இண்ட்ராஃப் தீபாவளி வாழ்த்து அட்டைகள்..

>> Tuesday, September 30, 2008

இவ்வருட தீபாவளியை மிதமான முறையில் அனுசரித்து அரசாங்கத்திற்கு நம்முடைய அதிருப்தியைத் தெரிவிக்க ஆரஞ்சு நிற புத்தாடை, தியானம், இறைவழிபாடு , கூட்டுப் பிராத்தனை என்றெல்லாம் ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க, உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி அட்டைகளை அனுப்ப அழகான வாழ்த்து அட்டைகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

அழகாய் இருந்தால் மட்டும் போதாது, கருத்துகளும் நிறைந்திருக்க வேண்டும்..

நம் போராட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாக அமைந்திருப்பவை 18 அம்சக் கோரிக்கைகள்.. வாழ்த்து கூறுவதுடன் போராட்டத்தின் குறிக்கோளையும் நினைவூட்டுவதற்கு, 18 அம்சக் கோரிக்கைகள் கொண்ட இண்ட்ராஃப் தீபாவளி வாழ்த்து அட்டைகள் வெளிவந்துள்ளன..

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் பார்த்து, பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..

Read more...

4-ஆம் திகதி பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு..!


அரி ராயா பெருநாளன்று கெப்பாலா பாத்தாசில் அமைந்துள்ள பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பிற்குச் செல்வதற்கு இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் தயாராக இருந்த சமயம், திகதி திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரி ராயாவின் முதல் நாளன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நண்பகல் மணி 12.30 தொடங்கி மாலை 4.30 மணிவரை பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு நடைப்பெறவுள்ளது. அன்றைய தினத்தில் தென் மாநிலங்களில் வசிக்கும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள், அங்குச் சென்று பிரதமரிடம் அரி ராயா வாழ்த்துகள் கூறி இண்ட்ராஃப் தலைவர்களுக்கு முறையான நீதி வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதனை அடுத்து அக்டோபர் 4-ஆம் திகதியன்று பிரதமர் கெப்பாலா பாத்தாசில் அமைந்துள்ள மில்லேனியம் மண்டபத்தில் காலை 11.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளார். இத்திறந்த இல்ல உபசரிப்பிற்கு வட மாநிலங்களிலிருந்தும், கிழக்குக்கரை மாநிலங்களிலிருந்தும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் படைத்திரள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்விறு நிகழ்வுகளிலும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் ஆரஞ்சு நிற உடையினை அணிந்துச் செல்வதோடு, அமைதியான முறையில் கலந்துக் கொண்டு வாழ்த்துகளையும் மனுவையும் சமர்ப்பித்துவிட்டு வருமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்விரு நிகழ்வுகளிலும் ஆரஞ்சு நிற அலை பளிச்சென்று தெரிய வேண்டும்..

மறவாமல் கலந்துக் கொண்டு ஒரு கலக்கு கலக்கிருங்க...

Read more...

"ஓலைச்சுவடி" - ஓராண்டு நிறைவு..

>> Monday, September 29, 2008


MySpaceGraphicsandAnimations.comஇன்று ஓலைச்சுவடிக்கு ஒரு வயதுப் பிறந்தநாள். இந்த ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் நான் சந்தித்த மனிதர்களையும் சவால்களையும் சற்று நேரம் எண்ணிப் பார்க்கிறேன்..

கண்மூடி கண் திறப்பதற்குள் இம்மாய உலகில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.. குறிப்பாக மலேசிய தமிழர்களின் சிந்தனையில் ஒரு புரட்சி உண்டாகும் என்று கனவிலும் கருதாதக் காலம் அது. எப்பொழுது தமிழர்களின் வழிப்பாட்டுத் தளங்கள் உடைக்கப்பட்டதோ, அதனைத் தட்டிக் கேட்கச் சென்ற பொதுமக்களும் வழக்கறிஞர்களும் அடிவாங்கினார்களோ அன்றுதான் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் பிறந்தது.

அச்சமயம் இண்ட்ராஃப் என்ற இயக்கத்தை பற்றி அறிந்திராத காலம். புத்ராசெயாவில் பிரதமர் அலுவலகத்தின் முன் 5000 தமிழர்கள் ஒன்றுதிரண்டு மனு கொடுத்தார்கள் என்ற அளவில்தான் செய்தி தெரியும். அதன் சாரம்சம் அன்று தெரியாது.

ஆனால் தொடர்ச்சியாக பல ஆலயங்கள் உடைபடும்போதுதான் என் எழுத்திற்கு இண்ட்ராஃப் எனும் இயக்கம் உரமாக அமைந்தது. அந்த காலக்கட்டத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது, ஏன் அனைத்து மலேசியத் தமிழர்களாலும் மறக்க முடியாது. பல நூற்றாண்டுகளாய் அந்நிய சத்திகளின் பிடியில் அடிமை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த தமிழர்களின் உண்மையான போராட்ட குணத்தை அப்பொழுது காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்தது. போராட்ட குணம் என்பதெ நம் மரபணுக்களில் ஆணியடிக்கப்பட்டுவிட்ட ஒரு சாசனம்தானே.

அன்று திரட்டப்பட்ட 'மக்கள் சக்தி' எனும் மாபெரும் அணியின் தாக்கத்தினால் பலர் தியாகிகளாயினர், போராளிகளாயினர், அதே வேளையில் என்னைப் போன்ற பலரும் எழுத்தாளர்கள் ஆயினர். 'மக்கள் சக்தி' ஏற்படுத்திய சுதந்திர அலை ஒவ்வொரு மலேசியத் தமிழ் குடிமகனையும் எழுத்தாளனாக்கியது. சனநாயகத்தின் விளிம்பில் கருத்துக் களங்கள் விரிவடைந்தன. சுதந்திர வாசகங்கள் முரசுக் கொட்டி விண்ணைப் பிளந்தன.எழுத்துகளில் மட்டும் வீரத்தையும், போராட்டத்தையும், விழிப்புணர்வையும் காட்டினால் போதுமா, களத்தில் இறங்கி போராடினால்தானே அது உண்மை போராட்டமாக இருக்கும் என்ற சிந்தனையின் தூண்டுதலால், களத்திலும் இறங்கி காவல்த்துறையின் பிடியில் சிக்கிய அந்த நினைவுகள் என்றுமே சுகம் தரும் நினைவுகளாகவே மனதில் குடிகொண்டிருக்கின்றன. தொடர்ந்து போராட வேண்டும் என்ற உணர்ச்சி மட்டுமே விஞ்சி நிற்கிறது.

இந்த ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் பல மறக்க முடியாத சம்பவங்களை சம்பாதித்துக் கொண்டேன். நல்ல நண்பர்கள் வரமாகவும், துரோகிகள் நல்ல பாடங்களாகவும் எனக்கு வந்தமைந்தார்கள். நான் விபத்திற்குள்ளாகி இருந்த சமயத்தில் ஓடோடி வந்து உதவி செய்த பல நல்ல உள்ளங்களையும், விரைவில் நலம் அடைய ஆசி கூறி தன்னம்பிக்கை ஊட்டிய பலரையும் இக்கணம் நினைத்துப் பார்த்து நெகிழ்கிறேன். பதிவு எழுதுவது வெட்டி வேலை என்றும், அதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்று கருதுவாரும் உளர். ஆனால், என் ஓராண்டு பதிவுலக அனுபவத்தில் இழந்ததைவிட பெற்றுக் கொண்டதே அதிகம். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று எனும் நியதி உலகின் மாற்றமுடியாத விதி. நான் இழந்தது என் நேரங்களை மட்டும்தான், ஆனால் அதன்வழி எனக்குக் கிடைத்ததோ சுவையான அனுபவங்கள், வாழ்க்கைப் படிப்பினைகள், நல்லோர் நட்பு என என்னைச் சுற்றி ஒரு நட்பு வட்டாரம். இது தொடர வேண்டும்...

இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எனக்கு ஆக்கவழிகளைக் காட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி கூறுவது என் கடமையாகும். அதேவேளையில் என் எழுத்துகளின் வழி சிலரின் மனங்களைக் காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டியதும் என் கடமையாகிறது. ஆனால் இந்த மன்னிப்பு நம் சமுதாயத்தைக் கூறுபோடும் துரோகிகளுக்கு அல்ல. மற்றபடி இதுநாள்வரையில் "ஓலைச்சுவடி"க்கு பல வகையில் ஆதரவு கொடுத்து வந்த வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் இவ்வேளையில் எனது நன்றிகளைக் கூறிக் கொள்வதோடு, வாசகர்கள் அளிக்கும் ஊக்கமே எங்களுக்குச் சிறந்த ஊட்டச் சத்து மருந்து என்றியம்பி மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

போராட்டம் தொடரும்...

Read more...

மெழுகுவர்த்தி ஏந்தியப் பேரணி இனிதே நடந்தேறியது..

>> Sunday, September 28, 2008

மலேசியாவின் சனநாயகக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டுவரும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றவும், மலேசிய இந்தியர்களுக்கு உரிமைக் குரல் கொடுத்த ஐந்து இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்கவும் கோரி நடத்தப்பட்ட இண்ட்ராஃபின் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி எந்த ஒரு தடங்கலும் இன்றி இனிதே நடைப்பெற்று முடிந்தது.

இரவு 7.30 மணியளவில் மெர்டேக்கா சதுக்கத்தில் கூடியிருந்த இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கு அச்சதுக்கத்தில் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்ட வேளையில் அனைவரும் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோர்ட்டுமலைப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக நடந்தனர்.

இந்த ஊர்வலத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா கினி படச்சுருள்போராட்டம் தொடரும்...

Read more...

அரசியல் பேசாதே..!
நண்பனே

அரசியல் பேசாதே

எதிர்கால வரலாறு

சட்டங்களால் வரையறுக்கப்பட்ட

சக்கைகளாக மட்டும் இருக்கட்டும்!அரசியல்

நாம் பேச

அனுமதி கொடுக்கப்படாத அரசன்.

நீ அதற்கு

புலனாகாத சாசனம்

எழுதி வைக்கப்பட்ட அடிமை.அரசியல்

வாழ்வில் ஒளியேற்றும்

அகல்விளக்கன்று.

உன்னை ஒப்பாரி

வைக்கச் செய்யும்

அராஜகச் சாலை.நண்பா

கொஞ்சம்

உன் காதைக் கொடு.

அரசியல்

பேச வேண்டும்.நாம் இருவர்

இருக்குமிடத்தில்

எதற்கு இரகசியம்

என்றா கேட்கிறாய்.காற்றுக்கும் காதுண்டாம்

இதை நாடறிந்தால்

நாளைய காவலில்

நீயும் நானும்

தீவிரவாதி என்ற முத்திரையுடன்.ஆக்கம் : விக்கினேசுவரன் அடைக்கலம்(ஈப்போ)

Read more...

அம்னோவின் வெற்றிக்கு பங்காற்றும் தமிழ் நாளேடுகள்..!

>> Saturday, September 27, 2008

நாடகமாடுகிறார் தனேந்திரன்..!
..கா இளைஞர் பகுதி செயலாளர் சிவராஜ் கண்டனம்!

வசந்தகுமார் மீது பழி சுமத்துவதா..?

மக்கள் சக்தியும் அரசியல் சாயமும்..!

"ஐவரின் விடுதலைதான் முக்கியம்" கணபதிராவ் சகோதரர் ராயுடு அறிவுறுத்து.

இண்ட்ராஃபின் நோக்கத்தை தனேந்திரன் திசைதிருப்புவதா...?

பேரணியைக் கூட்டி சமுதாயத்தை கூறு போடாதீர்..!

பேரணியில் கலந்துக் கொள்ளத் தயாரா? சாமிவேலுவுக்கு தனேந்திரன் சவால்..!

5 இண்ட்ராஃபின் தலைவர்கள் விடுதலைக்குப் போராட்டம், சாமிவேலுவின் சின்னத்திரை நாடகமா?

ஐவரை வைத்து .,கா அரசியலா? தனேந்திரனுக்கு இளைஞர் பிரிவு கேள்வி..!

..காவுக்கு சவால்..!

வேதமூர்த்தியின் அறிக்கை வருத்தத்தைத் தருகின்றது..

தனேந்திரனின் சவாலை சாமிவேலு சந்திக்க வேண்டும்..! என்றி வலியுறுத்து..

அம்பாங்கில் ஆலயம் உடைப்பு : நிர்வாகம் வேதனை,
..கா நீலிக்கண்ணீர்வடிக்க வேண்டாம் என எச்சரிக்கை..!

மேற்காணும் தலைப்புகள் அனைத்தும் நேற்றைய தமிழ் நாளேடுகளில் வெளிவந்திருந்த தலையங்கங்களும் செய்திகளுமாகும். தமிழ் குமுகாயத்தில் பலதரப்பட்டவர்களால் இச்செய்திகள் வாசிக்கப்பட்டு, அவரவர் பட்டறிவிற்கும் சுயசிந்தனைக்கும் ஏற்ப கருத்துகள் உள்வாங்கப்பட்டு, அவற்றின்பால் சில அபிப்பிராயங்களை மனதிற்கொள்ள வைத்திருப்பது நிச்சயம். இதுமட்டுமல்லாது காலங்காலமாகவே உள்நாட்டு தமிழ் நாளேடுகள் பல்வேறு தரப்பினர்களின் பிரச்சனைகளையும் அதிருப்திகளையும் கொட்டித் தீர்க்கும் ஒரு களமாக இயங்கி வருவதையும் கண்கூடாகவே காணமுடிகிறது.

சமுதாயப் பிரச்சனைகளை முன்வைக்கிறோம் பேர்வழி என்று, சுயலாப நோக்கமுடனும் பழிதீர்க்கும் எண்ணங்களுடனும் படையெடுக்கும் சில அறிக்கை வீரர்களுக்கு நமது தமிழ் நாளேடுகள் காலங்காலமாய் வழிவிட்டு தனது வருமானத்தைப் பெருக்கி வருகின்றன என்று ஆணித்தரமாகவே கூறலாம். அண்மைய காலமாக இண்ட்ராஃப் மக்கள் சக்தி தலைமைத்துவத்தில் ஒற்றுமை சீர்குலைந்து வருவதாகவும், இண்ட்ராஃப் தலைவர் வேதமூர்த்தி லண்டனில் உல்லாசமாக இருப்பதாகவும், லண்டன் நஷ்ட ஈடு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாயும் பல அறிக்கைகள் நாளேடுகளில் வெளிவந்தவண்ணம் இருந்தன.

இக்கருத்துகளில் ஆதரப்பூர்வமான உண்மைகள் உள்ளனவா அல்லது இவையனைத்தும் அரசியல் நோக்கத்துடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட புழுகு மூட்டைகளா என்று ஆராய்வது ஒருபுறம் இருப்பினும், சமுதாயத்திற்கு உண்மைச் செய்திகளைக் கொண்டுச் சேர்ப்பிக்கும் பொறுப்பில் உள்ள நம் நாட்டு தமிழ் நாளேடுகள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதன் வழி சமுதாயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அவர்கள் அறிவார்களா?

சமுதாயம் அனுதினமும் சந்தித்து வரும் பலவகைப் பிரச்சனைகளைப் படம் பிடித்து செய்திகளாகப் பிரசுரிப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், தனிமனித சாடல்கள் கொண்ட அறிக்கைகளை மையப்படுத்தி பின் அதனைத் தொடர்ந்து தொடர் சங்கிலிகளாக வெளிவரும் அறிக்கைகளையும் பிரசுரித்து பணம் பண்ணும் போக்கைத்தான் நாம் கண்டிக்க வேண்டியுள்ளது. இதன்வழி மக்கள் அடைந்த நன்மை என்ன?

இம்மாதத்தில் மலேசியத் தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்திகளை மட்டும் உதாரணமாக் கொண்டோமானால், தனிமனித சாடல்கள் நிறைந்த அறிக்கைகளையே நாம் அதிகம் காணலாம். அதுவும், அவை முதல் பக்கத்திலேயே தலையங்கங்களாக நாளிதழ்களை அலங்கரித்து வருவது மிகவும் வேடிக்கையான ஒன்றாகும். இதுபோன்ற செய்திகள் ஏன் மையப்படுத்தப்படுகின்றன? உண்மையை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காகவா? சரி மக்கள் உண்மையிலேயே விழிப்புணர்வு அடைந்தார்களா?


கடந்த ஒருவார காலமாக தமிழ் நாளேடுகளை அலங்கரித்து வரும் செய்திகளை ஒருகணம் அலசிப் பாருங்கள். சாமிவேலு இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க பிரதமரிடம் கோரப் போவதாய்க் கூறி, பிரதமரையும் சந்தித்துவிட்டார். அவரையடுத்து ம.மு.க கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரும், துணையமைச்சருமான முருகையாவும் துணைப் பிரதமரைச் சந்தித்து இது குறித்து பேசப்போவதாகக் கூறி, அவரை சந்தித்தும் விட்டார். இவர்களையடுத்து ஐ.பி.எஃப் கட்சி, இந்து சங்கம், கிம்மா, இன்னும் இதர அரசு சார்பற்ற இயக்கங்கள் இண்ட்ராஃப் தலைவர்கள் விடுதலை குறித்து அறிக்கைகள் விட்டுக் கொண்டும் வருகின்றனர்.

இத்தனைக் காலம் சுவடே தெரியாமல் இருந்த சில இயக்கங்கள் இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பதும், இது குறித்து தமிழ் நாளேடுகளில் செய்தி வருவதுமாக உள்ளது. 'கூட்டத்தில் கோவிந்தா போடுவது' என்பார்களே, அதுதான் இப்பொழுது நடந்துவருகிறது. தேசிய முண்ணனியின் உறுப்புக் கட்சியான ம.இ.காவே குரல் கொடுத்துவிட்டது, இனி நாமும் கொடுத்துவிட வேண்டியதுதான் என்று பல அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. மறுபுறம் இண்ட்ராஃப் உறுப்பினர்கள் பலருக்கு இந்த அரசியல் நாடகம் பிடிக்காதுபோய் பத்திரிகைகளில் இருவழி வாக்குவாதங்களில் இறங்கிவிட்டனர். நேற்று, இன்று, நாளை என நாளேடுகளைப் புரட்டினாலே, "நீ வாய மூடு!, "நீ வாய தொற!", "நாடகம் ஆடாதே!", "படம் காட்டாதே..!", "உனக்கு உரிமை இல்ல!" " எனக்கு உரிமை இருக்கு..!" என ஒரே காழ்ப்புணர்ச்சியைத்தான் காணமுடிகிறது.

ஏதோ இதுப்பொன்ற செய்திகளைப் படிப்பதற்குத்தான் பலர் தமிழ் நாளேடுகளை பணம் கொடுத்து வாங்கிப் படிப்பதாக ஒரு மாயயை நாளேடுகள் உருவாக்கிவிட்டதுடன் மட்டுமல்லாமல், வலுக்கட்டாயமாக வாசகர்களின் மீது அவர்களின் ரசனையை மீறி தேவையில்லாதக் கருத்துகளைத் திணிக்கின்றன. கொடுக்கப்படுகின்ற அறிக்கைகளையும் தேவைக்கேற்ப சில உண்மைகளை மறைத்தும் வெட்டியும் ஒட்டியும் சொந்த திணிப்பையும் கலந்து பிரசுரிப்பதை எத்தனைப் பேர் அறிந்திருப்பர். இவர்களைப் பொறுத்தமட்டில் பிரச்சனை ஓரிரு தினங்களில் முடிந்துவிடக் கூடாது. முடிந்தால் குறைந்த பட்சம் ஒரு மாதக் காலமாவது பிரச்சனை சூடு பிடித்து நின்றால்தான் தனக்கு வியாபாரம் ஓடும் என்ற நோக்கில் மூன்று நாளிதழ்களுக்குமே வணிகப் போட்டி. இவர்களின் போட்டாப்போட்டியில் தமிழ் வாசகர்கள் பலிகடா..! ஏற்கனவே குழம்பிப் போயிருந்த சமுதாயத்தை மேலும் குழப்ப இது போன்ற அறிக்கைகள் உதவி வருகின்றன.25 நவம்பருக்கு அடுத்து இந்திய சமுதாயத்தில் நிலவிவந்த ஒற்றுமை படிப்படியாகக் குறைந்து வருவதற்கு தமிழ் நாளிதழ்களும் ஒரு காரணம் என்று ஆணித்தரமாகக் கூறலாம். இவர்கள் அறிந்தோ அறியாமலோ, மக்களின் உண்மைப் போராட்டத்தை வேறெங்கோ திசை திருப்பிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். அம்னோ ஆதிக்கத்தை வெறுத்து அவர்களுக்கெதிராகப் போர்க் கொடி தூக்கிய தன்மானமுள்ள இந்திய சமுதாயம், இன்று கொள்கைகள் திசைத்திருப்பப்பட்டு "இது ஒரு தனிப்பட்ட சமுதாயப் பிரச்சனை" என்றத் தோரணத்தை உண்டு செய்துவிட்டது.

இத்தனைப் பிரச்சனைகளுக்கும் பகடைக் காய் நகர்த்துபவனாக விளங்கிய அம்னோவை நாம் தைரியத்துடன் எதிர்த்தோம், ஆனால் இன்று பலர் பின்வாங்குகின்றனர். உண்மையான போராட்டம் என்ன என்பதனை அவர்கள் அறிந்திருக்கவில்லை. சுயசிந்தனையற்று அரசியல் எனும் நாடகத்தில் காயடிக்கப்பட்ட ஒரு பகடைக் காயாக ஓய்ந்துவிட்டனர் பலர். ஆனால் தனக்குத்தானே அடித்துக் கொள்வதில் வீரமும் தீரமும் இன்னும் ஓய்ந்துவிட வில்லை. நம் மலேசிய இந்தியர்களைப் பொருத்தமட்டில், அம்னோவுடன் தன் வீரத்தைக் காட்டுவதைக் காட்டிலும், தன் சொந்த சமுதாயத்தை எதிர்ப்பதிலேயே மும்முரமாக இருக்கின்றனர். அவர்களுக்கு அதுதான் சவுகரியம்.

நேற்று ஒரு தமிழ் நாளிதழில் 'மக்கள் சக்தியும் அரசியல் சாயமும்..!" என்ற ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. தமிழ் நாளேடுகளையும் சும்மா சொல்லக் கூடாது. அவர்களின் தைரியம் நம் சமுதாயம் அளவில்தான். இதே 'அம்னோவும் அரசியல் சாயமும்..!' எனும் தலைப்பில் யாராவது கட்டுரையை அனுப்பிப் பாருங்கள். சென்மத்திற்கு அந்தக் கட்டுரை எந்த தமிழ் நாளிதழிலும் வெளிவராது. காரணம் இதுபோன்ற தலைப்பைப் போட்டதற்கே இவர்களின் காப்புரிமை பறிக்கப்பட்டிருக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில் பலர் தங்களுடைய போராட்டம் என்ன என்பதனை மறந்துவிட்டு, மீண்டும் தான் முன்பு ஊறிய அதேக் குட்டையில் குதித்து சொந்த சமுதாயத்தைக் கூறு போடுகிறார்கள். எந்த ஒரு போராட்ட இயக்கமாக இருந்தாலும், அது ஆரம்பத்தில் கண்டிருந்த வீரியத்திலிருந்து சற்று பலவீனமடையும் காலக்கட்டம் வரும். உலக சரித்திரத்தில் பலப் போராட்டங்களை நாம் எடுத்துப் படித்தால் நாம் விளங்கிக் கொள்வது இதுதான். அதே வேளையில், இந்த போராட்ட இயக்கங்களுக்கு என்றுமே தடைக்கல்லாக அமைபவை அரசியல் கட்சிகள்தாம். அவை திட்டமிட்டு நகர்த்தும் சில பகடைக் காய்களில், பொதுநலத்தை முன்னின்று போராடும் பல இயக்கங்கள் திசைமாறிப் போனக் கதை பல உண்டு. அதுபோல 'இண்ட்ராஃப் மக்கள் சக்தி' எனும் மலேசிய இந்தியர்களின் உரிமைக் குரலியக்கம் தற்போது அரசியல் சிக்கலில் சிக்கிக் கொண்டு வெளிவரத் திணறிக் கொண்டிருக்கிறது.

சாமிவேலு போன்ற அரசியல் சாணக்கியர்கள் பலகாலம் அரசியலில் பழம் தின்றுக் கொட்டைப் போட்டவர்கள் என்று பலருக்குத் தெரியும். அவருடைய அனுபவத்தில் பல இயக்கங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கண்டிருப்பார். பெரும்பான்மையினரால் வெறுக்கப்பட்டாலும் இன்றுவரை உறுதியாக அரசியலில் அவரால் நீடிக்கமுடிகிறது என்றால், அதற்கு என்ன காரணம். நாற்பது ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இந்திய சமூகத்தை அவர் நன்கு படித்து வைத்திருக்கிறார். இண்ட்ராஃப் எனும் இயக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி விழிக்கச் செய்தபோது, சாமிவேலு ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்..

அதாவது...

" இந்திய சமுதாயத்தினர் ஒரு விடயத்தில் உணர்ச்சிவசப்பட்டார்கள் என்றால் கொதித்தெழுவார்கள், அவர்களை அடக்க முடியாது, ஆனால் அந்த உணர்ச்சி கொந்தளிப்பு இரண்டு மாதகாலத்தில் அடங்கிவிடும் தன்மையுடையது, அதற்குமேல் மீண்டும் என்னைத் தேடிதான் அவர்கள் வந்தாக வேண்டும். இது நான் என் அரசியல் வாழ்க்கையில் கண்ட உண்மை."

சாமிவேலுவை அரசியல் தீர்க்கதரிசி என்றே சொல்ல வேண்டும். ஒருவேளை அவர் இரண்டு மாதங்கள் என்று கூறியது மக்கள் சக்தியைப் பொறுத்தமட்டில் உண்மை இல்லை என்றாலும், உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிவிடும், மீண்டும் என்னைத் தேடிதான் வரவேண்டும் என்று அவர் கூறியது படிப்படியாக நாம் கண்டுவரும் உண்மையாகும்.

ஏன் மக்கள் மத்தியில் திடீர் மனமாற்றம்? 51 ஆண்டுகளாக தங்களுக்குள் அடக்கிவைத்துக் கொண்டிருந்த போராட்டக் குணம் எரிமலையென வெடித்து இன்று மீண்டும் உறங்கச் செல்லும் தறுவாயில் இருப்பதற்கென்ன காரணம்?

இண்ட்ராஃபின் ஆரம்பகால போராட்டத்தில் ஒன்றுசேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் மத்தியில் ஒரே எண்ணம், ஒரேக் கொள்கை, ஒரே விதமான உறுதி என்று இருந்த சமயம், எடுத்த காரியங்களில் அனைத்திலும் வெற்றியே கிடைத்து வந்தது. இந்திய சமுதாயத்தின் ஒருமித்த எழுச்சியைக் கண்ட அரசாங்கம் பயந்தது, எதிர்க்கட்சியோ ஆதாயம் தேடியது. அச்சமயம் இண்ட்ராஃப் இயக்கத்தினுள் இருவகை அரசியல் சக்திகள் தத்தம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளப் படிப்படியாக நுழையத் தொடங்கியது.

மக்கள் சக்தியை பிளவுப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் ஒரு சாராரும், மக்கள் சக்தியை அரசாங்கத்திற்கு எதிராக மேலும் தூண்டிவிட்டு தமக்கு சாதகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என மற்றுமொரு சாராரும் அட்டைகளைப்போல ஒட்டிக் கொண்டனர். ஆனால் எதிர்க்கட்சி நம்முடன் ஒட்டிக் கொண்டதுதான் நமக்கு வெளிப்படையாக தெரிந்ததேயன்றி, ஆளுங்கட்சியினர் நுழைத்துவிட்ட புல்லுருவிகள் எங்கு இருக்கிறார்கள் என்று பலருக்குத் தெரியவில்லை. கடந்த பொதுத் தேர்தல் வரை எதிர்க்கட்சிக்கும் இண்ட்ராஃபிற்கும் இருந்த தொடர்பு, பொதுத் தேர்தலுக்குப் பின் சற்று மங்க ஆரம்பித்த வேளையில்தான், ஆளுங்கட்சி புல்லுருவிகள் தத்தம் பகடைக் காய்களை மெல்ல நகர்த்தத் தொடங்கினார்கள்.

இண்ட்ராஃப் தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறைக்கும் மற்றொருவர் லண்டனுக்கும் சென்றுவிட்டப்பின், அவர்களை நம்பி போராட்டத்தில் குதித்த மக்களுக்கு தலைமைத்துவம் இல்லாமல் போராட்டமே ஒரு கேள்விக் குறியாக இருந்த சமயம்தான், திரு.வேதமூர்த்தியின் கட்டளையின் பேரில் பத்து இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதுவரையில் பிரார்த்தனை, உண்ணா நோன்பு, அமைதி மறியல் என இண்ட்ராஃபின் செயல்பாடுகள் தொடர்ந்து வந்தாலும், மக்களுக்கு கடந்த 13-வது பொதுத் தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. எதிர்க்கட்சிகள் ஐந்து மாநிலங்களை தன்வசம் கொண்டு வந்ததும், மக்களுடைய எதிர்ப்பார்ப்பு அரசியல் ரீதியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சியின் வசம் உள்ள ஐந்து மாநிலங்களிலும் இந்தியர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என அம்மாநில அரசாங்கங்களை வலியுறுத்தத் தொடங்கினர். சிலர் வெளிப்படையாகவே அரசியலில்வாதிகளுடன் நெருக்கமானத் தொடர்புகளை வைத்துக் கொண்டனர், சிலர் பதவிகளையும் கேட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. எதிர்க்கட்சி என்றால் மக்கள் சக்தி, மக்கள் சக்தி என்றால் எதிர்க்கட்சி என்று எண்ணும் அளவுக்கு இவர்களின் போக்கு இருந்து வந்தது. பெரும்பாலான இந்திய மக்களுக்கும் இவர்களோடு நெருக்கமாக இருப்பதை சவுகரியமாகக் கருதி வந்தார்கள். அதேச் சமயம் உண்மைப் போராட்டத்தில் இருந்தவர்கள் பலர் இச்செயலைக் கண்டிக்கத் தொடங்கினர்.

நாளடைவில் இதுவே ஒரு மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. இண்ட்ராஃப் என்ற உணர்வு மேலோங்கியிருந்தாலும், இவ்வியக்கத்தில் அரசியல் வெகுவாக நுழைந்துவிட்டதைக் கண்டித்து பலர் மெல்ல விலக ஆரம்பித்தனர். இவர்களைப் பொறுத்தவரையில் 18 அம்சக் கோரிக்கைகளுக்காக நாம் எடுத்து நடத்திய போராட்டம் அரசியலால் வீணாகிப் போகக் கூடாது என்பதுதான். இதற்கிடையில் கமுந்திங் சிறையில் ஐவருக்குள்ளும் ஒற்றுமை பிளவுபட்டுள்ளது என்ற செய்தி கசிய, ம.இ.கா இவ்விடயத்தைப் பெரிதுப்படுத்தத் தொடங்கியதும் இவர்களுக்குள் புகைந்துக் கொண்டிருந்த சினத்தை மெல்ல தூபம் போட்டு அதிகப்படுத்தியது தமிழ் நாளேடுகள்தாம். இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கு மத்தியில் சிலக் கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் கண்ட சில பொறுப்பற்றவர்கள் உடனே நாளிதழ்களின்வழி அறிக்கைவிடத் துணிந்தனர். இச்சமயத்தில்தான் சிறுசிறு கருத்து வேறுபாடுகளைக்கூட பெரிதுப்படுத்தி அறிக்கைகள் வெளிவந்தன.

இந்நிலையில் இண்ட்ராஃப் இயக்கத்தை அரணாக இருந்து காக்க வேண்டிய ஒருங்கிணைப்பாளர்கள், இயக்கத்தின் போராட்டத்தை தற்காத்து அறிக்கை வெளியிட்டனர். இது இன்றுவரைத் தொடர்ச் சங்கிலியாக நீட்டித்துக் கொண்டுவருவதற்குக் காரணம் அரசியலும், அரசியல்வாதிகளின் கைப்பாவையாக விளங்கும் தமிழ் நாளேடுகளின் வணிக நோக்கமும்தான். கடந்த காலங்களைவிட தற்பொழுது இண்ட்ராஃப் தொடர்பான அறிக்கைகள் அதிகமாக வெளிவருகின்றன. அண்மைய சில நாட்களாக தமிழ் நாளேடுகளில் பரபரப்பாக வெளிவரும் செய்திகள் என்றால் அது இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலைக் குறித்தும், சாமிவேலுவின் பங்கும்தான்.

சாமிவேலு எதற்கு பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பதே கேள்வி. உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் பலராலும் வெறுக்கப்படும் ஒரு கொடுங்கோல் சட்டமாக இருந்தாலும், அது தற்போது நடப்பில் இருந்து வரும் சட்டம். சட்டத்திற்குக் கீழ்தான் அனைவரும், அது பிரதமராக இருந்தாலும் சரி. பிரதமரைச் சந்தித்த சாமிவேலு என்ன கேட்டிருக்கிறார்? வருகின்ற தீபாவளிக்குள் ஐவரையும் விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பல அரசு சார்பற்ற இயக்கங்கள் ஆதரவு கொடுத்து வருகின்றன. துணையமைச்சர் முருகையா துணைப்பிரதமரைச் சந்தித்தபோது, உள்துறை அமைச்சர் சையட் அமீட் அல்பார் இவ்விவகாரம் தொடர்பில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

ஆனால் இவர்கள் பிரதமரைச் சந்தித்து ஐவரின் விடுதலைக் குறித்து விவாதிப்பதில் இண்ட்ராஃப் இயக்கத்தினருக்கு முற்றிலும் சம்மதம் இல்லை. இவை அனைத்தும் அரசியல் நாடகம் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. இதனை ஆராய்ந்தால் உண்மையென நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். ஆனால் இண்ட்ராஃப் தலைவர்களின் மனைவிமார்களில் சிலருக்கு இக்கருத்தில் உடன்பாடு இல்லை. தங்கள் கணவர்கள் விரைவில் விடுதலையாதை மட்டுமே அவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர். எத்தரப்பினர் விவாதித்தால் என்ன? அது ம.இ.காவாக இருக்கட்டும், இண்ட்ராஃபாக இருக்கட்டும், கணவர்களின் விடுதலைதானே முக்கியம் என்பது அவர்களின் வாதம்.

அவர்கள் இண்ட்ராஃப் தலைவர்களின் மனைவிகள் என்ற முறையில்தான் தங்களுடைய கருத்துகளை முன்வைக்கின்றனர். எனவே அது தவறு இல்லை. ஆனால் இண்ட்ராஃப் போராட்டவாதிகள் என்ற முறையில் அவர்கள் அப்படிக் கருத்துரைத்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காது. சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டு வெளிவருவதற்கு இண்ட்ராஃப் தலைவர்களும் நிச்சயம் சம்மதிக்கமாட்டார்கள். அனைவருமே தங்களை முறையாக நீதிமன்றத்தில் கொண்டு வந்து விசாரிக்குமாறு கேட்கிறார்களே தவிர, கெஞ்சிக் கூத்தாடி வெளிவரவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இல்லை. நடப்பில் உள்ள சட்டம் என்பதால், அதனை முதலில் அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். காலத்திற்கொவ்வாத சட்டத்தினால் பல குடும்பங்கள் துயருருவதைச் சுட்டிக் காட்டி இச்சட்டத்தை அகற்ற அனைவரும் ஏகமனதாக முடிவு செய்ய வேண்டும்.

இதனை ம.இ.கா பிரதமரிடம் எடுத்துக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அண்மையில் இரு சீனர்கள் இசா வில் கைதானதும் ம.சீ.ச மற்றும் எதிர்க்கட்சிகள் அம்னோவிற்கு எதிராகக் குரல் கொடுத்தன. ம.சீ.ச பாரிசானை விட்டு வெளியேறும் நிலைமை வரும் என்ற அச்சத்திற்குள்ளான அம்னோ தொடர் நெருக்கடியால் அவர்களை விடுதலைச் செய்தது. அக்கட்சிகளைப் பொருத்தமட்டில் இசா சட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற முடிவில்தான் உள்ளன. சாமிவேலு இசா வை மறுபரிசீலனை செய்யக் கோராது, கொல்லைப்புற வழியாக இண்ட்ராப்ஃ தலைவர்களை வீட்டுக்கு அனுப்பு என்று கெஞ்சி இருக்கிறார். அவருடைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் அவருக்குத் தெரிந்த சட்டம் இதுதான்.

ஒருவேளை இண்ட்ராஃப் தலைவர்கள் விரைவில் விடுதலையானால், அவ்விடுதலையானது பிரதமரின் சுயவிருப்பிற்கேற்ப கொடுக்கப்பட்ட விடுதலை என்பதால், அதனை சட்டத்திற்கு புறம்பானது என்றே கொள்ள வேண்டும். சட்டம், நீதி என்று பேசிவிட்டு இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலையை சட்டத்திற்குப் புறம்பாக அமல்படுத்தக் கூடாது.

ஒன்று இசா வை அகற்றுங்கள், இண்ட்ராஃப் தலைவர்களை விடுவியுங்கள்.

அல்லது,

இண்ட்ராஃப் தலைவர்களை முறையாக நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து நீதி விசாரணை செய்யுங்கள்.

கொல்லைப்புற வழி எங்களுக்குத் தேவை இல்லை, காரணம் அது உண்மையான போராட்டம் கிடையாது.

இன்று உலகின் பல தலைச்சிறந்த அரசியல்வாதிகளின் வேத நூல் என்று சொல்லப்படும் மாக்கியாவேலியின் 'தே ப்ரின்சு', மகாபாரதத்தில் வரும் கணிகனின் 'கணிக வாக்கியம்' என்ற சாஸ்திர நூல்கள் என்ன சொல்கின்றன..

"உன் அரசியல் வாழ்க்கைக்கு எதிரே எவர் வந்தாலும் தந்திரத்தால் அவர்களை வீழ்த்திவிடு! அது உன் உற்ற நண்பனாயினும் சரி, பெற்றத் தாயாகினும் சரி!"

இந்நூல்களை நம் அரசியல்வாதிகளும் கற்றிருக்கிறார்கள். எதிரியை நம்ப வைத்தாவது கழுத்தறுக்க வேண்டிய வழிகளை அவை வலியுறுத்தி புகட்டுகின்றன. எனவே உரிமைப் போராட்டவாதிகள் என்றும் அரசியல்வாதிகளிடமிருந்து சற்று விலகியிருப்பது நல்லது. இல்லையேல் போராட்டத்திற்கும் கொள்கைக்கும் கலங்கம் ஏற்படும் நிலைமை நமக்கு ஏற்படலாம், தற்போது நடந்துக் கொண்டிருப்பதைப்போல...

போராட்டம் என்பது தனிமனிதனின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதல்ல..!
கொள்கைகளுக்காகவே போராடுபவன்தான் உண்மையான போராட்டவாதி..!
தலைவர்கள் இன்றிருக்கலாம், நாளை இல்லாமல் போகலாம், ஆனால் கொள்கை என்றுமே இருக்கும்..!

எனவே, கூட்டம் கூட்டமாக சில தலைவர்கள் பின்னால் சென்று சால்ரா அடிப்பதில் உண்மைப் போராட்டம் அடங்கிவிடாது.

சிலரின் நடத்தை சரியில்லை என்று போராட்டத்திலிருந்து ஒதுங்குவதும், ஊடகங்கள் குழப்பிவிட்ட நிலையில் போராட்டத்தை கைவிடுவதும், லண்டன் வழக்கு வெற்றிப் பெறாது போயின் போராட்டத்தைக் கைவிடுவதும், சிறைக்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து அலைந்து அலுத்துப்போய் போராட்டத்தை தூக்கி எறிவதும், வெறும் பேச்சளவில் போராட்டத்தைப் பற்றி கருத்துரைப்பதும் உண்மையான போராட்டவாதிக்கு அழகல்ல.

கொள்கையின் மீது நம்பிக்கைக் கொண்டு இண்ட்ராஃப் இயக்கத்தை தொடர்ந்து வழி நடத்துங்கள்..! தமிழ் பத்திரிக்கைகளில் வெளிவரும் தவறான அறிக்கைகளுக்கு அடிமையாகாதீர்கள்..!

இண்ட்ராஃபை உடைத்துக் காட்டுவேன் எனச் சபதம் பூண்டவர்களை வெற்றிக் கொள்ளச் செய்யாதீர்கள். அரசியல் சாணக்கியர்கள் நம் போராட்டத்தினை திசைத் திருப்ப அனுமதிக்காதீர்கள், நம் எதிரி இந்தியச் சமுதாயமோ, அதனைச் சார்ந்த அரசியல் கட்சிகளோ கிடையாது..! நம் ஒரே எதிரி. கடந்த 51 ஆண்டுகாலமாக நம்மை அடிமைப்படுத்தி இனவாத அரசியலை நடத்திவரும் அம்னோ..! அம்னோ..! அம்னோ...! இக்கருத்தானது திரு.உதயகுமார் நாடெங்கிலும் நடந்த கருத்தரங்குகளில் கூறியது என்பது நினைவில் இருக்கட்டும்..!

அறிக்கை வீரர்களே முடிந்தால் அம்னோவிற்கு எதிராக அறிக்கை விடுங்கள்.. பார்க்கலாம்...!


வாழ்க இண்ட்ராஃப்..!

Read more...

சுதந்திரச் சதுக்கத்தில் விடுதலை கோரிக்கை..

>> Wednesday, September 24, 2008இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் மெழுகுவர்த்தி ஏந்தியப் பேரணி

இடம் : 'மெர்டேக்கா' சதுக்கம்

திகதி : 27 செப்தெம்பர் 2008 (சனிக்கிழமை)

நேரம் : இரவு மணி 7.00

பி.கு: அனைவரும்,மெழுகுவர்த்தியையும் இண்ட்ராஃபின் சிறியக் கொடியையும் உடன் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இண்ட்ராஃப் மக்கள் சக்தி மீண்டும் ஒரு பேரணிக்கு தயாராகி விட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக கமுந்திங் தடுப்புக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலைக்காக அரசாங்கத்திடம் பலவகையில் வேண்டுகோள் விடுத்திருந்தும், அனைத்தும் விழலுக்கு இழைத்த நீராய் பயனற்றுப் போனது.

அதே சமயம், சுயலாபத்திற்காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலை குறித்து அண்மையில் பல தரப்பினர் பேசிக் கொண்டு வருவதையும், அரசாங்கம் அவர்களுக்கு செவிசாய்ப்பதுபோல் பாசாங்கு காட்டுவதையும் கண்டு நாம் ஏமார்ந்துவிடக் கூடாது. அவர்கள் நினைத்தால் ஆதரிப்பார்கள், அவசியம் இல்லாத பட்சத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள்.

'மக்கள் சக்தி' என்று வரும்பொழுது மக்கள்தான் களத்தில் இறங்கி தங்களின் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும். எனவே, நாம் அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும்!

எதிர்வரும் 27 செப்தெம்பர் மாதம் மறவாமல் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் அனைவரும் மெர்டேக்கா சதுக்கத்தில் அமைதியான முறையில் ஒன்று கூடுவோம். இண்ட்ராஃப் தலைவர்கள், ராசா பெத்ரா மற்றும் பிற இசா கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி அரசாங்கத்தை வலியுறுத்துவோம், வாரீர்...

இப்பேரணியில் கலந்துக் கொள்ளவிரும்புபவர்கள் அவரர் மாநில ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புக் கொண்டு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். மறவாமல் ஆரஞ்சு நிற உடை அணிந்துக் கொண்டு, மெழுகுவர்த்தியையும் இண்ட்ராஃப் சிறு கொடியையும் உடன்கொண்டு வாருங்கள். சாலை விதிமுறைகளை மீறாமல் கண்ணியமாக நடந்துக் கொள்ளும்படி ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டம் தொடரும்...

Read more...

பிரதமருக்கு வைஷ்ணவி மகஜர்..

>> Tuesday, September 23, 2008

வருகின்ற அரி ராயா பெருநாளன்று கெப்பாலா பாத்தாசில் நடைப்பெறவிருக்கும் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் திரு.வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவி 10,000 இண்ட்ராஃப் உறுப்பினர்களோடு செல்லவிருக்கிறார்.

நேற்று மதியம் இரண்டு மணியளவில், குழந்தை வைஷ்ணவியும் சில இண்ட்ராஃப் உறுப்பினர்களும் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று மகஜர் ஒன்றினைச் சமர்ப்பித்துவிட்டு வந்தனர்.

"நாங்கள் அனைவரும் தங்களின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொள்ள வருகிறோம். வாழ்த்துகளைத் தெரிவிக்கும் நோக்கத்தில் வருகை புரியவிருக்கும் எங்களுக்கு எந்த ஒரு தடங்கலும் வராமல் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என அம்மகஜரில் குழந்தை வைஷ்ணவி பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்மகஜரைப் பெற்றுக் கொண்ட பிரதமரின் செயலாளர், இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொள்ள பிரதமர் நிச்சயம் தடை விதிக்கமாட்டார் என உத்தரவாதம் கொடுத்தார்.

மேலும் தகவல்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுக : தீபாராயா - இண்ட்ராஃபின் அடுத்த நிகழ்வுRead more...

27 இண்ட்ராஃப் போராட்டவாதிகளுக்கு நிதியுதவித் தேவைப்படுகிறது..

>> Monday, September 22, 2008


மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளை உலகிற்கு படம்பிடித்துக் காட்டிய 25 நவம்பர் இண்ட்ராஃப் பேரணியன்று கைதான 27 போராட்டவாதிகளுக்கு, அண்மையில் தலா ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை நீதிமன்றம் விதித்திருக்கிறது. பலமுறை நீதிமன்றத்திற்கு சென்றுவர வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்ட இப்போராட்டவாதிகளுக்கு, நீதிபதியின் ஆணை மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், பலவிதமான மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கும் இவர்களுக்கு நிதிப் பிரச்சனையும் ஒருபுறம் வாட்டி வருகிறது.

இழந்த உரிமைகளை மீட்கப் போராட துணிந்தவர்களை மனோவியல் ரீதியில் பலவீனப்படுத்த அம்னோ கையாண்ட இழிவான உத்தி மிகவும் கண்டிக்கத்தக்கது. வீட்டிற்கும் நீதிமன்றத்திற்கும் பலமுறை அலையவிட்டு, நீதிமன்ற வழக்கை பல மாதங்களுக்கு இழுத்தடித்து, அபராதத்தை அவர்கள் தலையில் கட்டி அவர்களை பலவிதமான மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவர்கள் வேலையும் பறிபோகும் நிலைக்கு கொண்டுவந்துவிட்ட அம்னோவையும் அதன்கீழ் செயல்பட்டுவரும் நீதிமன்றத்தையும் நாம் மன்னிக்கவே கூடாது.

இவர்களை இப்படி தொடர்ந்து தண்டித்தால், இனி போராட்டம் மறியல் என வீட்டு வாசல் வெளியேகூட தலைக்காட்ட மாட்டார்கள் என்ற எண்ணம் அம்னோவிற்கு..!

அம்னோவின் பகல் கனவை நாம் உடைத்தாக வேண்டும்..! போராட்டம் என்று இறங்கிவிட்டாலே நாம் அனைவரும் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகி விட்டோம். எனவே, பேரணியில் கைதானவர்களை உங்களின் குடும்ப உறுப்பினராக நினைத்து அவர்களின் குடும்பச் சுமையைக் குறைக்க நிதியுதவி செய்யும்படி இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்.

27 போராட்டவாதிகளின் அபராதத் தொகையான ரி.ம 27,000-ஐ நீதிமன்றத்திற்குச் செலுத்த பொதுமக்களிடமிருந்து நிதியுதவி எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரி.ம27,0000க்கும் மேல் நிதி திரண்டால், அந்நிதியை பேரணியில் கைதாகி அபராதம் விதிக்கப்படாத மற்ற போராட்டவாதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். தொடர்ந்து நடைப்பெறவிருக்கும் இவ்வழக்கில் இண்ட்ராஃப் போராட்டவாதிகளுக்கு மேலும் என்னென்ன சோதனைகளை அம்னோ வழங்கவிருக்கின்றதோ தெரியவில்லை, எனவே அவர்களனைவருக்கும் நிதியுதவி கிடைத்தால், அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சற்று மனச்சாந்தியோடு அன்றாட வாழ்க்கையை நடத்துவர்.

கீழ்கண்ட வங்கிக் கணக்கில் உங்களின் நிதியுதவியை காசோலையாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.

வங்கிக் கணக்கில் திரளும் நிதிகளின் முழுத் தகவல்கள் தமிழ் நாளேடுகளில் இடம்பெறும். இந்நிதி திரட்டு குறித்த முதல் அறிக்கை வருகின்ற அக்டோபர் மாதம் 20-ஆம் திகதி தமிழ் நாளேடுகளில் பிரசுரிக்கப்படும்.

வங்கி : பப்ளிக் வங்கி (PUBLIC BANK)

பயனாளரின் பெயர் : – பி.தர்மராசு & அரிதாசு வேலு (இணை சேமிப்புக் கணக்கு)

வங்கி கணக்கு எண் – 4-5235622-34

அலைப்பேசி எண்கள் : 019- 330 5197 , 012-3323490


அம்னோ, அதன்கீழ் செயல்படும் நீதித்துறை, காவல்த்துறை போன்றத் தரப்பிலிருந்து அச்சுறுத்தலையும் உளவியல் ரீதியான தண்டனைகளையும் கண்டு அனைவரும் மனச்சோர்வு அடைந்துவிட வேண்டாம். நம்முடைய மனச்சோர்வு அம்னோவின் வெற்றியென ஒரு தெளிவு நமக்குள் வேண்டும்.

இதுவரை நீதிமன்ற வழக்கில் இண்ட்ராஃப் போராட்டவாதிகளுக்கு தங்கும் இடம், உணவு, பணம் கொடுத்து உதவிய நல்ல உள்ளங்களுக்கு இவ்வேளையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இண்ட்ராஃப் இயக்கத்தின் உயிர்ப்பை தொடர்ந்து தோல்கொடுத்து வழிநடத்துவோமாக....

போராட்டம் தொடரும்...

Read more...

உலு லங்காட் ஆலயம் உடைப்பு!! மக்கள் கூட்டணியின் நாடகம்!!

எண் 3,சாலான் பாரு (உலு லங்காட் சாலை), உலு லங்காட், கம்போங் தாசேக், 68000 அம்பாங், சிலாங்கூர் எனும் முகவரியில் அமைந்திருந்த சிறீ மகா காளியம்மன் ஆலயம் கடந்த 9-ஆம் திகதி செப்தெம்பர் மாதம் அம்பாங் ஜெயா நகராட்சி மன்றத்தினரால் எந்தெவொரு முன்னறிவிப்புமின்றி உடைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் மக்கள் கூட்டணியைச் சார்ந்தவர்கள் ஆலய நிர்வாகத்தினரிடம், "இவ்விடயத்தை இண்ட்ராஃப் இயக்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டாம், அவர்களுக்குத் தெரிந்தால் மக்கள் கூட்டணியின் செல்வாக்கு குறைந்துவிடும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். பூபாலன் சிறீதரன் அம்பாங் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளருக்கு இவ்விடயம் கடந்த 19-ஆம் திகதிதான் தெரியவந்துள்ளது. இண்ட்ராஃபிற்கு இவ்விடயம் தெரிய வந்ததும் மக்கள் கூட்டணியின் இந்தியப் பிரதிநிகள் சிலர் பூபாலனை அழைத்து பிரச்சனையை பெரிதுப்படுத்தாது கண்ணும் காதும் வைத்ததுபோல் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கேட்டுக் கொண்டதாக பூபாலன் தெரிவித்தார்.

தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.செயதாசு நேற்று ஆலய நிர்வாகத்தினரையும் மக்கள் கூட்டணியின் இந்தியப் பிரதிநிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் ஆலயத்திற்கு புதுநிலம் கொடுத்து புது ஆலயத்தை எழுப்பித்தருவார்கள் என மக்கள் கூட்டணியின் இந்தியப் பிரதிநிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

இனிமேல் இவர்களின் வாக்குறுதிகளை நம்பி புண்ணியம் இல்லை. எழுத்துப் பூர்வமாக எதையும் கேட்டால்தான் சரிபடும்..! பாரிசானுக்கு விழுந்த அடியை மக்கள் கூட்டணி மறக்க வேண்டாம்..!!


Read more...

தீபாராயா - இண்ட்ராஃபின் அடுத்த நிகழ்வு

>> Sunday, September 21, 2008


இண்ட்ராஃப் இயக்கத்தின் அடுத்த நிகழ்வாக, தீபகற்ப மலேசியாவில் வட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் 'அரி ராயா' பெருநாளன்று நடைப்பெறவிருக்கும் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில், நாம் அனைவரும் கலந்துக் கொண்டு அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பது இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தியின் கட்டளையாகும்.

"என்னப்பா இது ! போயும் போயும் பிரதமரோட திறந்த இல்ல உபசரிப்புக்கா நாம போகணும்..! அதுல வாழ்த்து வேற சொல்லணுமாக்கும்..! இப்படி எல்லாரும் அங்கே போனோன்னா இண்ட்ராஃப் பாரிசானுக்கு ஆதரவு கொடுக்குதுன்னு கதை கட்டிற மாட்டானுங்களா..?" என்று நீங்கள் மனதார கடிந்துக் கொள்வது நமக்குத் தெரிகிறது.

ம்ம்ம்... கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையை முதலில் வாசியுங்கள், அதன் உள்ளர்த்தம் உங்களுக்கு விளங்காவிடில், உங்கள் வசிப்பிடத்தின் இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புக் கொண்டு மேல் விவரத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாது அமைதியான முறையில் நாம் அனைவரும் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொண்டு அவருக்கு 'அரி ராயா' வாழ்த்துகளைத் தெரிவிப்போமாக.

பினாங்கு மாநிலத்தில் கெப்பாலா பாதாசில் பிரதமர் இல்லம் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இரு இடங்களில் பிரதமரின் 'அரி ராயா' திறந்த இல்ல உபசரிப்பு நடைப்பெறவுள்ளது. இவ்விரு நிகழ்வுகள் நடைப்பெறும் திகதியையும் இடத்தினையும் ஒருமுறை இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர்களிடம் விளக்கம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு நடைப்பெறும் இடம், திகதி, நேரம் போன்றத் தகவல்கள் பின்பு அறிவிக்கப்படும்.

வட மாநிலங்களான பெர்லீசு, கெடா, பினாங்கு, பேராக் மற்றும் கிழக்கு கரை மாநிலமான திரெங்கானு ஆகிய மாநிலங்களில் உள்ள இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கெப்பாலா பாதாசில் நடைப்பெறும் திறந்த இல்ல உபசரிப்பிற்குச் செல்ல வேண்டும்.

மத்திய, தென் மாநிலங்களான சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், பகாங்கு, நெகிரி செம்பிலான், மலாக்கா, சொகூர் ஆகிய மாநிலத்தில் உள்ள இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கோலாலம்பூரில் நடைப்பெறும் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விரு நிகழ்வுகளில் முடிந்த மட்டும் கலந்துக் கொள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும், ஒருவேளை சாத்தியப்படாவிடில் மாநில வாரியாக மந்திரி புசார் இல்லங்களில் நடைப்பெறும் திறந்த இல்ல உபசரிப்பிலாவது கலந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 2,000 ஆதரவாளர்கள் வீதம், பினாங்கு, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் நடைப்பெறவிருக்கும் திறந்த இல்ல உபசரிப்பில் குறைந்தது 10,000 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் திரள வேண்டும் என்பது இண்ட்ராஃபின் குறிக்கோளாக உள்ளது. இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவி பிரதமருக்கு 'அரி ராயா' வாழ்த்து அட்டையையும் அதனோடு இணைத்து இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்கக் கோரும் மனுவினையும் சமர்ப்பிக்கவுள்ளார்.

அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்களின்வழி போக்குவரத்திற்கான வசதிகள் தொடர்பாக அணுகலாம்.

முக்கியக் குறிப்பு : பிரதமரின், மந்திரி புசார்களின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொள்வோர் கண்டிப்பாக 'இண்ட்ராஃப்' பெயர்ப் பதித்த ஆரஞ்சு நிற உடையினையே அணிந்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

'அரி ராயா' வாழ்த்துகளை சமர்ப்பிக்கும் நோக்கில் படையெடுக்கும் நமக்கு காவல்த் துறையினரிடமிருந்தோ, கலகத் தடுப்புப் படையினரிடமிருந்தோ அச்சுறுத்தல் வராது என நம்புகிறோம். மீறி நம் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க அவர்கள் முயன்றால் முன்னெச்சரிக்கையாக நாம் எடுக்கக் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதனை உங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

***

இதனையடுத்து, வருகின்ற தீபாவளித் திருநாளை மலேசிய இந்துக்கள் மிதமான முறையில் கொண்டாட வேண்டும் என்பது இண்ட்ராஃபின் வேண்டுகோள் ஆகும். மலேசிய இந்தியர்களின் உரிமைக்காகப் போராடிய நம் இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் சிறையில் வாடும் இவ்வேளையில், தீபாவளித் திருநாளன்று அனைவரும் ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

"என்னப்பா இது..! வருசத்துக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு வருது தீபாவளி, அதையும் சந்தோசமா கொண்டாடக் கூடாதா...?" என்று கேட்கிறீர்கள்தானே..

இவ்வருட தீபாவளி குழந்தைகளுக்கான தீபாவளியாக இருக்கட்டுமே, பெரியவர்கள் சற்று மிதமாக இத்திருநாளைக் கொண்டாடலாமே.. நம் வலிகளை தன் வலிகளாக ஏற்று இன்று தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட முடியாது தவிக்கும் நம் இண்ட்ராஃப் தலைவர்களுக்காக இதைக் கூட செய்யவில்லையென்றால் எப்படி...?

குழந்தைகளுக்கு வழக்கம்போல் புத்தாடைகள் வாங்குங்கள், ஆனால் முடிந்தால் ஆரஞ்சு நிறத்திலான உடைகளை வாங்குங்கள். உங்களுக்கும் புத்தாடைகள் வாங்க எண்ணம் கொண்டால் ஆரஞ்சு நிறத்திலேயே வாங்கி தீபாவளியன்று அணியுங்கள். பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்ற சட்டம் இருந்தாலும், வருடா வருடம் பட்டாசு சத்தம் கேட்காமல் இருக்காது இல்லையா, எனவே நீங்கள் சிக்கனம் கருதி பட்டாசுகளை குறைவாகவே வாங்குங்கள். வருடா வருடம் திறந்த இல்ல உபசரிப்பு நடத்துபவரா நீங்கள்..? இவ்வருடம் திறந்த இல்ல உபசரிப்பிற்குப் பதில் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துக் கொள்ளுங்களேன்.

"ஒருவேளை தீபாவளிக்கு முன்னதாகவே இண்ட்ராஃப் தலைவர்கள் விடுதலையானால்...?"

தீபாவளிய ஒரு கலக்கு கலக்கிருங்க...! :)

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளை நகல் எடுத்து அனைவருக்கும் விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்

ஆங்கிலம்


போராட்டம் தொடரும்..

Read more...

திரேசா கோக் விடுதலை..!

>> Friday, September 19, 2008


இன்று பிற்பகல் மணி 1 அளவில் செபுத்தே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். திரேவர்சு காவல் நிலையத்தில் விடுதலைக்கான சமாச்சாரங்களை முடித்துக் கொண்டு தனது வழக்கறிஞரான சங்கரா நாயருடனும், தனது உதவியாளரான மேண்டி ஊய்யுடன் பிற்பகல் 1.40 மணியளவில் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தார்.

ஈப்போவில் மதிய உணவை உட்கொண்டிருந்த வேளையில், மதியம் 12.56 மணியளவில் தமக்கு திரேசா கோக் கைப்பேசியிலிருந்து அழைப்பு வந்ததாக திரு.லிம் கிட் சியாங் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். திரேசா கோக்கை விரைவில் விடுதலை செய்தது தமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சின் சியூ நாளிதழ் நிருபருக்கு அடுத்து திரேசா கோக் ஒருவாரக் காவலில் இருந்து இன்று விடுதலையாகியிருக்கும் வேளையில் ராஜா பெட்ராவின் நிலைமைதான் இன்னும் நமக்குத் தெரியவில்லை. கூடியவிரைவில் அவரும் இண்ட்ராஃப் தலைவர்களும் விடுதலையாக வேண்டும் என இறைவனைப் பிராத்திப்போம். நாடு முழுவதிலும் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் தொடர்ந்து நடைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விடுதலை அடைந்த திரேசா கோக்கிற்கு வாழ்த்துகள்..

Read more...

நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம் !

>> Thursday, September 18, 2008


மக்கள் கூட்டணியின் தலைவர் அனுவார் இபுராகிம் இன்று பிதமருக்கு அனுப்பியக் கடிதத்தில், நாடாளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட வேண்டும், பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாம் கொண்டு வரவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்று அவர் நடத்திய நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் பேசுகையில், "11(3) நாடாளுமன்ற விதியின்படி அடுத்த செவ்வாய்க் கிழமைக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய சட்டம் அனுமதிக்கையில் பிரதமர் அச்சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும். அவர் நினைத்தால் அதனைச் செய்ய முடியும், சபாநாயகரிடம் அவசரக் கூட்டத்தை பற்றி தெரிவிக்க வேண்டியதுதான் அவர் வேலை. கடிதத்தில் அவசரக் கூட்டம் நடைப்பெற வேண்டிய திகதியையும் பரிந்துரை செய்துள்ளோம். முறையான பதிலை பிரதமரிடமிருந்து நான் எதிர்ப்பார்க்கிறேன்.

அப்படி அவருக்கு கட்சி தாவவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வேண்டும் என்றால் உடனடியாக நாடாளுமன்றக் கூட்டத்தை ஏற்பாடு செய்யட்டும். அங்கு நான் பட்டியலை வெளியிடுகிறேன். இதைவிடுத்து என்னால் வேறு என்ன செய்யமுடியும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? முன்கூட்டியே பெயர்ப்பட்டியலை வெளியிட்டு அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டுமா? இந்த சூழ்நிலையில் நான் அவர்களின் பெயர்களை வெளியிட்டேன் என்றால் என்ன நடக்கும் என்று எனக்கும் தெரியும். நாடாளுமன்ற அவசரக் கூட்டம் தொடங்கும் வரையில் எங்களின் பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர்களே கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் என்னை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதற்காக என்னை அவர்கள் கைது செய்ய வேண்டும், தகுந்த காரணம் அவர்களிடம் உண்டா? அரசாங்கத்தை புரட்டிப் போட என்னிடம் போதுமான அளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைவசம் இருக்கின்றனர். அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் எங்களையும் தற்போது இசாவின் கீழ் கைதாகியுள்ள திரேசா கோக் உட்பட, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர நடப்பு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்." என்று அவர் தன் கருத்தை வெளியிட்டார்.

ஏன் அக்டோபர் 13-ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்வரையில் காத்திருக்கக்கூடாது என்று நிருபர் ஒருவர் கேட்கையில், " தற்போது நாட்டின் பொருளாதார, அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டால் அத்திட்டம் ஒவ்வாது. எத்தனைக் காலம்தான் காத்திருப்பது. ஒரு பொறுப்பான அரசாங்கமாக இருந்திருந்தால் தற்போது நாட்டில் நிலவும் பங்கு சந்தை வீழ்ச்சியையும், பொருளாதார நெருக்கடியையும் சமாளிக்க என்ன செய்தனர். இதுவரையில் ஒரு நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்கவில்லை. இதனைப் பார்த்துக் கொண்டு நாங்கள் வெறுமனே இருந்துவிடப் போவதில்லை. முடிந்தால் நாளையே இதற்கு ஒரு முடிவு கட்டுவோம். பிரதமர் அப்துல்லா எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் நாங்கள் மாமன்னரைச் சந்தித்து நிலவரத்தை விளக்கி நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்வோம்" என்று அவர் கூறினார்.

***


இதற்கிடையில் இன்று பிரதமர் அப்துல்லா அகமது படாவி அனுவாரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "அக்டோபர் 13-ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என்று நாங்கள் முடிவெடுத்துவிட்ட நிலையில், திடீரென்று நோன்பு மாதத்தில் நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது சரிபடாது. அதோடு இன்று அனுவார் எனக்கு அனுப்பி இருந்த விண்ணப்பக்கடிதம் ஒரு முறையான கடிதமே அல்ல. அதற்கென்ற சில விதிமுறைகள் உள்ளன." என்று அவர் கூறியுள்ளார்.

அனுவாரை இசா சட்டத்தில் கைது செய்யக்கூடிய சாத்தியம் உள்ளதா என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கையில், "அனுவாரை இசாவில் கைது செய்யும் எண்ணம் எனக்கில்லை. நான் யாரையும் இசாவில் கைது செய்யவும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. அப்படி அவர் தம் மீது இசா சட்டம் பாயும் என்று பயந்தால், அவரின் குற்ற உணர்ச்சிதான் அதற்குக் காரணமாக இருக்கும்." என்று அவர் பதிலளித்தார்.

ரமடான் நோன்பு மாதத்தை காரணம் காட்டி நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தை நிராகரிக்கிறீர்களே, பிறகு எதற்கு அதே நோன்பு மாதத்தில் 54 நாடாளுமன்ற உறுப்பினர்களை தைவானிற்கு விவசாயக் கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்தீர்கள் பிரதமரே.. :)

கருத்துக்கணிப்பு முடிவுகள்..

Read more...

உதயகுமாரின் நீதிமன்ற விண்ணப்பம் தள்ளுபடி..!


கமுந்திங் தடுப்புக் காவலில் தமக்கு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை, அதனால் மருத்துவக் காரணங்களுக்காக தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று இண்ட்ராஃப் தலைவர் திரு.உதயகுமார் நீதிமன்றத்தில் கோரிய விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது.

தைப்பிங் மருத்துவமனையிலும் கமுந்திங் தடுப்புக் காவலிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமக்கு முறையாக மருந்து, சிகிச்சை மற்றும் சரிவிகித உணவு வழங்கவில்லை என்று திரு.உதயகுமார் தமது விண்ணப்பத்தில் குற்றஞ்சாட்டியிருப்பதன் தொடர்பில், அவரது வழக்கின் நீதிபதியான சுராயா திரு.உதயகுமாரின் குற்றச்சாட்டு ஏற்புடையதாக இல்லை எனக் கோரி விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார்.

திரு.உதயகுமாரின் உடல்நிலையை முறையாகப் பரிசோதித்து ஏற்ற மருந்துகளையும் வழங்கியதோடு உணவுத்திட்ட நிபுணரின் பரிந்துரைக்கேற்ப அவருக்கு பொருத்தமான சைவ உணவு தயாரித்து வழங்கப்பட்டதாகவும், உள்துறை அமைச்சும் முகாம் அதிகாரிகளும் பல்வேறு வாக்குமூலங்களின்வழி தெரிவித்து உள்ளனர்.

எட்வின் லிம் மற்றும் சுரேன் நிறுவனத்தினரின் மூலம் கடந்த மே 22இல் செய்த முதற்கட்ட விண்ணப்பத்தில் தம்மை உள்நாட்டு பாதுகாப்புச் சட்ட தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கக் கோரியதுடன் தமது நீரிழிவு மற்றும் நெஞ்சக நோய்களுக்கு சிகிச்சை பெறும் வகையில் தம்மை தேசிய இருதயக் கழகத்தில் சேர்க்க வேண்டுமெனக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய இருதய கழகத்தில் அரச தரப்பு மருத்துவர்கள் மூன்றாம் தரப்பினரின் நெருக்குதலுக்கு ஏற்ப தமக்கு சிகிச்சை வழங்குவார்கள் என்பதால், தாம் விரும்பும் மருத்துவர்களைக் கொண்டே வெளிநாட்டில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அது தனது உரிமை என்றும் அவர் விண்ணப்பித்திருந்தது நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது..!

உரிமையும் இழந்து இன்று முறையான சிகிச்சையும் மறுக்கப்பட்டு கமுந்திங் தடுப்புக் காவலில் வாடும் திரு.உதயகுமாரை நினைத்தால் இதயம் ஒரு கணம் கனக்கிறது.. :(

Read more...

'கீக் த ஃபெல்லா' வலைப்பதிவாளர் கைது!!!

>> Wednesday, September 17, 2008


படாவி தற்காப்பு அமைச்சை எடுத்ததுதான் எடுத்தார், 'கீக்தஃபெல்லா' எனும் வலைப்பதிவின் பதிவர் சியேட் அசீடி கோத்தா பாரு கிளந்தானில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாரிசான் அரசாங்கத்தை தனது கேலிச் சித்திரங்களின் வழியும் சினிமா விளம்பரங்களில் அரசியல் பிரமுகர்களின் படங்களை இணைத்து வெளியிட்டும் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சியேட்டின் மனைவி பாரியா இசாக்கை அணுகிக் கேட்டதற்கு, தம் கணவரை தேசநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்ததாகக் கூறினார். அண்மையில் அவர் மலேசியக் கொடியை தலைக் கீழாக வலைப்பதிவுகளில் இடம்பெறச் செய்யும் இயக்கம் ஒன்றினைத் தொடங்கி பலரை அவ்வாறு செய்யத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Read more...

மகாதீர் அம்னோவில் நுழைந்தால் பிரதமர் அனுவாரிடம் ஆட்சி ஒப்படைப்பாரா??

>> Saturday, September 13, 2008


பிரதமர் அப்துல்லா அகமது படாவி தற்போது தன் சொந்த ஆட்களினாலேயே குறிவைக்கப்பட்டுள்ளார். மலாய் இனத்தவரின் ஒற்றுமையை வலுப்படுத்தி, 16 செப்டம்பர் ஆட்சி மாற்றம் நடைப்பெறுவதைப் தடுப்பதற்காக தீட்டப்பட்ட சதித் திட்டங்கள், தற்போது இனங்களுக்கிடையிலான பூசல், அம்னோவிற்கும் இதர கூட்டணி கட்சிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் என்று உருமாறி நிற்கின்றன. பாரிசான் உச்ச மன்றக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பி.பி.பி கட்சித் தலைவர் கேவியசு நிருபர்களிடம், "என் பதினைந்து வருட அரசியல் அனுபவத்தில் இதுதான் பாரிசான் சந்தித்த மிகவும் மோசமான ஒரு நிலையாகும்.." என்று கருத்துரைத்துள்ளார்.

ஆம், தற்போது அப்துல்லா அகமது படாவியை பிரதமர் பதவியைக் கைவிடக் கோருவது அம்னோ மட்டுமல்ல, இதர பாரிசான் கூட்டணிக் கட்சிகளும்தான். தற்போது துன் மகாதீர் மீண்டும் அம்னோவிற்குத் திரும்ப சம்மதித்திருப்பது, படாவியின் பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. மகாதீர் அம்னோவில் மீண்டும் இணைவதைப் பற்றி அண்மையில் நிருபர்கள் படாவியிடம் கருத்துரைக்கக் கேட்ட போது அவர் வாயடைத்து போயிருந்தார். சரியாக அவரால் பதில் கூற முடியவிலை.


அனைத்தும் திட்டமிட்டப்படியே நடைப்பெறுகின்றன. உண்மையில், படாவியை பதவி இறக்கம் செய்யும் திட்டத்தில், புக்கிட் பெண்டேரா அம்னோ தலைவர் அகமது இசுமாயிலும் சம்பந்தப்பட்டுள்ளார். அகமது இசுமாயில் சீனர்களை, "அமெரிக்க யூதர்களைப் போல் நடந்துக் கொள்ள வேண்டாம்!" என்று இனவாதத்துடன் பேசிய அதே நாளில், சிலாங்கூர் மாநில முன்னால் மந்திரி புசார் கீர் தோயுவும் தமது வலைப்பதிவில், " அப்துல்லா தான் வகிக்கும் பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக இறங்காவிட்டால் மே 13 இனக்கலவரம் மீண்டும் வெடிக்கும் வாய்ப்புள்ளது" என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். அகமது இசுமாயிலும் கீர் தோயோவும் இனவாதத்தைத் தூண்டுவதுபோல் கருத்துரைத்திருப்பது ஒரு திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது. நிருபர் கூட்டத்தைக் கூட்டி சீனர்களை வசைப்பாடுவதற்கு ஒரு நாள் முன்னதாக, பிரதமர் அப்துல்லாவைச் சந்தித்த அகமது இசுமாயில் சீனர்களைப் பற்றி தாம் கூறிய கருத்தை மாற்றிக் கொள்வதாகக் உறுதியளித்துவிட்டு, மறுநாளே தாம் கூட்டிய நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் சீனர்களைப் பற்றி முன்பு கூறியதைவிட இன்னும் அதிகக் கேவலமாகப் பேசியிருந்தார். இவரின் இத்தகைய நடவடிக்கை படாவிக்கு அதிர்ச்சியையே கொடுத்திருந்தது. இதன்வழி மக்களின் பார்வைக்கு, அகமது இசுமாயிலின் இனவாதக் கருத்துக்கு அடிக்கோலிட்டவரே படாவிதான் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இதற்கடுத்தாற்போல், திட்டமிட்டப்படியே முகிதீன் யாசின் மகாதீர் மீண்டும் அம்னோவில் இணைவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். முக்ரீசு மகாதீரும் தாம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார். அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் அகமது இசுமாயிலை மூன்று ஆண்டுகால இடைநீக்கம் செய்வதாக முடிவெடுத்தப்பின், அகமது இசுமாயில் நிருபர் சந்திப்புக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்தார். இச்சந்திப்புக் கூட்டத்தில் அகமது இசுமாயில் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான், அதாவது படாவியைக் கவிழ்க்க திட்டம் தீட்டியவர்களுள் ஒருவர். தண்டனை கொடுக்கப்பட்ட ஒருவரின் நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் அம்னோவின் தலைமைச் செயலாளருக்கு என்ன வேலை? கீர் தோயோவும் தெங்கு அட்னானும் மகாதீரின் சகாக்கள் என்பதை அப்துல்லா அச்சமயம் கவனிக்கவில்லை போலும்.. படாவியை இறக்கிவிட்டு மகாதீரை மீண்டும் அம்னோவில் கொண்டு வருவதன் மூலம், வீ.கே லிங்கம் ஒளிப்படக்காட்சி விவகாரத்தில் தன் பெயரும் மகாதீரின் பெயரும் அடிப்படுவதை எப்பாடுபட்டாவது துடைத்துக் கொண்டு தப்பித்துவிட வேண்டும் என்பது தெங்கு அட்னானின் விருப்பமுமாகும்.

அண்மையில் பல இனவாதக் கருத்துகள் சூடாகப் பேசப்பட்டதற்குப் பின்னனியாகச் செயல்பட்டு வந்தது மகாதீர்தான் என்ற உண்மையை யாரும் எதிர்ப்பார்த்திருக்கவே மாட்டோம். தற்போது மகாதீரால் படாவிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த இனவாத வியூகம் ஏற்கனவே முதல் பிரதமரின் மீதும் மகாதீர் பயன்படுத்தியுள்ளார். துங்கு அப்துல் ரகுமான் மகாதீரை அம்னோவிலிருந்து நீக்கிய சமயம், துங்கு மீது மகாதீர் பலவகையான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்ததன் வழி அம்னோ உறுப்பினர்களிடையே இனவாத உணர்வு தூண்டப்பெற்று அவரது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டார். இதனால்தால் மகாதீரை மகா தீரனான மலாய்க்காரன் என்று அனைவரும் எண்ணினர். ஆனால் அன்று இருந்த சூழ்நிலை வேறு, இன்றுள்ள சூழ்நிலை வேறு என்பதனை மகாதீர் உணர்ந்துக் கொள்ளவில்லை. மகாதீரின் ஒவ்வொரு நடவடிக்கையும் இன்று நம்மால் நுகர முடிகிறது. மகாதீர், தெங்கு அட்னான், கீர் தோயோ, அகமது இசுமாயில் அனைவருமாகச் சேர்ந்து பினாங்கு அம்னோவை சதி வலையில் சிக்க வைப்பதன் வழி படாவி பதவி துறப்பதற்கு பல கோணங்களிலிருந்து அழுத்தங்கள் வரும் என்பது அவர்களுடைய திட்டமாகும். எந்த ஒரு வழியாயினும் சரி, அது இனவாதத்தைத் தூண்டிவிடும் செயலாக இருந்தாலும் சரி, படாவியை உடனடியாக பதவி துறக்க வைப்பதே அவர்களின் எண்ணமாகும். பாரிசானின் கூட்டணிக் கட்சிகளை எப்படியோ மகாதீர் தன் வழிக்கு திருப்பிவிட்டதனால், நேற்று நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் படாவி வாயடைத்துப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மகாதீரும் அவரின் சகாக்களும் செயல்படுத்திய சதித்திட்டம் என்பது படாவி உணர்ந்திருக்கிறார். இது மகாதீருக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.

படாவி ஆட்சியை அன்வாரிடம் ஒப்படைப்பாரா?

தற்சமயம் மகாதீரின் படை படாவியை அடியோடு வேரறுப்பதில் முக்கால்வாசி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், படாவி தன் மகனுடனும் மருமகனுடனும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார். ஒருவேளை படாவியை பதவி துறக்கச் செய்வதில் மகாதீர் வெற்றிப் பெற்றுவிட்டால், நிச்சயம் படாவியின் நிலைமையும் கைரி சமாலூதீன் நிலைமையும் அதோகதிதான். மகாதீர் வெகுநாட்களாகவே படாவியின் மீதும், அதுவும் குறிப்பாக கைரியின் மீதும் பழிதீர்க்கும் எண்ணத்தை கொண்டுள்ளார். படாவிக்கு மகாதீரின் பழிவாங்கும் எண்ணத்தைப் பற்றி நன்றாகவே தெரியும். அனுவாரை வேரறுத்ததுபோல் தம்மையும் தன் மருமகனையும் நிச்சயம் மகாதீர் பழி வாங்கியே தீருவார் என்று படாவி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

படாவிக்கு தற்போது ஒரே பாதுகாப்பான வழி என்றால் அனுவாரிடம் அடைக்கலம் புகுவதுதான். கைரியும் ஒருவேளை அனுவாரின் கூட்டணியில் சேருவதற்கு சமையல் கட்டு வழி நுழைந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஒருவேளை கைரி ஆட்சியை அனுவாரிடம் ஒப்படைத்து, மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு தனக்கும் தன் மாமனாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வரக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. படாவியும் கைரியும் தங்களது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள இது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்.

அம்னோவில் இருக்கும் வரை யாரும் அரசியல் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். படாவியின் 2010-இல் பதவி ஒப்படைப்புத் திட்டத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்த முகிதீன் யாசின், இப்பொழுது படாவியை பதவி துறக்க அழுத்தம் கொடுப்பது இதற்கு ஒரு நல்ல உதாரணம். முகிதீன் யாசின் மகாதீர் குழுவுடன் இணைந்துக் கொண்டு இந்நோன்பு மாதத்தில் படாவியின் மீது 'கெரில்லா' போர் தொடுத்திருப்பதனால் வருகின்ற அக்டோபர் மாத கட்சி தேர்தலில் குழப்பங்கள் எழுவதற்கு வாய்ப்பு மிக அதிகமாகத் தெரிகிறது.

தற்போது படாவிக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடிய ஒரே ஆள் அனுவார்தான். ஒருவேளை அனுவார் பிரதமரானால் படாவியின் அரசியல் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கக் கூடும். அடுத்த வாரம் தொடங்கி நாம் அனைவரும் மலேசிய அரசியலில் இதுவரைக் காணாத பல்வேறு சுவையான நாடகங்களைக் காணவிருக்கிறோம். நண்பன் எதிரியாவான், எதிரி நண்பனாவான். இப்பொழுது அனுவார் கையில் உள்ள பகடைக் காய்தான் பலருக்கு வாழ்வும் சாவும். சரியான நேரத்தில் அவர் யாருக்கு 'செக் மேட்' வைக்கிறார் என்று பார்ப்போம்...

Read more...

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 'செபுத்தே' தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் கைது!!!!


கோலாலம்பூரில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 'செபுத்தே' தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக், இரவு 11.18 மணியளவில் மூன்று காவல்த்துறையின் ரோந்து வாகனங்களால் வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். காவல்த்துறை துணைத் தலைமையதிகாரி இசுமாயில் ஓமார் திரேசா கோக் 73(1) உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக உறுதிப்படுத்தினார்.

பினாங்கு மாநில முதல்வர் திரு.லிம் குவான் எங், இதுகுறித்து நாளை அவசர சந்திப்புக் கூட்டம் நடைப்பெறும் என அறிவித்துள்ளார். இன்று மதியம் 1.50 மணியளவில் ராஜா பெட்ராவும், இரவு 8.30 மனியளவில் தான் ஊன் செங்கும் இசா சட்டத்தின்கீழ் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களால் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கை கைது செய்வதன் வழி, அவரை நம்பி ஓட்டு போட்ட மக்களை அம்னோ ஏமாற்றி விட்டது!

அம்னோவிற்கு ஆட்சிக் கவிழும் பயம், அதன் இழிவான நடவடிக்கைகளின்வழி புலப்படத் தொடங்கியுள்ளது. இந்த திருட்டுக் கும்பலின் ஆட்சி நமக்குத் தேவைதானா? இன்னும் 50 ஆண்டுகள் நம்மை சுரண்டித் தின்ன இவர்களை விட்டு வைக்கலாமா...?

அம்னோவின் பழிவாங்கும் படலம் தொடங்கிவிட்டது... இனி அடுத்தது யார்...??!!!

திரேசா கோக் கைதாவதற்குக் கூறப்படும் காரணம் இந்த கடிதம்தான்...

கோத்தா டாமாசாராவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒரு மசூதி காலை, மாலை தொழுகைக்குப் பின் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தி உரையாற்றுவதால் அங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு தொந்தரவாக இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் திரேசா கோக் தலையிட்டதாக சிலாங்கூர் மாநில முன்னால் மந்திரி புசார் டத்தோ முகமது கீர் தோயோ கூற்றஞ்சாட்டினார். மலாய் நாளேடுகளில் இவ்விடயம் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தன.

ஆனால் இதில் தாம் ஈடுபடவில்லையென்றும், தன் பெயரை வேண்டுமென்றே சிலர் களங்கப்படுத்துகின்றனர் என்று திரேசா கோக் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் பாருங்கள்..

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP