இறுதிவரை லிம் குவான் எங் மக்களைச் சந்திக்கவில்லை! - காணொளி காட்சி

>> Friday, July 3, 2009

கடந்த 30-ஆம் திகதி சூன் மாதம் மாலை நான்கிலிருந்து இரவு எட்டு மணிவரை இண்ட்ராஃபுடன் நடைப்பெற்ற கம்போங் புவா பாலா மக்களின் அமைதி மறியல் காணொளி காட்சி உங்கள் பார்வைக்கு...

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4


பாகம் 5


மற்ற பாகங்கள் படிப்படியாக பதிவேற்றப்படும். இந்நிகழ்வில் மக்கள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கை சந்தித்து மனு கொடுக்க வெகுநேரம் காந்திருந்தும், அவர் வர மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



இதற்கிடையில், சில நாட்களாகவே நாளிதழ்களிலும் சரி, இணையத்தளங்களிலும் சரி கம்போங் புவா பாலா விவகாரத்தைப் பற்றிய அரசியல்வாதிகளின் கருத்துகளும், வலைஞர்களின் கருத்துகளும் பொதுமக்களின் நலன்களைச் சார்ந்திராமல், ஆளாளுக்கு இவ்விடயத்தை 'Dollar and Cents' என்கிற ரீதியிலும், தனி மனித தாக்குதல்கள், குறைகூறல்கள் என்கிற ரீதியிலும் கொண்டுச் செல்வது மிகவும் வருத்தத்தையளிக்கிறது. யாராவது அங்குள்ள மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறார்களா? அவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டார்களா? பாதிக்கப்பட்டவர்களை விட்டுவிட்டு தேவையில்லாத விடயங்களைப் பெரிதுபடுத்துவதோடு மட்டுமல்லாது, வழக்கம்போல் உண்மைச் செய்தியிலிருந்து மக்களை திசைதிருப்புவது, கதையை திரித்துச் சொல்வது என்று தொடர்ந்து வருகிறது. இதன் காரணம், கணினியின் முன்பு அமர்ந்துகொண்டு தேநீரை சுவைத்துக் கொண்டே செய்திகளை வாசிப்பவர்களுக்கு முழு விவரங்கள் தெரிவதில்லை. அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சனைகளை மக்களின் முன்பு வைப்பதைவிட 'Dollar and Cents' என்கிற ரீதியில் குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதுதான் காரணம்.

அண்மையில் செய்தித்தாள்களிலும் இணையத்தளங்களிலும் 'இண்ட்ராஃப்' இயக்கத்தின் மீது கடுந்தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. அனைத்திற்கும் அரசியல் காரணங்கள் என பலர் வசைப்பாடுகின்றனர். குறிப்பாக இன்றைய நாளிதழ்களை எடுத்துப் படித்துப் பாருங்கள். எங்காவது புவா பாலா மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு என அலசி ஆராயப்பட்டுள்ளதா? அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நியாயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளனவா? அதிகாரத்துவமும் முதலாளித்துவமும் ஏழை மக்களை நம் கண் முன்னேயே நசுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? சுவையாக செய்திகளைப் படித்து கருத்து கூறிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது களத்தில் இறங்கி உண்மையை உணர்ந்து அதற்கேற்ப ஏதேனும் நடவடிக்கைகளில் இறங்குகிறீர்களா?

இவர்களுக்கெல்லாம் ஓர் உண்மை தெரியவில்லை. இவ்விவகாரத்தில் 'இண்ட்ராஃப்' மட்டுமல்ல, ஜெரிட் என்றழைக்கப்படும் 'ஒடுக்கப்பட்ட மக்களின் வலையம்', சுவாராம் மனித உரிமைக் குழு, 'அலிரான்', மலேசிய சோசியலிச கட்சி என இன்னும் பிற அரசு சார்பற்ற இயக்கங்கள் போராடி வருகின்றன. காரணம், இவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியும். புவா பாலா மக்கள் எப்படி திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். மக்கள் கூட்டணியை இண்ட்ராஃப் எதிர்ப்பதற்கு முக்கிய காரணமே இதுதான். புவா பாலா கிராம நிலத்தை பாரிசான் அரசு 'கோப்பராசி பெகாவாய்-பெகாவாய் கானான் புலாவ் பினாங்'கிற்கு அம்மக்களுக்கே தெரியாமல் குறைந்த விலையில் விற்றது என்றால், பினாங்கு மக்கள் கூட்டணியோ அந்நிலத்தை அம்னோவுடன் தொடர்புகொண்ட 'நுஸ்மெட்ரோ வெஞ்சூர்ஸ்' எனும் மேம்பாட்டாளருக்கு விற்க அனுமதியளித்திருக்கிறது. லிம் குவான் எங்கின் வழக்கறிஞர்களில் ஒருவர் அந்நிலத்தை மேம்பாட்டாளருக்கு விற்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட பொழுதும், லிம் அவரின் அறிவுரையைக் கேட்கவில்லை. எனவே, நியாயப்படி இப்பொழுது நடைப்பெறும் பிரச்சனைகளுக்கு லிம் குவான் எங் கண்டிப்பாக பொறுப்பேற்றாக வேண்டும்.

அதன் முதல் நடவடிக்கையாக அவர் மக்களை எப்பொழுதோ சந்தித்து விளக்கமளித்திருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை. அவரைப் பார்க்கச் சென்ற மக்களையும் அவர் சந்திக்க மறுத்திருக்கிறார். இச்செயல் எதனைப் புலப்படுத்துகிறது. 'மலேசிய சோசியலிச கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அருட்செல்வன் கூறியது போல, "கிராமத்தை உடைக்கும் நாள் வரும். அப்பொழுது தெரியும், மக்கள் கூட்டணி மக்கள் பக்கமா, அல்லது மேம்பாட்டாளர்கள் பக்கமா என்று. இவர்களின் சாயம் அன்று வெளுக்கும்!"

இந்நாட்டில் தமிழர்களுக்கென்று எத்தனையோ அரசு சார்பற்ற இயக்கங்கள் இயங்கிவருகின்றன. தமிழுக்காக போராடுகிறோம் என்கிறார்கள். அத்தமிழைப் பேசும் மக்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களைப் பாதுகாப்பதில் முயற்சிகள் எடுப்பதில்லை. இதுநாள்வரையில் எந்தவொரு தமிழர் இயக்கமும் இவ்விவகாரத்தில் இணைந்து தோள் கொடுக்க முன்வரவில்லை. வாய் கிழிய பேசவும் , அறிக்கை விடவும் நேரம் இருக்கிறது. ஆனால் களத்தில் இறங்குவதற்கு இந்நாள்வரை ஓர் இயக்கமும் முன்வரவில்லை.

புவா பாலா கிராமத்தை மீட்டெடுக்க இண்ட்ராஃப் முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தயவு செய்து களத்தில் இறங்கி உதவ நினைப்பவர்களையும் உங்கள் அறிக்கைச் சாணிகளால் அடிக்காதீர்கள். முடிந்தால் இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருக்கிறது. களத்தில் துணிந்து இறங்குங்கள்!

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP