அன்று....
கல்லிலே கலை வண்ணம் கண்டவர்களில் பெயர்ப்போனவர்கள் தமிழர்கள். ஆயக் கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான சிற்பக் கலையின் பிறப்பிடமே தமிழகம்தான் என்று கூறும் அளவிற்கு, ஆயிரக்கணக்கான பழங்கால கலைப்படைப்புகள் தங்களிடமுள்ள உயிர்ப்பையும் வனப்பையும் இன்றளவிலும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றன. கலைகளின் பொற்காலம் எனக் கருதப்படும் கி.பி 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆட்சி வடதமிழகத்தில் கோலோச்சி இருந்த சமயம், முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன்(1) எனும் அரசன் மாமல்லபுரத்தில்(2) குடவரைக் கோயில்களை(3) எழுப்பி சிற்பக் கலைக்கோர் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திக் கொடுத்தான். இவன் ஆட்சிக் காலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய பெருஞ்சமயங்கள் பரஸ்பரம் பெற்றுத் திகழ்ந்ததோடல்லாமல், அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் சிற்பக் கலை, நடனக் கலை, ஓவியக் கலை ஆகியவற்றைப் பேணிக்காக்கும் ஒருக் கலைக்கூடமாக அன்று செழிப்புற்றிருந்தன.
குடைவரைக் கோயில்கள் - மாமல்லபுரம்
ஒற்றைக் கல் யானை, ஒற்றைக்கல் தளி - மாமல்லபுரம்
முதலாம் மகேந்திரவர்மனுக்கு அடுத்து பல்லவ பட்டத்து அரியணையில் ஏறிய முதலாம் நரசிம்மவர்மன்(4), வாதாபி மன்னன் இரண்டாம் புலகேசியைக் கொன்று, வாதாபியை வென்று, பல்லவ சாம்ராஜ்ஜியத்தை மேலைசாளுக்கியம் வரை விஸ்தரித்து மாமல்லன்(5) என்றப் பெயரோடு திகழ்ந்தான். ஆனால் அவனுக்கு அழியாப் புகழ் பெற்றுத் தந்தவை போர்களின் வீரசாகசங்கள் அல்ல, மாற்றாக அவன் சிற்பக் கலைகளுக்குச் செய்த சேவையே நிலையான புகழை ஈட்டித் தந்தன.
குடைவரைக் கோயில் - மாமல்லபுரம்
பகீரதன் தபசு அல்லது அர்சுன தபசு (புடைப்புச் சிற்பங்கள்) - மாமல்லபுரம்
இன்றளவிலும் காலத்தால் அழியாத மாமல்லபுரப் புடைப்புச் சிற்பங்களும்(6), குடைவரக் கோயில்களும், ஒற்றைக்கல் தளிகளும்(7) நரசிம்மவர்ம பல்லவனின் புகழ்பாடும் சின்னங்களாகத் திகழ்ந்து வருகின்றன. இவன் காலத்தில்தான், பல்லவப் போர்ப் படையின் தளபதியாக விளங்கிய பரஞ்சோதி(8) வாதாபியை வெற்றிக் கண்டதும், அங்கு பரவலாக வணங்கப்பட்ட கணபதி சிலையை முதன்முதலாக தமிழகத்திற்குக் கொண்டு வந்து, திருசெங்காட்டங்குடி எனும் ஊரில் பிரதிட்டை செய்தார். அதற்கு முன்பு தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இல்லை என்பது வரலாற்று ஆய்வாளார்களின் கருத்து. மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற புடைப்புச் சிற்பங்கள் கொண்ட பாறை ஒன்று உள்ளது. வெடிப்பு ஏற்பட்டு இரண்டாகக் காட்சியளிப்பதுபோல் இருக்கும் அந்த மாபாறையின் பெயர் அருச்சுனன் தபசு. இப்பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அருச்சுனன் சிவபெருமானை நோக்கி, பாசுபத அசுத்திரம் பெற வேண்டி ஒற்றைக் காலில் தவம் செய்வதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம். ஆனால் பாறையில் ஏற்பட்ட வெடிப்பு ஊனமாகத் தெரிந்தாலும் அதனையும் கலைநயத்தோடு ஒரு ஆறாக வடிவது போல அந்த வெடிப்பைச் சித்தரித்து ஊனத்தை நீக்கியிருக்கிறார்கள் பண்டைய தமிழக சிற்பிகள். ஒற்றைக் காலில் தவம் புரியும் அந்த மனிதன் அருச்சுனன் அல்ல, ஆகாச கங்கையை பூமிக்கு வரவழைக்க வேண்டி பகீரதன் புரியும் தவம் என்பதே உண்மை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இப்பாறையை பகீரதன் தபசு எனவும் குறிப்பிடுகின்றனர். இப்பாறையில் ஒரு பூனையும் ஒற்றைக் காலில் தவம் புரிவதுபோலும், சில எலிகள் அப்பூனையைக் கவனிப்பதுபோலவும் நகைச்சுவையாக சித்தரித்துள்ளனர்.
பெரும்பாறையில் புடைப்புச் சிற்பங்கள் - மாமல்லபுரம்
ஒற்றைக் கல் தளி - மாமல்லபுரம்
வரலாற்றில் தமிழர்களின் மற்றுமொரு உன்னதக் கலைப்படைப்பின் விருந்தாக அமைவது, தஞ்சையில்(9) உள்ள இராசராசேச்சுரம் திருகற்றளி அல்லது தஞ்சை பெருவுடையார் ஆலயமாகும். தற்போது பிரகதீசுவரர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில் எனும் பெயர்களால் இக்கலைச்சின்னம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் உலகின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இராசராசேச்சுரம் (தஞ்சை பெரிய கோயில்) - தஞ்சாவூர்
உலகமே இன்று வியந்து நிற்கும் இம்மாபெரும் திருகற்றளியை எழுப்பியவர், அருள்மொழிவர்மன் எனும் இயற்பெயர்கொண்ட முதலாம் இராசராசசோழ தேவர் ஆவார். இவர் ஆட்சி நடைப்பெற்றக் காலம் (கி.பி 985 - கி.பி 1012), தமிழகத்தின் பொற்காலம் என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும், வளர்ந்து வரும் வசதிக்கும், ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராசராசசோழ தேவர் கட்ட நினைத்தார் போலும். 216 அடிகள் உயரமுள்ள கோயில் விமானத்தை நவீன தொழில்நுட்பம் ஏதும் இல்லாத அக்காலத்தில் எப்படி எழுப்பியிருப்பார்கள் என்று ஆராய்சியாளர்களும், இக்கோயிலை காண வருகின்றவர்களும் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள். இராசராசேச்சுரம் விமானத்தை அமைப்பதற்கு, விமானத் தளத்தை நோக்கி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிருந்து ஒரு செங்குத்தான பாலம் ஒன்றை கட்டி, அதில் யானைகளைக் கொண்டு டன் கணக்கிலான கற்களை ஏற்றிச் சென்றதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாலம் தொடங்கப்பட்ட இடத்தினையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கோயிலின் மற்றுமொருச் சிறப்பு, அங்கு வீற்றிருக்கும் நந்தி சிலையாகும். இக்கோயில் நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். நந்திச் சிலை குடிகொண்டிருக்கும் மண்டபமானது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயில் நந்தி - தஞ்சாவூர்
முதலாம் இராசராசசோழ தேவருக்குப் பின் அரியணைக் கண்டவன், அவரின் புதல்வனான முதலாம் இராசேந்திர சோழனாவான். இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம் (மலேசியா), சிறீவிசயம், சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.
கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் - கங்கை கொண்ட சோழபுரம்
தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரியக் கோயிலையொத்த வடிவமைப்பைச் சார்ந்து இருந்தாலும், கட்டிட அமைப்பில் பெண்மையின் மென்மையையும் அழகையும் புகுத்தி தனக்கென்று ஒரு சிறப்பைப் பெற்றிருக்கிறது. தஞ்சை பெரிய கோயில் ஆண் என்றால், கங்கை கொண்ட சோழீச்சுரம் பெண் எனக் கொள்ளலாம். ஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுரம். கோயில் கட்டிட அமைப்பில் நேர்க்கோடுகளுக்கு பதில் வளைகோடுகள் கையாளப்பட்டிருப்பதினால்தான் இக்கோயில் பெண்மையின் அம்சங்களைப் பறைச்சாற்றுகிறது. தஞ்சை பெரிய கோயிலைவிட, கங்கை கொண்ட சோழீச்சுர கோயிலைப் பொலிவுப்படுத்துவத்தில் இராசேந்திரன் முனைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று....இத்தனைச் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கியிருக்கும் தமிழர் சிற்ப, கட்டிடக் கலையின் பெருமையை மீண்டும் பறைச்சாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்பொழுது நமக்கு வாய்த்துள்ளது. இந்த வாய்ப்பை முழுமையாக தமிழர்கள் தமிழர்களுக்காக பயன்படுத்திக் கொள்ள, இத்தனைக் காலம் பூமிக்கடியில் புதைந்திருந்த ரகசியத்தை தமிழன்னை வெளிக்கொணர்ந்திருக்கிறாள். தொடந்து வாசியுங்கள்...
ஒரேக் கல்லில் ஒரு பெரிய நகரத்தையே உருவாக்குவது சாத்தியமா? சமீபத்தில் தஞ்சைக்கு வந்த தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வந்த ஒரு கோரிக்கை மனுதான் இந்த அதிசயத்தைச் சுமந்து நிற்கிறது. இந்த மனுவைக் கொடுத்தவர் ஆ.அரசு.
தமிழ் மரபுக் கட்டிடக் கலைஞரான இவர் வழக்கறிஞரும்கூட. 'காய்-கனி களஞ்சிய குளிர்பதனக் கிடங்கை மரத்தால் அமைக்கலாம் எனக் கண்டுபிடித்துச் சொன்னதற்காக இவர் மத்திய அரசின் நிதியைப் பெற்றவர். இத்திட்டம் தற்போது உலகப் பொருளகத்தின் ஒப்புதலுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்விக்கு அரசு எடுத்ததுமே, "அந்தப் பாறை தமிழகத்தில் முக்கியமான ஓர் இடத்தில் இருக்கிறது. அது பற்றிய விவரங்களை நான் தற்போது யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்பவில்லை" என்று ஆரம்பித்தார்.
"சில மாதங்களுக்கு முன் என் பிறந்தநாளையொட்டி ஒரு கோயிலுக்குப் போனேன். அங்கிருந்து திரும்பி வரும்போதுதான் அந்த பிரம்மாண்டமான பாறையைப் பார்த்தேன். அதன் மீது ஏறிப் பார்த்தபோது, கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஒரே கல் பாறையாகக் காட்சி அளித்தது. இதுபற்றி அங்கே இருந்தவர்களிடம் விசாரித்தபோது நிறைய உபரி தகவல்கள் கிடைத்தன. காரில் அந்தப் பாறையைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தபோதும் முழுமையாகப் பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமாய் இருந்தது.
அதைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டி, முதல்வர் தஞ்சை வந்தபோது அவரிடம் கோரிக்கை மனுக் கொடுத்தேன். வேறு எங்குமே காண முடியாத அந்தப் பாறை தமிழகத்தில் இருப்பதே நமக்குக் கிடைத்த வரம். இத்தனை நாட்களாக இதைக் கண்டுபிடிக்காமல் இருந்திருக்கிறோம். இந்தப் பாறையின் நீளம் ஐந்து கிலோ மீட்டர், உயரம் ஆயிரம் அடி, மொத்தம் 45 கோடி கன மீட்டர், உள்பரப்பு மட்டுமே 25 சதுர கிலோ மீட்டர்,. இந்த ஒற்றைக் கல் பாறையின் மூன்றில் இரண்டு பகுதி பூமிக்கு வெளியே இருக்கிறது. ஒரு பகுதி பூமிக்கு கீழே உள்ளது. இந்தப் பாறை 'கிரானைடு' வகையைச் சேர்ந்தது.
புவியியலின்படி காலத்தால் மிகத் தொன்மையான இது மிக அரிதான கடினப் பாறை. அசுந்தா, எல்லோரா குகைகள், புத்தரின் பல நூறு அடி உயரச் சிலை உள்ள ஆப்கனின் பாமியான் குன்றுகளை நான் சொல்லும் ஒற்றைக் கல் பாறையோடு ஒப்பிடலாம். ஆனால் அவை எல்லாம் பல நூறு கற்பலகை இணைந்து உருவான குன்றுகள். இவற்றில் எதுவுமே ஒற்றைக்கல் கிடையாது. நான் குறிப்பிடும் ஒற்றைக் கல் பாறை உலகின் முதல் பேரதிசயம்! தமிழ்த் தாயின் அரிய கருவூலம். இந்த வைரக்கல்லைப் பட்டை தீட்டி உலகின் பார்வைக்கு வழங்கும் கடமை நமக்கு இருக்கிறது.
மலை வடிவமாக இருக்கும் இந்த ஒற்றைக் கல் பாறையைக் கலை வடிவமாக மாற்ற முடியும். இந்தப் பாறையைக் குடைந்து இதனுள் ஓர் ஊரையே உருவாக்க முடியும். தஞ்சைப் பெரிய கோயிலைப் போல நான்கு மடங்கு உயரக் கோயில் குடையலாம். இந்திய நாடாளுமன்றத்தை விட மிகப் பெரிய அழகிய கூடம் பல கட்டலாம். பல குடைவரைக் கோயில்கள் அமைக்கலாம். நூறு அடி உயரமுள்ள கற்படிமம் பல ஆயிரம் வடிக்கலாம். சங்கத் தமிழ் இலக்கிய வரி அனைத்தையும் இங்கே முப்பரிமாண படைப்பு ஓவியமாக வடிக்கலாம். 1330 திருக்குறட்களை ஓவியம் ஆக்கலாம். மனித வரலாற்றை, புராணங்களை, இதிகாசங்களை, இலக்கியங்களை, வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை 'எல்லாம் காட்சிப் படிமம் ஆக்கலாம்' இப்படி அரசு சொல்லிக் கொண்டே போகிறார்.
"ஒற்றைக் கல் பாறையைக் குடையும்போது கிடைக்கும் நாற்பதாயிரம் தூண்களில் புகழ் பெற்ற உலகத் தலைவர்களின் உருவச் சிலைகளைச் செதுக்கலாம். இதற்காக அரசு பத்து காசு செலவு செய்ய வேண்டியதில்லை. பாறையைக் குடையும்போது பல லட்சம் லாரி மணல், சல்லி கற்கள் கிடைக்கும். அதை விற்பனை செய்யும் போது 500 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும். திட்டச் செலவுகள் நூறு கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 400 கோடி ரூபாய் அரசுக்கு ஆதாயம்தான். அதனால் இந்தப் பாறையை மாநில அரசு தன் அரிய வகைக் கருவூலமாக அறிவித்து அதைப் பாதுகாக்க வேண்டும்.
பல்லவர், சோழர், பாண்டியர் கால கட்டிடங்களை, சிற்பங்களை இப்போதும் நாம் கண்டு வியக்கிறோம்.. அத்தகைய கலைவடிவங்களை வடிக்கும் கலை நுட்ப அறிவு இப்போதும் நம்மிடையே இருக்கிறது. ஒரு கட்டிடம் அது கட்டப்பட்ட கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் தொழில்நுட்ப அறிவை, பண்பாட்டை, கலையை பிற்காலத்தில் மக்களுக்குக் காட்டும் வரலாற்று நினைவுப் பெட்டகம். நாமும் நம்முடையச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லும் வகையில் அரிய ஒற்றைக் கல் பாறை நம்மிடம் இருக்கிறது.
இந்த விடயங்களை எல்லாம் முதல்வருக்கு அளித்த மனுவில் சொல்லியிருக்கிறேன். தமிழை, தமிழரை, தமிழரின் பண்பாட்டை, கலையைத் தன் உயிர் மூச்சாகக் கருதும் முதல்வர் ஒற்றைக் கல் சிற்பக் கலை நகரை அமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்தப் பாறை 'கிரானைடு' வகையைச் சேர்ந்தது என்பதால் இதற்குப் பல பெரும்புள்ளிகள் குறிவைத்திருக்கிறார்கள்.. பாறை இருக்குமிடத்தை நான் சொல்லிவிட்டால், அதற்குப் பலரும் உரிமைக் கொண்டாடுவார்கள். அதனால்தான் அது இருக்கும் இடத்தை யாரிடமும் நான் சொல்லவில்லை என்கிறார் அரசு.
இந்தத் திட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை நேரில் சந்திக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அரசு. இதற்காக வி.ஐ.பி கவிஞர் மூலமாக பேசி வருகிறார். அதே நேரம் அந்தப் பாறையின் முழுப் பரிணாமத்தையும் சுழலுந்து உதவியோடு ஒளிப்படக்கருவியில் பதிவு செய்து, அது தொடர்பான ஆவணங்களைத் திரட்டும் பணியிலும் இறங்கியிருக்கிறார் அரசு.
தமிழர்களின் பெருமையை மறக்கடிக்கும் வேலைகள் பல ஆங்காங்கே நடந்தாலும், அவற்றைப் புறக்கணித்து தமிழரின் தொன்மையை, சிறப்பை உலகிற்கு கலைநயத்துடன் வெளிக்கொணர நல்லதொரு வாய்ப்பை தமிழன்னை நமக்கு வழங்கியிருக்கிறாள். பூமிக்கும் பாதகமில்லாமல், சுற்றுச் சூழலுக்கும் கேடுவிளைவிக்காது, முறையான ஆராய்ச்சிகளுக்குப்பின் இம்மாபெரும் திட்டம் விரைவில் செயல் வடிவம் காண வேண்டும் என தமிழர்கள் அனைவரும் மனதார வாழ்த்திடுவோம். கல்லிலே கலைவண்ணம் கானத் துடிக்கும் ஆ.அரசுவின் கனவு பலித்திட வாழ்த்துகள்.
சில தகவல்கள் :-
(1) மகேந்திரவர்மப் பல்லவன் (கி.பி. 600 முதல் 630 வரை)
(2) மாமல்லபுரத்தில் (தற்போதைய மகாபலிபுரம்)
(3) குடவரைக் கோயில்களை (மாபெரும் பாறைகளைக் குடைந்து எழுப்பப்படும் ஆலயங்கள்)
(4) முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668 வரை) இவனின் மற்றொரு பெயர் 'மாமல்லன்'
(5) மாமல்லன் (சிறந்த மல்யுத்த வீரன்)
(6) புடைப்புச் சிற்பங்கள் (நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தவை.)
(7) ஒற்றைக்கல் தளி (ஒரே பாறையைக் கொண்டு செதுக்கப்பட்ட ஆலயம்)
(8) பரஞ்சோதி (இவர் ஒரு சிறந்த சிவ பக்தர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவரை சிறுத்தொண்ட நாயனார் என அழைப்பர்.)
(9) தஞ்சை (தற்போது தஞ்சாவூர்)
மேற்கோள்கள் :-
1 )
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D2)
http://en.wikipedia.org/wiki/Chola3)
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D4)
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D5)
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D6) நயனம் : 21 பார்வை : 32 - பக்கம் 23
Read more...