ஜொகூர் ம.இ.கா துணைத் தலைவர் சுட்டுக் கொலை..! கொலையாளி தலைமறைவு..!
>> Friday, January 11, 2008
ஜொகூர் ம.இ.கா துணைத் தலைவரும், தெங்காரோ மாநில சட்டமன்ற உறுப்பினருமான திரு.கிருஷ்ணசாமி இன்று மதியம் 2.10 மணியளவில் ஜொகூர் ம.இ.கா தலைமையக கட்டிட மின் தூக்கி ஒன்றில் இறந்து கிடக்கக் கண்டார். 61 வயது நிரம்பிய திரு.கிருஷ்ணசாமி அவர்கள் ஜொகூர் ம.இ.கா தலைமையகத்தில் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த போது அடையாளம் தெரியாத நபரால் இருமுறை சுடப்பட்டுள்ளார்.
திரு.கிருஷ்ணசாமி அவர்கள் தெங்காரோ தொகுதியில் 3 தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்துள்ளார். இவருக்கு சொர்ணவள்ளி எனும் மனைவியும் மற்றும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, ஜொகூர் மாநில காவல்துறையின் துணைத் தலைவர் முகமது மொக்தார் குறிப்பிடுகையில், இக்கொலைச் சம்பவத்தை ஆராய பிரத்தியேகக் குழு ஒன்று அமைக்கப்படும் என அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து பல ம.இ.கா உறுப்பினர்கள் தங்களின் கவலையையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டனர். இச்சம்பவம் தங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக பலர் தெரிவித்தனர். திரு.கிருஷ்ணசாமி சிறப்பாக பணிகளை ஆற்றக் கூடிய ஒரு சிறந்த மனிதர், அதோடு அண்மையில் மெர்சிங்கில் உள்ள தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ் பள்ளி ஜாலான் இஸ்மாயில் பள்ளி எதிர்நோக்கிய பிரச்சனைகளை குறிப்பிட்ட நேரத்தில் களம் இறங்கி தீர்த்துவைத்தவர் என அவருடைய நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் தெரிவித்தனர்.
டத்தோ சிறீ சாமிவேலு குறிப்பிடுகையில், திரு .கிருஷ்ணசாமி தமக்கு நீண்டகால நெருங்கிய நண்பர் எனவும், அவரின் இறப்பு தமக்கும் ம.இ.காவிற்கும் மிகப் பெரிய இழப்பு எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் ஓசையில் வெளிவந்த படங்கள்..
அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. அவருடைய ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்...
*மலேசியாவில் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் கொலைச் சம்பவங்கள், மற்றும் அவை நடத்தப்படும் விதம் நமக்கு அச்சத்தைக் கொடுக்கின்றன. ஒரு காலத்தில் உலகில் மிகவும் பாதுகாப்பான நாடு எனும் பட்டியலில் மலேசியா 12-வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் இந்த வன்முறைச் சம்பவங்களைப் பார்க்கும் பொழுது மலேசியா மிகவும் பாதுகாப்பான நாடு எனும் தகுதியை மெல்ல மெல்ல இழந்து வருகிறது என அறுதியிட்டுக் கூறலாம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது எந்த ஒருப் பயனையும் அளிக்கப் போவதில்லை. நடப்பு அரசாங்கம் இனியும் வன்முறை பெருகுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பதில் பயனில்லை. குண்டர் கும்பல்களின் இராஜ்ஜியம் மலேசிய சமுதாயத்திற்கு தேவை இல்லை. மனித உரிமைகளுக்காக போராடுபவர்களை ஒடுக்குவதை விடுத்து, நாட்டில் பெருகி வரும் வன்முறை கலாச்சாரத்தை ஒடுக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
வன்முறை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, எனவே மலேசிய மக்கள் வன்முறையை ஒடுக்குவதில் சுய நலத்தை தூர தூக்கி எறிந்துவிட்டு போராட களத்தில் இறங்க வேண்டும்..
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment