திறந்த இல்ல உபசரிப்பிற்குச் செல்ல வேண்டாம்..!!

>> Friday, October 3, 2008

இன்று 'உத்துசான் மலேசியா' மலாய் நாளேட்டில் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பிற்கு இண்ட்ராஃபின் வருகைக் குறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அம்னோ' எனும் இனவாத அரசியல் கட்சியின் ஆதிக்கத்தில் செயல்படும் 'உத்துசான் மலேசியா' இண்ட்ராஃப்பை கடும் கண்டனத்திற்குள்ளாக்கிய விடயம் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை. அனைத்தும் எதிர்ப்பாத்த ஒன்றே..

திறந்த இல்ல உபசரிப்பு என்றப் பெயரில் இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கு மூடு இல்ல உபசரிப்பைக் காட்டிய இனவாத அப்துல்லாவையும், பிற அம்னோ பேர்வழிகளையும் மன்னித்து முறையாக நடந்துக் கொண்டவர்களை, 'உத்துசான்' இன்று கிழிகிழி என்று கிழித்திருக்கிறது.

உத்துசானில் இன்று வெளியாகியுள்ள பல அறிக்கைகளில் பேரளவில் இனவாதத்தை தூண்டிவிடும் வகையில் அமைந்திருந்தது பகாரும் மாஉசின் என்பவரின் அறிக்கைதான். (5-வது படம் பார்க்க)

இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொண்டு 'அரி ராயா' வாழ்த்து அட்டைக் கொடுத்தது, இசுலாத்தை அவமதிப்பதாகவும் இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும் தனதறிக்கையில் குழைத்து அடித்திருக்கிறார் பகாரும் மாஉசின்.

"இதுப்போன்ற அவமதிப்பை இண்ட்ராஃப் உறுப்பினர்கள் மலாய் கம்பங்களில் செய்திருந்தால், மரியாதை என்றால் என்ன என்று அங்குள்ள மலாய் இனத்தவர் இவர்களுக்கு பாடம் கற்பித்திருப்பர்." என்று இன பூசலுக்கு தூபம் போட்டிருக்கிறார் பகாரும் மாஉசின்.

ஆட்சி அம்னோவின் பிடியிலிருந்து நழுவும் தருவாயில், அதனை தக்க வைத்துக் கொள்ளும் இறுதி நடவடிக்கை 'இனப்பூசல்' என்று சிறுகுழந்தைக்கும் தெரியும் என்பதனை அந்த முட்டாள் இனவாதி பகாரும் அறிந்திருக்கவில்லை போலும்.

இதனையடுத்து, இண்ட்ராஃபினரின் வருகையை பகாரும் தனது கட்டுரையில் இப்படி சித்தரிக்கிறார்.

"ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் உறவுப் பாலமாய் அமைந்திருக்கும் சாவால் 1 தினமானது, சேற்றைக் கொண்டு வந்த ஒரு எருமையின் செயலால் கலங்கப்பட்டுவிட்டது." என்கிறார் பகாரும்.

உண்மையில் இதுப்போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை பகாரும் மற்றும் உத்துசான் வெளியிடுவதின் வழி அவர்கள் தன் தலையிலேயே சேற்றை வாரிக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. உண்மையில், இனவாதத்தையும் இனப்பூசலையும் ஊக்குவிக்கும் அம்னோவின் கைப்பாவைகளான 'உத்துசான்' ஆசிரியர்கள் மீதுதான் Sedition Act எனும் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும்.

அனைவருக்கு தெரியும் அரி ராயா தினத்தன்று யார் மூர்க்கத் தனமாக நடந்துக் கொண்டார்கள் என்று. இதற்கிடையில் அன்றைய தினத்தில் பிரதமரைச் சந்தித்து கைகுலுக்கி இ.சாவை ஒழித்து, ராசா பெத்ராவை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துச் சென்ற சீனர்களைப் பற்றி 'உத்துசானில்' எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சீனர்களைச் சீண்டி முகத்தில் கரி பூசிக் கொண்ட அம்னோவின் அடுத்தக் குறி இண்ட்ராஃப்!

***

எனவே, நாளை பினாங்கில் நடைப்பெறவிருக்கும் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்துக் கொள்ள வேண்டாம் என இண்ட்ராஃபின் தலைவர் திரு.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். 'உத்துசான்' ஏற்படுத்திவிட்ட பதற்ற நிலையினால் நாளை கலகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் சில பொறுப்பற்ற தரப்பினர்கள் அங்கு கலகம் ஏற்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, பாதுகாப்புக் கருதி இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் நாளை அங்குச் செல்லாதிருப்பது முறை.

தயவு செய்து உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கு குறுந்தகவல் வழி இச்செய்தியைத் தெரியப்படுத்தவும்..!

கலகம் பிறந்தால் 'அம்னோ'விற்கு நன்மை பிறக்கும், நாட்டுக்கல்ல.. நினைவிருக்கட்டும்..!
தொடர்ந்து அகிம்சை வழியில் சென்று இலக்கை வெற்றிக் கொள்வோம்..!

போராட்டம் தொடரும்..

படத்தைச் சுட்டிப் பெரிதாக்கிப் பாருங்கள்..




Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

4 கருத்து ஓலை(கள்):

ஆதவன் October 3, 2008 at 11:49 PM  

சண்டையில் தோற்றுப் போனவன், தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியது தானே! அவன்தானே வீரன்!

அப்படியில்லாமல், செம்மையாக அடி விழுந்த பின்பும்.. ஆயுதங்கள் எல்லாம் இழந்த பின்னும்.. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்தும்.. அங்கே கீழே கிடக்கும் கல்லு, மண்ணு, கட்டை, மட்டை என்று கையில் எது எது கிடைக்கிறதோ அதனை எல்லாம் தூக்கி தூக்கி அடித்தானாம்!

இப்படி ஒரு அடி மடையனைப் பார்க்க வேண்டுமானால்.. உடனே ஒரு உத்துசான் நாளிதழை வாங்கிப் பார்த்துக்கொள்ளலாம்!

இவர்களுடைய வீராப்பும் சூராப்பும் சுருண்டு படுத்துக்கொண்ட கதைதான் நாட்டுக்கே தெரியுமே!

"குப்புற கவுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்று முறுக்கிக் கொண்டு ஆடுகிறது உத்துசான். பிகிடா.....!

இந்த நாட்டில் இனத் தீவிரவாதத்தை நீறூற்றி வளர்க்கும் உத்துசானை முதலில் ஒழிக்க வேண்டும்!

raja October 4, 2008 at 2:34 AM  

இதே போன்ற செய்தி ஹரியன் மெட்ரொ மற்றும் பெரித ஹரியானில் வந்தது..........

Sathis Kumar October 4, 2008 at 2:15 PM  

//இந்த நாட்டில் இனத் தீவிரவாதத்தை நீறூற்றி வளர்க்கும் உத்துசானை முதலில் ஒழிக்க வேண்டும்!//

இக்கூற்றை நான் வழிமொழிகிறேன். முதலில் உத்துசான் நாளிதழை புறக்கணிக்க வேண்டும்..!

Sathis Kumar October 4, 2008 at 2:18 PM  

//இதே போன்ற செய்தி ஹரியன் மெட்ரொ மற்றும் பெரித ஹரியானில் வந்தது..........//

அப்படியா அன்பரே, நான் அவ்விரு நாளிதழ்களையும் கவனிக்கவில்லை.

தங்களின் அரி ராயா கொண்டாட்டம் எப்படி இருந்தது? இது குறித்து ஒரு பதிவு இடுங்கள் அன்பரே..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP