19-ஆம் திகதி மே மாதம், பிபிசி தமிழ்ப்பிரிவின் வானொலி செய்தியான தமிழோசையில் தமிழர்களின் எட்டப்பனான கருணா பேட்டி கொடுத்திருந்தான். அவன் அளித்த பேட்டியின்வழி பிரபாகரனின் மரணம் குறித்து பல கேள்விகள் நம்முள் எழுகின்றன.
பிரபாகரன் எப்பொழுது கொலை செய்யப்பட்டார் என தமிழோசை நிருபர் வினவியபொழுது, இன்று (19/05/09) அதிகாலையில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் எனக் கூறினான். ஆனால், பிரபாகரன் 18-ஆம் திகதியன்றே கொல்லப்பட்டுவிட்டார் என ஏற்கனவே சிங்கள அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
பின்பு ஏன் பிரபாகரன் 18-ஆம் திகதியன்று சுடப்பட்டு இறந்துவிட்டதாக சிங்கள அரசு அறிவித்தது என நிருபர் வினவியபொழுது, அது யூகத்தின் அடிப்படையில் அரசு வெளியிட்ட அறிக்கையாகும் எனக் கூறினான்.
பிரபாகரன் எப்படி கொல்லப்பட்டார் என நிருபர்கள் வினவியபொழுது, பிரபாகரன் தனது இரு மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்திருந்த சமயம் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அவன் கூறினான்.
ஆனால், பிரபாகரனும் அவரது இரு மெய்க்காப்பாளர்களும் ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச் செல்லும்பொழுது சிங்கள இராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்தார் என சிங்கள அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இறந்த பிரபாகரனின் சடலம் என நம்பப்படும் உடலை சிங்கள அரசு என்ன செய்யவிருக்கிறது என நிருபர் கருணாவிடம் வினவியபொழுது, உடலைப் புதைத்து விடுவோம் எனக் கூறினான்.
அவ்வுடலை பொதுமக்களின் அல்லது அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திடம் காண்பித்துவிட்டு புதைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என நிருபர் வினவியபொழுது, அது தேவையில்லாத ஒன்று எனக் கூறினான் எட்டப்பன் கருணா.
தற்சமயம் சர்ச்சையில் இருக்கும் பிரபாகரனின் மரணத்தையொட்டி, பொதுமக்களின் பார்வைக்கு அவ்வுடலை காண்பிக்க வேண்டாமா என நிருபர் வினவியபொழுது, அதைப்பற்றி பிறகுதான் யோசிக்க வேண்டும் என அவன் பதிலளித்தான்.
***
கருணாவின் மேற்கண்ட நேர்க்காணலைக் கேட்கும்பொழுது, பிரபாகரனின் மரணம் குறித்து நம்மிடையே சந்தேகம் வலுக்கிறது. முதல்நாள் வெளியிட்ட தகவல்களுக்கும் 19-ஆம் திகதி வெளியான செய்திகளுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதனை கவனியுங்கள்! ஏன் இத்தனை முரண்பாடுகள்!?
பிரபாகரனின் சடலம் எனக் காணொளி காட்சியில் கண்ட அந்த உடலானது நெகிழியால் செய்யப்பட்ட ஒரு பொம்மை என யூகிக்கப்படுகிறது. அக்காட்சியில் வலது பக்கம் திரும்பியிருந்த தலையைப் பிடித்து ஓர் இராணுவன் நேராக திருப்பும்பொழுது இரு கண்களும் ஒரேடியாக நகர்வதைக் காணலாம். (வினாடி 0:09)
ஒருவர் இறந்த பின்பும் கண்களிரண்டும் அகல திறந்திப்பது என்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. படக்காட்சியை உற்று நோக்கினால் அவ்வுடலின் வலது கை யாரும் தூக்காமலேயே தூக்கிக் கொண்டுருப்பதைக் காணலாம். டிஸ்கவரியில் "Myth Busters" எனும் நிகழ்ச்சியில் பரிசோதனைகளுக்குள்ளாக்கப்படும் நெகிழி பொம்மைகள் இப்படிதான் விறைத்துக்கொண்டு இருக்கும்.
ஒரு போராட்டக்குழுவிற்கு தலைமையேற்றிருக்கும் தலைவன் என்றுமே வியூகம் அமைப்பதிலும், கட்டளைகளைப் பிறப்பிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் போராட்டத்தினை திறமையாக வழிநடத்திச் செல்ல முடியும். இக்கட்டான நிலையில், அதுவும் ஒரு கால்பந்து திடலுக்குச் சமமான நிலப்பரப்பளவில் தலைவனே களமிறங்கி போராடுவது என்பது நிச்சயம் விவேகமான ஒரு செயலாக இருக்கமுடியாது.
அப்படியிருக்க நிச்சயம் அண்ணன் பிரபாகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றிருக்க வேண்டும். சில மாதங்களாகவே தமிழூடகங்களில் பிரபாகரன் களமிரங்கி போராடிவருவதாகவும், தாய்மண்ணைவிட்டு அவர் வேறெங்கும் ஓடிவிடவில்லை என்று அறிக்கைகளும் செய்திகளும் வரும்பொழுது சந்தேகம் வலுத்தது. நிச்சயம் போர்த்தந்திரம் கருதி, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்க வேண்டும். 37 வருட போராட்டத்தை மீண்டும் தொடர வேண்டுமல்லவா..
ஒருவேளை, அவர் களத்திலேயே இருந்து போர் புரிந்திருந்தால், சிங்கள இராணுவம் முற்றுகையிட்டதை அறிந்த மறுகணமே சயனைட் குப்பியை விழுங்கி வீர மரணம் எய்தியிருக்கலாம். ஒருபோதும் சிங்களவன் கையில் குண்டடிப்பட்டு உயிர்துறப்பதை விடுதலைப் புலிகள் விரும்பமாட்டார்கள்.
இவ்வளவு சந்தேகங்களுக்கும் இடையில், அவர் உயிர் நீத்தது உண்மை என்றால் அவரின் சடலம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வுடலின்மீது சவ மற்றும் மரபணு பரிசோதனை நடத்தப்பெற வேண்டும். இச்சோதனைகளைக் கண்காணிக்க சுயேட்சை குழு ஒன்று அமர்த்தப்படவேண்டும். இக்குழுவில் இலங்கை, சீனா, அமெரிக்கா, இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகள் பங்கேற்க வேண்டும்.
ஒருவேளை, மரபணுச் சோதனையில் வீரச்சாவடைந்தது பிரபாகரன் என நிரூபனமானால், ஒரு வீரனுக்கு உரிய சகல மரியாதைகளுடன் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்.
ஆனால், சிங்கள அரசு ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
போரில் என்றுமே இரண்டு அத்தியாயங்கள் உள்ளன.
ஒன்று போர் நடக்கும் காலகட்டம். மற்றொன்று போர் முடிந்த பின்பு நிலவும் காலகட்டம். இவற்றில் இரண்டாவது அத்தியாயம் என்பது சிங்கள இனவெறி அரசிற்கொரு கெட்ட கனவாக அமையப்போகிறது என்பது உறுதி!
Read more...