ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை

>> Tuesday, April 20, 2010



மூலம் : சிறுபான்மை இனத்தவருக்கான வெற்றிகரமான குறியிலக்கை உறுதிச் செய்தல் : குறைந்த வருமானம் பெறும் மலேசிய இந்தியர்கள், ஒரு பார்வை. (பொதுக் கொள்கைகள் ஆய்வு மையம்)

1970-ஆம் ஆண்டுகள் தொடங்கி செயல்முறைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் பெருந்திட்டங்களின் வரைவுகளை ஆய்வு செய்யும்பொழுது, குடிப்பெயர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏழை கிராமப்புற இந்தியர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை பலகாலமாகவே அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகக் காட்டுகிறது. இந்நிலைமை குறித்த விழிப்புணர்வு இருப்பினும், நாளுக்கு நாள் பெருகிவரும் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக குறைந்த அளவிலான சில திட்டங்களே அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அதே சமயம், குறைந்த வருமானம் பெரும் இந்திய சமுதாயத்தினரின் ஏற்றத்திற்கு மானியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிகளும் அவை சென்றடைந்த வழிகளும் நிலைமையை சரி செய்வதில் தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது.

பெரும்பான்மை இந்தியர்கள் சமூக-பொருளாதார ரீதியில் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் தோட்டப்புறங்களில் நிலவிய பொருளாதாரச் சூழ்நிலைதான். சில பரம்பரைகளாகவே வேலை வாய்ப்பிற்கும், குடியிருப்பு வசதிக்கும் இந்திய வம்சாவளியினர் தோட்டப்புற ஆலைகளை நம்பியிருந்த சூழ்நிலை இருந்து வந்தது. இந்த தோட்டப்புற தொழிலாளர்கள் குறைந்த வருமானம் பெருபவர்களாகவும், அடிப்படை வசதிகள் குறைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களாகவும், முறையான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் அற்றவர்களாகவும் அதே சமயம், அவர்களின் பிள்ளைகள் குறைந்த அடிப்படை வசதிகள் கொண்ட தமிழ்ப் பள்ளிகளில் தங்களின் ஆரம்பக் கல்வியைப் பெறும் சூழ்நிலையும் இருந்து வந்தது. தோட்டப்புறங்களும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என அரசாங்கத்தால் முத்திரைக் குத்தப்பட்டதன் விளைவாக, 70-ஆம் மற்றும் 80-ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்கள் தோட்டப்புற மக்களைச் சென்றடையவில்லை. இருப்பினும், தோட்டத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என அரசாங்கம் வகைப்படுத்தியிருந்ததால், தோட்டப்புற குடியிருப்பு வசதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டங்களை அமுல்படுத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டு மிகக் குறைந்த அளவிலேயே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

1980-ஆம் ஆண்டு தொடங்கி நாட்டின் பொருளாதாரம் அதிவேகத்தில் முன்னேற்றத்தைக் கண்டுவந்த வேளையில், தோட்டப்புற இந்திய சமூகம் நாட்டின் பொருளாதார வெள்ளோட்டத்திலிருந்து பின்தள்ளப்பட்டும் அனைத்துவிதமான மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து ஒதுக்கப்பட்டும் பாதிப்பிற்குள்ளாயினர். கடந்த 20 ஆண்டுகளில் புதிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும் தோட்டப்புற நிலங்கள் துண்டாடப்பட்ட சமயங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை இந்தியர்கள் குடிப்பெயர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தோட்டப்புறங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இவர்கள் தங்களின் வருமானம் ஈட்டும் தொழிலை மட்டும் இழக்கவில்லை, மாறாக, மேலும் முக்கியமாக குடியிருப்பு, வாழ்ந்தச் சூழல், அடிப்படைச் சலுகைகள், சமூக-கலாச்சார தொடர்புடைய வசதிகள் மற்றும் காலங்காலமாக தோட்டத் தொழிலாளர் சமூகம் கட்டியெழுப்பிய சமூக வலுவாக்க அரண் போன்றவற்றை இழக்க நேரிட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாது, தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் குடும்ப வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக தோட்ட நிறுவனம் வழங்கிய சிறு விவசாய நிலங்கள், கால்நடை வளர்ப்புக்கு வழங்கிய நிலங்கள் போன்றவற்றையும் இழந்துள்ளனர். தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடியமர்வு செய்யப்படும் தோட்டத் தொழிலாளர்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்பது முன்பே அறியப்பட்ட விடயமாகும். பெருமளவிலான கட்டாயக் குடியமர்விற்கு ஆளான தோட்டத் தொழிலாளர்கள் உளவியல் ரீதியில் பல பிரச்சனைகளையும் எதிர்நோக்கிய வேளையில், இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எந்தவொரு திறன் பயிற்சிகளையும் வழங்கியோ அல்லது மேம்படுத்தப்பட்ட குடியிருப்புச் சூழலில் இவர்களை மறுகுடியமர்வு செய்ததோ கிடையாது.

தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP