திருவெம்பாவை - பாடல் 1

>> Sunday, November 30, 2008

அருள் வடிவானது இறை, அன்பின் திருஉருவம் இறை, சிந்திக்குந்தோறும் தெவிட்டாத அமுது இறை. இந்த இறையை ஏத்தி வழிபடுவதுதான் மானிடப் பிறவியின் உயர்வு ஏற்றம் எல்லாம். அதுவும், மகளிர் வழிபாடே தனி. இறையை சக்தியாகப் பார்க்கின்ற பொழுது தமக்கும் அதற்கும் ஒரு தொடர்பு உண்டு என்பதை மகளிர் உணர்கின்றார்கள். இந்த உணர்ச்சியின் அடிப்படையில் எழுந்த ஒளிக்கதிர்தான் திருவெம்பாவை.


திருவெம்பாவை : திரு, தெய்வத் தன்மையைக் குறிக்கின்றது. எம்- என்பது உயிர்த் தன்மையை உணர்த்துகின்றது. பாவை - வழிபாட்டிற்கு உகந்த உருவம். ஆகவே திருவெம்பாவையின் திரண்ட பொருள், தெய்வத்தன்மை வாய்ந்த திருவருள் எங்களோடு இணைந்து இயங்குகின்றது; எங்களுக்குத் துணையாய் நிற்கின்றது; நாங்கள் செய்யும் நோன்பினைப் பாவைத் திருவுருவில் நின்று ஏற்கின்றது. - ஏற்றுப் பயனளிக்கிறது என்பதாகும். இப்பாடல்களில் பாவை சிறப்பிடம் பெற்றதால், ஒவ்வொரு பாடலின் முடிவிலும்எம் பாவாய்' என்று அமைந்துள்ளது. ஏனென்றால், இந்தத் திருத்தொடரை இடைவிடாது நினைவுகூர்தல் வேண்டும். ‘ஏலோரெம்பாவாய்' என்பதில் ஏலும் ஓரும் அசைகள்; பாவாய் - விளித்தல். பாவை நோன்பு நோற்கும் பெண்கள்பாவாய்' என அழைக்கப்படுகின்றனர்.

திருவெம்பாவை

பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வனசெவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

காட்சி விளக்கம் :

பொழுது புலர இன்னும் வெகுநேரம் உள்ளது. சில கன்னிப் பெண்கள் பக்தி மேலீட்டால் கிழக்கு வெளுக்கும் முன்னே எழுந்துவிட்டார்கள். தோழி ஒருத்தி துயில் நீங்காது உறங்குகின்றாள். அவளை எழுப்பி எம்பெருமானின் பெருமையை ஏத்தச் செய்ய வேண்டும். அதற்காகப் பாடுகிறார்கள்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ

முதலும், முடிவும் இல்லாத சோதி வடிவானவன் இறைவன். ஒண்சுடர் ஒப்பற்ற நாதன் அவன். தேசுடை விளக்கு அவன். செழுஞ்சுடர் மூர்த்தி அவன். அவனைப் புகழ்ந்து நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம். அதைக் கேட்டுங்கூட நீ உறங்குகின்றனையே, இது என்ன வேடிக்கை? யாம் மட்டும் பாடுகிறோம், நீயும் வந்து பாடுவதுதானே நியாயம்.

நீ வாள்தடங்கண்ணி. வாள் போன்று கூர்மையான கண்களையுடைய நங்கை. ஒளி பொருந்திய, அகல விழிகளையும் கொண்ட மங்கை. ஆம், பார்க்க வாளை ஒத்த கூர்மை கொண்டது உன் கண்கள். பிறர் பார்த்து மகிழ அகலமான விழிகள்.


வளருதியோ.” ஒளி பொருந்திய உன் கண்கள் ஒளியைக் காணாது உறங்குகின்றனவோ என்று பாங்காகக் கேட்கின்றார்கள் பாவைகள்.

மீண்டும் தொடர்கிறது பாட்டு :

வன்செவியோ நின் செவிதான் : ”நின் செவிகள்தாம் செவிடோ? காதுகள் திறந்துதானே இருக்கின்றன. அப்படி இருந்தும் ஏன் கேட்கவில்லை? இறைவன் திருவடிகளை வாழ்த்திய வாழ்த்தொலி நெடுந்தூரம் கேட்கும். வீதி முழுவதும் ஒலிக்கின்றது. கேட்ட மாத்திரத்தில் வீட்டுடைப் பெண்டிர், விளக்கேற்றி மாடத்தில் வைக்கின்றார்கள். என்னதான் உன் செவியோ?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி,விம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள், கிடந்தாள், என்னே என்னே.”

உன்னைப்பற்றிச் சொன்னார்கள், மலர் பரப்பிய படுக்கையினின்றும் புரண்டு எழுந்து விம்மி வெடிப்பாள் ; தேம்பி தேம்பி அழுது தன்னை மறந்திருப்பாள் என்று, ஆனால் ஒன்றுக்கும் முடியாமல் இப்படிக் கிடக்கிறாயே. எங்கள் தோழியே இதுவோ உன் தன்மை! வியப்பு, வியப்பு.

ஈதேஎந் தோழி, பரிசேலோர் எம்பாவாய்

ஏலோர் எம்பாவாய் ஏலோர் : ஓர் ஆசை. “நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளாயோ, எங்கள் தோழி!”


***

இறைவன் பெயர் ஒலிக்கக் கேட்டதும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்டிர்களும் எழுந்து விடுகின்றனர். இச்சூழ்நிலையில் தங்களுடைய தோழியொருத்தி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவளை துயிலெழச் செய்ய பாடுகிறார்கள். கதிரவன் உதிப்பதற்கு முன் பெண்டிர்கள் துயிலினின்று உதித்திட வேண்டும் என்பது தமிழர்களுடைய மரபாக இருந்து வந்துள்ளது. கதிரவன் தன் செங்கிரணங்களால் உலகை அலங்கரிப்பதற்குள், மரபுவழிப் பெண்டிர்கள் அதிகாலையிலேயே தன் மனையை மெழுகி சுத்தம் செய்து, காலைக்கடன் முடித்து, மாக்கோலமிட்டு வீட்டை அலங்கரித்துவிடுவது மரபாக இருந்து வந்துள்ளது.

குளித்தப் பின்பே மனையில் விளக்கேற்றி, சமையல் அடுப்பில் தீயை மூட்ட வேண்டும் என்ற வழக்கத்தையும் நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

இன்று என்ன நடக்கிறது?

இக்கால நவநாகரீகப் பெண்கள் எழும் நேரம் அவர்களுக்கே தெரியாது! கதிரவன் உதித்தப்பின்பே பலர் எழுகின்றனர். தாமதமாக எழுந்தது மட்டுமல்லாமல் தலைவிரிக் கோலமாக, பல் விலக்காது சமையலறையில் நுழைந்து அடுப்பைப் பற்ற வைப்பார்கள். இது பல குடும்பங்களில் நடக்கிறது. நெகிழியால் ஆன செயற்கை கோலங்கள் வீட்டின் வாசலை அலங்கரிப்பதால் மாக்கோலமாவது மண்ணாங்கட்டியாவது! செயற்கைக் கோலங்களை வீட்டு வாசலில் ஒட்டுவதன் மூலம் கோலமிடுவதின் உண்மை நோக்கமே அங்கு அடிப்பட்டு விடுகிறது. ஏதோ அத்திப்பூத்தாற்போல் பொங்கலுக்கோ, தீபாவளிக்கோ கோலமிடுகிறேன் பேர்வழியென்று ரசாயனக் கலவையிலான மாவைக் கொண்டு கோலமிடுவர். பாவம், அதைத் தின்ன வந்த சிறு உயிர்களான எறும்புகள் கூண்டோடு காலி! சிலர் வீட்டினுள் பூச்சிகள் நுழையாதவாறு ஆங்காங்கே பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்திருப்பார்கள்.

ஆனால் இவர்கள் போடும் இந்தவகை கோலமே அங்குள்ள சிறு உயிர்களை கூண்டோடு அழித்துவிடும்! பூச்சிக் கொல்லி மருந்துக்கு வேலையில்லை!

குளிக்காமலேயே அடுப்படியில் சமையல் நடப்பது ஒரு புறமிருக்க, காலையில் இறைவணக்கம் வானொலி பாடிக் கொண்டிருக்கும். வாயில் ஒரு தேவாரம் திருவாசகம் என முணுமுணுப்பதுக் கூடக் கிடையாது! தெரிந்தால்தானே பாடுவதற்கு! அதற்குதான் இருக்கிறதே வானொலி, ஒலிநாடாவையோ குறுந்தட்டையோ நுழைத்து விட்டால், அது ஒருபுறம் கத்திக் கொண்டிருக்கும். இவர்களின் வேலை ஊதுவத்தி கொளுத்துவது, சாம்பிராணி போடுவது, மணியடிப்பது! இதைவிட்டால் நம் மகளிருக்கு வேறென்னத் தெரியப் போகிறது. இதுதான் இறைமைக்கு கொடுக்கும் மதிப்பா..? இதைத்தானே பலகாலங்களாக பரம்பரைப் பரம்பரையாக நாம் செய்துக் கொண்டிருக்கிறோம்.

இப்பொழுதே இப்படியென்றால் அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்குமோ...?!

எதையாவது உறுப்படியாகச் செய்ய வேண்டுமென்று ஒரு சிலருக்கே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் பெரும்பான்மையினருக்கு ‘பழையக் குருடி, கதைவத் திறடி' கதைதான். அடுத்த தலைமுறையினரையும் இதேப்போன்று அச்சுவார்த்து எடுப்பதற்கு தயாராக இருங்கள். மேற்கூறிய விடயங்கள் ஆண்களுக்கும் பொருந்தும்!

அடுத்தப் பதிவில் 'திருவெம்பாவை பாடல் 2-இன் விளக்கத்தினையும்பாவை நோன்பு' என்றால் என்னவென்றும் பார்ப்போம்.

Read more...

பினாங்கு மக்கள் சக்தியின் 25 நவம்பர் பிராத்தனை & யாகம்..

>> Wednesday, November 26, 2008

மலேசிய இந்தியர்களின் எழுச்சி நாளான 25 நவம்பரன்று பினாங்கு மக்கள் சக்தியினர் ஏற்பாட்டில், தண்ணீர்மலை விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை மற்றும் யாகம் நடந்தேறியது. மாலை 4.30 மணியளவில் தொடங்கிய பிரார்த்தனை இரவு 8.30 மணியளவில் நிறைவையடைந்தது. அந்நிகழ்வின் நிழற்படங்களும் காணொளி காட்சியும் உங்கள் பார்வைக்கு..





போராட்டம் தொடரும்...

Read more...

எழுச்சி!

>> Tuesday, November 25, 2008


மலையக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நாளாக 25 நவம்பர் முத்திரை பதித்து விட்டது! கடந்த 51 ஆண்டுகளாக பிரித்தாளும் கொள்கைகளாலும், மலாய் மேலாண்மை கோட்பாட்டை முன்னிறுத்தி செயல்முறைப்படுத்தப்பட்ட புதியப் பொருளாதாரக் கொள்கைகளாலும், பல்லின மக்கள் வாழும் நாட்டை கூறுபோட்டு வைத்திருந்த அம்னோ அரசாங்கத்தை கதிகலங்க வைத்த தினம் நவம்பர் 25!

மலேசியா தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை அனைவருக்கும் புரியும்படியாக இடித்துரைத்த பெருமை மலேசிய இந்தியர்களையேச் சாரும்! அந்நிய ஆதிக்கத்திடமிருந்து விடுதலையடைந்து 51 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மலேசியா ஒரு தெளிவான இலக்கு இல்லாமல் புற வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, நாட்டு குடிமக்களை ஓரங்கட்டி வருகிறது. உலகின் முதலாம்தர சேவை, உலகின் உயர்ந்த கட்டிடம், சிறந்த விமான நிலையம், இவைகளையா ஒரு நாட்டின் முக்கிய வளர்ச்சியென்பது? நாட்டு வளர்ச்சியை நிர்ணயிப்பதில் எந்த அளவுகோலை நாம் பயன்படுத்த வேண்டும்? பல்லின மக்கள் வாழும் மலேசியாவிற்கு அடிப்படை இன நல்லிணக்கமும், இனங்களுக்கிடையிலான சரிசமமானப் பொருளாதாரப் பங்கீடும்தானே. இவ்விடயத்தில் மட்டும் மலேசியா மூன்றாம் தர சிந்தனையை கடைப்பிடித்து வருவது ஏன்? இவ்விரு அம்சங்களையும் முன்னிறுத்தி வாங்கப்பட்டதுதான் நாட்டின் சுதந்திரம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!

இன்று மலாய் மேலாண்மை கோட்பாட்டை பற்றி வெளிப்படையாகவே கூச்சலிட்டு கெரிசு கத்தியை நீட்டும் இனவாத அரசியல்வாதிகள், சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு அப்படி பேசியிருந்தால் சுதந்திரம் எளிதில் கிட்டியிருக்குமா?

1956-ல் கூட்டப்பட்ட ரீட் ஆணையம் மலாயாவின் அரசியலமைப்புச் சட்டதிட்டங்களை நிகழ்கால நடப்பிற்கு ஏதுவாக மட்டுமல்லாது எதிர்கால சந்ததியினர் நன்மைபெற வேண்டும் எனும் நோக்கில் வரையறுத்தார்கள். நாட்டின் தலையாயச் சட்டமான கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் நாட்டிற்கும், நாட்டு வளர்ச்சிக்கும், குடிமக்களின் நல்வாழ்விற்குமாக கவனமாக வகுக்கப்பட்டது.

ஆனால், இன்று அரசியலமைப்புச் சட்டம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா?

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 8(1), 8(2) :-

சட்டத்தின்கீழ் அனைவரும் சமம். அதேச் சட்டம் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
நாட்டின் எந்தவொரு குடிமகனும் இனம், மொழி, சமயம், வம்சாவளி, பால், பிறப்பிடம் போன்ற காரணங்களால் ஒடுக்கப்பட்டு சம உரிமை மறுப்பிற்கு ஆளாவது சட்டப்படி குற்றம்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 10(1) :-

ஒவ்வொரு மலேசியக் குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடும் உரிமை, சங்கங்கள் அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 11 :-

இசுலாம், கூட்டரசு பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ சமயமாகத் திகழும். ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னுடைய சமயத்தைப் பின்பற்றுவதற்கும் பரப்புரை செய்வதற்கும் முழு உரிமையுண்டு.

இங்கு இசுலாம் மதம் நாட்டின் அதிகாரப்பூர்வ சமயம் என்று குறிப்பிடப்படவில்லை என்பதை கவனிக்கவும்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 153 :-

நாட்டின் மாமன்னர் மலாய் இனத்தவருக்கும், நாட்டின் பிற பழங்குடியினருக்குமுரிய சிறப்பு நிலைகள் மற்றும் பிற இனத்தவரின் சட்டப்பூர்வ தேவைகளை பாதுகாக்க வேண்டும். அரசாங்க ஊழியர்கள் இன அடிப்படையில் அல்லாது கவனிக்கப்பட வேண்டும்.

மலாய்க்காரர்களுக்கான சிறப்பு நிலையானது சிறிது காலத்திற்குப் பிறகு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என ரீட் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், மலாய் இனத்தவரின் பொருளாதார வளர்ச்சியானது பிற இனத்தவருடன் ஒப்பிடுகையில் மேலும் பின்தங்கியிருப்பதாகக் கூறி, இச்சலுகையானது புதியப் பொருளாதாரக் கொள்கையின்வழி மறு அவதாரம் கண்டது. இருப்பினும் இக்கொள்கையின்வழி நன்மை அடைந்தவர்கள் மலாய் இனத்தவர் அல்ல, அம்னோ அரசியல்வாதிகள் மட்டுமே.

மேற்குறிப்பிடப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்கள் இன்று முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றனவா? இல்லையென்பதுதான் உண்மை. அப்படியென்றால் அரசியலமைப்புச் சட்டம் பங்கப்படுத்தப்பட்டு வருகிறது என்றுதானே அர்த்தமாகிறது!

நாட்டின் முதுகெலும்பாகத் திகழக்கூடிய அரசியலமைப்புச் சட்டங்கள், சட்டத் சீர்த்திருத்தங்கள் என்றப் பெயரில் பங்கப்படுத்தப்பட்டு இன்று நமக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய உரிமைகள் பலவும் இழந்து நிற்கிறோமே!

இதுதான் நம் கவலை, நம் விரக்தி! அரசியல் லாபங்களுக்காக நடத்தப்பெறும் சட்ட சீர்க்கேடுகளை பலகாலங்களாக அவதானித்து வந்த திரு.வேதமூர்த்தியும், திரு.உதயகுமாரும் இதற்கொரு தீர்வுகாண முனைந்தனர்.

இண்ட்ராஃபின் உதயம்!

நம் சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்? எதனால் உந்தப்பட்டு மலேசிய இந்தியர்கள் தலைநகர் வீதிகளில் மாபெரும் பேரணியாகத் திரண்டனர்?

மலேசிய இந்தியர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் என்று கூறும்பொழுது, அவை பூதாகரமாக்கப்பட்டதற்கான காரணங்களை புரிந்துக் கொள்ள வேண்டும். நவம்பர் 25 அன்று கூடிய மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் நடைமுறைக் கொள்கைகளால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்றே கூறலாம். ஆலய உடைப்பில் வெகுண்டெழுந்தவர்கள், வேலை கிடைக்காது திண்டாடுபவர்கள், தகுதியிருந்தும் மேல்நிலைப் படிப்பை மேற்கொள்ள இயலாதவர்கள், புறம்போக்கு நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள், மேம்பாட்டு திட்டங்களின்வழி இடப்பெயர்வு செய்யப்பட்டவர்கள், அரசாங்க அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டவர்கள், காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டவர்கள், இனவாதத்தை எதிர்ப்பவர்கள், அரசியல் போக்குகளை அவதானிப்பவர்கள், சமுதாய ஆர்வலர்கள், சட்டம் தெரிந்தவர்கள் என ஒரு பெரிய கலவையை அன்று நம்மால் காண முடிந்தது.



கடந்த 51 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்கள் அரசாங்கக் கொள்கைகளின்வழி பலவகையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் பொறுமையாகவே இருந்து வந்துள்ளனர். அதற்குக் காரணம் அரசு இயந்திரங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலும் சட்ட விழிப்புணர்வு இல்லாமையும்தான். உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், தேச நிந்தனைச் சட்டம் என மக்களின் கருத்துச் சுதந்திரம் விலங்கிடப்பட்ட நிலையில், அம்னோ அரசாங்கம் தன் இருப்பை பலப்படுத்திக் கொள்ள ஊடகம், பொருளாதாரம், நீதித்துறை என ஒவ்வொரு துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தது.

இந்நிலையில்தான் இனவாத அரசியல் சமய வழிப்பாட்டுத் தளங்களிலும் தன் கைவரிசையைக் காட்ட முனைந்தது. ஒன்றா, இரண்டா.. நாடெங்கும் பல 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த, சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட பல இந்து ஆலயங்கள் உடைப்பட ஆரம்பித்தன. இங்குதான் மலேசிய இந்தியர்களின் உணர்வுகள் கொதித்தெழுவதற்கான முதல் அச்சாணி போடப் பட்டது. இரண்டாவதாக, காவல்த்துறையின் தடுப்புக் காவலில் பல மலேசிய இந்தியர்களை அடித்து துன்புறுத்தியதும், மரணம் விளைவித்ததும் மனித உரிமை இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தன. மூன்றாவதாக மதமாற்றம் குறித்து காட்டப்படும் பாராபட்சமும், இறந்தவர்களின் உடலை சமய இயக்கங்கள் அபகரித்த சம்பவங்களும் பலரின் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பின.


எனவே, சமுதாயத்தின் மேல்மட்ட கல்விமான்கள் முதல் அடிமட்ட உடலுழைப்புத் தொழிலாளிவரை அரசாங்கக் கொள்கைகளைக் கண்டு வெறுப்படைந்தவர்கள்தான் 25 நவம்பரன்று ஒன்று கூடிய கூட்டம் என்று கூறலாம். இந்த மாபெரும் பேரணி நடைப்பெறுவதற்கு முன்பு நாடெங்கும் பல பரப்புரைகள் நடைப்பெற்றன. இந்தக் கருத்தரங்குகளில் மக்களின் கூட்டம் எதிர்ப்பாரா வகையில் வெள்ளமென திரண்டிருந்தது. அனைவரும் இதுபோன்ற கருத்தரங்குகளில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று பலகாலமாக எதிர்ப்பார்த்தவர்களைபோல் ஆதரவை வாரி வழங்கினர். இதற்கு என்ன காரணம்? உண்மை வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும்! இதற்கு ஒரு முடிவான தீர்வு காண வேண்டும் என அனைவருள்ளும் ஒரு துடிப்பு!

ஆனால், ஒரு மகத்தான பேரணியைக் கூட்டி அரசாங்கத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பது இண்ட்ராஃபின் ஆரம்பக்கால நோக்கம் கிடையாது. சட்டத்திற்கு உட்பட்டு அரசிடம் முறையாக பல மகசர்களை இண்ட்ராஃப் தலைவர்கள் வழங்கினர். ஆனால் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல, மகசர்கள் அனைத்தும் வெற்றுக் காகிதங்களாகி குப்பைக்குத் தொட்டிக்குப் போயின!

அப்பொழுதுதான் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகள் உதயமானது!

மலேசிய இந்தியர்கள் இந்நாட்டில் மூன்றாம்தர குடிமக்களாக நடத்தப்பெறுவதாக ஆதாரங்களை முன்னிறுத்தி வரையப்பட்டதுதான் இண்ட்ராஃப் 18 கோரிக்கைகள்.

அதன் முதல் கோரிக்கையே, "கடந்த 51 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டம் பங்கப்படுத்தபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!" என்று கேட்கிறது. சரியான கோரிக்கை! அரசியலமைப்புச் சட்டம் பங்கப்படுத்தபடாமல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சரிசமமான பொருளாதாரப் பங்கீடு, சமமான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, முறையான ஏழ்மை ஒழிப்புத் திட்டம், சமயச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகியவை கிடைக்கப்பெற்ற ஒரு நாடாக மலேசியா இன்று திகழ்ந்திருக்கும்! பல்லின மக்கள் பாதுகாப்பாக வாழும் ஒரு சொர்க்க நாடாக இருந்திருக்கும்!

மேற்கூறிய அம்சங்களனைத்தும் இனம், மொழி, சமயம் எனும் பிரிவினைகளை முன்னெடுத்து செயல்முறைப்படுத்தப்படுவதனால்தான் இன்று மலேசியாவில் இன நல்லிணக்கம் என்பது எட்டாக் கனியாக இருக்கின்றது.

இப்பிரிவினைகளைக் களையெடுக்கும் முயற்சியாக இண்ட்ராஃப்பின் மாபெரும் பேரணி அமைந்தது என்றால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே! காலங்காலமாக அரசியல் கொள்கைகளினால் அடிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சமுதாயம் தன்னை சம உரிமைப் போராட்டத்திற்காகத் தயார்படுத்திக்கொண்ட தினம் 25 நவம்பர்!

இன்று ஓராண்டைக் கடந்து வந்து விட்டோம்! எத்தனை சவால்கள், மிரட்டல்கள், அடிகள் என வரிசையாக நமக்கு பலத் தடைக்கற்கள் இடர் கொடுத்தாலும், அனைத்தையும் படிக்கற்களாக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம். இனி மலேசிய இந்திய சமுதாயம் விழிப்புணர்வு என்ற போராட்டத்தை தொடங்க வேண்டும்! சட்டங்கள், அரசியல் கொள்கைகள் எப்படி அமுல்படுத்தப்படுகின்றன என்பதனை அனைவரும் கவனமாக அவதானிக்க வேண்டும்!

இவையனைத்தையும்விட மிக முக்கியமாக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! உணர்வை இழக்காதிருக்க வேண்டும்! இண்ட்ராஃப் தலைவர்களின் தியாகங்களை மறவாமல் இருக்க வேண்டும்! எதிர்கால சந்ததியினர் விடுதலைக்காக விதைக்கப்பட வேண்டும்!

இன்று நாடுதழுவிய நிலையில் நடத்தப்பெறும் மக்கள் சக்தியின் நிகழ்வுகளில் அனைவரும் திரளாகப் பங்குகொண்டு, தடுப்புக் காவலில் அவதியுறும் சகோதரர்களுக்கும் லண்டனில் அரசியல் தஞ்சம் புகுந்த சகோதரருக்கும் பிரார்த்தனைகள் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்!

வாழ்க மக்கள் சக்தி!


போராட்டம் தொடரும்..

Read more...

கைப்பேசியின்வழி தமிழில் மலேசியா கினி செய்திகள்!

>> Monday, November 24, 2008

உள்நாட்டில் நடைப்பெறும் சம்பவங்களைச் சுடச் சுட அறிந்துக் கொள்ள வேண்டுமா? ஜாவா செயலி கொண்ட கைப்பேசிகளின்வழி மலேசியா கினி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் 'மொபைல் கினி' மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள்!


இச்சேவையின்வழி தமிழ் மொழியிலும் செய்திகளைக் கைப்பேசியின்வழி பெறலாம் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். நாடறிந்த தமிழறிஞர் முனைவர் திரு.முரசு நெடுமாறன் அவர்களின் மகன் திரு.முத்து நெடுமாறனின் கைவண்ண்த்தில் உருப்பெற்ற இக்கைப்பேசி செயலியானது இப்பிராந்தியத்திலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். முரசு தொடர்புத்துறை நிறுவனத்தின் தோற்றுநரும் தொழிநுட்ப வரைகலைஞருமான திரு.முத்து நெடுமாறன் கூறுகையில், மலேசியா கினியுடன் தொழில்நுட்ப ரீதியில் இணைந்து பணியாற்றுவதில் தாம் மிக்க மகிழ்வதாகவும், மொழி மேலாண்மை, செயல்த்திறன், அதிவேகத் தகவல் வழங்குதல் போன்ற கூறுகளில் இச்செயலியானது நிச்சயம் ஒரு வெற்றிப் பெற்ற சேவைதான் என்றார் அவர்.

மலேசியா கினி செய்திகள் கைப்பேசிகளின்வழி மக்களைச் சென்றடையவிருப்பது தமக்கு மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இணையச் சேவையின் தரத்திற்கொப்ப இச்செயலி செயல்படும் என்று மலேசியா கினியின் தலைமை நிர்வாகி திரு.பிரேமேசு சந்திரன் கூறினார்.

முதல் 30 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இச்சேவையில் மலேசியா கினியின் சுடச் சுடச் செய்திகளை முழுமையாகப் படிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 30 நாட்கள் கழித்து சந்தாதாரர்களுக்கு மட்டுமே முழு செய்திகளும் வழங்கப்படும். சந்தாதாரர் அல்லாதவர்கள் செய்திகளின் சுருக்கத்தினைப் படித்து அறிந்துக் கொள்ளலாம். அதோடு சுருக்கச் செய்திகளை பிற நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் சேவையும் இதில் அடங்கியுள்ளது. இச்சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் பின்னூட்டம் இடுதல், கருத்து கணிப்புகளுக்கு வாக்களித்தல் போன்ற வசதிகள் வரவிருக்கின்றன.

இச்சேவையை ஜாவா செயலி கொண்ட கைப்பேசிகளில் மட்டுமே பெற முடியும். இச்சேவையை இலவசமாக நிருவ உங்கள் கைப்பேசியில் குறுந்தகவல் சேவைக்குச் சென்று "mk" என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து 32577 என்ற எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

இவ்வசதியை தமிழிலும் ஏற்படுத்திக் கொடுத்த முரசு நிறுவனத்திற்கும் மலேசியா கினி ஊடகத்திற்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்!

மலேசியா கினி நிர்வாகத்திடம் ஒரு வேண்டுகோள். மலேசியா கினி காணொளி தளத்தில் தமிழ்ப் பிரிவு ஒன்றிருந்தது. தற்போது மூன்று மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன, தமிழ்ப் பிரிவு விடுபட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்விடயம் குறித்து மலேசியாகினியிடம் பலரும் மின்னஞ்சல்வழி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Read more...

25 நவம்பர் 2008 - பிராத்தனைகள்

>> Saturday, November 22, 2008

மலேசிய இந்தியர்களின் ஒற்றுமைக்காக நடத்தப்பெறும் பிராத்தனைகள்.

பத்துமலை



இரவு 7 மணியளவில் பட்டவெர்த் மகா மாரியம்மன் ஆலயத்தில் நடத்தப்பெறும் பிராத்தனைகளில் கலந்துக் கொள்பவர்கள், அன்று மாலை 4.30 மணியளவில் தண்ணீர்மலை விநாயகர் ஆலயத்தில் நடைப்பெறும் சிறப்பு யாகத்திலும் கலந்துக் கொள்ளலாம்.

தண்ணீர்மலை

இரு கையேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்:

பத்துமலை

தண்ணீர்மலை

Read more...

மறக்கப்பட்டு வரும் தமிழர் சமயப் பண்பாடு

சமயம் என்றாலே, தான் கண்டு வாழ்ந்த இயற்கையின்பால் மனிதனுக்கு எழுந்த உணர்வுகளின் அக,புற வெளிப்பாடு என்று கூறலாம். இந்த உணர்வுகள் பண்பட்ட நெறியாக வெளிக்கொணரப்பட்டது நாகரீகங்கள் எழுச்சி பெற்ற காலத்தில்தான். உலக சரித்திரத்தில் சமயத்தை அடிப்படையாகக் கொண்டே மனித நாகரீகங்கள் தோற்றம் கண்டன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சுமேரியா, எகிப்து, சிந்து சமவெளி, மாயா, சீனா போன்ற ஆதிகால நாகரீகங்களில் வாழ்ந்த மக்கள், ஏதோ ஒருவகையில் இந்த இயற்கையோடு தங்களுக்குள்ள தொடர்பை வெளிப்படுத்த முனைந்த தடையங்கள் பல பரந்து காணக் கிடக்கின்றன. ஆனால் இந்நாகரீகங்களோடு தமிழர்களின் நாகரீகத்தை ஒரு ஒப்பீடு செய்து பார்த்தால், ஆதிகாலந்தொட்டே தமிழர்களின் சமய நம்பிக்கையானது புற வழிபாடுகளைவிட அக வழிப்பாட்டு தத்துவத்திற்கே அதிகம் மதிப்பு கொடுத்து வந்துள்ளது புலனாகிறது.

பாரத கண்டத்தில், அதிலும் முக்கியமாக தமிழகத்தில் சமய இலக்கியத்தின் வளர்ச்சியைப்போல் வேறெந்த நாகரீகமும் பெற்றிருக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறலாம். சங்ககாலம் தொட்டே தமிழர்கள் மொழியின் வளர்ச்சிக்காக சமயத்தையும், சமயத்தின் வளர்ச்சிக்காக மொழியையும் போற்றி பேணி வந்துள்ளார்கள். தமிழர்களின் சம இலக்கியங்களில் காணக் கிடக்கும் பலவகையான வழிப்பாடுகளை, தத்துவ அடிப்படையில் ஆய்வு செய்து அதற்கான விளக்கங்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிய பல சமயப் பெரியார்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.


அந்தச் சமயப் பெரியார்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர், ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய மாணிக்கவாசகர் ஆவார். படித்தாலும், பக்கம் நின்று கேட்டாலும், கருங்கல் மனத்தையும் கனிந்துருகச் செய்யும் திருவாசகம் என்னும் தேனை உலகிற்கு வழங்கிய பெருமை அவரையேச் சாரும். தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கும் இணையற்ற பாடல்கள் பலவற்றைக் கொண்டது, திருவாசகமாகும். அத்திருவாசகத்திலுள்ள இரு தேன்துளிகளே 'திருவெம்பாவை' , 'திருப்பள்ளியெழுச்சி' ஆகியனவாகும்.

திருவெம்பாவை என்றால் என்ன?

இருள் விலகுமுன்னே இளம்பெண்கள் சிலர் எழுந்து, தம் தோழியரின் இல்லந்தோறும் செல்வர்; துயின்றுகொண்டிருக்கும் அவர்களை எழுப்பி அழைத்துச் சென்று நீர் நிலையில் நீராடுவர்; பின்பு, மணலால் 'பாவை' போன்ற ஓர் உருவம் அமைத்து, நாடு செழிக்க வேண்டும், நல்ல கணவர் தமக்கு வாய்க்க வேண்டும் என வேண்டி அதனை வணங்குவர். இதுவே திருவெம்பாவை எனப்படும்.



இதற்குத் தத்துவ அடிப்படையில் வேறு பொருளும் கூறுவர்.

அஃதாவது, பக்குவம் முதிர்ந்த ஆன்மா, மல இருளில் அழுந்திக் கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவை எழுப்பி, இறைவன் அருள்நீரில் திளைப்பதற்கு அழைத்துச் செல்வதாய்க் கூறுவர்.

திருவெம்பாவை என்னும் பகுதியில் அமைந்துள்ள பாடல்கள், ஒருவருடன் ஒருவர் உரையாடும் நாடகக் காட்சிகள் போல் அமைந்துள்ளன. ஓரளவு தமிழ் கற்றவரும் விரும்பிப் படிக்கும்வண்ணம் அழகிய சந்த நடையில் அப்பாக்கள் ஆக்கப்பட்டுள்ளன.

திருவாசகத் தேனடையில் உள்ள மற்றொரு துளி, 'திருப்பள்ளியெழுச்சி' ஆகும்.

'திருப்பள்ளியெழுச்சி' என்பதற்குப் பொருள் யாது?

இறைவனைத் துயில் எழுப்புதல் என்பதாகும்.

அப்படியென்றால், இறைவன் உறங்கிக் கொண்டிருக்கின்றானா?

அன்று.

இந்த ஊன் உடம்பாகிய ஆலயத்தில், உள்ளமாகிய பெருங்கோயிலில் இறைவன் வீற்றிருக்கிறான். ஆனால், ஆன்மா அந்த இறைவனைப் பற்றாது, ஐம்புலன் வழிப்பட்டு உலகாசையில் அழுந்தியுள்ளது. அவ்வாறு இறைவனை மறந்த நிலையே - மறைத்துள்ள நிலையே - இறைவன் துயில்வதாய்க் குறிப்பிடப்படுகிறது. மறைத்துள்ள திரையை விலக்கி, ஆன்மாவை இறைவனோடு ஒன்றச் செய்வதற்காக - இறைவனை நெஞ்சகத்தில் நிலை நிறுத்துவதற்காக - பாடப்படும் பாடல்களே திருப்பள்ளியெழுச்சியாகும்.

இன்று திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. அப்படியென்றால் என்னவென்று கேட்கிறார்கள் இளையோர்கள்! காலத்தால் மறக்கடிக்கப்பட்டு வரும் விரத வழிபாடுகளில் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் அடங்கும். மார்கழி மாதத்தில் இவ்விரு வழிபாடுகளும் பலங்காலந்தொட்டே தமிழ்ப் பெண்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இன்று தமிழகத்தில் ஆங்காங்கே ஆலயங்களில் மார்கழி மாத விரதம் இருந்து இவ்விரு பாடல்களும் பாடப்பட்டு வந்தாலும், எண்ணிக்கையளவில் குறைவாகவே மக்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் தாய்லாந்தில் 'த்ரியம்பா' என்றப் பெயரில் சிவனுக்கு விழா எடுக்கிறார்கள் அங்குள்ள மக்கள். நாம் இறைவனை பொன்னூஞ்சலில் வைத்து பாடுவது போலவே, அங்குள்ளவர்களும் சிவன் சிலையை பொன்னூஞ்சலில் வைத்து பாசுரங்கள் பாடுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மலேசியத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக மலேசியத் தமிழ் இளைஞிகள் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியை ஆலயங்களில் பாடுவது என்பது அரிதாகவே இருக்கிறது. ஓரிரு தேவாரக் குழுக்கள் மட்டும் ஆலயங்களில் இப்பாடல்களைப் பாட கேட்டிருக்கிறேன்.

விரதமேதும் மேற்கொள்ளாவிடினும் குறைந்த பட்சம் இவ்விருப் பாடல்களையும் பொருளுணர்ந்து அனைவரும் பாடி அதன் இன்பத்தை பெற வேண்டும் எனும் நோக்கில் 'திருவெம்பாவையையும்' திருப்பள்ளியெழுச்சியையும்' தொடர் பதிவாக இனிவரும் பதிவுகளில் இடவுள்ளேன். இதற்காக சில நூல்களை மேற்கோள்களாகக் கொள்ளவுள்ளேன்.

இப்பாடல்களனைத்தும் பொருளுணர்ந்து வாசிக்கப்படின் / பாடப்படின் உள்ளத்துக்கு நல்லதோர் அரிய விருந்தாக அமைவது திண்ணம் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்..

Read more...

பிறந்தநாள் விருது & முக்கிய புள்ளி

>> Friday, November 21, 2008


இன்றைய 'மலேசிய நண்பன்' நாளிதழில் தலையங்கச் செய்தியில் 'சாருக்கானுக்கு டத்தோ விருது, மக்களின் வாழ்த்தும் வருத்தமும்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையின் சாராம்சம் என்னவென்றால் வெளிநாட்டுப் பிரமுகருக்கு வழங்கும் 'டத்தோ' எனும் உயரிய விருது மலேசியர்களுக்கு, அதிலும் குறிப்பாக சாதனை புரிந்த பல மலேசியத் தமிழர்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை எனும் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது அக்கட்டுரை.

இக்கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எசு.எம்.முகம்மது இத்ரீசு அவர்களின் 'சுவடுகள் மறைந்தால்' எனும் நூலில் வெளிவந்தக் கட்டுரைதான் ஞாபகத்திற்கு வந்தது.

அவர் கூறும் சில கருத்துகளை நாம் அலசிப் பார்ப்போம்..

மக்களுக்கு விருது வழங்குவதில் மலேசியாவை எந்த நாடும் தோற்கடிக்க முடியாது. நம்முடைய நாட்டில் மொத்தம் 13 மாநிலங்கள். ஒவ்வொரு மாநில சுல்தான் அல்லது ஆளுநர் பிறந்தநாளுக்கும், சமுதாயத்தில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மாமன்னரின் பிறந்தநாள் என்றால் மத்திய விருதுக்கு வாய்ப்பு உண்டு. "டான் சிறீ", "டத்தோ", "பி.சே.கே", ".எம்.என்" என்று ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் பேர் பட்டங்கள் சூட்டி மகிழ்விக்கப்படுகின்றனர்.

நாட்டின், சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பதில் தப்பில்லைதான். நல்லது செய்த ஒருவருக்கு அங்கீகாரம் வழங்குவது நற்பண்புதானே. மற்றவர்களும் அதே வழியில் சேவையாற்ற வழிகோளும் ஒரு நடவடிக்கையே இது. ஆனால் இந்த விருது வழங்கும் நடவடிக்கையில் சில கெட்ட விளைவுகளும் அடங்கியே இருகின்றன. சமுதாயத்துக்கு உண்மையாக நேர்மையாக உழைக்கும் ஒருவர் பெரும்பாலும் விருதுகளை எதிர்பார்ப்பதில்லை. அதை ஒரு பொருட்டாகவே நினைப்பது கூட கிடையாது.

சேவை செய்பவர் இப்படி இருக்கையில் விருது பெற்றால் அதிலிருந்து பிற்காலங்களில் தமக்கு ஏதாவது நன்மை விளையும் என்று எதிர்பார்த்து விருதை விரைந்து நாடுபவர்களும் உண்டு. "டான் சிறீ", "டத்தோ" என்ற பட்டம் இருந்தால் மேற்கொண்டு வரும் வியாபாரத்தை இன்னும் விருத்தி செய்து கொள்ளலாம், செய்கின்ற தொழிலில் இன்னும் பெரிய பதவி, உயர்வான வாழ்க்கை என்ற பார்வையிலேயே விருதுகளுக்காக பரபரக்கிறார்கள். பெயருக்கும் முன்னால் வரும் இந்தப் பட்டங்கள் தன்னுடைய மதிப்பை உயர்த்திவிட்டதாக ஒரு மிதப்பு அவர்களுக்கு.

குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு, நேர்மையாக உழைத்தவர்களுக்கு இந்த விருது தரப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் விருது கிடைக்கும் என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. சனநாயக நாட்டில் எல்லோரும் சமம்தான். இந்த விருது வழங்கும் கலாசாரம் மக்களிடையே பேதத்தை வளர்த்து வருகிறது.

பெரிய விருந்துகளிலும், வைபவங்களிலும் முக்கிய புள்ளிகள் வரும்பொழுது பாருங்கள். வரவேற்புரை நிகழ்த்தப்படும்பொழுது யாங் ஆமாட் பெரோர்மாட், டான் சிறீ, புவான் சிறீ, டத்தோ, டத்தின்... என்று வரிசைப்படுத்திவிட்டு பிறகுதான் துவான் புவானுக்கு மரியாதை. நிகழ்வு நடந்து முடிந்த பின்பு உணவருந்துவதற்கு இவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறை ஒதுக்கப்பட்டு உணவு பரிமாறப்படுகிறது. இப்படித் தரம் பிரித்துப் பார்க்கும் பழக்கத்தை நாம் பிரிட்டிசுகாரர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம்.

எல்லா நாடுகளும், சேவையாற்றிய வீரப் பிரசைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் அங்கீகாரம் வழங்குகிறது. ஆனால் சில நாடுகள் மட்டுமே விருதுகள் வழங்கி பெயருக்கு முன்னால் பட்டத்தையும் சேர்த்து எழுதிக்கொள்ள வைத்து வாழ்நாள் முழுக்க குதூகலிக்க வைக்கிறது.

சேவை செய்தவர்களுக்கு அங்கீகாரம் தேவைதான். ஆனால் பெயருக்கு முன்னால் பட்டத்தையெல்லாம் கொடுத்து சராசரி மனிதனை விட அவர்கள் உசத்தி என்று தலை மேல் தூக்கிக் கொண்டாடுவது முறைதானா?

சிந்தித்துப் பாருங்கள்....

Read more...

வர்ணம் ஆயிரம்

>> Thursday, November 20, 2008



ஜி-மெயில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தி வரும் அன்பர்கள், தங்களின் மின்னஞ்சல் தளத்தை மெருகூட்டுவதற்கு கூகிளின் புதிய வடிவமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த வடிவமைப்புகளைத் தேர்வு செய்ய <அமைப்புகள்>க்குச் (Settings) சென்று <வடிவமைப்பை>த் (themes)- தேர்ந்தெடுக்கவும்.

இந்த வசதி இன்னும் பலருக்கு கிடைக்காமல் இருக்கலாம், பொறுத்திருங்கள்.. கூடிய விரைவில் அவ்வசதி உங்கள் மின்னஞ்சல் கதவைத் தட்டும்.

மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் : ஜி-மெயில் தளம்

Read more...

மருத்துவமனையில் உதயாவின் தாயார்!


அம்னோவின் கைப்பாவைகளான உள்துறை அமைச்சும் காவல்த்துறையும் இண்ட்ராஃப் இயக்கத்திற்கு எதிராக நடைமுறைப்படுத்திவரும் அடக்குமுறைகளுக்கு ஒரு முடிவே இல்லையென தெரிகிறது.

இரத்தகொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டும் இரைப்பை சுரப்பியில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியும் திரு.உதயகுமாரின் தாயார் திருமதி.கலைவாணி, கடந்த 12ஆம் திகதி நவம்பரன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எட்டு நாட்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இவ்விடயம் குறித்து பல முறை கமுந்திங் தடுப்புக் காவல் மைய உயரதிகாரிகளிடம், திரு.உதயகுமார் தன் தாயாரைச் சென்று சந்திக்க அனுமதி வழங்கக் கோரியும் மறுக்கப்பட்டு வந்துள்ளது. தன் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடயமே உதயகுமாருக்கு 16 நவம்பரன்றுதான் குமாரி.சாந்தியின் வழி தெரிய வந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே உதயகுமாரின் தாயார்தானா என்பதை உறுதிப்படுத்த, காவல்த்துறையின் சிறப்பு பிரிவிலிருந்து நான்கு அதிகாரிகள் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் திருமதி.கலைவாணி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு திருமதி.கலைவாணிக்கு சிகிச்சையளித்துவரும் தாதியர்களிடம் இவர்கள் துருவி துருவி கேள்விகள் கேட்டுவிட்டு, பின் நோயாளி உதயாவின் தாயார் என்பதனை நினைவூட்டல் செய்தும் எச்சரித்துவிட்டும் சென்றுள்ளனர்.

படுத்தப் படுக்கையாகக் கிடந்த திருமதி.கலைவாணியையும் அவ்வதிகாரிகள் கேள்விகள் கேட்டு துளைத்ததோடு, உதயாவைச் சந்திக்க வேண்டுமா என்றும் கேட்டுள்ளனர்.

மலேசியக் காவல்த்துறையினர் அச்சுறுத்தும் வகையிலும் மிரட்டல் பாணியிலும் மருத்துவமனை ஊழியர்களிடமும் திருமதி.கலைவாணியிடமும் கேள்விகள் கேட்டும் எச்சரிக்கை செய்தும் இருக்கின்றனர். உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு தாயை மகன் சந்திக்க அனுமதி கோருவதற்கும் இவர்களின் நடவடிக்கைகளுக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது.

நான்கு அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து கேள்விகள் கேட்பதற்குதான் இவர்களுக்கு சம்பளமா? மக்களின் பணம் இப்படித்தான் அநாவசியமாகச் செலவு செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் சிறை உயர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், உதயாவை தன் தாயைச் சென்று சந்திக்க அனுமதிக்க வேண்டும். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளார். அண்மையில் தீபாவளிக்கு கமுந்திங் சிறைக்குச் செல்வதற்கு கூட அவர் உடல்நிலை அனுமதிக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.

நன்றி.

திரு.வேதமூர்த்தி
லண்டன்

Read more...

நடிகர் எம்.என் நம்பியார் மரணம்..!

>> Wednesday, November 19, 2008


வில்லனுக்கு வில்லன் எனப் புகழப்பட்ட பிரபல நடிகர் எம்என் நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். சிறிது காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் நம்பியார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், இன்றைய முதல்வர் மு.கருணாநிதி ஆகியோருக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தவர் நம்பியார்.


பழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார் மரணம்!

சென்னை: அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.

எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நட்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:

எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.

அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் குணச்சித்திரமும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.

நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.

தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.

நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதராகவே வாழ்ந்தார் நம்பியார்.

பாசகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

அஞ்சலி

கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்தி : தட்சுதமிழ்.காம்

வில்லனாகத் திரையில் வலம் வந்தாலும் நிச வாழ்க்கையில் மனிதருள் மாணிக்கமாகவும் ஐயப்பனின் தூய பக்தராகவும் திகழ்ந்த எம்.என் நம்பியார் அவர்களின் ஆத்துமா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போமாக..

ஆயிரத்தில் ஒருவன் - காட்சி

Read more...

மலேசிய இந்தியர்களின் எழுச்சி நாள்

>> Monday, November 17, 2008

மலேசிய இந்தியர்களின் எழுச்சி நாளான நவம்பர் 25 ஓராண்டு நிறைவையொட்டி நாடுதழுவிய அளவில் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு திரு.வேதமூர்த்தி அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார். நவம்பர் 25-ஆம் நாளன்று வடமாநிலங்களில் வசிப்போர் பினாங்கு பட்டவெர்த்து மகா மாரியம்மன் ஆலயத்திலும் தென் மாநிலங்களில் வசிப்போர் பத்துமலை ஆலயத்திலும் இரவு 7 மணியளவில் பிராத்தனைக்காக ஒன்றுகூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்விரு பிராத்தனைகளிலும் கலந்துக் கொள்ள இயலாதவர்கள், தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள ஆலயத்தில் பிராத்தனையை மேற்கொள்ளலாம். பிராத்தனையின்போது 18 நெய் விளக்குகளை ஏற்றி வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இப்பதினெட்டு நெய் விளக்குகளும் மலேசிய இந்தியர்களின் 18 கோரிக்கைகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

பிரார்த்தனைகளில் கலந்துக் கொள்ள விழையும் ஆதரவாளர்கள் தத்தம் வசிப்பிடத்தின் ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புக் கொண்டு பேருந்திற்கு முன்பதிவு செய்து கொள்ளவும்.

***



இதற்கிடையில் பினாங்குத் தீவு மக்கள் சக்தியினர், வருகின்ற 25 நவம்பர் அன்று பினாங்குத் தீவில் அமைந்துள்ள தண்ணீர் மலை விநாயகர் ஆலயத்தில் மாலை 4.30 மணியளவில் சிறப்பு யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சுற்றுவட்டார மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர். இந்த சிறப்பு யாகத்தில் கலந்துக் கொள்பவர்கள், பிராத்தனை முடிவுற்றதும் பட்டவெர்த் மகா மாரியம்மன் ஆலய நிகழ்வில் கலந்துக் கொள்ள வரவேற்கப்படுகின்றனர்.

இந்நிகழ்வு தொடர்பாக மேலும் தகவல் அறிய : அலைப்பேசி - 016-4827974

அனைவரும் மீண்டுமொருமுறை நம் ஒற்றுமையைப் புலப்படுத்துவோமாக!

வாழ்க மக்கள் சக்தி!

Read more...

செந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் இருவரின் வாக்குமூலம்!

>> Friday, November 14, 2008



13//11/08, செந்துல் மாவட்ட காவல்த்துறை தலைமையகம்

புகார் எண் : செந்துல்/13812/08

திரு.செயதாசு, ஆர்.எசு.தனேந்திரன் வாக்குமூலம்

நாங்கள் சட்டப்பிரிவு 111-ன் கீழ் அழைக்கப்பட்டு சங்கங்கள் சட்டம் 48(1)-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம்.

காவல்த்துறையினர் எங்களிருவரிடமும் கேட்டக் கேள்விகள் :-

  1. 22/10/08 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் எந்த பகுதியில் இருந்தீர்கள்?
  2. எதற்காக நாடாளுமன்றம் வந்தீர்கள்?
  3. அங்கு நிருபர் சந்திப்புக் கூட்டம் நிகழ்ந்ததா?
  4. அங்கு நிருபர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெறவிருப்பது உங்களுக்கு எப்படிதெரியும்?
  5. அந்த நிருபர் சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் யார்?
  6. நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் என்னென்ன பேசப்பட்டது?
  7. நீங்கள் ஏதாவதொரு இயக்கத்தைச் சார்ந்தவரா?
  8. எந்தெந்த ஊடகங்களின் நிருபர்கள் அச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்?
  9. அவ்வியக்கத்தில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?
  10. அவ்வியக்கத்தின் நோக்கம் என்ன?
  11. அவ்வியக்கம் முறையாக ஆணையம்வழி பதிவு செய்யப்பட்டுள்ளதா?
  12. எவ்வளவு நேரம் அந்நிருபர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது?
  13. அக்கூட்டத்தில் எத்தனை ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர்?
  14. மொத்தம் எத்தனைப் பேர் அந்நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்?
  15. அச்சந்திப்புக் கூட்டத்தில் கேள்வி-பதில் அங்கம் இருந்ததா?
  16. நீங்கள் ஏதாவது அறிக்கைகளை விநியோகம் செய்தீர்களா?
  17. அவ்வறிக்கையின் சாரம் என்ன?
  18. நிருபர் சந்திப்புக் கூட்டத்தின் நிலைமை எப்படி இருந்தது?
  19. இண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?
  20. இண்ட்ராஃப் இயக்கத்தின் நோக்கம் என்ன?
  21. நாடாளுமன்றத்திற்கு எப்படி வந்தீர்கள்?
  22. நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு நீங்கள் யாரிடமாவது பண உதவி பெற்றீர்களா?
  23. நீங்கள் எந்தவொரு இயக்கத்தினையாவது பிரதிநிதிக்கிறீர்களா?
  24. உங்கள் ஆதரவாளர்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா?
  25. இண்ட்ராஃப் இயக்கம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?


கேட்கப்பட்ட இக்கேள்விகளில் முதற்கேள்விக்கு மட்டுமே பதில் கூறினோம். சட்டப்பிரிவு 111(2) வழிவகுக்கும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பிற கேள்விகளுக்கு பதில் கூறாமல் அமைதி காத்தோம்.

எங்களை அழைத்து விசாரணை மேற்கொள்ளும் காவல்த்துறையினரின் நடவடிக்கையானது அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகவும் எங்களின் உரிமைகளை நாங்கள் செயல்படுத்துவதற்கு எதிரான அடக்குமுறைச் செயலாகவும் நாங்கள் கருதுகிறோம்.

ஒரு மலேசியக் குடிமகன் என்ற முறையில் நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு எங்களுக்கு சட்டப்பூர்வமான முழு உரிமையும் உண்டு. உள்த்துறை அமைச்சரின் பொய்க்கூற்றுகளை நாடாளுமன்றத்தில் ஆதாரத்தோடு அம்பலப்படுத்துவதில் எந்தவொரு தவறும் இருக்க முடியாது. தொடர்ந்து இந்நாட்டின் சட்டத்துறையையும் காவல்த்துறையையும் கைக்குள் போட்டுக் கொண்டு அம்னோ அரசாங்கம் சனநாயகத்தைக் கொன்று வருகிறது!

நாட்டு குடிமக்களை நாடாளுமன்றத்தின் வளாகத்தில் அனுமதிக்காதச் செயலானது அம்னோவிற்கு ஏற்பட்ட மற்றுமொரு வெட்கக் கேடாகும்!

திரு.செயதாசு
காவல்த்துறை கண்காணிப்பு & மனித உரிமை செயற்குழு
வாழ்க மக்கள் சக்தி!

போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP