மக்கள் கூட்டணி பிரதிநிகளுக்கு ஒரு திறந்த மடல்!

>> Sunday, February 1, 2009


கடந்த வாரம் சில முக்கிய சம்பவங்கள் அரங்கேறியதையடுத்து சில அடிப்படைக் கேள்விகள் நம்மை துளைத்தெடுக்கின்றன. குகன் எனும் இளைஞரின் மரணச் சம்பவத்தையொட்டிய பல கேள்விகள்! அவற்றில் சில நன்னெறிக் கேள்விகள், அரசியல் கேள்விகள், ஏனைய அடிப்படைக் கேள்விகள் இருக்கின்றன.

  1. முதல் அடிப்படைக் கேள்வி - "எந்தவொரு கொலையும் ஏற்றுக்கொள்ளகூடியதா?
  2. கொல்வதற்கு யாருக்கு உரிமை உண்டு?
  3. சில கொலைகள் மற்ற கொலைகளைவிட ஏற்றுக்கொள்ள கூடியதா?
  4. காவல்த்துறையினர் புரியும் கொலைகளுக்கும் மற்றவர்கள் புரியும் கொலைகளுக்கும் வேறுபாடுகள் உண்டா?
  5. சட்ட மீறல்கள் அடிப்படையில் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொல்லப்படுவது நியாயமா?
  6. ஏன் குகனின் கொலை குறித்து பலதரப்பட்ட தற்காப்பு வாதங்கள் எழுகின்றன?
  7. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் தரப்பினரை ஏன் சிலர் பாதுகாக்க முனைகின்றனர்?
  8. கொலையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காவல்த்துறையினரை தடுத்துவைப்பதற்கு ஏன் காவல்த்துறை சிரமப்படுகிறது? 25 நவம்பரன்று பத்துமலை முருகன் ஆலயத்தில் இருந்த ஒரே காரணத்திற்காக 60க்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்களை பிணையற்ற தடுப்புக் காவலில் வைத்து கொலை குற்றச்சாட்டு மிக சுலபமாக சுமத்தப்பட்டதே.
  9. ஏன் பெரும்பான்மை மலேசியர்கள் இக்கொலை தொடர்பாக மௌனம் சாதிக்கின்றனர்?
  10. ஏன் இண்ட்ராஃப் இயக்கமும், எதிர்க்கட்சி இந்திய பிரதிநிகளும், சில முற்போக்குசிந்தனையுள்ள வலைப்பதிவர்களுமே இவ்விடயம் குறித்து மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.
  11. இவ்விடயம் உண்மையிலேயே ஒட்டுமொத்த மலேசியரின் விவகாரமா அல்லது மலேசிய இந்தியர்களின் விவகாரமா? இவ்விடயம் ஒட்டுமொத்த மலேசியர்களின் விவகாரம் என மக்கள் வெளியில் கூறிக் கொண்டாலும், நடப்பதைக் கண்காணித்தால் மலேசிய இந்தியரின் விவகாரமாகத்தான் தெரிகிறது.

இவ்வனைத்து கேள்விகளையும் சிந்திக்கையில், நம் மலேசிய சமூத்தின் அடிப்படை இயக்கத்தில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் இக்கருத்துக்கு உடன்படுகிறீர்களோ இல்லையோ, ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் சமூக இயக்கத்தில் நிலவிவரும் அடிப்படைக் கோளாறுகள் மிக ஆழமாக வேரூன்றியிருப்பதுடன், ஏனைய பிரச்சனைகளைவிட இதுதான் முதன்மையான பிரச்சனையாகக் கருத வேண்டியுள்ளது.



குகனின் மரணமும் மற்ற பிரச்சனைகளைப் போலவே அதிகமான ஆர்பாட்டமும் குறைவான நடவடிக்கை அல்லது நடவடிக்கையே இல்லாது போய்விடுமா. நடப்பதனைத்தையும் கவனிக்கையில் குகனின் மரணமும் காலத்தால் மறக்கடிக்கப்படும் வகையில் சார்ந்திருப்பதாக எனக்குத் தென்படுகிறது - இவ்விடயத்தில் ஆத்திரமும், வெறுப்பும் என்னை ஆட்படுத்துகின்றன. ஆனால், இக்கூற்றைப் பொய்யாக்க முடியும். சரியான சிந்தனைக் கொண்ட மனிதர்கள் இருந்தால்,( நான் குறிப்பிடுவது மனிதர்களை மட்டுமே, மலாய், சீனர், இந்தியர்கள் என பாகுபடுத்திக் கூறவில்லை) இதுதான் சமயமென அனைவரும் ஒருமித்தக் குரலெழுப்பி காவல்த்துறையினரின் அராஜகம் இனிவருங்காலங்களில் தொடராதிருக்க ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவலாம்.


இவ்விவகாரம் உண்மையிலேயே ஒரு மலேசியனின் விவகாரம் என அனைவரும் சிந்தித்தால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி பிரதிநிதிகள் ( மாணிக்கவாசகம், மனோகரன், சிவராசா போன்றோர் அல்ல) காவல்த்துறை ஒழுங்கு குறித்த சுயேட்சை விசாரணைக் குழு அமைத்திட குரலெழுப்ப வேண்டும். இதனையே தேசிய முன்னணியின் பிரதிநிகளையும் செய்யச் சொல்லி நான் கூற விரும்பவில்லை, காரணம் அது பயனற்றது. என்னுடைய இக்கூற்று பொய் என்றால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி இவ்விடயம் குறித்து பேசப்படும்பொழுது தேசிய முன்னணியின் பிரதிநிகள் சிலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கட்டும்.

இவையனைத்தும் நடைப்பெறுவதற்குமுன் என்னுள் ஒரு சந்தேகம் எழுகின்றது. மக்கள் கூட்டணியால் இவ்விவகாரத்தை உண்மையிலேயே கையிலெடுத்து நல்லதொரு தீர்வு பிறக்கும்வரை போராட முடியுமா அல்லது தன்னுடைய அரசியல் லாபத்தை கணக்கிட்டபின் இதற்கு ஒரு முடிவு எடுப்பார்களா? சில சூடான ஊடக அறிக்கைகளை மட்டும் கொடுத்து அப்போதைய சூழ்நிலையை மேலும் சூடாக்கி, அதில் குளிர்காய்ந்த பின் இவ்விவகாரம் மறக்கப்பட்டுவிடுமா? குகனின் மரணத்தை ஒட்டுமொத்த மலேசியர்களின் பிரச்சனையாக பார்க்காது, மலேசிய இந்தியர்களின் பிரச்சனை என உவமையாக்கி அவர்கள் பார்த்தால் நான் கூறியபடியே அவர்களின் நடத்தை வெளிப்படும்.

காத்திருந்து பார்ப்போம்...

(திரு.நரகன்)

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP