நடிகர் எம்.என் நம்பியார் மரணம்..!

>> Wednesday, November 19, 2008


வில்லனுக்கு வில்லன் எனப் புகழப்பட்ட பிரபல நடிகர் எம்என் நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். சிறிது காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் நம்பியார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், இன்றைய முதல்வர் மு.கருணாநிதி ஆகியோருக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தவர் நம்பியார்.


பழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார் மரணம்!

சென்னை: அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.

எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நட்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:

எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.

அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் குணச்சித்திரமும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.

நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.

தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.

நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதராகவே வாழ்ந்தார் நம்பியார்.

பாசகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

அஞ்சலி

கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்தி : தட்சுதமிழ்.காம்

வில்லனாகத் திரையில் வலம் வந்தாலும் நிச வாழ்க்கையில் மனிதருள் மாணிக்கமாகவும் ஐயப்பனின் தூய பக்தராகவும் திகழ்ந்த எம்.என் நம்பியார் அவர்களின் ஆத்துமா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போமாக..

ஆயிரத்தில் ஒருவன் - காட்சி

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

மு.வேலன் November 20, 2008 at 10:52 AM  

அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

http://aranggetram.blogspot.com/2008/11/blog-post_20.html

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP