16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஏழு)

>> Monday, March 3, 2008



அனைவரும் கூடாரத்தை நோக்கி நடந்தோம். அங்கு நண்பர் கலையரசு என்னை வரவேற்றார்.

" காலைலே மூணு மணிலேர்ந்து இங்கதான்.. மொதல்ல எங்கல டேவான்லதான் வெச்சிருந்தானுங்க.. பிறகு ரொம்ப சத்தம் போடுறோனு இங்க தொரத்தி உட்டுடானுங்க" என புன்னகையுடன் கூறினார்.

அதன்பின் அவருடைய நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு, நான் அங்கேயே அமர்ந்துக் கொண்டு நடப்பனவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் ஆக ஆக, வெயிலின் கொடுமை அதிகரித்தது. கூடாரத்தினுள் புழுக்கம் எங்களை வாட்டி எடுத்தது. பலர் உணவு கேட்டு காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். மண்டோர் வேலை செய்துக் கொண்டிருந்த இந்திய அதிகாரி அனைவரையும் சமதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

மதியம் 12.30 எட்டியிருந்தது.

உணவு என்றப் பெயரில் இரு இந்தியர்கள் எங்கள் கூடாரத்தின் எதிரே ஒரு சின்னக் கடையை திறந்தனர். ஆனால் அவர்களிடம் அனிச்சம், ரொட்டி, சிறுவர்களுக்கான தின்பண்டங்கள், குளிர்பானங்கள் என சத்து இல்லாத உணவுகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்துக் கொண்டிருந்தனர். பசியில் ருசியறியாது பலர் அவற்றை வாங்கி உண்டு தங்கள் பசியைப் போக்கிக் கொண்டனர்.

சில மணிநேரங்கள் கழிந்தது.. அதற்குள்ளாக சில காவல் துறையின் 'பிலேக் மரியா' லாரிகள் பல இந்தியர்களை பேரணியிலிருந்து பிடித்து இங்கே கொண்டு வந்திருந்தார்கள். அங்கு நடப்பனவற்றைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக ஒருவரைக் கண்டேன். அவர் என்னைப் பார்த்ததும் சிரித்துவிட்டு,

"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே"

அவரைப் பார்த்ததும் இராஜாராக்ஸ் வலைப்பதிவர் என நினைத்தேன். பின்பு அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"ஐம் மகேந்திரன், ப்ளோகர்"

"ஓ, நீங்க இராஜா இல்லியா..?"

"நோ, இராஜா நானு எல்லாம் ஒன்னாதான் வந்தோம்.. என்ன மட்டும் புடிச்சி கொண்டு வந்துடானுங்க.. இராஜா இங்க வந்துகிட்டு இருக்காரு.."

அதன் பிறகு அவர், தான் காவல் துறையினரால் பிடிப்பட்டக் கதையினைக் கூறிக்கொண்டிருந்தார்.

அதன் பின்னர், நான் மீண்டும் அங்கு நடக்கும் பலக் காட்சிகளை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

நண்பர் கலையரசு வந்தார்.

" கலை, தோ அவர்தான் மகேந்திரன்..ப்ளோகர்.."

"ஓ, அப்டியா.. நில்லுங்க.. பேசிட்டு வந்துறேன்..."

சில நிமிடங்கள் கழித்து இருவரும் என்னை நோக்கி வந்தனர்..

கலையரசு கேட்டார்,

" சதீஷ், என்னலா அவருக்கு நீங்கதான் ஓலைச்சுவடி ப்ளோக்கர்னு தெரியாதாம்"

மகேந்திரன்,
" யேன் மொதல்லியே சொல்லலே, நீங்கதானா அது.."

அதன் பிறகு மூவரும் ஒன்றாக அமர்ந்துக் கொண்டு கதையடித்துக் கொண்டிருந்தோம்..

மதியம் இரண்டு மணியளவில், சிலக் காவல் துறை அதிகாரிகள் கூடாரத்தின் முன் கூடினர். எங்களிடம் சிறுநீர் பரிசோதனை செய்யப் போவதாக அறிவித்தார்கள்.

வயதானவர்கள் முதல் பெண்கள், சிறுவர்கள் வரை சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் தோன்றியது. என்னுடைய பெயர் அழைக்கப்பட்டது, கையில் ஒரு பிளாஸ்டிக் கின்னம் கொடுக்கப்பட்டு கழிவறைக்கு வழிகாட்டப்பட்டது.

என் வாழ்வில் அப்படியொரு துர்நாற்றமுடைய, அசிங்கமான ஒரு கழிவறையைக் கண்டதில்லை எனலாம். இருப்பினும் எப்படியோ நாங்கள் அனைவரும் ஒரு வகையாக சமாளித்துக் கொண்டோம்.

பரிசோதனையின் முடிவு அனைவருக்கும் சாதகமாக இருந்தது. மூன்று மணியளவில், ஒரு மலாய்க்காரன் தனது மோட்டார் வண்டியில் உணவு பொட்டலங்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டுச் சென்றான்.




பொட்டலத்தைத் திறந்துப் பார்த்ததும்தான் தெரிந்தது, அது சிறைக் கைதிகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவு என்று. சோறு, அழுகிய கத்திரிக்காய் இரு துண்டுகள், பாதி பொரித்த மீன் துண்டு, தக்காளி இரசம். ஒரு பையில் தண்ணீர் கட்டி வைத்துக் கொடுத்தார்கள். மீன் துண்டில் மட்டும் உப்பு அளவுக்கு அதிகமாக இருந்தது.மற்ற பதார்த்தங்களில் ருசியேதும் இல்லாமல் சப்பென்று இருந்தது. பசியில் மயக்கம் கண்டதாலும், சோர்வு மிகுதியாலும், அதையும் உண்ண வேண்டியதாயிற்று.

இறுதி அத்தியாயம் இன்றிரவு பதிவிடப்படும்..

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

Anonymous March 3, 2008 at 8:15 PM  

kavalai padaathieergal...intha malaysia vil nammai ippadi yellam aatti padaikum intha manitha jenmanggal pinnoru naalil ithaiyum vida mosamaana unavai anubavipaargal...ithu illaamal kooda avathi paduvaargal...kadavulukku kannaa illai....nam porattam mudivukku vantha piragu nammai kandu ivargal vetki thalai kuniya vendum...antha naal nitchayam varum..vanthe theerum....

Anonymous March 3, 2008 at 8:19 PM  

aamaam sir, etharku intha siruneer parisothanai....?

Sathis Kumar March 4, 2008 at 2:21 AM  

பெரும்பாலும் சிறுநீர் பரிசோதனை, போதை பொருள் உட்கொண்டிருக்கிறோமா என கண்டுபிடிப்பதற்குதான் நடத்தப்படும். அது ஏன் எங்களிடம் நடத்தப்பட்டது என இதுவரையில் புரியாத புதிராக இருக்கின்றது. இது முற்றிலும் காவல் துறையினரின் அறிவின்மையைக் காட்டுகிறது.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP