'வண்ணத்துப்பூச்சி விளைவு' அம்னோவை நெருங்குகிறது..!

>> Wednesday, June 25, 2008

சிறகடிக்கும் ஒரு பட்டாம்பூச்சி காற்றலைகளில் சிறு அதிர்வலைகளை உண்டுச் செய்து, அந்த அதிர்வலையின் சக்தியானது எப்போதோ நடக்கப்போகும் ஒரு சூராவளிக்கு உதவியாகப் போகிறது என்றால் நம்பவா முடிகிறது. நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது மேலைநாட்டின் சித்தாந்தங்களின் ஒன்றான 'ஒழுங்கின்மைக் கோட்பாடு', அல்லது ஆங்கிலத்தில் இதனை 'கேயோசு தியாரி' என அழைப்பர். இன்று ஏற்படும் ஒரு சிறு மாறுதல் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்திற்கு வித்தாக அமையும் தன்மையை விளக்குவதுதான் 'வண்ணத்துப் பூச்சி விளைவு'. இதைத்தான் இந்துக்கள் வினைப்பயன் அல்லது கர்மம் என்றும், பிற சமயத்தினர் இறைவனின் செயல் அல்லது இறைவனின் கூலி என்கின்றனர்.

இத்தகைய கோட்பாடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள 'அம்னோ' எனும் இனவாத அரசியல் அமைப்பு ஒரு விதிவிலக்கல்ல! 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பார்களே, அதைத்தான் இன்றைய காலக்கட்டத்தில் தான் என்றோ விதைத்த விதையின் பயனாக முளைத்திருக்கும் வினைக்கதிர்களை அறுவடை செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான நிலையில் 'அம்னோ' இருக்கிறது.

விடயத்திற்கு வருவோம்..

நிகழ்வு 1.

"இந்து ஆலயம் உடைப்பு, பொதுமக்கள் காப்பார் தலைமைக் காவல்த்துறை அதிகாரியின் மீது புகார்" (தமிழ் நேசன் 04/06/08 பக்கம் 15).

25 நவம்பர் நிகழ்வானது, மக்களின் சிந்தனைப் போக்கில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத ஒரு கூற்றாகும். இதற்கு முன் எந்த ஒரு இந்தியரும் எந்த ஒரு தலைமைக் காவல்த்துறை அதிகாரியின் மீதும் புகார் செய்ததைப் பார்த்ததும் கேட்டதும் இல்லை. ஆனால், இன்று பொதுமக்களுக்கு நியாயத்தைத் தட்டி கேட்க வேண்டும் என ஒரு தைரியமும் மன உறுதியும் ஏற்பட்டுள்ளது. இவர்களின் இச்சிந்தனை மாற்றமானது, பெரும் வேகத்துடன் சீறிப் பாய்ந்துகொண்டு வரும் காட்டாறுக்கு ஒப்பானது. இது வழிந்தோடும் பாதைகளில் குறுக்கே அணைபோல நின்றுகொண்டிருக்கும் 'அம்னோ' உடைந்து சுக்கு நூறாகிப் போவது திண்ணம். எங்கள் ஆலயங்களை உடைக்கும்போது எழுந்த கல்லின் சத்தம், ஒருநாள் அம்னோவின் அடித்தளத்திலும் கேட்கும். எங்கள் ஆலயங்கள் சுக்கு நூறாகிப் போனதைப் போல், கட்சிப் பிளவினாலும், மக்கள் கொடுத்த அடியாலும் 'அம்னோ' சுக்கு நூறாகிப் போகத்தான் போகிறது. பொதுமக்களே உங்களுக்கு பாராட்டுகள்..

நிகழ்வு 2.

ஈப்போ கலாச்சாரப் பூங்காவிலுள்ள பொது அரங்கில் நடைப்பெற்ற ஒரு கலாச்சார நிகழ்வில் பரதநாட்டியக் கலைஞர்கள் வழக்கம்போல் நடனமாடுவதற்குமுன் நடராசருக்கு செய்ய வேண்டிய பாதபூசையை 'அம்னோ' செய்யவிடாமல் தடுத்துவிட்டது. (என்.எசு.டி 04/06/08 பக்கம் 17)
சமய சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 11-ஐ கலை, பண்பாட்டு, பாரம்பரிய மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ரஃபி அப்டால் பின்பற்றவில்லை. மாற்றாக பிற சமயங்களின் சடங்குகளை பொது நிகழ்வுகளில் நிறைவேற்றுவதை நிராகரித்தவர்களுக்கு ஆதரவாக இவர் வழிமொழிந்திருப்பது வெட்கக்கேடான செயலாகும். ஓர் அமைச்சராக இருந்துக் கொண்டு இவர் உலக பார்வையில் மலேசியாவை பல்லின நாடாகவும், சமய நல்லிணக்கம் கொண்ட நாடாகவும் எப்படி சித்தரிக்கப்போகிறார்? அதோடு, இவரின் இந்தச் செயலானது பல்லின மக்களிடையே எப்படி இன ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும், தேசிய ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும்?

ஒரு சிறிய கலாச்சார நிகழ்வில்கூட தன்னுடைய இனவெறியையும் மதவெறியையும் அம்னோ காட்டத் தயங்குவதில்லை எனத் தெரிகிறது. மக்களே, இந்த வருடம் இயலாவிட்டாலும் 2012-ஆம் ஆண்டு வரும் 13-வது பொதுத்தேர்தலிலாவது 'அம்னோ'வை கவிழ்த்துவிட்டு நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தாருங்கள்..!

வண்ணத்துப் பூச்சியினால் ஒரு சூராவளியை ஏற்படுத்த முடியும் என்றால், 'மக்கள் சக்தி'யினால் ஒரு சுனாமி ஏற்படாதா என்ன?

கட்டுரை : ஐயா வேதமூர்த்தியின் 'இந்துராப் குரல்' எனும் ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சங்களை, ஆசிரியரின் சொந்த நடையில் மொழிபெயர்த்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

8 கருத்து ஓலை(கள்):

Anonymous June 25, 2008 at 4:21 PM  

அன்று வந்த சுனாமியோ "ஏன் வந்தாய்?" என்று கேட்க வைத்தது. இன்று மக்கள் சக்தியால் வர போகும் சுனமியோ எங்கே இருகிறாய், எப்பொலுது வந்து சேர்வாய்?" என்று ஏங்க வைத்து விட்டது.இம்மண்ணில் பிறந்த அனைவறையும் வாழ வைக்க நீ வந்தே ஆக வேண்டும் என்ற நிலையாகி விட்ட்து. மக்கள் சக்தியின் மூலம் இதற்காக போராடும் அனைவருக்கும் கைமாறு என்ன செய்தாலும் ஈடாகாது! வாழ்க மக்கள் சக்தி!

Sathis Kumar June 25, 2008 at 5:28 PM  

உசா, தமிழ் மொழியில் கலக்குகிறீர்கள், கூடிய விரைவில் உங்களை ஒரு தமிழ் வலைப்பதிவராகக் காண ஆசை. தொடர்ந்து எழுதுங்கள், மீண்டும் வருக..

சுப.நற்குணன்,மலேசியா. June 25, 2008 at 6:15 PM  

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்பது நிச்சயம். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என சும்மாவா சொன்னார்கள் தமிழ் முன்னோர்கள்!

தமிழனை எதிர்க்கும் பீரங்கிக் குண்டு
சமையல் அறையில் முள்ளங்கித் தண்டு!
என்று தமிழின எழுச்சிப் பாவலர்
காசி.ஆனந்தன் பாடியுள்ளார்.

ஒவ்வொரு தமிழனும் கேட்கவேண்டிய பாடல்.
தமிழன் குருயிதில் உள்ள ஒவ்வொரு அணுவையும் உணர்ச்சிப் பெற வைக்கும் பாடல்.

Sathis Kumar June 25, 2008 at 6:48 PM  

//தமிழனை எதிர்க்கும் பீரங்கிக் குண்டு
சமையல் அறையில் முள்ளங்கித் தண்டு!//

அருமையான வரிகள்..
இதுபோல், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாது, அதனைத் துச்சமெனக் கருதி தமிழர்கள் வாழ்வார்களானால், தமிழினம் மீண்டும் பேசப்படும் இனமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

இப்பாடல் ஒலிவடிவில் எங்குக் கிடைக்கும் ஐயா?

VIKNESHWARAN ADAKKALAM June 25, 2008 at 11:38 PM  

கர்ம வினைகளை அவர்கள் சந்தித்து தான் ஆக வேண்டும்...

தினமும் இரவில் வால் நட்சத்திரம் தோன்றி மறைகிறது... நாடே செழிப்பில்லாமல் இருக்கிறது... உள் புகைச்சல்கள்... அரசாங்கத்திற்கு பெரிய அடி காத்திருக்கிறது....

Anonymous June 26, 2008 at 2:34 AM  

விக்னேஷ், உஷார்!!!
கர்ம வினைகளை மர்ம வினைகளாக மாற்றி அனைவரையும் ஏமாற்றும் சாத்தியமும் இவர்கள் அறிந்தாலும் அறியலாம்.

மக்கள் சக்தி மூலம் வரப்போகும் சுனாமியின் நோக்கமே, சுத்தமான நீரை பாய்ச்சி நாட்டின் செழிப்பை புதுப்பிய்த்து அனைத்து புகைச்சல்கலயும் கலைத்து
ஓர் அழகான சுற்று சூலழ் கொண்ட நாடாக நம் நாட்டை காட்சியழிக்க செய்வது தானே!
பொருத்தவன் பூமி ஆழ்வான்!
நம் நிலைமையும் இப்பொலுது அப்படித்தான்..
நம் வீரத் தலைவர்களின் தியாகங்கள் வீண் போய்விடுமா என்ன?
Note:சதிஸ் சார், ஏதேனும் எழுத்து பிழைகள் இருஇந்தால் மன்னிக்கவும்.
நன்றி!

VIKNESHWARAN ADAKKALAM June 26, 2008 at 11:34 AM  

உஷாதேவி அவர்களே,

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் தூம கேது தனது சூட்சமத்தை காட்டாமல் போக மாட்டான்...
நான் தேற்றுவிடுவேன் என்ற பயன் வந்தால்தான் ஒருவன் கூச்சல் போட ஆரம்பிப்பான்.. பாரிசான் கட்சியை பாருங்கள்.. அம்னோவின் பெரிய தலைக்கு பங்கம் வ்ந்துவிடும் போல... மா.இ.காவின் செல்ல பிள்ளை இன்று செல்லா பிள்ளை. எம்.சி.ஏவிலும் பிரச்சனை. ம்ம்ம் பார்க்கலாம் என்ன நடக்கிறது என...

வாத்தியார் ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள்: தற்போதய துணைபிரதமர் பிரதமர் பதவிக்கு வந்தால் எற்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் மக்களின் ஆதரவு அவருக்கு எப்படி இருக்கும் என ஒரு ஆய்வு கட்டுரை போட முடியுமா? மக்களுக்கு அவர் மேல் மரியாதையை விட பயம் தான் அதிகம் என்பது என் கருத்து..

Sathis Kumar June 26, 2008 at 11:40 AM  

நேரமும் காலமும் சம்மதிக்கும்போது நிச்சயம் நஜீப்பைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையினை சமர்ப்பிக்கிறேன் நண்பரே..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP