சுவர்ண பூமி - தமிழர்களின் தொப்புள் கொடி உறவு..
>> Sunday, December 30, 2007
இந்த நாட்டில் நம்மை யார் என்று கேட்கிறார்கள் சிலர்.. முதலில் அப்படி கேட்பவர்களுக்கு அவர்கள் யாரென்றே தெரியவில்லை. வரலாற்றின் ஏடுகளை சற்றே திருப்பிப் பாருங்கள்.. பக்கத்திற்குப்பக்கம் நம் தமிழ் மூதாதையர்கள் கதைதான்.. தமிழர்களுக்கும் மலையகத்திற்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என வரலாறுகள் சொல்கின்றன. இந்த நாட்டிற்கு சஞ்சிக் கூலிகளாகவா நாம் வந்தோம்? இல்லை அது தவறு..! இக்கருத்தை நம் மலேசிய இந்தியர்கள் மாற்றியாக வேண்டும்.. வணிகர்களாக, நாகரீகத்தை கற்றுக் கொடுக்கும் ஆசானாக அல்லவா நாம் இங்கு வந்தோம்.. அரசியலைச் சொல்லிக் கொடுத்தவர்களே நாம்தானே... 2000 ஆண்டுகளுக்கு முன்பே கால் ஊன்றிய நம் சரித்திரத்தை 200 ஆண்டுகள் என சுருக்கிவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றனர் சிலர்.. நாம் இங்கு வந்த விதமே வேறு.. வந்தக் காலமும் வேறு..அரசர்கள் நாம்..! இந்த மண்ணில் நாகரீகம் எனும் விதை துளிர்விடுவதற்கு தண்ணீர் பாய்ச்சியவர்கள் நாம்... நம்மைப் பார்த்து யார் என்று கேட்பவர்களுக்கு வரலாறு பதில் சொல்லும்.. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க சதிகள் பல நடந்தாலும், நமது உரிமைகளை என்றும் நம் தமிழர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நம்முடைய பின்னனியை அனைவரும் தெரிந்திருத்தல் வேண்டும். இதுத் தொடர்பாக சுவர்ண பூமி எனும் தொடர் கட்டுரையை உங்களுக்கு வழங்க இருக்கின்றேன்..
பகுதி 1
தென் கிழக்காசிய நாடுகளில் இந்து சாம்ராஜ்யம் கொடிக்கட்டிப் பறந்தக் காலம் அது.. அரசியல், நீதித்துறை, கலை, கலாச்சாரம், நாகரீகம், மொழி, வணிகம் என அனைத்திலும் இந்து மததின் தாக்கங்கள் இருந்தக் காலம் அது.. சுருங்கச் சொன்னால், தென்கிழக்காசிய மக்களின் நாகரீகம் இந்திய மண் போட்ட விதை. இந்த விதைத் தூவப்படாமல் இருந்திருந்தால், அன்று புகழின் உச்சத்தை அடைந்த சிறீ விஜயம், கடாரம், லங்கா சுகா, பாசாய், மாஜாபாகிட் போன்ற இராஜ்ஜியங்கள் சரித்திரத்தில் பேசப்பட்டிருக்கமாட்டாது..
2-ஆம், 3-ஆம் நூற்றாண்டுகளிலேயே சுவர்ணபூமியில் ஆங்காங்கே சில அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. இந்த அரசுகள் இந்து மதங்களைத் தழுவி, அதன் தர்ம சாஸ்திரங்களைப் பின்பற்றி இராஜ்ஜியம் செய்து வந்துள்ளன.
குறிப்பு : சுவர்ணபூமி (தற்போதைய தீபகற்ப மலேசியா) இப்பெயர், தமிழகத்திலிருந்து வணிக நிமித்தம் கடல்வழி அடிக்கடி வந்துப்போகும் தமிழ் வணிகர்களால் இம்மண்ணுக்கு சூட்டப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வணிகர்கள் சுவர்ணபூமியில் காலடி பதித்திருக்கின்றனர் என்பதற்கு பல மறுக்க முடியாத தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு அன்றையக் காலக்கட்டத்தில் சுவர்ணபூமியில் வாழ்ந்தவர்கள் அனைவரும் (காட்டு வாசிகளைத் தவிர) இந்து மதத்தையும் மகாயான புத்த மதத்தையும் தழுவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமர் 30 குட்டி அரசுகள் சுவர்ணபூமியில் தோன்றி மறைந்துள்ளதாக தடயங்கள் கூறுகின்றன. இந்த அரசுகளின் ஆட்சிக் காலமும் குறுகிய காலமாக இருந்துள்ளது, அதற்குக் காரணம், வடக்கில் கம்போடியாவில் மிகப் பெரிய இந்து சம்ராஜ்யமான 'அங்கோர் வாட்' சாம்ராஜ்யமும், தெற்கில் ஜாவாவில் இந்து அரசான 'மாஜாபாகிட்' அரசும் தலையெடுத்ததுதான்.
7-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து 13-ஆம் நூற்றாண்டுவரை சிறீ விஜயம் எனும் இந்து சாம்ராஜ்யம் தென் கிழக்காசிய பகுதிகளில் பெரும்பகுதிகளை ஆண்டு வந்தது. சிறீ விஜயத்தின் சாம்ராஜ்யம் அக்ஷய முனையிலிருந்து ( வடக்கு சுமத்திரா ) மயூரடிங்கம், மாப்பாலம், மேவிலிம்பங்கம், மாடமாலிங்கம் ( அனைத்தும் சுவர்ணபூமி தீபகற்பத்தில் வடப்பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்), யவத்வீபம் (ஜாவா தீவு ) வரை பரவியிருந்தது. இருப்பினும் 11-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் சோழ சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த முதலாம் இராஜேந்திர சோழன் அவரின் தலைமையில் (ஆண்டு 1025) மிகப் பெரிய கடற்படை ஒன்று சிறீ விஜயதின் மீது போர் தொடுத்தது. அப்போதைய கடாரத்தின் அரசனாக விளங்கிய சங்கம விஜயோத்துங்க வர்மன் (ஜாவா சைலேந்திர பரம்பரையைச் சேர்ந்த மன்னன்) சோழர்களிடம் அடி பணிந்தான். இருப்பினும், சிறீ விஜயம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை சுதாகரித்துக் கொண்டு மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியது. இழந்த பல ஊர்களை மீண்டும் கைப்பற்றியது (அவற்றில் கடாரமும் ஒன்று). இவ்விஷயம் அப்போதைய சோழ மன்னனான வீர இராஜேந்திர சோழனுக்கு தெரிய வந்ததும் மீண்டும் 1068-ஆம் ஆண்டில் கடராத்தின் அரசு சம்பத்தப்பட்ட உட்பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு (அப்போதைய கடாரத்தின் அரசன் சிறீ விஜயத்திடமிருந்து விடுதலை வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க) வீர இராஜேந்திரன் தலைமையில் மிகப் பெரிய கடற்படை ஒன்று கடாரத்தின் மீது படையெடுத்தது. முடிவில் சிறீ விஜயம் பின்வாங்கி அடிபணிந்தது, மீண்டும் கடாரம் சோழ நாட்டு இராஜ்ஜியத்தின் கீழ் வசமானது..
குறிப்பு : கடாரத்தின் மீது படையெடுத்த சோழ சாம்ராஜ்யத்திடம், 3 வகையான மரக்கலங்கள் (மரத்தினாலான கப்பல்கள்) இருந்துள்ளதாக வரலாறு கூறுகின்றன. 1. நெருங்கிய போகுவரத்துத் தொடர்பிற்கு சிறு ரக மரக்கலங்கள். 2. வணிக நிமித்தம் பண்டங்களையும், இதர பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்கு பெரிய மரக்கலங்கள். 3. கடல் கடந்து போர்ப் புரியக்கூடிய அதி நவீன வசதிகள் கொண்ட மிகப் பெரிய மரக்கலங்கள். மரக்கலங்களுக்கு பொறுப்பேற்றிருப்பவர்களை கலபதி என அழைப்பர்.
தமிழ் நாட்டினருக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. கெடாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று முதலாம் குலோத்துங்கச் சோழனால் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சமஸ்கிருத மொழியில் சோழ நாட்டிற்கும் கடாரத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பை விளக்கிக் காட்டியுள்ளது. அதுப்போக புக்கிட் மெரியாம், மூடா ஆற்றின் படுகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : கடாரத்திற்கு மேலும் சிலப் பெயர்கள் உள்ளன, அவை கடகா, கிடாரம், ரக்தாம்ருதிகா (சிவப்பு மண்)
சோழ சாம்ராஜ்ஜியத்தில் கடாரம் மிகவும் செழிப்பாகவும், வணிக ரீதியில் அவ்வட்டாரத்திலேயெ மிக முக்கியமான ஒரு நகரமாகவும் திகழ்ந்துள்ளது. தமிழ் வணிகர்களும் தங்கள் வணிகங்களை கடாரம், சிறீ விஜயம், ஃபூனான், சம்பா போன்ற அரசுகளில் செய்திருக்கிறார்கள். இதன் வழியே இந்து மதமும் தென் கிழக்காசிய வட்டாரத்தில் வெகு வேகமாகப் பரவலாயிற்று. இந்து மதம் வணிகர்களாலேயெ பரவியது எனவும், போர் முறைகளினால் அல்ல எனவும் வரலாற்றுக் கூறுகள் பறைச்சாற்றுகின்றன.
மூலம் :
Keay, John, India A History, Harper Collins Publishers, New Delhi, 2000.
Cholas: http://www.lotussculpture.com/bronze_sculpture_chola_empire.htm
Extent of Chola territories : http://www.india-history.com/medival-india/chola-empire.html
Tamil Nadu History: http://www.1upindia.com/states/tamilnadu/history.html
Architecture of the Chola Empire : http://tamilnation.org/culture/architecture/thanjavur.htm
Chola Bronze sculptures: http://tamilnation.org/culture/cholabronze.htm.
UNESCO World Heritage sites constructed by the Chola Empire: http://whc.unesco.org/pg.cfm?cid=31&id_site=250
Southeast Asian conquests: http://www.sabrizain.demon.co.uk/malaya/hindu1.htm
Thanjavur Temple: http://www.tamilnation.org/culture/architecture/thanjavur.htm
தமிழர் ஆட்சி தொடரும்...