பிரிட்டனில் இந்து உரிமைப் பணிப்படையின் அமைதிப் போராட்டம்..

>> Thursday, January 31, 2008


நாளை 1-02-2008-ஆம் திகதியன்று இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் வழக்கறிஞர் திரு வேதமூர்த்தி நாளை பிரிட்டனில் அமைதிப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இப்போராட்டத்தில் லண்டன் வாழ் மலேசியர்கள் மற்றும் மனித உரிமைக் கழகங்கள் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர்.. இப்போராட்டத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கலந்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.. மேலும் தகவல்களுக்கு என்னுடைய முன்னைய பதிவைச் சுட்டுங்கள்.. :
லண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி

போராட்டம் தொடரும்...

Read more...

டப்லினில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக அமைதி மறியல்..

கடந்த 28-ஆம் திகதியன்று டப்லின், அயர்லாந்தில் இ.சா சட்டத்தில் நியாமற்ற முறையில் கைதான 5 இந்து உரிமைப் பணிப்படைத் தலைவர்களுக்கு ஆதரவாக மலேசிய தூதரகத்தின் முன் நடைப்பெற்ற அமைதி மறியல்..போராட்டம் தொடரும்...

Read more...

ஈப்போவில் உண்ணாநோன்புப் போராட்டம்...

ஈப்போ கல்லுமலையில் உண்ணாநோன்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.. முழுத் தகவல்கள் கிடைத்தவுடன் இங்கு பிரசுரிக்கிறேன்..

போராட்டம் தொடரும்...

Read more...

கே.பி சாமியின் ஆருடம்..

கே.பி சாமி மலேசியாக்கினி நிருபருக்கு கொடுத்த பேட்டி கீழே :


Read more...

அழிவை நோக்கிப் பினாங்குத் தீவு.. உடனடி தீர்வு தேவை..

>> Wednesday, January 30, 2008மலேசியாவின் வட மாநிலமான பினாங்கு மாநிலம், அதிலும் முக்கியமாக பினாங்குத் தீவு மலேசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அழகிய கடற்கரை, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், பலவிதமான உணவு வகைகள் என பல சிறப்புகளை பினாங்குத் தீவு தன்னகத்தே தக்கவைத்துள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் இந்தியர்களை சஞ்சிக் கூலிகளாக கொண்டு வரப்பட்டு முதன் முதலில் அவர்கள் இறக்கி விடபட்ட இடம் பினாங்குத் தீவு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.இத்தகு பெருமைகளைக் கொண்ட இத்தீவு, நாளுக்கு நாள் தன்னுடைய கற்பை இழந்து வருகிறது எனக் கூறினால் அதை மறுப்பதற்கில்லை. இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் வானளாவிய கட்டிடங்கள், வாகன நெரிசல்கள், ஜனத் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மாசு என பல வளர்ச்சிகளையும், வீழ்ச்சிகளையும் ஒருங்கே பெற்றுக் கொண்டு இந்த குட்டித் தீவு அவதிப்படுகிறது. கடந்த ஆண்டில் மக்கட்தொகை கணக்கெடுப்பில் பினாங்கின் மக்கள் தொகை 1.6 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

இத்தொகை மேலும் பெருகுமாயின் பினாங்குத் தீவு வரலாறு காணத நெரிசலை வருங்காலத்தில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. சுற்றுலாத்தலம் எனப் பெயர்பெற்ற இக்குட்டித்தீவு இன்று மிகப் பெரிய தொழிற்பேட்டைகள், அனைத்துலக விமான நிலையம், வர்த்தகக் கட்டிடங்கள் என ஹாங் காங்கைப் போல் ஒரு வர்த்தகத் தீவாக மாற்றம் கண்டுவிட்டது. குறுகிய காலக்கட்டத்தில் அதீத மாற்றம் கண்டுவிட்ட இக்குட்டித்தீவு தற்போது தன்னுடைய இயற்கை வளங்களை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அரசாங்கம் மேம்பாட்டாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, தன்னுடைய இயற்கை வளத்தை தாரை வார்த்துக் கொடுப்பதால் இன்று பினாங்கில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

நிம்மதியை நாடி பலர் சுற்றுலாத் தலங்களின் மீது படையெடுக்கும் பொழுது பினாங்குத் தீவு அவர்களை வாகன நெரிசலோடு வரவேற்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இன்று பினாங்கின் அழகிய கடற்கரைகள் குப்பைக் கூளங்களையும் நுரைகளையும் கக்கிக் கொண்டிருக்கின்றன.. இவை அனைத்தும் பினாங்கு இன்று அடைந்துள்ள மேம்பாடும், மக்கட் தொகைப் பெருக்கமுமே ஆகும்..மெல்ல மடியும் பினாங்கின் இயற்கை அழகிற்கு உச்சாணிக் கொம்பாக இக்குட்டித் தீவிற்கு சற்றும் ஒவ்வாத ஒரு மிகப் பிரமாண்டமான திட்டம் ஒன்று அண்மையில் அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்றுள்ளது நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பினாங்கிற்கு சுமையாக வந்திருக்கும் அத்திட்டத்தின் பெயர் பினாங்கு அனைத்துலக மாநகர் மையம் ஆகும்.இகூவின் கெப்பிட்டல் மற்றும் அதன் துணை நிறுவனமான அபாட் நலூரி சென்டிரியான் பெர்காட் இம்மாபெரும் திட்டத்தை ஏற்று நடத்தவுள்ளன. இத்திட்டமானது பினாங்கின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்கோட்லண்ட் சாலை பினாங்கு குதிரை பந்தயத் திடலில் அமையவுள்ளது. இத்திட்டம் பதினைந்து ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்றும் இதனை பூர்த்திச் செய்ய 25 பில்லியன் செலவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த மேலும் சில தகவல்கள் :

50,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவிருக்கும் இம்மாபெரும் திட்டத்தில்,

1)384.953 ச.மீ பரப்பளவில் பேரங்காடி
2)95.174 ச.மீ பரப்பளவில் அனைத்துலக கருத்தரங்க மையம்
3)73.950 ச.மீ பரப்பளவில் பினாங்கு கலையரங்கம்
4)61.718 ச.மீ பரப்பளவில் 33 ஆடம்பர அடுக்குமாடிகள்
5)23.130 ச.மீ பரப்பளவில் 5 நட்சத்திர தங்கும் விடுதி
6)25.725 ச.மீ பரப்பளவில் 5 நட்சத்திர தங்கும் விடுதி
7)22.530 ச.மீ பரப்பளவில் அலுவலகங்கள்
8)183,390 ச.மீ பரப்பளவில் கார் நிறுத்துமிடம்

பினாங்கு குதிரைப் பந்தயத் திடல், திறந்த வெளிக்குரிய இடமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட இடம் நாளடைவில் பலதரப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்குரிய இடமாக எப்படி மாற்றி அறிவிக்கப்பட்டது என புரியாத புதிராக உள்ளது. அதே வேளையில் இத்திட்டங்கள் முறையான பரிசீலனைக்குள்ளாகி அரசாங்கத்தின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே எப்படி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என்பது இன்னொரு புரியாத புதிர்.

இத்திட்டத்திற்கு பினாங்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன் அவசர அவசரமாக இத்திட்டத்திற்கு சான்றிதழ் வழங்கியவர் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில் இன்னொரு கோளாறு என்னவென்றால், எந்த ஒரு குடியிருப்புத் திட்டமென்றாலும், அத்திட்டத்தில் 30 சதவிகிதம் மலிவு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் மொத்தம் 6,933 ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் உள்ளனவே தவிர மலிவு விலை வீடுகளுக்கு அங்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், இம்மலிவு விலை வீடுகள் வேறிடத்தில் கட்டப்படுமாம். ஏழையையும் பணக்காரனையும் பிரித்து வைக்கின்ற செயல் அல்லவா இது... ஏன், இரு பிரிவினரும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்தால் அங்கு வசிக்கும் பணக்கார துவான்களுக்கு சகித்துக் கொள்ள முடியாதோ? அரசாங்கம் இப்படி கௌரவம் பார்ப்பது கேவலமாக இருக்கிறது.

இது மட்டுமல்லாமல், இத்திட்டதில் இரு உயர் கட்டிடங்கள் பேர் சொல்லும் அளவிற்கு பினாங்கு மாநிலத்தின் சின்னங்களாக விளங்குமாம். அக்கட்டிடத்தில் ஒரு கட்டிடம் 66 மாடிகளைக் கொண்டது எனத் தெரிய வந்துள்ளது.

ஏழைகளுக்கென்று எந்த ஒரு திட்டமும் கொண்டு வர இந்த அரசாங்கத்திற்கு வக்கில்லை, ஆனால் பணக்காரர்கள் நன்றாக வாழ்க்கை தரத்தை அனுபவிக்க வேண்டும் என இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை நாம் அறியலாம். தற்போது பினாங்கு மக்களின் கேள்வி என்னவென்றால், ஸ்கோட்லண்ட் சாலை ஏற்கனவே ஒரு நாளைக்கு 60,000 வாகனங்கள் பயன்படுத்தும் சாலையாக இருக்கும் பொழுது, வரப்போகின்ற இம்மாபெரும் திட்டம் பினாங்கின் மையப் பகுதியை நெரிசலுக்கு உள்ளாக்கி விடாதா எனபதுதான்... இதில், நெரிசலைக் குறைக்க பினாங்கிற்கு இரண்டாவது பாலமாம்.. ஒரு குட்டித் தீவிற்கு இவ்வளவு மக்கள் பணத்தைச் செலவு செய்து, அத்தீவை அழிவிற்குள்ளாக்கும் செயலை அரசாங்கத்தின் மடத்தனம் என்றே சொல்லவேண்டும். அதிலும், சீன நாட்டின் ஒரு வங்கியில் கடனை வாங்கி இந்த இரண்டாவ்து பாலம் கட்டப்படுகிறது. இறுதியில் கடனை அடைப்பதற்கு மக்கள் பணம்தான் சுரண்டப்படும்..இயற்கை வளங்களையும் அழித்து, மக்களின் உள்ளுணர்வையும் அவர்களின் தேவைகளையும் புறக்கணித்து மேம்பாட்டாளர்களின் லாபத்திற்கும் அரசாங்கத்தின் சுய லாபத்திற்கும் நிலங்களை விற்று இப்படி மாபெரும் திட்டங்களை உருவாக்கினால், நாளடைவில் அங்குள்ள மக்கள்தான் அவதிக்குள்ளாக வேண்டிவரும்... பினாங்கு மக்களே, உங்களின் எதிர்காலத்தை சோதனைக்காலமாக மாற்ற வரும் இத்திட்டத்தை புறக்கணியுங்கள்..! இனியும் நெரிசல்களின் இடிபாடுகளில் உங்கள் வாழ்க்கையின் சக்கரம் ஓடக் கூடாது...!

வளர்ச்சி என்பது கட்டிடங்கள் உயர்வதாலும், உல்லாசக் கேளிக்கைகள் பெருகுவதாலும் அல்ல..
நல்ல நற்பண்புகள் உள்ள, அலைச்சல் மன உளைச்சல் இல்லாத, நிம்மதியான, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை என்பதே ஒரு நாட்டின் குடிமகனுக்கும், அந்நாட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் உண்மையான வளர்ச்சி என்பதை அறிக...

Read more...

வருகின்ற பொதுத்தேர்தலில் ஊழல் நடக்க வாய்ப்புகள் அதிகம் - துன் மகாதீர் கருத்து..

>> Tuesday, January 29, 2008மலேசியாவின் நடப்பு அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்துக் கொள்வதில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்ததன் பயனாக இன்று அரசாங்கம் பலவீனமடைந்து வருவதாக துன் டாக்டர் மகாதீர் இன்று கூறினார்.

மேலும் அண்மைய காலங்களில் நடத்தப்பட்ட சில கருத்துக்கணிப்புகளின் வழி இன்றைய நடைமுறை அரசாங்கம் தன்னுடைய செல்வாக்கை மக்கள் மத்தியில் நிலையுற வைப்பதில் தவறிவிட்டதாக அவர் கூறினார்.

இந்த தாக்கத்தினால் வருகின்ற பொதுத் தேர்தல்களில் ஓட்டுகளை வாங்குவதில், லஞ்சம் மிக எளிதாக ஊடுருவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என அவர் கூறினார். இது தமக்கு மிகுந்த பயத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளைப் பற்றி கருத்துரைக்கையில், அண்மையில் தலைநகரில் இந்தியர்கள் ஒன்று திரண்ட நிகழ்வானது, சிறுபான்மை மக்கள் நடப்பு அரசாங்கத்தின் மீது வைத்துள்ள அவநம்பிக்கையை பறைச்சாற்றுகிறது என அவர் கூறினார். மேலும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களின் கைது விவகாரம் அரசாங்கம் எடுத்த ஒரு தவறான முடிவு என்றும் கடந்தக் காலங்களில் அரசாங்கம் கடைபிடித்து வந்துள்ள மெத்தனப்போக்கும், களையாமல் விட்ட சிறு சிறு தவறுகளுமே அன்று இந்தியர்களின் போராட்டமாக வெடித்தது எனவும் கூறினார்.

சிறுபான்மையினர் தங்களின் குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூற முறையான ஊடகம் அமையாது போனதே, அரசாங்கம் இன்று வலுவிழந்து காணப்படுவதற்குக் முக்கியக் காரணம் என்றும் அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்வதில் எந்த ஒரு நன்மை பயக்கும் முடிவையும் கொண்டு வரவில்லை என அவர் கூறினார்.

இருப்பினும், அம்னோ அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் 20 அல்லது 30 கட்சியின் வேட்பாளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோல்வியை எதிர் நோக்கினாலும் தேசிய முன்னணிக் கட்சி வெற்றிப் பெறும் என அவர் கூறினார். இருப்பினும் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னனிக்குக் கிடைத்த ஓட்டுகளின் எண்ணிக்கை இம்முறை பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

தேசிய முன்னணிக்கு மக்களின் ஆதரவு உள்ளதா என பொதுத் தேர்தல்தான் முடிவு செய்யும் என்றாலும், வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்கும் வேலை நடைப்பெறுவது தமக்கு மிகுந்த பயத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன்வழி நாட்டு குடிமக்களின் உண்மையான ஆதரவு யாருக்கென்று புலப்படாத ஒரு நிலைமை உருவாகலாம் என அவர் அச்சம் தெரிவித்தார்..

இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களைக் குறித்து அவர் கருத்துரைக்கையில், அவர்களின் போராட்டம் நியாயமாக இருந்தாலும் இந்திய சமுதாயம் இந்நாட்டில் ஒடுக்கப்படுகின்றனர் எனும் கருத்தை அவர் மறுப்பதாகவும், அவர்களை இ.சா சட்டத்தில் கைது செய்வதைக் காட்டிலும் அவர்களிடம் அரசாங்கம் முறையாக கருத்துக்களைக் கேட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது எனக் கூறினார்.

இந்திய சமுதாயம் ஒடுக்கப்படவில்லை எனவும், தேசிய முன்னனியின் சார்பில் இந்திய மக்களின் பிரதிநிதியாக விளங்கும் ம.இ.கா இந்தியர்களின் கோரிக்கைகளுக்கு சரியாக செவிசாய்க்காமல் போனதே இன்று இந்திய சமுதாயம் தேசிய முன்னனியின் மீது நம்பிக்கையற்று போனதற்கு ஒரு காரணம் என அவர் கூறினார்.

ஒரே கட்சி மக்களைப் பிரதிநிதிப்பதாலும் மற்றக் கட்சிகளுக்கு அவர்கள் வாய்ப்புகள் கொடுக்காமல் போனதும் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.

"போராட்டம் வெடிப்பதற்கு ஒரு காரணம் கண்டிப்பாக உள்ளது, அரசாங்கம் தொடந்து பல தப்புக்களை புரிந்து வருவதை மக்கள் காண்கிறார்கள். நாளடைவில் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளால் அது தன் பலத்தை இழந்து நிற்கும் வேளையில் மக்கள் வெகுண்டு எழுகிறார்கள். அரசாங்கத்திற்கு தங்களுடைய ஆதங்கங்களை புலப்படுத்துகிறார்கள்" என்று துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

முன்னால் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தொடர்பாக அவர் கருத்துரைக்கையில், " அன்வார் இப்ராகிமிற்கு அரசியல் எதிர்காலம் என்றொன்று இல்லை, அது அஸ்தமனமாகிவிட்டது. அப்படி அவர் மீண்டும் இந்நாட்டின் பிரதமராக வர முடியும் என்றெண்ணினால் அது பகல் கனவு காண்பதற்கு ஒப்பாகும்.." என அவர் கூறினார்.

செய்தியை ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் அனுப்பியவர் : வர்த்தகர், குமார் : பாசீர் கூடாங் (நன்றி)

அப்படியென்றால் மகாதீர் ஆட்சிக் காலத்தில் தேர்தலில் ஊழல் எனும் வார்த்தைக்கு அவர்கள் அகராதியில் பொருளில்லாமல் இருந்ததோ?

ம.இ.கா பிற கட்சிகளுக்கு சேவை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றால் உங்கள் ஆட்சிக்காலத்தில் சாமிவேலுவை தட்டிக் கேட்டிருந்தால் இந்திய சமுதாயம் சந்தோஷப்பட்டிருக்கும்.. சம்பந்தியானவரை தட்டிக் கேட்க மனமில்லாமல் மௌனம் சாதித்ததை நீங்கள் மறந்திருக்கலாம்..ஆனால், நாங்கள் இன்னும் மறக்கவில்லை..

Read more...

உரிமைகள் பறிபோன தருணங்கள்.... தலைவர்கள் செயலற்று நின்ற தோரணங்கள்...

பாடாங் ஜாவா ஆலய உடைப்பு.. ஒரு சிந்தனை மீட்சி...காலையிலிருந்தே மக்கள் ஆலயம் உடைபடுவதிலிருந்து போராடியிருகின்றனர். இந்து சங்கம் டத்தோ சிறீ ச.சாமிவேலுவிற்கு தகவல் கொடுத்தும் வராதவர், ஆலயம் உடைப்பட்ட பிறகு அங்குள்ள மக்களிடம் சமாதானம் பேச வந்திருக்கிறார். அங்குள்ள மக்கள் இவரைத் திட்டி தீர்த்ததுதான் மிச்சம்.. ஒரு மாநகராட்சி ஊழியர் கூட நாட்டின் மூத்த அமைச்சரின் பேச்சை மதிக்கவில்லை... கடைசியில் அமைதியாகவே சென்றுவிட்டார் சாமிவேலு. இப்படி ஒரு கையாலாகாத தலைவர் நமக்குத் தேவையா?போராட்டம் தொடரும்...

Read more...

தைப்பிங் மருத்துவமனையில் மக்கள் ஆதரவு..

கடந்த வெள்ளிக்கிழமை 27-01-2008 தைப்பிங் மருத்துவமனை வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வழக்கறிஞர் திரு உதயகுமாருக்கும், வழக்கறிஞர் திரு.மனோகரன் அவர்களுக்கும் தங்களுடைய ஆதரவினை மெழுகுவர்த்தி ஏந்தி தெரிவித்தனர். ஒரு சிலர் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்திய வண்ணம் நின்றிருந்தனர். தைப்பிங் மருத்துவமனை வெளியே கூடியிருந்த மக்களை நம் இரு தலைவர்களும் அறையிலிருந்து ஜன்னல் வழி கண்டு கையசைத்தனர்..

தைப்பிங் மருத்துவமனையின் வெளியே :நன்றி : Hindraf4youபோராட்டம் தொடரும்..

Read more...

விண்வெளி வீரனா? விண்வெளி சமையல்காரனா?

>> Monday, January 28, 2008மலேசிய முதல் விண்வெளி வீரர் மருத்துவர். ஷேக் முகமட் முஷாபார் சுகோர் விண்வெளிச் சுற்றுலாவை முடித்து பூமிக்கு திரும்பி மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டன.. இன்று வரையில் அவர் அங்கு தே தாரேக் கலக்கியது, ரொட்டி சானாய் போட்டது, பம்பரம் விட்டது, யோயோ விளையாடியது, தண்ணீரையும் எண்ணெயையும் கலந்து விட்டு வேடிக்கைப் பார்த்தது, பெரிய பந்துகளையும் சிறு பந்துகளையும் சுழற்றிவிட்டு குழந்தைகளுக்கு மாயாஜாலம் காட்டியது மட்டும்தான் நமக்கு தெரிந்த விஷயங்கள்.

95 மில்லியன் மக்கள் பணத்தைச் செலவு செய்து 10 நாட்கள் விண்வெளி கூட சமையல் அறையில் சமையல்காரராக இருந்த மருத்துவர் ஏதோ ஆராய்ச்சிகள் செய்தாராம். அதன் முடிவுகள் ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை?

விண்வெளி பயணி எனும் அங்கீகாரத்தை மறைத்து விண்வெளி வீரர் எனும் பட்டத்தைச் சூட்டுவதற்காக, அவசர அவசரமாக உள்நாட்டுப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆராய்ச்சி எனும் பெயரில் சில தளவாடங்களைக் கொடுத்து அனுப்பினார்கள். போன ஆள் திரும்பி வந்து விட்டார், ஆனால் ஆராய்ச்சியின் முடிவுகள் மலேசிய மக்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில் நகைப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், மருத்துவர் ஷேக்கிற்கு கொடுக்கப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்தையுமே பூமியிலிருந்தே செய்துவிடலாம்.. இவரின் ஆராய்ச்சிகள் அனைத்துமே புவி ஈர்ப்பு அற்ற சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சிகள், அப்புவியீர்ப்பு அற்ற சூழ்நிலையை பூமியிலேயே நவீன எந்திரங்களைக் கொண்டு உருவாக்கி விடலாம்.. புரதம் எனப்படும் காற்றழுத்தம் இல்லாத சூழ்நிலையிலும், புவி ஈர்ப்பு அற்ற சூழ்நிலையிலும் எப்படி செயல்படுகிறது என்பதே இவர்கள் ஆராய்ச்சியாம்..

இவ்வளவும் செலவு செய்து ஆடம்பரமாக ஒரு மலேசியரை விண்வெளிக்குக் கொண்டுச் சென்று இறுதியில் என்னவாயிற்று? இன்று யாரும் அதனைப் பற்றி முணுமுணுப்பதே கிடையாது.. ஏன், அரசாங்கமே வாயைத் திறக்கவில்லை...

2010-இல் இன்னொரு சுற்றுப்பயணி விண்வெளிச் செல்லக் காத்துக் கிடக்கிறார். இம்முறை அவரை நிலாவிற்கு அழைத்துச் சென்று தே தாரிக் கலக்கச் சொல்லலாம்.. F&N பால் டின் கலந்து தே தாரேக் அடித்து மற்ற விண்வெளி வீரர்களுக்குக் கொடுக்கட்டும்.. மலேசியாவின் தே தாரிக் சுவையை நிலாவரைப் பரப்ப வேண்டுமல்லவா..(நிலாவிற்கு நீரிழிவு நோய் வராமல் இருந்தால் சரிதான்..) அங்கு பணிபுரியும் அமெரிக்க ரஷ்ய விண்வெளி வீரர்களுக்கு சமையல்காரராக இருக்கட்டும்.. முடிந்தால் அங்கே ஒரு மாமாக் ஸ்டால் திறந்து நிரந்தரமாக அவருக்கு அங்கே வேலைக் கொடுத்துவிடலாம்..

அமெரிக்க விண்வெளி வீரர் : மச்சான், தே தாரிக் காவ் சத்தூ..!!

ரஷ்ய விண்வெளி வீரர் : மச்சான், சாயா புஞா குராங் மனீஸ்..

மலேசிய விண்வெளி வீரர் : ஓகே...பாங்.. லிமா மினிட் சியாப்..

'மலேசியா த்ரூலி யுனிவெர்சியா'...

Read more...

மாபெரும் நாட்டை பிரிட்டிஷ் கைப்பற்றியது எப்படி?

பிச்சைக்காரர்களே இல்லாத நாடு என வர்ணிக்கப்பட்ட வளம் பொருந்திய பாரத தேசம் பிரிட்டிஷாரின் கைப்பிடியில் விழுந்தது எப்படி? வேரைப் பிடுங்கினால், அது ஆலமரமாயினும் சாய்ந்தே ஆக வேண்டும் அல்லவா? அதுபோன்ற ஒரு யுக்திதான் இந்தியாவை இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிரிட்டிஷாரிடம் அடிமையாக்கியது..

ஒரு நாட்டின், அங்கு வசிக்கும் சமூகத்தின் வளப்பத்திற்கு அடைப்படை வேர்தான் என்ன?

இதோ மெக்காலே, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்..ஆண்ட பரம்பரை தன் நாகரீகத்தை மறந்து மாற்றான் நாகரீகத்தை தலையில் தூக்கி ஆட வேண்டும்.. அப்பொழுதுதான் அவன் தனக்குத்தானே குழி தோண்டிக் கொள்கிறான்... சுயமரியாதையை இழக்கிறான்.. இறுதியில் அடிமையும் ஆகிறான்.. சுலபமான வழி அல்லவா இது..

இந்த அவலம் இன்னும் தொடர்கிறதா? ஏன் இல்லை..நம் சமுதாயத்திலேயே தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள கூச்சப்படுபவர்களை நான் கண்ணாறக் கண்டிருக்கிறேன்.. தமிழனிடம் தமிழில் பேசுவதற்கு நா எழாமல் எதையோ உளரிவிட்டுச் செல்பவர்களையும் நாம் நிறையவே பார்த்திருக்கிறோம்.. வார இறுதிகளில் எத்தனை இந்திய இளைஞர்கள் பெண்கள் உட்பட இரவு விடுதிகளில் பார்க்க முடிகிறது.. சிலருக்கு பணம் கொலுத்துவிட்டால் தலைக்கால் புரியாமல் ஆடுவது ஏன்?

இனியும் இந்த அடிமைத் தனம் நமக்குத் தேவையா? இந்த சமுதாயம் துரைகளுக்கு கைகட்டி வாய்பொத்தி வேலை செய்த காலம் போய் இன்று 'துவான்'களுக்கு கைகட்டி சேவகம் செய்ய வேண்டுமா?

பிறரையே குறைக் கூறியும் புண்ணியம் இல்லை, நம்மிடையே வளர்ந்து நிற்கும் சில களைகளையும் பிடுங்கினால்தான் சமுதாயம் உருப்படும்.. இந்த பதிவை நான் கோபத்தோடும் சிலரின் கண்டுக்கொள்ளாத போக்கை நினைத்து வேதனைப்பட்டும் எழுதுகிறேன்.. நான் மட்டும் இல்லை, இன்னும் எத்தனையோ இளைஞர்களிடம் இந்த ஆத்திரம் இருக்கக்கூடும்.. இந்தியர்கள் மத்தியிலேயே தோன்றியிருக்கும் பல புல்லுருவிகளைக் காணும் பொழுது, இவர்களுக்கும் சேர்த்து நாம் போராட வேண்டியுள்ளதா என நினைப்பதுண்டு.. ஆனால், நல்லவர்கள் சிலரே இருப்பினும் அவர்களுக்காக உழைப்பதில் தவறில்லை என மனதை தேற்றிக் கொள்வேன்..

நீங்களே கூறுங்கள்.. இந்நாட்டிற்கு சுதந்திரத்திற்காக ஒட்டு மொத்த மக்களுமே போராடினார்களா?

ஆங்காங்கே சிலர், பிரிட்டிஷ் படைக்கு அஞ்சி பதுங்கிய வாழ்க்கை வாந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். இருப்பினும் சுதந்திரம் எனும் வரும்பொழுது, அச்சுதந்திரக்காற்று அனைவரின் மேலும் பட்டதல்லவா? சுதந்திரத்திற்கு போராடாதவன் கூட அக்காற்றை சுவாசித்தானே.. எனவே, இன்று நம்மிடையே எழுந்துள்ள மக்கள் சக்தி எனும் போராட்டம் இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த விடுதலைக்கான போராட்டம்... இப்போராட்டமானது இழந்த உரிமைகளை மட்டும் மீட்டெடுக்கும் போராட்டமாக இல்லாமல், நம்மிடையே மெல்ல மெல்ல அழிந்து வரும் கலாசார சீரழிவையும் மீட்டெடுக்கும் ஒரு போராட்டமாக மேற்கொள்வோம்..

நம்மிடையே ஆங்காங்கெ எட்டப்பர்கள் முளைத்தாயினும் நாம் மனம் தளராது நல்லவர்களையும் அவர்கள் கொடுக்கும் ஊக்கத்தையும் கொண்டே இப்போராட்டத்தில் வெற்றிக் கொள்வோம்...

இது உங்கள் சிந்தனைக்கு...

போராட்டம் தொடரும்...

Read more...

அரசாங்கத்திற்கு ஓர் அன்பு மனைவியின் வேண்டுகோள்..

கடந்த ஜனவரி 22-ஆம் திகதியன்று இந்து உரிமைப் பணிப்படியின் செயலாளரான திரு.வசந்தகுமாரின் மனைவி மலேசியாக் கினிக்கு கொடுத்த ஒரு பேட்டியில் தன் கணவரையும் மற்ற நான்கு தலைவர்களையும் விரைவில் விடுதலை செய்யுமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டார். திரு.வசந்தகுமாரின் குழந்தைகள், அப்பாவின் பாசத்திற்கு ஏங்குகின்றனர் என அவர் கூறும் பொழுது நம்முடைய நெஞ்சமும் நெகிழ்கிறது..சமுதாயம் 5 தலைவர்களின் விடுதலைக்கு காத்திருக்கலாம்,
ஆனால், நல்ல தந்தைகளைப் பிரிந்து குழந்தைகள் நீண்ட நாட்கள் காத்திருக்கக் கூடாது..
நம்மைவிட அதிக வலி நம் ஐந்து தலைவர்களின் குடும்பத்தினருக்குதான்..
அவர்களை நம்முடைய குடும்பம் என நினைத்து அவர்களின் வலியையும் சுமையையும் சுமப்பதற்கு நாம் கடமைப் பட்டுள்ளோம்..

நமக்காக போராடியவர்களின் குடும்பத்திற்கு இந்திய சமுதாயம் காலங்காலமாக கடமைப் பட்டிருக்கிறது... இவர்களைத் தவிர்த்து 25-ஆம் திகதி பேரணியில் கைதான பல இந்திய இளைஞர்களின் குடும்பத்திற்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்..
இயன்றவர்கள், இக்குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தையோ, நிதியோ அல்லது எவ்வழியிலாவது உதவி செய்ய முற்பட்டு நம் இந்தியர்களின் ஒற்றுமை உணர்வை புலப்படுத்துவீர்களாக..

போராட்டம் தொடரும்...

Read more...

ஜாசின் மலாக்காவில் உண்ணாநோன்புப் போராட்டம்...

நேற்று ஜாசின், மலாக்காவில் அமைந்திருக்கும் சிறீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களுக்கு ஆதரவாக 30 பேர்கள் கொண்ட குழுவொன்று 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இவ்வுண்ணாநோன்புப் போராட்டத்தில் ஜாசின் மற்றும் தங்காக் பட்டிணத்திலிருந்து ஆதரவாளர்கள் வந்துக் கலந்துக் கொண்டுள்ளார்கள். உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகியிருக்கும் 5 மகா தலைவர்களை அரசாங்கம் எந்த ஒரு நிபந்தனையுமின்றி விடுவிக்க கோரும் கருப்பொருளைக் கொண்டு இவ்வுண்ணாநோன்புப் போராட்டம் நடத்தப்படுவதாக, இப்போராட்டத்தின் ஏற்பாட்டாளர் கூறினார்.

இதோ, ஜாசின் மகா மாரியம்மன் ஆலயத்தில் தொடங்கிய உண்ணாநோன்புப் போராட்ட படக்காட்சி. இவ்வுண்ணாநோன்புப் போராட்டத்தில் உள்ளவர்களை பேட்டி எடுத்து பதிவு செய்து ஓலைச்சுவடிக்கு அனுப்பியவர், மலாக்காவைச் சேர்ந்த சகோதரர் திரு.கலையரசு. இவ்வேளையில் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

படக்காட்சிஇவரைப்போல் ஓலைச்சுவடிக்கு அண்மைய நிகழ்வுகளை பற்றிய தகவல்களைப் பரிமாற வாசகர்கள் அழைக்கப்படுகின்றனர்... தகவல்களைப் பரிமாறிக் கொள்ள நினைப்பவர்கள் என்னை மின்னஞ்சல் வழி தொடர்புக் கொள்ளலாம்...

போராட்டம் தொடரும்...

Read more...

விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து போராட்டம்... திரு.அருட்செல்வன் உட்பட 58 பேர்கள் கைதாகினர்..

>> Sunday, January 27, 2008

நேற்று 26-01-2008 கோலாலம்பூர் மாநகர் மையப் பகுதியான கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் முன் எதிர்கட்சிகளும் மற்றும் பல தனியார் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்..


அமைதிப் போராட்டம் ஆரம்பிக்கவில்லை, ஆனால் காவல் துறையினர் அராஜகமான முறையில் நிருபர்கள் உட்பட பலரைக் கைது செய்தனர். கைதானர்வர்களில் நம் மனித உரிமைப் போராளி, 'Parti Sosialis Malaysia' கட்சியின் பொதுச் செயலாளரான திரு. அருட்செல்வனுமாவார்.
இக்கைது நடவைக்கையானது மதியம் 2.45க்கு தொடங்கி மாலை 4.30க்கு முடிவடைந்தது. கைதானவர்களில் பலர் விசாரணைக்குப்பின் விடுதலை செய்யப்பட்டாலும் திரு. அருட்செல்வனை கோலாலம்பூர் போலீஸ் தலைமை அலுவலகத்தில் தடுத்து வைத்துள்ளனர். அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பபட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் எனத் தெரிய வருகிறது. இவ்வமைதிப் போராட்டத்தைக் கலைப்பதற்கு 1000 காவல் துறையினர்களும் கலகத் தடுப்புக்காரர்களும் அமர்த்தப்பட்டனர்.

இதேப் போன்ற ஒரு அமைதிப் போராட்டம் 2006-ஆம் ஆண்டில் மலேசிய தொழிலாளர் சங்கம் (MTUC) நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்..நேற்று நடக்கவிருந்த இவ்வமைதிப் பேரணி தொடர்பாக 18 இந்தியர்கள் கைதானது குறிப்பிடத்தக்கதாகும். அவர்களின் பெயர் பின்வருமாறு :

அருட்செல்வன் (PSM பொதுச் செயலாளர்)
தேவராஜன் ( 9.15 இரவுக்கு விடுதலை செய்யப்பட்டார்.)
சரஸ்வதி (PSM துணைத் தலைவர்)
இராணி இராசய்யா ( PSM நிர்வாகக் குழு உறுப்பினர்)
செல்வம் ( PSM நிர்வாகக் குழு உறுப்பினர்)
கணேசன் ( PSM காஜாங் தொகுதித் தலைவர்)
இராமலிங்கம்
கார்த்திக்
காணா
விஜயா
சுகுமாறன்
தினகரன்
நேரு
கோகிலா ஞானசேகரன்
மோகன்
தினமாறன்
கோமதி
சரவணன்

கைதானவர்களின் முழுப் பட்டியலை காவல் துறை பின்னர் வெளியிடும்...

மலேசியாக் கினி படக்காட்சிகள்மக்களே, இந்த நாட்டில் நாம் எந்த ஒரு ஆட்சேபத்தையும் எவ்வகையிலும் அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல முடியாது போலும்.. இதுதான் ஜனநாயகமா? இறுதி வரை அரசாங்கம் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நாம் அனைவரும் தலை ஆட்டி பொம்மைகளாக இருக்க வேண்டுமா? தலையை ஆட்டாவிட்டால் தலைபோய் விடுமா?

போராட்டம் தொடரும்...

Read more...

பினாங்கில் ஜனநாயக செயல் கட்சியின் கருத்தரங்கம்

நேற்று 26-01-08-ல் பினாங்கு குட்டி இந்தியா அருகே உள்ள சீனர் மண்டபத்தில் ஜனநாயகச் செயல் கட்சி இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்தது. இக்கருத்தரங்கில் உரையாற்றுவதற்காக ஈப்போ பாராட் நாடாளுமன்றப் தொகுதி தலைவர் எம்.பி குலசேகரன், வழக்கறிஞர் சிவநேசன், வழக்கறிஞர் கர்பால் சிங்க், ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் லிம் கிட் சியாங், வழக்கறிஞர் கோபிந் சிங்க், பேராசிரியர் இராமசாமி மற்றும் பலர் வருகை புரிந்திருந்தனர். அரசாங்கம் தொடர்பாகவும், இந்து உரிமைப் பணிப்படைத் தலைவர்கள் தொடர்பாகவும், இந்தியர்கள் இந்நாட்டில் புறக்கணிக்கப்படும் விதத்தைப் பற்றியும் பல சூடான உரைகளை கேட்க முடிந்தது.

இக்கருத்தரங்கில் சுமார் 3000 பினாங்கு இந்தியர்கள் கலந்துக் கொண்டு ஆதரவு அளித்தனர்.

இதோ, அக்கருத்தரங்கின் படக்காட்சிகள் கீழே...பல பேச்சாளர்கள் இங்கே பேசினாலும், பேராசிரியர் இராமசாமியின் உரை என்னைக் கவர்ந்தது.. அவரின் துணிச்சலான பேச்சும் எனக்கு பிடித்திருந்தது.. அவரின் உரையில் சில பகுதிகள்...

பகுதி 1பகுதி 2மக்களிடம் நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.. எந்தக் கட்சியை நாம் ஆதரிக்கிறோம் என்பதைவிட நம் சமுதாய உரிமைகளுக்காக நாம் ஒட்டு மொத்தமாக போராடுகிறோமா என்பதுதான் முக்கியம். எந்தக் கட்சி தேர்தலில் வெற்றிப் பெற்றாலும் அக்கட்சி இந்தியர்களின் உரிமைகளை காப்பாற்றியே ஆக வேண்டும். இல்லையேல் இன்னொரு போராட்டத்திற்கு இந்திய சமுதாயம் இனிமேல் தயங்காது...

போராட்டம் தொடரும்...

Read more...

தைப்பூசமன்று ஈப்போவில் மெழுகுவர்த்தியேந்தி அமைதிப் பேரணி..

>> Saturday, January 26, 2008

தைப்பூசமன்று ஈப்போவில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணி..

பகுதி 1பகுதி 2வாழ்க ஈப்போ மக்கள்..!! வாழ்க மக்கள் சக்தி...!

போராட்டம் தொடரும்...

Read more...

மழலைகளின் கோரிக்கை...

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஐந்து தலைவர்களுடைய குழந்தைகள் தங்களுடைய தந்தைகளை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்..
அரசாங்கம் மழலைகளின் கோரிக்கையை நிறைவேற்றுமா...?

மலேசியாக்கினி ஒளிப்படக்காட்சி...
போராட்டம் தொடரும்...

Read more...

போர்ட் கிள்ளானில் நடைப்பெற்று வரும் உண்ணாநோன்புப் போராட்டம்..

மலேசியாக்கினி ஒளிப்படக்காட்சி...
போராட்டம் தொடரும்...

Read more...

தைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா...

பினாங்கு தண்ணீர் பந்தல்களில் அடிக்கடி ஒலிக்கப்பட்ட பாடல் வீரமணிதாசன் குரலில் ஆதித்யனின் அதிரடியான இசையில் தைப்பூசம் எனும் இசைத்தட்டில் வெளியான 'தைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா' எனும் பாடல்தான்.. கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பாடல் பினாங்கு தைப்பூசத்தை ஒரு கலக்கு கலக்கி வந்தது.

Veeramanidasan tha...


அண்மையில் வெளி மாநிலங்களில் உள்ள சில நண்பர்கள் இப்பாடலைக் கேட்டதில்லை, பத்துமலையில் கூட இப்பாடல் ஒலிக்கவில்லை எனக் கூறியது ஆச்சரியமாக இருந்தது.. பத்துமலையைப் பற்றிய பாடல் அல்லவா இது..!
அப்பாடல் கிடைத்தால் அனுப்பி வைக்குமாறு வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்பாடலை 'விண்டோஸ் மீடியா ஆடீயோ' எனும் வடிவில் இங்கு கொடுத்துள்ளேன். 'விண்டோஸ் மீடியா ஆடீயோ' வடிவு மிகவும் தரமானது. 'எம்.பி.3' வடிவமாக இருந்தால் ஒலித் தரம் சற்று குன்றியிருக்கும்.

அப்படி 'எம்.பி.3' வடிவாக வேண்டுமென்றால் இங்கே சுட்டுங்கள் : 'தைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா mp3'
விண்டோஸ் ஆடியோ பாடலைக் கேட்க இங்கே சுட்டுங்கள் : 'தைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா wma'

'விண்டோஸ் மீடியா ஆடீயோ' பாடலை பதிவிறக்கம் செய்திட கீழ்காணும் முறையைப் பின்பற்றுங்கள் :
சிலருக்கு புரியும்படி இருக்கவேண்டும் என்பதால் ஆங்கிலம் கலந்த தமிழில் வழிமுறைகளைத் தருகிறேன், மன்னித்துக் கொள்ளுங்கள்...

முதலில் இஸ்னிப்ஸ் தளத்தின் ஆடியோ ஒலிப் பகுதிக்குள் சென்று

உதாரணமாக இந்த தளத்திற்குச் செல்லவும்

http://www.esnips.com/web/BhaktiPaamalai

இந்த தொடுப்பைக் கிளிக்கவும்

veeramanidasan thaipusam.wma

உடனே டைட்டில் பார் இவ்வாறு காட்சியளிக்கும்
http://www.esnips.com/doc/8b7434ad-142c-4773-86f0-e7211c84bec8/veeramanidasan-thaipusam

மீடியா பிளேயர் திரையில் தெரிவதைக் கவனிக்கவும்

மீடியாபிளேயரில் வலது கிளிக்கவும். ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கவும். பைல் ப்ராப்பர்ட்டீஸ் பகுதியில் 'லொகேசன்' என்னும் இடத்தில் ஒரு முகவரி இருக்கும். உதாரணம்

http://www.esnips.com/nsdoc/8b7434ad-142c-4773-86f0-e7211c84bec8/?id=1201328570849

அதைக் காப்பி செய்து புதிய ப்ரவுசர் விண்டோவில் - அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யவும்

உடனே டவுன்லோடு - சேவ் அஸ் - உரையாடல் பெட்டி - சேவ் செய்யட்டுமா - ஆம் / இல்லை எனக் கேட்கும்.. இதை 'ஆம்' என்று கொடுங்கள்.

அல்லது நேரடியாக மீடியா பிளேயரில் பாடல் ஒலித்தால் File-ஐ கிளிக் செய்து Save Media as-ஐகிளிக் செய்யுங்கள்..

இப்போது இந்த பாடல் கோப்பு உங்கள் கணிணி வசம்...

அடுத்த வருட தைப்பூசத்தில் நாடெங்கும் இப்பாடலை ஒலியேற்றுங்கள்...

Read more...

மகா தலைவரின் தரிசனம் கிட்டியது...

>> Friday, January 25, 2008

தலைவர் உதயகுமார் தொடர்பான செய்தியைக் கேள்விபட்டதும் தைப்பிங் மருத்துவமனைக்கு விரைந்தேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பார்த்த மகா மனிதரை மீண்டும் தரிசிக்க வாய்ப்புக் கிடைத்தது..தைப்பிங்கில் மாலை வேளையில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால், திட்டமிடப்படி மெழுகுவர்த்தியை ஏந்த முடியாமல் போனது. இருப்பினும் மக்கள் அமைதியான முறையில் தலைவரை சென்று சந்தித்தார்கள். தலைவர் உதயகுமார் C4 எனும் சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்தார். அவ்வறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படாததால், அனைவரும் அறையின் வெளியே நின்றுக் கொண்டு கண்ணாடி வழியாக தலைவரை தரிசித்தோம். பலர் வாங்கி வந்த மலர்ச் செண்டுகளை அதிகாரிகள் அறையினுள் கொண்டுச் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே பூச்செண்டுகளை அறையின் வெளியே வைத்துவிட்டார்கள். ஆரம்பத்தில் சிகிச்சை அறையின் வெளியே நின்றுக் கொண்டிருந்த சிறை அதிகாரிகள் எங்களை புகைப்படம் எடுக்கவிடவில்லை. இருப்பினும் நாங்கள் அனைவரும் அவர்களைத் தாஜா செய்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.

முகத்தில் தாடியுடனும், கையில் விலங்குடனும், உடல் இளைத்தும் தலைவர் உதயகுமார் காணப்படார். இருப்பினும் அவரைப் பார்க்கச் சென்ற எங்களிடம் புன்னகையுடன் கையசத்து உற்சாக மூட்டினார். இவரைப் பார்த்த பொழுது 'மலேசியா காந்தி' என பெயர் சூட்டலாம் என நினைத்தேன்.. அதற்குக் காரணம் அவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, துணிவு, தெளிவு, சத்தியத்திற்காக போராடும் குணம் போன்றவை காந்தியடிகளை நினைவுப்படுத்தின..

இதோ, மகா தலைவர் திரு.உதயகுமாரின் திருவுருவம்...
ஒளிப்படக்காட்சி...எங்களுக்கு மிகவும் மனவேதனை அளித்த காட்சி, தலைவர் உதயகுமாரின் ஒரு கையில் விலங்கு போடப்பட்டிருந்தக் காட்சிதான்.. என்ன சட்டமோ தெரியவில்லை..! இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்..

இரவு மணி 7.30க்கு வருகைப் புரியும் நேரம் முடிவடைந்து விட்டதால் தலைவரை விட்டு பிரியாத மனதோடு பிரிந்தோம்..
நாளையும் தலைவரை சந்திக்கலாம்... தலைவர் உதயகுமார் தைப்பிங் மருத்துவமனையில் இருப்பது இபொழுதுதான் பலப் பேர்களுக்கு தெரிய வந்துள்ளது.. நாளை இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.. நாடு முழுவதிலுமுள்ள பல இந்து ஆலயங்களில் தலைவர் குணமடைய வேண்டி பல சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப் படுகின்றன..

தைப்பிங் மருத்துவமனையின் முகவரி : Hospital Taiping. Jalan Taming Sari. 34000 Taiping Perak D.R.

மருத்துவமனையின் தொலைப்பேசி எண் : 05-8083333

போராட்டம் தொடரும்...

Read more...

முக்கிய அறிவிப்பு..!! வழக்கறிஞர் உதயகுமார் உடல் நிலை பாதிப்பு..!! தைப்பிங் மருத்துவமனையில் சேர்ப்பு..!!


கடந்த மூன்று நாட்களாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வழக்கறிஞர் திரு.உதயகுமார் அவர்கள் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று தைப்பிங் மருத்துவமனையில் மாலை 6.30 மணியளவில் சேர்க்கப்பட்டார்.. அவர் கடுமையான வயிற்று வலியின் காரணமாக தைப்பிங் மருத்துவமனையில் C4 எண் கொண்ட சிகிச்சைக் கூடத்தில் ஒரு கை விலங்கிடப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவருக்கு நெஞ்சு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திரு.உதயகுமார் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பது அனைவருடைய கோரிக்கை.. தற்போது, இவரைச் சுற்றி நான்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் வைக்கப்பட்டுள்ளனர்.. நோய்வாய்ப்பட்டவர்களை இவ்வழி நடத்துவது மிகவும் கண்டிக்கத் தக்கது.

எனவே இச்செயலை கண்டிக்கும் வகையில், இன்று மக்கள் சக்தி தைப்பிங் மருத்துவமனையின் முன் ஒன்றுகூடவிருக்கின்றனர்.. பலரும் இக்கூட்டத்திற்கு வந்து மக்கள் சக்தி யாரென்பதை நிரூபிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்..

தற்போது லண்டனில் வசித்து வரும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் வழக்கறிஞர் திரு.வேதமூர்த்தி மலேசிய இந்தியர்களை தொடர்ந்து அநீதிக்கு எதிராகப் போராட கேட்டுக் கொண்டுள்ளார்..

நிகழ்வு நடைப்பெறுமிடம் : தைப்பிங் மருத்துவமனை

திகதி : இன்று 25-01-2008

நேரம் : மாலை 6.30 மணி

பொருட்கள் : மெழுகுவர்த்தி / அகல் விளக்கு / பூக்கள் , முடிந்தால் மக்கள் சக்தியின் ஆரஞ்சு நிற சட்டை அணிந்து வரவும்.. அவ்வுடை இல்லாவிடில் வேறு ஆரஞ்சு நிற உடையை அணிந்து வரவும்..

நேரமாகிவிட்டதால், நானும் தைபிங்கிற்கு இப்பொழுது செல்லவிருகின்றேன்.. அங்கு சந்திப்போம்...

மக்கள் சக்தி வாழ்க...!!

போராட்டம் தொடரும்....

Read more...

இறுதிநாள் வெள்ளி இரதம் புறப்பட்டது...

நேற்று தைப்பூசத்தின் உச்சக்கட்டமான இரதப் புறப்பாடு நடைப்பெற்றது... பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வேன்டுதல்களை நிறைவேற்றினர்.. அர்ச்சனை, அன்னதானம், தேங்காய் உடைத்தல் என பினாங்கு வெள்ளி இரத புறப்பாடு அமர்க்களப்பட்டது.. இதோ, அதன் ஒளிப் படக்காட்சிகள்...ஆயிரக்கணக்கில் தேங்காய்கள் உடைக்கப்படும் காட்சிமேலும் பல படக்காட்சிகள் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன...

Read more...

பத்துமலைத் திருத்தலத்தை புறக்கணித்த பக்தர்கள்...

>> Thursday, January 24, 2008

22-ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு பத்துமலை வளாகம்... இலட்சக்கணக்கில் மக்கள் கூடியிருக்க வேண்டிய இந்நேரத்தில் சில ஆயிரங்கள் பேர்கள் மட்டும் கூடியுள்ளக் காட்சி...
22-ஆம் திகதி இரவு 8.00 மணியளவில்....


தைப்பூச தினத்தன்று...Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP