லண்டன் வழக்கு மலேசிய அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கலாம்

>> Monday, March 30, 2015

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிந்திய வியர்வைக்கும் இரத்திற்கும் நீதி கேட்கும் உரிமைப் போராட்டம்தான் இந்த லண்டன் வழக்கு: வேதமூர்த்தி

மலேசிய அரசியல் சாசனம் 1957-இல் வரையப்பட்டபோது, இந்தியர்களின் நலனையும் மற்ற இனத்தினரின் பாதுகாப்பையும் பிரிட்டிஷ் அரசு அடியோடு புறக்கணித்து விட்டதாக ஹிண்ட்ராஃப் தொடர்ந்துள்ள சிவில் வழக்கு, இலண்டன் உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருக்கின்ற நிலையில் இது, மலேசிய அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கலாம்; ஆனால், ஹிண்ட்ராஃப்-பின் நோக்கம் அதுவல்ல என்று இவ்வழக்கு தொடர்பாக இலண்டன் மாநகரில் முகாமிட்டுள்ள ஹிண்ட்ராஃப் தலைவர் பொ.வேதமூர்த்தி அங்கிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய தோட்டத் தொழிலாளர்களை அப்போதைய பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டே புறக்கணித்ததால், மலாயா இந்தியத் தொழிலாளர்கள் சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளானதுடன், மலேசியாவில் வாழ்கின்ற மற்ற இனத்தினரின் ஓர் இளப்பமான பார்வைக்கும் ஆளான நேர்ந்தது.

ஏறக்குறைய 8 இலட்ச பாட்டாளிகள் இடம்பெயர வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளானதுடன், அவர்கள் வேலையை இழந்து, இருப்பிடம் இன்றி மொத்தத்தில் வாழ்வாதாரத்தைத் தொலைத்து நகர்ப் புறாத்தில் அல்லல்பட நேற்ந்தது. அத்துடன், ஏறக்குறைய 3 இலட்ச மலேசிய இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக ஆயினர். மொத்தத்தில் சுதந்திர மலேசியாவின் தேசிய பொருளாதார மேம்பாட்டில் இந்தியர்கள் ஒதுங்கி நிற்க நேர்ந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சுதந்திர மலேசியாவில், அம்னோ தலைமையிலான கூட்டணி அரசு, இன அடிப்படையிலும் ஏற்றத் தாழ்வு மனப்பான்மையிலும் செயல்படுவதற்கு பிரிட்டிஷ் ஆட்சியினர்தான் அடித்தளமிட்டனர் என்பதை மையக் கருத்தாகக் கொண்டுதான் ஹிண்ட்ராஃப் தொடுத்துள்ள வழக்கு இன்று மார்ச் 30-ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது என்று வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய இந்தியப் பாட்டாளி சமுதாயம் எதிர் கொண்ட துயரத்திற்கும் நட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசு பொறுப்பாக முடியாது என்று இந்த வழக்கை பிரிட்டிஷ் அரசு எதிர்க்கலாம. அதேவேளை, பிரிட்டிஷ் அரசுதான் பொறுப்பு என்பதற்கு ஹிண்ட்ராஃப் ஆயிரக் கணக்கான ஆவணங்களைத் திரட்டியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியேற்ற நிலம் வழங்குவதாக வாக்குறுதி தந்த அந்நாளைய பிரிட்டிஷ் நிர்வாகம் அப்பட்டமாக ஏமாற்றி விட்டது. கடல் பயணத்தின்போதும் மலாயாவின் காடுகளை அழித்து நிலத்தைத் திருத்தியபோதும் ஏறக்குறைய ஒரு இலட்சப் பாட்டாளிகள் மடிந்தனர். இதையும் பிரிட்டிஷ் அரசு மூடி மறைத்துவிட்டது.

மலாயாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கிய இரப்பர் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றியவர்கள் இந்தியத் தொழிலாளர்கள், குறிப்பாக தமிழர்கள். அத்துடன், நாடு முழுக்க இரயில் தண்டவாளங்களை அமைத்தது, கட்டடங்களை நிர்மானித்ததெல்லாம் தமிழர்கள்தான். குறைந்த சம்பளத்துடனும் அடிப்படை வசதிகூட இல்லாமலும் பாடுபட்ட தொழிலாளர்களுகாகக் குரல் கொடுத்த சமூகத் தலைவர்களான கணபதி, வீரசேனன் போன்றோரை கம்யூனிசவாதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களை தூக்கிலிட்டு கொன்றதும் பிரிட்டிஷ் அரசுதான்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மஇகா தலைவர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் கூட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்காமல், அதிகார வர்க்கத்துடன் சமரசம் கண்ட தலைவர்களாக இருந்தனர்.
இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ், பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இருந்த தோட்டங்களில் பிறந்த நம் முன்னோர், ‘1948 பிரிட்டிஷ் குடியுரிமை(தேசிய)ச் சட்ட’த்தின்படி பிரிட்டிஷ் பிரஜைகளாவர்.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் பிரிட்டிஷ் அரசு தன் கடமையிலிருந்தும் பொருப்பில் இருந்தும் விலகிக் கொண்டதற்காக, குறிப்பாக நம் முன்னோர் சிந்திய இரத்தத்திற்கும் வியர்வைக்கும் நியாயத்தையும் நீதியையும் கேட்கும் உரிமைப் போராட்டம்தான் இந்த சிவில் வழக்கு என்று பொ.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொ. வேதமூர்த்தி
தலைவர் - ஹிண்ட்ராஃப்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP