ஓரங்கட்டப்படும் மலேசிய இந்தியர்கள் - பாகம் 1

>> Wednesday, December 2, 2009

இந்தத் தொடரின் வழியாக மலேசிய இந்தியர்கள் எப்படியெல்லாம் ஓரங்கட்டப்படுகின்றனர் என்பதனை படம் பிடித்துக் காட்ட விரும்புவதோடு, எப்படியெல்லாம் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பனவற்றை அடுக்கடுக்கான விளக்கங்களோடு விவரிக்கவுள்ளேன். மலேசிய இந்திய ஏழை சமூகத்திற்கு எதிராக நடந்தவையெல்லாம் தவிர்க்கவியலாத காரணங்கள் என பரவலாக நிலவிவரும் மாயையை எனது தொடர் கட்டுரையின்வழி உடைத்தெறியவிருக்கிறேன். இச்சமூகத்தினரிடையே நற்பண்புகள் குறைந்திருப்பதாகவும், சமய அறிவு அற்றவர்களாகவும், அளவுக்கதிகமாக ஆஸ்ட்ரோ பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும், அடிப்படையில் வன்முறை கொண்டவர்களாகவும் மற்றும் இன்னும் பலவிதமான மாயாவாத காரணியங்களை நம் சமூகத்திலுள்ளவர்களும் பிற சமூகத்தைச் சார்ந்த தற்காலத்திய தத்துவவாதிகள் நிறுவி நம்மை நம்பச் செய்கின்றனர்.

இதோ முதல் பகுதி

இத்தொடரை நன்கு விளங்கிக் கொள்ள சில அடிப்படை தகவல்களோடு துவங்கலாம் என நினைக்கிறேன்.

மலேசியாவின் அடிப்படைத் தரவு
இனவாரியான மக்கட் தொகை கணக்கெடுப்பு, 2009



மேற்காணும் பட்டியலில் மலேசிய இந்தியர்களின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 7.4 சதவிகிதம் என மலேசிய புள்ளிவிவர இலாகா தகவல் வெளியிட்டுள்ளது. இதில் மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கையானது தனித்தன்மை வாய்ந்த சிறுபான்மையினர் குழாம் எனத் தெளிவாகத் தெரிகிறது.

நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை நாட்டு மொத்த உற்பத்தியில் தனி நபரின் ஆண்டு வருமானமானது 1960-ஆம் ஆண்டில் ரிம2500லிருந்து 2008-ஆம் ஆண்டிற்குள் ரிம15000 வரை உயர்ந்துள்ளது. இது ஒரு கணிசமான உயர்வு என்றே கொள்ளலாம். அடிப்படையில் நாட்டின் பொருளாதாரமானது கொள்முதல் பண்டங்கள் உற்பத்தி மற்றும் வேளாண்பொருளாதாரத்தையே (ரப்பர் மற்றும் செம்பனை எண்ணெய் உற்பத்தி) நம்பியிருந்த காலம்போய், தற்போது தயாரிப்புத் துறையை சார்ந்திருக்கும் பொருளாதாரத்தை நம்மால் காண முடிகிறது.

கீழ்காணும் அட்டவணையைக் காண்க :



நாட்டின் வளப்பத்திற்கு அச்சாணியாகவும் நவீன விவசாய உற்பத்தியாகவும் கருதப்பட்ட ரப்பர் உற்பத்தித் துறையில் மலேசிய இந்தியர்களின் பங்கு அளப்பரியதாகும். மலேசிய இந்தியர்களில் பெரும்பாலானோர் ரப்பர் தோட்டங்களில் மரம் சீவும் உடலுழைப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். விவசாயத் துறை என்றாலே உணவு உற்பத்தி என்ற நிலையை மாறச் செய்து பெரும் முதலீடுகளை ஈர்த்து பணம் ஈட்டும் ஒரு துறையாகவும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வரும் ஒரு துறையாக ரப்பர் உற்பத்தித் துறை விளங்கத் தொடங்கியது. ரப்பர் உற்பத்தித் துறை வளர்ச்சி பெற்றுவந்த காலக்கட்டங்களில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு பெருமளவில் மாற்றத்தை அடைந்து புதியதொரு பரிணாமத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. நடவுத் தொழிலைச் சார்ந்திருந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல தொழிற்சாலை உற்பத்தியை சார்ந்திருக்கும் பொருளாதார நிலைமைக்கு தன்னை இட்டுச் செல்ல வழி அமைத்துக் கொண்டது. ஆங்காங்கே புதிய தொழிற்சாலைகள் பல தோன்றத் தொடங்கியதிலிருந்து ரப்பர் தோட்டங்களை நம்பியிருந்த பொருளாதாரம் தொழிற்சாலைகளை மையப்படுத்தி வளரத் தொடங்கியது. இதன்வழி நாட்டின் பெரும்பணம் ஈட்டும் முதன்மை துறையாக தொழிற்சாலை உற்பத்தித் துறை இடம்பெற்றது.

பொருளாதார நிலைமை பெரும் மாற்றத்தை கண்டுவந்த அதே சமயம் நாட்டின் அரசியல் நிலைமையும் பெரும் மாற்றத்தைக் கண்டுவந்தது. நம் நாட்டின் முக்கிய அரசியல் பரிணாமங்களை நான்கு கட்டங்களாக வகுக்கலாம், அதாவது 1957 முதல் 1969வரை, 1969 முதல் 1981வரை, 1981 முதல் 2004வரை, 2004 முதல் 2008வரையாகும். ஒவ்வொரு கட்டங்களும் வரலாற்று பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அவை நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதிய சம்பவங்களோடு பிணைத்து, அவை ஏற்பட்டதற்கான காரணங்களையும் விளக்கிக் காட்ட வல்லவையாகும்.

இவ்வளவு பரிணாமங்களுக்கு இடையில் மலேசியாவின் சிறுபான்மையினராக விளங்கும் மலேசிய இந்தியர்கள் நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக முன்னேற்றங்களிலிருந்து திட்டமிட்ட தேசியக் கொள்கைகளினால் வெளிப்படையாகவே ஓரங்கட்டப்பட்டு வந்தனர்.

மலேசியா அடைந்துவந்த துரிதமான பொருளாதார வளர்ச்சியின் பலனாக குறிப்பிட்ட சில இனங்களுக்கு கிடைத்துவந்த பலவிதமான உதவிகளைப் போலவே மலேசிய இந்தியர்களுக்கு சரிசமமான உரிய பங்கீடு ஒதுக்கப்படவில்லை. இந்தத் தொடரின்வழி மலேசிய இந்தியர்களில் ஏழை வகுப்பினர் நாட்டின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எந்தெந்த ரீதியில் புறக்கணிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வந்தனர் என்பதனையும், எதனால் அவர்கள் ஓரங்கட்டுதலுக்கு ஆளானார்கள் என்பதனையும் விளக்க முயல்கிறேன்.

பெரும்பாலும் நமக்கு சில உண்மைகள் தெரியும். ஆனால், நமக்குத் தெரிந்தவை அங்கும் இங்கும் நிகழ்கிற சில சம்பவங்கள், மற்றும் திரிந்துபோன சில செய்திகளை மட்டுமே நாம் அறிந்து வைத்திருக்கிறோம். நான் செய்யவிருப்பது என்னவென்றால், ஆங்காங்கே நடந்த பல்வேறு சம்பவங்களை இணைத்து, புள்ளிகளை இணைத்துப் பார்த்து அவை சொல்லும் உண்மைகளை ஒரு பெரிய படமாக வரைந்து அதன் பின்புலங்களை உங்களுக்குத் தெளிவாக காட்டவிருக்கிறேன்.

ஆனால், முதலில் ’ஓரங்கட்டப்படுதல்’ என்ற பதத்தின் அர்த்தத்தை சற்று விளக்கிவிடுகிறேன்.

சமூகவியல் பார்வையில் ‘ஓரங்கட்டப்படுதல்’ என்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை கட்டங்கட்டமாக சில அதிரடி மறைமுக செயல்முறைகளின்வழி தொடர்ச்சியாக ஒடுக்கியும், நாட்டின் முக்கிய பொருளாதார வளர்ச்சியில் இருந்து ஒதுக்கியும், சில வரைமுறைகளின்வழி சமுதாய அடிமட்டத்தில் எல்லைக்குட்படுத்தி முக்கியமற்றவர்களாக முத்திரைக் குத்தப்பட்ட ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தி ( மலேசிய இந்தியர் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு இது மிகப் பொருந்தும்) நிரந்தரமாக புறக்கணிப்பதுதான் அதன் அர்த்தம். ‘ஓரங்கட்டுதலின்’ கொடூர நீட்சியானது ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களையே அடியோடு வேரறுக்க இன அழிப்புவரை அதன் கரங்களை நீட்டச் செய்யும்.

இன்றுவரை பல சமூகங்கள் ‘ஓரங்கட்டுதலுக்கு’ உள்ளாகி சின்னாப்பின்னமாகியிருக்கின்றன. அதன் விளைவாக பலர் தங்களின் குடியிருப்புகளையும் சொந்த நிலங்களையும் இழந்திருக்கின்றனர், வலுக்கட்டாயமாக வறுமை புரையோடும் ஒதுக்குப்புற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர், பரம்பரை தொழிலையும் அதன் மூலம் ஈட்டக் கூடிய வருமானத்தையும் இழந்திருக்கின்றனர், வேலை வாய்ப்புகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். மேற்படியாக தங்களின் கலாச்சாரத்தையும் இழந்து, சமூகத்தில் கிடைக்கப்பெற வேண்டிய அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாக வலுவிழந்து போனவர்கள் ஏராளம்.

மலேசிய இந்திய சமுதாயம் தொடர்ச்சியாக மலேசிய சமூகத்திடமிருந்து ‘ஓரங்கட்டப்பட்டு’, இன்றுவரை சில அடிப்படை உரிமைகளுக்கே போராட வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டதன் அடிப்படைக் காரணம் யாதெனில், அரசாங்கத்தின் நடைமுறைப் போக்குகளும், பக்கச்சார்பாக வகுக்கப்பட்ட தேசியக் கொள்கைகளும் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் யாவுமே அதிகார வர்கத்தின் தேவைகளுக்கேற்பவும், தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு நாட்டின் வளங்களைச் சூறையாடி, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகளை புறக்கணிப்பதும் தொடர்ந்து நடைப்பெறுவதால்தான். இந்த ’ஓரங்கட்டுதலை’ நடைமுறைப்படுத்துவதிலும், அதனை பொது கண்ணோட்டத்திலிருந்து மறைப்பதிலும், திசைத்திருப்புவதிலும் அதிகார வர்க்கத்தினருக்கு முக்கியமான பங்கு உண்டு. நம்மிடையே நிலவும் பொதுவான கருத்துகளை அதிகார வர்கத்தினருக்கு சாதகமாக நிலைப்பெறச் செய்வதிலும், வலுப்படுத்தச் செய்வதிலும் அவர்கள் பலவிதமான உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை உண்மையின் அடிப்படையில் தெரிந்து கொள்வதற்கும் அணுகுவதற்கும் நமக்கு விதிக்கப்பட்ட சில வரைமுறைகளின்வழியும் தடைகளின்வழியும் உண்மை நிலவரங்களைத் தவறாக புரிந்துகொள்ளக் கூடிய சாத்தியங்களை விதைக்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர். இதன் விளைவாக உண்மையிலேயே மலேசிய இந்திய சமுதாயம் ‘ஓரங்கட்டப்பட்டு’ வருகிறதா என்ற சந்தேகத்தினை நமது சிந்தனையில் நாமே விதைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியங்களை அதிகார வர்க்கத்தினர் ஏற்படுத்துகிறார்கள்.

என்னுடைய பணி இதுதான். நிலவரங்களைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதோடு மட்டுமல்லாது, அதற்கான பின்னணிகளை ஆய்ந்து எடுத்துரைக்கவிருக்கிறேன்.

மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் ‘ஓரங்கட்டுதல்’ பன்முகங்கள் கொண்டவை. குறிப்பாக அதனை நான்கு பிரிவுகளாக நாம் வகுக்கலாம்.

1) பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

மலேசிய இந்திய சமூகம் தன்னை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்திக் கொள்வதை நிராகரித்தல். நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வெள்ளோட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுதல்.

2) அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

நாட்டு வளப்பம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான பிரத்தியேக ஒதுக்கீடுகள் குறித்த முடிவெடுக்கும், நிர்ணயிக்கும் தகுதிகளையும் சரிசமமான வாய்ப்புகளையும் அரசியல் ரீதியில் மலேசிய இந்தியர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தல். நாட்டின் நேர்மையான அரசியல் செயல்பாடுகள் அரசியல் செல்வாக்குகளின்வழி கைப்பற்றப்படுதல். அதன் விளைவாக நாட்டு குடிமகனுக்கும், சிறுபான்மை வகுப்பினருக்கும் உரிய அடிப்படை அரசியல் உரிமைகள் பறிக்கப்படுதல்.

3) சமூக ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

கொதிக்கும் நீரின்மீது மிதக்கும் அசுத்த நுரையாக மலேசிய இந்தியர்களில் உழைக்கும் வர்க்கத்தினரின்மீது பல்வகையான முத்திரைகளைக் குத்தி அவர்களை ஒதுக்கி வைத்தல். மலேசிய இந்தியர்களின்மீது பொதுவாக நிறுவப்பட்ட சில மதிபீடுகள் யாதெனில், கூலிகள், குடிகாரர்கள், நம்பிக்கையற்றவர்கள், கறுப்பர்கள், அசுத்தமாகவும் துர்நாற்றமும் வீசக் கூடியவர்கள், பிறரை நம்பி சார்ந்திருப்பவர்கள், மற்றும் ஏழ்மை என்ற ஒரே காரணத்தினால் இன்னும் சில முத்திரைப் பெயர்களை இவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலும் மலேசிய இந்தியர்கள் குறித்த மற்றுமொரு வேடிக்கையான மதிப்பீடானது என்னவென்றால், மலேசிய இந்தியர்கள் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால், அவர்கள் மற்ற இனங்களைக் காட்டிலும் தரத்தில் சற்று தாழ்ந்தவர்களாம்.

பட்டியல் நீண்டுபோகும் பல தடைகளை உள்வாங்கிக் கொண்டு போராடும் ஒரு ஏழைச் சமூகம், தன்னை உயர்த்திக் கொண்டு தானும் மனிதன்தான் என்ற பெருமையோடு முன்னேறிச் செல்வதானது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. வாய்ப்புகளைப் பெறவும், பயன்படுத்தவும், மேம்படுத்திக்கொள்ளவும் மறுக்கப்பட்ட ஏழை மலேசிய இந்திய சமுதாயம் தன்னுடைய முக்கிய அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட வழியில்லாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

நான் மேற்குறிப்பிட்டப்படி ‘ஓரங்கட்டப்படுதல்’ எனும் திட்டங்களின் பிரிவுகளை ஒவ்வொரு கூறாக எனது தொடர் கட்டுரைகளின்வழி தெளிவுற விளக்கிக் காட்டவுள்ளேன். சமூகவியல் அடிப்படையில் ‘ஓரங்கட்டப்படுதல்’ ஏன் நிகழ்கிறது என்பதனை மேலும் விரிவாக விவாதிக்கவுள்ளேன். காலங்காலமாக மலேசிய இந்தியர்களின் நிலைமையினை மையப்படுத்தி எழுந்த பலவிதமான அலுப்புத் தட்டுகின்ற காரணங்களை உடைத்தெறிந்து, மலேசிய சமூகத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள் இன்று வகிக்கும் பங்கிற்கு மூலகாரணம் குறித்தும் எழுதவிருக்கிறேன். நிச்சயமாக இத்தனைக்கும் நாம் இந்தியர்கள் / தமிழர்கள் என்ற ஒரே காரணம் அல்லது நமக்குள் உறைந்திருப்பதாக பேசப்படும் இனவழி மரபும் அதன்மீது குத்தப்படும் முத்திரையும் நம்மை இந்நிலைக்கு இட்டுச் செல்லவில்லை. மலேசிய இந்தியர்கள் / தமிழர்கள் தாழ்ந்துபோன தரமும் இல்லை. நடப்பனவற்றைக் கண்டால் ஒருவேளை நம்மை நம்பக் கூடச் செய்துவிடும். அனைத்திற்கும் ஒரு நாட்டின் அரசியல் சார்ந்த பொருளாதாரமே காரணமென நான் துணிகிறேன்.

தொடர்ந்து வாருங்கள்...

திரு.நரகன்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

6 கருத்து ஓலை(கள்):

subra December 5, 2009 at 8:37 AM  

நம் நாட்டின் நம்மவர்கள் நிலை இவ்வளவு கொடுமையாக இருந்தும்
நம்மவர்கள் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்கைபோல் ஒன்றுமே
நடவாதைபோல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது அய்யா
உங்களின் இந்த ஆய்வு வரைவு 2012 படத்தை பார்த்து என்ன பய உணர்ச்சி
எனக்கு ஏற்படதோ ,அதே உணர்வு உங்கள் ஆய்வு கட்டுரையை படிக்கும்போது
ஏற்படுகிறது அய்யா.மிகவும் பயனான ,உண்மையை விளக்கும் அற்புத வரைவு
அய்யா .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதவும் .சி.நா.மணியன்.

துளசி கோபால் December 5, 2009 at 11:00 AM  

அருமையான தொடக்கம். அறிந்து கொள்ள ஆவல்.


கோச்சுக்காதீங்க. ஒன்னு சொல்லிக்கறேன். அது இடுகையைப் பற்றி இல்லை.


உங்கள் பதிவு கலர் & ஃபாண்ட் கொஞ்சம் கண்ணுக்குச் சோர்வா இருக்கு.

Anonymous December 5, 2009 at 11:31 AM  

YOU HAVE HIDDEN ONE SOLID TRUTH IN YOUR ARTICLE.

THOUGH THE INDIANS IN MALAYSIA ARE BELOW 8 % PERCENT.

AMONG THE CRIMINALS IN MALAYSIA
INDIANS ARE HOLDING MAJORITY RANK.

INDIAN CRIMINAL ARE CROWDING THE PRISONS IN MALAYSIA COMMITTED ROBBERY , THEFT, RAPE, MURDER.


MAKING ME ASAHMED.


DO YOU KNOW THAT ?

DO YOU KNOW THAT THE MALAYSIAN CHINESE OR MALAY NEVER SHOUTED AT INDIANS TO " OH INDIANS GO BACK TO INDIA "

MALAYSIA INDIAN.

Sathis Kumar December 5, 2009 at 3:29 PM  

அன்பின் Subra / சி.நா.மணியன்,

நம் சமூகத்தின் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உழன்றுவருவதை யாரும் பேச மறுக்கிறார்கள். மாற்று ஊடகங்களின்வழியாவது, அல்லது நாமே அந்த ஊடகமாக மாறி துணிந்து உண்மைகளை சொன்னாலேயொழிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. தொடர்ந்து வாருங்கள்.

Sathis Kumar December 5, 2009 at 3:32 PM  

அன்பின் துளசி கோபால்,

தங்களின் ஆவலை அடுத்தடுத்துவரும் தொடர் கட்டுரைகளின்வழி பூர்த்தி செய்ய முனைகிறோம்.

வலைப்பதிவின் வர்ணங்களும் அமைப்புகளும் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தியமைக்கு மன்னிக்கவும். மாற்றங்களை செய்து பார்க்கிறேன்.

Sathis Kumar December 5, 2009 at 3:35 PM  

பெயரில்லாதவரே,

என் பதிவில் நான் ஒரு முக்கிய ஆதாரத்தை மறைத்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுதான் முதல் பாகம், அடுததடுத்த பாகத்தில் சில உண்மைகள் உங்களுக்கு தெரியவரும். மலேசிய இந்தியர்களில் அதிகமானோர் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதாக நீங்கள் கூறுவதிலும், ‘ஓரங்கட்டப்படுவதன்’ விளைவுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மலேசிய இந்தியர்களில் எந்த வகுப்பினர் இதுபோன்ற வன்முறை செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP