ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களுக்குக் கிடைத்தது என்ன?

>> Monday, June 30, 2008


Read this document on Scribd: Letter to PM from Hindraf


முழுமையான தகவல் விரைவில்...

Read more...

ஓரினப்புணர்ச்சி ! அனுவார் கைது செய்யப்படலாம் !

>> Sunday, June 29, 2008


தன்னை ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறி, 23 வயது ஆடவர் ஒருவர் நேற்று மாலை 6 மணியளவில் திராவர்சு சாலை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் இரண்டாவது முறையாக இத்தகைய புகார் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கோலாலம்பூர் துணைத் தலைமை காவல்த்துறை அதிகாரி முகமது சப்து ஓஸ்மானை தொடர்புக் கொண்டு கேட்டப் பொழுது, அனுவார் மீது புகார் செய்யப்பட்டது உண்மை எனக் கூறினார்.

இதற்கிடையில், அனுவார் இபுராகிம் நேற்றிரவு சில கட்சியின் தலைவர்களுடன் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அனுவாரின் பிரத்தியேக உதவியாளரான சைஃபுல் பகாரியை மதியம் காவல் துறையினர் அழைத்துச் சென்று, அவரை அனுவார் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக ஒப்புக் கொண்டு ஒரு புகாரை அளிக்குமாறு காவல் துறையினர் வற்புறுத்தியதாக இரவு 11.15 மணியளவில் கிடைக்கப்பெற்ற மக்கள் நீதிக் கட்சியின் குறுந்தகவல் அறிவித்தது.

இப்புகாரைத் தொடர்ந்து இன்று அனுவார் எந்நேரமும் காவல்த் துறையினரால் கைது செய்யப்படலாம் எனத் தெரிய வருகிறது.

இவ்விடயம் தொடர்பாக இன்று அனுவார் இபுராகிம் நிருபர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து தன்நிலை விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஷா அலாம் குவாலிட்டி தங்கும் விடுதியைச் சுற்று மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் பணிப்படையினர் சுமார் 1000 பேர்கள் 22 தொகுதிகளிலிருந்து திரட்டப்பட்டு குவிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த 48 மணிநேரத்தில் அனுவார் இபுராகிம் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக அறியப்படுகிறது.

மலேசியா கினி படச்சுருள்



அம்னோ தனது புத்தியைக் காட்டி விட்டது...!

பலம் கொண்டு எதிர்த்தும் முயற்சி வீணே..! இனி எதிராளியின் பலத்தை ஒடுக்க அம்னோ 50 ஆண்டுகளாக கடைப்பிடிக்கும் ஒரே வழி... போலீஸ்...! போலீஸ்...! கைது...! கைது...!

இன்று அனுவார் கைதானால்...? போராட்டம்தான்...!!!

Read more...

தசாவதார நுணுக்கங்கள்...

>> Saturday, June 28, 2008


தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு தற்போது உலகமெங்கிலும் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கும் தசாவதாரம் திரைப்படத்தை பார்த்துவிட்டீர்களா?

படம் பார்த்தவர்கள் நிச்சயம் பிரமித்திருப்பீர்கள். ஒழுங்கிண்மைக் கோட்பாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தசாவதாரம் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 'கேயோசு தியாரி' அல்லது ஒழுங்கிண்மைக் கோட்பாடு எப்படி இப்படக் கருவில் மையமிட்டு கதையின் 10 அவதாரங்களையும் பகடைக் காய்களாய் நகர்த்தியுள்ளது எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், திருத்தமிழில் சுப.நற்குணன் ஐயா வெளியிட்டுள்ள தசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள் எனும் திரைவிமர்சனத்தை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

பலவகையில் நுணுக்கமாகப் புனையப்பட்ட இக்கதையில் மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. திரைப்படத்தில் நாம் கண்ட கமலின் 10 வேடங்களையும், ஏன் அவர் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதற்கு காரணமும் உள்ளது.

விஷ்ணு புராணத்தில் திருமால் எடுத்த மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமர், இராமாவதாரம், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகிய 10 அவதாரங்களுக்கும் கமலஹாசன் தனது 10 வேடங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையை கொண்டுவந்திருக்கிறார். எந்தெந்தெ வேடங்கள் திருமாலின் தசாவதாரங்களை பிரதிபலிக்கின்றன என்று பார்ப்போம்.



மச்ச (மீன்) அவதாரம் : மச்ச அவதாரமானது நீர்ப்பிரளயத்திலிருந்து உலகைக் காப்பதற்குத் தோன்றியது போல் ரங்கராஜ நம்பி திருமால் சிலையைக் காப்பாற்றும் போராட்டத்தின் இறுதியில் கடலில் சங்கமமாகி உயிரை விடுகிறான்.

கூர்ம (ஆமை) அவதாரம் : திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார். திருப்பாற்கடலிலிருந்து அமிருதம் சுரக்க இறுதியில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. ஜார்ச் புஷ் உருவத்தில் ஆமையாக தோன்றாவிட்டாலும், உலக அரசியலில் அவர் வகிக்கும் முக்கிய பொறுப்பை இது எடுத்துக் காட்டுகிறது. அவர் எடுக்கும் சில முடிவுகளில் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றி விடும் வல்லமை அவர் ஏற்றிருக்கும் பொறுப்பிற்கு உள்ளது.



வராக (பன்றி) அவதாரம் : பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரண்யாக்சன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து பூமியை மறைத்து வைத்து பின் தனது மூக்கின்மேல் வைத்து வெளிக்கொணர்ந்து காப்பாற்றினார். கிருஷ்ணவேணி பாட்டி 'முகுந்தா முகுந்தா' பாடலுக்கு வராக அவதாரத்தை செய்து காட்டினார். அதோடு தபாலில் வந்த கிருமியை அலமாரியில் புகுந்து மறைந்துக் கொண்டு பின் வெளியே கொண்டு வந்து கோவிந்தராஜ சிலையினுள் போட்டுவிட்டு, அனைவரையும் கோவிந்தராஜக் கடவுள் காப்பாற்றிவிட்டதாகக் கூறுகிறார்.


நரசிம்ம (பாதி சிம்மம், பாதி மனிதன் )அவதாரம் : திருமால் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். தன் பரமபக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம். சிங்கேன் நரஹசி எனும் சப்பானிய தற்காப்புக் கலைஞனிடம் நரசிம்ம அவதாரத்தின் ஒற்றுமைகளைக் காண முடிகிறது. அவனது பெயரிலேயே 'சிங்' சிம்மத்தைக் குறிக்கிறது. 'நர' மனிதனைக் குறிக்கிறது. நரசிம்மர் தனது இரண்டு கைகளால் இரணியனைக் கொன்றது போல், சிங்கேன் நரஹசி கிறிஸ்டியன் ஃப்லேட்சரை கொல்வதற்காக தனது தற்காப்புக் கலையைக் கொண்டே, அதாவது ஆயுதமின்றி கொல்லச் செல்கிறான்.


வாமன அவதாரம் : வாமன அவதாரத்தில், திருமால் பிராமண சிறுவனாகத் தோன்றி, மகாபலி அரசனிடம் மூன்றடி மண் கேட்டு வானுயர வளர்ந்து மூவுலகத்தையும் அளந்து இறுதியில் மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது அழுத்தி வதம் செய்தார். அதேப்போல், வானுயர வளர்ந்த வாமனரைப் போல், கலிஃபுல்லா கான் உயர்ந்த மனிதராக வளம் வருகிறார்.


பரசுராமவதாரம் : பரசுராமர் ஜமதக்னி முனிவருக்குப் பிறந்தவர். பரசு என்றால் கோடரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடரியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். பாசுராமர் தனது வில்லையும் அமபையும் கொண்டு சத்திரியர்களின் 21 பரம்பரைகளையும் அழித்தார். கிறிஸ்டியன் ஃப்லேட்சர் பரசுராமரைப் போல் பழைய ஆயுதமான கோடரி, அம்பு, வில் வைத்திருக்காவிட்டாலும், நவீன ஆயுதமான துப்பாக்கி கொண்டு அனைவரையும் கொல்கிறார்.


இராமாவதாரம் : இல்லறத்திற்கு உகந்த தலைவனாக எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் இராமர். இவர் தனது மனைவி சீதா பிராட்டியாரின் மீது வைத்திருந்த பாசம் அலாதியானது. தனது மனைவியை இராவணனிடமிருந்து காப்பாற்றுவதற்கு அவர் அனைத்தையும் இழந்தார். அவதார் சிங் வேடம் இராமாவதாரத்தின் ஒற்றுமைகளை வெளிப்படுத்துகிறது. இசையா அல்லது மனைவியா என முடிவெடுக்கும் ஒரு இக்கட்டான நிலைக்கு அவதார் சிங் தள்ளப்படுகிறார். இறுதியில் மனைவிதான் தனக்கு முக்கியம் என மனைவி மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறார்.


பலராமர் அவதாரம் : பலராமர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் கிருஷ்ணருடைய அண்ணனாவார். பல்ராம் நாயுடு எனும் பெயர் கொண்ட சி.பி.ஐ வேடம் பலராமர் என்ற பெயருடன் ஒன்றியுள்ளது.



கிருஷ்ணாவதாரம் : வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார். வின்செண்ட் பூவராகன் வேடம் கிருஷ்ணவதாரத்தை பிரதிபலிக்கிறது. நிறத்தில் இருவரும் கறுப்பு. திரௌபதியின் மானத்தைக் காப்பாற்ற கிருஷ்ணர் சேலையைக் கொடுத்ததுபோல், ஆண்டாளின் சேலையை மணல் திருடன் பிடித்து இழுக்கும் வேளையில் பூவராகன் அங்கேத் தோன்றி கற்பழிப்பு முயற்சியைத் தடுக்கிறார். கிருஷ்ணர் தனது இறுதி காலத்தில், வேடன் ஒருவன் தவறுதலாக அவரது காலில் விஷ அம்பெய்ய அவர் விண்ணுலகம் செல்கிறார். அதேப்போல், பூவராகன் சுனாமியின் போது ஒரு காரில் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு இரும்புத் தூண் அவர் காலில் குத்தி அவரை அங்கிருந்து நகரமுடியாமல் செய்து விடுகிறது. பூவராகன் இரும்புத்தூணை அகற்ற முயற்சி செய்தும் பலனளிக்காமல் நீரில் மூழ்கி இறக்கிறார்.



கல்கி அவதாரம் : கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும். கோவிந்த ராமசாமி என்கிற உயிரியல் விஞ்ஞானி கல்கி அவதாரத்தோடு ஒன்றிய ஒரு பாத்திரமாகும். தீயவைகளை அழித்து உலகைக் காக்க வரும் கல்கி அவதாரத்தைப்போல், கிருமி பரவாமல் உலகத்தைக் காப்பாற்ற கோவிந்த ராமசாமி கடுமையாக முயற்சிக்கிறார். இறுதியில் வெற்றியும் பெறுகிறார்.

என்ன வாசகர்களே, கமலின் பத்து வேடங்களும் திருமாலின் தசாவதாரங்களை பிரதிபலித்தனவா?

தசாவதாரம் எனும் திரைப்படத்தைப்பற்றி பேச வேண்டும் என்றால் பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு விடயங்களை மாறுபட்ட கோணங்களில் ஆராய்வதற்கு இப்படம் வழிவகுக்கிறது. இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். கிருத்துவ பைபிளில் உலகம் அழியும் தருவாயில் யேசுநாதர் ஒரு பெரிய படகை அனுப்பி பக்தர்களைக் காப்பாற்றுவார் எனக் கூறுகிறது. அதேப்போல் இப்படத்தில் சுனாமி அலையைக் கண்டதும் விஞ்ஞானியும், தற்காப்புக் கலைஞனும், ஆண்டாளும் ஒரு படகில் ஏறிக் கொள்வார்கள். சுனாமி அலை ஓய்ந்ததும் அப்படகு ஒரு தேவாலயத்தின் மீது நங்கூரமிட்டிருக்கும். இதுப்போல பல துணுக்குகள் கைவசம் இருந்தாலும் அனைத்தையும் சொல்வதாயில்லை. பிறகு முழுக்கதையையும் சொன்னதாகிவிடும். இத்திரைப்படத்தைக் காணாதவர்கள், அருகிலுள்ள திரையரங்கில் சென்று பார்க்கவும், திருட்டு வி.சி.டியில் பார்த்தால் உங்களுக்குத்தான் நஷ்டம், படத்தின் பிரம்மாண்டத்தை அதில் காண முடியாது.

படத்தைப் பார்த்துவிட்டவர்கள் தொழில்நுட்பத்தை வியந்திருப்பார்கள், ஆனால் ஒருசிலர் மட்டுமே கதையின் நுணுக்கத்தை ஆராய்ந்திருப்பர். கதைக்காக மீண்டும் ஒருமுறை படம் பார்க்கச் செல்ல வேண்டும் என எண்ணினால் கழுகுப் பார்வையோடு சென்று கண்டுகளித்து வாருங்கள். ஒரு தமிழன் இப்படியெல்லாம் யோசித்து ஒரு கதை தயாரிக்க முடியுமா என நிச்சயம் வியப்பீர்கள்.

பிரம்மாண்டம் + கதை + தொழில்நுட்பம் + வேகம் + உழைப்பு + கருத்து = தசாவதாரம்

Read more...

ஃபிரண்ட் லைன்" மனித உரிமை இயக்கம் மாமன்னருக்குக் கடிதம்...

>> Thursday, June 26, 2008

திரு.உதயகுமாருக்கு உரிய சிகிச்சை வழங்கக் கோரி, டப்ளின் அயர்லாந்தை மையமாகக் கொண்ட 'ஃபிரண்ட் லைன்' எனும் மனித உரிமை இயக்கம் மலேசிய நாட்டு பேரரசிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதன் நகல் உங்கள் பார்வைக்கு... இவ்வியக்கத்தின் மதிப்பிற்குரிய ஆலோசகர்களாக 14-ஆம் தாலாய் லாமா, நோபல் பரிசுப் பெற்ற வங்காரி மூதா மாத்தாய் போன்றோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read this document on Scribd: Frontline Defenders

Read more...

நடந்து பாருங்கள், உலகமே உங்களுக்கு அடிமை..


"தனது நடைப்பயணம் பற்றி சதீசு குமார் பெட்ரெண்டு ரஸ்ஸலுக்கு ஒரு கடிதம் எழுதி தெரிவித்தார். உடனே ரஸ்ஸல் உலக அமைதிக்காக நடைபயணம் செய்யும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் எனக்கு 90 வயதாகிறது. உலகம் மிகப்பெரியது. எப்படியாவது என் சாவிற்கு முன்னால் உன்னை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வேகமாக நடந்து வா" என்று பதில் எழுதியிருந்தார். அது சதீசு குமார் மனதில் இன்னும் ஆர்வத்தை அதிகமாக்கியது.

ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர் கையில் விசா, கடப்பிதழ் எதுவுமில்லை. அத்தோடு இந்தியா பாகிஸ்தான் இரண்டும் யுத்த நெருக்கடியில் இருந்த நாட்கள் அவை. பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்கும் முன்பாக அவரது நண்பர்களில் ஒருவர் நாலைந்து பொட்டலங்கள் சாப்பாடு தந்து நீங்கள் பாகிஸ்தானிற்குள் போகிறீர்கள். அது எதிரியின் தேசம் உங்களுக்கு சாப்பாடு கூட கிடைக்காது இதைக் கொண்டு செல்லுங்கள் என்று தந்திருக்கிறார்.

சதீசு குமார் அதை மறுத்தபடியே இந்த சாப்பாட்டை வாங்கிக் கொண்டால் இன்னொரு மனிதன் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை என்றாகிவிடும். ஆகவே எனக்கு வேண்டாம். பட்டினியால் சாவதாக இருந்தால் கூட பரவாயில்லை பாகிஸ்தானில் செத்துப் போகிறேன் என்று நடக்கத் துவங்கினார்.

எல்லை காவலர்கள் அவரைப் பற்றி நாளிதழில் வெளியான செய்தியால் தடை செய்யாமல் அனுமதி தந்தார்கள். பயமும் தயக்கமுமாக பாகிஸ்தானினுள் நடக்க துவங்கிய போது ஒரு கார் அருகில் வந்து நின்று பாகிஸ்தானியர் ஒருவர் இறங்கி வந்து நீங்கள்தானா சதீசு குமார் என்று கேட்டிருக்கிறார்.

ஆமாம் என்றதும் உங்களைப் பற்றி ஒரு மாலை செய்தியேட்டில் வாசித்தேன். அப்போது இருந்து நீங்கள் பாகிஸ்தான் வருவதற்காக காத்திருந்தேன். மிக நியாயமான காரணத்திற்காக நடைபயணம் செல்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்னோடு காரில் வாருங்கள் என்று அழைத்தார்.

அறியாத உலகில் எதிர்படும் முதல்மனிதனே இவ்வளவு அன்பாக நடத்துகிறானே என்று வியந்தபடியே தாங்கள் காரில் வர முடியாது, முகவரியை தாருங்கள் வீட்டிற்கு வந்து சேர்கிறோம் என்றார்கள். அவரோ விடாப்பிடியாக, இல்லை வழியில் யாராவது அழைத்தால் போய்விடுவீர்கள் அதனால் உங்கள் பைகளை என்னிடம் தாருங்கள். அதை மட்டுமாவது நான் கொண்டு செல்கிறேன் என்று அவரது உடைமைகளை வாங்கி கொண்டு சென்றுவிட்டார்.

அன்றிரவு அந்த பாகிஸ்தானியர் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கியிருக்கிறார்கள். அப்போது சதீசு குமாருக்கு தோன்றியது. நண்பர் தன்மீதான அக்கறையில் தந்த பொட்டலத்தில் இருந்தது உணவு அல்ல பயம். அடுத்த மனிதனை நம்பமுடியாமல் போன பயம் தான் சாப்பாட்டை கட்டி கொண்டு போகச் செல்கிறது என்ற உண்மை புரிந்திருக்கிறது"

-இப்படியாகச் செல்லுகின்றது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "நடையால் வென்ற உலகம்" என்ற கட்டுரை.அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு பதிவு.முழுக்கட்டுரையையும் கீழ்கண்ட சுட்டியில் படிக்கலாம்.

நன்றி: http://sramakrishnan.com/deep_story.asp?id=88&page=

அந்த பெரிய மனிதர் சதீசு குமார் பற்றிய ஆவணப்படம் கீழே வீடியோ வடிவில்



இப்பதிவானது என்னுடைய முன்னூறாவது பதிவாக அமைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 70 வயதைக் கடந்தும் உலகத்தை கால்களாலேயே சுற்றி வந்த ஐயா சதீசு குமாரின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும், தற்போது கால் உடைந்து படுத்துக் கிடக்கும் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் விரைவில் நடக்க வேண்டும் என்கிற ஆர்வம் இவரைப் பற்றி படித்ததும் மேலோங்கியிருக்கிறது.

இவ்வேளையில் ஐயா சதீசு குமார் அவர்களைப் பற்றிய பதிவினைக் கொடுத்த திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், இவரின் பதிவை எனக்கு அறியப்படுத்திய பி.கே.பி அண்ணா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

Read more...

வேதமூர்த்திக்கு கைதா, விடுதலையா? கேள்வி நிராகரிக்கப்பட்டது..!

பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, தற்போது இலண்டனில் வசித்துவரும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி மீண்டும் மலேசியாவிற்கு வந்தால், அவர் நிலை என்ன? கைது செய்யப்படுவாரா? அப்படி கைது செய்யப்பட்டால் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்? எனும் கேள்விகளை மக்களவையில் சமர்ப்பித்தபோது நிரூபணமில்லாத கேள்விகளைக் கேட்கக் கூடாது என பதில்கடிதத்தில் மறுமொழியிட்டு அக்கேள்விகளை 23,1(H) விதிமுறையின் கீழ் மக்களவை நிராகரித்துவிட்டதாகக் கூறினார்.

தாம் நிரூபணமில்லாத கேள்விகளைக் கேட்கவில்லையெனவும், அரசாங்கம் சட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் வெளிப்படையான போக்கை கடைப்பிடிக்குமாறு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற நிருபர் கூட்டத்தில் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியா கினி படச்சுருள்


Read more...

இந்துராப்பு தலைவர்களின் விடுதலைக்கு டப்ளின் குழு கோரிக்கை..

>> Wednesday, June 25, 2008


உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இண்ட்ராப் ஐவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று டப்ளினில் அமைந்துள்ள மனித உரிமைக் கழகம் ஒன்று அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

“நியாயமான மனித உரிமை நடவடிக்கைகளுக்காக போராடிய அந்த ஐவரும் எவ்வித விசாரணையுமின்றி காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ,ஃப்ரண்ட் லைன் என்னும் அக்கழகம் கூறியது.

இந்திய சமுகத்தின் பிரச்னைகளுக்காக போராடிய அந்த ஐவரும்- பி.உதயகுமார், எம். மனோகரன், வி. கணபதி ராவ், டி. வசந்தகுமார், ஆர்.கெங்காதரன்- திசம்பர் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

உடனடியாக, அவர்கள் ஈராண்டு தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்காக தைப்பிங் கமுண்டிங் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

“மனித உரிமைகளுக்காக, குறிப்பாக மலேசியாவின் சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க போராடியதற்காக அந்த ஐவரும் காவலில் இருப்பதாக நம்புகிறோம்”, என அக்கழகத்தின் இயக்குனர் மேரி லவ்லோர், மாமன்னர் சுல்தான் மிர்சான் சைனால் அபிடினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு நோயாளியான உதயகுமாருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மன்னர் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் லவ்லோர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“அந்த ஐவரின் உடல் மற்றும் மன நலம் குறித்து ஃப்ரண்ட் லைன் கவலை கொள்வதாகவும்”, அவர் கூறினார்.

மலேசியாவில் மனித உரிமை போராட்டவாதிகள், அச்சமின்றி தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கித் தர வேண்டும் என்றும் அக்கழகம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

செய்தி : மலேசியா இன்று

Read more...

'வண்ணத்துப்பூச்சி விளைவு' அம்னோவை நெருங்குகிறது..!

சிறகடிக்கும் ஒரு பட்டாம்பூச்சி காற்றலைகளில் சிறு அதிர்வலைகளை உண்டுச் செய்து, அந்த அதிர்வலையின் சக்தியானது எப்போதோ நடக்கப்போகும் ஒரு சூராவளிக்கு உதவியாகப் போகிறது என்றால் நம்பவா முடிகிறது. நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது மேலைநாட்டின் சித்தாந்தங்களின் ஒன்றான 'ஒழுங்கின்மைக் கோட்பாடு', அல்லது ஆங்கிலத்தில் இதனை 'கேயோசு தியாரி' என அழைப்பர். இன்று ஏற்படும் ஒரு சிறு மாறுதல் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்திற்கு வித்தாக அமையும் தன்மையை விளக்குவதுதான் 'வண்ணத்துப் பூச்சி விளைவு'. இதைத்தான் இந்துக்கள் வினைப்பயன் அல்லது கர்மம் என்றும், பிற சமயத்தினர் இறைவனின் செயல் அல்லது இறைவனின் கூலி என்கின்றனர்.

இத்தகைய கோட்பாடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள 'அம்னோ' எனும் இனவாத அரசியல் அமைப்பு ஒரு விதிவிலக்கல்ல! 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பார்களே, அதைத்தான் இன்றைய காலக்கட்டத்தில் தான் என்றோ விதைத்த விதையின் பயனாக முளைத்திருக்கும் வினைக்கதிர்களை அறுவடை செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான நிலையில் 'அம்னோ' இருக்கிறது.

விடயத்திற்கு வருவோம்..

நிகழ்வு 1.

"இந்து ஆலயம் உடைப்பு, பொதுமக்கள் காப்பார் தலைமைக் காவல்த்துறை அதிகாரியின் மீது புகார்" (தமிழ் நேசன் 04/06/08 பக்கம் 15).

25 நவம்பர் நிகழ்வானது, மக்களின் சிந்தனைப் போக்கில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத ஒரு கூற்றாகும். இதற்கு முன் எந்த ஒரு இந்தியரும் எந்த ஒரு தலைமைக் காவல்த்துறை அதிகாரியின் மீதும் புகார் செய்ததைப் பார்த்ததும் கேட்டதும் இல்லை. ஆனால், இன்று பொதுமக்களுக்கு நியாயத்தைத் தட்டி கேட்க வேண்டும் என ஒரு தைரியமும் மன உறுதியும் ஏற்பட்டுள்ளது. இவர்களின் இச்சிந்தனை மாற்றமானது, பெரும் வேகத்துடன் சீறிப் பாய்ந்துகொண்டு வரும் காட்டாறுக்கு ஒப்பானது. இது வழிந்தோடும் பாதைகளில் குறுக்கே அணைபோல நின்றுகொண்டிருக்கும் 'அம்னோ' உடைந்து சுக்கு நூறாகிப் போவது திண்ணம். எங்கள் ஆலயங்களை உடைக்கும்போது எழுந்த கல்லின் சத்தம், ஒருநாள் அம்னோவின் அடித்தளத்திலும் கேட்கும். எங்கள் ஆலயங்கள் சுக்கு நூறாகிப் போனதைப் போல், கட்சிப் பிளவினாலும், மக்கள் கொடுத்த அடியாலும் 'அம்னோ' சுக்கு நூறாகிப் போகத்தான் போகிறது. பொதுமக்களே உங்களுக்கு பாராட்டுகள்..

நிகழ்வு 2.

ஈப்போ கலாச்சாரப் பூங்காவிலுள்ள பொது அரங்கில் நடைப்பெற்ற ஒரு கலாச்சார நிகழ்வில் பரதநாட்டியக் கலைஞர்கள் வழக்கம்போல் நடனமாடுவதற்குமுன் நடராசருக்கு செய்ய வேண்டிய பாதபூசையை 'அம்னோ' செய்யவிடாமல் தடுத்துவிட்டது. (என்.எசு.டி 04/06/08 பக்கம் 17)
சமய சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 11-ஐ கலை, பண்பாட்டு, பாரம்பரிய மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ரஃபி அப்டால் பின்பற்றவில்லை. மாற்றாக பிற சமயங்களின் சடங்குகளை பொது நிகழ்வுகளில் நிறைவேற்றுவதை நிராகரித்தவர்களுக்கு ஆதரவாக இவர் வழிமொழிந்திருப்பது வெட்கக்கேடான செயலாகும். ஓர் அமைச்சராக இருந்துக் கொண்டு இவர் உலக பார்வையில் மலேசியாவை பல்லின நாடாகவும், சமய நல்லிணக்கம் கொண்ட நாடாகவும் எப்படி சித்தரிக்கப்போகிறார்? அதோடு, இவரின் இந்தச் செயலானது பல்லின மக்களிடையே எப்படி இன ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும், தேசிய ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும்?

ஒரு சிறிய கலாச்சார நிகழ்வில்கூட தன்னுடைய இனவெறியையும் மதவெறியையும் அம்னோ காட்டத் தயங்குவதில்லை எனத் தெரிகிறது. மக்களே, இந்த வருடம் இயலாவிட்டாலும் 2012-ஆம் ஆண்டு வரும் 13-வது பொதுத்தேர்தலிலாவது 'அம்னோ'வை கவிழ்த்துவிட்டு நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தாருங்கள்..!

வண்ணத்துப் பூச்சியினால் ஒரு சூராவளியை ஏற்படுத்த முடியும் என்றால், 'மக்கள் சக்தி'யினால் ஒரு சுனாமி ஏற்படாதா என்ன?

கட்டுரை : ஐயா வேதமூர்த்தியின் 'இந்துராப் குரல்' எனும் ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சங்களை, ஆசிரியரின் சொந்த நடையில் மொழிபெயர்த்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் தொடரும்...

Read more...

இன்றைய பதிவிறக்கம்...

இன்று வடலூர் இராமலிங்க வள்ளலாரின் வரலாறு கூறும் 547 பக்கங்கள் கொண்ட தமிழ் மென்புத்தகம் உங்கள் பதிவிறக்கத்திற்காக...

பதிவிறக்கம் செய்திட கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுங்கள்.

வடலூர் இராமலிங்க வள்ளலாரின் வரலாறு

Read more...

திரு.உதயகுமார் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதி..!

>> Saturday, June 21, 2008

கடந்த 19-ஆம் திகதி சூன் மாதமன்று கமுந்திங் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த திரு.உதயகுமார், திடீரென்று தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இம்முறை அவருக்கு தோல் வியாதி கண்டு உடல்நலம் சற்று மந்தமாக இருந்ததால் சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.



நிழற்படங்கள் : சிவா, தைப்பிங் (நன்றி)

இந்திய சமுதாய உரிமைகளுக்காகப் போராடிய திரு.உதயகுமார் உடல்நலம் பெற நாடு தழுவிய நிலையில் சிறப்பு பிரார்த்தனைகளைத் தொடந்து செய்துவருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டம் தொடரும்...

Read more...

பிரதமருக்கு ஒரு கடிதம்..

பெறுநர் : பிரதமர் மற்றும் மலேசிய அரசாங்கம்

மலேசியாவிற்கும் அது அமல்படுத்தும் சனநாயகக் கொள்கைகளுக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் ஒரே சட்டம், எந்த ஒரு விசாரணையுமின்றி ஒருவரைத் தடுத்து வைக்கும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் மட்டும்தான்.

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமானது உண்மையான நீதி நெறிகளுக்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் சற்றும் மதிப்பளிக்காத கொடூரமான சட்டமாகும். இ.சா சட்டம் கொடுமையானது, சனநாயகத்திற்குப் புறம்பானது. இச்சட்டம் இந்நாட்டின் சூழ்நிலைகளுக்கு சற்றும் ஒவ்வாத ஒரு சட்டமாக இருந்து வருகிறது.

இ.சா சட்டமானது நடைமுறை சட்டத்திற்குப் புறம்பானதாகச் செயல்பட்டு வருகின்றது. ஒரு சனநாயக நாட்டில் நடைமுறைச் சட்டமானது, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் தன்நிலை விளக்கமளிக்கவும், வழக்கறிஞர்களை வைத்து வாதாடவும் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. முறையான விசாரணைக்குப் பிறகே குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என சட்டம் முடிவு செய்யும். இதுவே சனநாயகத்தின் வெளிப்படையான சட்ட அமலாக்கமாகும்.

எந்த ஒரு விசாரணையும் இன்றி, நீதிக் கூண்டில் குற்றவாளி என நிரூபிக்கப்படாமல், சட்டத்தில் தனி மனித சுந்தந்திரத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் பறிக்கப்பட்டு, தடுப்புக் காவலில் அராஜகரமான முறையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களை கொடுமைப்படுத்தி சனநாயகத்திற்கே ஒரு கலங்கத்தை ஏற்படுத்திவிட்டது இந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்.

எனவே, உடனடியாக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றக் கோரி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

அக்கறை மிகுந்த குடிமக்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றக் கோரி மலேசிய அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையத்திற்கும் கடிதம் எழுதி அனுப்பவும்.


YAB Dato’ Seri Abdullah Ahmad Badawi
Blok Utama, Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan
62502, Putrajaya. Malaysia
Telephone: 603-8888 8000
Fax: 603-8888 3444
Email: ppm@pmo.gov.my


YAB Dato’ Sri Mohd Najib Bin Tun Haji Abdul Razak
Aras 4, Blok Barat,Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan
62502, Putrajaya. Malaysia
Telephone: 603-8888 1950
Fax: 603-8888 0035
Email:
tpm@pmo.gov.my

Datuk Seri Syed Hamid Albar
Minister of Home Affairs & Internal Security Address:
Minister of Internal Security and Home AffairsLevel 12, Block D1, Parcel D,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan
62546, Putrajaya, Malaysia
Telephone: 603-8886 8000
Fax: 603-8889 1613
Email : pro@mois.gov.my


Chairperson of United Nations Human Rights
Office of the High Commissioner for Human Rights, Palais des Nations, CH-1211 Geneva 10, Switzerland


போராட்டம் தொடரும்...

Read more...

மாமன்னரை இழிவு படுத்தியது மலேசியக் காவல்துறை..!



கடந்த 14-ஆம் திகதி சூன் மாதம் இந்து உரிமைப் பணிப்படை, நாட்டின் மாட்சிமை தங்கிய பேரரசரிடம், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவர்களை விடுதலைச் செய்யக் கோரி மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

பெரியவர்களின் துணையோடு, 70 மழலைகள் தங்கள் கைகளில் கரடி குட்டி பொம்மைகளை ஏந்திக் கொண்டு அமைதி ஊர்வலமாக மாமன்னரின் அரண்மனையை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்து உரிமைப் பணிப்படை இயக்கத்தின் பிரதிநிதிகளை, அரண்மனை நிர்வாகத்தோடு தொடர்புக் கொண்டு பரிசுகளை வழங்குவதற்கும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.

காவல் துறையினரின் மிரட்டல்களுக்கிடையே, கண்ணீர்ப் புகை குண்டு மற்றும் அமில நீர் பாய்ச்சி அடிக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் முயற்சியை தளரவிடாது காவல் துறையினரின் அராஜகங்களை சகித்துக் கொண்டு அவர்களை சமாளித்த திரு.தனேந்திரனுக்கும் திரு.செயதாசு அவர்களுக்கும் இவ்வேளையில் பாராட்டுகளைத் தெரிவித்தாக வேண்டும்.

காவல் துறையினர் அரண்மனை நிர்வாகத்தினரோடு தொடர்புக் கொள்வதற்கு அனுமதி அளிக்காததனால், அன்போடு பரிசளிக்கவிருந்த கரடி குட்டி பொம்மைகள் அரண்மனை நுழைவாயிலிலேயே வைக்க வேண்டியதாயிற்று. இது காவல் துறையினர் பேரரசரை அவமதித்தத் செயலாகும்.



மழலைகளின் அணிவகுப்பு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரண்மனை நுழைவாயிலில் கைதாகினர். இத்தகைய அராஜக செயல்களின் வழி காவல் துறையினர் மீண்டும் ஒருமுறை இந்நாடு காவல்துறையின் ஆளுமைக்கு உட்பட்டது என நிரூபித்துள்ளனர். அவர்கள் போட்டதுதான் சட்டம் என ஆகிவிட்டது.

அப்படியென்றால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு மதிப்புக் கிடையாதா? இச்சட்டத்தின் பத்தாவது பிரிவில் அமைதிப் பேரணி நடத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை என்ன ஆனது?

காவல் துறையினரின் அராஜகப் போக்கு சகிக்க முடியாததாயும், அவர்களின் பணித்திறமையின்மையினால் குடிமக்களின் நம்பிக்கையையும் தொடர்ந்து இழந்து வருகின்றனர்.

- திரு.வேதமூர்த்தி, இலண்டன் -

Read more...

மழலைகளுக்குக் கல்வித் தடையா?

>> Thursday, June 19, 2008

மலேசியா கினி படச்சுருள்

இலண்டனிலிருந்து திரு.வேதமூர்த்தி

காப்பார் மெதடிஸ்ட் தேசிய ஆரம்பத் தமிழ்ப் பள்ளியிலிருந்து பத்து ஏழை மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லாததனால், அம்னோவினால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிட அம்னோ மறுத்தும் உள்ளது. (தமிழ் நேசன் 13/06/08முதல் பக்கம்)

அம்னோவின் தலைவரும் நாட்டின் பிரதமருமான அப்துல்லா அகமது படாவி மீண்டும் ஒருமுறை, "நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் யாவரும் பின்தங்கிவிடாமல் இருப்பதற்கு (அம்னோ)அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்" என பொய்யுரைத்துள்ளார். (என்.எசு.டி 13/06/2008, இரண்டாம் பக்கம்).

சொல்லிலும் செயலிலும் முரண்பாடுகளை பிரதிபலிக்கும் இவ்விரு செய்திகளும் ஒரே நாளில் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு பிரதமர் கூறுகிறார், " நாட்டின் பொருளதார வளர்ச்சியில் எந்த ஒரு இனமும், சமயமும் அல்லது மாநிலமும் (அம்னோ) அரசாங்கத்தால் ஒடுக்கப்படாது". ஆனால் ஏழை குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையான பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் அரசாங்கம் தனது கையாலாகத்தனத்தைக் காட்டுவதால், எப்படி நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் ஏழை மக்கள் பின்தங்காமல் இருக்க முடியும்?

பள்ளிப் பருவம் அடைந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்கிறது அரசாங்கம். ஆனால் பிறப்புச் சான்றிதழ் இல்லாதக் காரணத்தால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டக் குழந்தைகள் எப்படி கல்வி பயில முடியும்? இத்தகு நடவடிக்கைகள் அம்னோ அரசாங்கம் அமல்படுத்தும் இனம் மற்றும் மதவாதக் கொள்கைகளை பறைச்சாற்றுவதாக உள்ளது.

நாட்டின் வளப்பத்தை இன வாரியாக சம பங்கீடு செய்வதிலும், ஏழைகளின் அடிப்படை உரிமைகளை தற்காப்பதிலும் அம்னோ அரசாங்கம் கடந்த 50 ஆண்டுகளாக மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததனால், இன்று இந்திய சமுதாயம் போராடும் நிலைமை வந்துள்ளது.

மூன்றாம் நான்காம் தலைமுறையைக் கண்டிருக்கும் மலேசிய இந்திய சமுதாயம் அம்னோவின் மிரட்டல்களுக்கு இனியும் அடிபணியாது. இன்றைய தலைமுறையினர் தங்களது உரிமைகளைத் தட்டிக் கேட்கத் துணிந்துவிட்டனர். கொட்டக் கொட்டக் குனிந்துக் கொண்டிருந்த சமுதாயம் இன்று நிமிர்ந்து விட்டது. போராட்டக் களத்தில் குதித்துவிட்ட இந்திய சமுதாயம் தொடர்ந்து போராடித்தான் உரிமைகளைப் பெறவேண்டும்.

அரசியல் ரீதியில் வலுவான ஒரு இடத்தை இந்தியர்களுக்கு ஏற்படுத்தினால்தான், சிறந்த மாற்றத்தைக் எதிர்காலத்தில் காண முடியும்.

"இந்நவநாகரீக உலகத்தில் சிறுபான்மையினரை பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமையாகும்"

- வேதமூர்த்தி, இலண்டன்.

போராட்டம் தொடரும்...

Read more...

'மக்கள் சக்தி' எனக்கு உந்துதல் சக்தி...!

>> Wednesday, June 18, 2008

மெலோர் 3 சிகிச்சை அறையில் சுமார் 4 மணி நேரங்கள் வைக்கப்பட்டிருந்தேன். சிகிச்சை அறையில் எனது உடைந்த கால் இழுத்து வைத்து கட்டப்பட்டபோது அனுபவித்த வலியைப் போல் வேறெங்கும் அனுபவித்ததில்லை. பெரிய மாவு கட்டு ஒன்றைக் கட்டிவிட்டு இனி அடுத்த வாரம் திங்கட்கிழமைதான் அறுவை சிகிச்சை செய்யமுடியும். நிபுணத்துவ மருத்துவர் தற்போது இல்லை, எனவே காத்திருக்க வேண்டும் என ஒரு இடியைப் போட்டு விட்டனர் மருத்துவமனை ஊழியர்கள்.

இச்செய்தியை எனது உறவினர்களிடம் தெரிவித்ததும், அவர்கள் மருத்துவமனை ஊழியர்களை கண்டித்தனர். வலியோடு கால் உடைந்திருக்கும் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை ஒரு வாரம் கழித்தா என கேட்டதற்கு, இந்த அறையில் இரண்டு வாரமாக கால் உடைந்து அறுவை சிகிச்சைக்கு காத்துக் கிடப்பவர்கள்கூட உண்டு, ஆக ஒரு வாரம் என்பது பெரிய பிரச்சனையாகாது என அலட்சியமாக அவர்களிடமிருந்து பதில் வந்தது.

இனியும் காத்துக் கிடப்பது உசிதமல்ல என முடிவெடுத்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல உறவினர்கள் முடிவெடுத்தனர். இரவு மணி ஒன்பது வரை மருத்துவமனை வண்டிக்காக காத்திருந்தேன். அச்சமயம் இந்துராப் ஆதரவாளர் திரு.பிரான்சிஸ் என்னை வந்துச் சந்தித்தார். மருத்துமனை உயர் அதிகாரியை அழைத்து உடனடி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம் எனக் கூறினார். உயர் அதிகாரிகளைத் தொடர்புக் கொண்டு ஒரு பயனும் இல்லாது இறுதியில் குளுவாங்கு உத்தாமா நிபுணத்துவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

பினாங்கிலிருந்து குமாரி சரஸ்வதி கைபேசியின் வழி தொடர்புக் கொண்டு அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் பண உதவியை 'மக்கள் சக்தி'யின் வழி தாம் பெற்றுத் தருவதாகவும், கவலைப்படாமல் தனியார் மருத்துவமனையில் உடனடி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு பணித்தார்.

இரவு மணி 9.15க்கு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஊடு கதிர் படங்கள் எடுக்கப்பட்டன. அதன்பின் நள்ளிரவு மணி 12.30க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு படுக்கையில் சேர்க்கப்பட்டேன்.



அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் இரவு ஓலைச்சுவடியின் நிருபர் திரு.கலையரசு மற்றும் மலாக்கா மாநில மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் ஆகிய இருவரும் அழகிய பூக்கூடையோடு என்னை வந்துச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்றாவது நாள் இரவு (04-06-2008) ம.இ.கா புத்ராவிலிருந்து இரு இளைஞர்கள் என்னைச் சந்திக்க வந்தனர். ம.இ.கா புத்ராவின் தலைவர் திரு.கமலநாதன் அனுப்பி வைத்ததாகக் கூறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். நலம் விசாரித்தப்பின் அறுவை சிகிச்சைக்கான பண உதவி மற்றும் தேவைப்படும் உதவிகளைச் செய்ய தாங்கள் முன்வந்திருப்பதாகக் கூறினர்.

அரசியல் கட்சியிடமிருந்து உதவி பெறுவதை நான் விரும்பாததால் போதிய பண உதவியை மக்கள் சக்தியிடமிருந்து நன்கொடையாக பெற்றுவிட்டென் எனக் கூறினேன். வேறேதாவது உதவி தேவைப்படுகிறதா எனக் கேட்டனர். நான் இல்லை எனக் கூறினேன். போக்குவரத்து உதவி தேவை என்றாலும் தங்களைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். எனது கைப்பேசி எண்களை வாங்கிக் கொண்டனர். திரு.கமலநாதன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். உதவி செய்ய முன் வந்ததற்கு அவ்விருவர்களுக்கு நன்றி கூறிக் கொண்டேன்.

(ம.இ.கா புத்ராவினர் உதவிப் புரிய வந்த நோக்கம் எதுவாயினும், ஓலைச்சுவடியில் பலமுறை நான் ம.இ.காவை தாக்கி எழுதி இருந்தும் அவர்கள் உதவி செய்ய வந்ததற்கு மிக்க நன்றி. இருப்பினும் கொள்கை பிடிப்புள்ள நான் அவர்களின் உதவியை மறுத்து விடுவதுதான் சிறந்தது என்று என் மனதிற்குப்பட்டது. ம.இ.கா புத்ராவினர் என்னிடம் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். ம.இ.கா புத்ராவின் உதவியை நான் மறுத்ததை அறிந்த சில நண்பர்கள் என்னை கைப்பேசியின் வழி அழைத்து கடிந்துக் கொண்டனர். உதவியைப் பெற்றுக் கொள்ள வற்புறுத்தினர், ஆனால் எந்த ஒரு அரசியல் அமைப்பிடமிருந்தும் நான் உதவிப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதே எனது பதில்.

ம.இ.கா புத்ரா சமுதாய ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பல புதிய புரட்சிகளை முன்நின்று செய்து வருவதை நான் அறிவேன். துடிப்புடன் இவர்கள் எவ்வளவுதான் காரியம் ஆற்றினாலும் ம.இ.காவின் தலைமைத்துவத்தில் மாறுதல் ஏற்படுத்துவதில் எந்த ஒரு வெற்றியையும் காணாது நிற்பது வேதனைக்குரியது. இதற்குக் காரணம் இவர்களின் செயல்பாடுகள் ஒரு வரைமுறைக்குட்பட்டே இருப்பதுதான். மனதில் என்றும் மறையாத ஒரு வடுவாக சில அரசியல்வாதிகளின் பெயர்கள் பதிந்திருப்பதால், அவர்கள் தலைமையேற்று நடத்தும் கட்சி மக்கள் மனதில் வேரூன்றி நிற்பதற்கு வலுவில்லாமல், மக்களின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அது சாபமாக வாங்கிக் கொண்டுள்ளது.

நேற்று சபாவில் ஓர் அரசியல் கட்சி பிரதமரின் மீது தனது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வெளியிட்டதன் பிரதிபலிப்பதாக ம.இ.கா கட்சியின் தலைமைத்துவம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்றும் இனி என்றும் தாம் பிரதமர் அப்துல்லாவின் தலைமைத்துவத்திற்கு விசுவாசமாக இருக்கப்போவதாக ம.இ.கா கட்சியின் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 50ஆண்டுகளாக மலேசிய இந்திய சமுதாயத்தின் பொருளாதார நிலைமையை தூக்கி நிறுத்தத் தவறிய அம்னோ தலைமை ஏற்கும் கூட்டணிக்கு இன்னும் ஆதரவு கொடுப்பேன் என்று அறிக்கை விடுவது அவரது சுயநலத்தையே பிரதிபலிக்கிறது. தனது அரசியல் வாழ்க்கையைத் தற்காத்துக் கொள்வதற்கு அவ்வப்போது இது போன்ற அறிக்கைகள் அவருக்கு கைகொடுத்து வந்துள்ளன. விசுவாசம் என்றும் விவேகமாக இருக்க வேண்டும், சுயநலமாக அல்லாமல் பொதுநலத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

அப்துல்லாவின் தலைமைத்துவம் அப்படி என்னதான் மக்களுக்கு நல்லதைச் செய்து விட்டது? விலைவாசி ஏற்றமும் எண்ணெய் விலையேற்றமுமே இவர் மக்களுக்காக செய்த சாதனை. பில்லியன் கணக்கான வருவாயில் தன்னுடைய பங்காளிகளை சுகபோக வாழ்க்கையில் திளைக்கவிட்டு, நடுத்தர வர்கத்தினரையும், ஏழை மக்களையும் கசக்கி பிழிந்து அவர்கள் அரை வயிற்றோடு வாழ்க்கை நடத்தும் நிலமைக்கு கொண்டு வந்து விட்டது நடப்பு அரசாங்கம். இன்றைய காலக்கட்டத்தில் வெளியே எங்கு செல்வது என்றாலும் ஒரு தடவைக்குப் பல தடவை யோசித்துப் பார்த்துச் செல்ல வேண்டியதாயிருக்கிறது.

எண்ணேய் விலை ஏறுவதற்கு அரசியல் நோக்கமே முன் நிற்கிறது. பிரதமராக இருந்துக் கொண்டு, உனக்கு மக்கள் வேண்டுமா ஆட்சி வேண்டுமா எனக் கேட்டால் முதலில் தேர்ந்தெடுப்பது ஆட்சிதான் என்ற தோரணம் இங்கு நிகழ்கிறது. அதற்காகத்தான் மக்களின் கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, வருகின்ற 16 செப்டம்பர் ஆட்சி மாறிடும் சூழ்நிலை ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாதென்றும், தன்னுடைய ஆட்சியே நீடிக்க வேண்டும் எனவும் பாரிசான் அரசாங்கம் இத்தகைய விலையேற்றத்தை அனுமதித்துள்ளது. விலையை ஏற்றினால்தான் மக்கள் கூட்டணி திணறக்கூடும், விலைவாசி குறைப்பு போன்ற தேர்தல் வாக்குகள் சிதறக் கூடும் என்பது அப்துல்லாவின் எண்ணம்.

'பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது' பாரிசானுக்கு கைவந்தக் கலை. எண்ணெயையை ஏற்றுமதி செய்யும் நாடான மலேசியா எண்ணெய் விலையேற்றத்தை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் இனி வரும் காலங்களில் ஏற்றிய விலையையை இவர்களே மீண்டும் குறைத்துக் காட்டி மக்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கலாம், அல்லது ஆட்சி மாறினால், அனுவார் இபுராகிம் தலைமைத்துவம் தற்போது இருக்கும் ரிங்கிட் மலேசியா2.70 சென் இருக்கும் ஒரு லிட்டர் எண்ணெய் விலையை 10 சென் குறைத்து மக்களின் நற்பெயரை பெறக்கூடும். ஆனால் தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குகளின் படி எண்ணெய் விலையை ரிங்கிட் மலேசியா 1.90 சென்னுக்கும் குறைவாக கொண்டு வருவது சந்தேகம்தான். )

என் அனுபவத்தைக் கூறப்போய் விலைவாசி ஏற்றத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் விலைவாசி ஏற்றத்திற்கும் என் அனுபவத்திற்கும் ஒருவகையில் தொடர்பு இருக்கிறது. நான் விபத்திற்குள்ளான நேரம் விலைவாசி ஏற்றம் கண்டிருந்தும், எனக்கு பல நல்ல உள்ளங்கள் நன்கொடைகள் கொடுத்து உதவியதை நினைத்தால் மனம் நெகிழ்கிறது. 'மக்கள் சக்தி'யின் உந்துதல் சக்தியே என்னை விரைவில் குணமடையச் செய்கிறது என்றால் அது மிகையாகாது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எமது அறுவை சிகிச்சைக்கு நன்கொடை திரட்டிய குமாரி சரஸ்வதி, இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி, எனக்கு நன்கொடைகள் கொடுத்துதவ கேட்டுக் கொண்ட வலைப்பதிவுலக நண்பர்கள், மற்றும் திரட்டிய நன்கொடைகளின் கணக்கை மக்களுக்கு தெளிவாக தமது வலைத்தளத்தின் வழி வெளியிட்ட அருமை நண்பர் கோபி, பினாங்கிலிருந்து திரு.நரகன் மற்றும் அவர்தம் குழுவினருக்கும், மற்றும் என்னை மருத்துவமனையில் வந்து நலம் விசாரித்த மலாக்கா மாநில மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன், ஓலைச்சுவடி நிருபர் திரு.கலையரசு, மருத்துவமனையில் என்னைச் சந்தித்து திரட்டிய நன்கொடை ரிங்கிட் மலேசியா 500 வெள்ளியைக் கொடுத்த மக்கள் சக்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன் மற்றும் குளுவாங்கு வட்டார மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.சந்திரன், குளுவாங்கு சுகாதார இலாகாவின் அதிகாரி திரு. செல்வம், உதவி புரிய முன்வந்த புத்ரா ம.இ.கா, ஓலைச்சுவடியில் எனது விபத்து தொடர்பான தகவல்களை பதிப்பிட்ட வலைப்பதிவாளர் திரு.விக்னேசுவரன் மற்றும் இன்னும் பெயர்க் குறிப்பிட விரும்பாத பல உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன். நான் மருத்துவமனையில் தங்கியிருந்த நாட்களிலிருந்து இன்றுவரை என்னை நன்றாக கவனித்து எனக்குத் தேவையானவைகளைச் செய்து கொடுக்கும் குமாரி ராதாவிற்கும் என் தங்கைக்கும் நன்றிகள் பல உரித்தாகட்டும். என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கும் எனது நன்றி.

எனக்காக திரட்டப்பட்ட நன்கொடை விவரங்கள் 'மக்கள் குரல்' வலைத்தளத்தில் காணவும். கூடிய விரைவில் காப்புறுதி மற்றும் சிகிச்சை அட்டையை பெற்றுவிடுவேன் என உறுதிக் கூறுகிறேன். காப்புறுதிக்கான படிவங்களில் கடந்த மாதம் கையொப்பமிட்டு இன்றைய மாதத்தின் சம்பளத்தில் பணத்தைக் கட்டுவதற்கு இருந்தேன். அதற்குள் இப்படியொரு சம்பவம் நிகழும் என்று நினைத்து பார்க்கவில்லை. காப்புறுதி எடுக்க வேண்டியதற்கான அவசியத்தை எனது அனுபவம், இன்னும் காப்புறுதி எடுக்காதவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்திருக்கும் என நினைக்கிறேன்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

போராட்டம் தொடரும்...

Read more...

போர்ட் கிள்ளானில் மக்கள் சக்தியின் இரத்த தானம்..

>> Monday, June 16, 2008

கடந்த 08-06-2008 ஞாயிற்றுக் கிழமையன்று போர்ட் கிள்ளானில் மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு இனிதே நடந்தேறியது. இந்நிகழ்வில் 120 மக்கள் சக்தி ஆதரவாளர்கள் இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்விற்கு சிறப்பு வருகையாளராக காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கவாசகம், திரு.ரூனி யாப், மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன் மற்றும் திரு.அப்பு போன்றோர் கலந்துக் கொண்டனர்.

போர்ட் கிள்ளானிலிருந்து அன்பர் திரு.மோகன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த இரத்த தான நிகழ்வின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு..

Read more...

ஒற்றன் வந்துவிட்டான்...!

>> Sunday, June 15, 2008


வணக்கம் மன்னர்களே, ஒற்றன் ஓலையை கச்சையில் முடித்துக் கொண்டு புரவியுடன் வேற்று நாட்டிற்கு வேவு பார்ப்பதற்காக சென்று விட்டதாக நினைத்து விட்டீர்களா.. ம்ம்.. நாட்டிலுள்ள சம்பவங்களை மன்னர்களுக்கு அறிவிப்பது என் கடமை என்றாலும் இம்முறை புரவியிலிருந்து கீழே விழுந்து காலையும் கையையும் உடைத்துக் கொண்டல்லவா உங்கள் முன்னால் வந்து நிற்கிறேன். நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டதற்கு முதலில் மன்னர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த நீண்ட இடைவெளியானது, வழியில் களைப்பாறி வந்ததனால் அல்ல, வைத்தியர்களிடம் அறுவைச் சிகிச்சை எடுத்துக் கொண்டு கையிலும் காலிலும் கட்டுக்களை பெற்றுக் கொண்டு வந்ததனால் இந்த தாமதம்.

முக்காலமும் உணர்ந்த வலைப்பதிவு நண்பர் விக்கினேசுவரன் (வலைப்பதிவுலக நாரதர்) அப்பொழுதே சொன்னார், எனக்கு கூடிய விரைவில் கால்கட்டு (திருமணம்) நிகழ்வு நடைப்பெறப் போகிறதென்று. இவ்வளவு பெரிய மாவுகட்டு கிடைக்கும் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை :)

சரி, எனக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பான தகவல்களை அனைவருக்கும் சொல்ல வேண்டியது என் கடமை. தசாவதாரம் படத்தில் 12-ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வதைப் போல் உங்களை 02-06 கி.பி 2008ற்கு அழைத்துச் செல்கிறேன்.

அச்சமயம் நான் பள்ளி விடுமுறையை குளுவாங்கு, சொகூரில் மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்த நேரம். அன்று மதியம் 1 மணியளவில் எனது உறவினர் ஒருவரை மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு குளுவாங்கு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவ பரிசோதனைக்கு வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் உறவினர் என்னை வீட்டிற்கு முதலில் செல்லுமாறு கேட்டுக் கொண்டதால் நானும் அங்கிருந்து கிளம்பினேன். நேராக நியோர் சிவன் ஆலயத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினேன். நியோரில் ஆலய தரிசனம் செய்த பின்பு, நியோர் தமிழ்ப் பள்ளிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தேன். அச்சமயம் வானம் கறுத்திருந்தது. மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது.

மதியம் 3 மணி இருக்கும், மெர்சிங் சாலை 56வது கிலோமீட்டரில் மழையில் நனைந்துக் கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டுச் சென்றுக் கொண்டிருந்தேன். வீட்டை அடைய இன்னும் ஒன்றரை கிலோ மீட்டர்களே எஞ்சியுள்ளன. அச்சமயம், சற்றும் எதிர்பாராத வகையில் என் முன்னே சென்றுக் கொண்டிருந்த மகிழுந்து எந்தவொரு சமிக்ஞையும் இன்றி திடீரென நின்றுவிட்டது கண்டு என் மூச்சும் ஒரு கணம் நின்று விட்டது. வண்டியை உடனே நிறுத்த வேண்டிய சூழ்நிலை, உயிருள்ள புரவியாக இருந்திருந்தால் கடிவாளத்தைப் பிடித்து புரவியின் ஓட்டத்தை நிறுத்தியிருப்பேன். இயந்திரம் கொண்டு ஓடும் புரவி என் பேச்சைக் கேட்கவில்லை, என் திகிலை அது அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிடித்தேன் பிரேக்கை..! மழைக்கு நன்றாகவே பனி சறுக்குவதுபோல் வள வளவென இருந்த சாலையில் வழுக்கிக் கொண்டே முன்னே நங்கூரமிட்டுக் கொண்டிருந்த மகிழுந்தை பின்னிருந்து வேகமாக இடித்ததில் சாலையில் தூக்கி எறியப்பட்டேன்.

அந்த கணம் விவரிக்க முடியாத ஓர் அனுபவமாக எனக்கு இருந்தது. ஒரு கணம் தலை சுற்றி உலகமே இருண்டு விட்டதுபோல் தோன்றியது. சில வினாடிகளில் என்னைச் சுற்றி கூட்டம் திரளாக கூடுவது தெரிந்தது. வலதுபக்கக் காலும் கையும் மகிழுந்தை இடித்ததில், கால் கை இருப்பதற்கான சுரணையற்று மழையில் நனைந்துக் கொண்டே படுத்திருந்தேன். உடலை அசைக்க முடியவில்லை. வலியால் "அம்மா..அம்மா.." எனும் கதறும் குரல் மட்டும் என்னை மயக்க நிலைக்குக் கொண்டுச் செல்லாமல் தடுத்தாட்கொண்டிருந்தது. கூடியிருந்த கூட்டத்தில் பாதி பேருக்குமேல் தமிழர்களாக இருந்தனர்.

"அய்யா கவல படாத, நாங்களாம் இருக்கோம், ஒன்னும் பெருசா அடி இல்ல.. இப்ப ஆம்புலன்ஸ் வந்துரும்.. கொஞ்ச நேரம் பொறுத்துக்கையா..." என சிலர் ஆறுதல் வார்த்தைகள் கூறுகையில் அந்த வலியிலும் சற்று இதமாக இருந்தது. ஒருவர் கீழே விழுந்துக் கிடந்த கைப்பேசியை எடுத்து, "ஐயா, உங்க வீட்டுல உள்ளவங்க நம்பர் இருக்கா, சொல்லுங்க.." எனக் கேட்டார். கேட்டவரின் முகம் மிகவும் பரிட்சயமான முகம். குளுவாங்கு ஹஜி மானான் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் திரு.ஆறுமுகம் எனப் பார்த்ததும் தெரிந்துக் கொண்டேன். 2006-ஆம் ஆண்டில் ஹஜி மானான் தமிழ்ப் பள்ளியில் என் நான்கு மாதக்கால பயிற்றுப் பணியின்போது அறிமுகமானவர் அவர்.

என் வீட்டிற்கு சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதற்கு அடுத்து, என் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்துச் சேர்ந்தார். பலர் என் நிலைமையைப் பார்த்து, உடனே மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லலாம் எனக் கூறி தூக்க முயன்றனர். ஆனால் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக ஒரு சிலர் சந்தேகித்ததால் மருத்துவமனை வண்டி வரும் வரையில் என்னை நகர்த்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். எனவே வெகுநேரம் மழையில் நனைந்தபடியே வலியோடு சாலையில் படுத்திருந்தேன். உடலிலிருந்து பல இடங்களிலிருந்து இரத்தம் அதிகமாக வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்களில் ஒருவர் என் தலைக்கவசத்தை மெதுவாக கழற்றி தலையில் ஏதும் காயம் ஏற்பட்டிருக்கிறதா என பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

அதற்குள் மருத்துவமனை வண்டியும் வந்துவிட, அனைவரும் வழிவிட்டு நின்றார்கள். மருத்துவமனை ஊழியர்கள் என்னையும், என் உடல் நிலையைப் பற்றியும், நான் தற்போது இருக்கும் இடத்தைப் பற்றியும் கேள்விகள் பல என்னிடம் கேட்டு என் சுயநினைவை பரிசோதித்தனர். அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக பதில் கூறினேன். அடுத்தக்கட்டமாக எனது உடலை ஒவ்வொரு பாகமாக அசைத்து வலிக்கிறதா எனக் கேட்டனர். எனக்கு வலியைத் தவிற வேறொன்றுமில்லை என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க எனது உடலை திருப்பிப் படுக்க வைத்தார்கள். உடலை நகர்த்தும்போது வலியால் கதறினேன்.

கழுத்து அசைக்க முடிகிறதா எனக் கேட்டார்கள். அசைத்துக் காட்டி முடியும் என்றேன். அதன்பின் கழுத்தை மெதுவாக தூக்கிப் பிடித்து கழுத்தைச் சுற்றி ஒரு வளையம் வைத்து கட்டினார்கள். பின் கை கால்களுக்கு பட்டைகள் வைத்து கட்டி மருத்துவமனை வண்டியில் ஏற்றினார்கள். மருத்துவமனை வண்டி அதிவேகத்தில் பறந்ததை அடுத்து எனது வலது கால் அதிக வலியைக் கொடுக்க ஆரம்பித்தது. வண்டி ஆடிய ஆட்டத்தில் வலியால் அலறினேன். மருத்துவமனை ஊழியர்கள் என்னிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தனர். ஐந்தே நிமிடங்களுக்குள் மருத்துவமனையை அடைந்தேன்.

உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அப்பொழுது மணி மதியம் மூன்றரை இருக்கும். என் உடலில் படிந்த இரத்தக் கரைகள் துடைக்கப்பட்டன. இடது கால் தோல் கிழிந்திருந்தது. வலியோடு ஏழு தையல்கள் போடப்பட்டன. அதன் பின் சுமார் 2 மணி நேரம் அந்த அறையில் வெறுமனே வேறெந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தேன். அவ்வறையில் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கத்திக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தது சங்கடமாக இருந்தது. அதற்கிடையில் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியிருந்தனர்.

இரண்டு மணி நேரம் கழித்து ஊடுகதிர் அறைக்கு என்னை படுக்கையில் வைத்து இழுத்துச் சென்றனர். சற்றும் பொறுப்பின்றி என்னை வேகமாக இழுத்துச் சென்றதில் என்னுடைய கால் மரண வலியைக் கொடுத்தது. கதவிலும், சுவரிலும் அங்கும் இங்குமாக பல இடங்களில் எனது கால் மோதிய போது ரணமாக இருந்தது. மெதுவாக இழுத்துச் செல்லுங்கள் என நானும் என் உறவினர்களும் கேட்டுக் கொண்டும் கூட, என்னை இழுத்துச் சென்ற மருத்துவமனை ஊழியர் காது கேளாதவர்போல் நடந்துக் கொண்டார்.

ஊடுகதிரறையில் கொண்டுச் செல்லப்பட்ட என்னை மீண்டும் வெறுமனே விட்டு வைத்திருந்தார்கள். அவ்வறையில் காணப்பட்ட ஊழியர்கள் கதை பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். குளிர்சாதன அறையாதலால் சற்று நேரத்தில் உடல் குளிரில் நடுங்க ஆரம்பித்து விட்டது. வலது கால் என்னை அறியாமலேயே துடிக்க ஆரம்பித்து விட்டன. வலியால் கத்தினேன். அங்குள்ள ஊழியர்களை அழைத்து போர்வை போர்த்தி விடுமாறு கேட்டேன். வழக்கம்போல் அங்கேயும் கண்டும் காணாத போக்குதான் காணப்பட்டது. அதன் பின் உரக்கக் கத்த ஆரம்பித்தேன், அதன்பின் சில ஊழியர்கள் ஊடுகதிர் படம் எடுக்க வந்தார்கள். எனது காலையும் கையையும் ஊடுகதிர் படம் எடுத்த விதம், அங்கிருந்த ஊழியர்களின் பொறுப்பின்மையையும் போதிய பயிற்சியின்மையையும் புலப்படுத்தியது. வலது காலையும் கையையும் விரும்பியவாரெல்லாம் நகர்த்தி படம் எடுத்துவிட்டு மீண்டும் ஒரு அரை மணி நேரத்திற்கு அந்த அறையிலேயே கிடத்தி வைக்கப்பட்டிருந்தேன். மீண்டும் வலியாலும் கடும் குளிராலும் கால் உதறியது. வலியால் கதறிக் கொண்டிருந்த என்னை ஒருவழியாக மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இழுத்துச் சென்றார்கள். நரகத்திலிருந்து வெளியே வந்த ஓர் உணர்வு அப்போது இருந்தது. இம்முறையும் படுக்கையை தாறுமாறாக இழுத்துச் சென்று என்னை அவசரப் பிரிவில் சேர்த்தார்கள். இன்னும் என்னென்ன வலிகளைத் தாங்க வேண்டி வருமோ என எண்ணிக் கொண்டே அந்த அறையில் படுத்திருந்தேன். திடீரென என் வலது காலின் மீது ஒரு கோப்பு வேகமாக வைக்கப்பட்டது. மீண்டும் என் படுக்கையை ஒருவர் வேகமாக இழுத்துச் சென்றார். வெளியே வந்ததும் உறவினர்கள் அந்த ஊழியரிடம் எங்கே என்னை அழைத்துச் செல்கிறார்கள் எனக் கேட்டனர். ஊடுகதிர்ப்படம் தெளிவாக இல்லை, மீண்டும் ஊடுகதிர்ப் படம் எடுக்க வேண்டும் என அவர் மறுமொழிந்ததும் எனக்கு தலையே சுத்தி விட்டது. அடிபட்ட வலியைவிட இவர்கள் கொடுக்கும் வலியை தாங்கமுடியாதவனாய் பல்லை கடித்துக் கொண்டு இருந்தேன்.

ஏற்கனவே எப்படி ஊடுகதிர்ப் படத்தை அலட்சியமாக எடுத்தார்களோ, அதேப்போல் மீண்டும் அலட்சியமாகவும் ஆனால் இம்முறை சற்று கோபத்துடனும் அவர்கள் நடந்துக் கொண்டனர். அங்கு என் காலும் கையும் பட்டப் பாட்டை சொல்லி விவரிப்பதற்கில்லை. வழக்கம்போல படங்கள் பிடிக்கப்பட்டு அரை மணி நேரத்திற்கு அந்த அறையிலேயெ கிடத்தி வைக்கப் பட்டிருந்தேன். குளிரில் மீண்டும் கால் உதறித் தள்ளி மரண வலியைக் கொடுத்தது.

ஒருவழியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட நான், மெலோர் 3 எனும் வார்டிற்குக் கொண்டுச் செல்லப்பட்டேன். அங்குதான் வலிகளுக்கெல்லாம் பெரிய வலியை நான் சந்திக்கப் போகிறேன் என்று அப்பொழுது எனக்குத் தெரியாது.

தொடரும்..

குறிப்பு : கை வலி தொடர்ந்து இருந்து வருவதால் அதிகமாக தட்டச்சு செய்ய இயலவில்லை. மற்ற விடயங்களை அடுத்த பதிவில் இடுகிறேன். இன்றிரவிற்குள் பதிவிட முயற்சிக்கிறேன். மக்கள் சக்தி எனக்குக் கொடுத்த ஆதரவினை விரிவாக பதிவிடுகிறேன்,நன்றி.

Read more...

சத்தீஸ்குமாருக்கு உதவுங்கள்

>> Tuesday, June 3, 2008

நமது நண்பர், வலைப்பதிவர் சத்தீஸ்குமார் நேற்று விபத்துக்குள்ளானார். கை கால் முறிவு ஏற்பட்டு ஜொகூர் பாரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்ள நண்பர்கள் மற்றும் வலைப்பதிவினரின் உதவியை எதிர்பார்க்கிறார்.
நண்பர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யும்படி இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறோம்.

MAYBANK-108114004851
SATHISKUMAR A/L KRISHNAN

பதிப்பிட்டவர்,

விக்னேஸ்வரன் அடைக்கலம்

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP