நண்பன் நாளிதழ் 17/10/2008 பக்கம் 5
தருதலை : வணக்கோண்ணே...
முதலை : வணக்கம், வாழ்க தமிழ்! யாரது.. அடடே தருதலையா வாப்பா.. (முதலைக்கு புல்லரிக்கிறது)
தருதலை : தீபாவளி சீசன் வந்துருச்சுலே, அதான்...
முதலை : தெரியும்.. தெரியும் விளம்பரம்தானே.. எங்க காட்டு பாக்கலாம்..
தருதலை விளம்பரப் படிவத்தை நீட்டுகிறான். அதனைப் பெற்றுக் கொண்ட முதலை விளம்பரப் படிவத்தை சற்று நேரம் வெறித்து பார்க்கிறான்.. விளம்பரத்தை அலசிப் பார்த்துக் கொண்டிருந்த அவனது இருவிழிகளின் மேல் குடிகொண்டிருந்த புருவங்கள் நெறியத் தொடங்கியதைக் கண்ட தருதலைக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது.
முதலை : என்ன இது?!
தருதலை : விளம்பரம்...
முதலை : அது தெரியிது, பெரிய கோலம்.. அதுக்கு நடுவுல என்ன?
தருதலை : ஸ்கோல் பியர்..
முதலை : குத்துவிளக்கு எங்க?
தருதலை : அதுதான் இது...
முதலையின் புருவங்கள் மேலும் நெறிந்தன..
முதலை : இது சரி வராது.. நீ வேற ஆளே பாரு..
தருதலை : ஏன்? இந்த விளம்பரம் நல்லாதானே இருக்கு..!
முதலை : இத விளம்பரமா போட்டா என்ன நடக்கும்னு தெரியுமா?
தருதலை : என்ன நடக்கும்?
முதலை : இத விளம்பரப்படுத்திய மறுநாளே கண்டனத்துக்குமேலே கண்டனம் வரும்..
தருதலை : யார்கிட்டேர்ந்து...
முதலை : நம்மாளுங்ககிட்டேர்ந்துதாம்ப்பா...
தருதலை : அதுலாம் ஒண்ணும் வராதுண்ணா...
முதலை : எப்டி சொல்ற?
தருதலை : நம்மாளுங்களுக்கு தண்ணி இல்லாத தீபாவளியா என்ன?
முதலை : இல்ல.. இல்ல முடியாது! நம்பாளுங்க பாரம்பரிய கோலத்துக்கு நடுவுல பியர் போட்டல வெச்சது மட்டுமில்லாம, தீபாவளிங்கிற சமய திருநாளையும் கேவலப்படுத்தியிருக்கே..!
தருதலை: அட போங்கண்ணே, நீங்க வேணுண்ணா பாருங்க.. தீவாளி அன்னிக்கி நம்பப் பயலுங்க தண்ணிய போட்டுட்டு மல்லாக்க படுக்குறாங்களா இல்லியான்னு..! முதல்ல நீங்களே ஒரு தண்ணி கையி, நெஞ்ச தொட்டு சொல்லுங்க.. தீவாளிக்கு தண்ணி போடமாட்டீங்க??
முதலை தலையைச் சொறிந்துக் கொண்டான். தருதலையை நோக்கிப் புன்முறுவல் ஒன்றினை வீசிக் கொண்டே...
முதலை : அது வேறே.. இது வேறப்பா.. நம்ம ஒட்டு மொத்த சமுதாயத்தையும் கேவலப்படுத்துற மாறிலே இந்த விளம்பரம் இருக்கு..
தருதலை : அண்ணே, பேப்பர்லே முழுசா ஒரு பக்கம் இந்த விளம்பரத்த போடுறீங்க, இந்தாங்க பதினஞ்சாயிற வெள்ளி செக்கு கொண்டு வந்துருக்கேன்.
பதினைந்தாயிரம் வெள்ளி மதிப்புள்ள காசோலையைக் கண்ட முதலையின் வாய் பிளந்து கொண்டது.
தருதலை : அண்ணே வாய மூடுங்க.. ஈ புகுந்துற போகுது...!
முதலை, தருதலை நீட்டிய காசோலையை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்..
முதலை : சரிப்பா, நீ சொன்ன மாறியே போட்டுர்றேன்.. ஆனா இந்த விளம்பர்த்துக்குக் கீழே பியர் தண்ணி மிதக்குறமாறி போட்டுருக்கீங்களே, அத எடுத்துறலாமே..
தருதலை : தண்ணி போட்டு நம்பாளுங்க மிதக்கணும்னுதான் கீழே சிம்பாலிக்கா போட்டுருக்கோம்.
முதலை : நான் அதுக்கு சொல்லலப்பா, நம்ப ஆளுங்களும் இப்ப வரவர திருந்திகிட்டு வராங்க..
தருதலை வாய்விட்டுச் சிரிக்கிறான்.
தருதலை : என்னண்ணே காமெடி பண்றீங்க.. கொடுக்குற பணத்த வாங்கிட்டீங்கல்லே, விளம்பரத்த போடுங்க.. அப்படி யாருக்காவது இந்த விளம்பரத்து மேலே உடன்பாடு இல்லேன்னா என்ன இந்த முகவரில வந்து பார்க்க சொல்லுங்க, இல்லாட்டி இ-மெயில் பண்ண சொல்லுங்க, நான் பாத்துகிறேன் என்ன? எழுதிக்கோங்க..
Carlsberg Marketing Sdn Bhd
No. 55, Persiaran Selangor, Section 15
40200 Shah Alam, Selangor
P.O.Box 10617, 50720 Kuala Lumpur
Tel : 03-55226688 Fax : 03-55191931
Email : enquiry@carlsberg.com.my
ஓகேவா, எழுதிக்கிட்டீங்கலா?..
முதலை : ம்ம்... ( நமக்குத் தேவை பணம், அது வந்துருச்சி.. இவனுங்க கோலத்து மேல பியர் பாட்டிலே வெச்சா என்ன, பியர் தண்ணியிலே சாமிய அபிசேகம் பண்ணா நமக்கு என்ன? எக்கேடு கெட்டாவது போகட்டும்..) என்று மனதிற்குள் முதலை நினைத்து கொண்டிருக்கையில்...
தருதலை : சரிண்ணே, நான் கிளம்புறேன்.. வர்ற தீபாவளிக்கு வீட்டுக்கு வந்துருங்க.. பிராண்டி, விஸ்கி எல்லாம் இருக்கு.. ஓகேவா, பாய்...
முதலை வாயில் 32 பற்களும் தெரிகின்றன.. கண்களிரண்டும் காசோலையில் பதினைந்தாயிரம் வெள்ளிக்கு எத்தனை முட்டைகள் என்று சரியாக எண்ணிக் கொண்டன..
தீபாவளி நன்னாளில் மலேசியத் தமிழர்களை போதையில் திளைக்க வைக்கப் போகும் கார்ல்சுபேர்க்கு நிறுவனத்தாருக்கும் மற்றும் அதனை அழகாக விளம்பரப்படுத்திக் காட்டிய நண்பன் நாளிதழுக்கும் நமது வாழ்த்துகள்.நாளிதழில் சமயத் திருநாளையும் தமிழர்களையும் இதைவிடச் சிறப்பாகக் வேறெப்படிக் கேவலப்படுத்த முடியும் என்று எண்ணிப் பாருங்கள்..ஒட்டு மொத்த மலேசியத் தமிழர்களையும் கேவலப்படுத்தும் இவ்விளம்பரத்தை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழர்கள் குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ற முத்திரையைக் கிழித்தாக வேண்டும்!
Read more...