இலண்டன் உயர் நீதிமன்ற தீ விபத்தால் பதிவு அழிந்தது. ஹிண்ட்ராஃப் மேல்முறையீடு செய்வதில் தடங்கல் !

>> Saturday, April 18, 2015


இலண்டன், 18 ஏப்ரல்: 

ஐக்கிய இராஜியத்திற்கு(UK) எதிராக ஹீண்ட்ராஃப் இயக்கம் தொடர்ந்த வழக்கு நடைபெற்ற ஏப்ரல் முதல் நாளில் இலண்டன் உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டது. இதனால், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்போது வழக்கமாக பதிவு செய்யப்படும் ஒலிப்பதிவு அன்றைய நாளில் இடம்பெறவில்லை. இதனால், வழக்கின் குரல் பதிவு அறிக்கையாக பதிவு செய்யப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட வாதி, பிரதிவாதி தரப்பினரிடம் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கும் நடைமுறை ஹிண்ட்ராஃப் வழக்கைப் பொறுத்த மட்டில் தடை கண்டுள்ளது என்று ஹீண்ட்ராஃப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி இலண்டனில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் அரசினால் மலாயாவிற்கு அழைத்துவரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நியாயம் வேண்டி ஹிண்ட்ராஃப் தொடர்ந்த வழக்கை, இலண்டன் உயர்நீதி மன்ற நீதிபதி நிக்கோலஸ் பிளேக், மலாயாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்ட காலத்தில் ராணியார் தன் சட்டப்பூர்வ கடமையைத்தான் நிறைவேற்றினாரேத் தவிர, பாதிக்கப்பட்ட மலாயா இந்தியர்களுக்கு இன்றைய பிரிட்டிஷ் அரசு பொறுப்பாக முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.

இது குறித்து தற்பொழுது மேல் முறையீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர் நிறுவனமான ‘இம்ரான் கான் & பார்ட்னர்ஸ்’, கடந்த 9-ஆம் நாள் இலண்டன் உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு நகலுக்காக விண்ணப்பித்த வேளையில்தான் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய நிலை, 21 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்னும் நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப செயல்படுதில் தடங்கலை ஏற்படுத்தி உள்ளது. தவிர, ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர்களும் இது குறித்து மேலாலோசனை வழங்க முடியாமல் இருக்கின்றனர்

அதேவேளை, தீர்ப்பு குறித்த நகல் கிடைக்காத நிலையில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு குறித்தும் பிரிட்டிஷ் அரச உச்ச நீதிமன்றத்துடன் ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். மேல் முறையீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

இதற்கிடையில், வழக்கின்போது ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்ட குறிப்புகளின் அடிப்படையில் ஹீண்ட்ராஃப் சார்பான இலண்டன் வழக்கறிஞருடனும் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதில், 1957 மலாயா சுதந்திரச் சட்டம் தொடர்பான சட்டத்திற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 21-07-1957-இல் ஒப்புதல் அளித்த பிரிட்டிஷ் அரசியாரின் சட்டப் பூர்வ கடமை குறித்த அம்சம்தான் தடைக்கல்லாக இருக்கிறது.

இந்தப் பிரச்சினையில், ஹீண்ட்ராஃப் இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து எழுப்பப்படும் ஐயம், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மலாயா அரசியல் சாசனத்தில் பின்னர் இடைச்செருகல் எப்படி இடம் பெற்றது என்பதுதான். இதில், அப்போதைய பிரிட்டிஷ் அரசும் அம்னோ தலைவர்களும் தனிக் கூட்டு அமைத்து செயல்பட்டனரா என்பதும் ஐயத்திற்குரியதாக இருக்கிறது.

ஹீண்ட்ராஃப் இயக்கத்தால் முன் வைக்கப்படும் இன்னொரு ஐயம், பிரிட்டிஷ் அரசினால் மலாயாவிற்கு கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், 1948 பிரிட்டிஷ் தேசியச் சட்டத்தின்படி பிரிட்டிஷ் குடிமக்கள் என்ற தகுதிக்கு உரியவர்கள். அதேவேளை, மாலாயா சுதந்திரம் தொடர்பான பேச்சு வார்த்தை இடம்பெற்ற போது, இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2-ஆம் அல்லது 3-ஆவது தலைமுறையைக் கண்டிருந்தனர். அந்த வகையில், இவர்களின் நலனையும் மலாயாவை விட்டு பிரிட்டிஷ் அரசு வெளியேறிய தருணத்தில் பிரிட்டிஷ் அரசு கவனத்தில் கொண்டிருந்ததா என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை குறித்த ஏராளமான ஆவணங்களையெல்லாம் வழக்கின்போது ஹீண்ட்ராஃப் சமர்ப்பித்தது. இருந்தும், நீதிபதி நிக்கோலஸ் பிளேக் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டாரா என்பதும் தெரியவில்லை.

வழக்கை தள்ளுபடி செய்யும் முன், ஹீண்ட்ராஃப் தொடுத்த வழக்கின் முழு சாரத்தையும் அறிந்து, தெளிந்து கொண்டாரா என்பதே எங்களின் ஐயமாக இருக்கிறது. அப்படி என்றால் பிரிட்டிஷ் நீதி பரிபாலனத்தில் இது ஒரு பின்னடைவாகவேக் கருதப்படும். எது எவ்வாறாயினும், ஹீண்ட்ராஃப் இயக்கத்தின் போராட்டம் தொடரும் என்று வழக்கஞர் வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவு படுத்தியுள்ளார்.

பொ.வேதமூர்த்தி
தலைவர் - ஹிண்ட்ராஃப்
18-04-2015

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP