தமிழ் நாளிதழ்களால் திசைதிருப்பப்படும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் போராட்டம்!

>> Saturday, November 27, 2010

தொடர்ந்து தமிழ் நாளிதழ்களால் புறக்கணிக்கப்பட்டுவரும் பினாங்கு மனித உரிமைக் கட்சியின் தமிழ்ப் பள்ளி போராட்ட நிகழ்வுகளை சிறு கோர்வையாக இங்கு அளிக்கிறேன். நடக்காதவற்றையெல்லாம் நடந்ததாகவும், நடந்தவற்றை மறைத்தும் திசைதிருப்பியும் தங்களின் தவறுகளை மறைக்கும் மத்திய அரசாங்கம், கல்வி அமைச்சு, மாநில அரசாங்கம், மாநில கல்வி இலாகா, பள்ளி நிருவாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி கட்டிடக் குழு, தமிழ் நாளிதழ்கள் போன்ற தரப்பினருக்கு இண்ட்ராஃப் நிச்சயம் பதிலடி கொடுக்கும்! ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு தருணத்திலும் செய்து முடிக்காத பல விடயங்களை மூன்றே மாதங்களில் பெர்றோர்களின் ஆதரவைக்கொண்டு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சி செய்து முடித்திருக்கிறது.அடிமட்ட மக்கள் சீறி எழுந்தால்தான் அதிகார வர்கத்தினரை திணறடிக்க முடியும் என்பது கண்கூடாக நாம் கண்டுவரும் உண்மை! எனவே, இதேப்போன்ற போராட்டங்களை நாடு தழுவிய நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர்கள் முன்னெடுக்க வேண்டும்! தொடர்ந்து தமிழ் நாளிதழ்களின் நேரடி ஆதரவோடு ‘கட்டப்படும்!’,'எழுப்பப்படும்!’, ’பேசப்படும்!’, ‘கொடுக்கப்படும்!’, ‘அறிவிக்கப்படும்!’ படும்! படும்! படும்! என படம் காட்டும் அதிகாரவர்கத்தினரின் ஏமாற்றுவித்தையை மக்கள் முன்னின்று முறியடிக்க வேண்டும்!
(22-08-2010)

கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதியன்று பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடந்தேறியது. பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பொருத்தமட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்நோக்கிவரும் புதிய கட்டிட நிர்மாணம் குறித்த பிரச்சனையை மையமாக வைத்து அன்றைய நிகழ்வில் பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டன.

சரியாக மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் பத்து கவானைச் சார்ந்த இண்ட்ராஃப் அதரவாளரும் மனித உரிமைக் கட்சியின் உறுப்பினருமான திரு.அண்ணாதுரை சிறு உரையாற்றினார். தற்போது பத்து கவான் மக்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படை பிரச்சனைகளைத் தொட்டு அவர் உணர்ச்சிப்பொங்க கருத்துரைத்தார். அவரையடுத்து பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.கலைசெல்வம் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் இலக்கு குறித்து ஒளியிழையின்வழி காண்பித்து வந்திருந்த பொதுமக்களுக்கு அவர் விளக்கங்களையும் கொடுத்தார்.

அடுத்த அங்கமாக, நிகழ்வின் கருப்பொருளான ‘பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே?’ எனும் தலைப்பில் திரு.கலைச்செல்வம் அப்பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடலைத் தொடக்கி வைத்து வழிநடத்திச் சென்றார். மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் கடந்தகால மற்றும் தற்போதைய நிலை குறித்து ஒளியிழையின்வழி சிறப்பாக எடுத்துக் காட்டி உரையாற்றினார்.

பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் எழுவதற்கான அறிகுறிகள் இதுவரையில் தென்படவில்லை என பல பெற்றோர்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்தினர். அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு அறியப்படுத்தாமலேயே பள்ளியின் நிருவாகமும் ம.இ.காவினரும் சொந்தமாக கட்டிடக் குழுவினைத் தோற்றுவித்துக் கொண்டு இந்நாள்வரை மக்களை ஏமாற்றி வருவதாக அச்சங்கத்தின் முன்னால் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டினார். புதிய கட்டிட நிர்மாணிப்பிற்காக மத்திய அரசாங்கம் வழங்கிய இரண்டு லட்ச வெள்ளியை கட்டிடக் குழு என்ன செய்தார்கள் என ஒரு கேள்வியையும் எழுப்பினார். ’இனியும் நாங்கள் ஏமாறப்போவதில்லை’ என அனைவரும் ஒரு குரலாக முடிவெடுத்தனர்.

சுமார் 40 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்திய பின், இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகரான திரு.நா.கணேசன் கலந்துரையாடலின் அடுத்த கட்ட அங்கத்தை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார். பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த பெற்றோர்களின் உரிமைகளைத் தொட்டு அவர் விளக்கமளித்தார். அவ்வுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர்கள் எவ்வாறு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உதவ முடியும் எனவும் எடுத்துக் கூறினார். உட்பூசல்களில் கவனத்தை சிதறடிக்காது நாம் திட்டமிட்டு வேலைகளைச் செய்து அடுத்தாண்டு சூன் மாத்த்திற்குள் அப்பள்ளியின் கட்டிட நிர்மாணிப்பு பணி தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போது கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 2 ஏக்கர் நிலத்தின் நிலப்பட்டாவையும் மற்ற முக்கியமான கோப்புகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும், 2 ஏக்கர் நிலத்தை 5 ஏக்கராக மாநில அரசாங்கத்திடமிருந்து கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக, பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் ’நடவடிக்கை குழு’ ஒன்றினை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படியே 10 பேர் கொண்ட பெற்றோர் நடவடிக்கை குழு ஒன்று திரு.அண்ணாதுரையின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அதோடு பத்து கவான்வாழ் பொதுமக்களாகிய 6 பேர் அக்குழுவிற்கு துணையாக இருந்து செயல்பட இணைக்கப்பட்டனர். இந்த 16 பேர் கொண்ட நடவடிக்கை குழு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஆதரவையும் உதவியையும் முழுமையாக ஏற்பதாகவும், வற்றாத ஆதரவினை தொடர்ந்து இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சிக்கு வழங்கப்போவதாகவும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நடவடிக்கைக் குழு கையொப்பமிட்ட அவ்வுறுதிமொழிக் கடிதத்தை பெற்றோர்களிடமிருந்து திரு.நா.கணேசன் பெற்றுக் கொண்டார்.

இந்த ‘நடவடிக்கை குழு’ எதிர்வரும் ஆகஸ்ட் 26-ஆம் திகதியன்று பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவோடு ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக முடிவெடுக்கப்பட்டது.

இறுதியாக இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு சுமார் 9 மணியளவில் இக்கலந்துரையாடல் நிகழ்வு இனிதே முடிவடைந்தது.

(25-08-2010)

ஆகசுட்டு 25-ஆம் நாளன்று பத்து கவானில் திரு.அண்ணாதுரையின் இல்லத்தில் பெற்றோர் நடவடிக்கை குழு ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தினர். அக்கூட்டத்தில் நாளை தலைமையாசிரியருடன் விவாதிக்க வேண்டிய விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன. பின் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கப்படும் மனு அனைவருக்கும் வாசிக்கப்பட்டு, பின் அனைவரும் முழு சம்மதத்துடன் கையொப்ப படிவத்தில் கையொப்பமிட்டனர்.

(26-08-2010)

இதனிடையே திட்டமிட்டப்படி கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாளன்று காலை 8.45 மணியளவில் ‘பெற்றோர் நடவடிக்கைக் குழு’ இண்ட்ராஃபைச் சார்ந்த திரு.அண்ணாதுரையின் தலைமையில் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் அவர்களைச் சந்தித்து ஒரு விண்ணப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தனர். இக்கடிதம் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கப்படும்போது பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் திரு.கணேசன் அவர்களும் உடனிருந்தார்.

அக்கடிதத்தில் நடவடிக்கைக் குழுவிற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவிற்கும் மத்தியில் ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்தினை இரண்டு வாரத்திற்குள் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அச்சந்திப்புக் கூட்டம் நடைப்பெறுவதற்கு ஆவண செய்வதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் சம்மதம் தெரிவித்தார்.

(11.09.2010)

செப்தம்பர் 11-ஆம் நாளன்று பத்து கவானில் திரு.அண்ணாதுரையில் இல்லத்தில் பெற்றோர் நடவடிக்கைக் குழு சந்திப்புக் கூட்டத்தினை நடத்தினர். பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாசிடம் கொடுக்கப்பட்ட மனுவிற்கு இரண்டு வார காலக்கெடு கேட்டிருந்தும், பள்ளியிடமிருந்து எந்தவொரு பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளியிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காத்தால், இவ்விவகாரம் தொடர்பில் பினாங்கு மாநில கல்வி இலாகாவிற்கு கடிதம் ஒன்றினை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டது.

(08.10.2010)

தலைமையாசிரியரின் பதிலுக்கு காத்திருந்தும் எந்தவொரு ஒத்துழைப்பையும் அவர் வழங்காததுகண்டு, அத்தோபர் 8-ஆம் நாளன்று பெற்றோர் நடவடிக்கைக் குழுவினைச் சேர்ந்த திரு.சிவபெருமாள் பினாங்கு மாநில கல்வி இலாகாவில் ஒரு புகார் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்தார். அக்கடிதத்தில் பள்ளி நிருவாகத்தின் ஒத்துழையாமையின் காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அதற்கு மாநில கல்வி இலாகா இவ்விடயத்தை ஆராய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.
இதே நாளன்று திரு.அண்ணாதுரை புத்ரா ஜெயாவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு சென்று கல்வி அமைச்சர் ட்த்தோ சிறீ முகிதீன் யாசினுக்கு ஒரு மனுவினை சமர்ப்பித்துள்ளார். கல்வி அமைச்சரின் மனுவை அமைச்சரின் உதவியாளர் பெற்றுக் கொண்டார்.

(14.10.2010)

கல்வி அமைச்சுக்கு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து, கல்வி அமைச்சின் The Education Planning and Research Department (EPRD)-யைச் சேர்ந்த கல்வி அதிகாரியான திரு.சுவர்மணி சுப்பன் திரு.அண்ணாதுரையை அலைப்பேசியின் வழி தொடர்புகொண்டு பள்ளியின் முழு விவரங்களையும் கேட்டறிந்தார். டத்தோ சிறீ முகிதீன் யாசினுக்கு இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கையை நேரடியாக சமர்ப்பிக்கப்போவதாகவும் கூறினார்.

(15.10.2010)

அத்தோபர் 15-ஆம் நாளன்று பினாங்கு மாநில கல்வி இலாகாவின் Unit Pembangunan Sekolah Bantuan Modal பிரிவிலிருந்து அப்பிரிவின் கண்காணிப்பாளர் திரு.ரோஸ்லி என்பவர் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வருகையளித்திருந்தார். அதிகாரியின் வருகையினையொட்டி பள்ளி நிருவாகம் பெற்றோர் நடவடிக்கை குழுவிடம் கருத்துரைக்க மறுத்துவிட்டது.

(17.10.2010)

பத்து கவானில் திரு.அண்ணாதுரையில் இல்லத்தில் பெற்றோர் நடவடிக்கை குழு சந்திப்புக் கூட்ட்த்தினை நடத்தினர். பெற்றோர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டது. திரு.அண்ணாதுரை எதிர்வரும் 20-ம் திகதியன்று மாநில கல்வி இலாகாவிடம் சமர்ப்பிக்கவிருக்கும் மனுவினை அனைவருக்கும் விளக்கினார். கூட்டத்தில் அம்முடிவிற்கு ஏகமனதாக அனைவரும் சம்மதித்தனர்.

(20.10.2010)

மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியுரைஞர் திரு.நா.கணேசன் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் சார்பாக புத்ரா ஜெயாவிலுள்ள கல்வி இலாகாவின் Unit Perancangan dan Peyelidikan Prestasi எனும் பிரிவிற்குச் சென்று பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்த நிகழ்நிலை அறிக்கையினையும், கல்வி அமைச்சு பள்ளி விவகாரத்தில் காலந்தாழ்த்தாது உரிய நடவடிக்கையினை விரைந்து எடுக்க்க் கோரி ஒரு மனுவினை சமர்ப்பித்தார். அதே சமயம் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு கடிதத்திற்கும் கல்வி அமைச்சு முறையாக அதிகாரப்பூர்வ பதில் கடிதம் கொடுக்க வேண்டும் எனவும், அலைப்பேசி தொடர்புகளின்வழி பிரச்சனையை தட்டிக்கழிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே நாளன்று திரு.அண்ணாதுரை பினாங்கு மாநில கல்வி இலாகாவில் ஒரு மனுவினை சமர்ப்பித்தார். அம்மனுவில் பள்ளியின் புதிய நிலத்தில் புதிய கட்டிடம் எழும்புவதற்கு மாநில கல்வி இலாகா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளியின் நிருவாகம் பெற்றோர்களுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்குவதற்கு கல்வி இலாகா ஆவண செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(22.10.2010)

அத்தோபர் 22-நாளன்று பத்து கவான் வட்டாரத்தில் வசிக்கும் 1 வயதிலிருந்து 12 வயதிற்குட்பட்ட ஆயிரம் பிள்ளைகளின் கையொப்பம் கொண்ட ஒரு ’கையெழுத்து வேட்டை’ ஆரம்பிக்கப்பட்டது. மலாய், சீனப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பாராபட்சமின்றி வழங்கப்பட்டால், நாங்களும் தமிழ்ப்பள்ளியில்தான் (குறிப்பாக பத்து கவான் புதிய தமிழ்ப்பள்ளி)யில் நிச்சயம் பயில்வோம் என உறுதிகூறும் வகையில் கோரிக்கை மனு தயார் செய்யப்பட்டுள்ளது. (இதுவரையில் சுமார் 500க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன)


(24.10.2010)

பத்து கவானில் திரு.அண்ணாதுரையின் இல்லத்தில் நான்காவது முறையாக நடத்தப்பெற்ற சந்திப்புக் கூட்டத்தில், இதுவரையில் பள்ளியின் விவகாரம் தொடர்பாக மனித உரிமைக் கட்சியின் ஆலோசனையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் எடுத்துக் கூறப்பட்டன. அடுத்தக்கட்ட நடவடிக்கையும் விவாதிக்கப்பட்டது. பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விவகாரம் வெளிவரத் தொடங்கியவுடன் சில பொறுப்பற்ற அரசியல்வாதிகள் நாளிதழ்களில் சுயவிளம்பரத்திற்காக பல அறிக்கைகளைக் கொடுத்து வருகின்றனர். சிலர் பெற்றோர் நடவடிக்கைக் குழு எடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவும் விளங்கிவருகின்றனர். சமுதாயத்திற்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளை இவர்கள் தவிர்க்க வேண்டும் என பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.கலைசெல்வம் கூறினார்.

(22.11.2010)

மனித உரிமைக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் நடவடிக்கைக் குழுவினர் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு கடிதம் வழங்க கொம்தாருக்குச் சென்றனர். மாநில அரசாங்கத்தால் வழங்கப்பெற்ற 2 ஏக்கர் நிலத்தில் போதிய வசதிகளுடன் கூடிய பள்ளியைக் கட்ட இயலாது, எனவே மேலும் 3 ஏக்கர் நிலம் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்க வேண்டும் என மனித உரிமைக் கட்சியின் மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அம்மகஜரை கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் இங் வெய் எய்க் பெற்றுக் கொண்டார். இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தேசிய ஆலோசகர் தெள்ளத் தெளிவாக பத்து கவான் மக்களின் எதிர்ப்பார்ப்பை அச்சட்டமன்ற உறுப்பினரிடம் விளக்கிக்காட்டி மகஜரை ஒப்படைத்தார். அதன்பின் நிருபர்களுடன் நேர்க்காணலும் நடைப்பெற்றது.

(23.11.2010)

மனித உரிமைக் கட்சி மற்றும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் நடவடிக்கை குழுவின் தொடர் அழுத்தத்தின் பேரில் புத்ரா செயாவிலிருந்து கல்வி அமைச்சு அதிகாரிகளும் மாநில கல்வி இலாகாவின் கல்வி அதிகாரிகளும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். கல்வி அதிகாரிகளுடன் பள்ளி நிருவாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி கட்டிடக் குழு, பெற்றோர் நடவடிக்கைக் குழு மற்றும் பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியின் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பள்ளி நிலவரம் குறித்து விவாதித்தனர். கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் மனித உரிமைக் கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டு பள்ளியின் நிலவரத்தை அறிந்தனர். கல்வி அமைச்சின் பதில்கள் மனித உரிமைக் கட்சிக்கு மனநிறைவளிக்கவில்லை. தற்சமயம் நான்கு பேரின் பேரில் உள்ள பள்ளியின் நிலம் மிக விரைவில் மத்திய அரசாங்கத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கைகள் சாக்கு போக்குகள் இல்லாமல் நடைப்பெற வேண்டும் என மனித உரிமைக் கட்சி கேட்டுக் கொண்டது.

போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP