பாகான் பினாங்கு இந்திய வாக்காளர்கள் என்ன உறுதி எடுக்க வேண்டும்?

>> Wednesday, September 30, 2009

இண்ட்ராஃப் மக்கள் சக்தி

பாகான் பினாங்கு இந்திய வாக்காளர்கள் என்ன உறுதி எடுக்க வேண்டும்?

வாக்களிப்பு தவிர்ப்பு பிரச்சாரம்

மக்கள் சக்தியைக் காட்டுவோம்!பாகான் பினாங்கில் தேசிய முன்னணி அல்லது பாஸ் (மக்கள் கூட்டணி) ஆகியவற்றிற்கு வாக்களிக்காதீர்கள்!

இதுவரையில் இரு அரசியல் கூட்டணிகளுமே இந்தியர்களுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

இந்தியர்கள், தாங்கள் வேண்டியதை, 12-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிறகும் பெறவில்லை. இதுவே 12-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிந்திய நமது கருப்பொருள்.

இந்தியர்களை ஒதுக்கி வைத்தல், மற்றும் ஓரங்கட்டுதல் ஆகிய நடவடிக்கைகள், மக்கள் கூட்டணி ஆளும் 4 மாநிலங்களில் மேலும் துரிதமாகத் தொடர்கிறது. அம்னோ அரசு, தனது இனவாதக் கொள்கையை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. இந்திய சமூகத்தின் பல்வேறு மனக்குமுறல்கள், மனவேதனைகள், ஒரு தீர்வின்றி அல்லலுறுகின்றன.

பினாங்கில் பொய் பேசும் DAP மாநில முதலமைச்சர், சில DAP இந்திய மண்டோர்கள், நிறைவேற்றப்படாத, சிதைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஆகியனதான் உள்ள. இந்தியர்களின் மிக முக்கியமான ஒரு பிரச்சனையான புவா பாலா கிராம விசயத்தில், தன் கையை கழுவி, நழுவி விட்டது DAP.

PKR-இல், கோழைகள் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்தியர்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க இவர்கள் எங்கும் காணப்படுவதில்லை.


பேராக் மாநிலத்திலும் சிலாங்கூர் மாநிலத்திலும் அதிகமான நிலங்கள் சீனர்களுக்காக மக்கள் கூட்டணி அரசாங்கம் வழங்கி உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கு அப்படிப்பட்ட எந்தவொரு நிலமும் வழங்கப்படவில்லை. மக்கள் கூட்டணி அரசாளும் மாநிலங்களில் ஆலயங்கள் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் சமய சின்னங்களுக்கு கேடு செய்வது, இந்தியர்களை இழிவுபடுத்துவது, பரவாயில்லை என்று கூறுகிறார் உள்த்துறை அமைச்சரான அம்னோவின் இசாமுடின். இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க கூட்டரசு அரசாங்கம் நான்கு மாநிலங்களில் உள்ள மக்கள் கூட்டணியை சாக்காக வைத்துக் கொண்டு, இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு ஒன்றுமே செய்யாமல், தனது மாறாத இனவாத கொள்கைகளைக் கொண்டு இந்தியர்களை மேலும் மேலும் ஒதுக்கி வைக்கின்றது.

இவை எல்லாம் ஏன் மென்மேலும் தொடர்கின்றன? காரணம், PKR, DAP, MIC, UMNO ஆகிய கட்சிகள் நம் வாக்குகளை மட்டும்தான் தேடுகின்றன. அவ்வளவுதான்! பதிலுக்கு மிகவும் அற்பமான, சில்லறையான பிச்சை போடுகிறார்கள். பள்ளிகளுக்கு மிகவும் அற்பமான, குறைந்த, பண உதவி, ஓரிரண்டு நிலங்கள் அல்லது சிறு சிறு அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன, அவ்வளவுதான்! அவர்கள், நமக்கு ஏதாவது செய்து கொண்டே இருப்பது போல தோன்ற வேண்டும், அல்லவா? அதற்காகத் தான் இந்த சொற்பமான உதவிகள் எல்லாம்! இவர்களைப் பொறுத்தவரையில், நாம் அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம் சமூகத்தின் நலனில் சில்லறைத் தனமும் அற்ப குணமும் கொண்டிருக்கின்றனர். ஆம்! அவர்களைப் பொறுத்தவரையில் நாம் மிகவும் அற்பமானவர்கள், அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம்மை அதிகம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை!

இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. இதுவே நமது கோரிக்கை. மிகவும் முக்கியமான அடிப்படைத் தேவைகளை முதலில் பார்ப்போம். பிறகு மற்ற பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கலாம், கவனிக்கலாம், திட்டமிடலாம். இந்தியர்களிடையே நிலவும் குற்றச் செயல்கள், தற்கொலைகள், மதுபான பிரச்சனைகள், போதைபொருள் பாதிப்புகள், வேலை இல்லாத் திண்டாட்டம், வணிகர்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த வாய்ப்புகள், அரசாங்க நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி மற்றும் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவது, ஆகியன நம்முடைய பெரும் பிரச்சனைகள். தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களும் நம்மை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை. எனவேதான், நாம் கூறும் நமது பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான தீர்வுகாண அவர்கள் சிறிதும் அக்கறை காட்டவில்லை. இண்ட்ராஃப் முன்வைத்த 18 கோரிக்கைகள் மிகவும் தெளிவாக, இந்நாட்டு இந்தியர்களுக்கு என்ன தேவை என்பதனை எடுத்துரைக்கின்றன. நாம் இவ்வளவு கூறி இருந்தும் கூட இவ்விரு அரசாங்கங்களும் நம் பிரச்சனைகள் தொடர்பாக முழுமையான தீர்வை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளேதும் எடுக்கவில்லை.

நமக்கு இன்று இருக்கும் ஒரே வழி, அவர்களை எங்கு தீண்டினால் வலிக்குமோ, அங்கு தீண்டுவதுதான்.

நாம் நமது வாக்குகளை மிகவும் அறிவுப்பூர்வமாக செலுத்தி அவர்களுக்கு நம் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். அவர்களது அரசியல் கணிப்பில் நம்மையும் முக்கியமான தரப்பினராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கணிப்பின் ஒரு சோதனைக் களமாக, நமக்கு மாற்றங்கள் கொண்டு வரும் வகையில், பாகான் பினாங்கில் நமது வாக்குகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். பாகான் பினாங்கு தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருப்பினும், அது நமக்கு எந்தவொரு முக்கிய மாற்றங்களையும் கொண்டு வராது.

நெகிரி செம்பிலானில் மேலும் ஒரு சட்டமன்ற இடம் குறைந்தாலோ, கூடினாலோ, தேசிய முன்னணியிலும் மக்கள் கூட்டணியிலும் ஏதும் பெரிதாக மாறிவிடாது. ஆனால், நாம் நமது வாக்குகளைத் தொட்டு எடுக்கும் முடிவு, நம் வாக்குகளின் மேல் ஆர்வம் உள்ளவர்களிடம் நமது வாக்குகளுக்கு மதிப்பு உண்டு என ஆழமான ஒரு கருத்தை சமர்ப்பிக்கலாம்.

இங்கு 14,192 வாக்காளர்கள் உள்ளனர். 80% வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்படியாயின், 11,345 வாக்காளர்கள் தேர்தல் அன்று வருவர். இவர்களில் 66% அல்லது 7,500 மலாய் வாக்காளர்கள், 19.9% அல்லது 2270 இந்திய வாக்காளர்கள், 10.5% அல்லது 1135 சீன வாக்காளர்கள் இருப்பார்கள். கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ வேட்பாளர் 6430 வாக்குகள் பெற்று, 2,333 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றிப் பெற்றார். அதே தேர்தலில், பாஸ் வேட்பாளர் 4,097 அல்லது 39% வாக்குகளைப் பெற்றார். ஆனால் அது நடந்தது, இந்தியர்களும் சீனர்களும் பாரிசான் அரசாங்கத்தை அடியோடு வெறுத்த காலக்கட்டத்தில். இந்த உண்மையானது, வருகின்ற இடைத் தேர்தலில் மக்கள் கூட்டணி தேர்தலில் தோல்வியுறும் அபாயத்தைப் பிரதிபலிக்கின்றது.

பாகான் பினாங்கில், அனைத்து இந்தியர்களும் வாக்களிப்பதை தவிர்ப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரண்டும் நமக்கு நல்ல கட்சியாக அமையவில்லை. இதன் விளைவாக, மக்கள் கூட்டணி இந்த இடைத் தேர்தலில் தோல்வியுறட்டும்! நம் வாக்குகளின் மூலம், நாம் ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம். மக்கள் கூட்டணி நமது இந்த முக்கியமான கருத்தை தொடர்ந்து கண்டுகொள்ளாமல், ஒதுக்கி வைத்தால், அதற்கான விளைவை அவர்கள் எதிர்கொள்ளட்டும். இந்தியர்களின் வாக்கு முக்கியமானது என்றும், அந்த முக்கியமான வாக்குகளை அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வு தோன்றினால், அவர்கள் அதை செயலிலும் கட்சிக் கொள்கைகளிலும் காட்ட வேண்டும். வெற்றுப் பேச்சும், வெற்று வாக்குறுதிகளும் நமக்குத் தேவையில்லை.

அம்னோவை காட்டிலும், மக்கள் கூட்டணியைத்தான் நாம் விரும்புகிறோம். ஆனால், மக்கள் கூட்டணி செயலில் இறங்கி தங்களின் ஆட்சிக் கொள்கைகளின்வழி அவற்றை நிரூபித்தாலே ஒழிய, நாம் அவர்களுக்கு நமது ஆதரவை தர மாட்டோம்.

நாம் அவர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்இரு வழிகளிலுமே!

நாம் இந்த கருத்தை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும். நமது கருத்தை வெளிப்படுத்த இதுவே ஒரே வழி, இதுவே நமக்கு கிடைத்த வாய்ப்பு, சந்தர்ப்பம்!

ஆக்கம் :

-சுப்பிரமணிய பாரதி-

போராட்டம் தொடரும்...

Read more...

லிம் குவான் எங்குடன் நேரடி விவாதத்திற்குத் தயார்! - இண்ட்ராஃப் சவால்

>> Thursday, September 24, 2009


கடந்த 12-வது பொதுத் தேர்தலின்போது இண்ட்ராஃப்பின் ஆதரவைப் பெற்ற எதிர்கட்சிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கடமையாற்றவில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் புவா பாலா கிராம நில மோசடியாகும்.

இண்ட்ராஃப் எதிர்பார்ப்பது அரசியல் தீர்வல்ல, மாறாக அரசியல் விளையாட்டுகளில் சிக்கி சுபிட்சத்தை இழக்காததொரு மக்களுக்கான தீர்வினையே அது எதிர்பார்க்கிறது.

லிம் குவான் எங்கை பொறுத்தவரை, ஊடகம் மற்றும் அரசியல் பலம் அவருக்கு பக்கபலமாக இருக்கிறது, ஆனால் இண்ட்ராஃபை பொறுத்தமட்டில் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் உண்மைகள் துணை நிற்கின்றன.

52 வருட காலமாக அம்னோ அரசாங்கம் சிறுபான்மையினரின்மீதான திட்டமிட்ட அடக்குமுறை, ஒடுக்குமுறை கொள்கைகளை அமுல்படுத்தி வந்ததன் காரணத்தினாலும், ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பினாலும் கடந்த பொதுத்தேர்தலில் இண்ட்ராஃப் நாடெங்கிலும் உள்ள தனது ஆதரவாளர்களைக் கொண்டு எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. அதன் எதிரொலியாக 5 மாநிலங்கள் மக்கள் விரும்பி வாக்களித்த எதிர்கட்சிகளின் வசமுமானது.

புவா பாலா கிராம விவகாரத்தை பொறுத்தமட்டில், எதிர்கட்சிகள் கடைப்பிடிப்பதாகக் கூறிவரும் திறமையான நிர்வாகம், பொறுப்பான அரசாங்கம், வெளிப்படையான அணுகுமுறைகள் எனும் கொள்கைகள் நடைமுறைகளில் செயலாக்கம் காணவில்லை என்பதே உண்மை. தொடர்ந்து பழைய அரசாங்கத்தின்மீது பழியைப் போடுவதை விடுத்து, மாநில அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் உடனான சனநாயகத் தொடர்பினை விளக்குவதற்கு வெளிப்படையானதொரு நேரடி விவாதத்தில் லிம் குவான் எங் கலந்துகொள்ள வேண்டுமென இண்ட்ராஃப் அழைப்பு விடுக்கிறது.

ஓர் இயக்கமாகட்டும் நிர்வாகமாகட்டும், அதன் செயல்பாட்டில் உண்மை இருக்க வேண்டும். மாறாக போலி அரசியல்தனம் கொண்டு தங்களின் இருப்பை பலப்படுத்திக் கொள்வதில் மட்டுமே முனைப்பு காட்டி மக்களின் நலன்களை மறந்துவிடக் கூடாது. நம் நாட்டு அரசியலைப் பொறுத்தமட்டில் ஆளுங்கட்சியாகட்டும் எதிர்கட்சியாகட்டும், முதலில் கட்சியின் நலனையே முன்னிறுத்துகிறார்கள்.

இண்ட்ராஃபை பொறுத்தமட்டில் புவா பாலா கிராம நில மோசடி விவகாரம் இன்னும் முடியாத ஓர் அத்தியாயமாகும். உண்மை நிலவரம் பொதுமக்களுக்கு தெரிந்தாக வேண்டும். பொதுமக்கள் நீதிபதியாக இருக்க வேண்டுமேயொழிய அரசியல் இலாபத்திற்காக குழப்பங்களை விதைக்கும் ஊடகங்கள் அல்ல.

நாட்டை உலுக்கிவரும் பிரச்சனைகள் குறித்து பொறுப்பில் இருக்கும் தரப்புகள் பொது விவாதத்திற்கு அழைக்கப்பட வேண்டும். நாகரீகமடைந்த நாடுகளில் இம்முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. சனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுத்து லிம் குவான் எங் இண்ட்ராஃபின் அழைப்பை ஏற்று பொது விவாதத்திற்கு வர வேண்டும். மக்களை பிரதிநிதிக்கும் இண்ட்ராஃப் எழுப்பும் கேள்விகளுக்கு மக்கள் முன்பு பதில் கொடுக்க வேண்டும்.

மாற்றத்தை எதிர்பார்த்து ஓட்டு போட்ட மக்களுக்கு உண்மையைச் சொல்ல வருவாரா லிம் குவான் எங்?


(புவா பாலா நிலமோசடி குறித்து லிம் குவான் எங்குடன் தொலைக்காட்சியில் நேரடியாக விவாதிக்க இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.நரகன் தயாராக இருக்கிறார்.)

போராட்டம் தொடரும்...

Read more...

ரோஜாக்!

>> Wednesday, September 16, 2009

Read more...

இந்திய ஆய்வியல் துறை - இந்திய மலேசியர்களின் உரிமை!

>> Tuesday, September 8, 2009நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கான ஆய்வியல் துறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அத்துறைக்கு தமிழரே தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என பினாங்கு மலாயாவாழ் இந்தியர் சங்கத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் அரசியலமைப்பு சாசனப் பரிந்துரையில் இடம்பெற்றுள்ள ஆவணக் கடிதத்தின் ஒரு பகுதியின் நகலைக் கீழே காணலாம்.போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP