அண்டை நாட்டிடம் கற்றுக் கொள்ளட்டும்..
>> Tuesday, January 1, 2008
மேலே நீங்கள் காண்பது நமது அண்டை நாடான இந்தோனேசியாவின் இருபதாயிரம் ரூப்பியா பண நோட்டு. அந்நோட்டின் இடது பக்கம் ஒரு குட்டிப் பிள்ளையார் 'ஜம்மென்று' உட்கார்ந்திருக்கிறார். பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.
இந்தோனேசியா ஒரு இசுலாமிய நாடாக இருந்தாலும், அது தன் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் மறக்கவில்லை. இந்தோனேசியாவில் (முக்கியமாக பாலித்தீவில்) பழமையான இந்துக் கோயில்கள் இன்னமும் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே, அது தன் நாட்டின் தொன்மையான கலாச்சாரங்களை சமூகத்திற்கும், உலகத்திற்கும் வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவியாக பண நோட்டுகளில் பல்வகை கலாச்சாரத்தின் அம்சங்களை வெளியிட்டுள்ளது.
இன்னொரு படத்தில் சிங்கப்பூரின் ஆயிரம் வெள்ளி நோட்டைக் காண்கிறீர்கள். அந்நோட்டின் மேல்பக்கத்தில் 4 மொழிகளில் அந்நாட்டின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல இனங்கள் வாழும் நாடு என்பதற்கு இதுவே ஒரு சிறந்த அத்தாட்சி. மலேசியாவும் சிங்கப்பூரைபோல் பல இனக்களைக் கொண்ட நாடு. வெளி உலகிற்கு தன்னை வெளிக்காட்டும் பொழுதெல்லாம் பல்லினம் வாழும் நாடு எனும் கூற்றை பெருமையாக பேசும் நம் நாடு. அது நமக்கும் மகிழ்ச்சியே. ஆனால், பல்லின மக்கள் வாழ்கிறார்கள் என்றுக் கூறினால் மட்டும் போதுமா? செயல்வடிவில் பல்லின மக்களின் அம்சங்கள் வெளிக்காட்டப்படுவது குறைந்துள்ளனவே, மலேசிய அரசு ஏன் இதனைக் கண்டுக் கொள்ளவில்லை. பல மொழிகள் புழங்கும் இந்நாட்டில் ஏன் நான்கு மொழிகளில் பண நோட்டுக்கள் அச்சடிக்கப்படக் கூடாது என்பது எனக்கு புரியவில்லை. மலாய் மொழி தேசிய மொழியாக இருக்கும் பட்சத்தில் பிற மொழிகள் இடம்பெறக் கூடாதா என்ன?
இப்பொழுது நம் கேள்வி என்னவென்றால், இந்தோனேசியாவைப் போல் மலேசியாவும் பலவகையான கலாச்சார இணைப்பால் (முக்கியமாக தமிழர் கலாச்சாரம்) நாகரீகம் அடைந்து வந்த ஒரு நாடாகும். இருப்பினும், தன்னுடைய பழைய வரலாற்றினை நினைவுக் கூர்வதற்கு ஏதுவாக ஏதேனும் மலேசிய அரசாங்கம் விளம்பரப்படுத்தி உள்ளதா? முக்கியமாக இந்நாட்டில் பிற நாட்டு கலாச்சாரம் விட்டுச் சென்ற சுவடுகளை மலேசிய அரசாங்கம் உலகத்திற்கு எவ்வகையில் விளம்பரப்படுத்துகிறது?
வாவ் பட்டம், கெரிஸ், சொங்காக், கெண்டாங், மாட்டு வண்டி, வெற்றிலைப் பாக்குப் பெட்டி என மலாய்க்காரர்களின் பாரம்பரிய அம்சங்கள் நம் நாட்டின் பண நோட்டுக்களிலும் நாணயங்களிலும் இடம்பெற்றிருப்பதுப் போல், ஏன் பூஜாங் பள்ளத்தாக்கு இடம்பெறவில்லை? வெற்றிலைப் பாக்குப் பெட்டியை விடவா பூஜாங் பள்ளத்தாக்கின் பெருமை குன்றிவிட்டது?
மலாய்க்காரர்களின் பாரம்பரிய விஷயங்களை நம் நாட்டு நாணயங்களிலும் நோட்டுகளிலும் இடம்பெறச் செய்வது தவறு கிடையாது. ஆனால் அவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் மலேசியாவின் ஆதி கால வரலாற்று அம்சங்களுக்குக் கொடுக்கவில்லை?
அதிலும் பூஜாங் பள்ளத்தாக்கு நாட்டின் முன்னோடி சரித்திரம் என்பதால், அதுத் தொடர்பான தகவல்களும் நம் நாட்டு நாணயங்களிலோ அல்லது நோட்டுகளிலோ இடம் பெற்றால், எதிர்கால சங்கதியினர், வெளிநாட்டினர் நம்முடைய ஆதிக்கால வரலாற்றை தெரிந்துக் கொள்வதற்கு ஆவலாய் இருப்பார்கள். வரலாறு தொடர்ந்து காக்கப்படும். அதோடு நாட்டின் முக்கிய இனங்களின் மொழிகளும் ரிங்கிட் நோட்டுகளில் இடம் பெற்றால் அது மலேசியாவிற்கு பெருமை அல்லவா?
இவ்விஷயத்தில், மலேசிய அரசாங்கம் அண்டை நாட்டின் வழியைப் பின்பற்றுமா?
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment