம.இ.காவின் முன்னால் தலைவரும், தனது பரம எதிரியுமான சுப்ராவுடன் இணைந்து, வீழ்ந்துகிடக்கும் ம.இ.காவை தூக்கி நிறுத்தப் போவதாகக் கூறியிருந்தார். இப்போது இ.சாவில் உள்ள நமது தலைவர்களை வெளிகொண்டு வருவதற்கு பிரதமரிடம் சிபாரிசு செய்யுமளவிற்கு இவர் தனது ஆணவப்படியைவிட்டு இறங்கி வந்திருக்கிறார் என்றால் நிச்சயமாக அரசியல் சாணக்கியமாகத்தான் இருக்குமே ஒழிய, இந்திய சமுதாயத்தின் மீது உள்ள பாசமோ, பரிவோ கிடையாது.

இனியும் எந்த அரசியல் சாணக்கியனும், தனது சுயலாபத்திற்காக இந்திய சமூகத்தை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தி வருவானேயானால், சா.சாமிவேலு எனும் சாணக்கியனுக்கு நடந்த அதே கதிதான் அவனுக்கும் நடக்கும். சலுகை, சலுகை என்றே பேசிக் காலம் கடத்திய இவர்களின் வாயில் 'உரிமை' எனும் வார்த்தையை இதுநாள் வரையில் கேட்டதில்லை. இப்படி சலுகையிலேயே இந்திய சமுதாயம் தன்னுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கவேண்டும் என்றால் அப்படியொரு சலுகை நமக்குத் தேவையில்லை. எங்களுக்கு உரிய உரிமையைக் கொடு! அது போதும்!

மக்களை இனி கருவேப்பிலையாக பயன்படுத்தும் நோக்கம் நிறைவேறாது. குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு நிறைவேறாத பல திட்டங்கள் இருக்கின்றன. இத்திட்டங்களைச் செயல்வடிவில் கொண்டுவர ஒழுக்கமான ஒரு அரசியல்வாதியை வேண்டி இந்தச் சமுதாயம் ஏங்கிக் காத்துக் கிடக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

சாமிவேலு, இந்நாட்டில் இந்தியர்கள் மத்தியில் குண்டர் கும்பலை வளரவிட்டது மட்டுமே அவருடைய சாதனை எனக் கூறிக் கொள்ளலாம். நிம்மதியில்லாத வாழ்க்கையை இவர் ஆட்சி காலத்தில் இந்திய சமுதாயம் வாழ்ந்தது போதும். இனியும் சாமிவேலு பதவியில் இருந்தால் ம.இ.கா மீண்டு எழுவது கஷ்டம்..!

Read more...

இன்றைய பதிவிறக்கம்..

மனிதவள இலாகாவின் பயிற்சிக் கழகம் இவ்வாண்டின் தொழிலியல் கல்விக்கான டிப்ளோமா, மற்றும் அடிப்படைச் சான்றிதழ்களுக்கான பயிற்சிகளை நாடு தழுவிய தனது பயிற்சிக் கழகங்களில் வழங்கவுள்ளது. பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு இல்லாத இந்திய இளைஞர்கள், இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பித்து உங்கள் பட்டப்படிப்புக் கனவை நிஜமாக்க ஒரு ஏணிப்படியாக இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். முழுவதும் அரசாங்கத்தினால் நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, ஆர்வமுள்ளோர் முந்துங்கள்...! நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்..!

விண்ணப்ப பாரங்களைப் பதிவிறக்கம் செய்திட இணைய இணைப்பைச் சுட்டுங்கள். ILJTM

Read more...

கூடிய விரைவில் புதிய பிரதமர்..

>> Friday, March 28, 2008


தற்போதைய நிலவரப்படி 36 சபா, சரவாக் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு மாறுவதற்கு சாத்தியக்கூறுகள் மிகுந்து காணப்படுகின்றன. இந்த எண்ணிக்கையானது மலேசிய அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடுவதற்கு போதுமானதாகும். எதிர்க்கட்சிகள் புதிய அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு 30 சட்டமன்றங்கள் தேவையில் இருந்தாலும் தற்போது அவ்வெண்ணிக்கையானது தீபகற்ப மலேசியாவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே தாண்டிவிட்டதாகவும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.


தற்போது சபாவில் 16 சட்டமன்ற உறுப்பினர்களும் சரவாக்கில் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் பாரிசானுடனான தங்கள் நிலைப்பாட்டினை ஒரு உறுதியற்றதாகவே கருதிவருவதாக அவர் மேலும் கூறினார். எனவே கூடிய விரைவில் நாம் ஒரு பிரதமரைப் ( அன்வார் இப்ராகிம் )பெறப் போகிறோம், அதற்கான நாள் 14 ஏப்ரலுக்குப் பிறகு சாத்தியமாகும் என அவர் தெரிவித்தார். அனைவரும் காலத்தை கருத்தில் கொண்டு காத்திருக்கின்றனர். அதற்கான தருணத்தை எட்டிப் பிடிக்கும் வரையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாயை மூடிக் கொண்டு இருக்கின்றனர். நானும் இதுத் தொடர்பாக அதிகம் பேசவிரும்பவில்லை என அவர் நம்பிக்கையோடு தெரிவித்தார்.

எது எப்படி இருப்பினும், நாட்டிற்கு உழைத்த, இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்தினரின் உரிமைகளை தற்போதைய அரசாங்கமாகட்டும் அல்லது வரப்போகும் புதிய அரசாங்கமாகட்டும், காக்கத் தவறி விட வேண்டாம்.

Read more...

மேலவையில் ஐந்து இடங்கள் தேவை, அரசியல் அமைப்பாக ஹிண்ட்ராப்பை அங்கீகரிப்பீர்.

>> Tuesday, March 25, 2008

கோலாலம்பூர், மார்ச் 25-


ஹிண்ட்ராப் தலைவர்கள் ஐவர் இசா சட்டத்தில் கைதாகி நூறு நாட்கள் ஆகிவிட்டது. இம்மாதம் 22ஆம் மற்றும் 23ஆம் தேதி இவர்கள் பற்றி நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டது என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி பத்திரிகைகளுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளார். இவர்கள் கைதாகி தடுப்பு முகாமில் இருப்பது குறித்து உலகளவில் ஆட்சேப கூட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மார்ச் 22ஆம் தேதியன்று சான் பிரான்சிஸ்கோ ஜநா பிளாசாவில் ஆட்சேப கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இசாவை அகற்றுவோம் என்று பல்வேறு கருத்தரங்குகளில் பல்லாயிரக்கணக்கான மலேசியர்கள் கலந்து கொண்டனர். எட்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மக்கள் சக்தி மூலம் ஹிண்ட்ராப் அரசாங்கத்திற்கு தெளிவான செய்தியினை அனுப்பியது. ஐம்பது ஆண்டு காலமாக இந்திய சமூகம் ஓரங்கட்டபட்டு விட்டது. 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் தேதியன்று பிரதமருக்கு வழங்கப்பட்ட 18 அம்ச கோரிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும். ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு ஒரு போதும் மிரட்டலாக இல்லை.பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பு என்பது சுத்த அபத்தமான குற்றச்சாட்டு.


ஹிண்ட்ராப் பேரணியால் இந்திய வாக்காளர்களின் ஆதரவினை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அரசாங்கம் ஹிண்ட்ராப் தலைவர்களை இசா கூட்டத்தின் கீழ் கைதுசெய்ய முடிவு எடுத்தது என்பதை இந்த கருத்தரங்கம் நன்கறியும். ஐவரும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். சட்டவிரோதமான முறையில் கைது செய்தற்காக அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தேர்தல் களத்தில் ஹிண்ட்ராப்பின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஜசெக - கெடிலான் - பாஸ் கட்சிகள் தங்களின் பணியினை ஆற்றவேண்டும். நாடாளுமன்ற மேலவையில் குறைந்தபட்சம் ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். பினாங்கு, பேரா, சிலாங்கூர் போன்ற மாநிலங்களில் துணை மந்திரிபுசார் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.

ஹிண்ட்ராப் ஒரு அரசியல் அமைப்பாக பதிவு செய்யப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கபடவேண்டும். ஹிண்ட்ராப் ஒரு அரசியல் அமைப்பாக பதிவு செய்யப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும். இசா சட்டத்தை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அகற்றுவதற்கு பிரதமர் ஆவன செய்யவேண்டும்.
ஹிண்ட்ராப் மலேசிய இந்தியர்களின் புதிய உரிமைக்குரல் என்ற உண்மை நிலையினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் வேதமூர்த்தி தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். இசா சட்டம் அகற்றப்படவேண்டும் என்ற ஹிண்ட்ராப்பின் தீவிர பிரச்சாரம் தொடரும்.

தகவல் - மலேசிய நண்பன் (நன்றி)

போராட்டம் தொடரும்...

Read more...

மரத்தடியில் பிறந்த மறத் தமிழர்கள்! (தொடர் 3)

மதியாரும் மாமனாரும்

வருங்கால மாமனார் என அப்போது எனக்குத் தெரியாததால், மதியார் வாசலை மிதியாதே என்பதுபோல் அவர் வீட்டுக்குப் போகாமல் பங்சார் ரோட்டை நோக்கி நடந்தேன். வெள்ளைக் கைக்குட்டையை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டேன் சரண்டரின் சின்னமாக.
பங்சாரில் நடு ரோட்டில் சில மோட்டார் சைக்கிள்களும் காடிகளும் எரிக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருந்தன! போலீஸ் காடிகளின் ஓட்டமும் நின்று போய் இருந்தது. ஆன் சென் ரோட்டுப் பக்கமிருந்தும் ஆஜி டோலா கம்பத்துப் பகுதியிலிருந்தும் எதோ ஆரவாரமான சப்தங்களும் கூக்குரல்களும், இனங்காண முடியாத அலறல் சப்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.

இனிமேலும் சாலையில் நடப்பது சரியில்லை என முடிவுக்கு வந்த நான், சாலை ஓரமாக இருந்த இரயில்வே தொழிலாளர் குடியிருப்புகள் ஏதேனும் ஒன்றில் இரவைக் கழிக்கலாம் என்று எண்ணினேன். அப்போதுதான் ராதாமணியின் வீடு அங்கு இருப்பது நினைவுக்கு வந்தது.
அப்போது தமிழர் திருநாள் நாடகங்களில் எங்களுடன் நடித்துவந்தவர் ராதாமணி. பிற்காலத்தில் இவர் புகழ்பெற்ற வானொலி நடிகையானார். பிரபல எழுத்தாளர் பெரி நில பழனிவேலனை மணந்து கொண்டு சிங்கப்பூருக்குச் சென்றார். தமிழை மிக அழகாகப் பேசும் நம் நாட்டு நடிகையரில் முக்கியமானவர்.

இரயில்வே குவார்ட்டர்சில் இருந்த இவர்களது வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினேன் தட்டினேன். திறக்கப்படவில்லை. வீட்டில் யாரும் இல்லையா? அல்லது பயந்துக்கொண்டு திறக்கப்படவில்லையா என்பது தெரியவில்லை.
வேறுவழியில்லை! எப்படியோ நடந்துதான் சென்றாகவேண்டும். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, சாலையைக் கடந்து லீவர் பிரதர்ஸ் பக்கம் வந்து பந்தாய் பகுதியை நோக்கி வேக நடைப்போட்டேன். திடீரென ஒரு கும்பல் கம்பத்துப் பக்கமிருந்து ஓடி வந்து கத்திக் கொண்டே யாரையோ விரட்டிக் கொண்டு பந்தாய் டாலாம் திசையை நோக்கி ஓடியது! இனியும் நடந்து செல்வது பெரும் ஆபத்து! அருகே இருந்தது பூங்கா ராயா ரெஸ்டாரண்டுக்கு ஓடிச் சென்று கதவைப் பலமாகத் தட்டினேன். மீண்டும் மீண்டும் தட்டிய பிறகு இலேசாகக் கதவைத் திறந்து மூக்கைமட்டும் வெளியே நீட்டிக் கொண்டு பார்த்தது ஓர் உருவம்.

விஷயத்தை விளக்கி, இன்று இரவு மட்டும் தங்க இடம் தரும்படி கெஞ்சினேன். மலையாளமும் தமிழும் கலந்து "அடபயம் வாணாம். இப்படியே சி.இ.பி. குள்ளே பூந்து போ நம்ம ஆள்களை ஒண்ணும் செய்யாது!? என்று கூறிவிட்டுக் கதவைப் பட்டென மூடிக்கொண்டார் அந்த மனிதர்.

இதுபோன்ற சந்தர்ப்பத்தில், நகர் முழுமைக்கும் மின்சாரம் விநியோகிக்கும் சி.இ.பி. பவர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்! நகர மின்சார விநியோகத்தைக் கீழறுப்புச் செய்ய எவனோ புகுந்து விட்டான் என என்னைப் போட்டுத் தள்ளிவிட மாட்டார்களா? புத்திசாலித்தனமாக சி.இ.பி பவர் ஸ்டேஷனுக்கு நுழையவில்லை நான்.
அடுத்த கட்டடத்தின் நுழைவாசலில் கம்பி கேட் இல்லை. உள்ளே சென்றேன். கும்மிருட்டு! கரப்பான் பூச்சி நாற்றம். உலகிலேயே எனக்கு இரண்டே இரண்டிற்குத்தான் அதிகப் பயம்! ஒன்று, நம்பவைத்துக் கழுத்தறுக்கும் நாசக்காரர்கள், மற்றொன்று கரப்பான் பூச்சி! வேறு என்ன செய்வது.

'நாயர் பிடிச்ச புலிவாலு!' என்பதுபோல், திரும்பி பிரிக்பீல்ட்ஸை நோக்கிப் போவதும் முடியாது தொடர்ந்து கம்போங் குறிஞ்சியை நோக்கிச் செல்லவும் முடியாது! கலவரத்தில் சிக்குவதைவிட, கரப்பான் பூச்சிகளிடையே உட்கார்ந்திருப்பது உசிதம் எனப்பட்டது.
கட்டடத்திற்குள் நுழைந்தேன். மாடிப்படிகளுக்குக் கீழே படுத்துக்கொள்ளத் தக்க இடம் இருந்தது. விடியும் வரை அங்கேயே ஒளிந்திருக்கலாம் காலையில் பயணத்தைத் துவங்கலாம் என முடிவு செய்தேன்.

நேரம் செல்லச் செல்ல அச்சம் அதிகரித்தது. சாலையில் யார்யாரோ இங்கும் அங்கும் ஓடுவதும் யாரோ யாரையோ விரட்டிச் செல்வதுமாக அப்போதைக்கப்போது சப்தம். 'நிமிடம் வருடமாக நகர்ந்தது' எனக் கதைகளில் படிக்கிறோம். அதை அப்போதுதான் உணர்ந்தேன். வெளியே கலகக்காரர்கள் நடமாட்டம். உள்ளே கரப்பான் பூச்சிகளின் தாக்குதல். கட்டடத்திற்கு வெளியே வாசல் ஓரமாக நாலைந்து பேரின் நடமாட்ட அரவம். ஏதோ தகரடின்களை திறப்பது போன்ற சப்தம், வந்து எட்டிப்பார்க்கும் தைரியம் எனக்கில்லை.

கட்டடத்தைப் பற்றவைத்துவிடுவார்களோ! இந்த இடமும் பாதுகாப்பு இல்லை என்பது உறுதி. இங்கிருந்து வெளியாகிவிட வேண்டும். காத்திருந்தேன். கட்டடத்தின் ஓரமாகக் கேட்ட சப்தம் நின்றதும் மெதுவாக வந்து எட்டிப் பார்த்தேன்.
ஒருவரும் இல்லை. வெளியே வந்து திகைத்து நின்றேன். என்ன செய்வது? எங்கே செல்வது? ஒன்றும் புரியவில்லை. இந்தக் கோலாலம்பூரில் நடுவீதியில் நிற்கும் நிலை எனக்கு ஏற்படும் என எண்ணிக்கூடப் பார்த்தது இல்லை நான்!
"குடை நிழல் ஏறிக் குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்தோர் நாள் நண்ணினும் நண்ணுவர்! எனத் தெரியாமலா சொன்னார்கள்!

கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் எல்லாம் சொகுசாக பாதுகாப்பாக வீட்டுக்குள் குடும்பத்துடன் குதூகலமாக இருக்கிறார்கள்! அப்பாவிகளான நாம் அல்லல்பட்டு நடுவீதியில் நிற்கிறோம். கட்டத்திற்கு வெளியே கிடந்த தகர டின்னும் எண்ணெய் நாற்றமும் தீமூட்டும் முயற்சி நடந்திருக்கிறது என்பதைக் காட்டியது. தீவைப்பு முயற்சியை மேற்கொண்டவர்கள் போலீஸ் காடியின் சப்தம் கேட்டு ஓடி ஒளிந்திருக்கலாம் அல்லது அது காங்கிரீட் கட்டடமானதால் தீவைக்கும் முயற்சி பலிக்காமல் போயிருக்கலாம். கட்டடத்தின் முதல் மாடி ஜன்னல் திறக்கப்பட்டு விளக்கு எரிந்தது. ஆள் நடமாட்டம் தெரிந்தது. உதவி கேட்டு பலமாகக் குரல் கொடுத்தேன். மேலே இருந்து ஓர் உருவம் தலையை நீட்டி என்னை உற்றுபார்த்து விட்டு " சார் நீங்களா? இங்கே என்ன செய்கிறீர்கள்? " எனக் குரல் கொடுத்தது.

எனக்கு அது யார் என்று உடனடியாகத் தெரியாவிட்டாலும் யாரோ அறிமுகமானவர்கள் என அறிந்ததும் போன உயிர் திரும்பி வந்தது.

" ஆமா... ஆமா... இராத்திரிதர்களும்... அதுதான் என்று கத்தினேன்.

கதவைத் திறந்து கொண்டு வந்து அன்று என்னைக் காப்பாற்றியது ரமணி.

தமிழர் கதை தொடரும்...

-பாவலர் சங்கு சண்முகம்

Read more...

மரத்தடியில் பிறந்த மறத் தமிழர்கள் ( தொடர் 2)

>> Monday, March 24, 2008

கோலாலம்பூரில் நீண்ட காலமாக வசிக்கும் நான், பல 'கேங் பைட்'களைப் பார்த்திருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுபோல் ஊரே வெறிச்சோடிப் போய், போலீஸ் வாகனங்கள் ஒலி பெருக்கிகள் அலற இங்கும் அங்கும் ஓடிப்பார்த்ததில்லை.

உண்மையிலேயே இது பெரிய சீரியஸான விஷயம்தான் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அந்த நாளில் நாங்கள் குடியிருந்தது கம்போங் குறிஞ்சி. இப்போது அங்காசாபுரி இருக்கும் இடத்திலிருந்து இன்னும் சிறிது மேலே சென்றால் ஒரு மலை முகட்டைத் தாண்டிய பள்ளத்திற்குள் ஒளிந்துக் கொண்டிருந்த கம்பத்து வீடு.

போவதெங்கே புரியவில்லை

பிரிக்பீல்ட்சிற்கும் அதற்கும் வெகுதூரம். இதுபோன்ற கலவர நேரத்தில் நடந்து போவது இயலாது. எங்கே தங்குவது எப்படிப் போவது? சாலையில் நிற்பதோ நடப்பதோ பெரிய ஆபத்தானது என்பது எனக்குப் புரிந்தது. கலவரக்காரர்களில் ஒருவன் எனக் கருதி சுடப்படலாம், அல்லது கலவரக்காரர்களால் தாக்கப்படலாம். செய்வதறியாது திகைத்தேன் நான்.

அமைதியும், சுதந்திரமும் உள்ள வாழ்க்கையின் பெருமை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தான் நமக்குப் புரிகிறது. வியாபார நிலையங்கள் வீடுகள் அனைத்தும் மூடப்பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. நமக்கு முன்பின் அறிமுகமானவர்களைத் தவிர வேறு எவரும் கதவைத் திறக்க மாட்டார்கள். அடைக்கலம் தரமாட்டார்கள் என்பது திண்ணம். யோசித்தேன்! பிரிக்பீல்ட்ஸ் லாசாலே பள்ளிக்கு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கும் பஞ்சாட்சரம் கம்பத்திலே நீலகண்டராவ் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர், சுங்கை சிப்புட் 'மலைநாடு' அச்சகத்தில் நான் பணியாற்றிய போது போர்மேன்னாக இருந்தவர். அவர் வீட்டில் போய் தங்கி இரவைக் கழித்துவிட்டு மறுநாள் காலையில் போகலாம் என எண்ணினேன். ஆனால், நம்மை வரவேற்று வீட்டில் இரவு தங்க இடம் தருவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

காரணம் நான் பலமுறை அவரை பிரிக்பீல்ட்சிலும், பஞ்சாட்சரம் கம்பத்திலும் சந்தித்திருக்கின்றேன். ஆனால் பேசிவிட்டு ஏதாவது சல்ஜாப்புகள் கூறிவிட்டு நழுவி விடுவாரே தவிர 'வீட்டுக்கு வாரும்' என என்னை அழைத்ததில்லை.

"உங்கள் வீட்டுக்கு ஒருநாள் வரணும் ஜி!" என்று நான் கூறினாலும் கூட எங்கையா நான் ரொம்ப வீட்டிலே இருக்கிறதில்லை!" எனக் கூறித் தவிர்த்துவிடுவார்.
அவரைச் சொல்லியும் குற்றம் இல்லை! அவருக்கு இரண்டு அழகிய பெண் பிள்ளைகள் இருந்தனர். வம்பை விலை கொடுத்து வாங்குவானேன் என என்னை அவர் வீட்டுக்கு வரவிடாமல் தடுத்திருக்கலாம். உண்மையைச் சொல்லப் போனால் நானும் அப்படி ஓர் எண்ணத்தை உள்மனத்தில் வைத்துக் கொண்டுதான் அவர் வீட்டுக்கும் பல முறை செல்ல முயன்றேன். அவர் அப்போது என்னைத் தவிர்த்த போதிலும் பிற்காலத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரே எனக்கு மாமனார் ஆனார்! ( அது ஒரு சுவாரசியமான் கதை)

-தமிழர் கதை தொடரும்


-பாவலர் சங்கு சண்முகம்

Read more...

'சின்னப் புள்ளத் தனமாலே இருக்கு'


ஒரு பக்கம் திரங்கானு மாநில அம்னோ தலைவரான இட்ரிஸ்சை திரங்கானு மந்திரி புசாராக நியமனம் செய்ய வேண்டும் என பிரதமர் அப்துல்லா அகமது படாவி அடம் பிடிக்க, மற்றொரு பக்கம் எனக்கும் அடம் பிடிக்கத் தெரியும் என நாட்டின் பேரரசர் மிஸான் ஜைனால் அபிடின் கீஜால் சட்டமன்ற உறுப்பினரான அகமது சாயிட்டை மந்திரி புசாராக நியமனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் விளைவு, 22 பாரிசான் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அந்நிகழ்வுக்கு கல்தா கொடுத்து விட்டனர்.

எனவே, இன்று நடைப்பெறவிருந்த பதவியேற்பு விழா வருகின்ற புதன் கிழமை நடைப்பெறவிருக்கிறதாம். இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், அம்னோ தலைமைத்துவத்தை அவமதித்து மந்திரி புசார் பதவியை ஏற்றுக் கொள்ள சம்மதித்த அகமது சாயிட்டை, பிரதமர் அம்னோ கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டாராம்.


எது எப்படி இருந்தாலும், சுல்தான் சம்மதத்தின் பேரில் நியமிக்கும் ஒருவரே எந்த ஒரு பதவியிலும் அமர முடியும் என்பது சட்டபூர்வமானது என்கின்றனர் ஒரு சிலர். பிறகு எதற்கையா ஜனநாயகம் என்றப் பெயரில் தேர்தல் மன்னாங்கட்டி என்று வைக்கிறீர்கள்? பேசாமல், இருக்கின்ற சுல்தான்களையும் பேரரசரையும் நாட்டின் பிரதிநிதிகளை சுயவிருப்பத்திற்கேற்ப நியமித்துவிட வேண்டியதுதானே?

இதுதான் ஜனநாயக நாடா? மக்கள் கஷ்டப்பட்டு தேர்ந்தெடுப்பார்களாம், ஆனால் இறுதி முடிவு பேரரசர் கையிலாம்...!! வேடிக்கையான நாடு நம் மலேசியா...! பல லட்ச மக்களின் கையில் ஆளுக்கொரு ஓட்டுதான் இருக்கின்றது, ஆனால் பேரரசருக்கும் இதர மாநில சுல்தான்களுக்கும் ஆளுக்கு பல லட்ச ஓட்டுகள் கையில் இருக்கும்போல் தெரிகிறதே...!


சரி, அது கிடக்கட்டும்.. மாநில மந்திரி புசாராக வருவதற்கு ஒரு தகுதி வேண்டாமா? பேரரசரைக் கேட்டால், இட்ரீஸ் திரங்கானு மந்திரி புசாராக இருந்தக் காலக்கட்டத்தில், திரங்கானுவில் நடைப்பெற்ற பத்து பூரோக் கலவரத்தையும் மற்றும் தேர்தல் சமயம் நடந்தக் கலவரங்களையும் கையாண்ட முறை சரியில்லை எனக் குற்றம் சாட்டுகிறார். அதனால்தான் இம்முறை இட்ரீஸ்சுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது அவரது வாதமாக இருக்கிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் சுபிட்சத்தை கொண்டு வரும் முயற்சியாக புதிய மாநில மந்திரி புசாரை நியமிப்பது ஏற்புடையது என அவ்ர் நினைக்கிறார் போலும்.

ஆனால், குரங்குக் கையில் இருந்த பூமாலையை முதலை வாயில் போட்டக் கதையாகி விட்டது, இந்த மந்திரி புசார் நியமனம்! பேரரசர் முன்மொழிந்த அகமது சாயிட் மாநிலத்தை நிர்வகிக்க தகுதியானவரா என அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன. வாசகர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நம்ம அகமது சாயிட் அண்ணாச்சி ஒரு நாள் மாநில சட்டமன்ற அவையில் என்னக் கூத்து பண்ணினார் எனப் பார்ப்போம்..



இப்படி விளக்கெண்ணையாய் பேசி மந்திரி புசார் பதவி கிடைக்கும் என்றால் நானும் அதற்கு ரெடி..!



இரண்டாவது படச்சுருள் நாடறிந்த ஒரு விஷயம், நமது அண்ணாச்சி அட்னான் யாக்கூப் (பகாங் மந்திரி புசார்) பலப் பேர் கூடியிருந்த வேளையில், எனக்கென்ன என்ற தோரணையுடன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒருவரை நோக்கி செய்த சைகையிது.. அவரின் பக்கத்தில் ஒரு பொக்கை வாய் செம சிரி சிரிக்கும், அதையும் பார்க்க மறவாதீர்கள்... இப்படி செய்தால் மந்திரி புசார் பதவி கிடைக்கும் என்றால், அதற்கும் நான் ரெடி!

Read more...

'மரத்தடியில் பிறந்த மறத் தமிழர்கள்!' - பாவலர் சங்கு சண்முகம்

>> Sunday, March 23, 2008

இன்று தொடங்கி ஞாயிறு நண்பனில் பாவலர் சங்கு சண்முகம் அவர்கள் எழுதி வரும் 'மறத்தடியில் பிறந்த மறத் தமிழர்கள்!' எனும் தொடர்கதை இடம்பெற்று வரும். இவருடைய எழுத்துகள் மலேசிய தமிழர்கள் பற்றியது என்பதாலும், அனைத்து தமிழர்களும் இக்கதை கூறும் வரலாற்றுச் சான்றுகளை உள்வாங்கித் தெளியவும், இனி ஒவ்வொரு வாரமும் நண்பனில் வெளிவரும் இத்தொடர்கதை ஓலைச்சுவடியிலும் வெளிவரும்.

அரை நூற்றாண்டுக்கு மேல் எழுத்தையே சுவாசித்து, அந்த சுவாசிப்பில் உயிர் கொண்டுள்ள பாவலர் சங்கு சண்முகம் அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்தம் வாழ்வியலை நன்கு தெரிந்தவர். சஞ்சிக் கூலிகளாக வந்த தமிழ்ச் சமுதாயத்தை மேய்ப்பானாக இருந்து சுகங்கண்ட பலரின் சுயரூபத்தை, நெடுங்கதையை வாசகர்கள் பாவலரின் எழுத்தில் தெரிந்து தெளியலாம்.

பங்சார் ரோட்டில் 'பயங்கர' இரவுகள்

12 வது தேர்தல் முடிவுகளைக் கேட்டு பதறிப் போயிருப்பர் பாரிசான் காரர்கள்! ஆடிக் களித்திருப்பர் கெஅடிலான் அங்கத்தினர்கள்! மனம் ஒடிந்து போயிருப்பர் ம.இ.காவினர். வெற்றிப் பேரிகை கொட்டியிருப்பர் ஜசெகவினர்.

ஆனால் நான்? தேர்தல் முடிவுகள் வர வர என் குடும்பத்தில் எல்லாரும் வீடு வந்து சேர்ந்து விட்டார்களா, இன்னும் யார் யார் வீடு வந்து சேரவில்லை. இப்போது எங்கு இருக்கிறார்கள். எத்தனை மணிக்கு வருவார்கள் என அறிவதில் தொலைபேசியும் கையுமாக மும்முரம் காட்டிக் கொண்டிருந்தேன். இனம் தெரியாத கவலை ஒன்று இதயத்தை நெருடிக் கொண்டிருந்தது.

காரணம் கடந்த கால அனுபவம்!

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அந்த அனுபவத்தை இன்று மட்டுமல்ல என்றுமே மறக்க முடியாது என்னால்! "உலகிலேயே மகிழ்ச்சியான பிரதமர் நான்" என மகிழ்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்த துங்குவை மனம் நொந்து கண்ணீர் சிந்த வைத்த அந்த நாள் இந்த நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் நொந்துக் கொள்ள வைத்த துக்க நாள். 1969 மே 13!

அப்போதெல்லாம் எனக்கு இந்திப் படங்கள் என்றால் இதயம் கொள்ளாத மோகம்!

இன்ஸானியத்தையும் தெஸ்ரிஸ் மன்சிலையும் ஜனக் ஜனக் பாயில் பாஜேயையும் திஷ் தேஷ்மே கங்கா பக்தீயையும் எத்தனை முறை பார்த்திருப்பேன் என எனக்கேத் தெரியாது! வகிதா ரமான், சைரா பானு, வைஜயந்திமாலா போன்றவர்கள் கனவுக் கன்னிகளாகத் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்த காலம்!

இந்திப் பட கட்டழகிகள் இதய நாயகிகள்

இந்தக் கட்டழகிகளில் ஒருவர் நடித்த ஓர் இந்தித் திரைப்படத்தை பிரிக்பீல்ட்ஸ் (ஜாலான் துன் சம்பந்தன்) லிடோ தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்தேன் அன்று. இரவு 7 மணிக்காட்சி. தியேட்டர் கொள்ளாதக் கூட்டம். அப்போதெல்லாம் சும்மா 'பொன்டியானாக்'கைப் (மலாய்) பார்க்கக் கூடுவதைவிட இந்திப் படங்களைப் பார்க்கத்தான் மலாய்க்காரர்கள் அதிகம் கூடுவர்!

படம் துவங்கி ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். இருண்ட தியேட்டருக்குள் ஏதோ ஒரு பரபரப்பு. பலர் எழுந்து பரபரப்புடன் வெளியேறத் துவங்கினர். நான் நகரவில்லை. ஒரு வெள்ளி 60 காசு கொடுத்து டிக்கெட் எடுத்திருக்கும் நான் படத்தை பாதியிலேயே விட்டுவிட்டுப் போக முடியுமா?

இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான தமிழ்ப் பத்திரிக்கைக்காரர்களான நாங்கள் காசு கொடுத்துப் படம் பார்ப்பதில்லை. லிடோ தியேட்டர் நிர்வாகியாக இருந்த அரசப்பன் தான் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களான எங்களுக்கு அந்தக் கால 'ஆஸ்ட்ரோ'! டெலிபோன் போட்டுச்சொல்லி விட்டால் 'பாஸ்' கொடுத்துவிடுவார். படம் துவங்குவதற்கு முன்னர் 'ஆமாம் இல்லை' போட்டி எல்லாம் நடத்தி குட்டி 'ஸ்டாராக' பிரபல்யம் அடைந்திருந்தார் அவர்.

அன்று நான் 'பாஸ்' கேட்காமல் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்ததால், பரபரப்பில் அக்கறை காட்டாமல் படத்திலேயே மூழ்கிப் போயிருந்தேன். நேரம் செல்லச் செல்ல தியேட்டருக்குள் பரபரப்பு அதிகரித்ததுடன் எல்லா இரசிகர்களுமே வெளியேறி வெறும் ஏழெட்டு பேர்கள் தான் எஞ்சியிருந்தனர்! படமும் நிறுத்தப்பட்டது! வேறு வழியின்றி நாங்களும் வெளியேறினோம்.

வெளியே வந்து பார்த்த போது பிரிக்பீல்ட்ஸ் முழுவதும் வெறிச்சோடிக் கிடந்தது. போலீஸ் காடிகள் ஒலிபெருக்கியில் ஏதேதோ அறிவிப்புக்கள் செய்தபடி பறந்து கொண்டிருந்தன. அடுத்த சில நிமிடங்களில் என்னோடு வெளியேவந்த அந்த ஐந்தாறு பேரையும் காணோம். எங்கே போனார்கள் எப்படிப் போனார்கள் என்பது தெரியவில்லை.

நான் லிடோ தியேட்டர் அருகிலிருந்த கதிஜா கம்பத்தின் முன்னால் இருந்த பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றேன். போலீஸ் காடியைத் தவிர சாலையில் வேறு வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. கடைசியாக வந்தது ஒரு பஸ். நான் முன்னே ஓடிவந்து கையை நீட்டி நிறுத்த முயன்றேன். வேகத்தைக் குறைத்தது பஸ். ஆனால் நிற்கவில்லை! கண்டக்டர் ஓர் இந்தியர்.

"யோவ்! சண்டை நடக்குது. ஆள் ஏத்தமாட்டோம்" என்று கண்டக்டர் குரல் கொடுக்க, பஸ் மீண்டும் வேகம் எடுத்துச் சென்றது!

- தமிழர் கதை தொடரும்...

Read more...

மக்கள் சக்தியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன?

>> Friday, March 21, 2008

கடந்த 17-ஆம் திகதி மார்ச் அன்று ஜாசின் மலாக்கா சிறீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மக்கள் சக்தி ஏற்பாட்டில் ஒரு கலந்துரையாடல் நடைப்பெற்றது. அக்கலந்துரையாடலில் இந்து உரிமைப் பணிப்படையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டு மக்கள் சக்தியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி விவரித்தார். இக்கூட்டத்தில் மலாக்கா மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றி நிகழ்வை தொடக்கினார். திரு.தனேந்திரன், அவரின் உரையில் நாம் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கு ஆதரவாளர்களாக இருக்க வேண்டுமா எனத் தெளிவாக விளக்கியுள்ளார். அதோடு மக்கள் சக்தி இனி தூர நோக்குச் சிந்தனையுடன் செயலாற்றுவதற்கு, அதற்கான வழிமுறைகளையும் செயல்பாட்டுக் கூறுகளையும் நமக்குத் தெரிவித்துள்ளார்.

இதோ, அந்நிகழ்வின் படச்சுருள்கள் கீழே,

படச்சுருள்கள் மொத்தம் 8 பகுதிகள் இருப்பதால், ஒவ்வொன்றாக 'யூ டியூப்'பில் ஏற்றப்பட்டு இங்கு பதிவிடப்படும்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



பகுதி 5



படச்சுருள்களை வழங்கியவர்,

மலாக்கா நிருபர் திரு.கலையரசு srivishnu80@yahoo.com (நன்றி)

போராட்டம் தொடரும்...

Read more...

சாமிவேலுவிற்கும் அவருடைய கோமாளிகளுக்கும் நமது நன்றி.. :)

>> Thursday, March 13, 2008



நேற்று பலரையும் சிரிக்க வைக்கும்படி ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்தை கேள்விப்பட நேர்ந்தது. அதனால் தூக்கமும் சரியாக வரவில்லை. அதிர்ச்சியான சம்பவம் பெரும்பாலும் நமக்கு சோகத்தையே அளிக்கும் தன்மையைக் கொண்டிருந்தாலும், நேற்று சிரிப்பின் அலையை ஏற்படுத்தி நம்மை வயிறு குலுங்க வைத்துள்ளது.

காப்பிக் கடையில் சிலர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது..

"என்னையா, சாமிவேலு, கேவியஸ், சுப்ரா எல்லாம் ஒன்னா சேர போறாங்கலாம்.."

"என்னக் கொடுமை சரவணன் இது...!"

"நம்ப தாப்பா சரவணன் அண்ணாச்சியே சொல்லலீங்கோ..."

அதனைத் தொடர்ந்து சிரிப்பொலி பயங்கரமாகக் கேட்டது..

தொலைக்காட்சி டிவி3-ல் புல்லட்டின் உத்தாமாவில் அண்ணாச்சி சாமிவேலு நிருபர்களுக்கு பழைய ஸ்டைல் கொஞ்சம் கூட மாறாமல் குறையாமல் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து கடையில் அமர்ந்திருந்தவர்களின் வாய் நிறையப் பற்கள் தெரிந்துக் கொண்டிருந்தன.

" என்னையா இவனுங்க.. இப்பதான் அறிவு வந்துச்சா.. வெங்காயம்..!"

என்று ஒருவர் கூற மீண்டும் சிரிப்பின் ஒலி தொடர்ந்தது..

எனக்கும் அது நியாயமாகவே பட்டது..

இருந்தாலும் காலம் கடந்து விட்டதை அந்த மூன்று தலைவர்களும் மறந்துவிட்டதை அவர்களுக்கு நினைவுக் கூற வேண்டும்.

இவ்வளவு காமெடிக்கு மத்தியில் நம் நாட்டு லஞ்ச ஒழிப்பு நிறுவனம் சிரித்துக் கொண்டே சாமிவேலுவின் கையில் விலங்கை மாட்டியிருந்தால் 2008ற்கான மிகச் சிறந்த காமெடி என இச்சம்பவத்திற்கு மணிமகுடம் சூட்டியிருக்கலாம். "எங்கடா கட்சியோட பொறுப்ப விட்டுப்புட்டா மாட்டிக்குவோமே" என்று மீண்டும் தானே வலிய வந்து ம.இ.கா தலைவர் பதவியை மீண்டும் தன் இடுப்பின் கச்சையில் மாட்டிக் கொண்டு விட்டார். இவ்விஷயத்தில், அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கிறார்களாம். செனட்டர் பதவி கேட்பீர்களா எனக் கேட்டப் பொழுது, அந்த எண்ணமே தனக்கு இல்லை என்று இறுமாப்புடன் கூறியிருக்கிறார். "எதயும் பிலேன் பண்ணி செய்யனும்" என்கிற மாதிரி, அண்ணாச்சி உள்ளுக்கு ஏதோ ஒரு பிலேனோடெதான் இருக்காரு."

எது எப்படி இருந்தாலும், இவர்களுக்கு நம்முடைய ஓட்டு கிடையாது என்பது ஊர்ஜிதமாகிவிட்ட ஒன்று. அடுத்த தேர்தலில் எத்தனை ம.இ.கா, பிபிபி, ஐ.பி.எப் கட்சி உறுப்பினர்கள் கல்தா கொடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

எதையாவது பண்ணி தொலைக்கட்டும். எலியும் பூனையும் இன்று ஒரே மேசையில் அமர்ந்து மீன் துண்டைக் கவ்விக் கொண்டு இருக்கிறது. ஒரு நாள் மீண்டும் அது சண்டையிடக் கூடும், ஆனால் "நம்ப மக்கள் சக்தி" கலுவுற மீன்ல நலுவுற மீனு.. எந்த பொய் பித்தலாட்டத்துலேயும் மாட்டிக்க மாட்டாங்கனு சொல்லவறேன். நம்ப மக்கள் ரொம்பெ தெளிஞ்சிட்டாங்க. இனிமே மக்கள் சக்தி ராஜ்யம்தாயா.. மத்தவன்லாம் வாலை சுருட்டிக்கிட்டு போயா...!!!

பினாங்கு துணை மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள நம் பேராசிரியர் இராமசாமி ஐயாவிற்கு இவ்வேளையில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியர்கள் 50 ஆண்டுகளில் படைத்த முதல் சரித்திரம் இது.. அடுத்து பேராக் மாநிலம் என்ன சொல்கிறது என்றுப் பார்ப்போம்...!!!

நம்மை நேற்று வயிறு குலுங்க சிரிக்க வைத்த கோமாளி கூட்டத்திற்கு நமது நன்றி..

"சரி நம்ப பண்டிதன் ஐயா கதை என்னாச்சி...?"

போராட்டம் தொடரும்..

Read more...

தேர்தல் முடிவுகள்...

>> Sunday, March 9, 2008





நேற்று நடந்த தேர்தல் முடிவுகளின் ஆகக்கடைசி நிலவரம் ( 9.3.08 காலை மணி 8.28): நாடாளுமன்ற இருக்கைகள் - 219: பாரிசான் 137 இருக்கைகள். எதிர்க்கட்சிகள் 82 இருக்கைகள்.

சட்டமன்ற இருக்கைகள் - 503: பாரிசான் 305 இருக்கைகள். எதிர்க்கட்சிகள் 196. சுயேட்சை 2 இருக்கைகள்.


நாடாளுமன்றம் - இருக்கைகள், கட்சிவாரியாக:

பாரிசான் 137; ஜசெக 28; பாஸ் 23; கெஅடிலான் 31; மொத்தம் 219.

சட்டமன்றம் - இருக்கைகள், கட்சிவாரியாக:

பாரிசான் 305; ஜசெக 73; பாஸ் 83; கெஅடிலான் 40; சுயேட்சை 2; மொத்தம் - 503 இருக்கைகள்,

நாடாளுமன்றம் மாநிலவாரியாக: ( பா = பாரிசான்; எக = எதிர்க்கட்சிகள்.)

விலாயா - பா 1; எக 10. ஜோகூர் - பா 25; எக 1. கெடா - பா 4; எக 11. கிளந்தான் - பா 2; எக 12. மலாக்கா - பா 5; எக 1. நெகிரி செம்பிலான் - பா 5; எக 3. பகாங் - பா 12; எக 2. பினாங்கு - பா 2; எக 11. பேராக் - பா 13; எக 11. பெர்லிஸ் - பா 3; எக - 0. சாபா - பா 22; எக 1. சரவா - பா 29; எக 1. சிலாங்கூர் - பா 5; எக 17. திராங்கானு - பா 7; எக 1.

சட்டமன்றம் - இருக்கைகள், மாநிலவாரியாக:

ஜோகூர் - பா 50; எக 6. கெடா - பா 14; எக 21; சுயேட்சை 1. கிளந்தான் - பா 6; எக 39. மலாக்கா - பா 23; எக 5. நெகிரி செம்பிலான் - பா 21; எக 15. பகாங் - பா 37; எக 4; சுயேட்சை 1. பினாங்கு - பா 11; எக 29. பேராக் - பா 28; எக 31. பெர்லிஸ் - பா 14; எக 1. சாபா - பா 57; எக 1. சரவாக் - மாநிலத் தேர்தல் இல்லை. சிலாங்கூர் - பா 20; எக 36. திரங்கானு - பா 24; எக 8.

பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய இந்த 12 வது பொதுத்தேர்தல் ஆளுங்கட்சியான பாரிசானுக்கு பெருத்த சரிவை உண்டாக்கியது.

நாடாளுமன்றத்தில் பாரிசான் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மேலும், பாரிசான் கட்சி ஆட்சிபுரிந்த பினாங்கு, கெடா, பேராக் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் தோல்வியுற்று ஆட்சியைப் பறிகொடுத்துவிட்டது.

கிளந்தான் மாநிலத்தை பாஸ் கட்சியிடமிருந்து கைப்பற்ற எடுத்துக்கொண்ட பகீரத முயற்சியுகளும் பலனலிக்காமல் பாரிசான் தோல்வியுற்றது.

மேலும் தகவல்களுக்கு மலேசியா கீனி...

Read more...

மக்கள் சக்தி பேரைக் கேட்டால் சும்மா அதிருதுல்லே...!

பிரதமர் முகத்தில் ஈயாடவில்லை.. மக்களின் ஆதரவு முழுமையாக பாரிசானுக்கு உண்டு எனவும் இம்முறை அனைத்து மாநிலங்களையும் எங்கள் வசத்தில் கொண்டு வருவோம் என பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்த பிரதமரின் முகத்தில் நேற்று ஈயாடவில்லை. அம்னோவின் சகாப்தம் ஒரு முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் முகத்தைப் பார்த்ததும் கணிக்க முடிந்தது. நேற்று நடைப்பெற்ற 12-வது பொதுத் தேர்தலின் முடிவில் எதிர்க்கட்சியினரிடம் ஐந்து மாநிலங்கள் கைமாறியிருக்கின்றன. அவை முறையே பினாங்கு, கிளந்தான், கெடா, சிலாங்கூர், மற்றும் பேராக் ஆகும்.

"தைரியம் இருந்தால் சிங்கத்தின் குகையினுள் வந்து போட்டியிடு" என சவால் விட்ட நம் இந்தியர்களின் தானையத் தலைவர் என மார்தட்டிக் கொண்ட சாமிவேலுவின் சகாப்தம் நேற்றோடு ஒரு முடிவுக்கு வந்தது.

பி.62 சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் சாமிவேலுவை எதிர்த்து போட்டியிட்ட நீதிக் கட்சியின் சார்பாக நின்ற டாக்டர் மைக்கேல் ஜெயகுமார் தேவராஜ் 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினார்.

டாக்டர் ஜெயகுமாருக்கு 16,874 வாக்குகளும் சாமிவேலுவிற்கு 14,408 வாக்குகளும் கிடைத்தன.

ஆக தற்போதைய நிலைமையில் மூன்றில் இரண்டு பங்கு அறுதி பெரும்பான்மையின்றி பாரிசான் தனது அரசாங்கத்தை தோற்றுவிக்கும் இக்கட்டான நிலைமையில் உள்ளது.

மேலும் பல தகவல்கள் பதிவிடப்படும்..

Read more...

தமிழ் பத்திரிக்கைகளை நம்பக் கூடாதா?

>> Friday, March 7, 2008

இரண்டு நாட்களுக்கு முன்பு மலாக்காவின் ஒரு தொகுதியின் ம.இ.கா தொகுதிச் செயலாளர் இராஜன் என்பவர், தமிழ்ப் பத்திரிக்கைகளை மூட வேண்டும் என சாடியுள்ளார். இவ்விஷயம் தொடர்பாக பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று 07-03-2008ல் வெளிவந்தச் செய்தி கீழே..

இந்த அரைவேக்காட்டிற்கு யார் கொடுத்தது அதிகாரம்...?



ஒலிப்பேழையில் பதிவு செய்யப்பட்ட உரை..


music player
I made this music player at MyFlashFetish.com.


அரைவேக்காடு என ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்..

Read more...

இந்துக்களைக் கேலி செய்வதா..?!!!

>> Tuesday, March 4, 2008

இந்துக்களின் பொறுமையை சோதிக்கும் காலமிது...!
நேற்று யூ டியூப் தளத்தில் இந்து சமயத்தைக் கேலி செய்த ஒரு கருத்தரங்குப் படம் வெளிவந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அலோர் ஸ்டாரில் நடைப்பெற்ற இக்கருத்தரங்கில் மலாய்க்காரர்கள் கலந்துக் கொண்டு இந்து சமயத்தை தூற்றும் வகையில் பலக் கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாத ஒரு சமுதாயத் துரோகி பதிலளித்து இந்து சமயத்தினரிடையே பெரும் கோபத்தை உண்டுசெய்துள்ளான். நீர்மப் படிம உருகாட்டியின் வழி நம் இந்து தெய்வங்களின் படங்களை ஒளிபரப்பி, பிழையான விளக்கங்களையும் கொடுத்துள்ளான். இந்து மதத்தை விட்டு வேற்று மதத்திற்கு தாவிய இந்தக் சமுதாயத் துரோகி, இந்து மதத்தின் கடவுள்களையும், இறைக் கொள்கைகளையும், உருவ வழிபாடு மற்றும் ஆலய அமைப்பு, மற்றும் இக்கொள்கைகளைப் பின்பற்றி வரும் இந்து சமுதாயத்தினரையும் கேலிக் கூத்தாக்கிய விஷயம் தொடர்பாக ஓலைச்சுவடியின் சார்பில் மலேசிய இந்து சங்கம், இந்து மனித உரிமை ஆணையம், அமெரிக்க இந்து அமைப்பு, ஜனநாயக் செயல் கட்சி, மலேசிய நண்பன், மற்றும் மக்கள் ஓசைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

மலேசிய ருக்குன் நெகாரா கோட்பாட்டின்படி 'இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்' எனும் கருத்துக்கு எதிர்மறையாகவும், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ' ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவரவர் சமயக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு முழு உரிமை உண்டு" எனும் விதிக்குப் புறம்பாக நடந்துக் கொண்ட ஷா கிரித் என்றழைக்கப்படும் அந்த இந்திய முஸ்லீமானவர் இந்து மக்களிடம், தனது செயலுக்காக வருந்தி பொது மன்னிப்புக் கேட்க வேண்டும். அதோடு அந்தக் கருத்தரங்கில் கலந்துக் கொண்டு இந்து மதத்தைத் தூற்றும் வகையில் கேள்விகள் எழுப்பியவர்களும் இந்து மக்களிடம் பொது மன்னிப்புக் கோர வேண்டும். அதோடு இனி இதுபோன்ற இழிச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என வாக்குறுதி அளிக்க வேண்டும்.

அதோடு இந்த படத்தொகுப்பை பொது மக்களின் பார்வைக்கு வெளியிட்டு இந்து மதத்தினரை புண்படுத்தியதற்காக, அந்த மர்ம நபர் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், யூ டியூப் தளத்திலிருந்து 11 பகுதிகளைக் கொண்ட படக்காட்சிகள் நீக்கச் சொல்லி அரசாங்கம் உத்தரவிட வேண்டும்.

இவ்வேளையில் இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் இச்சம்பவம் குறித்து பல ஊடகங்களுக்கு அறியப்படுத்துங்கள். நாட்டில் வாழும் பல இந்து மக்களிடம் இந்த விஷய்த்தைக் கொண்டு சேர்ப்பியுங்கள். இனியும் வாய் பொத்தி எதையும் காதாரக் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கில்லை. காலங்காலமாகப் பொறுமையாகவே இருந்து வந்த இந்துக்களைக் கண்டதும் இன்று சிலருக்கு வசதியாகிவிட்டது. இந்து மதத்தைத் தூற்றினாலும் கேட்பதற்கு மலேசியாவில் யாரும் இல்லை என்ற நினைப்பு...! ஆலமரத்தின் நிழலில் நின்றுக் கொண்டு அதை வேரோடு பிடுங்க நினைக்கிறார்கள் சில அறிவிலிகள், ஆனால் அம்மரம் சாய்ந்தால் அவர்கள் தலையில்தான் விழும் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்கள்.

ஆதாரத்திற்காக முடிந்த மட்டும் இந்த படக்காட்சிகள் யூ டியூப்பிலிருந்து நீக்கப்படுவதற்கு முன், அவைகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். இவ்வேளையில் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என வெளிப்படுத்துவதற்கு இதுவே சரியானத் தருணம். அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் இந்த பொறுப்பற்றக் கும்பலுக்கு நமது கண்டணக் குரல்களை எழுப்புவோமாக..! தயவு செய்து நம்முடைய ஒற்றுமையை இதில் புலப்படுத்துவோமாக...



கொடுக்கப்பட்டுள்ள படக்காட்சியில் மனதை (குறிப்பாக இந்துக்களின் மனதைப்) புண்படுத்தக்கூடிய வார்த்தைகள், செயல்கள் அடங்கியுள்ளதால், வாசகர்களின் கவனம் தேவை.

பகுதி 1


மற்ற 10 படக்காட்சிகளை யூ டியூப்பில் காணலாம்.

இந்து சமயம் வாழ்க...!

போராட்டம் தொடரும்...!

Read more...

திரு.வேதமூர்த்தி நமக்குக் கூறும் அறிவுரை...

>> Monday, March 3, 2008

பொதுத்தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி அவர்கள் இந்திய சமுதாயத்திற்கு தெளிவான ஒரு அறிவுரையைக் கூறுகிறார். அது என்ன அறிவுரை என நீங்களே கேளுங்கள்.. அதன் பின் அதற்கேற்ப செயல்படுங்கள்...!



போராட்டம் தொடரும்...

Read more...

16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஏழு)



அனைவரும் கூடாரத்தை நோக்கி நடந்தோம். அங்கு நண்பர் கலையரசு என்னை வரவேற்றார்.

" காலைலே மூணு மணிலேர்ந்து இங்கதான்.. மொதல்ல எங்கல டேவான்லதான் வெச்சிருந்தானுங்க.. பிறகு ரொம்ப சத்தம் போடுறோனு இங்க தொரத்தி உட்டுடானுங்க" என புன்னகையுடன் கூறினார்.

அதன்பின் அவருடைய நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு, நான் அங்கேயே அமர்ந்துக் கொண்டு நடப்பனவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் ஆக ஆக, வெயிலின் கொடுமை அதிகரித்தது. கூடாரத்தினுள் புழுக்கம் எங்களை வாட்டி எடுத்தது. பலர் உணவு கேட்டு காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். மண்டோர் வேலை செய்துக் கொண்டிருந்த இந்திய அதிகாரி அனைவரையும் சமதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

மதியம் 12.30 எட்டியிருந்தது.

உணவு என்றப் பெயரில் இரு இந்தியர்கள் எங்கள் கூடாரத்தின் எதிரே ஒரு சின்னக் கடையை திறந்தனர். ஆனால் அவர்களிடம் அனிச்சம், ரொட்டி, சிறுவர்களுக்கான தின்பண்டங்கள், குளிர்பானங்கள் என சத்து இல்லாத உணவுகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்துக் கொண்டிருந்தனர். பசியில் ருசியறியாது பலர் அவற்றை வாங்கி உண்டு தங்கள் பசியைப் போக்கிக் கொண்டனர்.

சில மணிநேரங்கள் கழிந்தது.. அதற்குள்ளாக சில காவல் துறையின் 'பிலேக் மரியா' லாரிகள் பல இந்தியர்களை பேரணியிலிருந்து பிடித்து இங்கே கொண்டு வந்திருந்தார்கள். அங்கு நடப்பனவற்றைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக ஒருவரைக் கண்டேன். அவர் என்னைப் பார்த்ததும் சிரித்துவிட்டு,

"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே"

அவரைப் பார்த்ததும் இராஜாராக்ஸ் வலைப்பதிவர் என நினைத்தேன். பின்பு அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"ஐம் மகேந்திரன், ப்ளோகர்"

"ஓ, நீங்க இராஜா இல்லியா..?"

"நோ, இராஜா நானு எல்லாம் ஒன்னாதான் வந்தோம்.. என்ன மட்டும் புடிச்சி கொண்டு வந்துடானுங்க.. இராஜா இங்க வந்துகிட்டு இருக்காரு.."

அதன் பிறகு அவர், தான் காவல் துறையினரால் பிடிப்பட்டக் கதையினைக் கூறிக்கொண்டிருந்தார்.

அதன் பின்னர், நான் மீண்டும் அங்கு நடக்கும் பலக் காட்சிகளை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

நண்பர் கலையரசு வந்தார்.

" கலை, தோ அவர்தான் மகேந்திரன்..ப்ளோகர்.."

"ஓ, அப்டியா.. நில்லுங்க.. பேசிட்டு வந்துறேன்..."

சில நிமிடங்கள் கழித்து இருவரும் என்னை நோக்கி வந்தனர்..

கலையரசு கேட்டார்,

" சதீஷ், என்னலா அவருக்கு நீங்கதான் ஓலைச்சுவடி ப்ளோக்கர்னு தெரியாதாம்"

மகேந்திரன்,
" யேன் மொதல்லியே சொல்லலே, நீங்கதானா அது.."

அதன் பிறகு மூவரும் ஒன்றாக அமர்ந்துக் கொண்டு கதையடித்துக் கொண்டிருந்தோம்..

மதியம் இரண்டு மணியளவில், சிலக் காவல் துறை அதிகாரிகள் கூடாரத்தின் முன் கூடினர். எங்களிடம் சிறுநீர் பரிசோதனை செய்யப் போவதாக அறிவித்தார்கள்.

வயதானவர்கள் முதல் பெண்கள், சிறுவர்கள் வரை சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் தோன்றியது. என்னுடைய பெயர் அழைக்கப்பட்டது, கையில் ஒரு பிளாஸ்டிக் கின்னம் கொடுக்கப்பட்டு கழிவறைக்கு வழிகாட்டப்பட்டது.

என் வாழ்வில் அப்படியொரு துர்நாற்றமுடைய, அசிங்கமான ஒரு கழிவறையைக் கண்டதில்லை எனலாம். இருப்பினும் எப்படியோ நாங்கள் அனைவரும் ஒரு வகையாக சமாளித்துக் கொண்டோம்.

பரிசோதனையின் முடிவு அனைவருக்கும் சாதகமாக இருந்தது. மூன்று மணியளவில், ஒரு மலாய்க்காரன் தனது மோட்டார் வண்டியில் உணவு பொட்டலங்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டுச் சென்றான்.




பொட்டலத்தைத் திறந்துப் பார்த்ததும்தான் தெரிந்தது, அது சிறைக் கைதிகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவு என்று. சோறு, அழுகிய கத்திரிக்காய் இரு துண்டுகள், பாதி பொரித்த மீன் துண்டு, தக்காளி இரசம். ஒரு பையில் தண்ணீர் கட்டி வைத்துக் கொடுத்தார்கள். மீன் துண்டில் மட்டும் உப்பு அளவுக்கு அதிகமாக இருந்தது.மற்ற பதார்த்தங்களில் ருசியேதும் இல்லாமல் சப்பென்று இருந்தது. பசியில் மயக்கம் கண்டதாலும், சோர்வு மிகுதியாலும், அதையும் உண்ண வேண்டியதாயிற்று.

இறுதி அத்தியாயம் இன்றிரவு பதிவிடப்படும்..

போராட்டம் தொடரும்...

Read more...

தனி மனிதனுக்கு உரிய உரிமைகள்


1. குடிமை உரிமைகள்

2. உயிர்வாழ்வதற்கான உரிமை

3. சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை

4. தேசிய இனத்திற்கான உரிமை

5. நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை

6. வெளிப்படையான விசாரணைக்கான உரிமை

7. குற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை

8. (இலவச) சட்ட உதவிக்கான உரிமை

9. குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை

10. சாட்சிகளை விசாரிப்பதற்கான உரிமை

11. உறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைதீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை

12. ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை

13. மேல் முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை

14. தகவல்களைப் பெறவும், தேடவும், பெற்றதை வழங்குவதற்குமான உரிமை

15. மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை

16. தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை

17. தன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை

18. நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை

19. நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை

20. தன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை

21. ஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை

22. ஒரு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான உரிமை

மூலம் : ஐக்கிய நாட்டவையின் மனித உரிமைக் கல்விக்கான உலகத் திட்டம் (2005-2007)

மேற்கண்ட அனைத்து உரிமைகளும் உலக நாடுகள் அனைத்திலும் வாழும் மனிதர்களுக்கான பொதுவான மறுக்க முடியாத மனித உரிமைகளாகும்.

Read more...

மானம் உள்ள சமூகமே...!? - ஜோன் செல்வா, இலண்டன்

>> Sunday, March 2, 2008

பொதுத் தேர்தல்களை
பாரிசான் தேர்தல்
என்றே சொல்லி
பழகி வந்தோம்...!

50 ஆண்டுகளாய்
ஆட்சியாளர்களுக்கே
அள்ளித் தந்தோம்
பிளவு படாத ஆதரவை

எங்கள் தோட்டங்களை
மாட மாளிகை ஆக்கினீர்
மாடாய் உழைத்த எங்களை
வீதியில் தள்ளினீர்...!

உடல் உழைப்பு
சமூக முகவரி போதும்
எங்கள் பிள்ளைகளுக்கு
சம கல்வி வாய்ப்பு கேட்டோம்

கத்தியை காட்டி
மிரட்டுகிறார்
கட்சி கூட்டத்தில்
கல்வி அமைச்சர்..!?

எங்கள் குறைகளை
தெய்வத்திடம் வைத்தோம்
அதிகார பூட்சுகளால்
ஆலயங்களை உடைத்தீர்

நீதி கேட்க வந்த
எங்கள் நாயகர்களை
நீதி விசாரணை இல்லாமல்
வதைத்து வைத்தீர்...!

விசாரணைக்கே வழி இல்லையா..?
வீதிக்கு வந்தோம் விசாரிக்க
வியர்வையில் குளித்த சமூகத்தை
இரசாயன நீரில் குளிக்க வைத்தீர்...

எரிந்தது கண்கள் அல்ல
எங்கள் இதயம்...!
உடைந்தது மண்டைகள் அல்ல
எங்கள் அடிமை விலங்கு...!?

இதோ மீண்டும் தேர்தல்...!!
பாசாங்கு பாசத்தில்
பல்லிளிக்கும்
பாரிசான் தலைவர்கள்..!

ஒரே பொழுதில்
சமூகவாதிகளாகி போன
ம.இ.கா அரசியல் வியாபாரிகள்
வீட்டு வாசலில்...!

பாரிசான் வாழ்க...!
படாவி வாழ்க...!!
முழு மூச்சோடு
ஓடி வருகிறோம்...!!?

உங்கள் அம்னோ சின்னம்
போட்ட பழைய செருப்பால்
எங்கள் முகத்தில்
ஓங்கி அறையுங்கள்..!?

மானம் உள்ள சமூகமே, என
எங்கள் நெற்றியில்
முத்திரை குத்துங்கள்
நெஞ்சில் குத்துங்கள்

நாங்கள் தந்த வாக்குகளுக்கு
நீங்கள் தந்த
வாழ்வு அதுதானே...!
இது சரிதானா....!?


ஜோன் செல்வா, இலண்டன்

Read more...

மனித உரிமைகள் என்றால் என்ன?


மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது "எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.

மனித உரிமைகளின் வகைகள்

மனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை. முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் அதற்குப் பின்னர் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் மனித உரிமைகளை ஐந்து வகைகளாகப் பிரித்தது.

அவை :
1.குடிமையியல்
2.அரசியல் உரிமைகள்
3. பொருளாதார உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. கலாச்சார உரிமைகள்

- மனித உரிமைகள் சட்டம்

அடுத்தத் தொடரில் தனிமனிதருக்கு உரிய உரிமைகள் தொடர்பாக விவரமாக பதிவிடப்படும்.

தனி மனிதருக்குரிய உரிமைகள்

உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..!

Read more...

தலைவர் திரு.வேதமூர்த்தியின் நேர்க்காணல்..

25 நவம்பர் பேரணிக்குப் பிறகு, இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி பல உலக நாடுகளுக்குச் சென்று மலேசியத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களை விளக்கினார். அப்பயணத்தின் ஒரு அங்கமாக திரு.வேதமூர்த்தி அவர்கள் ஆஸ்திரேலியா சென்று வந்தார். அங்குள்ள தமிழ் வானொலி நிலையமான தமிழ் நாதம் திரு.வேதமூர்த்தியைச் சந்தித்து அவருடனான ஒரு நேர்க்காணலை ஏற்பாடு செய்தது. அந்நேர்க்காணலில் திரு.வேதமூர்த்தியிடம் மலேசியத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைப் பற்றி பல கேள்விகள் கேட்க அவர் இப்படி பதிலளிக்கிறார்...


music player
I made this music player at MyFlashFetish.com.

Read more...

அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க... ஜனநாயகமா.. பணநாயகமா..?

மலேசியா ஒரு ஜனநாயக நாடு, அது பணநாயக நாடாக மாறிவிடக் கூடாது. பணத்தைக் கொண்டு ஓட்டை வாங்கிவிடலாம் என பல அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒருவகையில் அது உண்மையாகவே நடைமுறையில் இருந்து வருகின்றது. ஒரு சிலர் பணத்திற்காக தன்னுடைய வாக்குரிமையை குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிடுகின்றனர். இன்னும் சிலர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்துக் கொண்டு ஆளும் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டால் தன்னுடைய வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என பயந்துக் கொண்டு ஓட்டு போடுகிறார்கள். இது தேவை இல்லாத பயம், இது அவர்களுடைய தெளிவின்மையையே காட்டுகிறது. மலேசிய மக்களில் பலருக்கு உண்மையான ஜனநாயகம் என்றால் என்ன என்பது தெரியாமல் இருக்கின்றது. மக்களாகிய நம்மிடம் தான் சக்தி இப்போது, இல்லையென்றால் அரசியல்வாதிகள் நம் குடியிருப்பைத் தேடி வந்து ஓட்டு கேட்பார்களா?

எனவே, முதலில் நீங்கள் ஓட்டு போடுவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில
முக்கிய விஷயங்கள் உள்ளன. வேட்பாளரின் பின்னனி, மற்றும் அவர் சமுதாயத்திற்கு எவ்வாறு உழைத்திருக்கிறார், என்ன செய்திருக்கிறார், அதையும்விட ஒரு தலைமைத் துவத்திற்கு அச்சாணியாக விளங்கும் நல்ல பண்புகள் அவரிடம் உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றிற்கிடையில் அரசாங்கத்தின் போக்குகளும், நடவடிக்கைகளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் சேவைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இதோ, தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் காலஞ்சென்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஜனநாயகத்தையும், தலைவனிடம் இருக்க வேண்டிய தகுதிகளையும் பற்றி ஓரிரு வரிகளில் நமக்குத் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.

Get this widget | Track details | eSnips Social DNA


யோசித்து வாக்களியுங்கள்...

மக்களாட்சி ஓங்கட்டும்...!

மக்கள் சக்தி...!

Read more...

இருட்டில் மறைந்த ஏழ்மைக்கு வெளிச்சம் எப்போது?

>> Saturday, March 1, 2008

மலாக்கா அலோர்காஜா அருகே, சில இந்தியக் குடும்பங்கள் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் போன்றவை ஏதும் இல்லாமல் பரிதாபத்திற்குரிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இருட்டில் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிவரும் இவர்களின் இன்னல்களை, மலேசிய நண்பன் மற்றும் மக்கள் ஓசை நிருபர்களான திருமதி.மாலினி, திரு.சரவணன் படம்பிடித்து சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். அவர்களுக்கு ஓலைச்சுவடியின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இருட்டில் மறைந்து கிடக்கும் ஏழ்மை என்று வெளிச்சத்திற்கு வரும்..?

இருட்டில் நம்மை அழைத்துச் செல்கின்றனர் திருமதி மாலினியும் திரு சரவணனும்..

பகுதி 1




பகுதி 2



படச்சுருள்களை அனுப்பியவர் : ஓலைச்சுவடி நிருபர் திரு.கலையரசு

நண்பன் நாளிதழின் 01-03-2008ற்கான முதல் பக்கச் செய்தி..

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP