போராட்ட நினைவலைகள்...

>> Wednesday, December 31, 2008


பி.ப : 23.59

நேற்றோடு 2008-ஆம் ஆண்டின்டைரி' தன் இறுதி பக்கத்தை நிரப்பிக் கொண்டு நிரந்தரமாக மூடிக் கொண்டுவிட்டது. தன்னுடைய கடமையையும் ஆயுளையும் முடித்துக் கொண்ட 365 பக்க டைரியின் பக்கங்களை சற்று புரட்டிப் பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். அதில் பதிந்துவிட்ட நிகழ்வுகள் இனி காலத்திற்கும் மறந்துவிட முடியாதபடி நிலைத்து நிற்பதோடு மட்டுமல்லாது, அதன் தாக்கம் இனிவரும் காலங்களில் நாமெடுக்கும் பலவகையான முடிவுகளுக்கு அச்சாணியாக அமைந்துவிடக் கூடிய சாத்தியங்கள் இருப்பதைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். குறிப்பாக உலகளவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை அடுத்த இரண்டாண்டுகளுக்கு நம்மை வாட்டி எடுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, அனைவரும் சிக்கனம் எனும் ஆயுதத்தை கையில் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை!

சோதனைக் காலம் என உலகமே வர்ணிக்கும் இந்த 2008-ஆம் ஆண்டானது மலேசிய இந்திய சமுதாயத்தை மட்டும் விட்டுவைக்கவில்லை. எதையும் போராடினால்தான் பெற முடியும் எனும் இலக்கணம் கற்றுவிட்ட மலேசிய இந்தியர்கள் 2008-ஆம் ஆண்டில் போராடிப் பெற்றதும் இழந்ததும் ஒன்றல்ல இரண்டல்ல. சோதனை இருந்தால்தான் நம்முடைய பலம் நமக்கே தெரியும். அவ்வகையில் 2008-ஆம் ஆண்டினை ஒரு புரட்சியாண்டு என வர்ணிக்கலாம். குறிப்பாக நாட்டு நிலவரங்களை தைரியமாகவும் வெளிப்படையாகவும் கருத்து தெரிவிக்கும் பக்குவத்திற்கு இளைஞர்கள் முன்வந்தது பாராட்டிற்குரிய விடயமாகும். சிந்தனைப் பரிமாற்றங்கள் வெற்றியடைவதில் மிகச் சிறந்த ஊடகமாக சாமானிய மக்கள் தேர்ந்தெடுத்தது வலைப்பதிவுகள்தான். இவை ஏற்படுத்திய தாக்கத்தினால் நாட்டின் தலையெழுத்தே மாறிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றின் மத்தியில் மலேசிய இந்தியர்கள் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வகுத்துக்கொண்ட ஓர் ஆண்டாக 2008-ஆம் ஆண்டினை கூறலாம். சிந்தனையளவில் பல மாற்றங்களைப் பெற்றுவரும் மலேசிய இந்தியர்கள் இனி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகிறது. மலேசிய இந்தியர்கள் கடந்தாண்டு கடந்துவந்த பாதைகளை , அதிலும் குறிப்பாக மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளுக்காக போராடிவரும் இண்ட்ராஃப் இயக்கம் முன்னெடுத்த சில போராட்ட நிகழ்வுகளையும், சந்தித்த சவால்களையும் சற்று நினைவுக்கூர்வோம்.

1 சனவரி - சிங்கப்பூர் தமிழனின் 5 நாட்கள் உண்ணாவிரதம் (31 திசம்பர் முதல் 4 சனவரி வரை)
(இண்ட்ராஃபின் முதல் உண்ணாநோன்புப் போராட்ட நிகழ்வு)

18 சனவரி - ஈப்போவில் 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டம்...

21 சனவரி - லண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி

23 சனவரி - பத்துமலை தைப்பூசம் புறக்கணிப்பு. பிற முக்கிய நகரங்களில் இண்ட்ராஃபின் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி

24 சனவரி - திரு.உதயகுமார் உடல்நிலை பாதிப்பு!

28 சனவரி - ஜாசினில் உண்ணா நோன்புப் போராட்டம்

டப்லினில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக அமைதி மறியல்.

1 பிப்ரவரி - பிரித்தனில் இண்ட்ராஃபின் அமைதிப் போராட்டம்..

16 பிப்ரவரி - இண்ட்ராஃபின் இரண்டாவது மாபெரும் பேரணி

8 மார்ச்சு - நாட்டின் 13-வது பொதுத் தேர்தல், மக்கள் சக்தியின் வலிமையால் 5 மாநிலங்கள் மக்கள் கூட்டணிக்கு கைமாறின.

2 ஏப்ரல் - இண்ட்ராப் ஐவரின் மேல்முறையீடு

17 ஏப்ரல் - ஜெனிவாவில் இந்து உரிமைப் ணிப்படை, வேதமூர்த்தி .நா அதிகாரிகளை ந்தித்தார்

28 ஏப்ரல் - கமுந்திங்கை நோக்கி இண்ட்ராஃபினர் மகிழ்வுந்து பயணம்

11 மே - திரு.உதயகுமாருக்கு முறையான சிகிச்சை வழங்கக் கோரி ஈப்போ, பினாங்கு,கோலாலம்பூர் ஆகிய இடங்களில் இண்ட்ராஃபினர் அமைதி மறியல்

19 சூன் - திரு.உதயகுமார் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதி..!

5 சூலை - கமுந்திங் தடுப்பு காவலுக்கு வருகைப் புரிந்த உள்துறை அமைச்சரை சந்திக்க திரு.உதயகுமார் மறுப்பு.

3 ஆகசுட்டு - தலைநகரில் இண்ட்ராஃப் கொடி அறிமுக விழா

7 ஆகசுட்டு - 54-வது காமன்வேல்ட் மாநாட்டின்போது நான்கு இண்ட்ராபினர் கைது!

11 ஆகசுட்டு - பெட்ரோனாசு இரட்டை கோபுரத்தின் முன்புறம் 30 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் உண்ணாநோன்புப் போராட்டம்

23 ஆகசுட்டு - செபராங் ஜெயாவில் நடைப்பெற்ற யாகத்தில் கலகம். 9 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது!

30,31 ஆகசுட்டு - மந்தின், நெகிரி செம்பிலானில் 24 மணிநேர மகா யாகம்,உண்ணா நோன்புப் போராட்டம்..

31 ஆகசுட்டு - இலண்டனில் இண்ட்ராஃப் அமைதி மறியல்

8 செப்தெம்பர் - இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க மனு - நீதிமன்றம் தள்ளுபடி!

8, 9 செப்தெம்பர் - இண்ட்ராஃப் பேரணியில் கைதானவர்களின் வழக்கு விசாரணை

9 செப்தெம்பர் - உலு லங்காட் ஆலயம் உலு லங்காட் ஊராட்சி மன்றத்தினரால் உடைப்பு. மக்கள் சக்தியின் கண்டனம்

13 செப்தெம்பர் - சுங்கை பட்டாணி, கெடாவில் இண்ட்ராஃபின் முதல் தேசிய மாநாடு

22 செப்தெம்பர் - இண்ட்ராஃப் பேரணியில் கைதான 27 போராளிகளுக்கு இண்ட்ராஃப் நிதி திரட்டுதல்.

27 செப்தெம்பர் - சுதந்திர சதுக்கத்தில் இண்ட்ராஃபின் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி

4 அக்தோபர் - புத்ரா உலக வாணிப மையத்தில் நடைப்பெர்ற பிரதமரின் அரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் வருகை

15 அத்தோபர் - இண்ட்ராஃப் இயக்கத்திற்கு அதிகாரப்பூர்வ தடை

22 அத்தோபர் - இண்ட்ராஃபினர் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடம் மகசர் சமர்ப்பித்தல்

23 அத்தோபர் - புத்ரா செயாவில் 11 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது (குழந்தை வைஷ்ணவி உட்பட)

24 அத்தோபர் - காசாங் நீதிமன்றத்தில் 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் வழக்கு விசாரணை

7 நவம்பர் - உதயாவின் பிறந்தநாளையொட்டி நாடெங்கிலும் சிறப்புப் பிரார்த்தனைகள்

8 நவம்பர் - உதயாவின் பிறந்தநாளையொட்டி லண்டனில் அமைதி மறியல்

13 நவம்பர் - சாணக்கிய புரியில் அமைந்திருக்கும் மலேசியத் தூதரகத்தின் முன்புறம் இண்ட்ராஃபிற்கு ஆதரவாக மனித உரிமை இயக்கங்கள் அமைதி மறியல்!

செந்தூல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் திரு.செயதாசு, திரு.தனேந்திரன் வாக்குமூலம்

15,16 நவம்பர் - கமுந்திங்கை நோக்கிய 350 கி.மீ மெதுவோட்டப் பயணம், இண்ட்ராஃபினர் ஆதரவு.

20 நவம்பர் - உதயாவின் தாயார் மருத்துவமனையில் அனுமதி! தாயைச் சந்திக்க மகனுக்கு தடை.

25 நவம்பர் - நாடெங்கிலும் 25 நவம்பர் பேரணி முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு யாகங்கள் மற்றும் பிராத்தனைகள்

9 திசம்பர் - இண்ட்ராஃப் இயக்கத்திற்கு 2008 ஆண்டிற்கான சிறந்த மனித உரிமை விருது சுவாராம் இயக்கத்தால் வழங்கப்படு கௌரவிக்கப்பட்டது.

பிரிட்டன் பிரபுக்களின் சபையில் இண்ட்ராஃப் போராட்டம் குறித்தும் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கம்.

11 திசம்பர் - 'ஜெரிட்' இயக்கத்தின் மிதிவண்டி பயணப் போராட்டத்திற்கு மக்கள் சக்தி ஆதரவு!

13 திசம்பர் - கிள்ளானின் மக்கள் சக்தி கருத்தரங்கம்

மக்கள் சக்தியினரின் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டம்

17 திசம்பர் - திரு.செயதாசு மருத்துவமனையில் அனுமதி.

21 திசம்பர் - நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளரிடம் மக்கள் சக்தியினர் மகசர் சமர்ப்பித்தனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளைத் தவிர்த்து மாநில ரீதியில் பல நிகழ்வுகள் கடந்தாண்டு நிகழ்ந்த வண்ணமே இருந்தன. இனிவருங்காலங்களில், மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைப்பெற வேண்டும். அதற்கு மக்கள் தார்மீக ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்ப்பார்போம்.

மலர்ந்துள்ள 2009 ஆண்டு சமுதாயத் தொண்டுகள் புரியும் ஆண்டாக மலரட்டும்!

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

போராட்டம் தொடரும்...

Read more...

திருவெம்பாவை - பாடல் 2

>> Saturday, December 27, 2008

முந்தையப் பதிவுகள் :

மறக்கப்பட்டு வரும் தமிழர் சமயப் பண்பாடு

திருவெம்பாவை - பாடல் 1



ஆமாம், பாவை நோன்புதான் என்ன? நல்ல மழை பெய்ய வேண்டும்; நாடு செழிக்க வேண்டும் - வீடும் வாசலும் விளங்க வேண்டும்; வாழ்க்கை மலரக் காதற்கணவரைப் பெறவேண்டும் என்ற உயர்நோக்குடன் நோக்கி நோன்பு இருப்பர். இந்த நோன்பின்போது, நெய்யும் பாலும் தவிர்த்து விரதம் இருப்பர். இந்த நோன்பு மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் நிறைவுறுவது. மதி நிறை நன்னாளை நாம் பொதுவாக திருவாதிரை என்கிறோம். இது பத்து நாள் கொண்டாடப்படும். இக்காலத்து நீராடல், மார்கழி நீராட்டமாகும். மார்கழி முழுவதும், விடிவெள்ளிக்கு முன்னே நீராடி, அம்மனை வணங்குவர்.

திருவாதிரைக்குப் பின், தைத்திங்கள். தை பிறந்ததும் விரதம் முடிந்து நீராடுவார்கள். அப்பொழுது ஆடும் ஆடல் - தை நீராடல். விரதத்தை வெற்றியோடு முடித்துவிட்டோம் என்ற உவகை உள்ளம் எல்லாம் பொங்கி வழிகின்றது. அந்த உள்ளக் கிடக்கையோடு தம்மை ஈன்ற அன்னையோடு சென்று நீராடுவர். துணையாய் இருப்பது ஈன்ற அன்னை. ஆனால் நெஞ்சில் நினைவால் இருப்பது உலகம்மை.

அடுத்து திருவெம்பாவை பாடல் இரண்டினை கவனிப்போம்.

திருவெம்பாவை - பாடல் 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளந்
தேசன் சிவலோகன் தில்லைசிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

ஒரு பெண்ணை எழுப்பியாகிவிட்டது. மற்றொரு பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறார்கள், பாவையர்கள்.

ஆபரணங்கள் அணிந்த ஆரணங்கு அவள். அவளிடத்து மங்கையர் தலைவி விளிக்கிறாள். “நேரிழையாய் - சிறந்த அணிகலன் அணிந்த பெண்ணே! நேர்மையின் உறைவிடமே

பாசம் பரஞ்சோதிக் கென்பாய், இராப் பகல் நாம்பேசும்
போது.”

நாம் எப்பொழுது உரையாடினாலும், உறங்குகின்ற நேரம் தவிர, இரவும் பகலும் என் அன்பு, பேரொளி மயமான அந்த அண்ணலுக்கு என்று தானே சொல்வாய்? ஆனால், இப்பொழுது என்ன நேர்ந்துவிட்டது, ஆசை திசை மாறிவிட்டதோ? இப்பொழுது மலர் பரப்பிய படுக்கையினிடத்து அன்பு கொண்டாயோஎன்று வந்த பெண்கள் கேட்கின்றார்கள்.

எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ?”

கடவுள்மீது கொண்ட காதல் கட்டிற்காதலாகியது எப்போது என்று கேட்டவுடன், அக்கன்னிக்குக் கோபம். “நேரிழை என்று நேர்த்தியாக அழைத்தீர்கள், நேர்மைக்கு மாறாக ஏன் சொல்கின்றீர்கள்? என்னைப் போன்றே நேரிழை அணிந்த தோழியர்காள் உங்கள் வாயில் இகழ்தலுக்கும் இடமுண்டோ?” ‘விளையாட்டாக நாங்கள் சொன்னோம்' என்றாலும் நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, இதுவா விளையாட்டு? விளையாடிப் பழிக்கின்ற காலமா இது?” எள்ளி நகையாடும் இடமா இது? என்று, எழுந்த பெண் கேட்கிறாள்.

”................... நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ

இந்தக் கேள்விக்கு, வந்த பெண்கள் பதிலுரைக்கிறார்கள்.

“................... விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம்

இறைவனுடைய திருப்பாதத்தில் உனக்குப் பற்று அதிகம் என்று சொன்னாயே. அந்த திருவடிகள் எப்படிப்பட்டன தெரியுமா? அந்த மலர்த் திருவடிகளைப் புகழ விண்ணோர்கள் நாணுகிறார்கள், பேரொளியைக் கண்டு கண்கள் கூசுவது போல்.

மாணிக்கத்து உள்ளொளிபோல் மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் பேசா பெருமையன்காண்

என்று பட்டினத்தார் அழகுற உரைக்கின்றார்.

இங்கே 'கூசும்' என்பதற்கு நாணும் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். ஏனென்றால், அப்பரடிகள் தேவாரத்தில் சொல்கிறார்கள் அல்லவா?

பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்க நிற்பன் அவர்தமை நாணியே

மலர்ப்பாதம் தந்தருள, வந்தருளஞ்
தேசன், சிவலோகன்

எளியவர்களாகிய நமக்கருள வந்த, ஞானாசிரியன் ஒளியுருவானவன் கயிலாயத்துள்ளவன்.

“..................... தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம், ஆரேலோர் எம்பாவாய்.”

அம்பலத்தே ஆடுகின்ற அரசன், தில்லைமாநகர்ச் சிற்றம்பலனாருக்குச் செய்யப்படும் அன்பு எப்படியுள்ளது, நாம் எந்நிலையினோம்?

புனித மார்கழி மாதத்தில் திருவெம்பாவைப் பாடல்கள் ஆலயங்களில் பாடப்படுவது மிகச் சிறப்பு!

மேற்கோள் நூல் : மாணிக்கத்தேன்

Read more...

தீவிரவாதப் பட்டியலில் சுனாமி!

>> Friday, December 26, 2008



சுனாமியால் வீடிழந்த மக்கள்
அரசாங்கத்தின் கருணைப் பார்வை
கடலோரத்தில் புதிய குடியிருப்பு..!?

***

மீனவனின் இழவு வீடு
கரையொதுங்கிய மீன்கள் ஒப்பாரி..??

***

குடிசையிழந்த பிள்ளைகள்
வாரி இறைத்த சேற்று மணலில்
புதிய மணற்கோட்டை!

***

சாட்சி சொல்லாது
வழக்கு போடாது
காமுகனின் காமப் பசிக்கு
நிர்வாணப் பிணங்கள்..!!

***

தாயின் கலவரம்
சேயின் ஆரவாரம்
மேலெழுந்த அலையைக் கண்டு...

***

பஞ்சம் தலைவிரித்தாடிய தேசத்தில்
உலக நிவாரணப் பணியாளர்கள்
சுனாமி கொண்டு வந்த உதவி!

***

பூமித்தட்டில் பிளவு
உலக மக்கள் ஒற்றுமை
சுனாமியன்று!

***

கடலுக்குள் சென்ற மீனவன்
திரும்பவில்லை!
மீன்கள் சிக்கிய வலை
கரையோரத்தில்..

***

அதிநவீனக் கருவிகள்
தொழில்நுட்ப மாந்தர்கள்
மிருங்கள் கூட்டம் கூட்டமாய் ஓட
பின்னாலே இவர்கள்!

***

மீன்குழம்பு கொதிக்க
இறக்கி வைக்க மறந்தேனே..
பூமித்தாயின் நீலிக்கண்ணீர்!

***

கஞ்சிக்கு வழியில்லை
வந்தது சுனா(மீ)
நிவாரண முகாமில்
கிடைத்தது 'மேகி மீ'..

***

நிர்வாணக் குழந்தைகள்
ஆடைகளுக்கு கையேந்த
நிவாரணக் குழு கைவிரிக்க..
சூரையாடல் அரங்கேற்றம்..!

***

கடலலை விரித்தப் பாயிலே
உறங்கிய மனிதர்கள்
விடிந்தும் எழவில்லை!
பாய் மட்டும் சுருட்டிக் கொண்டது!

***

3 லட்சம் உயிர்களைக் கொன்ற
'சுனாமி'!
தீவிரவாதப் பட்டியலில்...

***

மூழ்கடிக்கப்படுகிறது
கவிஞனின் மனம்
சுனாமி கவிதையால்..

***

கடற்கரையில் ஒரு கவிஞன்
தன்னை மறந்த நிலையில்
பின்னால்,
சுனாமி வருவதுகூட தெரியாமல்..

***

வேற்றுமை..

சுனாமியொரு சாபம்
ஹைக்கூவொரு வரம்

ஒற்றுமை..

இரண்டுமே
(Made in Japan)
சப்பான் நாட்டு தயாரிப்பு!

3 லட்சம் உயிர்களை கடலோடு கரைத்த சுனாமியைப் பற்றிய எனது உளறல்கள்.. பிழையிருப்பின் பொறுத்தருளவும்!

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்..

Read more...

நெகிரி செம்பிலான் ஆளுநருக்கு நேரமில்லையோ..?

>> Monday, December 22, 2008

மலேசிய இந்தியர்கள் அம்னோ அரசாங்கத்தால் கடந்த 51 ஆண்டுகளாக பலவகையில் ஒடுக்கப்பட்டு வருவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக மக்கள் சக்தியினர் நேற்று சிரம்பானில் உள்ள 'இங்காப்' அரண்மனையில் நெகிரி செம்பிலான் ஆளுநரைச் சந்தித்து மகசர் ஒன்றினைச் சமர்ப்பிக்க சென்றனர்.

மக்கள் சக்தியினரின் வருகை குறித்து முறையாக கடிதம்வழி அரண்மனைக்கு திரு.வேதமூர்த்தியின்வழி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. மதியம் 3:15 மணியளவில் மக்கள் சக்தியினர் அரண்மனையைச் சென்றடைந்தபொழுது அரண்மனையின் வெளியே தடல்புடலான வரவேற்பு வழங்கப்பட்டதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படவில்லை. வேறு வேலைவெட்டியே இல்லாத கலகத் தடுப்புப் படையினரும் காவல்த்துறையினரும் அரண்மனையின் வெளியே குவிக்கப்பட்டிருந்தனர்.

அரண்மனை நிர்வாகமும் சரி, அரண்மனை பொறுப்பதிகாரி டத்தோ அப்துல்லாவும் சரி யாரும் வெளியே எட்டிக் கூட பார்க்கவில்லை. லேன்ஸ் காப்பரல் சுரீஸ் (பட்டை எண் 146288) மக்கள் சக்தியினரிடமிருந்து மகசரைப் பெற்றுக் கொண்டார். அதன்பின் ஓர் அறிவிப்பு வந்தது. ”இன்னும் 5 நிமிடங்களில் இடத்தைக் காலி செய்யாவிடின் கைது செய்யப்படுவீர்கள்!” என சீருடை அணிந்த ரௌடிகளான காவல்த்துறையும் கலகத் தடுப்புப் படையும் எச்சரிக்க மக்கள் சக்தியினர் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

அரசியல்வாதிகளிடம் ஏமாந்துபோன மக்கள் மாநில ஆட்சியாளர்களிடமாவது முறையிடலாம் எனச் சென்றால், நாயைவிடக் கேவலமாக நம்மை நடத்துகின்றனர்! நாட்டின் நிர்வாகத்தில் இந்த ஆட்சியாளர்களின் பங்குதான் என்ன? ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி மாமன்னர்களாக முடி சூட்டிக் கொள்ளும் இவர்களிடம் மக்கள் தங்களின் பிரச்சனைகளை சொல்ல முடியாதா? இல்லை, கேட்பதற்குதான் இவர்களுக்கு நேரமில்லையா...?!



போராட்டம் தொடரும்...

Read more...

ராசீவ் காந்தி மரணத்தின் மர்மங்கள் !

ஆங்கில நாள்காட்டியில் அன்று மே மாதம் 21-ஆம் திகதி 1991-ஆம் ஆண்டு. கடிகாரத்தில் இந்திய நேரப்படி சரியாக இரவு மணி 10.10 எனக் காட்டிக் கொண்டிருந்தது. தமிழகத்திலுள்ள சென்னை நகரிலிருந்து 30 மைல் தொலைவில் அமைந்திருக்கும் சிறீபெரும்புத்தூர் எனும் இடத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ஒன்பதாவது பிரதமர் அமரர் ரசீவ் காந்தியின் உடல் 700 கிராம் ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வெடித்ததில் சிதறி சின்னாப் பின்னமானது. இனவிடுதலைக்காக முழுமூச்சாகப் போராடிக் கொண்டிருந்த தமீழீழ விடுதலைப் புலிகளின் மீது கொலைப் பழி விழுந்தது.

இக்கொலை நடந்து 17 ஆண்டுகளாகிவிட்டன.. விடுதலைப் புலிகளின் மீது சுமத்தப்பட்ட பழி இன்னும் இந்திய, இலங்கை அரசியல் வட்டாரங்களில் பகடைக் காய்களாக உருண்டு கொண்டிருக்கின்றன..

உண்மையில் ரசீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகளா?

திருச்சி வேலுசுவாமியின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள்..

பகுதி 1



பகுதி 2


பகுதி 3



பகுதி 4



பகுதி 5



பகுதி 6



பகுதி 7

Read more...

சமூகத் தன்னார்வத் தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர்!

>> Thursday, December 18, 2008


எதிர்வரும் தைப்பூசத் திருநாளில் (07/02/09 , 08/02/09) பினாங்குத் தீவு மக்கள் சக்தியினர் சமுதாயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முனைந்துள்ளனர். பினாங்கில் பிரசித்திப்பெற்ற செட்டிப்பூசம் நடைப்பெறும் நாளன்றும் (07/02/09 சனிக்கிழமை), மறுநாள் தைப்பூசத் திருநாளன்றும் (08/02/09 ஞாயிற்றுக்கிழமை) பினாங்குத் தீவு மக்கள் சக்தியினர் தண்ணீர்மலையில் சமூகச்சேவைப் பந்தல் ஒன்றினை ஏற்படுத்தவுள்ளனர்.

இச்சமூகச் சேவைப் பந்தலில் வழங்கப்படவிருக்கும் சேவைகள் பின்வருமாறு :-

  • முறையான பிறப்புப்பத்திரம் மற்றும் அடையாள அட்டையிள்ளாதவர்களுக்குத் தேவையான உதவிகள்.
  • தனித்துவாழும் தாய்மார்களுக்கான உதவிகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள்.
  • குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஏற்ற நலனுதவிகள்
  • கைவிடப்பட்ட அல்லது குடும்ப பராமறிப்பற்ற முதியோர்களுக்கான நலனுதவிகள்.
  • அங்கவீனர்களுக்கான / உடல் ஊனமுற்றோருக்கான நலனுதவிகள்.
  • தேர்தல் வாக்காளர்களாக பதிவு செய்யாதவர்களுக்கு வாக்காளர் பதிவு

இச்சேவைகளை வழங்குவதற்காக சமூக நல இலாகா அதிகாரிகள் மக்கள் சக்தியினருடன் இணைந்து அன்றைய தினங்களில் பணியாற்றவுள்ளனர். இச்சேவையில் ஒன்றிணைந்து தோல்கொடுப்பதற்கு பல நல்லுள்ளங்களிடமிருந்து உதவிகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. குறைந்தது 75 தன்னார்வத் தொண்டூழியர்களாவது இச்சேவைக்குத் தேவைப்படுகின்றனர்.

இரு தினங்களிலும் உதவிநாடி வருபவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து தேவையான பாரங்களைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு தொண்டூழியர்கள் உதவி புரிய வேண்டும். இதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

கால அட்டவணையின்படி பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும். ஓய்வு நேரங்களும் நிச்சயம் உண்டு.

ஒருவேளை, நீங்கள் பலகாலங்களாகவே சமுதாய முன்னேற்றத்திற்காக ஏதேனும் ஒருவகையில் உதவி புரிந்திட வேண்டும் என்றெண்ணம் கொண்டிருந்திருப்பீர்கள். அவ்வாய்ப்பு இன்று உங்கள் கதவைத் தட்டுகிறது. ஏன், நீங்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? உங்களின் உதவிகள் வழி பலரின் எதிர்கால வாழ்வு மலரவிருக்கிறது. பிறப்புப் பத்திரம் கிடைக்கப்பெற்ற குழந்தைக்கு கல்வி, அடையாள அட்டை கிடைக்கப்பெற்ற இளைஞனுக்கு முறையான வேலை, உதவிகள் கிட்டிய தனித்து வாழும் தாய்மார்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு, ஆதரவற்ற முதியோர்களுக்கு அரவணைப்பு, அங்கவீனர்களுக்கு மறுவாழ்வு என உங்களின் வியர்வையில் அவர்களின் எதிர்காலம் உயரப்போகிறது.

அண்ணன் உதயகுமார் கூறியதுபோல இனி நாம் நம்மை சமுதாயக் கடமைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான முதற்படிதான் இச்சமூகச் சேவைப் பந்தல்!

இம்மகத்தான சேவையில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள கீழ்கண்ட கைப்பேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும்.

  • 012 5637614 ( திரு.கலை )
  • 012 7162884 ( சரஸ்வதி )
  • 012 5557522 ( திரு.மாறன் )
  • 019 4586587 ( திரு.சுரேசு )

2009-ஆம் ஆண்டு சமூகத் தொண்டுகள் புரியும் ஆண்டாக மலரட்டும்...

Read more...

திரு.செயதாசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

மு. 00:25

கடந்த நான்கு நாட்களாக நடைப்பெற்று வந்த உண்ணாநோன்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட திரு.செயதாசு அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்சமயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாநோன்புப் போராட்டத்தின் இரண்டாவது நாளன்று மருத்துவ குழுவொன்று இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் மீது உடல் நலப்பரிசோதனை மேற்கொண்டபோது, சகோதரி சாந்தியும் திரு.செயதாசும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்க வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டது.

திரு.செயதாசு அவர்களின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வாரத்திற்கு மூன்றுமுறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இரு முறை சிறுநீரக சுத்திகரிப்பிற்குச் செல்லாததனால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று காலையில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த யாக நிகழ்வில் திரு.செயதாசு திடீரென மயக்கம்போட்டு விழுந்துள்ளார் என அறியப்படுகிறது.

இதற்கிடையில் இவ்வுண்ணாநோன்புப் போராட்டம் இன்று 18/12/08 முடிவுக்கு வரும் என உதயகுமாரின் சகோதரி வேதநாயகி தெரிவித்தார். இருப்பினும் இண்ட்ராஃப் தலைவர்கள் விடுதலையடையும்வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து இருந்து வரும் என அவர் கூறினார்.














திரு.செயதாசு அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைமையை இறைஞ்சுவோமாக..

போராட்டம் தொடரும்...

Read more...

திரு.உதயகுமாரின் வேண்டுகோள்..

>> Tuesday, December 16, 2008



13/12/2008

இண்ட்ராஃப் ஆதரவாளர்களே,

இண்ட்ராஃப் இயக்கம் தடைசெய்யப்பட்டுவிட்டாலும், நீங்களனைவரும் போராட்ட உணர்வை இழக்காமல் தொடர்ந்து போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் அடிப்படை உரிமைப் பிரச்சனைகளை அரசாங்கம் கவனித்து, அதற்கொரு தீர்வுகாணும்வரை தொடர்ந்து அரசாங்கத்திற்கு நெருக்குதல் தரும் ஓர் இயக்கமாக நாம் திகழ வேண்டும்.

மலேசிய இந்தியர்களின் அடிப்படையான பிரச்சனைகள் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளில் தொகுக்கப்பட்டு கடந்தாண்டு ஆகசுட்டு மாதம் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட அக்கோரிக்கைகளுக்காக நான் தொடர்ந்து போராடுவேன், இதற்காக பலகாலம் சிறையில் இருக்க நேர்ந்தால் அதற்கும் நான் தயார்! எனக்கு வேண்டியதெல்லாம் நம்முடைய 18 கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் செவிசாய்க்க வேண்டுமென்பதே!

அரசாங்கத்திடம் வழங்கப்பட்ட 18 அம்ச கோரிக்கைகளுக்கான முழுபொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். என் சகோதரர் திரு.வேதமூர்த்திக்கு உதவியாக நீதிமன்ற வழக்குகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பிற மூன்று வழக்கறிஞர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு நான் அரசாங்கத்தை இவ்வேளையில் வலியுறுத்துகிறேன். கடந்த ஓராண்டுகளாக சிறையில் வாடிவரும் அம்மூவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதில் எந்தவொரு நியாயமுமில்லை என்பதனால், அவர்கள் மூவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான் நிறையப் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். இனிவருங்காலங்களிலும் மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளுக்கான போராட்டத்திற்காக தொடர்ந்து என் வாழ்வை அர்ப்பணிப்பேன். இந்த அம்னோ அரசாங்கம் கடந்த 51 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களை பலவகையில் ஏமாற்றி வந்துள்ளது.

அனைவரும் ஒருங்கிணைந்து ஒருமித்தக் குரலாக நம் உரிமைகளுக்காக குரலெழுப்புவோமாக. நம்மிடையே நிலவிவரும் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு வாருங்கள். என்றுமே இரு மனிதர்கள் ஒரேவிதமான சிந்தனைகளைக் கொண்டிருப்பதில்லைதான். ஆனால் அடிப்படை உரிமைகளை சமமாகக் கேட்கும் பொழுது அங்கு ஒருமித்தக் குரல்தான் நமக்குத் தேவைப்படுகிறது. இந்த ஒருமித்தக் குரலோடு தொடர்ந்து அரசாங்கத்தை சம உரிமை கேட்டு வலியுறுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், இதைவிட பெரியதொரு ஆக்ககரமான கடமையான சமுதாயப் பணிக்கு உங்களை அர்பணிப்பதற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்வரும் 2009-ஆம் ஆண்டானது நாம் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் ஆண்டாக அமைய வேண்டும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து சமுதாயப் பணிக்கு தோல்கொடுக்க தயாராகுங்கள்!

இறைவன் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. அனைவரின் ஒத்துழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நம்மை எதிர்க்கொள்ளும் பெரிய சவால்களை ஒன்றிணைந்து சந்தித்து வெற்றிக் கொள்வோமாக!

போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP