இன்றைய மலேசிய நண்பனின் தலைப்புச் செய்தி !

>> Wednesday, October 31, 2007




பாடாங் ஜாவா தாமான் கருப்பையாவில் ஆலயம் உடைப்பு.

(ஜி.பரந்தாமன்)

ஷா ஆலாம் அக்.31-

ஷா ஆலாம், பாடங் ஜாவா தாமான் கருப்பையா மாரியம்மன் ஆலயம் நேற்றுக் மாலை ஷா ஆலாம் மாநகர் மன்றத்தினரால் உடைக்கப்பட்டது.

35 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை உடைப்பதற்கு காலை முதல் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காது மாலை 4.00 மணி வாக்கில் நிறைவேறியது.

ஆலயத்தை தற்காக்கும் போராட்டத்தில் பெண்மணி உட்பட அறுவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைகலப்பு மற்றும் கல் வீச்சில் போலீசார் ஒருவருக்கு மண்டையில் படுகாயமும் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் சிலருக்கு கை மற்றும் கால்கள் முறிந்ததாக தெரிய வருகிறது.

இதனிடையே ஆலய தற்காப்பு போராட்டத்தில் இறங்கிய இந்திய ஆடவர் ஒருவருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. ஆலயத்தை உடைக்க ஷா ஆலாம் மாநகர் மன்றம் சுபாங் ஜெயா நகராண்மைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்ப்பட்ட அமலாக்க பணியாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களும் கலகத் தடுப்பு போலீசாரும் ஆலயத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர்.

காலை முதல் மாலை வரை நடந்தேறிய இந்த போராட்டத்தில் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் இப்பகுதியில் தலைகாட்டவில்லை எனும் தகவல் அறிந்து காலையிலேயே ஆலயப்பகுதிக்கு விரைந்த ஷா ஆலாம் தொகுதி காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.சுப்பையா, ஷா ஆலாம் மாநகர் மன்ற உறுப்பினர் சு.முருகவேல் மற்றும் இளைஞர் பகுதி தலைவரும் வழக்கறிஞருமான எம்.முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பல மணி நேரம் பேசியும் ஆலய உடைப்புக்கு கால அவகாசம் கோரியும் எவ்வித பயனும் அளிக்கவில்லை. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மலேசிய இந்து முன்னணி இயக்கத்தின் (இண்ட்ராவ்) செயலாளர் ரகு, வழக்கறிஞர் கணபதி மற்றும் சிவநேசன் ஆகியோர் ஷா ஆலாம் மாநகர் மன்றத்தலைவர் ஆகியோரிடம் ஆலயத்தை தற்காக்கும் முயற்சி எதுவும் பயனின்றி போனது.






அப்பகுதியில் சட்டதிற்குப் புறம்பாக அமைத்திருந்த சுமார் 308 வீடுகளை மட்டுமே அகற்றக் கோரி ஷா ஆலாம் உயர்நீதி மன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நேற்று வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. வீடுகளை அகற்றும் நடவடிக்கையின்போது எவ்வித அசம்பாவிதமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. ஏனெனில், புறம்போக்கு வீட்டில் வசித்து வந்தவர்கள் தொடர்ந்த வழக்கு தோல்வியைக் கண்டது. ஹரிராயாவுக்கு முன்னரே இப்பகுதி மக்களுக்கு ஷா ஆலாம் மாநகர் மன்றம் வீடுகளைக் காலி செய்துவிட்டனர்.

இறுதியாக ஆலய உடைப்பு பகுதிக்கு வந்து சேர்ந்த ம.இ.கா கிள்ளான் தொகுதி தலைவர் அலெக்ஸ் தியாகராஜன், பி.எஸ் மணியம் மற்றும் எஸ்.எஸ் மணியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேசியும் எவ்வித பயனளிக்காது போனது. ஆனால் உடைப்பின் போது இடையே கற்களும் மரக்கட்டைகளும் கண்ணாடித் துண்டுகளும் வீசப்பட்டன.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கடும் ஆட்சேபத்திற்கு மத்தியில் ஆலயம் உடைகப்பட்டது.

நேற்று முன் தினம் நடைப்பெற்ற சந்திப்பில் இந்த ஆலயம் உடைபடாது என்று மாநில மந்திரி புசார் கூறியதாகத் தெரிய வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர்களான மொக்தர் டஹலான் மற்றும் கமலா கணபதியும் கலந்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையே, ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ சிறீ ச்.சாமிவேலு, ஆட்சிக்குழு உறுப்பினர் கமலா கணபதி மற்றும் சிலர் மாலை 5.00 மணிக்கு ஆலயம் உடைப்பட்ட இடத்திற்கு விரைந்னர். ஆனால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதால், அவர் அங்கிருந்து பாதுகாப்புக் கருதி உடனே அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் கிள்ளான் பெரிய மருத்துவமனையில் காயமுற்ற போலீஸ்காரர் உட்பட மேலும் சிலரைச் சென்றுப் பார்த்தார்.

Read more...

மீண்டும் ஒரு முறைக்கேடு...!


30-ஆம் திகதி அக்டோபர் 2007,
சிலாங்கூர், ஷா ஆலாமில் தாமான் கருப்பையா என்கிற குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சிறீ மகா மாரியம்மன் ஆலயம் நீதிமன்ற உத்தரவின்படி ஷா ஆலாம் மாநகராட்சி மன்ற அதிகாரிகளால் காவல் துறையின் பலத்த பாதுகாப்புடன் உடைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் முன்னால் தலைவராக இவ்வருட ஆரம்பத்தில் காலஞ்சென்ற டத்தோ K.சிவலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு அறிவிப்புமின்றி கோயில் உடைபடுவதைப் பார்த்துக் கொதித்தெழுந்த மக்களை காவல் துறையினர் கடுமையாக முறைகளைப் பயன்படுத்தி ஒடுக்கினார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதோடு கோயிலின் தலைமை குருக்கள் சிவ சிறீ இராமலிங்க குருக்களை காவல் துறையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவமானது மலேசிய இந்துவாழ் மக்கள அனைவருடைய உள்ளங்களையும் கண்டிப்பாகப் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

இக்கோயில் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்தாலும் எந்தவொரு அதிகாரப்பூர்வக் கடிதத்தையும் கொடுக்காமல் இக்கோயில் உடைக்கப்பட்டிருக்கிறது.கோயில் உடைக்கப்படவிருக்கும் சம்பவம் மலேசிய இந்து சங்கத்திற்கு காலை மணி 10-க்கு தெரிய வந்ததும் உடனே அதன் தலைவர் டத்தோ வைத்தியலிங்கம் ஐயா அவர்கள் ம.இ.கா வின் தலைவர் டத்தோ சிறீ ச.சாமிவேலுவைத் தொடர்புக் கொண்டு பிரச்சனையை முன்வைத்திருக்கிறார். பின் டத்தோ சிறீ ச.சாமிவேலு சிலாங்கூர் மாநில முதல்வரைத் தொடர்புக்கொண்டு விளக்கம் கேட்டதற்கு மாநில முதல்வர், தமக்கு அன்று நீதிமன்றத்திடமிருந்து உத்தரவு வந்ததையும், அவரால் வேறெதுவும் செய்ய இயலவில்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது மலேசிய இந்து மக்கள், குறிப்பாக தாமான் கருப்பையாவில் உள்ள மக்கள் இவ்விஷயத்தில் மிகவும் கோவமடைந்துள்ளார்கள். நஷ்ட ஈடு கேட்டு அரசாங்கத்திடம் மனு செய்துளார்கள்.

இதில் என் கருத்தையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நஷ்ட ஈடிற்கு ஒருவேளை அரசாங்கத்திடமிருந்து பணம் கிடைக்கலாம், ஆனால் போன மானம், மரியாதை திரும்ப கிடைக்குமா சகோதரர்களே?

பல பேர் ஒன்று திரண்டு ஆரம்ப காலக்கட்டத்திலேயெ ஒரு நிலத்தை வாங்கி அதில் கோயில் கட்டி இருந்தால்? நாம் செய்யாமல் விட்டத் தப்பிற்கு நம் கடவுளின் சிலைகள்தான் பலிகடா.. அரசாங்கம் செய்தது முறைக்கேடே.. ஆனால் அதை வளர விட்டது நாம்தான் சகோதரர்களே... தெருவிற்கு ஒரு கோயில் இருப்பதைவிட ஊருக்கு ஒரு அழகிய பிரம்மாண்டமான கோயில் இருப்பதுதான் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி வளர்ச்சியடையச் செய்யும்.



இறைவன் இருக்குமிடம், நம் மனம் லயிக்கக்கூடிய இடம் எப்படி இருக்க வேண்டும்...நினைத்துப் பாருங்கள்... இதையெல்லாம் எடுத்துக் கூற நம் சமுதாயத்தில் சரியான தலைவர்கள் அமையவில்லை... அப்படியே ஒரு பிரச்சனையென்றால் அதனைத் தன் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தப் பட்டியலில் சமீபக்காலமாகத் தமிழ்ப் பள்ளிகளின் நிலமைப்பாடும் சேர்ந்துள்ளது.

நெஞ்சுப் பொறுக்குதில்லையே.... இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....

Read more...

புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா. எச்சரிக்கை!!!

>> Tuesday, October 30, 2007

புவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.



பூமி உறைந்து போகாமல் இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால், கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களின் அளவு அதிகரித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பூமியை மிகவும் வெப்பமாகின்றன. இயற்கைக்கு எதிராக நடக்கும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாடு உலகளவில் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புவி வெப்பமடைந்து வருகிறது; பனி மலைகள் வேகமாக உருகுகின்றன; கடல் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் வறட்சியும் மிரட்டுகிறது.

இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 பாகை சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.

நீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால்தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும். அதே போல் மலேசியாவிலும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மூலம் : நம் பூமி (நன்றி)

Read more...

இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்

ஜாதி மத பேதம் சொல்லி, டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந்தது ஒரு காலம். காலங்களும் மாறி காட்சிகளும் மாறி எல்லோரும் ஒர் இனமே என்ற நல்ல எதிர்காலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். இரட்டைக் குவளை முறைகள் மனித இனத்தையும் மனிதத் தன்மையையும் பாழ் படுத்தியது போல, இன்னும் சில குவளைகள் நம் மண்ணை பாழ் படுத்திக் கொண்டிருக்கின்றன.

அது வேறு எதுவும் இல்லை, நீங்கள் தினமும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகள் தான்.



தற்சமயம் இது சுகாதாரமாகவும், பயன் படுத்த எளிதாகவும், நமக்கு மிகவும் வசதியாகவும் தெரியலாம். நமக்கு இந்த பிளாஸ்டிக் குவளைகள் சில நிமிட பயணைத் தந்து விட்டு, எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு இந்த மண்ணுக்கு தீராத தீங்கை தரப் போவது என்பது உன்மை.




இந்த குவளைகள் மண்ணில் புதைந்து போகும் போது மழை நீர் மண்ணில் புகாத வண்ணம் அடைத்துக்கொள்கிறது, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது.

இவற்றை எரிக்கும் போது கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிட்டு நம் சுவாசம் மூலம் நமக்கும் தீங்கு இழைக்கிறது.



இப்படி எந்த வகையில் பார்த்தாலும் இந்த பிளாஸ்டிக் குவளைகளால் நமக்கு கிடைக்கும் நன்மை என்பது சொற்பம், தீமை என்பது ஏராளம். இந்த பிளாஸ்டிக் குவளைகள் உபயோகத்தை குறைப்போம். சரி எப்படி குறைப்பதென்று கேட்கிறீர்களா.

* தேநீர் கடைகளிலும் பலவகையான பானங்கள் கடைகளிலும் பிளாஸ்டிக் குவளைகள் வேண்டாம் என்று சொல்லுங்கள்.


* திருமண வீடுகளில் உணவு பரிமாறும் போது பந்தாவாக பிளாஸ்டிக் குவளைகள் உபயோகிக்காமல் சாதாரண குவளைகளை உபயோகிக்கலாம்.



* அலுவகங்களிலும் மற்ற தவிர்க்க முடியாத இடங்களிலும் பிளாஸ்டிக் குவளைகளுக்கும் பதிலாக காகித குவளைகளை உபயோகிக்கலாம்.

இங்கேக் கூறப்படுகின்ற விஷயம் சாதாரணமான விஷயம் இல்லை. இதன் தீவிரத்தை நாம் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்குள் நம்மிடையே விழிப்புணர்வு வர வேண்டும்.

இன்றைய நம் அலட்சியம் நாளைய நம் தலைமுறைக்கு செய்யும் துரோகம்.

மூலம் : நம் பூமி (நன்றி)

Read more...

குப்பைமேனி


1) வேறுபெயர்கள் :- பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி.

2) தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.

3) குடும்பம் :- EUPHORBIACEAE.

4) வளரும் தன்மை :- இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. குப்பை மேனிக்கு அருகில் பூனை வராது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில்
ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட
குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குனான், ஸ்டீரால்ஸ் மற்றும், சைனோஜெனிக் க்ளைக்கோஸைடு போன்ற மிகவும் விஷம் வாய்ந்த வேதிப் பொருட்களையும் உடையது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். எரிப்புகுணமுடையது.வசீகரப்படுத்தும்இயலடையது.
மாந்திரீக மூலிகையாகும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.

5) பயன்தரும் பாகங்கள் :- செடி முழுதும் மருத்துவப்பயனுடையது.

6)பயன்கள் :- நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலைஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.

வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவுகொடுக்கவும்.

இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும்.

இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும்
இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.

மூலநோய் :- மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள்நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். பதினெட்டுவகை எனவும், கூறுவர். அவைஇவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலைசாப்பிடுக, 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்மோரில் சாப்பிடுக. புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

நாடாப்பூச்சி, புழு - குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகிய வற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

விடம் :- குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியன வற்றில் கடி வாயில்தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.

படுக்கைப்புண் :- ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இழஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.

தலைவலி :- இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

சொறிசிரங்கு :- குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும்அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்துவர சொறி சிரங்கு படை குணமடையும்.

புண் :- எல்லாவகையான புண்களுக்கும் இதன்இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.

Read more...

சதாவேரி


1 வேறுபெயர்கள் :-தண்ணீர் விட்டான் கிழங்கு, நீலாவரை, சதாவரி, சதாமூலம், சதாவரை, சதாமுல்லி, சித்தவரை, ஆஸ்வாலி, சக்ராகுல்.

2 தாவரப்பெயர் :-ஆஸ்பராகஸ் ரசிமோசஸ்.

3) தாவரக்குடும்பம் :-LILLIACEAE.

4) வகைகள் :- ஆ.ரெசிமோசஸ், ஆ.அட்செடன்ஸ்,ஆ. அப்பினாலிஸ், கோனோசினாமல், ஆ.ஆல்பராகஸ்.

5) வளரும் தன்மை :-வளமிக்க இரும்பொறை மண், செம்மண் நிலங்கள் ஏற்றவை, வடிகால் வசதிஉடைய மண் எனில் மிகவும் ஏற்றது. ஓரளவு வறட்சியை தாங்க வல்லவை. 1500 முதல் 4000 அடி உயரமுள்ள மலைப் பிரதேசங்களில் இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும், 15 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் இருப்பது நல்லது. மெல்லிய நறுமணமுடைய இக்கிழங்குக் கொடிகள் 6 அடி உயரம் வரை வளரக்கூடியது. தண்டுகளில் சிறிய முட்களை உடைய இந்தச் செடி ஒவ்வொன்றிலும் 15 - 20 நீண்ட கிழங்குகள் தோன்றும். இதன் இலைகளில் பறித்தவுடன் டையோஸ்ஜெனின் என்ற வேதியப்பொருள் கிடைக்கும். இதன் பழங்கள் மற்றும் பூக்களில் க்ளைக்கோசைடுகளான குயர்செட்டின்நிட்டின், மற்றும் ஹைப்பரோசைடு, சிட்டோஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டீரால் மற்றும் வேர்க் கிழங்குகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. கிழங்குகள் முதிர்ச்சி அடைய 12 - 14 மாதங்கள் ஆகும். இதன் வேர் கிழங்குகளை நன்கு வெய்யிலில் காயவைத்து இழஞ்சூடாய் இருக்கும் போது இயற்கை தன்மை மாராமல் கிழங்குகளைக் காற்றுப் புகா கோணிப்பைகளில் சேமித்துவைத்தல் வேண்டும்.
6) பயன்தரும் பாகங்கள் :- கிழங்குகள், வேர்கள்.

7) பயன்கள் :- ஒரு பழம் பாடல்.

"நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா
முரைவிடுத் தோட வுறுகுங்காண் நாரியரே
வெந்நீர் ரெய் சோமநோய் வேட்டை யறைற்றணிக்குந்
தண்ணீர் விட்டான் கிழங்குதான்'

சதாவரி கிழங்கு வெகு மூத்திரம், பழைய சுரம், சோமரோகம், வெள்ளை, உட்சூடு, ஆகியவற்றை நீக்கும்.

இதனால் தீரும் நோய்கள், வயிற்றுப் போக்கு, சர்க்கரை வியாதி, சுவாச நோய் முதலியன. உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கவும், மெல்லிய தேகம் உடையவர்கள் நல்ல சதைப்பிடிப் புடையவைகளாக மாறவும் பயன்படுகிறது.

உலர்ந்த கிழங்கை இடித்து சூரணம் செய்து வேளைக்கு 1-2 வராகனெடை நெய், சர்க்கரை, பால், இவற்றை இட்டு தினம் 3 வேளை கொடுக்கவும். அல்லது பச்சைக் கிழங்கை இடித்துப் பிழிந்து சாற்றில் வேளைக்கு1/4 - 1/2 அவுன்ஸ் அளவு பால், சர்க்கரையிட்டுக் கொடுக்கலாம். இதனால் நீர்கடுப்பு, எலும்புருக்கி, மேகசாங்கே, கை,கால் எரிவு, சுக்கிலபிரமேகம், தாதுபலவீனம், கரப்பான் முதலிய வியாதிகள் குணமடையும். தேகபுஷ்டி உண்டாகும்.

Read more...

கண்கள் ஒளி பெற...

இயற்கைக்கு எதிராய் இன்றைய வாழ்கை. தூங்கும் நேரத்தில் வேலை, வேலை(பகல்) நேரத்தில் தூக்கம், அமர்ந்த இடத்திலேயே பணி, போக்குவரவிற்கு சொகுசு வாகனங்கள், பொழுது போக்கிற்கு தொலைகாட்சி, கணனி என்று உடற்பயிற்சி இன்மை,உண்ணும் உணவில் இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம், அதிக மாசுபாடுள்ள நகர வாழ்கை இவையணைத்தும் இன்றய தலைமுறையின் உடல்நிலயை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக கண்கள். பொதுவாக கம்யூட்டரில் பணி புரிவோர்களுக்கு கண் வலியுடன் தலைவலியும் நாளடைவில் வருகின்றது. குறிப்பாக மாலை நேரங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.இது நோய் அன்று மாறிவரும் தொழில் நுட்பத்தாலும் ஊன்றி மானிட்டரை பார்ப்பதாலும் ஏற்படும் கோளாறு. அதே போன்று இரு சக்கர வாகனங்களில் கண்ணாடியின்றி பயணம் செய்தால் கண்களில் தூசுகள் படிந்து கண் வலி ஏற்படும். இதனை ஒரு எளிய குவளை(கோவை பகுதியில் பிரபலம்) கொண்டு சரி செய்து கொள்ளலாம்.




சுத்தமான குளிர்ந்த நீரை அருகே உள்ள குவளையில் ஊற்றி அதில் படம் 2 காட்டிய படி நீரினுள் கண்களை நன்கு சுழற்றி ஒரு நிமிடம் வரை வைத்து பின் மறு கண்ணிற்கும் அதை போல் செய்ய ரத்தவோட்டம் நன்கு ஏற்பட்டு இந்த வலிகளிலிருந்து தப்பிக்கலாம். சிலர் குளிர்ந்த நீருடன் எலுமிச்சம் பழ சாறு 2 - 5 சொட்டு விட்டு கண்களை கழுவுவதும் உண்டு. புதிதாக செய்பவர்கள் (எலுமிச்சம் சாறு)கவனத்துடன் செய்யவேண்டும். காரணம் கண் எரிச்சல் முதலில் ஏற்பட்டு பின்பு குளிர்ச்சி ஏற்படும்.ஒவ்வாமை ஏற்படுகிறதா? என பார்த்து செய்யவும். மற்றபடி குளிர்ந்த நீரில் அணைவரும் செய்யலாம். கண்கள் ஒளி பெறும். நிறைய நண்பர்கள் பயனடைந்துள்ளனர்.

Read more...

புற்று நோயும், கோதுமை புல் சாறும்.


மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும், நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதை தான். குறிப்பாக உணவு - உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க ,உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு, பயிற்சி, கிரியை என சில சாதாரண காரியங்களில் நாம் கவனம் செலுத்தினாலே 75% நோய்களை நாம் தவிர்க்க முடியும். இவைகளில் நாம் கவனம் செலுத்தாமல் போனதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் வர காரணமாகிறோம்.இவைகளில் அதிகமாக தாக்குவதும் அதிக பணச் செலவு வைப்பதும் இரு நோய்கள். 1. இருதய நோய் 2. புற்று நோய்.

புற்று நோய் :

இன்றைய வேளாண்மையில் அதிக இரசாயன உரம், களை, பூச்சி கொல்லி மருந்து உபயோகித்ததின் விளைவுகளை ஓரளவு நாம் மருத்துவமனை நோக்கி வரும் கிராம மக்களின் தொகையை கொண்டு உணர முடியும்.தங்களின் பெரும் பகுதி சேமிப்பை தற்சமயம் மருத்துவமனைகளில் மேற்கண்ட நோய்களுக்காக செலவிடுகிறார்கள்.நகர மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் ஆரம்ப நிலைகளில் தடுக்கவும், பின் நிலைகளில் தாக்கத்தை குறைக்கவும் கோதுமை புல் சாறு சிறந்த நிவாரணி என நிருபிக்கப்பட்டுள்ளது. இதனை பச்சை ரத்தம் என அழைக்கிறார்கள். எளிதாக இதனை நாமே வளர்த்து தயாரிக்க முடியும்.10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி வீதம் விதைக்க பத்தாவது நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும்.இதனை கொண்டு சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும்.அறுவடை செய்த தொட்டியில் திரும்ப விதைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யவேண்டும் அவ்வளவே. தற்சமயம் பெருநகர அங்காடிகளில் கோதுமை புல் கிடைக்கிறது.

இதனை தவிர வெண்நுணா (Morinda citrifolia )என்ற தாவரத்தின்
பழச்சாறும் மிகவும் சிறந்தது.இதனை நோனி (Noni)என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இந்திய தாவரம். நாம் இதனை மறந்து விட்டோம்.பசிபிக் பெருங்கடல் அருகேயுள்ள நாடுகள் சிறப்பாக வியாபாரம் செய்கின்றன.

Read more...

ஓஷோவின் மடியில் சிலநேரம்...

>> Monday, October 29, 2007


மூச்சு திணறினாலும்.... இதமான சூட்டில்..

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.

குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்தது. அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.

அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது.

சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும் , மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.

அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையைக் கண்டது. சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.

ஓஷோ சொல்கிறார்

இந்த கதையில் மூன்று கருத்துக்களை காணலாம்.

ஒன்று ; உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு: உன்னை சாணத்திலிருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.

Read more...

கஸ்தூரி மஞ்சள் - .[Curcuma aromatica]


கஸ்தூரி மஞ்சள் என்று காடுகளில் தானாகவிழையும் & பயிரிடப்படும் இனமும் உண்டு.[Curcuma aromatica] இதன் குணத்தினால் அழகு,நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள்,வாசனைப்பொருட்கள், சோப்புகள், தைலங்கள் தயார்செய்யப்படுகின்றன. மற்றபடி மஞ்சள்
போன்றே இதன் குணங்களும் அமைந்துள்ளன.

மிகச்சிறந்த கிருமி நாசினியான மஞ்சள் கல்லீரலை பலப்படுத்தும், குடல் புண்களை குணமாக்கும்,பசியை கொடுக்கும், சுவையின்மை போக்கும், வீக்கம் கட்டிகளை கரைக்கும்,குடற்ப்புழுக்களை அழிக்கும், தோல் நோய்கள் குணப்படுத்தும்.[Urticaria,Chronic skin eruptions ]

மஞ்சள் மதுமேகம்,காமாலை,குடற்புண் போன்றநோய்களுக்கு
தரப்படும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

வெளிப்புறமாக பயன்படுத்தும்போது கற்றாழைவாசம் வீசும்
வியர்வை நாற்றத்தையும்,தோல் நோய்களையும் குணமாக்கும்.
முகப்பருக்களை நீக்க உதவும்.

வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது போடலாம்.

சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது. இலங்கை மக்கள் அதிக அளவில் உணவில் மஞ்சளை சேர்த்துக்கொள்வதால் புற்றுநோயின் சதவிகிதம் அங்கு குறைவாக உள்ளதென ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.[curcuma]

கால் ஆணிக்கு = கொஞ்சம் மஞ்சள்+வசம்பு கொஞ்சம்+மருதானி இலை +கற்பூரம் சிறிது, இவைகளை அரைத்து காலாணிக்கு கட்டிவர குணமாகும்.

பாலில் மஞ்சள்+மிளகு+பூண்டு சேர்த்து காய்ச்சி குடித்துவர சளி,இருமல் குறையும். மஞ்சளை நெய்யில் கலந்து கொடுத்தாலும் இருமல் குறையும்.முகப்பருக்களையும், அழகைக்குறைக்ககூடிய இடங்களில் ஏற்ப்படும் ரோமங்களையும் நீக்கும் தன்மை இதற்கு உள்ளதால் மஞ்சள் முகப்பூச்சு கிரீம்களில் அதிக இடம்பிடிக்கிறது.
1868 ஆம் ஆண்டு முதற்க்கொண்டே மஞ்சள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தஒரு காரியம் துவங்கும்போதும் மஞ்சள் அல்லது சாணத்தில் பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை குத்தி பூஜை செய்வது தமிழர் வழக்கம். இதற்கு விஞ்ஞான காரணமென எடுத்துக்கொண்டால் மஞ்சள், மாட்டுசாணம், அருகம்புல் எல்லாமே சிறந்த கிருமிநாசினியாகும்.
தத்துவமாக பார்த்தால் அருகு போல் வேறூன்றிஆல்போல் தழைத்து வாழ்கவென வாழ்த்துப்பா வில் கூறுவர்[அருகு எளிதில் எல்லா இடத்தில் ஆழமான வேர்களுடன் படரக்கூடியது ஆல மரம் பரந்துவிரிந்து விழுதுகளால் விருந்தோம்பி நீண்டநாள் நிலைக்கக்கூடியது.

இதே போல் மஞ்சளும் மங்களகரமாண எல்லாக்காரியங்களிலும் பண்டையகாலம் தொட்டே பயன்படுத்தப்படுகிறது.அதன் நிறம் மணம் சுவை குணம் பற்றி நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.


மூலம் : http://chiththan.blogspot.com

Read more...

மிளகு {PIPER NIGRUM}


“பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

உணவுப்பொருளாகவும் மருத்துவபொருளாகவும் பண்டுதொட்டு பயன்படுத்தப்பட்டுவரும் மிளகானது சிறுகொடிவகையைச் சார்ந்தது. மலைப்பகுதியில் 1200 மீட்டர் உயரத்திற்கு மேல் பயிர்செய்யப்படுகிறது.

இந்தியாவைத் தாயகமாக்கொண்டு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம்மவர்களால் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

நம் நாட்டில் மிளாகாய் அறியப்படும் முன்னர் மிளகு
மட்டுமே உணவில் பயன்படுத்தப்பட்டுவந்தது.

காரம் கைப்பு சுவையும்,வெப்பத்தன்மையும் கொண்டது.

சளி இருமல் வயிற்றுவாயு செறியாமை சுரம் இவைகளை
குணமாக்குவது மிளகின் பொதுவான குணமாகும்.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை
மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட
வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.

வேண்டிய அளவு மிளகுத்தூளை புளித்தமோரில் ஊரவைத்து
காயவைத்து இளவருப்பாக வருத்து பொடிசெய்து வைத்துக்கொள்ளவும் .
இதை 500 மி.கி எடுத்து வெள்ளம் சேர்த்து உண்டுவர தலைவலி மூக்கடைப்பு தீரும்.

மிளகு+மஞ்சள்+பூண்டு ஒருபல் இவைகளை இடித்து பாலில் வேகவிட்டு வடித்த பாலைக் குடிக்க இருமல் தொண்டைக்கம்மல் குணமாகும்.

மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில்
கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால்,
உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.


மிளகில் உள்ள வேதியட்பொருக்கள் கீழே

Piperine 5-9%
Piperidine 5%
Balsamic volatile essential oil 1-2%
Fat 7%
Starch,lignin,gum, 1%
Proteids 7%
Ash containing organic matter 5%

மூலம் : http://chiththan.blogspot.com/

Read more...

அருகம்புல்



சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு செடி அருகம்புல்லாகும். அதன் மகத்துவம் எண்ணிலடங்காதது.

அருகம்புல்லின் மருத்துவத் தன்மையைப் பார்ப்போம்.

1.அருகம்புல் [Cynodon doctylon]

முழுத்தாவரமும் இனிப்புசுவையும்,குளிர்ச்சித் தன்மையும்
உடையது.உடல் வெப்பத்தை அகற்றும்,சிறுநீர் பெருக்கும்,குடல் புண்களை ஆற்றும்,
இரத்தை தூய்மையாக்கும்,உடலை பலப்படுத்தும்,
கண் பார்வை தெளிவுபெறும்.
அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு
கரோட்டினாய்டுகள் உள்ளன.
இதைப்பற்றி மேலும்,


“அருகம்புல் வாதபித்த ஐயமோ டீளை
சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்
கண்ணோ யோடு தலைநோய் கண்புகை யிரத்தபித்தம்
உண்ணோ யொழிக்கு முரை” [அகத்தியர்]

அருகம்புல் சாற்றை தினமும் காலை குடித்துவர
தோல் நோய்கள்,இரத்தமூலம்,வயிற்றுப்புன்,சிறுநீர் எரிச்சல்,
பெண்களுக்கு இரத்தக்குறைவால் ஏற்ப்படும் வெள்ளை,
மருந்துகளினால் ஏற்படும் ஒவ்வாமை ஆகியன தீரும்.
இதன் சாற்றை தனித்தும் பால்கலந்தும் குடித்துவரலாம்.

மூலம் : http://chiththan.blogspot.com/

Read more...

ஏன் என் பிள்ளையை தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும்?

>> Friday, October 26, 2007



வணக்கம் மன்னர்களே,

இன்று நம்மிடையே சிலத் தமிழ் பெற்றோர்கள் மழைக்குக் கூட தமிழ்ப் பள்ளிப் பக்கம் ஒதுங்குவதை அவமானமாக கருதுகிறார்களே அதற்கு என்னக் காரணம்? இவர்கள் அறியாமையை என்னவென்றுக் கூறி நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்வது?

என்னைப் பொருத்தவரை தமிழ்ப் பள்ளிகள் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வது முற்றிலும் நம் சமுதாயத்தின் குற்றமேயொழிய எந்தவொரு அரசியல் கட்சியும் இதற்கு துணைபோவதில்லை. நம் அழிவை நாமே முன்னின்று அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம்.

முதலில் அனைத்து தமிழர்களும் தமிழ்ப் பள்ளிகள் தொடர்பாக ஒத்தக் கருத்துடையவர்களாக இருப்பது மிகவும் அவசியம்.அனைவரும் அவரவர்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளியில் பயில ஆவன செய்திருந்தால் தமிழ்ப் பள்ளிகள் மூடப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நாளுக்கு நாள் சாதனைப் படைத்துவருவது நம் கண்களை இன்னும் திறக்கவில்லையா? 515 தமிழ்ப் பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 'ஏ'க்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளனரே. நம்மாலும் வெற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா..

ஒரு வட்டாரத்தில் தமிழ்ப் பள்ளி இயங்குவதனால் சமுதாயத்திற்கு அதன்மூலம் என்னப் பயன் என்று பார்க்கலாம்.

1. மலாய் பள்ளிகளில் நம் பிள்ளைகள் குறைந்த எண்ணிக்கையில் பயின்றுவருவதனால் பிற இன மாணவர்களுடைய பழக்கவழக்கங்களில் தோய்ந்து சொந்தக் கலாச்சாரத்தை மெதுவாக இழக்கின்றனர். அவர்களுக்கு பொங்கல் பண்டிகையின் மகத்துவம் தெரியாது, சரஸ்வதி பூஜையைக் கண்டிருக்க மாட்டார்கள், ஆன்மீக கலாச்சார விஷயங்களை எடுத்துக் கூற அவர்களுக்கு யாரும் இருப்பதில்லை, தமிழ்ப் பள்ளியின் தரத்திற்கு மலாய் பள்ளிகள் இருப்பதில்லை, மலாய் மாணவர்கள் இறைவணக்கம் செய்யும்பொழுது நம் மாணவர்கள் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டிருக்கின்றேன். மலாய் பள்ளிகளில் பயிலும் முக்கால் சதவிகிதம் தமிழ் மாணவர்கள் முறையாக தன் பூர்வீகத்தை அறியாதவர்களாகவே உள்ளனர். இன்னும் பல பள்ளிகளில் உணவு பிரச்சனைகளை நம் மாணவர்கள் எதிர்நோக்குவதும் கவலையை அளிக்கிறது. தமிழ்ப் பள்ளிகளில் சண்டைப் போடச் செல்லும் வீரம் மிகுந்த பெற்றோர்கள் மலாய் பள்ளிகளில் பூனைகள்போல் குறுகி விடுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

2. எத்தனைப் பேர் நம்மின மாணவர்கள் மலாய் பள்ளிகளில் மாணவர்த் தலைவனாகவும், வகுப்புத் தலைவனாகவும், நூலக பொறுப்பாளர்களாகவும் தேர்வுச் செய்யப்படுகின்றனர்?

3. தமிழ்ப் பள்ளிகளின் பாடத்திட்டமும் மலாய் பள்ளிகளின் பாடத்திட்டமும் வித்தியாசங்கள் அதிகம் கொண்டிருப்பதில்லை, ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் கலாச்சாரம், மொழி, பண்பாடு, சமயம் போன்றப் பல நல்ல விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். இன்று பல மலாய்ப் பள்ளி மாணவர்களுக்கு பாரதியார், திருவள்ளுவர், கம்பன், அவ்வையார் போன்ற மகான்களைத் தெரிந்து வைத்திருப்பதில்லை.

4. தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருப்பதால் அரசாங்கம் தமிழர்களுக்கு வேலைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் தமிழ்த் துறைத் தொடர்ந்து இருக்கும்.

5. தமிழ்ப் பள்ளிகள் இயங்குவதால், எத்தனை தமிழர்கள் பயனடைகிறார்கள் தெரியுமா... பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள், சிற்றுண்டிச்சாலை நடத்துபவர்கள், தமிழ் புத்தகக் கடைகள் என பட்டியல் நீள்கிறது. இது மலாய் பள்ளிகளில் எடுபடுமா? நம்மினத்தவருக்கு இதுபோன்ற வாய்ப்புக்கள் கொடுக்கப்படுமா?

6. நம் தமிழாசிரியர்களின் மொழிப் பற்றுக் காரணமாகவும், இனப் பற்றுக் காரணமாகவும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் பயனுறும் நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பெறுகின்றன. தமிழாசிரியர்களே அதிகம் தியாக மனப்பான்மை உடையவர்களாக இருக்கின்றனர்.

7. பலத் தமிழ்ப் பள்ளிகளில் புறப்பாட நடவடிக்கைகளாக சமய வகுப்புகள், பரத நாட்டிய வகுப்பு, சங்கீத வகுப்பு என பாரம்பர்யத்தில் மாணவர்கள் ஊறுகின்றனர்.

8. மலாய்ப் பள்ளிகளில் உள்ள தமிழ் மொழிப் பாடத்திட்டம் உறுதியாக இல்லாமல் இருக்கிறது, வெறும் இரண்டரை மணி நேரமே ஒரு வாரத்தில் தமிழுக்காக் ஒதுக்கப்படுகிறது.

9. நம்முடைய தனித்துவம் தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே உள்ளதை யாரும் மறந்துவிட வேண்டாம். தமிழ்ப் பள்ளிகள் நம் பாரம்பர்யத்தின் அறக்காவலன்.

10. தயவு செய்து தமிழ்ப் பள்ளிகள் நமக்கு என்ன செய்தது எனக் கேட்பதை விடுத்து, நாம் தமிழ்ப் பள்ளிகளுக்கு என்ன செய்தோம் என்றுக் கேட்பதே அறிவுடைமை.

தமிழ்ப் பள்ளிகள் வளர்ந்தால் நம் சமுதாயமே வளரும் எனும் உண்மையை மனதிற்கொண்டு அனைவரும் செயல்படுவோமாக...

மலேசிய நாடாளுமன்றத்தின் முன் பல தன்னார்வ தொண்டூழிய இயக்கங்கள் தமிழ்ப் பள்ளிகளை அரசாங்க முழு உதவிப் பெறும் பள்ளிகளாக மாற்ற உரிமைக்குரல் கொடுக்கும் படக்காட்சி கீழே.. இவர்களைப் போல் அனைவரும் தைரியமாக உரிமைக்காகப் போராட தயாராக வேண்டும்!

Protamil_Mar29

Read more...

இன்றைய சமையல் என்னவோ?

எளிதான முறையில் மரக்கறி உணவு பதார்த்தங்களைத் தயார் செய்ய சிலக் குறிப்புகள்.
சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய கீரை வகைகளைப் பயன்படுத்தி, எளிமையான சத்துள்ள உணவு பதார்த்தங்களை செய்துப் பாருங்கள்.

அதோடு இந்துக்களின் பண்டிகைகளுக்கேற்ற உணவு வகைகள், தினசரி காலை உணவு, மற்றும் 30 வகையான சிறப்பு உணவு வகைகள் இவற்றையும் இங்கே இணைத்துள்ளேன்.

கீழே உள்ள சிறு படத்தைச் சுட்டி மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Read more...

அடிமை - வேண்டாதக் கொடுமை

மலேசியா 50 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்த பிறகும் , தமிழர்கள் இன்னும் அடிமைத்தனத்தினால் அடைந்து கிடக்கும் அவலம் இன்னும் நம் கண்களுக்கு அகப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. முறையான வேலையில்லாமல், முறையான ஊதியம் இல்லாமல், முறையான கல்வி பெறாமல், அடையாள அட்டை இல்லாமல் சொந்த நாட்டிலேயே நாடுகடத்தப்பட்ட வாழ்க்கையை எத்தனையோ தமிழர்கள் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருப்பதற்கு இதோ ஓர் அத்தாட்சி. முதலாளியின் பிடியில் சிக்கி அடிமை வாழ்க்கை வாழ்ந்த ஒரு குடும்பத்தின் உண்மைக் கதை. வழக்கம்போல் கதை எண்ணெய் கசியும் பழங்களை உற்பத்திச் செய்யும் தோட்டத்திலிருந்து ஆரம்பமாகிறது.

இக்கொடுமைக்கு யார் காரணம்? முதலாளியா அல்லது தொழிலாளியா? முடிவு உங்கள் சிந்தனைக்கு...

பகாவ், நெகிரி செம்பிலானிற்கும், த்ரியாங், பகாங்கிற்கும் செல்வோம்... அவர்கள் கூறும் கதையைக் கேட்போம்...

குறிப்பு : ஒவ்வொரு படச்சுருளையும் சுட்டும் பொழுது, சில சமயம் அதற்கான படச்சுருள் பகுதி 1 எனக் குறிப்பிடப்பட்டுள்ள திரையில் ஒளிபரப்பாகும்.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



தொகுப்பு

Read more...

வெண்மை - விடிவுக்காலம் ஒரு கேள்விக்குறி?

>> Thursday, October 25, 2007

தோட்டப்புரங்களில் வாழும் பல தமிழர்கள் இன்றளவிலும் அனுபவிக்கும் பல இன்னல்களை நினைத்தால் மனம் விம்முகிறது. அதிலும் ஒரு தோட்டப்புரப் பெண் முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கிச் சின்னாப் பின்னமாகி போவதை இயல்பாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது "வெண்மை" எனும் குறும்படம். முதலாளிகளிடம் கற்பைப் பறிகொடுக்கும் லட்சுமியின் உணர்வுகளைப் புரிந்து அவளுக்கு வாழ்வளிக்க முனையும் ஒரு இளைஞனின் குணம் நமக்கொரு நல்ல படிப்பினையை வழங்குகின்றது.

இன்னும் ஆங்காங்கே இந்த லட்சுமியைப் போன்று எத்தனை சகோதரிகள் இருட்டில் வாழ்கிறார்களோ...?

விடியலை நோக்கிப் புலம் பெயர்ந்த தமிழர் தோட்டத் தொழிலாளிகளுக்கு என்றுதான் விடிவுக்காலமோ?

சமூக விழிப்புணர்வு ஊட்டக்கூடிய இக்குறும்படத்தைத் தயாரித்த மலேசிய இந்தியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களுடைய பணி தொடரட்டும்...

இதோ லட்சுமியின் கதை....

Read more...

"நிலவுக்கொரு கடிதம்" ஒரு சிறுமியின் விண்ணப்பம்..

"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்பர். ஆனால் இன்று எத்தனைக் குடும்பங்கள் தங்கள் மனநிம்மதியை இழந்து குடும்ப சீரழிவிற்கு ஆட்பட்டிருக்கின்றன.. பலவிதமான சமூக சீர்கேடுகளுக்கு மத்தியில் சிலர் சொந்த குடும்பத்திலேயே அட்டூழியங்கள் புரிவதை என்னவென்று சொல்வது..அதற்கு ஒரு உதாரணம்தான் இந்த "நிலவுக்கொரு கடிதம்" எனும் குறும்படம். வேலியே பயிரை மேய்ந்தக் கதை இது.. ஒரு மழலையின் சோகக் குரலோடு ஒலிக்கும் விண்ணப்பம். அதுவும் அந்த நிலவிடம் விண்ணப்பம் போடுகிறாள் ஒரு சிறுமி, காரணம் பல இரவுகளில் நடந்த, நடக்கவிருக்கின்ற அநியாயங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது அந்த நிலவுதானே...

சமுதாயத்திடம் கிடைக்காத நீதியோ என்னவோ, அவளுக்குத் துணை,அடைக்கலம் அந்த நிலவு மட்டுமே.குறைந்தபட்சம் அச்சிறுமியின் அழுகுரலைக் காது கொடுத்து கேட்கிறது அந்த நிலவு. நாம் கேட்போமா?

பொருள் புதைந்த இக்குறும்படத்தைத் தயாரித்த மலேசிய இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்.மேலும் இதுபோன்று பல நல்ல விழிப்புணர்வைத் தூண்டும் பல நல்ல படங்களை அவர்கள் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும். சிறுவர்கள் காமப் பொருட்கள் அல்ல, அவர்கள் பூவினும் மெல்லியவர்கள் என இடித்துரைத்த இந்தக் காவியம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாக..

இதோ அந்தச் சிறுமியின் குரல்..

Read more...

பாட்டொன்று கேட்டேன்.....

>> Wednesday, October 24, 2007

நாம் இன்பமாக இருக்கும்பொழுது கண்ணுக்குத் தெரியாத ஆண்டவன், கஷ்டம் என்று ஒரு மாயைத்திரை நம்மை மறைக்கும்பொழுது அத்திரையில் இறைவனின் அன்புத் திருவுருவம் தெரிவதேன்?

இன்பத்தில் திளைத்திருக்கும் மனிதன் தன்னையே மறந்திருக்கும்பொழுது கடவுளை மட்டும் ஞாபகம் வைத்திருக்க முடியுமா என்ன... மனிதன் பலசமயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளோடு எப்படியெல்லாம் உறவாடுகிறான் என்பதனைப் பார்க்கும்பொழுது, இந்த மனிதக்குலம் உலகில் இன்றும் நிலைத்திருக்கும் இரகசியம் வெளிச்சம்போட்டுக் காட்டப்படுகிறது.

சந்தர்ப்பங்களை தன் வசப்படுத்தும் கலையினைக் கற்றவன் மனிதன். அதற்காக அவன் தியாகம் செய்தது நிம்மதி, தூக்கம் இன்னும் பலப் பல.

மனிதன் தூங்குகிறானோ இல்லையோ, இதோ நம்முள் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் நம்முடைய வாழ்க்கைத் தொடர்பான தேடல்கள்தான். இந்தப் பாடல்கள் சில சமயம் என்னைத் தட்டி எழுப்பி இருக்கின்றன. நீங்களும் கேளுங்களேன், நீங்கள் ஏற்கனவே கேட்டப் பாடல்கள்தான்.

Powered by eSnips.com

Read more...

தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்லை!

>> Tuesday, October 23, 2007

தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்லை. சிறந்த ஒரு நாகரீகத்தை படைத்த நம் தமிழினம் இன்று சொந்த நாடு என்று ஒன்று இல்லாமல் வேற்று நாட்டில் மூன்றாம் தர மனிதர்களாக நடத்தப்படும் அவலம் நம்மை வெட்கச் செய்கிறது. இருப்பினும் காலம் மாறும், நமக்கென்று ஒரு நாடு உருவாகும் என்று தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருக்கும் போராட்டமானது தமிழனின் மாட்சியை எடுத்துக்காட்டுகின்றது. தமிழனால் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமா? ஏன் முடியாது? தமிழாட்சி உருவாக வெகு காலம் இல்லை. வெற்றித்தாய் என்றும் தமிழர்களை கைவிடமாட்டாள். வாழ்க தமிழனின் வீரம்! வாழ்க தமிழாட்சி!

Read more...

நவீன தமிழ் இலக்கியத்தின் புதினங்கள்




தமிழுலகில் புதினங்களைப்பற்றிப் பேசும்போது கல்கி மற்றும் அகிலனின் குழந்தைகளைக் கொஞ்சிப் பேசாமல் இருக்க முடியாது. தமிழ் நாட்டின் பண்டைய சரித்திரத்தை கலை நயத்தோடு பார்வையிட கல்கி மற்றும் அகிலனின் புதினங்களே கலங்கரை விளக்கங்களாக முன் நிற்கின்றன. நீங்கள் அந்த கலங்கரை விளக்கின் மீதேறி தமிழ் சமுத்திரத்தின் ஆழம் காண முற்படுகிறீர்களா? அதற்கு ஒரு வழி இங்குண்டு. இங்கே குறிப்பிடப்படும் புதினங்களை வரிசைக்கிரமமாக படித்தாலே போதும், தமிழர்களின் சரித்திரத்தை அழகாக தெரிந்துக்கொள்ளலாம். கல்கியின் படைப்புக்களைத் தொடர்ந்து அகிலன் கல்கியின்
மிச்சமீதிக் கதையினை அவருக்குரிய பாணியில் சிறப்பாக படைத்துக் கொடுத்திருக்கிறார்.
இதோ நீங்கள் வரிசைக்கிரமமாக படிக்கவேண்டிய புதினங்கள் :

1.பார்த்திபன் கனவு (கல்கி)
2.சிவகாமியின் சபதம் (கல்கி)
3.பொன்னியின் செல்வன் (கல்கி)
4.வேங்கையின் மைந்தன் (அகிலன்)

தற்போது உள்ள மென்புத்தகங்களில் எனக்கு கிடைத்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன். மற்ற புதினங்களை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

Read more...

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் நிலைமை

>> Tuesday, October 2, 2007

மலேசியாவில், தமிழ்ப் பள்ளிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது நாம் அறிந்ததே. 1300- கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருந்த நிலைமை போய் இப்போது 523 பள்ளிகளாக குறைந்துள்ளது வருத்தத்திற்கு உரிய விஷயமே. இதுதான் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியா?அரசியல் கட்சிகள், அரசாங்கம் உதவும் எனக் காத்திருப்பதைவிட நாம் ஆக்ககரமான செயலில் இறங்கி தமிழ்ப் பள்ளிகளை பெருக்க வழிகாண வேண்டும். மதிநுட்பம் நிறைந்த சமுதாயம் தமிழ்ப் பள்ளிகளாலேயே உருவாவது அவசியம். நம் மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றின் பாசறையாக விளங்கும் தமிழ்ப் பள்ளிகளை போற்றிக் காப்போமாக. இவ்வகையில் கட்டிட நிதி வளர்ச்சிக்காக உதவியை எதிர்ப்பார்க்கிறது ஜொகூரில் அமைந்திருக்கும் பாசீர் கூடாங் தமிழ்ப் பள்ளி. தமிழ்ச் சமுதாயம் உதவி புரிந்தால், இங்குள்ள மாணவர்கள் நல்ல நிலைமையில் கல்விப் பயில வசதியாக இருக்கும். ஏற்கனவே இப்பள்ளி கட்டிட நிதிக்காக நிகழ்ச்சிகள் நடத்தி நன்கொடைகளை பெற்றுக்கொண்டுள்ளது. தற்போது, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் 10 கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பள்ளியைப்பற்றி, கட்டிட நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காக நான் எடுத்த குறும்படத்தை இங்கே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். பள்ளியின் வளர்ச்சி நிதிக்கு உதவி புரிய விரும்புவோர், பள்ளியின் நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும். தற்போதைய பள்ளியின் தலைமையாசிரியராக பொறுப்பேற்றிருக்கும் திரு.நடராசன் அவர்களைத் தொடர்புக் கொள்ள இதோ பள்ளியின் தொலைபேசி எண் : +607-2521299


Read more...

இளைஞர் படை உருவாக்குவோம் !!!

>> Monday, October 1, 2007

வணக்கம் தமிழ் வாசகர்களே,

பல ஆண்டுகளாக, என்னுள் புதைந்து கிடக்கும் எண்ணங்களுக்கு சரியான அலைவரிசையை தேடிக்கொண்டிருக்கின்றேன்.சிந்தனை, சொல், செயல் இவை மூவற்றிலும் ஒத்தக் கருத்துடைய நண்பர்களை தேடுகிறேன், தேடிக்கொண்டேயிருக்கின்றேன்.தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் வீணே இப்படி காலம் கழிந்துகொண்டு போகிறதே எனும் ஏக்கம் என்னுள் அடிக்கடி எழுகிறது.தனித்து நின்று எதையும் செய்ய முடியாது எனும் கருத்தை நான் எற்காவிட்டாலும், தனி ஒருவனால் சாதிக்கும் காரியங்களை விட, பல பேர் ஒன்று சேர்ந்து செயல்படுத்தும் காரியமே மிக சிறந்தது என நான் கருதியதன் பலனாக இன்று தேடலில் இறங்கியிருக்கின்றேன்.

தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு எடுத்துக்காட்ட, அவர்களின் இன்னலில் நாமும் பங்கேற்று அவர்களின் கரங்களை பிடித்துத் தூக்கி நிறுத்த, மூதாதையர்களின் சுறுசுறுப்பை பெற்றிட, மொழி, இனம், மதம் ஆகிய அம்சங்களில் சிறந்து விளங்கிட, மூடத்தனங்களை ஒழித்துக்கட்ட, விவேகத்தையும் ஞானத்தையும் சமுதயத்திற்கு ஊட்ட ஒரு முறையான அமைப்பு உருவாகவேண்டும்.

என்ன செய்தால் நம் சமுதாயம் அதிவேகத்தில் முன்னேறும், எப்படி வாழ்ந்தால் பிறரால் மதிக்கப் படுவோம், எப்படி மலேசியா மட்டும் அல்லாமல் உலகத்திற்கே நம் தனித்துவத்தை நிலைநிறுத்திக் காட்டலாம்,மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, மதம் இவற்றை உலகெங்கும் அழியாமல் காப்பாற்றிட, தமிழ் சமுதாயத்திற்கு சரியான பாதையை வழிவகுக்கத் திறமையான தமிழ் இளைஞர் படை ஒன்று உருவாக வேண்டும்.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல், அடிமேல் அடிவைத்து காய்களை நகர்த்தும் சிறந்த விவேகிகளை எதிர்ப்பார்க்கின்றேன்.
இளைஞர் படையில் இணைய விரும்பும் இளைஞர்கள், தங்கள் முழு விவரங்களையும் எனக்கு மின்னஞ்சல் வழி அனுப்பிவிடவும், அதோடு உங்கள் கருத்துக்களையும் எனக்கு தெரிவிக்கவும்.விவேகமான கருத்துக்களுக்கு என்றுமே இடமுண்டு.

வளர்க சமுதாயம் !!ஒங்குக தமிழ் !!

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP